Friday, August 24, 2007

சுப்ரபாதம்(15) - மலைகள் ஏழும், மேய்க்கும் மேனேஜரும்!

திருமலையில் நிஜமாலுமே ஏழு மலைகள் இருக்கா? அவற்றின் பெயர் என்னென்ன? ரோம் நகரத்தில் கூட ஏழு மலைகள் தான். The City of Seven Hills என்று தான் பெயர்.
திருமலையில் ஒரு இயற்கைத் தீம்-பார்க் கட்டி பொதுமக்களுக்குச் "சேவை" செய்யலாம் என்று ஆந்திர அரசின் சுற்றுலாத் துறை ஒரு முறை நினைத்ததாம்! பின்னர் எதிர்ப்புகள் கிளம்ப அத்திட்டத்தைக் கைவிட்டு விட்டது. அப்படி என்ன திருமலையில் அவ்வளவு இயற்கை அழகும், வளமும்?

மலைப்பாதையில் நடந்து போனால் காட்சிகள் நல்லாத் தெரியுது. பேருந்தில் சென்றால் அவ்வளவாகத் தெரிவதில்லை. ஆனால் ஆலயத்துக்கு இன்னும் மேலே சென்றால் அருவிகள், சுனைகள், இயற்கையாய் அமைந்த அதிசயக் கல் வளைவு, மூலிகைப் பண்ணைகள் என்று பல இடங்கள் பார்க்கலாம்! ஆனால் கடவுளை விடப் பிசியாக இருக்கும் நமக்குத் தான் அதற்கெல்லாம் நேரம் கிடைப்பதில்லை! :-)


தண்ணீர்த் தட்டுப்பாடு திருமலைக்கும் வந்து விட்டது. அருவிகளில் நீர் சிறிதளவாச்சும் சொட்டிக் கொண்டு தான் உள்ளது. மின் காற்றாடிகள், நீர்த்தேக்க அணைகள் என்று நவீனங்கள் வந்தாலும், வனச்சூழல் இன்னும் இருக்கத் தான் செய்கிறது.

ஒருமுறை மாலையில், மலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன் நண்பர்களுடன். அப்போது, கண் முன்னே மின்னல் தோன்றி மறைய, அது எங்கோ மரத்தில் பட்டது போலும்; அடுத்த நிமிடம் தீப்பிழம்பாய் அந்த இடமே பரபரவெனப் பற்றி எரிந்த காட்சியை மறக்கவே முடியாது!
வேங்கட மலையில் காட்டுத்தீ பற்றிக் கொண்டு, விலங்குகள் அது கண்டு பயந்து ஓடும் காட்சியை இலக்கியங்களில் காணலாம்.

குற்றாலத்தில் அருவி விழும். ஆனால் அது தொட்டியில் விழுமா?
திருமலை அருவி ஒன்று, ஆழ்வார் தீர்த்தம் என்னும் குளத்தில், கொட்டி விழும் காட்சி மிகவும் அழகு!
இன்றைய பதிவில் ஏழுமலைகள் எவை எவை என்று பார்க்கலாம் வாங்க!



(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)




ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி
நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
ஆக்யாம் த்வதீய வசதே ரநிசம் வதந்தி
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

1. சேஷாசலம்
2. கருடாசலம்
3. வேங்கட மலை - வேங்கடாசலம் (அசலம்=மலை)
4. நாராயணாத்ரி (அத்ரி=மலை)
5. விருஷபாத்ரி
6. விருஷாத்ரி என்னும் வேதாத்ரி
7. அஞ்சனாத்ரி

ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி
நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
= என்ற இந்த ஏழு மலைகளில்

1. சேஷாசலம் = ஆதிசேஷனே மலை ரூபமாய் பெருமாளைத் தாங்குவதாக ஐதீகம். அவன் ஏழு தலைகளே (ஏழு படங்களே) ஏழு மலைகள்.
அவன் உடல்=அகோபிலம்- நரசிம்மர் ஆலயம், வால்=ஸ்ரீசைலம்- மல்லிகார்ஜூன சிவாலயம்.
சேஷனையும் பெருமாளையும் பிரிக்கவே முடியாது. அப்படி ஒரு பந்தம்!
நின்றால் குடையாம், இருந்தால் சிங்காதனமாம், நடந்தால் மரவடியாம் என்பார்கள். தாயாரையும் பெருமாளையும் அப்படி ஒரு தாங்கு தாங்குபவன்.
அவனுக்குத் தெரியாமல், பெருமாளும் தாயாரும் தனித்துப் பேசக்கூட முடியுமோ என்னவோ? :-)

குன்றின் மேல் கல்லாக நிற்கின்றாய் கண்ணா என்று பாடலில் வருமே! அது போல், கல்லாய் மாறிக், கலியுக வரதனாய் வேங்கடத்தில் நிற்க திருவுள்ளம் கொண்டான் இறைவன். அவன் குறிப்பறிந்து ஆதிசேடனும் உடனே கல்லாய், மலையாய் மாறிவிட்டான்.
எள் என்று நினைத்தான் பரமன். ஆனால் எண்ணெயாய் வந்து நின்றான் தொண்டன். இது தான் கைங்கர்ய லட்சணம் என்பார்கள் ஆசாரியர்கள்!

கைங்கர்யம் (தொண்டு) எப்படி செய்ய வேண்டும் என்றால் ஆதிசேடனைத் தான் கேட்க வேண்டும். அவன் தானே இளைய ஆழ்வாராய் (இலக்குவனாய்) வந்தது! அது போதாதென்று, கைங்கர்ய லட்சுமி முகத்தில் தவழ, இராமானுசராகவும், மணவாள மாமுனிகளாகவும் வந்தது!
திருமலையைப் பொறுத்தவரை பெருமாளுக்கும், ஏன் வராக சுவாமிக்கும் கூட சீனியர் நம்ம ஆதிசேடன்!

அதனால் தான் எல்லா வாகனங்களுக்கும் முதல் வாகனம் சேஷ வாகனம்! (பெத்த சேஷ வாகனம்). ஆழ்வார்கள் தங்கள் பாதம் சேஷன் மேல் பட்டு, மலை ஏறவும் அஞ்சினார்கள். "வெறும்" மலையைத் தொழுதாலே "பெரும்" பாவங்களும் தீரும் என்றார்கள்!
சேஷாசலம், சேஷமலை, சேஷாத்ரி, சேஷகிரி எல்லாமே நம்ம சேஷன் தான்!

2. கருடாசலம் = பெரிய திருவடி கருடன்! இப்ப தான் கருட பஞ்சமி பதிவில் பார்த்தோமே கருடனைப் பற்றி! அவன் பெயரில் உள்ள மலை தான் கருடாசலம், கருடாத்ரி, கருடமலை!
கருடன் தான் இந்த சேஷாசலத்தை, வைகுண்டத்தில் இருந்து திருமலையில் இறக்கியதாகத் தலபுராணம் பேசும்.

மேலும் கோவிலின் அருகில் உள்ள கோனேரியை (திருக்குளத்தை), கருடன் தான் வைகுண்டத்து விரஜா நதியில் இருந்து உருவாக்கினான்! பிரம்மோற்சவத்திலும் கருடனின் கொடி தான் முதலில் ஏற்றப்படுகிறது! கொடிமரத்தையும் (துவஜ ஸ்தம்பம்), கருட கம்பம் என்றே சொல்கிறார்கள்.


இன்னொரு முக்கியமான விடயம்:


கருடனும், சேஷனும் உலகத்தைப் பொறுத்தவரை எதிரெதிர் நிலைகள் (Pair of Opposites) !
ஆனால் பாருங்கள், இறைவனிடத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து விடுகிறார்கள். இது தான் பெருமாளின் செளந்தர்ய செளபாக்கிய லட்சணம்.

குணங்களை எல்லாம் கடந்தவன், எதிரெதிர் குணங்களையும் எப்படி ஒன்றாக இணைத்துக் கொள்கிறான் பாருங்கள்! இது கண்ணனுக்குக் கை வந்த கலை அல்லவா?
(ஓரே டீமில் ஒரே மேலாளரின் கீழ், Tester-Developer / கணக்காளர்-தணிக்கையாளர், என்று oppositeகள் இருக்கும் சங்கடம், பாவம் அந்தந்த மேலாளர்களுக்குத் தான் தெரியும் :-)
கண்ணன் தான் உலகத்தின் தலை சிறந்த மேலாளன் அல்லவா?



3. வேங்கடாசலம் = வேங்கடம் என்றால் என்னவென்று சென்ற பதிவிலேயே பார்த்து விட்டோம்! பிறவிக் கடன்களைத் தீர்க்கும் மலை வேங்கட மலை! இறைவனுக்கே இந்த மலையின் பெயரைத் தான் வழங்குகிறார்கள்! வேங்கடாசலபதி, வேங்கடமுடையான், வேங்கடேஸ்வரன், வேங்கடத்துறைவார், வேங்கடத்து அண்ணல்!
சென்று சேர் திரு வேங்கட மாமலை,
ஒன்றுமே தொழ நம் வினை ஒயுமே!
இந்த மலையின் மேல் தான், நாம் காணும் ஆலயம் அமைந்துள்ளது! ஆனந்த நிலைய விமானம் அமைந்துள்ள மலை என்பதால் ஆனந்தாத்ரி என்றும் வழங்கப்படும்!

4. நாராயணாத்ரி = அஷ்டாட்சரம் என்னும் திருவெட்டு எழுத்து "ஓம் நமோ நாராயணாய"!
அதன் பொருள் மிகவும் ஆழமானது. குருவின் வார்த்தையை மீறி, இராமானுசர் ஊருக்கே உபதேசம் செய்து வைத்தது! முன்பொரு பதிவில் பார்த்தது போல், பிரணவத்தை இந்த மந்திரத்தில் இருந்து பிரிக்கவே முடியாது! அப்படி ஓங்கார ஸ்வரூபமாக இருப்பது! மந்திரங்களுக்கு எல்லாம் மகா மந்திரம், மந்திர ராஜ பதம் = திருவெட்டெழுத்து!

இதை விளக்கி நிற்கும் கோலம் தான், திருமலை மேல் நாம் எல்லாரும் பார்த்து மனம் பறிகொடுக்கும் கோலம்! அதை இந்தப் பதிவில் சொல்ல முடியாது. நீண்டு விடும். தனியாக இன்னொரு நாள் சொல்கிறேன். இப்போதைக்கு இதை மட்டும் நினைவில் இருத்துங்கள்!
ஓம் நமோ நாராயணாய என்பதற்கு விளக்கமாகத் தான் வேங்கடவன் நிற்கிறான்!
அதனால் மலைக்கு ஒரு பெயர் நாராயணாத்ரி. நாராயண மலை!



5. விருஷபாத்ரி = விருஷபாசுரன் என்னும் அரக்கனுக்கு மாட்டுத் தலை. பாவம், ஆணவக் கொம்பும் முளைத்து விட்டது. அவன் பெருமாள், ஈஸ்வரன் இருவருக்குமே பக்தன் தான்! ஆனால் எல்லாரையும் அடக்கியவனுக்கு, இனி மேல் அடக்க யாரும் இல்லையே என்ற கவலை! நாரதர் தூண்டி விட, பெருமாளையே போருக்கு அழைக்கிறான்.

தான் வணங்கிய தெய்வம் என்பதைக் கூட மறக்கும் அளவுக்கு அதிகாரப் பேராசை, தோள் தினவு எடுக்கிறது! மல்லாண்ட திண் தோள் மணிவண்ணன் என்பதை மறந்து அகலக்கால் வைத்து விட்டான். அடிபட்டு மாண்டான்!
அணைத்துத் திருத்துதல் சரிவராத போது, அடித்துத் திருத்தும் தாய் போல், பழைய பக்தனை அடித்து வீட்டுக்குள் சேர்த்துக் கொண்டார். அவன் வேண்டுகோளுக்கு இணங்க, அவன் பெயரே அமைந்து விட்டது மலைக்கு! இது தான் நாம் தற்காலத்தில் முதலில் ஏறும் மலை!

6. விருஷாத்ரி = விருஷம் என்பதற்கு தர்மம் என்றும் பொருள் உண்டு! விருஷபம் (காளை) என்றும் பொருள் உண்டு. ஏற்கனவே விருஷபாத்ரியைப் பார்த்து விட்டோம்.
அதனால் இது விருஷாத்ரி தான்! மேலும் இதற்கு வேதாத்ரி என்ற இன்னொரு பெயரும் உண்டு! தர்மத்தைப் போதிக்கும் வேதங்கள் ஒலிக்கும் மலை. ஆதலால் இது தர்மாத்ரி, வேதாத்ரி, விருஷாத்ரி!




7. அஞ்சனாத்ரி = இந்த சுலோகத்தில், இம்மலை பற்றி நேரடியாகக் குறிப்பில்லை! ஆனால் "முக்யாம்" என்று வருகிறது! முக்யாம் என்றால் யார்? முக்யப் பிராணன் என்று கன்னடர்கள் ஒரு தெய்வத்துக்கு ஊரெங்கும் கோவில் கட்டுவார்கள்! முக்ய மந்திரியாய் இருப்பவன்!
யார் என்று தெரிகிறதா? - அனுமன்!

அவன் திருமலையில் தான் அஞ்சனைக்கும்-கேசரிவர்மனுக்கும், வாயுவின் அம்சமாகப் பிறந்தான்! அஞ்சனையின் புதல்வன் ஆஞ்சநேயன்! அஞ்சனாத்ரி! அஞ்சனை மலை!
அனுமனின் சொந்த ஊர் திருமலை திருப்பதி!

இப்படிக் கருடாத்ரி-அஞ்சனாத்ரி என்று பெரிய திருவடி-சிறிய திருவடி இருவருமே, திருமலையில் உள்ளார்கள்! பொதுவாக கருடன் சிலை மட்டும் தான் பெருமாளின் முன் கைகூப்பி இருக்கும்! இங்கு இருவருமே கைகூப்பி உள்ளார்கள்!
கோபுரத்துக்கு வெளியே "பெடி ஆஞ்சனேயர்" சன்னிதி உள்ளது. பெத்த ஆஞ்சநேயர் என்றும் அழைக்கிறார்கள். இவரும் கைகள் குவித்து கருடனைப் போலவே நிற்கிறார்.

அவர் கைகளில் பெடி என்னும் சங்கிலிக் கயிறு கட்டப்பட்டுள்ளது! தெய்வத்தை வணங்காமல், விளையாட்டும் துடுக்குமாய் திரிகிறானே என்று நினைத்தாள் அஞ்சனா தேவி; குழந்தையின் கைகளை வணங்குவது போல் குவிக்கச் சொல்லி, கட்டி விடுகிறாள்! அதுவே நாம் காணும் திருக்கோலம்!
நைவேத்தியம் கூட முதலில் வராகருக்கும், பின்னர் பெருமாளுக்கும் நடக்கிறது. அதன் பின், "குழந்தை" அனுமன் என்பதால் இவருக்கு எடுத்துக் கொண்டு ஓடி வருகிறார்கள். அதன் பின்னர் தான் பெருமாளுக்கே சாத்துமுறை, மற்ற பரிவாரத் தெய்வங்களுக்கு எல்லாம் நைவேத்தியம் நடக்கிறது!



ஆக்யாம் த்வதீய = உன்(த்வ) பாடல்களைப் பாடிக்கொண்டும், கதைகளைச் சொல்லிக் கொண்டும்

வசதே ரநிசம் வதந்தி = ஆங்காங்கு தங்கி, இளைப்பாறி, உன்னைப் பற்றியே பேசிக்கொண்டு மலையேறுகிறார்கள்


மலை ஏறும் போது, எப்படி ஏற வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்லுறாங்க இந்தச் சுலோகத்தில்! பெருமாள் சன்னிதானத்தில் சினிமாக் கதைகள் பேசுவோமா? அதே போன்ற உணர்வுடன் தான் மலையும் ஏற வேண்டுமாம்!
வெறும் மலையாய் இருந்தால் வீட்டுக் கதைகள் பேசிக் கொண்டும், வம்பிழுத்துக் கொண்டும் ஏறலாம்! ஆனால் இது சாதாரணக் கல் மலையா? சாளக்கிராம மலை அல்லவா! பல யோகிகளும் சித்தர்களும் காவல் தெய்வங்களும் மலைமேல் யோக நிஷ்டையில் இருப்பதாக ஐதீகம்! அதான் இப்படி!

எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே என்கிறார் ஆழ்வார்!
இந்த மலையில் ஏதாச்சும் ஒன்னாய் நான் ஆக மாட்டேனா? என்று உருகுகிறார் என்றால், அது என்ன சும்மானாங்காட்டியும் மலையா? ஆதிசேஷனே ஆன மலை அல்லவா?
அதான் இத்தனை நியமங்கள்! இத்தனை விதிகள்!
வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து, உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ என்று ஆங்காங்கு தங்கி, இளைப்பாறி மலை ஏற வேண்டும்! அதுவே யாத்திரை!

நம் வீட்டுக்கு ஒரு அன்பானவர் வருகிறார் என்றால் வழக்கத்தை விடக் கொஞ்சம் சீக்கிரம் எழுந்து கொள்ள மாட்டோமா? அது போல் உன் அன்பான பக்தர்கள் எல்லாம் "ஆபத் பாந்தவா, அனாத ரட்சகா, கோவிந்தா கோவிந்தா" என்று பாடிக் கொண்டு வருகிறார்கள்! இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவார்களே தரிசனத்துக்கு! இன்னுமா உறக்கம்? எழுந்திரப்பா ஸ்ரீநிவாசா!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

Saturday, August 11, 2007

சுப்ரபாதம்(14) - கோவிலுக்குக் குளிக்காமப் போனாத் தீட்டா?

சிவனாரும், பிரம்மனும், முருகனும் பெருமாளைத் தரிசிக்கும் ஆவலில், க்யூ வரிசையை உடைத்து விட்டு ஒடோடி வருகிறார்கள்! அவர்கட்கு பிரம்படி வேறு!
இன்னொரு விஷயம்! தரிசனம் செய்யணும்னா கட்டாயமா குளிக்கணுமா என்ன? குளிக்கா விட்டா தீட்டா?.....
ஆமாம், தீட்டு தான் என்றால் தீட்டு கழிப்பது எப்படி? பார்க்கலாம் வாங்க! :-)




(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)




ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி- காப்லவ நிர்மலாங்கா
ச்ரேயோர் திநோ, ஹர விரிஞ்சி சனந்தன ஆத்யா
த்வாரே வசந்தி வரவேத்ர ஹதோத்த மாங்கா:
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி = ஸ்ரீ சுவாமியின் திருக்குளத்தில்
புஷ்கரிணி = குளம்; திருவேங்கடமுடையான் ஆலயத் திருக்குளத்துக்கு சுவாமி புஷ்கரிணி என்று பெயர். இதைக் குலசேகர ஆழ்வார் எவ்வளவு அழகா தமிழில் ஆக்குகிறார் பாருங்கள்!
சுவாமி+புஷ்கரிணி = கோன்+ஏரி = கோனேரி

கோனேரி ராஜபுரம் என்ற ஊர், தமிழ்நாட்டில் உண்டு.

பொதுவா வடமொழிச் சொற்களைத் தமிழில் ஆக்கும் போது, தமிழ்ப் பெயர் சற்று நீண்டு விடும் என்று சிலர் குறைபட்டுக் கொள்வார்கள்.
ஆனா இங்க பாருங்க...வடமொழியில் நீள்ள்ள்ள்ள்ள்ளமான பெயர்...ஆனால் தமிழில் ரத்தினச் சுருக்கமா "கோனேரி".
வடமொழி-தமிழ் ஆக்கும் போது, நிறைய சொற்களுக்குக் கடினப்படுகிறீர்களா?

கவலைய விடுங்க! ஆழ்வார்களிடமும், குறிப்பா ஆண்டாளிடமும் தேடினாலே பாதிச் சொற்கள் கிடைத்து விடும்!

கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே என்பது ஆழ்வார் பாசுரம்.

அதாச்சும் இறைவன் திருக்குளத்துக்கு அருகிலேயே வாழும் ஒரு கொக்காய் பிறந்தால் கூட பேரின்பம் தான் என்கிறார் ஆழ்வார்!
வைகுண்டத்தில் உள்ள விரஜா நதியே கோனேரி ஆனது என்பது தாத்பர்யம்.


கா அப்பு லவ, நிர்மலா அங்கா = கோனேரி நீரைத் தெளித்துக் கொண்டு, அகமும் புறமும் தூய்மை அடைந்து
அப்பு=நீர், லவ=கொஞ்சமாக
மலம் = குற்றம்/அழுக்கு; நிர்மலம் = குற்றமின்மை
அது சரி, கோயிலுக்குப் போகணும்னா கட்டாயம் குளிச்சிட்டுத் தான் போகணுமா?


பண்டரிபுரம் பாண்டுரங்கன் ஆலயத்துக்குப் போனீங்கனா தெரியும். வடக்கத்திக்காரர்கள் அதுவும் குறிப்பா தாக்கூர்கள் கோயிலுக்குள் திபுதிபு-ன்னு ஒடி வருவாய்ங்க! சில பேர் கிட்ட வந்தா நாறும்! என்னைக்குக் குளிச்சானோ என்னமோ? :-)
ஆனாப் பாருங்க! கோயிலில் வேற எந்த ஒரு வார்த்தையும் பேச மாட்டாங்க!
ஹே பாண்டுரங்கா, ஹே விட்டலா...ன்னு ஓடி வந்து பாண்டுரங்கன் காலில் விழுந்திடுவான்.

தீட்டு தீட்டு-ன்னு சொல்றாங்களே! அப்பிடி-ன்னா என்ன? -
நம் ஐயன் வள்ளுவரும் சொல்கிறார்! கன்னடத்துக் கவி புரந்தரதாசரும் சொல்கிறார்!
குளிக்காம கோவிலுக்குப் போனா தீட்டு! - அது சரின்னே இப்போதைக்கு வைத்துக் கொள்வோம்! சரி, அங்கே போயி, கோவிலில் வம்பு பேசினா? - அதைக் காட்டிலும் இது தீட்டு! :-)
கோவிலுக்கு மடியா போகணும் மடியாப் போகணும்-னு சொல்லிட்டு, அங்கு போய் வம்பு பேசினா? மடி மடின்னு, மடியே மடிந்து விடுகிறது! :-)

சரி தீட்டாயிடிச்சு!...இதுக்கு எப்படி தீட்டு கழிக்கறது?

சும்மா தண்ணியில் ரெண்டு முக்கி முக்கி எழுந்துட்டா தீட்டு போயிடுமா? - இல்லவே இல்லை!
சிறப்புக் குளியல் செய்யணும்! அது என்ன சிறப்புக் குளியல்?
கோவிலில் அந்நிய வார்த்தைகளை விடுவது தான் சிறப்புக் குளியல்! உயர்ந்த ஸ்நானம், எல்லாம்!

அதைத் தான் புரந்தரதாசர், "தனுவு நீர் ஓளகத்தி பளவேனு, மனதல்லி திட பக்தி இல்லாத மனுஜனு!" என்கிறார். நம் ஐயன் வள்ளுவர் ஒரு படி மேலே போய் விடுகிறார்.
புறத்தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
திருக்குளத்தில், கங்கையில், காவிரியில், குமரியில், எங்கு குளித்தாலும்... குளிக்கும் போது புறத்தை மட்டும் தூய்மை செய்யாமல்,
அகத்தையும் சேர்த்துத் தான் தூய்மை செய்ய வேண்டும்!

சரி, புறத்துக்கு சோப்பு/ஷாம்பூ போடலாம்; சில பேர் பால், பயத்தமாவு கூட பயன்படுத்தறாங்க!

ஆனா அகத்துக்கு எது சோப்பு? - இறைவனின் திருநாமம் தான் அழுக்கு நாசினி, கிருமி நாசினி, எல்லாம்!
விடியற் காலை அங்கப் பிரதிட்சணம் செய்தவர்களுக்கும், மொட்டை போட்டுக் கொள்பவர்களுக்கும் இது நல்லாத் தெரியும்!
அதிகாலைக் குளிரில் நடுங்கிக் கொண்டே,
திருமலைக் குளத்தில் ஒரு முங்கு, முங்கி எழுங்க!
அதுவும் மனதாரக் "கோவிந்தா கோவிந்தா" என்று சொல்லிக் கொண்டே எழுங்க!
குளிரில் உடம்பும் நடுங்கி,

உள்ளே உள்ள பாவங்களும் நடுங்கி விடாதா என்ன?


ச்ரேய ஆர்த்திநோ = பரிபூர்ணமான நலமுடன் வாழ வேண்டிக் கொண்டு ஆனந்தமும் நலமும் கிடைக்க வேண்டிக் கொண்டு,
ஆனந்த நிலையத்தில், யார் யார் எல்லாம் காத்திருக்கிறார்கள்?

ஹர, விரிஞ்சி, சனந்தன ஆத்யா = சிவன், பிரம்மன், சனந்தனர் முதலான மகரிஷிகள்
ஹரன் = சிவபெருமான்
விரிஞ்சி = பிரம்மன் (ஜனனி ஜனனி பாடலில் கூட ஹரி ஹர விரிஞ்சி-ன்னு ஒரு வரி வரும்)
சனந்தன ஆத்யா = சனகாதி முனிவர்கள்;
சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நால்வரும் வயதில் இளைய ரிஷிகள். ஆனால் பக்தியும் ஞானமும் ஒருங்கே கைவரப் பெற்றவர்கள்!
இதில் சனத்குமாரர் கார்த்திகேயனான முருகப் பெருமானின் அம்சம் என்றும் சொல்லுவார்கள்.
இந்த 4 பேரால் தான்...நமக்கு 4 அவதாரங்கள் கிடைத்தது...என்னன்னு பின்னூட்டத்தில் சொல்லுங்க பார்ப்போம்!
:-)

த்வாரே வசந்தி, = மகா துவாரம் என்னும் உன் ஆலய வாசலிலே நிற்கிறார்கள்.
(அப்போது சேனை முதலியாரின் தொண்டர்கள், தங்கள் கையில் உள்ள பொற் பிரம்பால், அனைவர் தலையின் மேலும், மெல்லிதாய் வைத்து, அனுகிரகம் செய்ய)


வர வேத்ர ஹத= பொற் பிரம்பால் தட்டி முறைப்படுத்த,

உத்தம அங்கா = அதனால் இன்னும் தூய்மை அடைகிறார்கள்!

வேத்ரம்=பிரம்பு; வர வேத்ரம்=பொற் பிரம்பு
அந்தக் காலத்தில் ஆசிரியர் என்றால் கையில என்ன இருக்கும்? - பிரம்பு!
யாராச்சும் பார்த்து இருக்கீங்களா? இல்லை அடி வாங்கித் தான் இருக்கீங்களா? :-)
மாணவர்களை அவர் அடிக்கிறாரோ இல்லையோ, ஆனால் கையில் பிரம்புடன், வேட்டி-கோட்-தலைப்பாகை-குடை; வாயில் கணீரென்று தமிழ்ச் செய்யுள்...ஆகா! ஆகா!

பெருமாளின் படைகளுக்கு பிரதான தளபதியாய் இருப்பவர் விஷ்வக்சேனர்.

தமிழில் சேனை முதலியார் என்று போற்றுவார்கள்! விநாயகரைப் போலவே, வைணவ பூசைகளில் முதல் பூசை இவருக்குத் தான்! - இவர் தான் வைணவ சம்பிரதாயத்தில் முதல் ஆசிரியர்!
பெருமாள் தாயாருக்கு உபதேசிக்க, தாயார் நம் மீது உள்ள கருணையால் இவருக்கு உபதேசம் செய்து வைத்தார்! - இவரே தலைமை ஆசிரியர்! நம்மாழ்வாரின் குரு!

அந்தக் குருவின் கையில் பொற் பிரம்பு!
அந்தப் பிரம்பில் இருந்து எழும் இனிய நாதம்!...

என்னது பிரம்பில் இருந்து இசையா? நம்ப முடிய வில்லையா? பிரம்பைக் காற்றில் வீசிப் பாருங்க...தெரியும்! :-)
மெல்லிசைக் கச்சேரிகளில், வாத்தியங்களுக்கு முன்பு நின்று கொண்டு ஒரு மனுஷர் கையில் பிரம்பை வைத்து அப்படியும் இப்படியும் ஆட்டுவார்! - music conductor


நாம் நினைப்போம் - இந்த மனுஷன் ஒன்னுமே செய்யாம, சும்மா பந்தா கட்டுகிறாரே என்று! ஆனால் அத்தனை வாத்தியங்களின் நாதமும் ஒருங்கே சுருதி சேர்ந்து ஒன்றாய் ஒலிக்கிறது என்றால், அதற்கு இவரே காரணம்.
அதே போலத் தான், உயிர்கள் எல்லாம் பல பாதைகளில் சென்றாலும்,

எம்பெருமானின் திருநாமம் என்னும் நாத இன்பத்தை எல்லா உயிர்களும் ஒருங்கே அடைய, பிரம்பை வீசுகிறார் விஷ்வக்சேனர்!


அவருடைய சேனைகள் கையிலும் பொற்பிரம்பு இருக்கிறது!....எதற்கு?
கோயிலுக்கு வருபவர்களை எல்லாம் அடித்து விளாசவா? இல்லையில்லை! :-)

வானவர்களை எல்லாம் தலையில் பொற்பிரம்பால் தொட்டு, தரிசனத்துக்கு, ஒவ்வொருவராக அனுப்பி வைக்கிறார்கள்! அப்படி பிரம்போசையால் ஏற்படும் ஓங்காரம், யார் எந்த மன நிலையில் இருந்தாலும், அதை எல்லாம் விலக்கி,
பரம்பொருள் ஒருவனையே நெஞ்சில் நிறைத்து விடுகிறது! - ஆனாப் பாருங்க, வானவர்களுக்கு மட்டும் தான் இந்த "அடி"! நமக்கு இல்லை - ஏன் இப்படி? :-)

தானம் தவம் செய்த முனிவர்கள், வானவர்கள் எல்லாரையும் கீழே இறக்குகிறார் பெருமாள்!
பாவங்கள் புரியும் நம்மையோ மேலே ஏற்றுகிறார்!

மேலோர் எல்லாரும் அவரவர் நிலையில் இருந்து கீழிறங்கி திருமலைக்கு வருகிறார்கள், பெருமாளின் திருமேனி செளந்தர்யம் என்னும் வடிவழகைச் சேவிக்க!
நாமோ, ஒன்றுமே செய்யாமல், மேலேறிச் செல்கிறோம், மேல்நிலையை அடைய! - இது தான் இறைவனின் கேழில் பரங்கருணை!

இப்பேர்ப்பட்ட எம்பெருமானைப் பார்த்துப் பார்த்து அனுபவிக்க வந்துள்ளார்கள்...
கயிலை நாதன் சிவபெருமான்
சத்யலோக நாதன் பிரம்மா
தமிழ்வேள் முருகப் பெருமான்
சனகாதி முனிவர்கள்
....
எல்லாரும் வந்து, பங்காரு வாகிலியில் உன்னைச் சேவிக்க நிற்கிறார்கள்!
ஆவல் மிகுதியால் எட்டி எட்டிப் பார்க்கிறார்கள்...
பெருமாளின் வடிவழகைக் அப்படியே கண்களால் உறிஞ்சிப் பருகுவதற்கு!

துவார பாலகர்கள், இவர்கள் ஆவலை எல்லாம் முறைப்படுத்தி,

ஓங்காரப் பிரம்போசையால் மனம் ஒன்றச் செய்து, தரிசனத்துக்கு வழிவகை செய்து வைக்க...
என் அப்பனே, திருவேங்கடமுடையானே...
சிவபெருமானின் அன்பை பெற்றுக் கொள்ளவும்,
சண்முகனின் அன்பைப் பெற்றுக் கொள்ளவும்,
பிரம்ம சனகாதிகள் அன்பைப் பெற்றுக் கொள்ளவும்.....சீக்கிரமாகத் திருப்பள்ளி எழுவாயே!


ஸ்ரீ வேங்கடாசல பதே = அப்பா, திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்! திருப்பள்ளி எழுக!!

குறிப்பு:
இப்படி சிவபெருமானும் முருகப்பெருமானுமே ஆவல் மிகுதியால் காத்துக் கொண்டு நிற்கும் போது நாம் எல்லாரும் எம்மாத்திரம்?

- அதனால் அடுத்த திருமலை யாத்திரையில்,
க்யூ வரிசையில் நிற்கும் போது, அலுப்பு ஏற்பட்டு மனம் சலித்துக் கொள்ளாதீர்கள் :-)

முனிவர்களே பிரம்போசை கேட்கும் போது, நாம் எல்லாம் எம்மாத்திரம்?
கோவில் பணியாளர்கள் சற்றே கடுமையாக நம்மை நகர்த்தி விட்டாலும்,

அதற்காக எல்லாம் சலனப் படாதீர்கள்!
இதையெல்லாம் தாண்டிய பெரும் பொக்கிஷம் நம் முன்னே நிற்க,

இதெல்லாம் ஒரு பொருட்டா என்ன? :-)
----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

சுப்ரபாதம் (தமிழில்):

ஒலிச் சுட்டிகள்!

முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் - நித்ய ஸ்ரீ பாடுவது (Windows Media Player)

நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com
Pics: tirumala-tirupati.com

சுப்ரபாதம் (மூலம்):

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP