Friday, September 14, 2007

சுப்ரபாதம்(16&17) - சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு!

திருமலையில் பிரம்மோற்சவம் துவங்கி விட்டது! (Sep 15th)
உற்சவத்தின் போது, சிவாஜி ஸ்டைலில் பல நடைகள் நடந்து காட்டுவான்; நடிகர் திலகங்களுக்கு எல்லாம் திலகம் அல்லவா அவன்!
பக்தர்களுக்கு நடையழகு சேவிப்பது பெருமாளுக்கு கைவந்த கலை!

என்னென்ன நடை நடக்கின்றான்?
கருட நடை, சிம்ம நடை, பாம்பு நடை, யானை நடை, புரவி நடை என்று பல நடைகள்! நீ நடந்தால் நடை அழகு!
இன்றைய பதிவில் அந்த நடை அழகை எல்லாம் பார்க்கலாம் வாங்க! அப்படியே கொஞ்சம் வாஸ்துவும்!

Sep 15th இந்த ஆண்டு பிள்ளையார் சதுர்த்தியும் கூட! அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்!




(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)



சேவாபரா: சிவ சுரேஷ க்ருசானு தர்ம
ரக்ஷோம்பு நாத பவமான தனாதி நாதா
பத்தாஞ்ஜலி ப்ரவிலசந் நிஐ சீர்ஷ தேசா:
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

சேவாபரா = கைங்கர்ய செய்யும் சேவாபாரர்கள் எல்லாம் உன் சேவைக்கு காத்துள்ளனர்!
- யாரெல்லாம் காத்துள்ளனர்?
அஷ்ட திக் பாலகர்கள் என்று சொல்லப்படும் எண் திசைக் காவலர்கள்! இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திசை! வாஸ்து சாஸ்திரத்தில் மிகவும் காணப்படும் இவர்களைப் பற்றிய குறிப்புகள்!

திருமலைக் கோவிலில் அமைந்தது போன்று வாஸ்து, உலகில் வேறு யார்க்கும் அமையுமா தெரியாது! அவ்வளவு கச்சிதம்!
பெருமாள் கலியுக வரதனாக, பூலோகத்தில் மலைக் குனிய நிற்கப் போகிறார் என்று ஆனது! உடனே, திசைக் காவலர்கள் எல்லாம் அவருடன் வந்து அந்தந்த இடங்களில் நின்று விட்டார்கள்! இப்படித் தெய்வங்களே வந்து திசையில் நின்று விட்டால் சொல்லவும் வேண்டுமோ?


உண்டியல் இருக்கும் இடம் = குபேர மூலை, வடக்கு!
மடப்பள்ளி = அக்னி மூலை, தென் கிழக்கு
திருமஞ்சனக் கிணறு = மேற்கு, வருண மூலை
குரு ராமானுசர் சன்னிதி = தெற்கு பார்த்து, குரு பகவான் ரூபமாய் உள்ளது!
ஆலயம் = கிழக்கு பார்த்து உள்ளது, இந்திர மூலை!
பெருமாளின் காலடியில் சந்திர கலை = சோதிடத்தில் சந்திர தோஷப் பரிகாரத் தலம்!
இப்படிப் பல பொருத்தங்கள் கச்சிதமாய் அமைந்து விட்டன.

சிவ = ஈசானன்
சுரேஷ = இந்திரன் (சுரர்களின்/தேவர்களின் ஈசன் = சுரேஷன்)
க்ருசானு =அக்னி
தர்ம ரக்ஷோ = யம தர்ம ராஜன்
அம்பு நாத = வருண தேவன் (அம்பு/அப்பு=நீர்)
பவமான = வாயு தேவன்
தனாதி நாதா = தனங்களின் தலைவன், குபேரன்

இந்திரன் = கிழக்கு
அக்னி = தென் கிழக்கு
யமன் = தெற்கு
நிருதி = தென் மேற்கு
வருணன் = மேற்கு
வாயு = வட மேற்கு
குபேரன் = வடக்கு
ஈசானன் = வட கிழக்கு

இப்படி எண் திசைக் காவலர்களும் நிற்கிறார்கள். ஆலயத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இந்த எட்டு பேருக்கும் அந்தந்த திசையில் பலி பீடங்கள் உள்ளன. சுவாமிக்கு நிவேதனம் செய்த பின்னர், இந்த அஷ்ட திக் பாலகருக்கும் அன்ன பலி சார்த்தப்படுகிறது! ஒவ்வொரு வீதியுலாவின் போதும் பெருமாள் அந்தந்த திசைகளில் (மொத்தம் எட்டு இடத்தில்) நிற்பார். அப்போது அவர்களுக்கும் சேர்த்தே ஆரத்தி காட்டப்படுகிறது! - இப்படி தன் பரிவாரங்களையும் அன்போடு அரவணைத்து நடத்தும் பேரரசனாக விளங்குகிறார் மலையப்பன்!

பத்தாஞ்ஜலி = கூப்பிய கரங்களை எடுக்காது, கூப்பியபடியே, அஞ்சலி செய்து கொண்டு
ப்ரவிலசந் = மிகவும் ஆனந்தமாக
நிஐ சீர்ஷ தேசா = பெருமைக்குரிய திசை/தேச அதிபதிகள் உன்னைச் சேவித்து மகிழக் காத்துள்ளனர். திசைகள் மட்டுமா சேவிக்கின்றன? நாட்டின் பலப்பல திசைகளில் இருந்து பல தரப்பட்ட மக்களும் அல்லவா குவிகிறார்கள், அவனின் திருமேனியைப் பருகவும், தரிசன செளபாக்கியத்தில் உருகவும் சதா சர்வ காலமும் வந்து கொண்டே இருக்கிறார்களே!
பஞ்சாபிலும் இருந்து வருவார்கள், அசாமிலும் இருந்து வருவார்கள்!
காஷ்மீரம், தில்லி என்று வடக்கும், கல்லிடைக்குறிச்சி தெற்கும் சமன்படும் இடம் அல்லவா திருமலை! வடக்கும் வாழ்கிறது; தெற்கும் வாழ்கிறது!!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!


காதல் மடப் பிடியோடு
களிறு வருவன கண்டேன்
கஜ நடை!




தாடீஷூதே விஹக ராஜ மிருகாதி ராஜ
நாகாதி ராஜ கஜ ராஜ ஹயாதி ராஜா
ஸ்வஸ்வ அதிகார மஹி மாதிகம் அர்தயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

தாடீ ஷூதே = கோவிலின் வழித் தடத்தில் (ராஜ வீதிகளில்)
திசைக் காவலர்கள் போலவே, ஒவ்வொரு உயிரினத்தின் தலைமையும் அல்லவா தலைவனை வழிபடுகிறது!

விஹக ராஜ = பட்சி ராஜனாகிய கருடன்
மிருகாதி ராஜ = மிருக ராஜனாகிய சிங்கம்
நாகாதி ராஜ = நாக ராஜனாகிய சேஷன்
கஜ ராஜ = கஜ ராஜனாகிய கஜேந்திரன் (ஐராவதம்)
ஹயாதி ராஜ = குதிரை ராஜனாகிய உச்சைசிரவஸ்

இந்த ஐந்தும் பிரம்மோற்சவத்தில் வாகனங்களும் கூட!
பொதுவாக நடை அழகு, வடை அழகு, குடை அழகு என்பார்கள்!
திருவரங்கத்தில் நடை அழகும், திருப்பதியில் வடை அழகும், காஞ்சிபுரத்தில் குடை அழகும் பிரசித்தம்!

அது என்ன நடை அழகு?
சுவாமியை வாகனத்தில் எழுந்தருளப் பண்ணி, அவனைச் சுமந்து வருவோர்க்கு ஸ்ரீபாதம் தாங்கிகள் என்று பெயர்! இவர்கள் அந்தணர் குலம் மட்டும் அலலாது, பல குலமும் சேர்ந்தவர்கள்.

இவர்கள் பாதங்களை வீதிகளில் பெண்கள் நீரூற்றுவார்கள்! மலர் இடுவார்கள்!
திருவரங்கத்தில் இராமானுசர் கட்டளைப்படி, அர்ச்சகர் இவர்கள் அனைவரையும் வணங்கி, மாலை பரிவட்ட மரியாதைகள் செய்ய வேண்டும்! - இப்படியாக, பெருமாள் கோவில்களில் சாதிப் பாகுபாடுகள் என்பது காண்தலே அரிது!

இவ்வாறு பெருமாளைத் தூக்கி வரும் போது, ஒவ்வொரு சமயத்துக்கும் ஒரு நடை உள்ளது. அதற்கு ஏற்றாற் போல் தமிழ்ப் பாடல்களும், ராகங்களும் உள்ளன! அதை நாதசுரத்தில் வாசிக்கும் போது, அதுவும் மல்லாரியாக வாசிக்கும் போது, நாத்திகனும் நடனம் ஆடுவான்! அப்படி ஒரு இசை!

கருட சேவையின் போதும், ஆஸ்தானத்தின் போதும் கருட நடை - கருடத்வனி ராகம்! அப்படியே தொம் தொம் தொம்மென்று குதித்து பறப்பது போலவே இருக்கும்! மாலை ஆட, மலை ஆட, குடை ஆட, குணவன் ஆட.....அழகோ அழகு!
சுவாமிக்கும் தாயாருக்கும் நடக்கும் மட்டையடி ஊடல் சண்டையில் - சர்ப்ப நடை. பாம்பு ஊர்வது போல் சத்தமே இல்லாமல் போவான் கள்ளன்!

சித்திரை விழாக்களில் கம்பீரச் சிம்ம நடை! சிங்க நடை போட்டு, திருமலைச் சிகரத்தில் ஏறு!
மாலை உலாக்களில் கஜ நடை! எதையும் லேசாக எடுத்துக் கொள்ளும் யானையின் ஒய்யாரம்!
தேரின் போது அஸ்வ (குதிரை) நடை! ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்பது போல் டொக் டொக் என்று துள்ளல் நடை.


உன்றன் இந்த நடையழகைக் கண்டு, உன்னை உற்சவத்தில் அழகாகத் தூக்கிச் செல்லும் உரிமையை இன்னும் இன்னும் வேண்டுகிறார்கள்!

ஸ்வஸ்வ அதிகார = தங்கள் தங்கள் அதிகாரம், உரிமையை
மஹிமா அதிகம் = அதன் மகிமை அறிந்து, இன்னும் அதிகமாக
அர்தயந்தே = விரும்புகிறார்கள்
பட்சி, நாக, சிம்ம, கஜ, அஸ்வ ராஜர்கள்!
சிங்கத்துக்குத் தன் நடையே மறந்து போய், உன் நடையில் தன் நடையைக் கற்றுக் கொள்ள வந்துள்ளது! அதே போலத் தான் மற்ற மிருகங்களும்!
இப்படி நாலறிவு ஐந்தறிவு மிருகமெல்லாம் உன் வழி நடக்க முனையும் போது,
ஆறறிவு மனிதன் என்று தான் உன் வழியில் நடக்க கற்றுக்கொள்வானோ? - கருணை செய்யடா, கார்முகில் வண்ணா!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

11 comments:

இலவசக்கொத்தனார் said...

//கல்லிடைக்குறிச்சி தெற்கும் சமன்படும் இடம் அல்லவா திருமலை! //

அண்ணா, இப்படி ஒரு அருமையான பதிவில் எங்கள் ஊரையும் நினைவு கூர்ந்து பெருமை சேர்த்துவிட்டீர்களே. நன்றி அண்ணா நன்றி. :)

துளசி கோபால் said...

நடையழகும், வாஸ்துவும் கன கச்சிதம்.

எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு. இந்த வாஸ்துன்றது
பூலோகம் முழுக்க ஒரே மாதிரியா? இல்லை பூமத்திய ரேகைக்கு
வடக்கே ஒரு விதம் தெற்கே ஒரு விதமுன்னு வருமா?

புள்ளையார் சதுர்த்திக்கு வாழ்த்து(க்)கள். பிரம்மோத்ஸவ ஆரம்பத்துக்கும்
வாழ்த்து(க்)கள்தான்.

குமரன் (Kumaran) said...

எளிமையாக இரண்டு பாடல்களுக்கும் தகுந்த முறையில் விளக்கம் சொல்லியிருக்கிறீர்கள் இரவிசங்கர்.

எண்திசைக்காவலர்கள் சேவை செய்வதே பிறவி எடுத்ததன் பயன் என்று எண்ணம் கொண்டு வந்திருக்கின்றனர். அவர்கள் கூப்பிய கரங்களை நீக்காது கூப்பியபடியே வருகிறார்கள் என்பது எவ்வளவு பொருத்தம்.

பறவை அரசன், விலங்குகளின் அரசன், பாம்பரசன், யானையரசன், குதிரை அரசன் இவர்கள் எல்லாம் இன்னும் தங்கள் கூட்டங்களின் மேல் தங்களுக்கு இருக்கும் அதிகாரங்களும் தங்கள் பெருமைகளும் கூட வேண்டும் என்று வேண்டுகிறார்கள். இவர்கள் நித்யசூரிகளாக இருக்க முடியாது.

இப்படி சேவையையே ஒரே நோக்கமாகக் கொண்டவர்களும் ஒன்றை வேண்டி அர்த்தித்து வந்தவர்களும் என்று எல்லோரும் திருமலைக்கு வருகிறார்கள். குறையொன்றும் இல்லாத கோவிந்தன் அவர்கள் வேண்டியதை எல்லாம் வழங்கிக் கொண்டிருக்கிறான்.

குமரன் (Kumaran) said...

ஆர்த்தி, அர்த்தார்த்தி, ஜிக்ஞாஸு, ஞானி என்று நால்வகையினர் தன்னை வணங்குவதாகக் கீதையில் கண்ணன் சொல்கிறான். துன்பத்தில் துவண்டவர் (ஆர்த்தி), பொருளை விரும்புபவர் (அர்த்த ஆர்த்தி), முக்தியை விரும்புபவர் (ஜிக்ஞாஸு), உயர்ந்த நோக்கம் கொண்டவர் (ஞானி) என்று இவர்கள் நால்வரும் தன்னை வணங்க அவரவர் வேண்டுவதை அவரவர்களுக்கு அருள்கிறேன் என்றும் சொல்கிறான். இவர்களில் ஞானியையும் அர்த்தார்த்தியையும் இந்த இருபாடல்களில் காண்கிறோம்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இவர்களில் ஞானியையும் அர்த்தார்த்தியையும் இந்த இருபாடல்களில் காண்கிறோம்//

அருமை!

பத்தாஞ்சலி செய்வதால் எண்டிசைக் காவலர்கள் = ஞானிகள் வகை

தங்கள் அதிகாரம் பெருக வேண்டுவதால் பட்சி முதலான ராஜர்கள் = அர்த்த ஆர்த்தி வகை

சரி தானே குமரன்?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//துளசி கோபால் said...
நடையழகும், வாஸ்துவும் கன கச்சிதம்.

எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு. இந்த வாஸ்துன்றது
பூலோகம் முழுக்க ஒரே மாதிரியா? இல்லை பூமத்திய ரேகைக்கு
வடக்கே ஒரு விதம் தெற்கே ஒரு விதமுன்னு வருமா?//

டீச்சர்...
எனக்கும் வாஸ்துவுக்கு ரொம்ப தூரம்...திசை மற்றும் ஆன்மீக சம்பந்தமா வாஸ்து புருஷன் பற்றிக் கொஞ்சம் கேள்வி; அவ்ளோ தான்!இருப்பினும் டீச்சருக்காகத் தேடியதில் கிட்டியது!

Q: Are Vastu principles uniform throughout the world?
A: The principles of Vastu are based on energy flow and the distribution of elements. These factors are uniform throughout the world. However, in different geographical locations the building could be designed t accommodate various climatic conditions while preserving good vastu.
For example, if you are living in the Northern hemisphere, far away from the equator, a Northeast front entrance door can be exchanged for a wide glass window to avoid the cold Northeasterly winds.

Q: What is the earths polarity and how does it affect Vaastu?
A: There is no reference in any Vaastu text linking its principles to the earths magnetism. Vaastu is purely based on the interrelationship of planetary forces and their elemental principles. Hence Vaastu principles do not change with the change in earths polarity.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இலவசக்கொத்தனார் said...
//கல்லிடைக்குறிச்சி தெற்கும் சமன்படும் இடம் அல்லவா திருமலை! //

அண்ணா, இப்படி ஒரு அருமையான பதிவில் எங்கள் ஊரையும் நினைவு கூர்ந்து பெருமை சேர்த்துவிட்டீர்களே. நன்றி அண்ணா நன்றி. :)//

மறுபடியும் அண்ணாவா?
OMG Gimme a break! :-)

மெளலி (மதுரையம்பதி) said...

ஆகா!, அண்ணா (நன்றி இ.கொ) எனக்கு நிறைய வேலை இருக்கும் போல இருக்கே....(இந்த மாதிரி பாடல், அர்த்தம், அதனை இணைத்து எழுதுதல் என்று).

வாஸ்து விளக்கம் அருமை. நடையழகில் மோகினி அலங்காரத்தை விட்டுட்ட மாதிரி இருக்கே?....

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையம்பதி said...
ஆகா!, அண்ணா (நன்றி இ.கொ)//

போச்சுது! நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா மெளலி!

//எனக்கு நிறைய வேலை இருக்கும் போல இருக்கே....(இந்த மாதிரி பாடல், அர்த்தம், அதனை இணைத்து எழுதுதல் என்று)//

ஆமா...அம்பாளின் செளந்தர்யம் தன்னை லேசாக மட்டும் சொல்லி விட்டுப் போக முடியுமா என்ன? :-))

//நடையழகில் மோகினி அலங்காரத்தை விட்டுட்ட மாதிரி இருக்கே?....//

மோகினிக்கு இப்பல்லாம் சர்ப்ப நடை பயன்படுத்துகிறார்கள் மெளலி...மோகினி-ன்னு தனியா நடை இல்லை! ஹம்ச நடை ஒரு சில ஆலயங்களில் உண்டு. தூக்குபவர்கள் எல்லாம் ஆண்கள் அல்லவா - அதான் அன்ன நடை அவ்வளவா வரல போல! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையம்பதி said...
ஆகா!, அண்ணா (நன்றி இ.கொ)//

போச்சுது! நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா மெளலி!

//எனக்கு நிறைய வேலை இருக்கும் போல இருக்கே....(இந்த மாதிரி பாடல், அர்த்தம், அதனை இணைத்து எழுதுதல் என்று)//

ஆமா...அம்பாளின் செளந்தர்யம் தன்னை லேசாக மட்டும் சொல்லி விட்டுப் போக முடியுமா என்ன? :-))

//நடையழகில் மோகினி அலங்காரத்தை விட்டுட்ட மாதிரி இருக்கே?....//

மோகினிக்கு இப்பல்லாம் சர்ப்ப நடை பயன்படுத்துகிறார்கள் மெளலி...மோகினி-ன்னு தனியா நடை இல்லை! ஹம்ச நடை ஒரு சில ஆலயங்களில் உண்டு. தூக்குபவர்கள் எல்லாம் ஆண்கள் அல்லவா - அதான் அன்ன நடை அவ்வளவா வரல போல! :-)

மெளலி (மதுரையம்பதி) said...

//தூக்குபவர்கள் எல்லாம் ஆண்கள் அல்லவா - அதான் அன்ன நடை அவ்வளவா வரல போல! :-)//

அதிலும் பெருமாள் பிரசாதங்களை, குறிப்பாக புளியோதரை உண்ட குண்டர்களால் எப்படி முடியும் :-)

சுப்ரபாதம் (தமிழில்):

ஒலிச் சுட்டிகள்!

முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் - நித்ய ஸ்ரீ பாடுவது (Windows Media Player)

நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com
Pics: tirumala-tirupati.com

சுப்ரபாதம் (மூலம்):

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP