Friday, October 26, 2007

சுப்ரபாதம்(21&22) - சரண்யா! சரண்யா!!

என் மனத்துக்கினிய நண்பர் ஒருவர், ஜிடாக்கில் முன்பு ஒரு கேள்வி கேட்டார்: What is the most important place on this earth?
நான் ஏதோ திருப்பதி, திருவரங்கம், திருச்செந்தூர்-னு சொல்லுவேன் எதிர்பார்த்தார் போல! ஆனா, நான் சொன்னேன்! - Home! Home!! Home!!!
Home-இல் மனது வைத்தாலே, Om வந்து விடும்! :-)

நாம் சுயநினைவுடன் பாதி நேரம், வீட்டுக்கு வெளியில் தான் கழிக்கிறோம்!
சுகமோ, துக்கமோ, ஆபிசில் பதவி உயர்வோ, சண்டையோ, நண்பர்/நண்பிகளுடன் கும்மாளமோ,...எதுவாயினும்...எல்லாம் முடித்து வீட்டுக்கு வரும் வேளை!

நம் தெருவுக்குள் நுழைந்ததுமே, ஒரு இனம் புரியாத உணர்வு எழும்! நம் வீட்டூக்குள் நுழைந்ததும் அப்படி ஒரு பாதுகாப்பான உணர்வு! இதை விடப் பாதுகாப்பான இடம் உலகில் வேறெங்கும் இல்லை என்பது போல ஒரு மகிழ்ச்சி!
உலகத்துக்காகக் காலை முதல் போட்ட வேடத்தைக் கலைத்து விட்டு, நாம் நாமாக இருக்கலாம் என்ற நிம்மதி!
நம் வீட்டுக் கட்டாந்தரையில் படுத்தாலும், அன்னை மடியில் படுத்தது போல் ஒரு சுகம்! காற்று வீசி, நம் தலைமுடியைக் கோதுவது போல் ஒரு சுகம்!

"அப்பாடா" என்று நிம்மதியுடன் வீட்டுக்குள் அடங்கும் சுகம்! - இதற்கு நல்லவன் கெட்டவன், பணக்காரன் ஏழை, நாத்திகன் ஆத்திகன், குழந்தை வாலிபன் என்ற பேதமே கிடையாது! எல்லாரும் இதனுள் அடங்கி விடுவர்!
ஒரு சின்னஞ் சிறு குழந்தை, வீட்டுக்கு வழி தெரியாமல் நிற்கும் போது, எப்படிக் கலங்கி போய் நிற்கிறது! அதன் கைப்பிடித்து, அதோ பார் உன் வீடு என்று காட்டினால், துள்ளிக் கொண்டு ஓடாதா?

அதனால் தான் இறைவனை அடைவதையும் வீடுபேறு என்று சொன்னார்கள் முன்னோர்கள்!
வீட்டைப் பெறும் பேறு, பெரும் பேறு! - அதுவே சரண்யா!அது என்ன சரண்யா? சரண்யாவுக்கும், வைணவத் தத்துவமான சரணாகதிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு!!

பெருமாளைச் சரண்யன்-னு சொல்லிக் கூப்பிடுவதில், பக்தர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி!
சர்வ லோக சரண்யன்-ன்னு சொல்லுவாங்க! சரண்யன்-னா என்ன?
சரண் என்பதற்கு வீடு, வழி, உதவி-ன்னு பல பொருள் இருக்கு!
அதையெல்லாம் தாண்டி சரணாகதி என்னும் அடைக்கலம் புகுதல் தான் இன்று அனைவருக்கும் தெரிந்த பொருளாகி விட்டது!

இறைவன் சரண்யன் = ஏன்னா அவனே வீடாக இருக்கிறான்!
இறைவன் சரண்யன் = ஏன்னா அவனே அந்த வீட்டுக்கு வழியாகவும் இருக்கிறான்!
இறைவன் சரண்யன் - ஏன்னா அவனே அந்து வீட்டுக்கு செல்லும் வழியையும் காட்டி நமக்கு உதவி புரிகிறான்!

நானே வழியும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்ற பைபிளின் வேதாகம வசனத்தைக் கேட்டிருப்பீங்க!
தமிழில் ஆற்றுப்படை-ன்னும் கேள்விப்பட்டு இருப்பீங்க! ஆற்றுப்படுத்துதல் என்று சொல்லுவாங்க! அதாச்சும் களைப்பையும் சந்தேகத்தையும் களைந்து, வழிகாட்டுதல்!
பெருமாளுக்கே உரியவன் ஜீவன்!
ஜீவனுக்கே சரண்யன் பரமாத்மா!!

அந்தச் சரண்யனை, இந்த ஜீவன் சரணம் அடையறதே, சரணாகதி!
சரண்யா, நீயே கதி என்பதே சரணாகதி!

இன்றைய சுப்ரபாதத்தில் சரண்யம் பற்றி வருகிறது! மிக மிக எளிமையான சுலோகங்கள்! மனனம் செய்வதற்கும் மிக எளிது!


(இந்த சுலோகத்தைப் படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)ஸ்ரீ பூமி நாயக தயாதி குண அம்ருத ஆப்தே
தேவாதி தேவ ஜகத் ஏக சரண்ய மூர்த்தே
ஸ்ரீமந் அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ பூமி நாயக = ஸ்ரீதேவியான திருமகளுக்கும், பூமிதேவியான மண்மகளுக்கும் நாயகனே!

தயாதி குண = கருணை (தயா) முதலிய சகல கல்யாண குணங்கள்
அம்ருத ஆப்தே = கொண்ட அமுதக் கடலே

திருவேங்கடமுடையான் சன்னிதியில் அவன் தனித்து நிற்பதாகத் தானே நம் கண்களுக்குத் தெரிகிறது? தாயார் சன்னிதியோ கீழ்த் திருப்பதியில் தானே உள்ளது! அப்படி இருக்க, எப்படி இப்படிப் பாடி வைத்தார்கள்?
கவனித்துப் பார்த்தால் தெரியும், அவன் திருமார்பில், ஸ்ரீ-பூமி தேவிகளும் எழுந்தருளி உள்ளார்கள். அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!

தயா தேவியும் உள்ளாள்! யார் இந்த தயா தேவி?

இறைவனின் கருணையை, தயைத் தான் இவ்வாறு உருவகித்துப் பாடுகிறார் வேதாந்த தேசிகர் என்னும் ஆசாரியர்!
இறைவன் எண்ண முடியாத குணங்களைக் கொண்டவன் தான் என்றாலும், அவனுக்குப் பொதுவாக எட்டு குணங்களைச் சொல்லுவார்கள்!

எண்குணத்தான் தாளை வணங்காத் தலை என்று வள்ளுவரும் எண்குணத்தைச் சொல்லுகிறார்!

அந்த எண் குணங்களில் மிகவும் தலையாயது உயிர்களிடத்தில் பரம கருணை; தயை என்ற குணம்! தயா சிந்து என்று மோவாய்க் கட்டையில் உள்ள வடுவைப் பற்றி முன்னர் ஒரு மாதவிப்பந்தல் பதிவில் தான் பார்த்தோமே!
முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பவன் தமிழ்க் கடவுள் முருகன் என்றால்
தன்னை அடித்தாலும், அரவணைத்துக் காப்பவன் தான் தமிழ்க் கடவுள் திருமாலும்!!!
பக்தன் அடித்த வடுவை, மானம் போகுமே என்று மறைத்துக் கொள்ளாது, அன்புக்குச் சாட்சியாக இன்றும் மோவாயில் காட்டிக் கொண்டு நிற்கிறான் இறைவன்!
அதனால் தான் அவன் சிந்தும் தயையை அமுதக் கடல் என்று சொல்கிறார்!

தேவாதி தேவ = தேவாதி தேவனே! இமையோர் தலைவனே!
தேவர்களுக்கும் ஆதி அவன்! ஆதியாய் அநாதியாய் நின்றவன்! தேவர்களையும் கடந்தவன்! அசுரர்களையும் கடந்தவன்! அதனால் தேவ-ஆதிதேவன்!
இந்த சுலோகம் அப்படியே ஆழ்வார் பாசுரம்
திருமகள் தலைவனை, தேவதேவனை
இருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம்!


ஜகத் ஏக "சரண்ய மூர்த்தே = உலகம் முழுமைக்கும் நீ ஒருவனே சரண்யன் (ரட்சகன்)
சரண்யன் என்றால் என்ன-ன்னு முன்னரே பார்த்தோம்! உலகம் முழுமைக்கும் அவன் ஒருவனே சரண்யன்! ஒருவன்"ஏ" என்பதில் அந்த ஏகாரம் மிகவும் முக்கியமானது!
மாம் "ஏகம்" சரணம் வரஜ என்பது தான் கீதை காட்டும் சரம சுலோகம்! - அனைத்துக்கும் அவன் ஒருவனே சரண்யன்!
அசுரருக்கும் அவனே சரண்யன், தேவருக்கும் அவனே சரண்யன்!
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே என்பது வள்ளலார் வாக்கு!


ஸ்ரீமந் = லக்ஷ்மீகரமானவனே
அவன் பெருமையைச் சொல்லணும்னா கூட, அன்னையைத் தான் சொல்ல வேண்டி இருக்கு பாத்தீங்களா?
அழகானவனே-ன்னு சொல்லணும்னா லக்ஷ்மீகரமானவனே சொல்லணும்! கருணை உடையவனே-ன்னு சொல்லணும்னா கூட லக்ஷ்மீகரமானவனே தான் சொல்லணும்!

அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே = அனந்தன், கருடன் முதல் அனைவரும் உன் திருவடிகளை அர்ச்சிக்கிறார்கள்!
அவனை பரமபதம் என்று அழைக்கப்படும் வைகுண்டத்திலே, நித்ய வாசம் செய்யும் நித்ய சூரிகள் எல்லாம் சேவித்து இருக்கிறார்கள்!
அனந்தன் என்ற நாக வடிவானவனும், கருடன் என்ற பறவை வடிவானவனும் ஒருசேர அர்ச்சிக்கிறார்கள்!
இங்கு தான் சூட்சுமம்! நாகமும் கருடனும் ஒன்றொக்கொன்று எதிர் இயல்பு!


ஆனால் எப்படி இருவரும் பரமனுக்குப் பிரியமாய் அவன் திருத்தொண்டில் ஈடுபடுகிறார்கள்?
Pair of Opposites Concept is deeply rooted in Vaishnavite Mysticsm.
நாகன்-கருடன், சக்கரம்(ஒளி)-சங்கு(ஒலி), மனிதன்-மிருகம்...இன்னும் நிறைய எதிரெதிர் நிலைகள், இறைவன் முன்னிலையில் ஒன்றி விடுகின்றன!
அதே போல் தேவர்,அசுரர் பாகுபாடு எல்லாம் இறைவன் முன் நிற்காது! பக்தி ஒன்றே நிற்கும்!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!பெருமாளின் பன்னிரு திருப்பெயர்களில் பல பெயர்கள், அடுத்த சுலோகத்தில் வருகிறது!
கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா
விஷ்ணு, மதுசூதனா, திரிவிக்ரமா, வாமனா
ஸ்ரீதரா, ஹ்ரிஷிகேசா, பத்மாநாபா, தாமோதரா!
- இவையே பன்னிரு திரு நாமங்கள்!ஸ்ரீ பத்மநாப புருஷோத்தம வாசுதேவ
வைகுண்ட மாதவ ஜனார்த்தன சக்ர பாணே
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணாகத பாரிஜாத
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ பத்மநாப = நாபிக் கமலம் (தொப்புள் கொடியில்) தாமரைக் கொடியை உடையவனே, பத்மநாபா!

புருஷோத்தம = புருஷர்களில் உத்தமனே! புருடோத்தமா!
வாசுதேவ = வாசுதேவனே!


பத்மநாபன் = இது படைப்புத் தத்துவம்! இறைவன் தொப்புள் கொடியில் பிரம்மன் தோன்றி, அவன் வாயிலாக உயிர்கள் தோன்றின!
ஆக பெருமாளுக்கும் நமக்கும் தொப்புள் கொடி உறவு!
அந்தி போல் நிறத்தாடையும் அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்
உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்தின் உயிரே
என்பது திருப்பாணாழ்வார் வாக்கு!

புருஷோத்தமன் = ஆண்களில் எவனாச்சும் ஒருத்தன் உத்தமனா? வீட்டில் கேட்டுப் பாருங்க! இல்லைன்னு பதில் ஸ்ட்ராங்கா வரும்! :-) ஒரே ஒருவன் தான் உத்தமன்! யார் அவன்?
ஓங்கி உலகளந்த உத்தமன் - அவனே புருஷோத்தமன்!

வாசுதேவன் = பொதுவாக கண்ணனைத் தான் வாசுதேவ கிருஷ்ணன் என்று அறிவோம்! ஆனால் இந்த வாசுதேவன் என்னும் சொல், அவதாரங்களுக்கு எல்லாம் முனனரே, பரம்பொருளைக் குறிக்கும் சொல்! பரவாசுதேவன் என்று குறிப்பார்கள்!
எங்கும் வியாபித்து வாசம் செய்பவன் வாசுதேவன்!
ஸ்ரீ வாசுதேவ நமோஸ்துதே ஓம் நம இதி-ன்னு விஷ்ணு சகஸ்ரநாமத்திலும் பயின்று வரும்!
செங்கட் கருமேனி வாசு தேவனுடய,
அங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும்,
சங்கரையா. உஞ்செல்வம் சாலவ ழகியதே
- என்று வாசுதேவனை ஆண்டாளும் அழைக்கிறாள்!

வைகுண்ட = வைகுண்ட நாதா
மாதவ = மாதவா
ஜனார்த்தன = ஜனார்த்தனா
சக்ர பாணே = சக்கரத்தை ஏந்தியவனே


ஜனார்த்தன = ஜன + அர்த்தன = ஜனங்களால் தேடப்படும் அர்த்தம்/செல்வம்; அதாவது அனைத்து உலகங்களும் அடைய விரும்பும் ஒரே பொருள்! அதுவே ஜனார்த்தனம்!
சக்ர பாணி = சுதர்சனம் என்னும் சக்கரப் படையை ஏந்தியவனே!

வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு என்று பெரியாழ்வார் சக்கரத்தை வாழ்த்துகிறார்!

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன = ஸ்ரீவத்சம் என்ற மச்சத்தை வல மார்பில் உடையவனே!
பெருமாளின் வலத் திருமார்பில் இருக்கும் மச்சத்துக்கு ஸ்ரீவத்சம் என்று பெயர்! தமிழில் திருமறு!
திருமறு மார்பன்! அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்று சொன்னார்களே? இராமன் குழந்தையாய் இருக்கும் போது, சீதை எப்படி அவனுடன் ஓட்டி இருக்க முடியும்?
அது என்ன சும்மா வாய் வார்த்தைக்குச் சொல்லப்பட்டதா? இல்லையில்லை!

மகாலக்ஷ்மியாகிய திருமகளின் அம்சமாய் என்றும் அவனுடன் ஒட்டி இருப்பது இந்த மச்சம்!
அவதார காலங்களில், குழந்தையாய் இருக்கும் போதும் கூட, அவனுடன் ஒட்டி இருப்பது இந்த திருமறு தான்!

வாமன அவதாரத்தில் இந்த மச்சம் யார் கண்ணிலும் பட்டு விடக் கூடாதே என்று மான்தோலை இழுத்துப் போர்த்திக் கொண்டு வந்தான் வாமனன்!
இப்ப சொல்லுங்க! பெருமாளு மச்சம் உள்ள ஆளு தானே! :-)
அவனை விட்டு ஒரு நொடிப்பொழுதும் பிரியாமல் இருக்கவே இப்படி ஒரு மச்சம்!! நல்ல பொண்டாட்டி, நல்ல புருஷன் போங்க! :-)

சரணாகத பாரிஜாத= சரணம் அடைந்தார்க்கு பாரிஜாத மலர் போல் அருள் பொழிந்து குளிர்விப்பவனே!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

21 comments:

மதுரையம்பதி said...

அருமை என்பதை தவிர வேறு என்ன சொல்ல முடிகிறது.....சரஸ்வதி கடாக்ஷம் பரிபூரணமாக இருக்கிறதய்யா உங்களுக்கு........வாழ்க பல்லாண்டு.

என் முதாதயர்களான பார்க்கவர், ச்யவனர், ஆப்னவானர், ஓளர்வர், ஜமதக்னியர் ஆகிய பஞ்ச ரிஷிகளும் உங்களை வாழ்த்தட்டும்.

VSK said...

சுப்ரபாதம் தொடர்வது மனதுக்கு இதமாக இருக்கிறது.

நன்ரி.

அர்ச்சி தாங்க்ரே எனத்தான் படித்திருக்கிறேன்
'தாங்கரே' என வருகிறது.
விளக்கமுடியுமா/

துளசி கோபால் said...

ஹைய்யோஓஓஓஓஓஓஓ

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//மதுரையம்பதி said...
அருமை என்பதை தவிர வேறு என்ன சொல்ல முடிகிறது.....சரஸ்வதி கடாக்ஷம் பரிபூரணமாக இருக்கிறதய்யா உங்களுக்கு......வாழ்க பல்லாண்டு//

மெளலி...நன்றி என்ற ஒன்று தான் என்னால் சொல்ல முடியும் இப்போதைக்கு! அன்னையின் கடாட்சம் அனைவருக்கும் கிட்ட வேண்டுவோம்!
உங்கள் ஆசிக்கு அடியேன் நன்றிகள்!!

//என் முதாதயர்களான பார்க்கவர், ச்யவனர், ஆப்னவானர், ஓளர்வர், ஜமதக்னியர் ஆகிய பஞ்ச ரிஷிகளும்//

வேண்டுகோள்!
இவர்களை ஒவ்வொருவரா மதுரையம்பதி வலைப்பூவில் சிறு பதிவுகள் இடலாமே!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//VSK said...
சுப்ரபாதம் தொடர்வது மனதுக்கு இதமாக இருக்கிறது.//

நன்றி SK!
இன்னும் 7 சுலோகம் தான் பாக்கி இருக்கு!

//அர்ச்சி தாங்க்ரே எனத்தான் படித்திருக்கிறேன்
'தாங்கரே' என வருகிறது.
விளக்கமுடியுமா/

ஆகா ஒற்றுப் பிழையா?
இருங்க மாற்றுகிறேன்!
அர்ச்சிதாங்க்ரே தான் சரி!
தாங்கரே! பால் தாக்கரே! ன்னு எல்லாம் வம்பு பண்ணாதீங்க! :-))))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//துளசி கோபால் said...
ஹைய்யோஓஓஓஓஓஓஓ//

என்ன டீச்சர்! என்ன ஆச்சு?
ஓஓஓஓஓஓஓஓன்னு சொன்னீங்களா? ஓங்கி அடிப்பேன்-ன்னு சொல்றீங்களோ-ன்னு பயந்துட்டேன்!

மதுரையம்பதி said...

//வேண்டுகோள்!
இவர்களை ஒவ்வொருவரா மதுரையம்பதி வலைப்பூவில் சிறு பதிவுகள் இடலாமே! //

கண்டிப்பாக உங்கள் வேண்டுகோளை நிறைவேற்றுகிறேன் கே.ஆர்.எஸ். ஒவ்வொருவருக்கும் 2-3 பதிவு போடுமளவு விஷயங்கள் குறிப்பெடுத்து வைத்துள்ளேன்.

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர்.

உங்களைக் கேள்வி கேட்ட நண்பர் மனத்திற்கினியவரா? அப்ப இராமபிரானின் பெயரை வைத்துக் கொண்டிருப்பவர் தானே?!

வீடுபேறு என்பதற்குத் தந்த விளக்கம் அருமையும் புதுமையுமாக இருக்கிறது.

இறைவனே வழியாகவும் வழியைக் காட்டுபவனாகவும் வழியில் கைபிடித்து அழைத்துச் செல்பவனாகவும் வழியில் சென்று அடையும் இடமாகவும் இருக்கின்றான் என்ற வைணவ சரணாகதித் தத்துவத்தையும் மிக அழகாகச் சொல்லிவிட்டீர்கள். ஒவ்வொரு முறை இந்த சரணாகதித் தத்துவத்தின் விளக்கத்தைப் படிக்கும் போதெல்லாம் அடியேனுக்குக் கண் முன்னே தோன்றுவது மதுரையில் இருக்கும் ஒரு தேவாலய சுவர்களில் படித்த 'நானே வழியும் ஜீவனுமாக இருக்கிறேன்' என்ற வ்சனம் தான். அதனை நீங்களும் சொல்லியிருப்பதைப் பார்த்து ஒரு புன்னகை தோன்றியது. :-)

பரம்பொருளைப் பற்றி பேசிக் கொண்டு வரும் புருஷசூக்தம் திடீரென்று அந்தப் பரம்பொருளுக்கு திருமகளும் மண்மகளும் மனைவிகள் (ஹ்ரீஸ்ச தே லக்ஷ்மிச்ச பத்ன்யௌ) என்று சொல்லிச் செல்லும். அந்த வரிகள் 21ம் சுலோகத்தின் முதல் பகுதியைப் படிக்கும் போது நினைவிற்கு வருகிறது.

கல்யாண குணங்களான பரத்வம் (உயர்வற உயர்நலம் கொண்டிருத்தல்), விபுத்வம் (எங்கும் நிறைந்திருத்தல்), ஸ்வாமித்வம் (அனைத்தையும் அனைவரையும் உடைமையாகக் கொண்டிருத்தல்), சரண்யத்வம் (எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் அடைக்கலமாக இருத்தல்), வாத்ஸல்யம் (தாயின் பாசம் கொண்டிருத்தல்) போன்ற எத்தனையோ குணங்கள் இருந்தாலும் சௌலப்யமும் (எளிவந்தத் தன்மை - நீர்மை) தயையும் தானே இறைவனின் முதன்மையான கல்யாண குணம். அதனால் அதனை முதலில் சொல்லி 'கருணை முதலிய சகல கல்யாண குணங்கள் என்னும் அமுதங்கள் கொண்ட கடலே என்கிறது இந்த சுலோகம். ஒவ்வொரு குணமும் அமுதமே. அதனால் தானே அவன் ஆராமுதனாக இருக்கிறான்.

தமிழ்க்கடவுள் என்றால் அது திருமுருகன் மட்டும் தானே. மாமனையும் அப்படிச் சொல்லியிருக்கிறீர்களே. உங்கள் மனத்திற்கினிய நண்பர்களில் யாராவது சண்டைக்கு வரப்போகிறார்கள்.

நாராயணனே நமக்கே பறை தருவான் என்று ஆண்டாளும் இரண்டு முறை ஏகாரத்தால் இவன் ஜகத் ஏக சரண்யன் என்று சொல்கிறாளே.

துளசி கோபால் said...

KRS,

இந்தப் பதிவை ராத்திரி மனசுலே 'அசை' போட்டுக்கிட்டு இருந்தப்ப,
'சட்'னு நம்ம கோபால்கிட்டே கேட்டேன், 'மனுஷனுக்கு நிம்மதியைத்தரும் இடம் எது?'ன்னு.

ஒரு வினாடிகூட யோசிக்காம 'வீடு. அவனவனோட வீடு'ன்னு சொன்னார்.

உங்க பதிவுகளை ரகசியமாப் படிக்கறாரோன்னு ஒரு சந்தேகம்:-)))))))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//துளசி கோபால் said...
KRS,
இந்தப் பதிவை ராத்திரி மனசுலே 'அசை' போட்டுக்கிட்டு இருந்தப்ப,//

ஆகா, பதிவை அசை எல்லாம் போடுறீங்களா டீச்சர்?

//'சட்'னு நம்ம கோபால்கிட்டே கேட்டேன், 'மனுஷனுக்கு நிம்மதியைத்தரும் இடம் எது?'ன்னு.
ஒரு வினாடிகூட யோசிக்காம 'வீடு. அவனவனோட வீடு'ன்னு சொன்னார்.//

நச்-சுன்னு சொல்லி இருக்காரு!
கோபால் சாரா? கொக்கா? :-)

//உங்க பதிவுகளை ரகசியமாப் படிக்கறாரோன்னு ஒரு சந்தேகம்:-)))))))//

ஹிஹி!
அடியேன் பதிவுகள் ரகசியமாப் படிக்கக் கூடிய பதிவுகளா என்ன?

ஆனா ஒன்னு நிச்சயம் டீச்சர்,
கோபால் மட்டும் பதிவு எழுத வந்தாரு...இது போல நச்,நச்-னு ஏதாச்சும் கருத்து சொல்லி கலக்கிடுவாரு!

நாம எல்லாம் கடையை மூடிட்டு அவருக்குப் பின்னூட்டம் மட்டும் போடுவதே வேலையாகிப் போயிடும்! :-)
இருங்க துளசிதளம் மாதிரி நல்ல பேரா கோபால் சாருக்கு யோசிக்கிறேன்! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இரவிசங்கர்.
உங்களைக் கேள்வி கேட்ட நண்பர் மனத்திற்கினியவரா? அப்ப இராமபிரானின் பெயரை வைத்துக் கொண்டிருப்பவர் தானே?! //

ஆகா...இது என்ன வம்பு! :-)

//தமிழ்க்கடவுள் என்றால் அது திருமுருகன் மட்டும் தானே. மாமனையும் அப்படிச் சொல்லியிருக்கிறீர்களே. உங்கள் மனத்திற்கினிய நண்பர்களில் யாராவது சண்டைக்கு வரப்போகிறார்கள்.//

ஓகோ! குமரன் அப்படி வராறா?
நண்பருக்கு மனத்துக்கினியது என்ன தெரியுமா?
சண்டை தான்! வேறென்ன! :-)))

ச்சும்மா...அவரே மாயனும்-நப்பின்னையும் தமிழில் காதற் கடவுள்-னு அப்பப்ப சொல்றவரு தானே! அவருக்கு நப்பின்னையை அவ்வளவா யாரும் சொல்லலைன்னு கோபம்! அதான் தமிழ்க் கடவுள் பட்டத்தை மாமன் கிட்ட இருந்து பறிக்கப் பாக்குறாரு! :-))

//வீடுபேறு என்பதற்குத் தந்த விளக்கம் அருமையும் புதுமையுமாக இருக்கிறது.//

நன்றி குமரன்!
வீடு-ன்னாலே விடுதல், விடுதலினால் கிடைக்கும் பேறு-ன்னு பெரியவங்க சொல்லுவாங்க!
அறம் பொருள் இன்பம்-னு பாடிய வள்ளுவர், வீட்டைத் தனியாப் பாடாததையும் யோசிச்சிப் பாருங்க!

வீட்டைத் தொலைத்த குழந்தைக்கு என்ன மிட்டாய், பொம்மைன்னும் வாங்கிக் கொடுங்க! அழுகையை நிறுத்தவே நிறுத்தாது!!
ஆனா அதோ பார் உன் வீடு-ன்னு காட்டினீங்கனா போதும்...
வாங்கிக் கொடுத்ததை எல்லாம் வீசிட்டு, வீட்டை நோக்கி ஓடிவிடும்!

அப்படி ஒரு பாதுகாப்பு வீடுன்னா!
வீடுபேறும் அப்படி தானே! :-)
நாடீர் நாள்தோறும்
வாடா மலர்கொண்டு
பாடீர் அவன்நாமம்
வீடே பெறலாமே

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//மதுரையில் இருக்கும் ஒரு தேவாலய சுவர்களில் படித்த 'நானே வழியும் ஜீவனுமாக இருக்கிறேன்' என்ற வ்சனம் தான். அதனை நீங்களும் சொல்லியிருப்பதைப் பார்த்து ஒரு புன்னகை தோன்றியது. :-)//

நான் படித்த கிறித்தவ உயர்நிலைப் பள்ளியில் இது போல வேதாகம வாசகங்களை, பங்குத் தந்தையார் என்னை விட்டு வாசிக்கவும் பாடவும் சொல்லுவார்! அவர் பெயர் ரொசாரியோ கிருஷ்ணராஜ்!
அப்போ சில வரிகள் எல்லாம் நன்கு மனப்பாடம் ஆகிவிட்டது!

பல முறை யோசித்ததுண்டு குமரன்! சரணாகதி தத்துவம் பற்றிய பல கருத்துகளும், பைபிள் கருத்துகளும் பல இடங்களில் ஒத்துப் போகும்!
சுதனைப் பற்றிப் பிதாவைச் சரண் புகுதல் அங்கு!
அன்னையைப் பற்றி அப்பனைச் சரணம் அடைதல் இங்கு!

//நாராயணனே நமக்கே பறை தருவான் என்று ஆண்டாளும் இரண்டு முறை ஏகாரத்தால் இவன் ஜகத் ஏக சரண்யன் என்று சொல்கிறாளே.//

அருமை! அருமை!
நாராயணனே நமக்கே என்று எடுத்த எடுப்பிலேயே சொல்லி விடுகிறாள்!
கண்ணன் கூட கொஞ்சம் லேட்டாத் தான் கீதையில் சொல்கிறான்! :-)))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பரம்பொருளைப் பற்றி பேசிக் கொண்டு வரும் புருஷசூக்தம் திடீரென்று அந்தப் பரம்பொருளுக்கு திருமகளும் மண்மகளும் மனைவிகள் (ஹ்ரீஸ்ச தே லக்ஷ்மிச்ச பத்ன்யௌ) என்று சொல்லிச் செல்லும். அந்த வரிகள் 21ம் சுலோகத்தின் முதல் பகுதியைப் படிக்கும் போது நினைவிற்கு வருகிறது//

அருமையான ஒப்புமை குமரன்!
நீங்க சொன்னவுடன் சொல்லிப் பார்த்த பின் தான் எனக்கும் தட்டுப்படுகிறது!

இன்னொரு கேள்வி!
ஸ்ரீ, பூமி தேவிகள் சரி!
நீளா தேவி யார்? அவள் பங்கு என்ன?

அன்னையைப் பற்றி அப்பனைச் சரணம் அடையும் போது...
ஒரே அன்னை ஆகி விடுகிறாளே! ஸ்ரீயைப் பற்றி ஸ்ரீயப்பதியைச் சரணம் புகுதல் ஆகி விடுகிறது!

நீளா தேவி பற்றி ஒரு பதிவு போடுங்க குமரன்!

//கல்யாண குணங்களான
பரத்வம் (உயர்வற உயர்நலம் கொண்டிருத்தல்),
விபுத்வம் (எங்கும் நிறைந்திருத்தல்),
ஸ்வாமித்வம் (அனைத்தையும் அனைவரையும் உடைமையாகக் கொண்டிருத்தல்),
சரண்யத்வம் (எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் அடைக்கலமாக இருத்தல்),
வாத்ஸல்யம் (தாயின் பாசம் கொண்டிருத்தல்)
போன்ற எத்தனையோ குணங்கள் இருந்தாலும் சௌலப்யமும் (எளிவந்தத் தன்மை - நீர்மை) தயையும் தானே இறைவனின் முதன்மையான கல்யாண குணம். //

அருமையான பின்னூட்டம்!
நான் சொல்லாது விட்ட கல்யாண குணங்களை அழகாக அடுக்கி...பொருள் பதிவில் மட்டும் இல்லை, பின்னூட்டத்தில் மிளிர்கிறது என்று அழகாகச் சொல்லி உள்ளீர்கள்!

எண் குணங்களைப் பட்டியல் இட்டாலும் கல்யாண குணங்கள் அப்படியே வருகிறது!

குமரன் (Kumaran) said...

//நீளா தேவி பற்றி ஒரு பதிவு போடுங்க குமரன்!
//

இப்படி கேக்குறதை முதல்ல நிறுத்துங்க. உங்களை விட அருமையா அடியேன் எழுதிவிட முடியுமா?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குமரன் (Kumaran) said...
இப்படி கேக்குறதை முதல்ல நிறுத்துங்க.//

நிறுத்த மாட்டோம்!
குமரனிடம் பதிவு கேட்பது பதிவுரிமை!
அதை "யாராலும்" தடுக்க முடியாது! :-)))

//உங்களை விட அருமையா அடியேன் எழுதிவிட முடியுமா?//

அடியேன் பொடியேன்!
என்னை விட நீங்க அருமையா எழுதி, "விட"முடியாது!
ஐ மீன் அருமையா எழுதி, அதை நாங்க "விட" முடியாது! :-)))

துளசி கோபால் said...

கோபாலின் பதிவுகளுக்கு
'கோகுலம்'தான் பெயர்.:-))))

வல்லிசிம்ஹன் said...

ஒரு சின்னஞ் சிறு குழந்தை, வீட்டுக்கு வழி தெரியாமல் நிற்கும் போது, எப்படிக் கலங்கி போய் நிற்கிறது! அதன் கைப்பிடித்து, அதோ பார் உன் வீடு என்று காட்டினால், துள்ளிக் கொண்டு ஓடாதா//
அருமை ரவி அருமை.
குமரன் பின்னூட்டம் அருமை.
மழலைச் சொல் கேளாமல் இருந்த காலம் போய்க் குழந்தைகள் வீடு வந்து பேச்சு மழை கொட்டும் போது கிடைக்கும் தெய்வீக மகிழ்ச்சி போல உங்கள் பதிவும், பின்னூட்டங்களும் இருக்கின்றன.
வேறு என்ன சொல்வது.
மனம் நிறைந்த வாழ்த்துகள்.

நாகை சிவா said...

வீடு என்பது எப்படா வீட்டுக்கு போவோம் என்று இருக்க வேண்டும்.
ஏண்டா வீட்டுக்கு போறோம் என்று இருக்க கூடாது என்பதை ரொம்ப அழகாக சொல்லி இருக்கீங்க.. :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//துளசி கோபால் said...
கோபாலின் பதிவுகளுக்கு
'கோகுலம்'தான் பெயர்.:-))))//

கோகுல பாலா - கோபாலா!-ன்னு பாட்டு பாடிடலாம் டீச்சர் :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
அருமை ரவி அருமை.
குமரன் பின்னூட்டம் அருமை.
மழலைச் சொல் கேளாமல் இருந்த காலம் போய்க் குழந்தைகள் வீடு வந்து பேச்சு மழை கொட்டும் போது கிடைக்கும் தெய்வீக மகிழ்ச்சி போல உங்கள் பதிவும், பின்னூட்டங்களும் இருக்கின்றன//

ஆகா...மழலைச் சொல்லின் மகிமை அதற்காக ஏங்கியவருக்குத் தான் தெரியும்! நாம் எல்லாரும் குழந்தைகள் தானே அவனுக்கு! நம் பதிவுகளும் அவனுக்கு மழலைச் சொல் தான்! மிக அருமையாச் சொன்னீங்க!

நன்றி வல்லியம்மா!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நாகை சிவா said...
வீடு என்பது எப்படா வீட்டுக்கு போவோம் என்று இருக்க வேண்டும்.
ஏண்டா வீட்டுக்கு போறோம் என்று இருக்க கூடாது என்பதை ரொம்ப அழகாக சொல்லி இருக்கீங்க.. :)//

ஆகா
நான் ஒரு பதிவாச் சொன்னத
நீங்க ஒரே பின்னூட்டத்தில் சொல்லீட்டீங்களே தல! கலக்குறீங்க! சுப்ரபாதம் முடிஞ்ச கையோட சுடச்சுட பொங்கல் உங்களுக்குத் தான்! :-)

சுப்ரபாதம் (தமிழில்):

ஒலிச் சுட்டிகள்!

முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் - நித்ய ஸ்ரீ பாடுவது (Windows Media Player)

நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com
Pics: tirumala-tirupati.com

சுப்ரபாதம் (மூலம்):

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP