Friday, September 28, 2007

சுப்ரபாதம்(18) - வைணவத்தில் நவக்கிரகங்கள் ஏன் இல்லை?

பெரும்பாலான வைணவ ஆலயங்களில் நவக்கிரக சன்னிதி என்று தனியாக ஒன்று இருக்காது! சிவன் கோயில்களில் இருப்பது போல் நவக்கிரகங்களைச் சுற்றி வர முடியாது! அது ஏன் என்று யோசிச்சி இருக்கீங்களா?
ஒரு வேளை சந்திரனில்-செவ்வாயில் எல்லாம் மனிதன் கால் வைக்கப் போகிறான் என்று முன்னரே தெரிந்து விட்டதா வைணவம் வளர்த்தவர்களுக்கு? :-)

இன்னிக்கி சுப்ரபாதம் நவக்கிரகம் பற்றித் தான்! பார்க்கலாம், வாங்க!





(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)





சூர்யேந்து பெளம புத வாக்பதி காவ்ய செளரி
ச்வர்பானு கேது திவிஷத் பரிஷத் ப்ரதானா
த்வத் தாச தாச சரமாவதி தாச தாசா
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்

நவக்கிரகங்கள் = ஒன்பது கோள்கள் முதலில் பட்டியல் போடுறாங்க
சூர்ய = சூர்யன் (ஞாயிறு)
இந்து = சந்திரன் (திங்கள்)
பெளம = செவ்வாய்
புத = புதன்
வாக்பதி = வாக்குக்கு அதிபதி பிரகஸ்பதி; அதாவது குரு (வியாழன்)
காவ்ய = காவியக் கவிதை வல்லுநர்; அதாவது சுக்கிரன் (வெள்ளி)
செளரி = சனி பகவான்
ச்வர்பானு = ராகு
கேது = கேது

திருமலையில் பெருமாளின் காலடியில் சந்திர கலை உள்ளது = சோதிடத்தில் சந்திர தோஷப் பரிகாரத் தலமாகத் திருப்பதி விளங்குகிறது!

பொதுவாக வைணவ ஆலயங்களில், நவக்கிரகங்களுக்குத் தனியாகச் சன்னிதி கிடையாது! (மதுரை கூடலழகர் ஆலயம், மற்றும் சில ஆலயங்கள் தவிர); இதனால் பெருமாள் கோவில்களில் நவக்கிரகங்களுக்கு மதிப்பில்லை என்று பொருளாகி விடாது! அங்கும் நவக்கிரகங்களைக் குறித்து பூசைகள் - பஞ்சாங்க ஸ்ரவணம், ஹோமம் எல்லாம் உண்டு தான்! சுதர்சனம் என்னும் சக்கரத்தாழ்வார் பூசையிலேயே நவக்கிரகங்களும் இடம் பெற்று விடும்!

வைணவத்தில் தாயாருக்கும் பெருமாளுக்கும் மட்டுமே பெரும் இடம் தரப்பட்டிருக்கும்!
பரிவார தேவதைகள், நித்ய சூரிகள் - இவர்களுக்கு எல்லாம் தனியாகச் சன்னிதி கிடையாது! இவர்கள் எல்லாம் பெருமாளின் இடத்திலேயே இருந்து கொண்டு, அவரை அரூபியாகச் சேவித்து இருப்பதாக ஐதீகம்! அவ்வளவு ஏன்? படைத்தலைவர் விஷ்வக்சேனர் (சேனை முதலியார்) க்குக் கூட எத்தனை ஆலயங்களில் தனியாகச் சன்னிதி இருக்கு?

ஆனால் அடியார்களுக்கும், ஆழ்வார் ஆசார்யர்களுக்கு மட்டும் சன்னிதி இருக்கும்! - இதுவே அடியவர் பெருமை!
பெருமாளின் அதிகாரிகளைக் காட்டிலும் அடியவர்களுக்கே களம் அமைத்துத் தரப்படுகிறது! ஏன்?
அதிகாரிகளை முன்னிறுத்தினால் சக்தியும் வலுவும் முன்னிறுத்தப்படும்! அடியவரை முன்னிறுத்தினால் அன்பும் பக்தியும் தானே வளரும்! - அதனால் தான் இது போன்றதொரு அமைப்பு!
பெருமாள் ஆலயங்களின் அமைப்பு ஒரு குடும்பம் வாழும் வீட்டைப் போன்றது! அங்கே தாய் தந்தை குழந்தைகளைத் தான் பிரதானமாகப் பார்க்கலாம்!

நவக்கிரகங்களும் இறைவனின் அதிகாரிகள்; அவரவர் கர்ம பலனை வழங்கும் அதிகாரிகள்!
அவர்களுக்கு உண்டான மரியாதையும், மதிப்பும், பூசனையும் உண்டு! ஆனால் வெளிப்படையாக முன்னிறுத்தப்படுவதில்லை! அவர்களுக்கும் சேர்த்து அவர்களையும் ஆண்டளக்கும் பெருமாளே முன்னிறுத்தப்படுகிறார்.
அவர் உருவத்திலேயே, இவர்களும் அடங்கி விடுகிறார்கள்! அவதாரங்களில் கூட, நவக்கிரக அம்சங்கள் உண்டு!
சூர்யன் = இராமன்
சந்திரன் = கண்ணன்
செவ்வாய் = நரசிம்மர்
புதன் = கல்கி
வியாழன் = வாமானர்
வெள்ளி = பரசுராமர்
சனி = கூர்மம்
ராகு = வராகம்
கேது = மச்சம்

அதே போல், 108 திவ்யதேசங்களில், ஒன்பது திவ்யதேசங்கள், நவக்கிரகத் தலங்களாகச் சொல்லப்படுகின்றன (திருநெல்வேலி-தூத்துக்குடியைச் சுற்றியுள்ள நவ திருப்பதிகள்)
சூர்யன் = திருவைகுண்டம்
சந்திரன் = திருவரகுணமங்கை
செவ்வாய் = திருக்கோளூர்
புதன் = திருப்புளிங்குடி
வியாழன் = திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி)
வெள்ளி = திருப்பேறை
சனி = திருக்குளந்தை
ராகு = திருத்துலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி)
கேது =திருத்துலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி)

சிவாலயங்கள் தவிர்த்து, அறுபடை வீடுகளில் கூட நவக்கிரகங்களுக்குத் தனிச் சன்னிதி இல்லை என்றே எண்ணுகிறேன்! முருக நல்லன்பர்களிடமும், சைவச் செல்வர்களிடமும் கேட்டறிய வேண்டும்.





திவிஷத் பரிஷத் = தேவர்கள் கூட்டத்துக்கே
ப்ரதானா = முக்கியமாய், (அவர்களையே அடக்கும் சக்தி வாய்ந்த நவக்கிரகங்கள்)


தேவர்கள் கூட்டத்தில் ஒரு பகுதியாய் நவக்கிரகங்கள் இருந்தாலும், அவர்கள் பணி நிமித்தம் அந்த மாதிரி! கர்ம பலன்களைக் கொண்டு சென்று சேர்க்கும் அதிகாரிகளாக இருப்பதால் அவர்களுக்குப் பாரபட்சம் கிடையாது.
தேவர்களையே அடக்கும் வல்லமை பெற்றவர்கள். அதே சமயம், அசுரர்கள் எதிரிகளாக இருப்பதால், அவர்களுக்குப் பாரபட்சம் எல்லாம் காட்ட மாட்டார்கள் இந்த ஒன்பது பேரும்!

அப்பேர்பட்ட நவக்கிரகங்கள்,
த்வத் தாச தாச = உன்னுடைய அடியார்க்கு அடியார்களிடம்
சரமாவதி தாச தாசா = அடியார்களாக இருந்து சேவை செய்கிறார்கள்

இங்கு தான் அடியார்களின் பெருமை மின்னுகிறது!
இறைவனுக்குத் தானே அடியார்கள்? அடியார்களுக்கே எப்படி அடியார் இருப்பார்கள்?
அதாவது பழுத்த தொண்டர்கள், இறைவனைச் சக தொண்டர்களிட"மும்" காண்பது!
அப்படிக் காண்பதால் அடியார்க்கு அடியார் ஆவது! தொண்டர் அடிப்பொடி!
கைங்கர்யம் என்னும் திருத்தொண்டில், தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!

ஒருவர் நம்மை விட கொஞ்சம் அதிக செல்வம் வைத்திருந்தால் கொஞ்சமாச்சும் பொறாமை வரும்! வெளிக் காட்டிக் கொள்வதும், காட்டாததும் அவரவர் மனோநிலையைப் பொருத்தது!கல்விச் செல்வம், பொருட் செல்வம் மட்டுமில்லை...சாதாரண பின்னூட்டச் செல்வம் வரை இந்தப் பொறாமை பாயும் சக்தி பெற்றது! :-)))
இது பக்தியில் கூட உண்டு! - பொ
றாமை என்று இல்லாவிட்டாலும் உயர்ந்த பக்தி, தாழ்ந்த பக்தி என்றெல்லாம் தரம் பிரித்துப் பேச முற்படும்!
அடியார் கூட்டங்களில் அனைவரும் ஒன்றாகக் கூடி இறைவனைத் தொழும் போது, மற்றவர்களையும் பார்க்கிறோமே! நாம் மட்டும் தனியாகத் தொழ முடியாதே! கூடியிருந்து குளிர வேண்டுமே - என்ன செய்வது?

அப்போது சக அடியார்களைப் பார்த்து இது துளிர் விட்டால்? மனித குணம் தானே!
அதனால் தான் அடியார்க்கு அடியார் ஆக வேண்டும் என்பது!

சக அடியார்களிடமும் ஆண்டவனைக் காண்பது. அடியார்க்கு அடியவராகி விட்டால் பொறாமை தலை தூக்காது. அன்பு தான் தலை தூக்கும்!
அன்பு தலை தூக்கினால் தான் உள்ளத்தில் பக்தி வளரும்!
துவேஷம் தலை தூக்கினால் யுக்தி தான் வளருமே ஒழிய பக்தி வளராது!
பெருமாளைப் பார்த்து, அடியார்களாகிய நாம் பொறாமைப் படுகிறோமா? இல்லையே!

அது போலத் தான் அடியார்களைப் பார்த்து, அடியார்க்கு அடியார்களும்!

இறைவரோ தொண்டர் தம் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!

இப்படி இறைவனே தொண்டர்களின் உள்ளத்தில் ஒடுங்கி விடுவதால், தொண்டர்களுக்குத் தொண்டர்கள் ஆகின்றன நவக்கிரகங்கள்.
சரமாவதி தாஸ்யம் என்பார்கள்; அதனால் தான் சரமாவதி தாச தாசா என்கிறது ஸ்லோகம்.
நவக்கிரகங்களும் அடியார்களின் கர்ம பலனைக் கொடுக்கும் போதும், அவர்களின் பற்றற்ற நிலையினைப் பார்த்து, "பரிவுடனே" கொடுக்கின்றன!
எப்படிக் கொடுக்கின்றன? - சரமாவதி தாச தாசா என்று கொடுக்கின்றன.
ஒரு தாசன் எப்படிப் பணிந்து பக்தியுடன் கொடுப்பானோ, அப்படிக் கொடுக்கின்றன!
அடியார்க்கு அடியாராய், அவை நல்ல நல்ல நல்ல, என்று கொடுக்கின்றன!

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

என்ற சம்பந்தரின் கோளறு பதிகத்தையும், இந்த சுப்ரபாத ஸ்லோகத்தோடு எண்ணிப் பாருங்கள்!


ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

15 comments:

குமரன் (Kumaran) said...

மிக மிக அருமை இரவிசங்கர்.

நவகிரகங்கள் ஏன் வைணவ ஆலயங்களில் இல்லை என்பதையும் அடியார் தம் பெருமையும் அடியார் தம் அடியார் தம் அடியோங்களே என்று ஆழ்வார்கள் பாடியதையும் நன்கு சொல்லியிருக்கிறீர்கள்.

மெளலி (மதுரையம்பதி) said...

இன்று புரட்டாசி சனிக்கிழமை சிறப்புப் பதிவு போல் அமைந்துள்ளது.

எனக்கு இன்று பெருமாள் பதிவில்தான் காலை ஆரம்பித்துள்ளது. இனிமேல்தான் திருவாராதனமெல்லாம்...நன்றி கே.ஆர்.எஸ்

துளசி கோபால் said...

நம்ம மதுரை கூடலழகர் கோயிலில் நவகிரகங்கள் இருக்கு. அதுவும் இன்னொரு தனிச்சிறப்புதான்.

Expatguru said...

That was some really good information you provided.

உண்மைத்தமிழன் said...

ரவிசங்கர் பக்தி இலக்கியங்களில் உள்ள விஷயங்களைப் பற்றி உங்களது பதிவுகளில் அவ்வப்போது படித்துத் தெளிந்து வருகிறேன்..

தொடரட்டும் உமது பணி..

சக்கரத்தாழ்வாருக்கு தனி சன்னதி உண்டு என்று படித்திருக்கிறேன்..

இப்போது இதைப் படித்த பிறகுதான் பெருமாள் கோவில்களில் அதிகம் காணப்படாத நவக்கிரகங்கள் பற்றித் தெரிகிறது.

எவ்வளவு வித்தியாசங்களும், வேறுபாடுகளும் பக்தியில் இருந்தாலும், அது ஒவ்வொன்றிற்கும் ஒரு காரணம் கிடைக்கிறது பாருங்கள்.. அதுதான் பக்தி பெருமளவு நம்மை ஆட் கொண்டமைக்கு காரணம்..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
நவகிரகங்கள் ஏன் வைணவ ஆலயங்களில் இல்லை என்பதையும் அடியார் தம் பெருமையும் அடியார் தம் அடியார் தம் அடியோங்களே என்று ஆழ்வார்கள் பாடியதையும் நன்கு சொல்லியிருக்கிறீர்கள்.//

நன்றி குமரன்
ஜிரா இன்னொன்றையும் சொல்லச் சொன்னாரு. நவக்கிரக வழிபாடு எல்லாம் சோதிடம் பரவி பிற்காலத்தில் வந்தது தான் என்று!

ஆனா பிற்காலமோ, முற்காலமோ...இப்ப கோவில் கட்டினாக் கூட வைணவ ஆலயத்தில் நவக்கிரகம் வைக்கிறது இல்லங்கிறது தான் உண்மை!

இந்த வார சுப்ரபாதம் போட முடியலை! பாஸ்டன் போகும் வேலை இருக்கு! அடுத்த வாரம் தட்டாம போடுகிறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையம்பதி said...
எனக்கு இன்று பெருமாள் பதிவில்தான் காலை ஆரம்பித்துள்ளது. இனிமேல்தான் திருவாராதனமெல்லாம்//

நன்றி மெளலி.
ஒவ்வொரு சனிக்கிழமையும் தொடர்ந்து இடணும்னு தான் "குமர கட்டளை" :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//துளசி கோபால் said...
நம்ம மதுரை கூடலழகர் கோயிலில் நவகிரகங்கள் இருக்கு. அதுவும் இன்னொரு தனிச்சிறப்புதான்//

ஆமாங்க டீச்சர்! குமரன் சொந்த ஊரு! அவரைக் கேட்டாக்கா அத பத்தி இன்னும் சொல்லுவாரு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Expatguru said...
That was some really good information you provided.//

Thanks Expatguru. Watch out for more :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ரவிசங்கர் பக்தி இலக்கியங்களில் உள்ள விஷயங்களைப் பற்றி உங்களது பதிவுகளில் அவ்வப்போது படித்துத் தெளிந்து வருகிறேன்..
தொடரட்டும் உமது பணி..//

நன்றி உண்மைத் தமிழன்.
பக்தி இலக்கியங்கள் வெறும் உணர்ச்சிக் குவியல் மட்டுமல்ல!
இன்றைய காலகட்டத்தில் அன்பும் கோபமும் கூட தேவைக்கேற்ப ஷோ பிசினசாகிப் போகுதோ என்ற ஐயம் வரலாம்!

ஆனால் பக்தி இலக்கியங்கள், தன் முனைப்பைச் சற்றே பின்னுக்குத் தள்ளி, சக மனிதரிடம் அன்பை முந்துவதாக இருக்கும்!

//எவ்வளவு வித்தியாசங்களும், வேறுபாடுகளும் பக்தியில் இருந்தாலும், அது ஒவ்வொன்றிற்கும் ஒரு காரணம் கிடைக்கிறது பாருங்கள்.. அதுதான் பக்தி பெருமளவு நம்மை ஆட் கொண்டமைக்கு காரணம்..//

மிகவும் உண்மை!
வேற்றுமையில் தான் ஒற்றுமையும், அவரவர் மனோநிலைக்கு ஏற்ற ஒரு வடிகாலும் இவை அமைத்துக் கொடுக்கின்றன!

குமரன் (Kumaran) said...

எனக்குத் தெரிஞ்சு எங்க ஊருல ரெண்டு பெருமாள் கோவில்கள்ல நவகிரக சன்னிதி இருக்கிறது. ஒன்று பல்லாண்டு பாடப்பெற்ற திவ்ய தேசமான கூடல் அழகர் பெருமாள் கோவில். இன்னொன்று அதற்கு அருகிலேயே இருக்கும் தெற்கு கிருஷ்ணன் கோவில்.

இந்த ரெண்டு பெருமாள் கோவிலுக்குத் தான் சின்ன வயசுல இருந்து ரொம்ப தடவை போயிருக்கேன். அதனால கல்லூரிக் காலம் வரை பெருமாள் கோவில்கள்ல நவகிரக சன்னிதி இருக்காதுன்னு தெரியாது.

வல்லிசிம்ஹன் said...

முகுந்த மாலைதான் ஞாபகத்திற்கு வருகிறது ரவி.
பெருமாளையேச் சரணாக அடைந்த பிறகு,
மற்றவர்கள் இடம் அடிமைப் படவேண்டாம் என்று சொல்வது வைண்வப்பெருமை. பிற்காலத்தில்தான் வந்தது என்றாலும்,கிரகங்கள் ஆளுமையும் தெரிந்ததுதான்.
சூர்யேந்து பௌம புத என்று சொல்லி வணங்கும்போது இந்தப் பயத்திலிருந்தும் விடுபடலாம். நம்பிக்கை வலுவேற்றும் சுப்ரபாதம் ,
புரட்டடசிசனிக்கிழமை படிக்கக் கொடுத்ததற்கு நன்றி ரவி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
எனக்குத் தெரிஞ்சு எங்க ஊருல ரெண்டு பெருமாள் கோவில்கள்ல நவகிரக சன்னிதி இருக்கிறது. ஒன்று பல்லாண்டு பாடப்பெற்ற திவ்ய தேசமான கூடல் அழகர் பெருமாள் கோவில். இன்னொன்று அதற்கு அருகிலேயே இருக்கும் தெற்கு கிருஷ்ணன் கோவில்//

எனக்கும் இப்ப தான் இந்தத் தகவல் தெரியும் குமரன்.

//கல்லூரிக் காலம் வரை பெருமாள் கோவில்கள்ல நவகிரக சன்னிதி இருக்காதுன்னு தெரியாது.//

சின்ன வயசுல நான் சிவன் கோவிலுக்குப் போயிட்டு அப்பறம் பெருமாள் கோவிலுக்குப் போகும் போது, ஏன் இங்க மட்டும் இல்லை-ன்னு இந்த கேள்விய கேட்பேனாம்! ஆனா அப்ப யாருமே எனக்குப் பதில் சொல்லலை! :-(

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
மற்றவர்கள் இடம் அடிமைப் படவேண்டாம் என்று சொல்வது வைண்வப்பெருமை//

அடிமை இல்லை வல்லியம்மா!
கிரகங்களிடம் அவர்கள் கடமையை அவர்கள் செய்யட்டும் என்று இருந்து விட்டுப் போகும் மனப்பான்மை-தான்னு நான் நினைக்கிறேன்!

//சூர்யேந்து பௌம புத என்று சொல்லி வணங்கும்போது இந்தப் பயத்திலிருந்தும் விடுபடலாம்.//

சரியாச் சொன்னீங்க!
பயம் இருக்கும் வரை இப்படி ஒன்று தேவைப்படுகிறது! பயம் போயின பின் இறைவனிடம் நம்பிக்கை வலுவேறுகிறது!

Unknown said...

இப்ப தான் பாத்தேன் இதை. இன்னும் மத்த பதிவு எல்லாம் முழுக்கப் படிக்கணும்...

சூரிய நாராயணனான திருமாலிலேயே நவகிரகங்கள் அடக்கம் என்று (சோதிடத்தில் நம்பிக்கை உள்ள) வைணவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

//பெருமாளையேச் சரணாக அடைந்த பிறகு, மற்றவர்கள் இடம் அடிமைப் படவேண்டாம் என்று சொல்வது வைண்வப்பெருமை// இதையும் என் தோழி ஒருவர் சொல்லியிருக்கிறார்.

நன்றி!!!

சுப்ரபாதம் (தமிழில்):

ஒலிச் சுட்டிகள்!

முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் - நித்ய ஸ்ரீ பாடுவது (Windows Media Player)

நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com
Pics: tirumala-tirupati.com

சுப்ரபாதம் (மூலம்):

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP