Saturday, September 20, 2008

சுப்ரபாதம்(30&31) - கமலா குச மாப்பிள்ளை வெட்கப்பட!

ஓ...ஓ...ஓ! லிப்-ஸ்டிக் கரையா? ச்ச்ச்ச்ச்ச்சீய்! அடேய் கள்ளா...
இப்படி, புது மாப்பிள்ளை எழுந்து வெளிய வரும் போது யாராச்சும் பார்த்து இருக்கீங்களா? :)
சரி சரி, நீங்களும் அந்தந்த காலத்துல புது மாப்பிள்ளை தானே? எப்படி இருந்துச்சி, நீங்க வெளியே எழுந்து வரும் போது? சும்மா வெட்கப்படாமச் சொல்லுங்க :)))

என்னாங்க? நலமா இருக்கீயளா? கொஞ்ச நாள் காணாமப் போயிருந்த கேஆரெஸ் இப்போ மீண்டும் சுப்ரபாதப் பதிவுல சந்திக்கறேன்! அட, நான் பேசலீங்க! புரட்டாசி பேசுது! :)
வாங்க சுப்ரபாதத்தின் அடுத்த கட்டத்துக்குப் போகலாம்!

கமலா குச சூசுக குங்குமதோ-ன்னு வரும் பாட்டைப் பல பேரு ரசிச்சி இருப்பீங்க! அதன் மெட்டு அப்படி! அப்பவே ஏ.ஆர். ரகுமான் போல ஃபாஸ்ட் பீட், டான்ஸ் பீட் எல்லாம் போட்டிருக்காங்க போல சுலோகங்களுக்கு!
இந்த அமைப்புக்குப் பேரு, தோடக விருத்தம் - Thodaka Metre!
நாலு நாலு சந்தச் சீராக வரும்! கொஞ்ச கொஞ்சம் நம்ம இன்னிசை வெண்பா மாதிரி! இலவசமா, கொத்தனாரைக் கேட்டுக்குங்க! :)

ஆனந்த கிரி என்பவர் ஆதி் சங்கரரின் சீடர். அவர் தான் இந்தச் சந்த அமைப்பை முதலில் கொண்டு வந்தது! தோடகாஷ்டகம் என்கிற சுலோகம்! பவ சங்கர தேசிகமே சரணம்-ன்னு வரிக்கு வரி முடியும்! அதுக்கு அவர் அமைத்த மெட்டு தான் மிகவும் பிரபலமாகிப் போனது!

பின்னாளில் இதே சந்தத்தை, வைணவ சுலோகங்களுக்கும் பயன்படுத்தி உள்ளனர். அதுவும் மணவாள மாமுனிகள் போன்ற பெரிய ஆச்சார்யர்களே, சீடரான அண்ணங்காச்சாரியாருக்கும் (சுப்ரபாதம் இயற்றியவர்) சொல்லிக் கொடுத்தும் உள்ளனர். ஒரு அத்வைத குருவின் சுலோகச் சந்தம் நமக்கு எதுக்கு என்ற பேதம் எல்லாம் இல்லை!

நீரைப் போலவே, நல்லன, எப்போதும் எல்லார்க்குமே பொது. அவரிடம் இருந்து நாம் ஏன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற வீம்புகள் எல்லாம் பார்க்கக் கூடாது! அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு இது!



சுப்ரபாதம் என்றால் என்ன? என்று முன்னரே பார்த்தோம்!
தூங்குவது போல் தூங்கிக் கொண்டிருக்கும் நம்மையெல்லாம் தட்டி எழுப்பவே சுப்ரபாதம்!

இறைவன் செல்லக் குழந்தை! குழந்தைகளைத் தான், டேய் ராமா, கிருஷ்ணா, முருகா - எழுந்திரிடா-ன்னு கொஞ்சிக் கொஞ்சி எழுப்புவோம்!
வீட்டில் சிறுசுங்களே எழுந்து விட்ட பின்னர், பெருசுகள் தூங்கிக் கொண்டிருந்தால் நல்லாவா இருக்கும்? அதே போல் இறைவனே சுப்ரபாதம் கேட்டு எழுந்து விட்ட பின்னரும், நாம் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தால் நல்லாவா இருக்கும்?

துயில் கலைந்த பின், ஒருவர் எப்படி இருப்பாரு?
நீங்க கட்டிலில் இருந்து எழுந்த பின்னர், உங்களைக் கண்ணாடியில் பார்த்து இருக்கீங்களா? படுக்கப் போகும் போது எப்படி இருந்தீர்களோ, அப்படியே தான் எழும் போதும் இருப்பீர்களா என்ன? :)
குழந்தைகள் எழுந்தால் அந்தக் கோலம் ஒரு விதம்!
இளைஞர்/இளைஞிகள் எழுந்தால் அந்தக் கோலம் இன்னொரு விதம்!
ஆனால், காதலர்கள், தம்பதிகள் எழுந்தால்??? :))

காமன் கோயில் சிறைவாசம், காலை எழுந்தால் பரிகாசம் என்பார் கவிஞர் வைரமுத்து!
காலை எழுந்தவுடன் திருவேங்கடமுடையானைக் கண்டால் பரிகாசம் தான் போலும்!
ஆகா, இவ்வளவு நேரம் தூங்கிட்டோமே! இனி மற்ற வேலைகள் எல்லாம் யார் பார்த்துக் கொள்வது? உலகத்துக்கே படி அளக்கணுமே!

டட-டங்டக-டங்டக-டங்டக-டைன்-ன்னு வேலை எல்லாம் நடக்க ஆரம்பிக்குது! சந்தமும் அதே போலவே பயின்று வருது! வாங்க பார்க்கலாம்!

சுப்ரபாதத்தின் இரண்டாம் பகுதி - ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸ்தோத்திரம்!



(இந்த சுலோகத்தைப் படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)

கமலா குச சூசுக குங்குமதோ
நியதாருணி தாதுல நீல தனோ
கமலாயத லோசன லோக பதே
விஜயீ-பவ வேங்கட சைல பதே


கமலா குச = திருமகள் மகாலக்ஷ்மி, அவள் திரு மார்பகம்
சூசுக குங்குமதோ = முலைக் காம்பிலே, குங்குமப் பூச்சு
நியதா அருணித = பரவியுள்ளதே (குங்குமச்) சிவப்பு
அதுல நீல தனோ = உயர்ந்த, உன் நீல மேனியில்?

கமலாயத லோசன = தாமரை போன்ற அகன்ற கண்கள் கொண்ட
லோக பதே = உலக நாயகா!
விஜயீ-பவ, வேங்கட சைல பதே = வேங்கட மலைக்கு அரசே! விஜயீ பவ! உனக்கு வெற்றி உண்டாகட்டும்!

எளிமையான பாட்டு! அதே போல், இறைவனும் எளிமையாகத் தான் எழுந்திருக்கிறான்! ஒற்றை வெள்ளை வேட்டி, ஒற்றை மேல் துண்டு, ஒற்றைத் துளசீ மாலை, ஒற்றைப் பூ மாலை!
அட, கூடவே என்ன அது கன்னத்துல? சிவப்பா? - கொசுக்கடியா? நாக்கடியா? அவள் தேக்கடியா, தேன் கடியா? :)

ஓ...ஓ...ஓ!
லிப்-ஸ்டிக் கரையா? ச்ச்ச்ச்ச்ச்சீய்! அடேய் கள்ளா...புது மாப்பிள்ளை எழுந்து வெளிய வரும் போது யாராச்சும் பார்த்து இருக்கீங்களா? :)
சரி சரி, நீங்களும் அந்தந்த காலத்துல புது மாப்பிள்ளை தானே? எப்படி இருந்துச்சி நீங்க வெளியே எழுந்து வரும் போது? சும்மா வெட்கப்படாமச் சொல்லுங்க :)))

அதே போல் திருவேங்கடமுடையானுக்கும் வெட்கம் பிடுங்கித் தின்னுது போல!
இப்படியே போனா, யாராச்சும் பார்த்து விட்டால்? தோழர்கள் எல்லாம் ஓட்டியே தீர்த்துடுவாங்களே! ஹா ஹா ஹா!
என்னப்பன், பொன்னப்பன், முத்தப்பன், மணியப்பன் கன்னத்துல சும்மாவே குழி விழும்! இப்ப இது வேறயா?

அவனும் அவளும் தினமுமே கல்யாண உற்சவம் செஞ்சிக்கறாங்க! நித்ய கல்யாணம்! அஷ்டமி-நவமி, நல்ல நாள்-கெட்ட நாள் ஒன்னு கிடையாது! திருமலையில் தினமுமே திருமணம் தான்! எப்பமே அவங்க புது மாப்பிள்ளை, புதுப் பொண்ணு தான்!
அதான் அவன் நீல மேனி எங்கும் அவள் குங்குமச் சிகப்பு! குங்குமத்திலும் வெட்கத்திலும் சிவந்து போய், அவன் நீல மேனி ஐயோ, சேப்பு மேனி ஆனதுவே! :)

பெண்கள் தங்கள் மேனியில் மஞ்சள் பூசிக் கொள்வது வழக்கம்! இப்பவெல்லாம் ஃபேர் & லவ்லியா? தெரிஞ்சவங்க, பூசி விடறவங்க யாராச்சும் சொல்லுங்க! :)
மஞ்சள் இயற்கையான கிருமி நாசினி! இயற்கையான நறுமணம்! பக்க விளைவோ, விலங்குகள் மீது பரிசோதனையோ ஒன்னுமே இல்லை!
மஞ்சளை உலர்த்திப் பொடியாக்கினால் குங்குமம்! மீனாட்சி குங்குமம் என்று இன்னிக்கும் தயாரிக்கிறார்கள்! அப்படிச் செம்பஞ்சுக் குழம்பைப் பூசியிருக்கிறாள் அலர் மேல் மங்கை! அவள் யார்?

அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா! - அதாச்சும், அவனை விட்டு ஒரு நொடிப் பொழுதும் பிரியாமல்.....அவன் மார்பிலே அவள்.......அவள் மார்பிலே அவன்!
மஞ்சள் குங்கும பூஷிதையாக, நித்ய சுமங்கலியாக, அவன் வலத் திருமார்பான வஷ ஸ்தலத்திலே வீற்றிருக்கின்றாள் மகாலக்ஷ்மி! அப்படி ஒரு தம்பதி அன்னோன்யம்!

அந்த அன்னோன்யத்தில் புது மாப்பிள்ளைக்கு நம் பாவங்களும் கோவங்களுமா கண்ணுக்குத் தெரியும்?
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாமல், சிரித்து அருளும் புது மாப்பிள்ளையே!

யாதும் மறுக்காத மலையப்பா! உன் மார்பில்
ஏதும் தர நிற்கும், கருணைக் கடல் அன்னை
,
என்றும் இருந்திட, ஏது குறை எனக்கு?
ஒன்றும் குறையில்லை, மறைமூர்த்தி கண்ணா!
மணிவண்ணா, மலையப்பா, கோவிந்தா, கோவிந்தா...





ச-சதுர்முக சண்முக பஞ்ச முக
பிரமுகாகில தைவத மெளலி மனே
சரணாகத வத்சல சார நிதே
பரிபாலயமாம் விருஷ சைல பதே!


சதுர்முக = நான்முக, பிரம்ம தேவர்
சண்முக = ஆறுமுக, முருகப் பெருமான்
பஞ்சமுக = ஐந்துமுக, சிவ பிரான்
பிரமுகாகில தைவத = போன்ற பிரமுகர்களான தெய்வங்கள் எல்லாம்
மெளலி மனே = தங்கள் மெளலி (மகுடம்) மேல், தலை மேல் வைத்து உன்னை மட்டும் கொண்டாடுகிறார்களே! எதனால்?

சரணாகத வத்சல = சரணம் என்று வந்தாரை அன்பால் ஆட்கொள்பவா!
சார நிதே = சகலத்துக்கு சாரமான நிதியே! வற்றாத செல்வமே!
பரிபாலயமாம் = எங்களைக் காப்பாற்றி அருள்வாய்!
விருஷ சைல பதே! = விருஷபாசலம் என்னும் திருமலைக்கு அரசே!

பிரம்ம தேவர், சிவ பெருமான், சண்முகப் பெருமான் போன்ற சிறப்பான தெய்வங்களுக்குக் கூடத் திருவேங்கடமுடையான் மீது அப்படி என்ன கொள்ளைப் பிரியம்? அப்படி என்ன உன்னை மட்டும் தலை மேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள்?

சிவ பெருமான், உன்னை மேல் நோக்கிப் பார்க்கும் பொருட்டு, திருமலை அடிவாரத்தில், கபிலேஸ்வர ஸ்வாமியாக அமர்ந்து விட்டார்! ஆழ்வார் தீர்த்தம் அவர் தொட்டியில் இன்றும் வந்து விழுகிறது! அதில் தான் ஆறு காலமும் ஈசனுக்குத் திருமுழுக்கு!

முருகப் பெருமான், உன் தோளோடு தோளாக நட்புறவு கொள்ள, திருமலை வனத்தில் உள்ள குமாரதாரா தீர்த்தத்தில் தவம் இயற்றுகிறார்!
பிரம்ம தேவன், ஆண்டு தோறும் பிரம்ம உற்சவம் என்னும் பிரம்மோற்சவம் நடத்துகிறார். இன்றும் பிரம்மோற்சவத்தில் சுவாமியின் ரதத்துக்கு முன்னால் பிரம்ம ரதம் தான் செல்கிறது!

அது என்ன உனக்கு மட்டும் அப்படி ஒரு மயக்கும் மோகனாகாரம்? மாயோன் மாயம்??
சாதி, மதம், மொழி, இன பேதங்கள் இன்றி, வட நாட்டவரும் தென் நாட்டவரும், உன்னை நாடி நாடி வருகிறார்களே! இத்தனை நேரம் கால் கடுக்க நிற்கிறார்களே! கொஞ்சம் கூட அலுக்கவே அலுக்காதா?

* வடவருக்குப் பாலாஜி,
* தெலுங்கருக்குத் தேவுடுகாரு,
* கன்னடர்க்கு ஸ்வாமிவாரு,
* மலையாளிகளுக்கு எங்களச்சன்,
* ஆரியர்க்கு ஸ்ரீ-நிவாசன்,
* எந்தமிழருக்கோ திருவேங்கடமுடையான், திருமகள்-கேள்வன்!

சும்மாவா சொன்னார் மாறன்? நிகரில் அமரர், முனிக் கணங்கள் "விரும்பும்" திரு வேங்கடத்தானே-ன்னு! இப்படி "விரும்பும்" என்ற சொல்லைச் சரணாகதிப் பாசுரத்தில் வைத்துக் கொண்டாடுவது வேறெங்குமே இல்லை!

எல்லாருமே விரும்புகின்றனர்! யாரையும் கட்டாயப்படுத்தவில்லை! எவரையும் வற்புறுத்த வில்லை! ஆசை காட்ட வில்லை!
தானாக விரும்புகின்றனர்! அவரவர் மொழியில் விரும்புகின்றனர்! அவரவர் இனத்தில் விரும்புகின்றனர்!!

நிகரில் அமரர், முனிக் கணங்கள் "விரும்பும்" திரு வேங்கடத்தானே!
புகல் ஒன்று இல்லா அடியேன், உன் அடிக் கீழ், அமர்ந்து புகுந்தேனே!
என்னும் சரணாகதிக்குச் சாரமான ஒரே பாசுரம், அரங்க நகர் அப்பனுக்குக் கூட அமையாமல், திருவேங்கடமுடையானுக்கு மட்டும் அமைந்தது தான் வியப்பிலும் வியப்பு!

அகலகில்லேன் இறையும் என்று, அலர் மேல் மங்கை உறை மார்பா! - என்று தாயாரையும் உடன் வைத்து, செய்யப்படும் சரணாகதியின் சாரம் தான் இந்த மாறாத் தமிழ்! மாறன் தமிழ்!

சரணாகத வத்சல = இப்படிச் சரணாகதி செய்பவர்களின் குற்றங் குறைகள் ஒன்றைக் கூட பார்க்காமல், வாத்சல்யம் (அன்பை) மட்டுமே பார்க்கும் வத்சலா! சரணாகத வத்சலா! சரண்ய வத்சலா!

சார நிதே = அனைத்துக்கும் சாரமான நிதியே! கருணை நிதியே! தயா நிதியே! - மோவாய்க் கட்டையில் பக்தன் அடித்ததைக் கூட வெட்கப்படாமல் காட்டிக் கொண்டு நிற்கும் தயா சிந்தூ!

பரிபாலயமாம் விருஷ சைல பதே! = விருஷ மலை வாசா! சேஷ மலை வாசா! அடியோங்களைப் பரிபாலித்து (தினப்படிக் காத்து) அருள் புரிவாயாக!
நித்யாபி யுக்தானாம் யோக ஷேமம் வஹாம்யஹம் = எங்கள் தினப்படி காரியங்களையும் நீயே நடத்திக் கொடுத்து, பரிபாலித்து, காப்பாயாக!

உள்ளம் புகுந்து, குளிர்ந்து ஏல் ஓர் எம் பாவாய்! - மெள்ள எழுந்து, "ஹரீ" என்ற பேர் அரவம்! - ஹரி ஓம்!

------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com

-------------------------------------------------------------------

Friday, September 19, 2008

புரட்டாசி-1: சுசீலா, ஜானகி சேர்ந்து பாடும் சுப்ரபாதம்!

என்னாங்க, நலமா இருக்கீயளா? கொஞ்ச நாளாக் காணாமப் போயிருந்த கேஆரெஸ் தான் பேசுதேன்! நானா பேசுலே! புரட்டாசி பேசுது! :)

அன்பர்களே,
சுப்ரபாதப் பதிவுகள் நிறைவடைந்த போது, அதனை ஒரு மின்-புத்தகமாக (E-Book) வடிவில் கேட்டிருந்தனர்!
அதான் அதையும் தந்து, இசையும் தந்து, இவ்வாண்டு புரட்டாசிப் பதிவுகள் துவக்கம்! ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு பதிவு!

கீழே பாருங்க...
சுசீலாம்மா, ஜானகி சேர்ந்து பாடும் சுப்ரபாதம்!
முதல் சில பத்திகள் தான்! பந்தம் என்னும் தெலுங்குப் படத்தில் இருந்து! ஷோபன் பாபு-ராதிகா நடித்தது!

அதில் சுப்ரபாதத்தை சுசீலாம்மா, தேன் குரல் எடுத்து ஒலிக்க, ஜானகி குழந்தைக் குரலில் கீச்சிடுகிறார்கள். பின்னால் ஒரே ஒரு தம்பூரா இழை தான்!
சுசீலாம்மாவின் குரலில் ஒரு கூர்மையும், செவ்விய மந்திர உச்சாடனமும் ஒலிக்குது!
ஜானகியின் குரலில் அது எப்படித் தான் அந்தக் குழந்தைத்தனமோ! நீங்களே கேளுங்கள்!



சுப்ரபாத மின் புத்தகம் இதோ... தரவிறக்கிச் சேமித்துக் கொள்ளலாம்!
Venkateswara Suprabatham - Lecture Series in Tamil


சுப்ரபாதப் பதிவுகள் முடிந்து விட்டாலும்.....சுப்ரபாத ஸ்லோகங்கள் இன்னும் முடியவில்லை!
1. சுப்ரபாதத்தைத் தொடர்ந்து...
2. கமலா குச சூசுக குங்குமதோ ன்னு தொடங்கும் பாடல் = தோத்திரம்!
3. ஸ்ரீ வேங்கடேச சரணம், சரணம் ப்ரபத்யே ன்னு முடியும் பாடல் = ப்ரபத்தி!
4. வேங்கடேசாய மங்களம்-னு ஒவ்வொரு வரியும் முடியும் பாடல் = மங்களம்!

இவையும் பாடி முடித்த பின்னர் தான், கோயிலில் தரிசனம் துவங்கும்! எம்.எஸ் அம்மாவும் இந்த நான்கு பாகங்களையும் பாடுவார்!
மெளலி அண்ணா, குமரன் போன்ற பதிவுலக இமயங்கள், மற்ற பகுதிகளின் பொருளையும் அடியேன் தொடர்ந்து சொல்ல வேண்டும் என்று அப்போதே கட்டளை இட்டு இருந்தார்கள்!

அதான்...இதோ...இன்னும் சில மணியில்...துவங்கி விடுகிறேன்! கமலா குச சூசுக குங்குமதோ!

சுப்ரபாதம் (தமிழில்):

ஒலிச் சுட்டிகள்!

முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் - நித்ய ஸ்ரீ பாடுவது (Windows Media Player)

நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com
Pics: tirumala-tirupati.com

சுப்ரபாதம் (மூலம்):

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP