கெளசல்யா சுப்ரஜா ராமா (1 & 2)
விடிகாலை சுமார் 3:00 மணி. கூட்டம் அதிகம் இல்லை!
குளிர் தென்றல் வீசுகிறது! சில பக்தர்கள் அங்கப் பிரதட்சிணம் செய்து முடிக்கிறார்கள்; இப்போது நாம் நிற்கும் இடம் திருமாமணி மண்டபம்!
இரண்டு பெரிய காண்டா மணிகள் வாசலுக்கு அருகே!
கருடன் நிற்கிறான். அவனுடன் சேர்ந்து நாமும் நிற்கிறோம்.
துவார பாலகர்கள் (ஜய விஜயர்கள்) இருபுறமும் காத்து நிற்கும் தங்க வாயில் (தெலுங்கில்: பங்காரு வாகிலி) மூடப்பட்டு உள்ளது.

அர்ச்சகரும், ஜீயரும் பூட்டின் சாவியை, துவார பாலகர்கள் அருகில் வைத்து, கதவைத் திறக்க அனுமதி பெறுகின்றனர்.
அன்னமாச்சார்யரின் பூபாள ராகப்பாடல் தெலுங்கில் இசைக்கப்படுகிறது; பின்னர் ஆழ்வாரின் ஈரத் தமிழில் திருப்பள்ளியெழுச்சி; சுப்ரபாதம் எல்லாம் அப்பறம் தான்!
மணிகள் ஒலிக்கின்றன; பேரிகையும் ஊதுகோலும் சேர்ந்தே ஒலிக்கின்றன;
திருக்கதவம் திறக்கப்படுகிறது!
இருப்பினும் திரை போடப்பட்டுள்ளது!!
கோபூஜை முடிந்து, பசுவுடன், இடையனுக்குத் தான் முதல் தரிசனம் தருகிறான் வேங்கடவன்! அந்தணருக்கு அல்ல!
உள்ளே சயன மண்டபத்தில், தொட்டிலில் தூங்கும் போகஸ்ரீநிவாசனை எழுப்புகிறார்கள்;
அன்றைய நாளின் முதல் தரிசனமாக, சுப்ரபாத சேவை என்கிற விஸ்வரூப தரிசனம்!
வெள்ளை ஆடையும், துளசி மாலை மட்டும் உடுத்தி இறைவன்!
மிகவும் எளியவனாக, கள்ளச் சிரிப்போடு காட்சி தருகிறான்.
தமிழில் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பள்ளி எழுச்சியும் பாடப்படுகிறது!
அனுதினமும், (மார்கழி மாதம் தவிர)
திருமாமணி மண்டபத்தில், துவார பாலகர்கள் முன்னே சுப்ரபாதம் ஓதப்படுகிறது;
திருமலையில், மார்கழியில் மட்டும் வடமொழிச் சுப்ரபாதம் Total Cut; Shd not at all be chanted; Only தமிழ்த் திருப்பாவை! இராமானுசர் ஏற்பாடு! (திருமலைக் கோயில் ஒழுகு)!
எல்லா நாளுமே திருப்பாவை உண்டு தான்!
ஆனா, பிற நாட்களில், பூசையின் போது, தமிழ்/ வடமொழி, இரண்டுமே ஓதப்படும்!
மார்கழியில், வடமொழி தவிர்த்து, தமிழ் மட்டுமே! அதுவும் முதன் முதலிலேயே!
வாருங்கள் எல்லாரும் சொல்லத் தொடங்கலாம்..."கெளசல்யா சுப்ரஜா ராமா பூர்வா..."
ஸ்ரீஹரி ஓம்:
(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)
கெளசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்
(இரண்டு முறை)
கோசலை குமரா ஸ்ரீராமா பொழுது புலர்கின்றதே
தெய்வீகத் திருச்சடங்குகள் செய்ய எழுந்தருள் புருடோத்தமா...
கெளசல்யா சுப்ரஜா = கோசலை பெற்றெடுத்த திருமகனே!
விசுவாமித்திரரின் யாகத்தைக் காக்க இராமனும், இலக்குவனும் சென்ற போது, இள வயது; தாய் தந்தையரை முதல் முறையாகப் பிரிந்திருக்கும் நிலை; அதனால் தான் முதலில் தசரதன் அனுப்பத் தயங்கினான்; இதையெல்லாம் மனத்தில் நினைத்தார் முனிவர்; என்ன தோன்றியதோ அந்தக் கோபக்கார முனிவருக்கு! தாய் அன்பு காட்டத் தொடங்கி விட்டார்!
மிக்க வாஞ்சையுடன் ஒரு தாய் எழுப்புவது போல எழுப்புகிறார்;
ஆதி கவியான வால்மீகியின் இந்த ராமாயண சொற்றொடரைத் தான், பெரும்பாலும் எல்லாப் பெருமாள் சுப்ரபாதங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்!
ராம = ராமா
ராம என்பது சர்வ மங்களத்தைக் குறிக்கும் சொல்; ஈசனும் இந்த "ராம" என்பதையே மனத்துள் ஜபிப்பதாக சகஸ்ரநாமம் சொல்கிறது; (ஸ்ரீ ராம ராம ராமேதி...);
காசியில் மரிப்போர் காதுகளில் ஈசன் இதையே ஓதி நல்லுலகம் சேர்ப்பதாக ஐதீகம்.
"சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்ற இரண்டு எழுத்தினால்", என்று கம்பரும் பேசுகிறார்.
பூர்வா ஸந்த்யா = அதிகாலை, சிற்றஞ் சிறுகாலை
பிரம்ம முகூர்த்த வேளை என்பார்கள்; சூர்யோதயத்துக்கு இரண்டரை நாழிகை முன்பாக!
Approx 3:30-4:00; ஆன்மிகப் பணிகளுக்கு மிகவும் உன்னதமான வேளை இது!
ப்ரவர்த்ததே = தொடங்குகின்றதே
உத்திஷ்ட = எழுந்திரு
நர ஸார்தூல = நரர்களில் (மனிதர்களில்), புலியைப் போன்றவனே
ராமன் மனிதனாய் வாழ்ந்து காட்டிச் சென்றான்; சர்வ சக்தியுள்ள கடவுளாகத் தன்னை வெளிக் காட்டவில்லை.
கர்த்தவ்யம் = உன் கடமைகள்
தைவ மாஹ்நிகம் = தெய்வீகமானவை, அணிகலனாய் அமைபவை
உன் நித்யக் கடமைகள் நின்றால் உலகம் என்னவாகும்? அதனால் கடமையைக் காட்டி எழுப்புகிறார்!
(நாம் கூட முக்கியமான வேலை என்றாலோ, விசா நேர்காணல் என்றாலோ, அலாரம் வைக்காமலேயே எழுந்து விடுகிறோமே! கடமையே என்று எழுந்து விடுகிறோம் அல்லவா?:-)
உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு
(இரண்டு முறை)
எழுந்தருள் எழுந்தருள் கருடக்கொடி ஏந்தும் கோவிந்தனே
எழுந்தருள் திருமகள் தலைவா மூவுலகும் செழித்தோங்கவே
உத்திஷ்டோ உத்திஷ்ட = எழுந்திரு எழுந்திரு
சிறு பிள்ளை அல்லவா; அதான் இத்தனை முறை "உத்திஷ்ட" என்று சொல்ல வேண்டியுள்ளது போலும்! :-)
கோவிந்த = கோவிந்தா
கோ+விந்தன்=உயிர்களாகிய பசுக்களைக் காப்பவன்; பெருமாளின் மிக முக்கியமான நாமங்களாவன: அச்சுதா, அனந்தா, கோவிந்தா!!
உத்திஷ்ட = எழுந்திரு
கருட த்வஜ = கருடக் கொடி உடையவனே
எம்பெருமானின் கொடியில் கூட கருடன் தான்; திருமலை பிரம்மோற்சவப் பதிவில் தான் பார்த்தோமே இந்தக் கொடியேற்றத்தை;
உத்திஷ்ட = எழுந்திரு
அட, மொத்தம் ஐந்து "உத்திஷ்ட"!
இன்னுமா எழ வில்லை?
(நாம தான் கேள்வி நல்லா கேப்போமே; நாம் எழும் போது தானே கஷ்டம் தெரியும் :-)வீட்டில் அம்மா நம்மை எழுப்பும் போது "எழுந்திரு, எழுந்திரு" என்று எத்தனை முறை எழுப்புகிறார்கள்? நாம் எத்தனை முறை புரண்டு புரண்டு படுக்கிறோம்? நம் ராமன் எப்படி?
குழந்தைகள் பெரும்பாலும் எழுந்திருந்தாலும், மீண்டும் மீண்டும் கொஞ்சி அழைப்பதை விரும்புகிறார்கள் - Added this line after the comment from Ms.Padma Arvinth)
கமலா காந்தா = தாமரை மலரில் உள்ளவள் விரும்பும் நாயகனே
தாமரை மீது மலர்ந்து அருளும் அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மி! அலைமகளைக் காந்தம் போல் தன் பால் ஈர்ப்பவன் ஆயிற்றே! லட்சுமிகாந்தன் என்று தானே அவன் பெயர்!
த்ரைலோக்யம் = மூன்று உலகுக்கும்
(பூலோகம், புவர்லோகம், சுவர்கலோகம்)
மங்களம் குரு = மங்களம் கொடுக்க
ராம=மங்களம் என்று பார்த்தோம். அந்த மங்களத்தை, மகிழ்ச்சியை, ஆனந்தத்தை உலகுக்கு அளிப்பதே அவன் கடமை; அதனால் தான் தனக்காக, தன் படிப்புக்காக எழச்சொல்லாது, உலக நலனுக்காக எழச் சொல்கிறார்.
இப்படிச் சொன்னால், அவனால் எழாமல் இருக்க முடியாதல்லவா?:-)
தயா சிந்து நாயகா, வேங்கடவா, திருக்கண் மலர்க!
-------------------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)3. தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) -
(Plays in Rhapsody player; If not installed, please wait till it auto installs; After that it plays by itself)
நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com,rhapsody.com
Pics: tirumala-tirupati.com
-------------------------------------------------------------------------------------
