Saturday, December 15, 2007

சுப்ரபாதம்(28&29): திருப்பதியில் பெருசா அப்படி என்னய்யா இருக்கு?

இன்னியோட சுப்ரபாதப் பதிவுகள் நிறைவு அடையப் போகின்றன! திருப்பதியில் மட்டும் அப்படி என்னாங்க சிறப்பு? எதுக்கு இம்புட்டு கூட்டம், இத்தினி பில்டப்பு? :-)

குடும்பஸ்தர்கள் முதல் துறவிகள் வரை, வாலிபன் முதல் வயோதிகன் வரை, ஏழை முதல் பணக்காரன் வரை, கள்ள நோட்டு அடிப்பவன் முதற்கொண்டு கள்ளமில்லா உள்ளத்தான் வரை.....இவ்வளவு பேருக்கும்...திருமலையில் அப்படி என்ன ஒரு உணர்வு பூர்வமான ஒட்டுதல்? ஏன்-ஏன்-ஏன்?

பணம் குவியுதே! அதுனாலயா? இல்லை! பணம், பெருங்கூட்டம் எல்லாம் இப்போ தான்...சுமார் ஒரு அம்பது அறுவது ஆண்டுக்கு முன்னால் இருந்து தான்! அதுக்கு முன்னாடியெல்லாம் ஆண்டுக்கு ஒரு முறை போய் வருவதற்கே சிரமப்படுவாங்க! ஆனா எல்லாரு்க்கும் வீட்டில் இருந்து கொண்டே ஒரு தனி ஒட்டுதல் இருக்கும்! - ஏன்?

இரண்டாயிரம் வருசமா இருக்குதே! ஆழ்வார்கள் தங்கள் கால்களை, மலைமேல் வைத்து மிதிக்கவும் அஞ்சினார்களாமே!
சிலப்பதிகாரம் காலம் தொட்டு அப்படி என்ன ஒரு ஈர்ப்பு? தமிழ் இலக்கியம் மட்டும் தானா?
தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரிய மராத்தி இலக்கியங்கள், கீர்த்தனைப் பாடல்கள்-ன்னு...அப்படி என்ன தான்யா இருக்கு இங்கே? :-)

வாங்க, இன்னிக்கி சுலோகத்தைப் பார்த்தால், இந்த ரகசியம் புரிந்துவிடும்! கிடுகிடு-ன்னு பாட்டைப் பார்த்துவிட்டு, இந்த முக்கியமான செய்திக்குப் போவோம்!



இது மிகவும் முக்கியமான இறுதி சுலோகம். இரண்டு முறை ஓதுவாங்க! (இந்த சுலோகத்தைப் படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)




லஷ்மீ நிவாச நிரவத்ய குணைக சிந்தோ
சம்சார சாகர சமுத்தர அநைக சேதோ
வேதாந்த வேத்ய நிஜ வைபவ பக்த போக்ய
ஸ்ரீவேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

லஷ்மீ நிவாச = திருமகள் வசிக்கும் பெருமானே

(அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்மங்கை உறைபவனே!)

நிர வத்ய குணைக சிந்தோ = குறையொன்றும் இல்லாத குணக் கடலே

(சிந்து=கடல்; நிர வத்ய குணக் கடல் = குறையொன்றுமில்லாத கல்யாண குணங்களின் கடல்! - இது அப்படியே ஒரு பாசுரம்! என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்!)

சம்சார சாகர சமுத்தர = வாழ்க்கைப் பெருங் கடலில் (சம்சார சாகரம்)
அநைக சேதோ = (எங்களைக் கரையேற்றி விடும்) ஒரே அணை நீ தான்!

(இது தான் மேலே சொன்ன ரகசியம்!!! கீழே விரிவாகப் பார்ப்போம்!!!)

வேதாந்த வேத்ய = வேதாந்தங்களும் அறிய விரும்பும் ஞானப்பொருள், நீ!
நிஜ வைபவ = உண்மையான குணங்களைக் கொண்டவன் நீ! (எண்குணத்தான் - கல்யாண குணங்கள் கொண்டவன்)

பக்த போக்ய = பக்தர்களுக்குப் போகமாக இருப்பவன் நீ! அடியார்கள் இன்புற்று இருப்பது ஒன்றிலேயே இன்புற்று இருப்பவன் நீ!


ஸ்ரீ வேங்கடாசல பதே = திரு வேங்கடம் உடையானே,
தவ சுப்ரபாதம் = உனக்கும் அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!



அடுத்து சுலோகம் நூற்பயன் (பலஸ்ருதி) என்று சொல்லுவார்கள்...நூலை உணர்ந்து படிப்பதால் வரும் நற்பயனைச் சொல்லும் சுலோகம்!


இத்தம் விருஷாசல பதே, இக சுப்ரபாதம்
யே மானவா, ப்ரதி தினம் படிதும் ப்ர-விருத்தா
தேஷாம் பிரபாத சமயே, ஸ்மிருதி ரங்க பாஜாம்
பிரஜ்ஞாம், பர ஆர்த்த சுலபாம், பரமாம் ப்ரசுதே


இத்தம் = இப்படியாக
விருஷா சல பதே = விருஷ மலை எனப்படும் திருமலைக்கு அதிபதியான
திருவேங்கடமுடையான்
இக சுப்ரபாதம் = அவனின் இந்த சுப்ரபாதம்

யே மானவா = அனைத்து மக்களும்
ப்ரதி தினம் படிதும் = தினமும் படித்து
ப்ர-வ்ருத்தா = ஒழுகுவார்களே ஆனால்

தேஷாம் பிரபாத சமயே = தினமும் வைகறைப் பொழுதில்,
ஸ்மிருதி ரங்க பாஜாம் = எம்பெருமான் முன்னர், நினைந்து (ஸ்மிருதி), ஓதுவார் தமக்கு

பிரஜ்ஞாம் = சிதறாத மனம் (பிரக்ஞை) சித்திக்கும்!
பர ஆர்த்த சுலபாம் = உயர்ந்த செல்வமான (நித்ய விபூதி = வீடுபேறு), சுலபமாய்க் கிட்டும்!
பரமாம் பிரசுதே = பரமபதம் வாய்க்கும்! பரமபதம் வாய்க்கும்!

------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com

-------------------------------------------------------------------



சரி....ரகசியத்துக்கு வருவோம்!

திருப்பதிக்கு மட்டும் அப்படி என்னய்யா சிறப்பு?
ஏன்னா - திருப்பதியில் மட்டும் தான், இறைவன் ஒரு வித்தியாசமான கோலத்தில் நிற்கிறான்!
கூட்டத்தில் உன்னிப்பாகப் பார்க்க முடியவில்லையே-ன்னு சொல்லறீங்களா? பரவாயில்லை! காலண்டரில், படத்தில் எங்கு வேணுமானாலும் பாருங்க! பட்டுன்னு தெரியும்!

ஆன்மீகம்-னாலே ஏதோ நாலு பாட்டு, நாப்பது தத்துவம்,
புரியாத மொழியல தஸ்ஸூ புஸ்ஸுன்னு ஏதோ ஒன்னு!
அட, புரிஞ்ச மொழியான தமிழ்-ல கூட, வெளக்கம் சொன்னாத் தான்யா வெளங்குது!
படிக்காதவன், பாமரன்,....படிச்சும் அறிவில்லாதவன் - இவங்க கதி எல்லாம் என்ன? இறைவனை அனுபவிக்கவே முடியாதா?

கீதையும், அனுபூதியும் படிச்சாத் தான் ஞானம், பக்தி எல்லாம் பொறக்குமா?
இனிமே எங்கிட்டுப் போயி, இதெல்லாம் படிச்சி, எப்போ நான் கரையேறது? சரி......மாதா, பிதா, குருவைக் கேட்கலாம்-னா.........
இந்தக் காலத்துல "குரு"-ன்னு சொல்லிக்கிட்டு "குரு"ட்டாம் போக்குல வண்டி ஓட்டுறவங்க தான், அதிகமா இருக்காங்க! - யாரை நம்பறதுன்னே தெரியலையே! அடப் பெருமாளே!!

"அட,
உனக்கு ஏன்-பா இவ்ளோ குழப்பம்? நீ புதுசா எதையும் படிக்க வேணாம்! யாரையும் போயி புதுசா நம்பவும் வேணாம்!
உனக்கு கீதைக்குக் கீதையா, அனுபூதிக்கு அனுபூதியா,
குருவுக்கு குருவா....நான் தான் இருக்கேனே! அப்புறம் என்ன?
என் தோற்றத்தைக் கொஞ்சம் நல்லா உற்றுப் பாரு! வெவரம் புரிஞ்சிடும்!" பெருமானின் வலது கை = கீழே நோக்கித் தன் பாதங்களைக் காட்டுகிறது!
பெருமானின் இடது கை = தன் முழங்காலில் வைத்துக் கொண்டு நிற்கிறது!
எவன் ஒருவன், இந்தப் பாதங்களைப் பற்றிக் கொண்டு, விசுவாசத்துடன் தஞ்சம் அடைகின்றானோ, அவனுக்கு உலகம் என்னும் இந்த பெரிய சமுத்திரம்...இதோ வெறும் முழங்கால் ஆழம் தான்!
இப்படிச் சொல்லாமல் சொல்லி விளக்கும் முத்திரைக் கோலம்! = சம்சார சாகர சமுத்தர அநைக சேதோ = பிறவிப் பெருங்கடல் நீந்துவார்; நீந்தார் இறைவனடி சேராதார்!



பாதகங்கள் தீர்க்கும், பரமன் அடி காட்டும் = இது கோதைத் தமிழ்!
சர்வ தர்மான் பரித்யஜ்ய....மாம் "ஏகம்" சரணம் வ்ரஜ = இது கீதையின் ரகசியம், சரம சுலோகம்!! - எல்லாத் தர்மங்களையும் நீங்கி, என்னொருவனையே சரணம் புகுந்தவனைக் காத்து, வீடும் அளிப்பேன்!
இதை எல்லாம் தனித் தனியாகப் போய் எங்கு படிப்பது? அந்தக் கருத்துகளை எல்லாம் அப்படியே கற்சிலையில் காட்டி நிற்கிறான் இறைவன்!

இது போன்றதொரு கோலத்தை, வேறெங்கும் காண முடியாது! வேறு பெருமாள் கோவில்களில் கூட இப்படிக் காண முடியுமான்னு கேட்டா, முடியாது!
பொதுவா இறைவனை, அபயம் தரும் கரம் கோலத்திலோ, இல்லை வரங்கள் கொடுக்கும் வரத ஹஸ்தம் கோலத்திலோ தான் (வரம்-தரு-கரம்) அமைத்து இருப்பார்கள்!

இப்படி, முட்டி மேல் கையை வைச்சிக்கிட்டு, விறைப்பா எதுக்கு நிக்கணும்?
பெருங்கடல் நீந்தும் வழியைச் சொல்லிக் கொடுக்கத் தான்!
பாதங்களைக் காட்டுவது போல் காட்டி, வீடுபேறைக் காட்டும் திருக் கோலம்...அரிதிலும் அரிது!
மோட்சத்தையும் சுலபமாக்கிய ஒரே காரணத்தால் தான் கலியுகத் தெய்வம் = வேங்கடவன், என்று ஓகோவென்று கொண்டாடுகிறார்கள்!

இந்தக் கோலத்தின் உள்ளார்ந்த தத்துவம், கண்ணுக்குப் புலப்படுதோ, இல்லையோ, மனசுக்குப் புலப்படுதோ, இல்லையோ,
இந்த உன்னதம் தான், திருமலைக்கு இவ்வளவு சிறப்பைச் சேர்க்கிறது! ஒன்றும் புரியாவிட்டாலும் கூட, சன்னிதியில் நிற்கிறோமே சில நிமிடம்; அப்போது அந்த அடிமனசு மட்டும், இறைவா இறைவா என்று அதிர்கிறது அல்லவா? அதுக்கு இந்த மோட்சத் திருக்கோலம் தான் மறைமுகக் காரணம்!

ரகசியம், ரகசியம் என்று பொத்திப் பொத்தி வைத்த மறை பொருளை,
எந்தப் பேதமும் இன்றி அனைவருக்கும் "பப்ளிக்கா போட்டு உடைக்கும்", கோலம் தான் திருவேங்கடத் திருக்கோலம்!
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே
என்று நம்மாழ்வார் ஒரே போடாகப் போடுகிறார்!
எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே....என்று மலை மேல் ஏதாச்சும் ஒன்னாய் ஆக மாட்டோமா என்று அத்தனை ஆழ்வார்களும் உருகுகிறார்கள்!

ஒரு முறை இராமானுசரும் அவர் சீடர்களும், திருமலை யாத்திரையின் போது, வழி தவறிப் போய் விட்டார்கள்! பக்கத்து வயலில் ஏற்றம் இறைச்சிக்கிட்டு இருந்தான் ஒரு ஏழை விவசாயி; மலைக்குப் போகும் சரியான ரூட்டை அவங்களுக்குச் சொன்னான்!
உடனே அவனைக் கீழே விழுந்து கும்பிட்டாராம் இராமானுசர்! அட, இது என்ன சின்னப்புள்ளத் தனமால்ல இருக்குன்னு எல்லாரும் கூவ...

"மோட்சத்துக்கு வழிகாட்டிக் கொண்டு நிற்கிறான் வேங்கடவன்!
அந்த வழிகாட்டிக்கே, வழியைக் காட்டினான் பாருங்க இந்த விவசாயி! இவனும் ஒரு குரு தான்" என்று சொல்லி, மற்ற எல்லாரையும் தன் கூடவே விழுந்து கும்பிடச் சொன்னாராம்!
சரியான புனித பிம்பமா இருப்பாரு போல இருக்கே-ன்னு சொல்றீங்களா? :-)
இதில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள், திருமலைக்கு ஏன் அவ்வளவு சிறப்பு என்று!



இது வரைக்கும் எம்பெருமானின் திருப்பள்ளி எழுச்சியை, ஆர்வமுடன் வந்து கேட்ட அனைத்து நண்பர்களுக்கும், நன்றி சொல்லிக் கொள்கிறேன்!
பொதுவா ஆன்மீகப் பதிவுகளில்.....அதுவும் இது போன்று சுலோகம், பாட்டு-ன்னு வர பதிவுகளில் எல்லாம், பின்னூட்டப் புயல் அவ்வளவா வீசாது! :-)

ஆனால் சுப்ரபாதப் பதிவுகளில் 100+ பின்னூட்டங்களும் வந்துள்ளன.
பரம், வியூகம்-னு பயனுள்ள விவாதங்கள் நடந்துள்ளன.
வேங்கடம், திரு+மால் என்று தமிழறிவு முயற்சிகள் பேசப்பட்டுள்ளன.
இதற்கு மேல்விளக்கப் பதிவுகள், இராம.கி. ஐயா போன்ற மற்ற மூத்த பதிவர்களால் போடப்பட்டுள்ளன!

வெறுமனே பொழிப்புரையாக மட்டும் சொல்லிக் கொண்டு போய் இருந்தால், இது எப்போதோ முடிந்திருக்கும்! ஆனால் அப்படிச் செய்ய என் மனம் ஒப்பவில்லை!
1. சுப்ரபாதம் எதுக்கு? நமக்கா? கடவுளுக்கா?
2. கோவிலுக்குக் குளிக்காமப் போனாத் தீட்டா?
3. வேங்கடம் வட சொல்லா? தமிழ்ச் சொல்லா?
4. தமிழுக்காகச் சுப்ரபாதம் பாதியில் நிறுத்தம்!
5. வைணவத்தில் நவக்கிரகங்கள் ஏன் இல்லை?
6. தீர்த்தம் ஏன் கொடுக்கறாங்க? சடாரி ஏன்??
என்று பல விளக்கங்களைப் பார்த்தோம்!

சும்மானா போனோமா வந்தோமா-ன்னு இல்லாம, இன்றைய இளைஞர்கள் மனத்தில் பல கேள்விகள் இருக்கு! அது ஏன் அப்படி.......இது ஏன் இப்படி-ன்னு பகுத்து அறிந்த பின்னர் தான், நடக்க நினைக்கிறார்கள்! அது தான் நல்லதும் கூட! அப்போது தான் ஒரு உடைமைக் குணம் (sense of ownership) வரும்!
அதான் பொழிப்புரை மட்டுமே சொல்லாம, பல கோணங்களில் "இது ஏன், அது ஏன்" என்று அலசிக்கிட்டே போனோம்!

இத்துடன் சுப்ரபாதம் நிறைந்தது! இதோ தங்க வாசல் திறந்தது!
எம்பெருமானின் காணத் தெவிட்டாத திருக்கோலம்! நீல மேனி நெடியோன் நின்ற வண்ணமும்!!
ஒற்றை வெள்ளை வேட்டியில்,
ஒற்றைத் துளசி மாலையில்,
வேறு ஆபரணங்கள் இன்றி,
பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்குமாய் - சங்கு சக்கரங்களுடன்,
மோவாயில் பக்தன் அடித்த வெள்ளைத் தழும்பு - "தயா சிந்து" துலங்க,
திருமார்பில் அன்னை வீற்றிருந்து, நம் எல்லாரையும் "வாங்கப்பா வாங்க" ன்னு சொல்ல...
இந்த நாளின் முதல் சேவை = சுப்ரபாத சேவை!!!

தோள் கண்டார் தோளே கண்டார், தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார், தடக் கை கண்டார்
என்று எல்லாரையும் மயக்கிப் போடும் ஒரு எளிவந்த திருக்கோலம்!

காலைச் சுத்திகள் முடிந்து, இன்றைய பொழுதின் தரிசனம் தொடங்கியது...
முதல் மணி ஒலிக்க, நவநீத ஆரத்தி என்னும் முதல் தீபம் காட்டப்படுகிறது! கோவிந்தா கோவிந்தா என்னும் முழக்கம்!
பாதங்களைக் காட்டி, முழங்காலில் கை வைத்து நிற்கும் கோலம் தெரிகிறது அல்லவா? நேரில் செல்லும் போதும் காண முயலுங்கள்!

இந்த முயற்சிக்கு உறுதுணையாய் இருந்த நண்பர்கள் பலருக்கும் நன்றி சொல்லிக்கிறேன்!
உலகில் not so privileged என்பார்களே, அந்தச் சில பிஞ்சுக் குழந்தைகளுக்காக, அப்பனை இறைஞ்சிக் கொள்கிறேன் - ஷ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணும்!!

வெறுமனே ஆரவாரத்தை விட்டு ஒழித்து,
அறிவும், செறிவும், வளர்க்க உதவுவது தான் ஆன்மீகம் என்ற நிலை வரவேண்டும். அதற்கான சிறுசிறு முயற்சிகள் பெருக இறைவன் துணை செய்யட்டும்!

தூங்குவது போல் தூங்கிக் கொண்டிருக்கும் நம்மையெல்லாம் தட்டி எழுப்ப, ஒரு சுப்ரபாதம் ஓங்கி ஒலிக்கட்டும்!!

கோவிந்த நாம சங்கீர்த்தனம் - கோவிந்தா கோவிந்தா!
திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்!

Monday, December 10, 2007

சுப்ரபாதம்(26&27): கோயிலில் முதல் தரிசனம் இவனுக்கா?

காலையில் சில பேர் எழுந்தவுடன், கட்டிலை விட்டு, முதலில் கண்ணாடி முன்னாடி போய் நிப்பாங்களாம்? எதுக்குன்னு கேக்கறீங்களா?
கூட்டுக் குடும்பத்தில் இருந்திருந்தா உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்!
தலை கலைஞ்சி, கண்ணு சொக்கி, வாயில் ஜொள்ளு ஒழுகி, ஹா-ன்னு ஒரு கொட்டாவி விட்டு...காலாற எழுந்திரிச்சி நடந்தா...

அய்யோ.....வாஷ்பேசினுக்கு போற வழியில அத்தைப் பொண்ணு வந்து நிக்குறா...இவ எங்க இங்க வந்தா?
நம்ம கலைஞ்சி போன மூஞ்சிய பாத்திருப்பாளோ? நேத்துன்னு பாத்து, ஷேவிங் கூடப் பண்ணல! இப்பிடி யோசித்துக் கொண்டே, கையாலயே தலை சீவிக்கிற "சீவிப் பசங்க", இருக்குறாங்க! :-)
இப்படிப் பெருமாளும் துயில் களைஞ்சி ஒரு சீவு சீவிக்குறாரு! :-)



சுப்ரபாதப் பதிவுகள், அடுத்த பதிவோட முடியப் போகுது! அதனால் அடுத்த பதிவு மிகவும் ஸ்பெஷலான பதிவு! அதுக்கு முன்னோட்டமா, சில தகவல்களை இன்னிக்குப் பாக்கலாம்!

திருமலையில் சுப்ரபாத சேவைன்னே ஒரு தரிசனம் உண்டு! விடியற்காலை சுமார் 02:30 மணிக்கு துவங்கும் சுப்ரபாதம்.
அதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு தான் நடை சாத்திக் கோவிலை மூடி இருப்பாங்க.
சடக்குன்னு அடுத்த நாளுக்காக, மீண்டும் திறந்திடுவாங்க! கோவிலில் முதல் தரிசனம் யாருக்குத் தெரியுமா?

வேதம் ஓதுபவர்களுக்கா? - இல்லை!
தமிழ் ஓதும் விற்பன்னருக்கா - இல்லை!
அரசனுக்கா? மந்திரிக்கா? - இல்லை! இல்லை!!
படித்த மேதைக்கா - இல்லை!
நேத்து உண்டியலில் எல்லாரையும் விட அதிகமாப் பணம் கொட்டினவருக்கா? - இல்லவே இல்லை!

இவர்கள் எல்லாரும் கைகட்டிக் காத்திருக்க, எங்கிருந்தோ "மாஆஆ" என்று ஒரு சத்தம்!
கூட்டம் அதிகம் இல்லை! குளிர் தென்றல் வீசுகிறது! சில பக்தர்கள் அங்கப் பிரதட்சிணம் செய்து முடிக்கிறார்கள்;

இப்போது நாம் நிற்கும் இடம் திருமாமணி மண்டபம். இரண்டு பெரிய காண்டா மணிகள் வாசலில்! அருகே நந்தா விளக்கு!
எதிர்ப் பக்கம் கருடன் நிற்கிறான். அவனுடன் சேர்ந்து நாம் எல்லாரும் நிற்கிறோம்.
வாயிலைக் காக்கும் துவார பாலகர்கள் (ஜய விஜயர்கள்) இருபுறமும் காத்து நிற்கும் தங்க வாயில் (தெலுங்கில்: பங்காரு வாகிலி) மூடப்பட்டு உள்ளது.

அர்ச்சகர்கள் குடங்களில் நீருடன் நிற்கின்றனர். பூக்குடலைகள் தாங்கிக் கொண்டு இன்னும் சில பேர் காத்துள்ளனர் - யாருக்கு?

திருமலையில் ஜீயர் என்னும் வைணவத் தலைவருக்கு "பெரிய கேள்வி அப்பன்" என்ற தூய தமிழ்ப் பெயர்! ஆலய நிர்வாகத்தில் கேள்வி கேட்கும் உரிமை பெற்றவர்; ஆதலால், கேள்வியப்பன் என்ற தமிழ்ப்பெயரைச் சூட்டி, அந்தப் பதவியை உருவாக்கினார் இராமானுசர்.
அந்தக் கேள்வியப்பர் பூட்டின் சாவியைத், துவார பாலகர்கள் அருகில் வைத்து, கதவைத் திறக்க அனுமதி பெறுகின்றார்; பின்னர் அவரும் காத்துள்ளார் - யாருக்கு?

அன்னமாச்சார்யரின் பூபாளக் கீர்த்தனை தம்பூராவில் இசைக்கப்படுகிறது;
தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் தமிழ்த் திருப்பள்ளி எழுச்சியின் முதல் பாசுரமும் அப்படியே இசைக்கப்படுகிறது! - வேறு மொழிச் சத்தங்களோ, கோஷங்களோ ஏதும் இல்லை!

மணிகள் ஒலிக்கின்றன; பேரிகையும் ஊதுகோலும் சேர்ந்து ஓசை எழுப்புகின்றன;
காற்றில் நெய் தீபத்தின் மணமும், பச்சைக் கர்ப்பூரத்தின் வாசனையும் மூக்கைத் துளைக்கிறது!
இதோ.....திருக்கதவம் திறக்கப்படுகிறது!
எல்லோர் கண்களும் எக்கி எக்கி, எம்பெருமானைச் சேவிக்கத் துடியாய்த் துடிக்க...
அடச்சே!....வெள்ளைத் திரை ஒன்று போடப்பட்டுள்ளதே! நாம் காண முடியாதா? - முடியாது...முதல் தரிசனம் வேறு யாரோ ஒருவருக்கு! - யாரப்பா அது?

ஜீயர், அர்ச்சகர்கள் எல்லாரும் உடனே ஒதுங்கிக் கொள்கிறார்கள்!
படிக்காத, பகட்டு இல்லாத ஒருவர் உள்ளே வர,
எல்லாரும் வழிவிட்டு ஓரமாக நின்று கொள்கிறார்கள்!

யாருக்கு இப்படி ஒரு மரியாதைன்னு பாக்குறீங்களா? - ஒரு மாட்டு இடையனுக்கு!
பசுவும், கன்றுமாய் ஓட்டி வரும் இடையன், பொற்கதவின் முன் வந்து நிற்க...
மெல்லத் திரையை விலக்கி....அவன் மட்டும் இறைவனை ஹா...வென்று பார்க்கிறான்! அவனுடன் பசுவும் கன்றும் இறைவனைக் காண்கின்றன!
பசுவும் கன்றுமாய், வரும் கோனாரின் முகத்தில் தான் திருமலை அப்பன் முதலில் விழிக்கின்றான்!

கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும் என்று மாணிக்கவாசகர் பாடுவது தான் எவ்வளவு பொருத்தமாய் இருக்கு!
இந்தப் பழக்கம் பல நூற்றாண்டுகளாய் இருந்து வரும் ஒன்று! சாதி வித்தியாசங்கள் பார்க்கப்பட்ட காலத்தில் கூட, இந்த வழக்கம் நடைபெற்றுக் கொண்டு தான் இருந்தது.
கோ+விந்தன் = பசு+காப்போன் அல்லவா அவன்!
உயிர்கள் என்னும் பசுக்களைக் காத்து மேய்க்கும் "நல்ல மேய்ப்பன்"! அதனால் தான் பசுவைக் காட்டி, அன்றைய பணியை, இறைவனுக்கே அறிவுறுத்திச் செல்கிறான் இந்த இடையன்!

அதற்கு அப்புறம் தான் ஜீயரும், அர்ச்சகர்களும், இன்ன பிற அடியவர்களும் ஒவ்வொருவராய் உள்ளே செல்கிறார்கள்! அனைவர் கையிலும் மங்கலப் பொருட்கள் - கண்ணாடி, விளக்கு, மலர்மாலை என்று...
கண்ணாடியைத் தூக்கிப் பிடித்து, இறைவனுக்குக் காட்டியபடியே செல்கிறார்கள்!

அடுத்த நிறைவுப் பதிவில், எந்த அலங்காரமும் இன்றி, வெள்ளைத் துவராடையில், ஒற்றைத் துளசி மாலையுடன், மிக எளிமையாக ஒரு கோலத்தை நாம் எல்லாரும் காணப் போகிறோம்! திருப்பதியில் மட்டும் அப்படி என்ன பெருசா சிறப்பு இருக்குன்னு, சில பேர் கேக்கறாங்க இல்லையா? அடுத்த பதிவில் தெரிந்து விடும் பாருங்கள், உங்களுக்கு!

சுப்ரபாதத்தின் இறுதி வரிகள் ஒலித்துக் கொண்டு இருக்க....வாங்க, இன்றைய சுப்ரபாதத்துக்குப் போகலாம்;




(இந்த சுலோகத்தைப் படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)





பாஸ்வான் உதேதி விகசாநி சரோருகானி
சம்பூர யந்தி நினதை ககுபோ விகங்கா
ஸ்ரீவைஷ்ணவா சததம் அர்த்தித மங்களாஸ்தே
தாமாச்ரயந்தி தவ வேங்கட சுப்ரபாதம்

பாஸ்வான் உதேதி = கதிரவன் உதித்து விட்டான்!
விகசாநி சரோருகானி = மலர்ந்து விட்டன தாமரைகள்!

சம்பூரயந்தி நினதை = முழுமையாக ஒலிக்கத் தொடங்கிவிட்டது
ககுபோ விகங்கா = மலைப் பறவைகளின் ஒலி!

கீசு கீசு என்றும் ஆனைச்சாத்தன் கலந்து...
புள்ளும் சிலம்பின காண், புள்ளரையன் கோவிலில்
...என்ற திருப்பாவை வரிகள் அப்படியே நினைவுக்கு வருகின்றன!

ஸ்ரீவைஷ்ணவா = வைணவ அடியவர்கள்
சததம் அர்த்தித = என்றும் உன்னையே விரும்பிக் கொண்டு
மங்களா அஸ்தே = மங்களப் பொருட்களைக் கையில் தாங்கி நிற்கிறார்கள்!

தாமா ச்ரயந்தி = விடாப்பிடியாக இன்னும் தூக்கமா?

தவ வேங்கட சுப்ரபாதம் = திருவேங்கடமுடையானே, உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!








பிரம்மா ஆதய சுரவரா ச மகர்ஷ யஸ்தே
சந்தஸ் சனந்தன முகாஸ் தவ யோகி வர்யா
தாமாந்திகே தவஹி மங்கள வஸ்து ஹஸ்தா
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்


பிரம்மா ஆதய = பிரம்மன் முதலான
சுரவரா = அமரர்கள்
ச மகர்ஷ யஸ்தே = இவர்களுடன் மகரிஷிகள்

சந்தஸ் சனந்தன = சந்தையாக வந்துள்ளனர், சனந்தனர் முதலான முனிவர்கள்
முகாஸ், தவ யோகி வர்யா = உன் கோயில் முகத் துவாரத்திலே, தவ யோகிகள் நிரம்பி உள்ளனர்!

தாமாந்திகே தவஹி = மின்னுகின்ற உயர்ந்த
மங்கள வஸ்து = மங்களப் பொருட்களை,
ஹஸ்தா = கையில் ஏந்தியுள்ளனர்.


எவை அந்த மங்கலப் பொருட்கள்? - நீர்க்குடம், தீபம், சாமரம், கண்ணாடி, வெண் துவராடை, துளசிதளம்!
காலையில் எழுந்தவுடன் மங்கலப் பொருட்களைப் பார்க்கும் வழக்கம் விஷூக் கனி என்று மலையாள மக்கள் கொண்டாடுவாங்க! ஆனா அது தமிழ் நாட்டு வழக்கம் தான்! எப்படி அதை நாம் தொலைத்தோம்-ன்னு தான் தெரியலை! :-)


வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மாநிதி கபிலை ஒண் "கண்ணாடி" முதலா
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
ஏற்பனவாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ?
- என்று இது அப்படியே திருப்பள்ளி எழுச்சியிலும் வருகிறது!


ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!
----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

சுப்ரபாதம் (தமிழில்):

ஒலிச் சுட்டிகள்!

முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் - நித்ய ஸ்ரீ பாடுவது (Windows Media Player)

நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com
Pics: tirumala-tirupati.com

சுப்ரபாதம் (மூலம்):

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP