Showing posts with label சு.13 - ஸ்ரீ மந் அபீஷ்ட. Show all posts
Showing posts with label சு.13 - ஸ்ரீ மந் அபீஷ்ட. Show all posts

Friday, July 27, 2007

சுப்ரபாதம்(13)- வேங்கடம்- தமிழ்ச் சொல்லா? வட சொல்லா?

திருமலை திருப்பதி, தமிழ்நாட்டுக்கு உரியதா என்ன?
தமிழ்நாட்டின் எல்லை வடவேங்கடம் என்று எல்லாத் தமிழ் இலக்கியங்களும் பேசுகின்றன! - இலக்கியம் பேசினால் போதுமா? மக்கள் பேச வேண்டுமே!
அங்கேயோ மக்கள் பலர் தெலுங்கு பேசுவதால், வேங்கடம் ஆந்திரத்துக்குச் சென்று விட்டது! திருத்தணிகையை மீட்ட ம.பொ.சி அவர்களால் கூட திருப்பதியை மீட்க முடியவில்லை!

இன்றைய பதிவில் இருந்து ரூட் மாறப் போகுது! :-)
இது நாள் வரை "சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்" என்று தான் வந்தது...சேஷ மலைக்கு அரசனே எழுந்திரு-ன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க!
ஆனா பெருமாள் அப்படி லேசாத் துயில் கலையப் போகிறார்-ன்னு தெரிஞ்சதும்... எல்லாமே மாறிப் போச்சுது! பெருமாளைப் பற்றிப் பாடிக்கிட்டு இருந்தவர்கள், இனி பெருமாளுக்குப் பிடித்தமானவர்களைப் பற்றி எல்லாம் பாடப் போறாங்க!
இனிமேல் ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்-னு மாற்றிப் பாடப் போறாங்க!

எது என்ன வேங்கடம்?...அது என்ன தமிழ்ச் சொல்லா? வட சொல்லா?
அசலம்=மலை; இது வடசொல். தெரிஞ்சது தான்!
(சேஷாசலம், பத்ராசலம், ஹிமாச்சலம், அருணாச்சலம்...)
ஆனா வேங்கடம்?...இது மிகவும் அழகான தமிழ்ச் சொல்!

வேங்கடம் = வேம் + கடம் = கொடுங் கடன்கள் வேகும் மலை என்பது பொருள்.
வேம் என்பது வெப்பம், நெருப்பு, பொசுக்கல் என்ற பொருளில் வரும். (வேங்காலம், வேடைக் காலம் என்று கோடைக் காலத்தைச் சொல்வதுண்டு).

கடம் = கடன் = பிறவிக் கடன் (வினை)
கடம் பலகிடந்து காடுடன் கழிந்து என்று சிலப்பதிகாரம் சொல்கிறது!
கடம் உண்டு வாழாமை என்று கடன் வாங்குவதைப் பற்றி இனியவை நாற்பது என்னும் பழந்தமிழ் நூல் பாடுகிறது!
இந்தப் பிறவிக் கடனைப் (நல்வினை/தீவினை) பொசுக்க வல்ல மலை ஆனதாலே அது வேங்கட மலை!

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மாமலை உச்சி மீமிசை
பகை அணங்கு ஆழியும் பால் வெண் சங்கும்
தகை பெறு தாமரைக் கையில் ஏந்தி

என்று சங்கு சக்கரங்களோடு பெருமாள், வேங்கடத்தின் மேல் நிற்பதைச் சிலப்பதிகாரம் படம் பிடித்துக் காட்டுகிறது!



சரி, ஒரு மலை எப்படி கடத்தைப் பொசுக்கும்?...
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய் என்ற திருப்பாவை நினைவுக்கு வருகிறதா?
போய பிழையும், இனி வரப் போகும் கர்ம வினைகளும், இவை போதாதென்று, இந்தப் பிறவியில் ஏற்றிக் கொண்ட பாவ மூட்டைகளும் - இப்படி எவ்வளவு கடனை நாம வாங்கி வைச்சிருக்கோம்! திருப்பிக் கட்ட வேண்டுமே! வட்டி கட்டி மாளுமா?

செல்போன் பில்லைக் கட்டாமப் போனாலே, Late Fee, Finance Charges, Delinquency அது இது என்று போட்டுத் தாளித்து விடுகிறார்கள்! கிரெடிட் கார்டு என்றால் இன்னும் ஒரு படி அதிகம் - சொல்லவே வேண்டாம்! வட்டிக்கு-வட்டிக்கு-வட்டி என்று ஏறிக்கொண்டே போக வேண்டியது தான்!

உண்மையான பண இருப்பை எண்ணிப் பார்க்காது, கையில் தான் கார்டு இருக்கே-ன்னு ஆடாத ஆட்டம் ஆடினால்?....திவால்!
அதே போல் உண்மையின் இருப்பான இறைவனை எண்ணிப் பார்க்காது, கையில் தான் வசதி இருக்கே, வாழ்க்கை இருக்கே-ன்னு ஆடாத ஆட்டம் ஆடினால்??? :-)


கொடும் பாபங்களையும் பொசுக்க வல்லது திருமலை!
மலையே வைகுந்த சாளக்கிரமாக இருக்கிறது!
அதன் மீது தன் கால் படவும் அஞ்சி, கீழிருந்தே சேவித்தார்கள் ஆழ்வார்கள்!
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே

என்று மலையைத் தொழுதாலே போதும், வினைகள் எல்லாம் ஓயும்! என்கிறார் வேதம் தமிழ் செய்த நம்மாழ்வார்!

அந்த வேங்கட மாமலைக்கு அதிபதி - அயர்வறும் அமரர்கள் அதிபதி -வேங்கடாசலபதி - தவ சுப்ரபாதம் என்று இனி மேல் வரப் போகும் சுப்ரபாதங்களைப் பார்ப்போம், வாருங்கள்!



(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)



(சுப்ரபாதத்தில் முக்கியமான சுலோகம் - இந்தச் சுலோகம் பொதுவாக இரண்டு முறை சாற்றப்படும் - மிகவும் எளிது கூட - வாய் விட்டுச் சொல்லிப் பாருங்கள்!)

ஸ்ரீ மந் அபீஷ்ட வரதாகில லோக பந்தோ
ஸ்ரீ ஸ்ரீநிவாச ஜகதேக தயைக சிந்தோ
ஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ மந் = ஸ்ரீ(மகாலக்ஷ்மி); அவளின் மனத்துக்கு இனியவனே!
Sweet Heart-ன்னு கேள்விப்பட்டு இருக்கீங்களா? அதான் ஸ்ரீமன் :-)
இந்த Sweet Heart-க்கு அப்படியே நேரான தமிழ்ப்பதத்தை ஆண்டாள் தருகிறாள்! என்னன்னு கண்டுபிடிச்சி சொல்லுங்க பார்ப்போம்!

அபீஷ்ட வரத = விருப்பங்களை நிறைவேற்றுபவனே!
அபீஷ்டம்=விருப்பம். நியாயமான நல்ல விருப்பங்கள். மற்றை நம் காமங்கள் அல்லாத விருப்பங்கள்...
இப்படி நம் ஆசை, விருப்பம், எண்ணங்களை எல்லாம் நிறைவேற்றி வைப்பவன் - வரம் தரும் வரதன் - நாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளுபவன்!


அகில லோக பந்தோ = எல்லா உலகத்துக்கும் உறவுக்காரனே
எல்லா உலகம் என்று ஏன் சொல்ல வேண்டும்?
தேவர்-அசுரர் என்றோ, மேலோர்-கீழோர் என்றோ, பணக்காரன்-ஏழை என்றோ, படித்தவர்-பாமரர் என்றோ, சாதி-மதம் என்றோ எந்தவொரு வேற்றுமையும் அவனுக்குக் கிடையாது!
வேற்றுமை நம்மிடத்தில் தான்! நாம் பார்க்கும் பார்வையில் தான்!
அவனோ கண்ணாடி போல!
எதுவாகப் பார்க்கிறோமோ, அதுவாகவே தெரிகிறான்! அகலில் அகலும்...அணுகில் அணுகும்...


ஸ்ரீ ஸ்ரீநிவாச = திரு-மாலே! ஸ்ரீநிவாசா
ஸ்ரீநிவாசன் என்பது மிகவும் முக்கியமான திருநாமம்..
பொதுவா அம்மாவுக்கு ஒரு பெயர் இருக்கும். அப்பாவுக்கு ஒரு பெயர் இருக்கும்! அம்மையப்பன் இருவருக்கும் சேர்த்து ஒரே பெயராக இருக்குமா?
இருக்கே! அதுவே திரு-மால்! ஸ்ரீ-நிவாசன்!

"பிரம்மநி ஸ்ரீநிவாசே" என்பது இராமானுசரின் ஸ்ரீபாஷ்யம்!
பரப்பிரும்மம் (பரம்பொருள்) யார் என்றால், அது ஸ்ரீநிவாசன் தான் என்று அவர் நிர்ணயம் செய்கிறார்! அவர் மட்டுமில்லை!
ஆதிசங்கரர், மத்வர், வல்லபர் போன்ற பலப்பல ஆச்சாரியர்களும் வேறு வேறு மார்க்கங்களைக் காட்டினாலும், நாராயணனே பரப்பிரும்மம் என்று ஒருமுகமாகச் சொல்கிறார்கள்!
"நாராயண பரோ வக்யாத்" என்று தான் ஆதிசங்கரரின் பாஷ்யமே தொடங்குகிறது! "நாரயணஹ, பரஹ" என்று முத்தாய்ப்பாகச் சொல்கிறார்!



ஜகத் ஏக தயைக சிந்தோ = அனைத்து உலகுக்கும் கருணை சிந்துபவன் நீ ஒருவனே!
தயை=கருணை! தயா சிந்து=கருணைக் கடல்!
உலகத்துக்குக் கடல் தான் காப்பு! கடலில் நடக்கும் நிகழ்வுகளால் தான் உலகம் ஒரே சீராக இயங்குகிறது!

நீராரும் கடல் உடுத்த நில மடந்தை! விரிதிரை முந்நீர் உலகம் என்பதெல்லாம் தமிழ் இலக்கியம்! அதனால் தான் இறைவனைக் கடலாக உருவகிக்கிறோம்!
கடலில் இருந்து தோன்றியது எல்லாம் இறுதியில் கடலில் போய்த் தான் கலக்கிறது.
இறைவனோ கருணைக்கடல்! இருப்பதோ பாற்கடல்!


பெருமாள் மோவாய்க் கட்டையில் இருக்கும் வெள்ளைத் தழும்புக்கும் "தயா சிந்து" என்று தான் பெயர். இது பற்றி முன்பே மாதவிப் பந்தல் பதிவில் பார்த்தோம்!

இந்த "தயா" வின் மேல் தான், சுவாமி தேசிகன் என்னும் ஆச்சார்யர், தயா சதகம் என்னும் அற்புதமான நூலைப் பாடியுள்ளார்!

மோவாயில் பொட்டழகன்!



ஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர = "ஸ்ரீ" என்று போற்றப்படும், அன்னை மகாலக்ஷ்மி உன் திருமார்பில் வசிக்கிறாள்

ஸ்ரீ மகாலக்ஷ்மிக்கு வீடு (க்ருஹம்) எது?
உன் திருமார்பே அவள் வீடு! வலப்பக்க மார்புக்கு வக்ஷ ஸ்தலம் என்றே பெயர்! அதில் அவள் நீங்காது நித்ய வாசம் செய்கின்றாள்!

ஒரு நொடிப் பொழுதும் உன்னை விட்டுப் பிரிய மாட்டாள்! மஞ்சள் குங்கும பூஷிதையாக, நித்ய சுமங்கலியாக இருக்கிறாள்! அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!

அவள் எதற்கு திருமார்பில் போய் இருக்க வேன்டும்? அவளுக்கு வேறு இடம் கிடைக்க வில்லையா என்ன?
அடியவர்கள் வரும் போது, அவர்கள் புண்ணிய பாபக் கணக்குகளை இறைவன் பார்க்கத் தொடங்கினால் யாரேனும் மிஞ்சுவமா? அதனால் தான் அவன் இதயத்துக்கு அருகில் போய் உட்கார்ந்து கொண்டாள்.
நாம் அவனிடம் செல்லும் போது, நம் தவறுகள் எல்லாம் அவன் மனத்தில் உதிக்காதவாறு, அவனைக் குளிர்விக்கிறாள்!

திவ்ய மூர்த்தே = திவ்யமான அழகை உடைய தலைவா!
எத்தனையோ மூர்த்திகள் உலகில்! ராம மூர்த்தி, கிருஷ்ண மூர்த்தி, சுந்தர மூர்த்தி!
ஆனால் இவனோ திவ்ய மூர்த்தி! அழகே வெட்கப்படும் அழகன்!

ஸ்ரீ வேங்கடாசல பதே = அப்பா, திருவேங்கட மலைக்கு அதிபதியே
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்! திருப்பள்ளி எழுக!!
----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

சுப்ரபாதம் (தமிழில்):

ஒலிச் சுட்டிகள்!

முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் - நித்ய ஸ்ரீ பாடுவது (Windows Media Player)

நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com
Pics: tirumala-tirupati.com

சுப்ரபாதம் (மூலம்):

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP