சுப்ரபாதம்(38,39,40): விநா வேங்கடேசம்! இனி ஜருகண்டி இல்லை!
திருமலையில் எம்பெருமான் சன்னிதியில் 45 நிமிடம் நிற்க ஆசையா? நடக்கிற காரியமா அது? ஜருகண்டி ஜருகண்டி மட்டுமில்லை! போதாக்குறைக்குப் பொன்னம்மா-ன்னு, இப்போ தேவஸ்தானம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கு! பேரு=மகா லகு தரிசனம்! பெரிய "சுளுவான" தரிசனம்! இதுல என்ன சுளுவு-ன்னு கேக்கறீங்களா? ஹா ஹா ஹா! அங்க தான் ஆப்பு! :)
முன்பு போல, ஜய-விஜயர்களைத் தாண்டி, உள்ளே நுழைந்து, குலசேகரன் படிக்கு வெளியே, பெருமாளின் முன்னால், அரைக் கணமாச்சும் நின்று சேவிப்பது எல்லாம் இனிமேல் கிடையாது!
இனிமேல் துவார பாலகர்கள் கிட்ட இருந்தே தான் சேவித்துக் கொள்ளணும்! அதற்கு மேல் உள்ளே போக முடியாது! உள்ளே போய், வெளியில் வரும் வாக்கிங் டைம் மிச்சம்! ஹா ஹா ஹா! எப்படி இருக்கு ஐடியா?
இது தான் மகா லகு தரிசனம்? பெரிய "சுளுவான" தரிசனம்!:)
இதைக் கோயில் நிர்வாகம் எப்போதெல்லாம் நினைக்கிறதோ, அப்போதெல்லாம் அமல்படுத்தி விடுகிறது! நீங்க போகும் போது இந்த மகா லகு தரிசனம் இல்லாம இருந்தா, அது உங்க புண்ணியம்! இன்னும் பத்து வருஷத்தில், எல்லாரும் ஜன்னல் வழியாப் பாத்துக்குங்கப்பா-ன்னு சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை! :)
நிலைமை இப்படிப் போய்க் கொண்டு இருக்க, உங்களுக்கு மட்டும், சன்னிதியில் ஒரு முக்கால் மணி நேரம் அமர்ந்து கொண்டு, நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்துமாக, ஏகாந்தமாக, ஆசை தீர ருசித்துக் கொள்ளுங்கள் என்றால் எப்படி இருக்கும்?
அந்த வித்தை எப்படி-ன்னு தான் இன்னிக்கி சுப்ரபாதப் பதிவில் பார்க்கப் போகிறோம்!
வாங்க, தோத்திரத்தின் கடைசிப் பகுதிக்கு! இது உங்களில் பல பேருக்குத் தெரிந்த சுலோகம் தான்! மிகவும் இனிமையான பாடல்!
(இந்த சுலோகத்தைப் படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)
விநா வேங்கடேசம் ந நாதோ ந நாத
சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி
ஹரே வேங்கடேச ப்ரசீத ப்ரசீத
ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச
விநா வேங்கடேசம் = வேங்கடேசனைத் தவிர
ந நாதோ ந நாத = வேறு தலைவன் இல்லை! வேறு தலைவன் இல்லை!
சதா வேங்கடேசம் = எப்போதும் வேங்கடேசனையே
ஸ்மராமி ஸ்மராமி = நினைத்துக் கொண்டிருக்கிறேன்! நினைத்துக் கொண்டிருக்கிறேன்!
ஹரே வேங்கடேச = அப்பனே வேங்கடேசா
ப்ரசீத ப்ரசீத = கருணை காட்டு! கருணை காட்டு!
ப்ரியம் வேங்கடேச = விருப்பமான வேங்கடேசா
ப்ரயச்ச ப்ரயச்ச = (மங்களங்களைக்) கொடுப்பாய்! கொடுப்பாய்!
அது என்ன "ப்ரியம்" வேங்கடேச? யாருக்குப் ப்ரியமானவன்? யாரெல்லாம் வேங்கடவனை விரும்புகிறார்கள்? மாறன் சொல்வதைக் கேளுங்கள்!
நிகரில் அமரர், முனிக் கணங்கள் "விரும்பும்" திருவேங்கடத்தானே!
புகல் ஒன்று இல்லா அடியேன் உன், அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே!
அது என்ன "விரும்பும்" திருவேங்கடத்தான்? "ப்ரியம்" வேங்கடேச?
* குடும்பஸ்தர்கள் முதல் துறவிகள் வரை,
* வாலிபன் முதல் வயோதிகன் வரை,
* ஏழை முதல் பணக்காரன் வரை,
* கள்ள நோட்டு அடிப்பவன் முதல் கள்ளமில்லா உள்ளத்தான் வரை.....
* சைவர்கள் முதல் வைணவர்கள் வரை,
* இந்திக்காரர்கள் முதல் மறத் தமிழர்கள் வரை,
* ஆதி சங்கரர் முதல் இராமானுசர் வரை...
இவ்வளவு பேரும் "விரும்பும்" திருவேங்கடத்தான்! - ஏன்?
பணம் குவியுதே! அதுனாலயா?
இல்லை! பணம், பெருங்கூட்டம் எல்லாம் இப்போ தானே...சுமார் ஒரு அம்பது அறுவது ஆண்டுக்கு முன்னால் தானே!அதுக்கு முன்னாடியெல்லாம் ஆண்டுக்கு ஒரு முறை போய் வருவதற்கே சிரமப்படுவாங்களே! ஆனா அப்போதும் வீட்டில் இருந்து கொண்டே, அவனுக்குன்னு தனியா முடிஞ்சி வச்சிப்பாங்களே - ஏன்?
இரண்டாயிரம் வருசமா இருக்குதே! சிலப்பதிகாரம் காலம் தொட்டு அப்படி என்ன ஒரு ஈர்ப்பு? தமிழ் இலக்கியம் மட்டும் தானா அவனைக் கொண்டாடுகிறது? தெய்வத் தமிழுக்குப் பின்னால் வந்த
* தெலுங்குக் கீர்த்தனைகள்,
* கன்னட தாச நாமாக்கள்,
* மலையாள கானங்கள்,
* மராத்தி அபாங்குகள்,
* ஒரிய தரங்கங்கள்,
* குஜராத்திய கோலாட்டப் பாடல்கள்-ன்னு...
எப்படி இத்தனை மொழிகளிலும் இவன் "விரும்பும்" திருவேங்கடத்தான் ஆனான்? "ப்ரிய" பாலாஜி ஆனான்?
ஆண்டாள் அரங்கனைத் தானே விரும்பினாள்? மணந்து கொண்டாள்? ஆனால் அரங்கன் மேல் பத்தே பாடல் தான் பாடினாள்! வேங்கடவன் மேல் தான் அதிகமான பாடல்கள்! வேங்கடற்குத் தான் தன்னை விதிக்கச் சொல்கிறாள்!
குல முதல்வனான நம்மாழ்வார், சரணாகதி என்று வரும் போது மட்டும், அரங்கனிடம் செய்யாமல், வேங்கடவனிடம் செய்யும் மாயம் என்ன?
"புகல் ஒன்று இல்லா அடியேன், உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே" என்ற சரணாகதிக்கான ஒரே பாசுரம், வேங்கடவன் மேல் அமைந்தது வியப்பிலும் வியப்பே!
இப்படி அனைவருக்கும் "ப்ரியம்" வேங்கடேசனாய் இருக்கும் காரணத்தை அறியத் தான் முடியுமா? முடியும்! முன்பே சுப்ரபாதப் பதிவில் சொன்னது போல்,
வேங்கடத்து நெடியோன் மட்டும் தான் மோட்சத்துக்கான வழியை நம் எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்துக் கொண்டே நிற்கிறான்!
* ஒரு கரம் பாதங்களைக் காட்டிப் பற்றிக் கொள் என்கிறது!
* இன்னொரு கரம், அப்படிப் பற்றிக் கொண்டால், இந்த உலக சமுத்திரம் வெறும் முழங்கால் ஆழம் தான், என்று முழங்காலில் கை வைத்துக் காட்டுகிறது! இது தான் அந்த ரகசியம்!
மோட்சம் எல்லாம் யாருக்குப்பா வேணும்?
நான் இந்தப் பிறவியில் ஜாலியா இருக்கணும்! எனக்கு அது தான் வேணும், இது தான் வேணும் - என்று கேட்பவர்கள் தான் பலரும் உண்டு! ஹா ஹா ஹா! அதையும் வேண்டுவன வேண்டியபடியே தருகிறான்!
* மோட்ச ரகசியமும் சொல்ல முடியும்! காதல் கதையும் சொல்ல முடியும்!
* சின்னக் குழந்தையுடனும் பழக முடியும்! பெரிய ஞானிகளிடமும் பழக முடியும்!
* நல்லவனிடமும் பழக முடியும்! கொள்ளைக் கூட்டத்திடமும் பழக முடியும்!
ஒரே தாய், ஒவ்வொரு குழந்தைக்கும், அவரவர்க்குப் பிடித்தமான மாதிரி சமைத்துப் போடுகிறாள் அல்லவா?
அது போல, அவரவர்க்குப் பிடித்தமான மாதிரி...
உன்னத் தருகிறான் வேங்கடவன்! உண்ணத் தருகிறான் வேங்கடவன்!
அதான் இவ்வளவு "ப்ரியம்" வேங்கடேச! "விரும்பும்" திருவேங்கடத்தானை!!
சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி! ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச!!
இப்போ ஜருகண்டியை எப்படித் தவிர்க்கலாம் என்ற ரகசியம்:
அகம் தூர தஸ் தே பதாம்போஜ யுக்ம
ப்ரணாம் இச்சய ஆகத்ய சேவாம் கரோமி
சக்ருத் சேவயா நித்ய சேவா பலம் த்வம்
ப்ரயச்ச ப்ரயச்ச ப்ரபோ வேங்கடேச
அகம் தூர தஸ் = அடியேன் வெகு தூரத்திலிருந்து வந்துள்ளேன்!
தே, பத அம்போஜ யுக்ம = உன் தாமரை இணையடிகளை
ப்ரணாம் இச்சய ஆகத்ய = வணங்கும் ஆசையில் வந்துள்ளேன்!
சேவாம் கரோமி = உன்னைச் சேவிக்க வந்துள்ளேன்!
சக்ருத் சேவயா = எப்போதாவது ஒரு முறை, இப்படிச் செய்யும் சேவை,(அதை ஏற்றுக் கொண்டு)
நித்ய சேவா = உனை என்றும் கண் குளிரக் காணும் நீங்காத சேவை என்னும் நித்யப்படி சேவையை
பலம் த்வம் = நீ வரமாகக்
ப்ரயச்ச ப்ரயச்ச = கொடுப்பாய்! கொடுப்பாய்!
ப்ரபோ வேங்கடேச = பிரபோ வேங்கடேசா!
நீங்கள் போகும் போது, திரை போட்டு இருக்கா? அல்லது சன்னிதியில் ரொம்ப நேரம் நிற்க முடியவில்லையா? அதனால் என்ன?
நீங்கள் தான் அவனைப் பார்க்க முடியவில்லை! ஆனால் அவன் உங்களைப் பார்த்துக் கொண்டு தானே இருப்பான்? அவனை யாரும் ஜருகண்டி ஜருகண்டி-ன்னு சொல்ல முடியாதே! அப்புறம் எதற்கு வீண் கலக்கம்?
பத்தே நொடிகள் தான் தரிசனமா? அதனால் என்ன? ஒன்றே ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள்!
* எக்காரணம் கொண்டும் கண்களை மூடிக் கொள்ளாதீர்கள்!
வேண்டுதல் வைக்கக் கூட நேரம் இருக்காது! அதனால் பரவசப்பட்டு கண்களை மூடிக் கொள்ளாதீர்கள்! பத்தே நொடிகள் தான்! உங்கள் புறக் கண் என்னும் காமிராவிலும், அகக் கண் என்னும் வீடியோ கருவியிலும் அப்படியே ஆழமாகப் பதிந்து வைத்துக் கொள்ளுங்கள்!
மேயச் சென்ற மாடு அசை போடுமா? நன்றாக மேய்ந்து, வீட்டுக்கு வந்து தானே அசை போடும்! அது போல சன்னிதியில் கண்களை மூடாதீர்கள்! வீட்டுக்கு வந்த பின்னர், அப்போது மூடிக் கொள்ளுங்கள்! மனத்திரையில் ஜருகண்டி ஜருகண்டி இல்லாமல், நீங்கள் விரும்பிய வண்ணமே ஓடும்!
இதை வேங்கடவன் சன்னிதியில் அடுத்த முறை போகும் போது சொல்லிவிட்டு வாருங்கள்!
"என் வீடு மிகத் தொலைவில் இருக்கு! இருந்தாலும் உன் மேல் இருக்கும் காதலால் தான், உன்னைப் பாக்கணும்-னே இவ்ளோ தூரம் வந்திருக்கேன்!
இன்னிக்கி நான் பார்க்கும் இந்த திவ்ய மங்களச் சேவையை, நான் எப்போதெல்லாம் நினைக்கின்றேனோ, அப்போதெல்லாம் எனக்குக் காட்டி அருள்வாய் காதலனே!"
தாயே தந்தை என்றும், தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டு ஒழிந்தேன், "உனைக் காண்பதோர் ஆசையினால்"
வேயேய் மாபொழில் சூழ், விமலச் சுனை வேங்கடவா!
நாயேன் வந்து அடைந்தேன், நல்கி என்னை ஆட்கொண்டு அருளே!
இது தான், வேங்கடவன் சன்னிதியில், ஜருகண்டி ஜருகண்டிக்குப் பயப்படாமல், பல மணி நேரம் தரிசனம் செய்ய வல்ல ரகசியம்!
(* ஏகாந்த சேவை என்னும் நள்ளிரவுத் தாலாட்டு-பள்ளியறைச் சேவை ஒன்று உண்டு! முன்பதிவு கிடையாது! அன்று இரவு 09:00 மணி வாக்கில், விஜயா வங்கியில், முதல் ஐம்பது பேருக்கு சிறிய கட்டணத்தில் டிக்கெட் வழங்குவார்கள்! கூட்டம் அதிகம் இருந்தால் அப்போ இது பொது தரிசனம் இன்றித் தனியாகச் செய்யப்பட்டு விடும்!
இந்தச் சேவைக்குச் சென்றால், ஆர அமர்ந்து, எம்பெருமானைத் தமிழிலும் தெலுங்கிலும் இசையோடு தாலாட்டி, பால் பருக வைத்து, கொசுவலை போட்டு மூடி உறங்கச் செய்து, பாதாதி கேசமாக, ஆழ்ந்து அனுபவிக்க முடியும்! அந்த நாளின் கடைசிச் சேவை! நடை சார்த்தி, அடுத்த முக்கால் மணியில் சுப்ரபாதம்! அடுத்த முறை செல்லும் போது முயன்று பார்க்கவும் :)
அக்ஞானினா மயா தோஷான்
அ சேஷாந் விகிதாந் ஹரே
க்ஷம ஸ்வ த்வம் க்ஷம ஸ்வ த்வம்
சேஷ சைல சிகா மணே!
அக்ஞானினா மயா தோஷான் = அறிவொன்றும் இல்லாதவன் நான்! என் குற்றங்களை எல்லாம்
அ சேஷாந் = மீதமே இல்லாமல்
விகிதாந் ஹரே = செய்வாயாக!
க்ஷம ஸ்வ த்வம் க்ஷம ஸ்வ த்வம் = என்னை மன்னிப்பாய்! என்னை மன்னிப்பாய்!
சேஷ சைல சிகா மணே = சேஷ மலைச் சிகா மணியே!
இப்படி உன்னைச் சேவித்து வந்த பின்னாலும், என் சுய பிரதாபங்களும், ஆணவமும், சுயநலமும் அவ்வப்போது தலை விரித்து ஆடுகின்றனவே!
அடி மனத்தில்-அந்தராத்மாவில் நீ இருந்து கொண்டு, இது தவறு என்று காட்டிக் கொடுத்தாலும், "என்" அறிவும் புத்தியும், என் மனசின் மொழியைக் கேட்பதில்லையே! என்ன செய்ய?
அறிவொன்றும் இல்லாத ஆய்க் குலத்தில் உன் தன்னை,
பிறவிப் பெறும் தனை புண்ணியம் யாம் உடையோம்!
குறையொன்றுமில்லாத கோவிந்தா....
அறியாத பிள்ளைகளோம், அன்பினால் உன் தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே!...
எங்கள் குற்றங்களை எல்லாம் ஒன்று கூட மிச்சம் வைக்காமல், பொசுக்கி விடு!
* இந்தப் பிறவிக்குச் சேர்த்து வைக்கும் Recurring Deposit பாவங்களையும் (பிராரப்தம்)
* அடுத்த பிறவிக்கு நாங்கள் சேர்த்து வைக்கும் Fixed Deposit பாவங்களயும் (ஆகமியம்)
ஒன்று கூட மிச்சம் வைக்காமல் பொசுக்கி விடு! வேங்+கடம் என்றாலே வெம்மையான பாவங்களைப் பொசுக்கும் மலை அல்லவா!
சென்று சேர் திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ, நம் வினை ஓயுமே - என்ற மாறன் வாக்கு பொய்யாகுமோ?
போய பிழையும், புகு தருவான் நின்றனவும்,
தீயினில் தூசாக ஆக்கி விடு! ஒன்று கூட மிச்சம் வைக்காதே!
க்ஷமஸ்வ த்வம் க்ஷமஸ்வ த்வம், சேஷ சைல சிகா மணே!
என்னை மன்னிப்பாய்! என்னை மன்னிப்பாய்! திருவேங்கடம் உடைய தேவே!
ஏடு கொண்டல வாடா, வேங்கட ரமணா - கோவிந்தா! கோவிந்தா!!
ஆபத் பாந்தவா, அனாத ரட்சகா - கோவிந்தா! கோவிந்தா!!
(சுப்ரபாதம் பாகம் 2of4 = வேங்கடேஸ்வர தோத்திரம் நிறைந்தது! சுபம்!)
அடுத்த பாகத்திலிருந்து, சரணெள, சரணம் ப்ரபத்யே-ன்னு, சரணாகதியைப் பார்ப்பதற்கு முன்....
அந்தரி இக்கட ரண்டி, பிரசாதம் தீஸ்கோண்டி, சரணாகதியை அப்பறம் செய்துக்கலாம்! பதிவர். அம்பி-காரு பொறந்த நாளு வேற! அல்வா இல்லைன்னாலும் லட்டாச்சும் கொடுப்போம் :)