Friday, October 26, 2007

சுப்ரபாதம்(21&22) - சரண்யா! சரண்யா!!

என் மனத்துக்கினிய நண்பர் ஒருவர், ஜிடாக்கில் முன்பு ஒரு கேள்வி கேட்டார்: What is the most important place on this earth?
நான் ஏதோ திருப்பதி, திருவரங்கம், திருச்செந்தூர்-னு சொல்லுவேன் எதிர்பார்த்தார் போல! ஆனா, நான் சொன்னேன்! - Home! Home!! Home!!!
Home-இல் மனது வைத்தாலே, Om வந்து விடும்! :-)

நாம் சுயநினைவுடன் பாதி நேரம், வீட்டுக்கு வெளியில் தான் கழிக்கிறோம்!
சுகமோ, துக்கமோ, ஆபிசில் பதவி உயர்வோ, சண்டையோ, நண்பர்/நண்பிகளுடன் கும்மாளமோ,...எதுவாயினும்...எல்லாம் முடித்து வீட்டுக்கு வரும் வேளை!

நம் தெருவுக்குள் நுழைந்ததுமே, ஒரு இனம் புரியாத உணர்வு எழும்! நம் வீட்டூக்குள் நுழைந்ததும் அப்படி ஒரு பாதுகாப்பான உணர்வு! இதை விடப் பாதுகாப்பான இடம் உலகில் வேறெங்கும் இல்லை என்பது போல ஒரு மகிழ்ச்சி!
உலகத்துக்காகக் காலை முதல் போட்ட வேடத்தைக் கலைத்து விட்டு, நாம் நாமாக இருக்கலாம் என்ற நிம்மதி!
நம் வீட்டுக் கட்டாந்தரையில் படுத்தாலும், அன்னை மடியில் படுத்தது போல் ஒரு சுகம்! காற்று வீசி, நம் தலைமுடியைக் கோதுவது போல் ஒரு சுகம்!

"அப்பாடா" என்று நிம்மதியுடன் வீட்டுக்குள் அடங்கும் சுகம்! - இதற்கு நல்லவன் கெட்டவன், பணக்காரன் ஏழை, நாத்திகன் ஆத்திகன், குழந்தை வாலிபன் என்ற பேதமே கிடையாது! எல்லாரும் இதனுள் அடங்கி விடுவர்!
ஒரு சின்னஞ் சிறு குழந்தை, வீட்டுக்கு வழி தெரியாமல் நிற்கும் போது, எப்படிக் கலங்கி போய் நிற்கிறது! அதன் கைப்பிடித்து, அதோ பார் உன் வீடு என்று காட்டினால், துள்ளிக் கொண்டு ஓடாதா?

அதனால் தான் இறைவனை அடைவதையும் வீடுபேறு என்று சொன்னார்கள் முன்னோர்கள்!
வீட்டைப் பெறும் பேறு, பெரும் பேறு! - அதுவே சரண்யா!அது என்ன சரண்யா? சரண்யாவுக்கும், வைணவத் தத்துவமான சரணாகதிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு!!

பெருமாளைச் சரண்யன்-னு சொல்லிக் கூப்பிடுவதில், பக்தர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி!
சர்வ லோக சரண்யன்-ன்னு சொல்லுவாங்க! சரண்யன்-னா என்ன?
சரண் என்பதற்கு வீடு, வழி, உதவி-ன்னு பல பொருள் இருக்கு!
அதையெல்லாம் தாண்டி சரணாகதி என்னும் அடைக்கலம் புகுதல் தான் இன்று அனைவருக்கும் தெரிந்த பொருளாகி விட்டது!

இறைவன் சரண்யன் = ஏன்னா அவனே வீடாக இருக்கிறான்!
இறைவன் சரண்யன் = ஏன்னா அவனே அந்த வீட்டுக்கு வழியாகவும் இருக்கிறான்!
இறைவன் சரண்யன் - ஏன்னா அவனே அந்து வீட்டுக்கு செல்லும் வழியையும் காட்டி நமக்கு உதவி புரிகிறான்!

நானே வழியும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்ற பைபிளின் வேதாகம வசனத்தைக் கேட்டிருப்பீங்க!
தமிழில் ஆற்றுப்படை-ன்னும் கேள்விப்பட்டு இருப்பீங்க! ஆற்றுப்படுத்துதல் என்று சொல்லுவாங்க! அதாச்சும் களைப்பையும் சந்தேகத்தையும் களைந்து, வழிகாட்டுதல்!
பெருமாளுக்கே உரியவன் ஜீவன்!
ஜீவனுக்கே சரண்யன் பரமாத்மா!!

அந்தச் சரண்யனை, இந்த ஜீவன் சரணம் அடையறதே, சரணாகதி!
சரண்யா, நீயே கதி என்பதே சரணாகதி!

இன்றைய சுப்ரபாதத்தில் சரண்யம் பற்றி வருகிறது! மிக மிக எளிமையான சுலோகங்கள்! மனனம் செய்வதற்கும் மிக எளிது!


(இந்த சுலோகத்தைப் படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)ஸ்ரீ பூமி நாயக தயாதி குண அம்ருத ஆப்தே
தேவாதி தேவ ஜகத் ஏக சரண்ய மூர்த்தே
ஸ்ரீமந் அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ பூமி நாயக = ஸ்ரீதேவியான திருமகளுக்கும், பூமிதேவியான மண்மகளுக்கும் நாயகனே!

தயாதி குண = கருணை (தயா) முதலிய சகல கல்யாண குணங்கள்
அம்ருத ஆப்தே = கொண்ட அமுதக் கடலே

திருவேங்கடமுடையான் சன்னிதியில் அவன் தனித்து நிற்பதாகத் தானே நம் கண்களுக்குத் தெரிகிறது? தாயார் சன்னிதியோ கீழ்த் திருப்பதியில் தானே உள்ளது! அப்படி இருக்க, எப்படி இப்படிப் பாடி வைத்தார்கள்?
கவனித்துப் பார்த்தால் தெரியும், அவன் திருமார்பில், ஸ்ரீ-பூமி தேவிகளும் எழுந்தருளி உள்ளார்கள். அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!

தயா தேவியும் உள்ளாள்! யார் இந்த தயா தேவி?

இறைவனின் கருணையை, தயைத் தான் இவ்வாறு உருவகித்துப் பாடுகிறார் வேதாந்த தேசிகர் என்னும் ஆசாரியர்!
இறைவன் எண்ண முடியாத குணங்களைக் கொண்டவன் தான் என்றாலும், அவனுக்குப் பொதுவாக எட்டு குணங்களைச் சொல்லுவார்கள்!

எண்குணத்தான் தாளை வணங்காத் தலை என்று வள்ளுவரும் எண்குணத்தைச் சொல்லுகிறார்!

அந்த எண் குணங்களில் மிகவும் தலையாயது உயிர்களிடத்தில் பரம கருணை; தயை என்ற குணம்! தயா சிந்து என்று மோவாய்க் கட்டையில் உள்ள வடுவைப் பற்றி முன்னர் ஒரு மாதவிப்பந்தல் பதிவில் தான் பார்த்தோமே!
முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பவன் தமிழ்க் கடவுள் முருகன் என்றால்
தன்னை அடித்தாலும், அரவணைத்துக் காப்பவன் தான் தமிழ்க் கடவுள் திருமாலும்!!!
பக்தன் அடித்த வடுவை, மானம் போகுமே என்று மறைத்துக் கொள்ளாது, அன்புக்குச் சாட்சியாக இன்றும் மோவாயில் காட்டிக் கொண்டு நிற்கிறான் இறைவன்!
அதனால் தான் அவன் சிந்தும் தயையை அமுதக் கடல் என்று சொல்கிறார்!

தேவாதி தேவ = தேவாதி தேவனே! இமையோர் தலைவனே!
தேவர்களுக்கும் ஆதி அவன்! ஆதியாய் அநாதியாய் நின்றவன்! தேவர்களையும் கடந்தவன்! அசுரர்களையும் கடந்தவன்! அதனால் தேவ-ஆதிதேவன்!
இந்த சுலோகம் அப்படியே ஆழ்வார் பாசுரம்
திருமகள் தலைவனை, தேவதேவனை
இருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம்!


ஜகத் ஏக "சரண்ய மூர்த்தே = உலகம் முழுமைக்கும் நீ ஒருவனே சரண்யன் (ரட்சகன்)
சரண்யன் என்றால் என்ன-ன்னு முன்னரே பார்த்தோம்! உலகம் முழுமைக்கும் அவன் ஒருவனே சரண்யன்! ஒருவன்"ஏ" என்பதில் அந்த ஏகாரம் மிகவும் முக்கியமானது!
மாம் "ஏகம்" சரணம் வரஜ என்பது தான் கீதை காட்டும் சரம சுலோகம்! - அனைத்துக்கும் அவன் ஒருவனே சரண்யன்!
அசுரருக்கும் அவனே சரண்யன், தேவருக்கும் அவனே சரண்யன்!
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே என்பது வள்ளலார் வாக்கு!


ஸ்ரீமந் = லக்ஷ்மீகரமானவனே
அவன் பெருமையைச் சொல்லணும்னா கூட, அன்னையைத் தான் சொல்ல வேண்டி இருக்கு பாத்தீங்களா?
அழகானவனே-ன்னு சொல்லணும்னா லக்ஷ்மீகரமானவனே சொல்லணும்! கருணை உடையவனே-ன்னு சொல்லணும்னா கூட லக்ஷ்மீகரமானவனே தான் சொல்லணும்!

அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே = அனந்தன், கருடன் முதல் அனைவரும் உன் திருவடிகளை அர்ச்சிக்கிறார்கள்!
அவனை பரமபதம் என்று அழைக்கப்படும் வைகுண்டத்திலே, நித்ய வாசம் செய்யும் நித்ய சூரிகள் எல்லாம் சேவித்து இருக்கிறார்கள்!
அனந்தன் என்ற நாக வடிவானவனும், கருடன் என்ற பறவை வடிவானவனும் ஒருசேர அர்ச்சிக்கிறார்கள்!
இங்கு தான் சூட்சுமம்! நாகமும் கருடனும் ஒன்றொக்கொன்று எதிர் இயல்பு!


ஆனால் எப்படி இருவரும் பரமனுக்குப் பிரியமாய் அவன் திருத்தொண்டில் ஈடுபடுகிறார்கள்?
Pair of Opposites Concept is deeply rooted in Vaishnavite Mysticsm.
நாகன்-கருடன், சக்கரம்(ஒளி)-சங்கு(ஒலி), மனிதன்-மிருகம்...இன்னும் நிறைய எதிரெதிர் நிலைகள், இறைவன் முன்னிலையில் ஒன்றி விடுகின்றன!
அதே போல் தேவர்,அசுரர் பாகுபாடு எல்லாம் இறைவன் முன் நிற்காது! பக்தி ஒன்றே நிற்கும்!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!பெருமாளின் பன்னிரு திருப்பெயர்களில் பல பெயர்கள், அடுத்த சுலோகத்தில் வருகிறது!
கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா
விஷ்ணு, மதுசூதனா, திரிவிக்ரமா, வாமனா
ஸ்ரீதரா, ஹ்ரிஷிகேசா, பத்மாநாபா, தாமோதரா!
- இவையே பன்னிரு திரு நாமங்கள்!ஸ்ரீ பத்மநாப புருஷோத்தம வாசுதேவ
வைகுண்ட மாதவ ஜனார்த்தன சக்ர பாணே
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணாகத பாரிஜாத
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ பத்மநாப = நாபிக் கமலம் (தொப்புள் கொடியில்) தாமரைக் கொடியை உடையவனே, பத்மநாபா!

புருஷோத்தம = புருஷர்களில் உத்தமனே! புருடோத்தமா!
வாசுதேவ = வாசுதேவனே!


பத்மநாபன் = இது படைப்புத் தத்துவம்! இறைவன் தொப்புள் கொடியில் பிரம்மன் தோன்றி, அவன் வாயிலாக உயிர்கள் தோன்றின!
ஆக பெருமாளுக்கும் நமக்கும் தொப்புள் கொடி உறவு!
அந்தி போல் நிறத்தாடையும் அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்
உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்தின் உயிரே
என்பது திருப்பாணாழ்வார் வாக்கு!

புருஷோத்தமன் = ஆண்களில் எவனாச்சும் ஒருத்தன் உத்தமனா? வீட்டில் கேட்டுப் பாருங்க! இல்லைன்னு பதில் ஸ்ட்ராங்கா வரும்! :-) ஒரே ஒருவன் தான் உத்தமன்! யார் அவன்?
ஓங்கி உலகளந்த உத்தமன் - அவனே புருஷோத்தமன்!

வாசுதேவன் = பொதுவாக கண்ணனைத் தான் வாசுதேவ கிருஷ்ணன் என்று அறிவோம்! ஆனால் இந்த வாசுதேவன் என்னும் சொல், அவதாரங்களுக்கு எல்லாம் முனனரே, பரம்பொருளைக் குறிக்கும் சொல்! பரவாசுதேவன் என்று குறிப்பார்கள்!
எங்கும் வியாபித்து வாசம் செய்பவன் வாசுதேவன்!
ஸ்ரீ வாசுதேவ நமோஸ்துதே ஓம் நம இதி-ன்னு விஷ்ணு சகஸ்ரநாமத்திலும் பயின்று வரும்!
செங்கட் கருமேனி வாசு தேவனுடய,
அங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும்,
சங்கரையா. உஞ்செல்வம் சாலவ ழகியதே
- என்று வாசுதேவனை ஆண்டாளும் அழைக்கிறாள்!

வைகுண்ட = வைகுண்ட நாதா
மாதவ = மாதவா
ஜனார்த்தன = ஜனார்த்தனா
சக்ர பாணே = சக்கரத்தை ஏந்தியவனே


ஜனார்த்தன = ஜன + அர்த்தன = ஜனங்களால் தேடப்படும் அர்த்தம்/செல்வம்; அதாவது அனைத்து உலகங்களும் அடைய விரும்பும் ஒரே பொருள்! அதுவே ஜனார்த்தனம்!
சக்ர பாணி = சுதர்சனம் என்னும் சக்கரப் படையை ஏந்தியவனே!

வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு என்று பெரியாழ்வார் சக்கரத்தை வாழ்த்துகிறார்!

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன = ஸ்ரீவத்சம் என்ற மச்சத்தை வல மார்பில் உடையவனே!
பெருமாளின் வலத் திருமார்பில் இருக்கும் மச்சத்துக்கு ஸ்ரீவத்சம் என்று பெயர்! தமிழில் திருமறு!
திருமறு மார்பன்! அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்று சொன்னார்களே? இராமன் குழந்தையாய் இருக்கும் போது, சீதை எப்படி அவனுடன் ஓட்டி இருக்க முடியும்?
அது என்ன சும்மா வாய் வார்த்தைக்குச் சொல்லப்பட்டதா? இல்லையில்லை!

மகாலக்ஷ்மியாகிய திருமகளின் அம்சமாய் என்றும் அவனுடன் ஒட்டி இருப்பது இந்த மச்சம்!
அவதார காலங்களில், குழந்தையாய் இருக்கும் போதும் கூட, அவனுடன் ஒட்டி இருப்பது இந்த திருமறு தான்!

வாமன அவதாரத்தில் இந்த மச்சம் யார் கண்ணிலும் பட்டு விடக் கூடாதே என்று மான்தோலை இழுத்துப் போர்த்திக் கொண்டு வந்தான் வாமனன்!
இப்ப சொல்லுங்க! பெருமாளு மச்சம் உள்ள ஆளு தானே! :-)
அவனை விட்டு ஒரு நொடிப்பொழுதும் பிரியாமல் இருக்கவே இப்படி ஒரு மச்சம்!! நல்ல பொண்டாட்டி, நல்ல புருஷன் போங்க! :-)

சரணாகத பாரிஜாத= சரணம் அடைந்தார்க்கு பாரிஜாத மலர் போல் அருள் பொழிந்து குளிர்விப்பவனே!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

Saturday, October 20, 2007

சுப்ரபாதம்(19&20) - சிற்றின்பம் வேண்டும்! பேரின்பம் வேண்டாம்!

மோட்சத்துக்குப் போய்க் கொண்டு இருக்காரு ஒரு பக்தர்! இறைவனின் தூதர்களே வந்து அவரை அழைத்துப் போறாங்க! போகும் வழியில் திருமலைக் கோவிலின் கோபுரம் தெரியுது! ஆனந்த நிலைய விமானம் மின்னுது! என்ன நினைச்சாரோ தெரியலை! "விஷ்ணு தூதர்களே...மோட்சம் எல்லாம் வேண்டாம்! நான் இங்கயே இறங்கிக்குறேன்-னு"...ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாரு!

என்னய்யா சொல்றீரு? அவனவன் மோட்சம் கிடைக்காதா-ன்னு தவம் கிடக்கிறான்! நீங்க என்னான்னா ஏதோ பாதி வழியில, போதும்...நான் இந்த எக்ஸிட்ல இறங்கிக்கறேன்னு சொல்றது போல பேசறீங்களே! என்ன ஆச்சு உமக்கு?

இல்லீங்க, எனக்குச் சிற்றின்பமே போதும்! பேரின்பம் எல்லாம் வேண்டாம்!
அடப்பாவி மனுஷா...போயும் போயும் இந்த மாதிரி ஒரு ஆளையா, நாம மோட்சம் கூட்டிப் போகலாம்-னு எண்ணினோம்? கணக்கு வழக்குல ஏதோ தவறு நடந்திடுச்சா? சிற்றின்பப் பிரியனா இவன்?

இறைவன் நாம ரூபங்களை எல்லாம் கடந்தவன். அவனை ஒரு உருவத்தில் அடக்கி வழிபடுவது எல்லாம் கீழ்ப்படியாச்சே! இதுவும் ஒரு வகை சிற்றின்பம் தானே! - அப்படின்னு நினைக்கிறீங்களா தூதர்களே?
சரி, சிற்றின்பம்-னே வைச்சிக்கோங்க! எனக்கு அந்தச் சிற்றின்பமே போதும்!
அந்த இன்பத்தில் தான் இறைவனைத் தான் மட்டும் தனியே அனுபவிக்காமல், அடியவர்களோடு அடியவர்களாய், ஒருவருக்கு ஒருவர் ஒன்றாகக் கூடி, அவன் குணானுபவங்களைப் பேசியும் பாடியும், சேர்ந்து அனுபவிக்க முடிகிறது!

அதோ அடியவர்கள் எல்லாம் கீழே இருக்காங்க! கோவிலில் சுப்ரபாதம் ஒலிக்கிறது! இன்னும் சற்று நேரத்தில் நடை திறந்திடுவாங்க! தமிழ்ப் பாசுரங்கள் முழங்கப் போறாங்க! நான் இறங்கி விடுகிறேன்! வருகிறேன் தூதர்களே! மன்னித்துக் கொள்ளுங்கள்!

என்னடான்னு பாக்குறீங்களா - இன்னிக்கி சுப்ரபாதத்தின அவுட்லைன் இதான்! :-)
கொஞ்சம் பெரிய பதிவு தான்! ஆனா முழுசா சொன்னாத் தான் பொருள் விளங்கும்! நேரம் எடுத்துப் படிங்க...
பெரியது கேட்கும் எரிதவழ் வேலோய்! - தொண்டர் தம் பெருமை பதிவிடவும் பெரிதே! :-)(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)
த்வத் பாத தூளி, பரித ஸ்புரித உத்தமாங்கா
சுவர்கா அபவர்க நிரபேக்ஷ, நிஜாந்த ரங்கா!
கல்ப ஆகம ஆகலநயா ஆகுலதாம் லபந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

த்வத் பாத தூளி = உன் பாத தூளியை (திருமண்)
இறைவனின் பாத தூளி பற்றி பக்தி இலக்கியங்கள் பல கதைகளைப் பேசும்!
எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வச்சோம்...அப்படின்னு இந்தக் காலத்துல கூட பாட்டு போடறாங்க! :-)
கடவுள் வாழ்த்து பற்றிச் சொல்ல வந்த திருவள்ளுவர் கூட, இறைவனை விட்டு விட்டு இறைவனின் பாதங்களைத் தான் பற்றிக் கொள்கிறார். முதல் அதிகாரத்திலேயே திருவடிகள் தான் எங்கும் நிறைந்திருக்கு!

வாலறிவன் "நற்றாள்" தொழாஅர் எனின்
மலர்மிசை ஏகினான் "மாணடி" சேர்ந்தார்
வேண்டுதல் வேண்டாமை "இலானடி" சேர்ந்தார்க்கு
தனக்குவமை இல்லாதான் "தாள்"சேர்ந்தார்க் கல்லால்
அறவாழி அந்தணன் "தாள்"சேர்ந்தார்க் கல்லால்
எண்குணத்தான் "தாளை" வணங்காத் தலை
நீந்தார் இறைவன் "அடி" சேராதார்.
......என்று திருக்குறளில் கூட எங்கு பார்த்தாலும் "திருவடிகள்" தான்!

வைணவத்தில் திருவடிகளுக்கு மிகப் பெரிய இடம் உண்டு. பல தத்துவங்களும் கதைகளும் உண்டு! பாதுகை ஏன் நாட்டை ஆண்டது என்பதற்கும் விளக்கம் உண்டு!
மற்ற சமயங்களிலும் இலக்கியங்களிலும் கூட இறைவனின் இணையடிகள் ஏத்தப்படுகிறது. ஈசன் எந்தை இணையடி நீழலே என்று அப்பர் சுவாமிகள் உருகுகிறார்!
ஆனால் அவை பெரும்பாலும் பாட்டோடும் கருத்தோடும் நின்று விடும்! - மக்களிடம் நேரடியாகச் சென்றடையும் வழிபாட்டு முறைகளில் திருவடிகள் வெளிப்படையாகத் தெரிவதில்லை!

ஆனால் வைணவத்தில் திருவடிகள், மக்களிடம் நேரடியாக முன்னிறுத்தப்படுகின்றன.
நெற்றியில் இட்டுக் கொள்ளும் நாமம் = திருவடி
கோவிலில் தலை மேல் வைக்கும் சடாரி = திருவடி
கருடன் = பெரிய திருவடி
அனுமன் = சிறிய திருவடி
திருவடி சம்பந்தம், பாதுகா சகஸ்ரம், பாத பூசை என்று திருவடி இல்லாத இடமே கிடையாது!

அது ஏன் திருவடிக்கு மட்டும் இவ்வளவு பெருமை?
கையைச் சொல்லலாமே! அது தானே அபயம் கொடுக்கிறது? - முகத்தைச் சொல்லலாமே! அது தானே நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது?
எதுக்குக் காலைச் சொல்லணும்?
முன்னரே ஒரு சுப்ரபாதப் பதிவில் சொல்லி இருக்கிறேன். பாருங்க!

அந்தத் திருவடியின் அடியில் உள்ள கோடானுகோடி துகள்களில், ஒரு துகளாக இருக்க மாட்டோமா என்று எல்லாச் சமயத்து அன்பர்களுமே விரும்புகின்றார்கள்.
அந்தத் திருவடித் துகளைத் தான், அடியவர்கள் தங்கள் தலையின் மேல் சூடிக் கொள்கிறார்கள்! திருமண் என்று சிலாகித்துப் பேசுகிறார்கள்!

பரித ஸ்புரிதோ = தாங்கிக் கொண்டு, புல்லரித்துப் போய் நிற்கிறார்கள், அடியவர்கள்!
உத்தமாங்கா=
உத்தம+அங்கா= உன் திருவடித் துகள் ஒன்றே அவர்கள் அங்கங்களை எல்லாம் சுத்தம் செய்து விட்டது!
பொதுவா மண்ணுன்னா அழுக்கு; நீருன்னா சுத்தம். ஆனாப் பாருங்க, திருவடித் துகளே அங்கங்களைச் சுத்தம் செய்து விட்டதாம்!
சைவத்திலும் கூட, குளிக்காமலேயே திருநீறு தரிக்கலாம் என்ற விதி இருக்கு!


சுவர்கா, அபவர்க நிரபேக்ஷ = சொர்க்கப் பதவி, மோட்ச நிலை - இவற்றில் கூட ஆசையில்லாமல்
நிஜா அந்தரங்கா = அந்தரங்க சுத்தியுடன் உன்னையே விரும்புகிறார்கள்
சேக்கிழார் சுவாமிகள் மிக அருமையாகச் சொல்லுவார் பெரிய புராணத்தில்! அது தான் அடியவர்களின் உண்மையான லட்சணம்!
கூடும் அன்பினால் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்!

அடியார்கள் சொர்க்கம், மோட்சம் இதன் மேல் கூட ரொம்ப விருப்பம் வைக்காமல், அவனையே விரும்பி நிற்கிறார்கள்!
அவனின் திருவுள்ள உகப்பிற்கு மட்டும் தான் தாங்கள் இருக்கிறோம் என்ற அன்பு நிலை அது! அதனால் அவர்கள் மோட்சம், பிறவா வரம் என்று தனியாக விரும்புவது எல்லாம் ஒன்றும் இல்லை!

சொர்க்கம்-நரகம் = அவரவர் செயல் வினைகளில், அவ்வப்போதே இன்ப துன்பங்கள் விளைந்து விடுகின்றன!

மோட்சம் = பிறவிச் சுழல்களில் சிக்காமல் பரமபதம் என்னும் மோட்சம் அடைந்து விட்டால், மீண்டும் வரவேண்டாம் அல்லவா?
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே! என்கிறார் நம்மாழ்வார்!
அப்பிடின்னா என்ன அர்த்தம்?

தேவர்களாகப் பிறந்தாலும் கூட, வைகுந்தம் செல்ல வேண்டும் என்றால், மனிதப் பிறவி எடுத்துத் தான் செல்ல முடியும்!
சரி, அப்படிச் சென்று விட்டால், மீண்டும் வராமல், ஜாலியா அங்கேயே இருக்கலாம் அல்லவா? - இப்படி எல்லாம் கணக்கு போடமாட்டார்களாம் அடியவர்கள்!
அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் அவனின் திருவுள்ள உகப்பு ஒன்று தான்!

ஆழ்வார் ஏற்கனவே மோட்சம் அடைந்து வைகுந்தத்தில் தான் இருக்கிறார். ஆனால் இனி பிறவி இல்லை என்று அவர் கணக்கு போட்டுக்கொண்டு இருக்கிறாரா?
ஆதிசேஷன் பரமபதத்தில் நித்ய வாசம் செய்பவர். அவர் இராமானுசர், மணவாள மாமுனிகள் என்று அவதாரம் செய்து, மாறி மாறிப் பூமிக்கு வரவில்லையா?

மற்ற மண்ணுலக மக்கள் எல்லாரும் கடைத்தேறும் பொருட்டு, அடியவர்களை பூமிக்கு அனுப்பி அவதரி்ப்பிக்கின்றான் இறைவன்!
அடப் போங்க பெருமாளே, நானே படாத பாடுபட்டு மோட்ச பதவி வாங்கிக் கொண்டு வந்திருக்கேன்....என்னைப் போயி திரும்பிப் போகச் சொல்லுறீங்களேன்னு முரண்டு செய்வார்களா என்ன? :-)

மற்ற அடியவர்களும், உயிர்களும் கடைத்தேறும் பொருட்டு, இறைவன் அனுப்பினால், அதுவும் அவர்களுக்கு மோட்சமே!
அதான் கூடும் அன்பினால், வீடும் வேண்டா விறலின் விளங்கினார்! - இறைத் தொண்டில் தன்னல தர்மத்தைக் காட்டிலும் பொதுநல தர்மம் தான் முன்னிற்கும்!
முன்பே மாதவிப் பந்தல் வைகுண்ட ஏகாதசிப் பதிவில், இது பற்றி பார்த்தோம்!

மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் என்ற திருப்பாவை வாசகம் தான், இதன் பின்னே மறைந்துள்ள பொக்கிஷம்!
முப்பது நாளும் நோன்பு நோற்றுவிட்டு, கடைசி நாளில் மோட்சம் வேண்டாம் என்று சொல்லும் பைத்தியக்காரப் பெண்ணா ஆண்டாள்?
இற்றைப் பறை கொள்வாம் அன்று! காண் கோவிந்தா என்று ஆண்டாள் பறை வேண்டாம் என்று சொல்லி விடுகிறாள்! - பின்ன, என்ன தான் வேணுமாம்?

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது - உன் பணிகளுக்கு எங்களை ஆட்படுத்திக் கொள்!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், உற்றோமே ஆவோம் - பிறவிகள் பிறந்தாலும், உன் உள்ளத்து உகப்புக்கு மட்டும் நாங்க இருந்தாப் போதும் என்ற காதல் நெஞ்சம் தான்! அதுவே உண்மையான பக்தியின் சிகரம்! - நின் அருளே புரிந்து இருந்தேன், இனி என்ன திருக்குறிப்பே?


கல்ப ஆகம, ஆகலநயா = கல்பம் (யுகம்) ; ஒவ்வொரு நொடியும் ஒரு கல்பமாய் கழிகிறது அடியார்களுக்கு!
இறைவனை "எப்போதும்" கூடி இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் வாட்ட
ஆகுலதாம் லபந்தே = துன்பப்பட்டு இருக்கின்றார்கள்!

கல்பம்=4,320,000 ஆண்டுகள்! 4 யுகம் = 1 கல்பம்!
Time between creation and deluge...
இது பற்றி விஞ்ஞான நோக்கில், வானுக்குள் விரியும் அதிசயங்கள் போல, ஒரு பதிவிட வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாள் ஆசை! :-) சரி, மேட்டருக்கு வருவோம்...

இப்போது தெரிகிறது அல்லவா, தேவர்களைக் காட்டிலும், எதுக்கு அடியவர்களை உயர்வாகச் சொல்லுறாங்க-ன்னு! திருவேங்கடமுடையான் ஆலயத்தில் பெருமாளின் தரிசனத்துக்கு, நின்று கொண்டு இருக்காங்க! அடியார் இவர்களுக்கு அன்பு காட்டிட, வேங்கடவா எழுந்தருள்வாய்!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!த்வத் கோபுர ஆக்ர சிகராணி, நிரீக்ஷ மாணா
ஸ்வர்கா அபவர்க பதவீம், பரமாம் ச்ரயந்த!
மர்த்யா மநுஷ்ய புவனே, மதி மாச்ரயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்!

த்வத் கோபுராக்ர சிகராணி = உன் ஆலய கோபுரத்தின் சிகரத்தைக்
நிரீக்ஷ மாணா = கண்ணாரக் கண்டு

கோபுர தரிசனம், பாப விமோசனம்-னு சொல்லுவாங்க!
அப்படின்னா நான் கூடத் தான் தினப்படி கோபுரத்த பாக்கறேன். என் நண்பர் ஒருத்தர் நடத்தும் மதுபானக் கடை, கோபுரத்துக்கு எதுத்தாப்புல தான் இருக்கு! :-)
அவருக்கும், எனக்கும் பாவ விமோசனம் ஆயிடுச்சா என்ன? - அதான் "கண்ணாரக் கண்டு" ன்னு சொல்லுறாங்க - கோபுரத்தைக் கோவிந்தனா பாக்கும் போது பாப விமோசனம்!

ஸ்வர்கா அபவர்க பதவீம் = சொர்க்கம் மற்றும் மோட்சப் பதவியைக் கூட விரும்பாமல்!
பரமாம் ச்ரயந்த= உத்தமமான உன் சேவையில், திருத் தொண்டில் மட்டும் ஈடுபாடு கொண்டுள்ளார்கள்!
சென்ற சுலோகத்திலேயே, இதுக்கு விளக்கம், பார்த்து விட்டோம்! தவத்தினால் அடைந்த பதவிகளைக் கூட இறைவனுக்காக உதறித் தள்ள தயாராய் இருப்பவர்கள் அடியார்கள்! சேவித்து இருப்பதுவே செவ்வடியார் செழுங்குணம்!

மர்த்யா மநுஷ்ய = அழியும் மானிடப் பிறவிகள் வாழும்
புவனே = பூவுலகில், பிறக்கத் தான்
மதிம் ஆச்ரயந்தே = அவர்கள் எண்ணம் போகின்றது

இப்படித் தொண்டு ஒன்றில் மட்டும் கருத்துடைய அடியவர்கள், உன் முகம் காண வந்திருக்காங்கப்பா! தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே! சீக்கிரம் எழுந்து, உன் குளிர்முகம் காட்டு!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம்
(நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

சுப்ரபாதம் (தமிழில்):

ஒலிச் சுட்டிகள்!

முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் - நித்ய ஸ்ரீ பாடுவது (Windows Media Player)

நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com
Pics: tirumala-tirupati.com

சுப்ரபாதம் (மூலம்):

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP