Saturday, November 17, 2007

சுப்ரபாதம்(25) - கோயிலில் ஏன் தீர்த்தம் கொடுக்கறாங்க?

தீர்த்தம்-னா காலேஜ் பசங்க சங்கேத மொழியில வேற அர்த்தம்! :-) ஆனா நாம இன்னிக்கி பாக்கப் போறது ஒரிஜினல் தீர்த்தம் பற்றி!
பெருமாள் கோவிலில் பல வேளைகளில் தீர்த்தம் கொடுத்து, தலையில் சடாரி வைக்கிறார்கள்! அது ஏன் என்று யாராச்சும் யோசிச்சு இருக்கீங்களா?

சும்மா ஒரு ரெண்டு சொட்டு தீர்த்தம் குடிச்சா தாகம் தீர்ந்திடுமா? சில பேர் வரிசைல நிக்காம முட்டி மோதி, தீர்த்தம் வாங்குகிறேன் பேர்வழி-ன்னு, பாதி தீர்த்தத்தை கீழே நழுவ விடுவதும் உண்டு! :-) எதுக்கு இந்த பில்டப்பு எல்லாம்?

முதலில் சடாரியை கொஞ்சம் எளிமையாப் பாத்துடுவோம் வாங்க! இது பற்றி மாதவிப் பந்தல் பதிவுகளில் முன்னர் லைட்டாகச் சொல்லி உள்ளேன்!சடாரி அல்லது சடகோபம்; அதைக் கொஞ்சம் கூர்ந்து பாருங்க; ஏதோ ஒரு கிரீடம் போல இருக்கும். அதன் மேலே இரு பாதங்கள்!
இறைவனின் திருப்பாதங்களை நாம் தேடிப் போகா விட்டாலும் கூட, அவை நம்மைத் தேடி வருகின்றன! நம்மைக் கடைத்தேற்ற!
கோவிலுக்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, இந்த சடாரி கூடவே பயணிக்கும்!


சுவாமி சிவானந்தரிடம் அப்துல் கலாம் ஒரு கேள்வி் கேட்டாராம்; அக்கினிச் சிறகுகள் நூலில் வரும்! - How can I find my right teacher?
அதற்குச் சிவானந்தர் சொன்ன பதில் - When the student is ready, the Teacher arrives!

அறியாத சீடன், குருவை மட்டும் எப்படித் தனியாக அறிந்து விட முடியும்? அவன் குருவை நோக்கிச் செல்ல வேண்டியதில்லை! சீடனை நோக்கிக் குரு தானே வருவார், சீடன் கற்க விழையும் போது!

அது போல் ஒரு குரு வருகிறார் நம்மைத் தேடி!
நம்மாழ்வாரின் இயற்பெயர் மாறன் சடகோபன்! சடாரிக்குப் பெயரும் சடகோபம் தான்! வைணவ மரபில் அவர் தான் ஆதி குரு! அவர் தான் சடாரியாக வருகிறார் நம்மிடம்!
அவரே இறைவனின் சடாரியாக இருந்து,
அவன் பாதங்களை,
நம்மை நோக்கிக் கொண்டு வந்து கொடுத்து,
நம்மை உய்விக்கிறார்! - இதுவே சடாரியின் தத்துவம்!
சரி, அதற்கு ஏன் கிரீடம் போல ஒரு அமைப்பு? ஸ்ட்ரெயிட்டா பாதங்களையே தலை மேல் வைத்து விடலாமே?

நாம் தான் எது ஒன்னையும் நேரடியா கொடுத்தாலே, ஆயிரம் எடக்கு பேசுவோமே? ஆனால் அதே வேளையில், நம்மைச் சிறப்பித்து, நமக்கு்த் தலையில் சூட்டினா, உச்சி குளிர்ந்து விடாதா? வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும், உள்ளே கொஞ்சமாச்சும் புளகாங்கிதம் அடைவோம் அல்லவா? :-)

"தலை" மேல தூக்கி வச்சிக்கிட்டு ஆடுறான், "தலை" கால் தெரியலை அப்படி-ன்னு பேச்சு வழக்கில் கூட, எண்சாண் உடம்புக்கு "தலையே" பிரதானம்!
என்னா "தல", செளக்கியமா-ன்னு தான் நாமளும் கேக்கறோம்! "தலை"யாய ஒன்றுன்னு தானே இலக்கியங்களும் சொல்கின்றன!

இப்படிப்பட்ட மனிதனின் தலைக்கு அணிகலனாகத் தான் அந்தக் கிரீடம்!
ஆனா கிரீடம் தான் உண்மையான அணிகலனா? இல்லை! - அதுக்கு மேலேயும் ஒன்னு இருக்கு! உலகத்தில், தலை மேல் வைத்துக் கொண்டாட வேண்டிய ஒரே பொருள் எது? - இறைவனின் திருப்பாதங்கள் தான்! - எண்குணத்தான் தாளை வணங்காத் தலை என்பது தான் வள்ளுவம்!

அவன் மலரடிகளைச் சூட்டிக் கொள்வதை விட பெரும்பெருமை வேறெதுவும் இல்லை!
அதனால் தான் சடாரியில் கிரீடம் வைத்து, அதன் மேல் சுவாமியின் திருவடிகளை வைத்தார்கள்!
எந்தப் பேதமும் இன்றி அனைவருக்கும் தலையில் சூட்டி அழகு பார்க்கும் கிரீடம் அது! யாருக்கும் மறுக்கப்படாத கிரீடம் - அதுவே சடாரி!!அடுத்து தீர்த்தம் எதுக்கு-ன்னும் பார்த்து விடுவோம், வாங்க!
நாராயணன் என்ற பதத்தில், நாரம் என்பதற்குத் தண்ணீர்-னு பொருள்!

நீர் இன்றி அமையாது உலகு! அது போல் நீர் வண்ணன் அன்றி அமையாது உலகும் உயிரும்!

அதனால் தான் பெருமாளுக்கு எல்லாமே நீராக அமைந்துள்ளது!
அவன் பேரும் நீர்! அவன் வண்ணமும் நீர்!
அவன் உறைவதும் பாற்கடல் நீர்! அவனுடன் அலைமகளும் நீர்!
"ஆபோ நாரா" என்று ஒரு சூக்தமும் உண்டு! பிரளய காலத்தில் ஏற்படும் நீருக்கும், படைக்கும் காலத்தில் தோன்றும் நீருக்கும் நாரம்-ன்னு பேரு!

துப்பு ஆர்க்குத், துப்பு ஆயத், துப்பு ஆக்கித், - துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை என்ற குறள் நினைவிருக்கா?
உணவை உற்பத்தி செய்யவும் நீர் தேவை! அதே சமயம், அந்த நீரே ஒரு உணவாகவும் இருக்கு!

நீரைப் போலவே நீர் வண்ணன் நாராயணனும், உலகுக்குக் காரணமாகவும் இருக்கிறான்! அதே சமயம் காரியமாகவும் இருக்கிறான்!

அதனால் தான் "ஆழிமழைக் கண்ணா" என்று மழை நீரோடு, நாரணனைச் சேர்த்தார்கள்!

நீருக்கு ஒரு பெரிய குணம் இருக்கு! - அதுக்கு வடிவம் என்பதே கிடையாது! ஆனா, எதில் ஊற்றுகிறீர்களோ, அந்த வடிவத்தை அது பெற்று விடும்!
அதே போல் தான் நீர்வண்ணனாகிய நாரணனும்!
தமர் உகந்தது எவ்வுருவம், அவ்வுருவம் தானே! அடங்காது எங்கும் பரந்த பரந்தாமன், எதிலும் அடங்கி விடுவான், நீரைப் போலவே!

மீனா, ஆமையா, பன்றியா, நரசிங்கமா, குள்ளமா, உசரமா, முனிவனா, குடும்பஸ்தனா, அரசனா, மாட்டுக்காரனா, கற்சிலையா, அடியவர் மனதா - எதிலும் அடங்கி விடும் தன்மை அவனுக்கு! எளியவர்க்கு எளியனான இந்த குணத்துக்குக் கூட "நீர்மை" என்றே பெயர்!

அதனால் தான் நாரணன்-நீரான் என்பதைக் காட்டி, அவனையே நமக்கு மணக்க மணக்கப் பருகத் தருகிறார்கள்! அதுவே தீர்த்தம்! ஒரே ஒரு சொட்டு போதும்! உள்ளில் அடங்க!
அதுவும் அவன் திருமேனியில் பட்ட நீர் என்பதால், அவன் திருமேனி சம்பந்தத்தையும் நமக்கு அளிக்கிறது!

தீர்த்தம் வாங்கிக் கொள்ளும் முறையும் ஒன்று உள்ளது! கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்தால், உள்ளங்கை குவிந்து விடும். அதில் நீரைச் சிந்தாமல் வாங்கிக் கொள்ளலாம்! சிலர் வேட்டியின் நுனியையோ, துண்டின் நுனியையோ ஒரு கையில் பிடித்து இன்னொரு கையில் வாங்கிக் கொள்வார்கள்; கீழே சிந்தாது! வெளியூரில் ஏது வேட்டி? நான் கைக்குட்டையைப் பிடித்து வாங்கிக் கொள்வேன்! :-)

வாங்க, இன்றைய சுப்ரபாதத்துக்குப் போகலாம்; தீர்த்தம்னா என்ன, அதில் கலந்துள்ள பொருட்கள் என்னென்னு சொல்றாங்க!(இந்த சுலோகத்தைப் படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)


ஏலா லவங்க கனசார சுகந்தி தீர்த்தம்
திவ்யம் வியத்சரிதி ஹேம கடேஷூ பூர்ணம்
த்ருத் வாத்ய வைதிக சிகாமணய ப்ருஹ்ருஷ்டா
திஷ்டந்தி வேங்கட பதே தவ சுப்ரபாதம்

ஏலா லவங்க கனசார = ஏலக்காய், லவங்கம், பச்சைக் கர்ப்பூரம்
சுகந்தி தீர்த்தம் = இவற்றால் நறுமணம் கமழும் நன்னீர் (தீர்த்தம்)
தீர்த்தங்களில் பெரும்பாலும் இடப்படும் பொருட்கள்:
பச்சைக் கர்ப்பூரம்
ஏலக்காய், இலவங்கம்
ஜாதிக்காய், வெட்டிவேர்
மருத்துவ மரப்பட்டைகள்
சிறிது மஞ்சள்
எல்லாவற்றுக்கும் மேலாக, துளசி! - இவற்றினால் உண்டாகும் வாசம், நாத்திகரையும் தீர்த்தம் பருக வைக்கும்! :-)
வாழாட்பட்டு நின்றீர் ஊள்ளீரேல், வந்து மண்ணும் மணமும் கொள்மின் என்கிறார் பெரியாழ்வார்! நீராட்டிய நீர் மட்டும் தான் தீர்த்தம் என்றில்லை! நீராட்டம் இல்லாத ஆலயங்களிலும் கூட வெறும் நீரைச் சேமித்து வைத்து தீர்த்தம் தருவது உண்டு!

எம்பெருமானுடைய திருமேனி சம்பந்தத்தால், வாசனை நீர், வாசவன் நீராக ஆகிறது.
தினமும் திருமஞ்சனம் நடக்காத கோயில்களில் கூட, சுவாமியின் திருப்பாதங்களுக்கு நீராட்டு உண்டு! அதை ஸ்ரீ பாத தீர்த்தம்-னு சொல்லுவாங்க!
மேலும் திருமஞ்சனம் செய்த பின், சுவாமியின் திருமேனியில் உள்ள ஈர ஆடையைக் களைந்து, கைகளில் சுற்றிக் கொண்டு, ஒவ்வொருவருக்கும் ஈரவாடைத் தீர்த்தம் தருவது வழக்கம்! உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை-ன்னு பெரியாழ்வார் பாசுரம்!
சிவாலயங்களில் கூட சில சமயம் தீர்த்தம் உண்டு! பூவும் நீரும் கண்டு என்பது அப்பர் பெருமானின் பதிகம்.

திவ்யம் வியத் சரிதி = அழகாக ஓடும் ஆற்று நீரை (ஆகாச கங்கை நீர் வீழ்ச்சியில் இருந்து)
ஹேம கடேஷூ பூர்ணம் = தங்கக் குடங்களில் முழுமையாக நிரப்பி,

ஆகாச கங்கை என்னும் அருவியில் இருந்து தான், திருவேங்கடமுடையானுக்கு திருமஞ்சன நீர் எடுக்கப்பட்டது!
இந்த நீர்க் கைங்கர்யம் செய்யுமாறு பெரிய திருமலை நம்பிகளை வேண்டிக் கேட்டுக் கொண்டார் இராமானுசர். மலர் கைங்கர்யத்துக்கு அனந்தாழ்வானை நியமித்து அருளினார்!
இது பற்றி முன்னரே மாதவிப் பந்தல் பதிவில் "தண்ணி காட்டிய இறைவன்" என்னும் இடுகையில் பார்த்துள்ளோம்!

பாபவிநாசம்

ஆகாசகங்கை


மிகவும் வயதான திருமலை நம்பிகளின் உடல் நலம் கருதி, இறைவனே வந்து திருவிளையாடல் செய்தான். பாபவிநாசம் என்னும் இன்னொரு தீர்த்தத்தைக் கோவிலுக்கு அருகிலேயே உண்டாக்கினான். இப்போது இங்கிருந்து தான் தீர்த்தம் எடுக்கிறார்கள்!
இன்றும் திருமலை நம்பிகளின் வம்சத்தவர், (தோழப்பர் என்று அழைக்கப்படுபவர்கள்) ஆண்டுக்கு ஒரு முறை தண்ணீர் அமுது உற்சவத்தின் போது, பழைய ஆகாச கங்கையில் இருந்து நீர் கொணர்ந்து சமர்ப்பணம் செய்கிறார்கள்!


அது தவிர, மோசமான வானிலை போன்ற சூழ்நிலைகளில், கோவிலின் உள்ளேயே உள்ள பொற்கிணற்றில் (பங்காரு பாவி) நீர் சேந்திக் கொள்வதுண்டு. Water Management என்னும் நீர் மேலாண்மை மாதிரி தான்! இந்தக் கிணற்றைத், தரிசனம் முடித்து விமானப் பிரகாரத்துக்கு வந்தவுடனேயே எதிரில் காணலாம்!

பொற்கிணறு

த்ருத் வாத்ய = வேகமாக எடுத்து வருகிறார்கள்
வைதிக சிகாமணய = வேத ஓதும் விற்பன்னர்கள்!
ப்ருஹ்ருஷ்டா = மகிழ்ச்சியுடன் (வந்து உன் சன்னிதியில் நிற்கும் அவர்களுக்கு)
திஷ்டந்தி = காத்திருந்து அருள் புரிவாய்!

இவ்வாறு பொற்குடங்களில் நீர் எடுத்து வரும் விற்பன்னர்கள், ஆலய வாசலுக்கு வேகமாக ஓடி வருகிறார்கள்! மலை இறக்கம் வேறு அல்லவா? தானாகவே அவர்களைத் தள்ளுகிறது!
அன்று முழுதும் அடியார்க்கு நல்லபடி தரிசனம் கிடைக்க வேண்டுமே! அதற்கு காலம் தாமதிக்காது, தீர்த்தம் கொணர்ந்தால் தானே முடியும்! அதனால் தான் இந்த ஓட்டமும் நடையும்!
வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால், கதிரொளித் தீபம் கலசமுடன் ஏந்தி, கோவில் வாசலுக்கு குறித்த நேரத்தில் வந்து நிற்கின்றனர்!


அப்பா பெருமாளே, அவர்கள் வரத் தாமதம் ஆனாலும் ஆகலாம்; அதனால் இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்று நீயும் சின்னக் குழந்தையைப் போலச் சேட்டை செய்யாதே!
அவர்கள் சொன்ன வண்ணம் சொன்ன நேரத்துக்கு வந்து விடுவார்கள்! போதும் தூக்கம்!
அவர்கள் வருகைக்காக நீ எழுந்து காத்திரு! - தீர்த்தம் வந்த அடுத்த விநாடி ஒரு கணமும் தாமதியாது, எழுந்து தயராகி விடு!
நாளெல்லாம் உன்னைக் காண அடியார்கள் கால் கடுத்து நிற்கிறார்கள்! நீ தாமதிக்கலாமா? தத்துவம் அன்று! தகவேலோ ரெம்பாவாய்!

வேங்கட பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!


----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

Saturday, November 03, 2007

சுப்ரபாதம்(23&24) - தமிழ் ஆட்டம்! மச்சாகூர்-மாகோலா-சிங்காவா-மாராமா!

சரி, அது என்னா மச்சாகூர்-மாகோலா-சிங்காவா-ராமாரா?:-)
மாகோலா, கோக்கோ கோலா-ன்னுகிட்டு என்ன உளறல்-னு பாக்குறீங்களா?ஹிஹி..அது ஒரு தமிழ் விளையாட்டு! பதிவின் கடைசிலே பாருங்க!

இன்னிக்கி சுப்ரபாதம் என்னன்னா? காதலில் வெற்றி அடைய வேண்டுமா?
மன்மத விரதம் இருங்க!
மன்மதன்-ரதி கோவிலுக்குப் போங்க-ன்னு யாராச்சும் இது வரை சொல்லி இருக்காங்களா?
அப்படிச் சொன்னாக்கா, இளைஞர் பட்டாளம் முழுக்க எந்தக் கோவிலுக்குப் போகும்-னு நினைக்கிறீங்க? பேசாம மெரீனா பீச்சுக்கு எதிர்தாப்புல ஒரு மன்மதன் கோயில் கட்டிடலாமா? :-)

அட, சும்மா இல்லீங்க! ஆனானப்பட்ட ஆண்டாளே மன்மதனை வேண்டினாளாம், தன்னைக் கண்ணனோட சேர்த்து வைக்கச் சொல்லி!
பாவைநோன்பு இருந்தவள், மன்மத நோன்பும் இருந்தாளாம்!
காயுடை நெல்லொடு கரும்பு அமைத்துக்
கட்டி அரிசி அவல் அமைத்து,
வாய் உடை மறையவர் மந்திரத்தால்
மன்மதனே உன்னை வணங்கு கின்றேன்

- என்று வேறு பாடுறா! எதுக்காம்?

தேயம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன்
திருக் கைகளால் என்னைத் தீண்டும்வண்ணம்,
சாயுடை வயிறும் மென் தடமுலையும்
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே

- திரிவிக்ரமன் அணைப்புக்காம்!
அடுத்த முறை, கோவிலில் காதலர்களை யாரும் திட்டினாங்கனா, ஆண்டாள் பாட்டை எடுத்து வுடுங்க! கப்-சிப்புன்னு ஆயிடுவாங்க! :-)

மன்மத லீலையை வென்றார் உண்டோ? மன்மதன் எல்லாரையும் மயக்குவான், அதிலும் புது மாப்பிள்ளைகளை அதிகம் மயக்குவான் சரி!
ஆனா அந்த மன்மதனையே மயக்கி அவன் தொழிலையே மறக்கச் செய்ய முடியுமா? யாரால் முடியும்?
ஒரே ஒரு ஜோடியால் தான் முடியும்! யார் அது? பார்க்கலாம் வாங்க!(இந்த சுலோகத்தைப் படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)


கந்தர்ப்ப தர்ப்ப ஹர சுந்தர திவ்ய மூர்த்தே
காந்தா குசாம் புருஹ குட்மல லோல த்ருஷ்டே
கல்யாண நிர்மல குணாகர திவ்ய கீர்த்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

கந்தர்ப்ப = காதலின் தேவன், மன்மதன்
தர்ப்ப = அவனின் தற்பெருமையை
ஹர = விரட்டிடும்
சுந்தர திவ்ய மூர்த்தே = அழகும், புனிதமும் கொண்ட மூர்த்தியே, பெருமாளே!


மன்மதனை எரித்தவன் சிவபிரான்! அப்படிச் சிவனாரின் தவத்தையே கலைக்கும் அளவுக்கு தொழில் புரிந்த மன்மதன், தன் தொழிலையே மறந்து மயங்குகிறான் என்றால்?
எவரையும் தன் கரும்பு வில் பாணத்தால் மயங்கச் செய்பவன் என்ற அவனுடைய தற்பெருமை...ஒன்றுமில்லாமல் போகிறது! எதைப் பார்த்து?

திவ்ய தம்பதிகள் இருவரைப் பார்த்து!
அவர்களின் காதலும், அன்பும் கண்டு அவனே வெட்கி நிற்கிறான்!
மன்மத பாணம் பாய்ந்தால். கொஞ்ச நேரம் தான் மோகம் இருக்கும்!
ஆனால் இங்கு அவன் பாணத்தின் சக்தி, தூய்மையான காதல் முன் தலைகுனிந்து நிற்கிறது! ஏனாம்?
பெருமாள் உறக்கம் கலையாமல், தன் மனத்துக்கினிய மனையாள், மகாலக்ஷ்மியை அணைத்துக் கொண்டு, உறங்கிய வண்ணமே இருக்கிறான்!

இவர்கள் உறங்கும் அழகு,
கண்கள் மூடினாலும், ஒருவரை ஒருவர் உறக்கத்திலும் பார்த்துக் கொண்டிருக்கும் அழகு,
எனக்கு நீ, உனக்கு நான் என்னும் காதலின் அழகு,
சம்சார சாகரத்தைக் காதலினால் கடக்கலாம் என்று காட்டும் அழகு!

குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்!


இவர்கள் அன்பைக் கண்டு மன்மதனே வாயடைத்துப் போய் நிற்கிறான்!
இப்படியும் ஒரு ஈடுபாடா? பின்னிப் பிணைதலா?
இது அன்பா? இல்லை மாரன் அம்பா?
மன்மத அம்பும் கூர் மழுங்கிப் போய் நிற்கும் மகோன்னத அன்பு!

காந்தா = மனத்துக்கினியவள், மகாலக்ஷ்மி தாயாரின்
குச = திருமார்போடு
ஆம்புருஹ குட்மல = தாமரைத் தண்டு போல
அணைத்துக் கொண்டு, இன்னும் உறக்கமா?

மைத்தடங் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்றகு இல்லாயால்
தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்!

உங்கள் காதலைப் பிறகு வைத்துக் கொள்ளுங்கள்! உங்க குழந்தைகள் எல்லாரும் கோவிலுக்கு வந்திருக்கோம்! முதலில் எங்களைக் கவனிங்க, என்று செல்லமாகச் சிணுங்கித் துயில் எழுப்புகிறார்கள்!

லோல த்ருஷ்டே = சிரிக்கும் குறும்புப் பார்வை கொண்டவனே

கல்யாண = மங்களகரமானவனே
நிர்மல = குறையொன்றும் இல்லாத கோவிந்தா
குணாகர = குணங்களின் உறைவிடமே
திவ்ய, கீர்த்தே = புனிதமானவனே, புகழ் ஓங்குபவனே!
துயில் களைக! எங்கள் துயர் களைக!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!கவி காளமேகத்திடம் ஒரு புலவர், திருமாலின் பத்து அவதாரங்களையும் ஒரே வெண்பாவில் பாட முடியுமான்னு கேட்க,
ஒரு வெண்பா என்ன? அரை வெண்பாவிலேயே பாடுகிறேன் என்று சொல்லிப் பாடியும் காட்டினார்.

மெச்சுதிரு வேங்கடவா வெண்பாவிற் பாதியில் என்
இச்சையில் உன்சன்மம் இயம்பவா? - மச்சாகூர்
மாகோலா சிங்காவா மாராமா ராமாரா
மாகோபா லாமாவா வா


அட என்னங்க இது.....மாராமா ராமாரா-ன்னு நாக்கு குழறுதா?
பதம் பிரிங்க; புரியும்! :-)
மச்சா-கூர்மா-
கோலா-சிங்கா-வாமா-ராமா-ராமா-
ராமா-கோபாலா-மாவா வா

(கோலா =வராகம்
வாமா =வாமனா
ராமா-ராமா-ராமா =பரசுராமா-ராமா-பலராமா-ன்னு மூன்று இராமன்கள்
மா-வா =குதிரையின் மேல் வரும் கல்கி...
என்னங்க, தமிழ் விளையாடுதா? எங்க இன்னொரு தரம் நாக்குழறாம வேகமா சொல்லுங்க பார்ப்போம்,
மாகோலா சிங்காவா மாராமா ராமாரா, மாகோபா லாமாவா வா :-)மீனாக்ருதே- கமட- கோல- ந்ருசிம்ம- வர்ணிந்
ஸ்வாமிந்- பரஸ்வத தபோதன- ராமசந்திர-
சேஷாம்ச ராம- யது நந்தன- கல்கி ரூப-
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

1. மீன ஆக்ருதே = மீன வடிவம் - மச்சாவதாரம்
2. கமட = ஆமை - கூர்மாவதாரம்
3. கோல = பன்றி - வராக அவதாரம்
4. ந்ருசிம்ம = நரசிம்ம அவதாரம்
5. வர்ணிந் ஸ்வாமிந் = பிரம்மச்சாரி, பெரும் சுவாமியாய் - வாமன/திருவிக்ரம அவதாரம்

6. பரஸ் வத தபோதன = பரசு தாங்கும் தவமுனி - ப்ரசுராம அவதாரம்
7. ராமசந்திர = ராமாவதாரம்
8. சேஷாம்ச ராம = சேஷனின் அம்சமாய் ராமன் - பலராம அவதாரம்
9. யது-நந்தன = யது குலத் தோன்றல் - கிருஷ்ணாவதாரம்
10. கல்கி ரூப = கல்கி அவதாரம்

பத்து அவதாரங்களும் இந்த ஒரே சுலோகத்தில் வருகிறது! முடிந்தால் மனப்பாடம் செய்து கொள்ளுங்க! தசாவதார தோத்திரம்-னு வேதாந்த தேசிகர் ஒரு அருமையான படைப்பைச் செய்துள்ளார். அதன் சாரம் போல இருக்கு! இப்படி அத்தனை அவதாரங்களின் சாரமாக நிற்கிறான் திருவேங்கட மாமலையில்!

ஒவ்வொரு அவதாரத்திலும் நோக்கம் என்ன? - தர்ம பரிபாலனம்! அறம் காத்தல்!
தன்னை வந்தடையும் வழியை உயிர்களுக்கு எளிதாகப் புரியுமாறு காட்டி அருளல்!
இதைத் தான் திருவேங்கடமுடையான் காட்டிக் கொண்டு நிற்கிறான்!

வேறு எந்த ஆலயத்திலும் (சைவமாகட்டும் வைணவமாகட்டும்), காண முடியாத ஸ்பெஷல் போஸ் திருமலையில்! :-)
ஆலயத்தில் தரிசனம் செய்யும் போது பார்த்தால், அந்தச் சின்முத்திரைக் கோலம் புலப்படும்!
சுப்ரபாதம் இறுதிப் பதிவில்(29), இது பற்றி விரிவாகச் சொல்கிறேன்!

அதனால் தான் சுலோகத்தில் தசாவதாரங்களின் தொகுப்பாகத் திருமலை நாதனைச் சொல்கிறார்! கலியுக வைகுந்தம் என்று திருமலையும் போற்றப்படுகிறது!
இன்றும், ஆலயத்தில் தசாவதார ஆரத்தி பெருமாளுக்கு உண்டு! தசாவதாரங்களும் பொறித்த பெரிய தாம்பாளத் தட்டில் இந்த ஆரத்தியை எடுக்கிறார்கள்!


தசாவதாரத் தத்துவமே,
ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

சுப்ரபாதம் (தமிழில்):

ஒலிச் சுட்டிகள்!

முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் - நித்ய ஸ்ரீ பாடுவது (Windows Media Player)

நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com
Pics: tirumala-tirupati.com

சுப்ரபாதம் (மூலம்):

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP