Saturday, February 10, 2007

சுப்ரபாதம்(6) - சேயோன் வணங்கிடும் மாயோன்!

தடைக் காலம் முடிந்தது! தை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தோடு! (அனத்யயன காலம்) ; அதனால், தமிழ் மறைகளுடன் சேர்ந்து கொண்டு, மீண்டும் சுப்ரபாதம் தொடக்கம்!

சென்ற பதிவில் இறைவன் திருவடிச் சிறப்பும், சப்தரிஷிகள் அவனைத் துயில் எழுப்புவதையும் கண்டோம்!
சரி, ரிஷிகளுக்கு அடுத்தது யார் வருவார்கள்?
அவர்கள் ஓதும் பிரணவத்துக்குப் பொருள் சொன்னவர்கள் தான் வருவார்கள்.
தமிழ்க்கடவுள் முருகன் - பெருமாளின் ஆசை மருகன்,
திருமலைக் கோவிலுக்கு வந்து, இறைவனைத் துதித்து, துயில் எழுப்புகிறான்!
சேயோன், மாயோன் சந்நிதிக்கு வந்து சேவிக்கிறான்.

திருமலையில் முருகப்பெருமான் தவம் செய்த தீர்த்தம் (நீர்வீழ்ச்சி) ஒன்று உள்ளது. போய் இருக்கிறீர்களா? குமாரதாரை என்று பெயர். சற்றுக் கடினப் பட்டு, நடந்து தான் போக முடியும். ஆனால் இயற்கை வளம் கொஞ்சும் அருவி.su_img6supr6


(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)
பஞ்சானன ஆப்ஜபவ சண்முக வாசவாத்யா
த்ரைவிக்ரமாதி சரிதம் விபுதா ச்துவந்தி
பாஷாபதி படதி வாசர சுத்திமாராத்

சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்

பஞ்சானன = ஐந்து முகங்கள் கொண்ட சிவபெருமான்
சிவனாருக்கு வெளியில் தெரியக்கூடிய ஐந்து முகங்கள்; ஆறாம் முகம் யோக காலங்களில் மட்டும் வெளிப்படும். பெருமாளின் இருதயத்தில் "அஜபா" என்ற நடனம் புரிபவன் ஈசன். அந்த இதயலிங்கத்துக்குத் தான் இன்று திருவாரூர் ஆலயத்தில் வழிபாடு நடக்கிறது.

ஆப்ஜ பவ = தாமரை மேல் உள்ள பிரம்மா
ஆப்ஜ=தாமரை; தாமரைத் தலைவன் பிரம்மன் என்று பொருள்.
ஈசனைப் பஞ்சமுகன் என்று சொன்னது போல், இவரை நான்முகன் என்று சொல்லவில்லை பாருங்கள். ஏன்?
முகக் கணக்கால் விளைந்த பிணக்கால் - இவருக்கு ஐந்து முகம் போய் நான்முகம் ஆனது தனிக்கதை. அதனால் தான் செருக்கின் மூலமே வேண்டாம் என்று தாமரை நாயகன் என்று சொல்லிவிட்டார்.
தத்துவம் என்னவென்றால்: உயர் பொறுப்பில் உள்ளவர்கள், அந்தப் பொறுப்போடு கூடவே வரும் பெரும் அதிகாரம். அந்தப் போதையில் மூழ்கி விடாமல், தாமரை இலை மேல் நீராய் இருக்க வேண்டும் என்பதே.

சண்முக = ஆறுமுகக் கடவுள், முருகப் பெருமான்
முருகப்பெருமானுக்கும் எம்பெருமானுக்கும் அப்படி ஒரு உறவு, அன்னோன்யம்.
இது பற்றித் தனிப் பதிவே போடலாம்; மால் மருகன் என்று பல இடங்களில் கொண்டாடப் படுகிறான்.

திருச்செந்தூரில் அசுர வதம் முடிந்து, சிவபெருமானை நோக்கித் தவக்கோலம் கொண்டான் முருகன். போர்க்கோலம் போய் இப்போது தவக்கோலம்.
எஞ்சியுள்ள சில அசுரர்களோ, அவர்கள் உறவினரோ, பழி வாங்கப் புறப்பட்டால்?
பார்த்தார் பெருமாள்! தியானத்தில் உள்ள மருகனைக் காக்கத் தானே கடலுக்கும் அவனுக்கும் நடுவில் பள்ளி கொண்டு விட்டார்!
குலசேகரப்பட்டினம் என்ற ஊர், திருச்செந்தூருக்கு மிக அருகில்! செந்தூர் ஆலயத்திலேயே பெருமாளுக்குத் தனிச் சந்நிதி இதனால் தான்!

வாசவ ஆத்யா = அமரர் தலைவன் இந்திரன் - இவர்கள் எல்லாரும்
(வாசவன்=இந்திரன்)

எல்லாம் சரி, இவர்கள் எல்லாரும் ஏன் ஒரே கூட்டமாக, இங்கு வந்துள்ளார்கள்?


த்ரைவிக்ரமாதி = திரிவிக்ரமன் - வாமனன் - உலகளந்த பெருமாள்!
திருக்கோவிலூர் என்ற ஊருக்குப் போய் உள்ளீர்களா?
கதை கதையாகச் சொல்லலாம் அந்த ஊரைப் பற்றி.

உலகளந்த பெருமாள் திருக்கோலம்.
அவதாரங்களிலேயே நடுநாயகமான அவதாரம். இதுவரை உள்ள ஒன்பதில், ஐந்தாம் அவதாரம் இந்த வாமன-திரிவிக்ரம அவதாரம்.
இதற்கு முன்பு விலங்குகள். இதற்குப் பின்பு மனிதர்கள் என்று பகுத்துக் காட்டும் அவதாரம்.
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே என்பார் வள்ளலார். அப்படி நடுவிலே நின்ற நாயகன் திரிவிக்ரமப் பெருமாள்.

அழிவு, சம்காரம் என்பதே இல்லாத ஒரே அவதாரம் இது ஒன்று தான்!

திருக்குறளப்பன், இந்த முறை, திருவை மறைத்து விட்டு,
வெறும் குறளப்பனாக வந்தான்.
"தீக்குறளை சென்றோதோம்" என்று சொல் ஒரு சொல் பதிவில் வருகிறதே - அந்தக் "குறளை" அல்ல இது! இது குள்ள உருவாய் வந்த குறள்.
இந்த அவதாரத்தில் தான் பூமிக்கும் பல நன்மைகள் நடந்தன. அதில் மிக முக்கியமான ஒன்று, கங்கை ஆறு தோன்றியது!

அதனால் தான் இந்த அவதாரத்தை மட்டும், எல்லாச் சமயங்களிலும், மதங்களிலும் சிறப்பித்துக் கொண்டாடுகிறார்கள்.
கணபதியைப் போலவே குள்ள உருவம் வாமனம். முருகபக்தர் அருணகிரியும் வாமனனைப் போற்றிப் பாடுகிறார்.
சைவ, வைணவ, சாக்த இலக்கியங்கள் மட்டும் இல்லை, ஜைன-பெளத்த இலக்கியங்களிலும் இந்த அவதாரக் குறிப்பு காணப்படுகிறது!

1189lordvamana

மேலும், எந்தப் பிரிவினர் செய்யும் யாகத்திலும், மூன்று முறை இந்தத் திரிவிக்ரமனுக்கு அவிர்ப்பாகம் அளித்தே தான் யாகம் செய்ய வேண்டும் என்பது நியதி.
அது கணபதி ஹோமம் ஆகட்டும், லலிதா சண்டி ஹோமம் ஆகட்டும், ஈஸ்வரனின் மிருத்யுஞ்ஜய ஹோமம் ஆகட்டும், வைணவ சுதர்சன ஹோமம் ஆகட்டும், அவ்வளவு ஏன் - காபாலிகள் செய்யும் அகோர ஹோமங்கள ஆகட்டும்! அனைத்திலும் உலகம் காத்த திரிவி்க்ரமனுக்கு மும்முறை துதி வழங்கப்படும். அத்தனை பெருமை இவனுக்கு!

திருப்பாவையும் ஒரு யக்ஞம் தானே! அதனால் தான்,
முதல் பத்தில் = ஓங்கி உளகளந்த உத்தமன் பேர் பாடி
இரண்டாம் பத்தில் = அம்பரம் ஊடுஅறுத்து ஒங்கி உலகளந்த
மூன்றாம் பத்தில் = அன்றிவ் வுலகம் அளந்தாய் அடி போற்றி

என்று ஆண்டாளும் இவ்வாறே மூன்று முறை அவிர்ப்பாகம் அளிக்கின்றாள், வாமன மூர்த்திக்கு!

சரிதம் விபுதா ஸ்துவந்தி = அந்த வாமனச் சரிதத்தைச் சொல்லித், துயில் எழுப்ப வந்துள்ளனர்.
எப்பேர்ப்பட்ட பாவமாக இருந்தாலும் சரி, மனம் திருந்தும் எண்ணம் வந்தாலே போதும்! வாய் விட்டுக் கூறக்கூட வேண்டாம்! திருத்தி ஆட்கொள்ள திரிபுவனமும் கடந்து வருவான் என்பதைக் காட்டும் வாமன அவதாரம்.
அதனால் தான் பாவங்களை எரிக்கும் (வேங்+கடம்) மலை மேல் நிற்பவனுக்கு, இந்த அவதாரக் குறிப்பைச் சொல்லித் துயில் எழுப்புகின்றனர் சிவன், பிரம்மா, முருகன், இந்திரன் எல்லாரும்.வாசர சுத்திமாராத் = அன்றைய நாள் கணக்கான பஞ்சாங்கத்தை
வாசரம்=நாள்; சோமவாசரம் என்றால் திங்கட்கிழமை. ஒவ்வொரு நாள் காலையிலும் அந்த நாளின் வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்று ஐந்து அங்கங்கள்.
இதை இறைவன் முன்னிலையில் ஒரு weather report (வானிலை அறிக்கை) போலப் படிப்பது இன்றும் திருமலையில் வழக்கம். பஞ்சாங்க சிரவணம் என்று பெயர்.

பாஷாபதி படதி = பல மொழிகளில் வல்லவரான பிரகஸ்பதி, படிக்கிறார்
பொதுவாக நாம் பேசும் போது கூட, "இவரு என்ன பெரிய பிரகஸ்பதியா?" என்று கேட்போம். அப்படி கல்வி கேள்விகளில் சிறந்தவர் இவர். அதனால் அவர் பாஷா பதி (மொழியின் பதி). தேவர்களின் குரு. இந்திரனுக்குத் தர்மத்தைச் சொல்லி அவனை நல்வழிப்படுத்துபவர்.

இப்படி எல்லாத் தெய்வங்களும் உன் சந்நிதிக்கு வந்துள்ளார்கள்.
சேஷாத்ரி சேகர விபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே, திருவேங்கடநாதா

தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்! திருப்பள்ளி எழுவாயாக!!
சு+ப்ரபாதம் = உனக்கும், அதனால் எங்களுக்கும் சுகமான காலைப் பொழுதாக மலரட்டும்.

----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

சுப்ரபாதம் (தமிழில்):

ஒலிச் சுட்டிகள்!

முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் - நித்ய ஸ்ரீ பாடுவது (Windows Media Player)

நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com
Pics: tirumala-tirupati.com

சுப்ரபாதம் (மூலம்):

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP