சுப்ரபாதம்(25) - கோயிலில் ஏன் தீர்த்தம் கொடுக்கறாங்க?
தீர்த்தம்-னா காலேஜ் பசங்க சங்கேத மொழியில வேற அர்த்தம்! :-) ஆனா நாம இன்னிக்கி பாக்கப் போறது ஒரிஜினல் தீர்த்தம் பற்றி!
பெருமாள் கோவிலில் பல வேளைகளில் தீர்த்தம் கொடுத்து, தலையில் சடாரி வைக்கிறார்கள்! அது ஏன் என்று யாராச்சும் யோசிச்சு இருக்கீங்களா?
சும்மா ஒரு ரெண்டு சொட்டு தீர்த்தம் குடிச்சா தாகம் தீர்ந்திடுமா? சில பேர் வரிசைல நிக்காம முட்டி மோதி, தீர்த்தம் வாங்குகிறேன் பேர்வழி-ன்னு, பாதி தீர்த்தத்தை கீழே நழுவ விடுவதும் உண்டு! :-) எதுக்கு இந்த பில்டப்பு எல்லாம்?
முதலில் சடாரியை கொஞ்சம் எளிமையாப் பாத்துடுவோம் வாங்க! இது பற்றி மாதவிப் பந்தல் பதிவுகளில் முன்னர் லைட்டாகச் சொல்லி உள்ளேன்!
சடாரி அல்லது சடகோபம்; அதைக் கொஞ்சம் கூர்ந்து பாருங்க; ஏதோ ஒரு கிரீடம் போல இருக்கும். அதன் மேலே இரு பாதங்கள்!
இறைவனின் திருப்பாதங்களை நாம் தேடிப் போகா விட்டாலும் கூட, அவை நம்மைத் தேடி வருகின்றன! நம்மைக் கடைத்தேற்ற!
கோவிலுக்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, இந்த சடாரி கூடவே பயணிக்கும்!
சுவாமி சிவானந்தரிடம் அப்துல் கலாம் ஒரு கேள்வி் கேட்டாராம்; அக்கினிச் சிறகுகள் நூலில் வரும்! - How can I find my right teacher?
அதற்குச் சிவானந்தர் சொன்ன பதில் - When the student is ready, the Teacher arrives!
அறியாத சீடன், குருவை மட்டும் எப்படித் தனியாக அறிந்து விட முடியும்? அவன் குருவை நோக்கிச் செல்ல வேண்டியதில்லை! சீடனை நோக்கிக் குரு தானே வருவார், சீடன் கற்க விழையும் போது!
அது போல் ஒரு குரு வருகிறார் நம்மைத் தேடி!
நம்மாழ்வாரின் இயற்பெயர் மாறன் சடகோபன்! சடாரிக்குப் பெயரும் சடகோபம் தான்! வைணவ மரபில் அவர் தான் ஆதி குரு! அவர் தான் சடாரியாக வருகிறார் நம்மிடம்!
அவரே இறைவனின் சடாரியாக இருந்து,
அவன் பாதங்களை,
நம்மை நோக்கிக் கொண்டு வந்து கொடுத்து,
நம்மை உய்விக்கிறார்! - இதுவே சடாரியின் தத்துவம்!
சரி, அதற்கு ஏன் கிரீடம் போல ஒரு அமைப்பு? ஸ்ட்ரெயிட்டா பாதங்களையே தலை மேல் வைத்து விடலாமே?
நாம் தான் எது ஒன்னையும் நேரடியா கொடுத்தாலே, ஆயிரம் எடக்கு பேசுவோமே? ஆனால் அதே வேளையில், நம்மைச் சிறப்பித்து, நமக்கு்த் தலையில் சூட்டினா, உச்சி குளிர்ந்து விடாதா? வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும், உள்ளே கொஞ்சமாச்சும் புளகாங்கிதம் அடைவோம் அல்லவா? :-)
"தலை" மேல தூக்கி வச்சிக்கிட்டு ஆடுறான், "தலை" கால் தெரியலை அப்படி-ன்னு பேச்சு வழக்கில் கூட, எண்சாண் உடம்புக்கு "தலையே" பிரதானம்!
என்னா "தல", செளக்கியமா-ன்னு தான் நாமளும் கேக்கறோம்! "தலை"யாய ஒன்றுன்னு தானே இலக்கியங்களும் சொல்கின்றன!
இப்படிப்பட்ட மனிதனின் தலைக்கு அணிகலனாகத் தான் அந்தக் கிரீடம்!
ஆனா கிரீடம் தான் உண்மையான அணிகலனா? இல்லை! - அதுக்கு மேலேயும் ஒன்னு இருக்கு! உலகத்தில், தலை மேல் வைத்துக் கொண்டாட வேண்டிய ஒரே பொருள் எது? - இறைவனின் திருப்பாதங்கள் தான்! - எண்குணத்தான் தாளை வணங்காத் தலை என்பது தான் வள்ளுவம்!
அவன் மலரடிகளைச் சூட்டிக் கொள்வதை விட பெரும்பெருமை வேறெதுவும் இல்லை!
அதனால் தான் சடாரியில் கிரீடம் வைத்து, அதன் மேல் சுவாமியின் திருவடிகளை வைத்தார்கள்!
எந்தப் பேதமும் இன்றி அனைவருக்கும் தலையில் சூட்டி அழகு பார்க்கும் கிரீடம் அது! யாருக்கும் மறுக்கப்படாத கிரீடம் - அதுவே சடாரி!!
அடுத்து தீர்த்தம் எதுக்கு-ன்னும் பார்த்து விடுவோம், வாங்க!
நாராயணன் என்ற பதத்தில், நாரம் என்பதற்குத் தண்ணீர்-னு பொருள்!
நீர் இன்றி அமையாது உலகு! அது போல் நீர் வண்ணன் அன்றி அமையாது உலகும் உயிரும்!
அதனால் தான் பெருமாளுக்கு எல்லாமே நீராக அமைந்துள்ளது!
அவன் பேரும் நீர்! அவன் வண்ணமும் நீர்!
அவன் உறைவதும் பாற்கடல் நீர்! அவனுடன் அலைமகளும் நீர்!
"ஆபோ நாரா" என்று ஒரு சூக்தமும் உண்டு! பிரளய காலத்தில் ஏற்படும் நீருக்கும், படைக்கும் காலத்தில் தோன்றும் நீருக்கும் நாரம்-ன்னு பேரு!
துப்பு ஆர்க்குத், துப்பு ஆயத், துப்பு ஆக்கித், - துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை என்ற குறள் நினைவிருக்கா?
உணவை உற்பத்தி செய்யவும் நீர் தேவை! அதே சமயம், அந்த நீரே ஒரு உணவாகவும் இருக்கு!
நீரைப் போலவே நீர் வண்ணன் நாராயணனும், உலகுக்குக் காரணமாகவும் இருக்கிறான்! அதே சமயம் காரியமாகவும் இருக்கிறான்!
அதனால் தான் "ஆழிமழைக் கண்ணா" என்று மழை நீரோடு, நாரணனைச் சேர்த்தார்கள்!
நீருக்கு ஒரு பெரிய குணம் இருக்கு! - அதுக்கு வடிவம் என்பதே கிடையாது! ஆனா, எதில் ஊற்றுகிறீர்களோ, அந்த வடிவத்தை அது பெற்று விடும்!
அதே போல் தான் நீர்வண்ணனாகிய நாரணனும்!
தமர் உகந்தது எவ்வுருவம், அவ்வுருவம் தானே! அடங்காது எங்கும் பரந்த பரந்தாமன், எதிலும் அடங்கி விடுவான், நீரைப் போலவே!
மீனா, ஆமையா, பன்றியா, நரசிங்கமா, குள்ளமா, உசரமா, முனிவனா, குடும்பஸ்தனா, அரசனா, மாட்டுக்காரனா, கற்சிலையா, அடியவர் மனதா - எதிலும் அடங்கி விடும் தன்மை அவனுக்கு! எளியவர்க்கு எளியனான இந்த குணத்துக்குக் கூட "நீர்மை" என்றே பெயர்!
அதனால் தான் நாரணன்-நீரான் என்பதைக் காட்டி, அவனையே நமக்கு மணக்க மணக்கப் பருகத் தருகிறார்கள்! அதுவே தீர்த்தம்! ஒரே ஒரு சொட்டு போதும்! உள்ளில் அடங்க!
அதுவும் அவன் திருமேனியில் பட்ட நீர் என்பதால், அவன் திருமேனி சம்பந்தத்தையும் நமக்கு அளிக்கிறது!
தீர்த்தம் வாங்கிக் கொள்ளும் முறையும் ஒன்று உள்ளது! கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்தால், உள்ளங்கை குவிந்து விடும். அதில் நீரைச் சிந்தாமல் வாங்கிக் கொள்ளலாம்! சிலர் வேட்டியின் நுனியையோ, துண்டின் நுனியையோ ஒரு கையில் பிடித்து இன்னொரு கையில் வாங்கிக் கொள்வார்கள்; கீழே சிந்தாது! வெளியூரில் ஏது வேட்டி? நான் கைக்குட்டையைப் பிடித்து வாங்கிக் கொள்வேன்! :-)
வாங்க, இன்றைய சுப்ரபாதத்துக்குப் போகலாம்; தீர்த்தம்னா என்ன, அதில் கலந்துள்ள பொருட்கள் என்னென்னு சொல்றாங்க!
(இந்த சுலோகத்தைப் படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)
ஏலா லவங்க கனசார சுகந்தி தீர்த்தம்
திவ்யம் வியத்சரிதி ஹேம கடேஷூ பூர்ணம்
த்ருத் வாத்ய வைதிக சிகாமணய ப்ருஹ்ருஷ்டா
திஷ்டந்தி வேங்கட பதே தவ சுப்ரபாதம்
ஏலா லவங்க கனசார = ஏலக்காய், லவங்கம், பச்சைக் கர்ப்பூரம்
சுகந்தி தீர்த்தம் = இவற்றால் நறுமணம் கமழும் நன்னீர் (தீர்த்தம்)
தீர்த்தங்களில் பெரும்பாலும் இடப்படும் பொருட்கள்:
பச்சைக் கர்ப்பூரம்
ஏலக்காய், இலவங்கம்
ஜாதிக்காய், வெட்டிவேர்
மருத்துவ மரப்பட்டைகள்
சிறிது மஞ்சள்
எல்லாவற்றுக்கும் மேலாக, துளசி! - இவற்றினால் உண்டாகும் வாசம், நாத்திகரையும் தீர்த்தம் பருக வைக்கும்! :-)
வாழாட்பட்டு நின்றீர் ஊள்ளீரேல், வந்து மண்ணும் மணமும் கொள்மின் என்கிறார் பெரியாழ்வார்! நீராட்டிய நீர் மட்டும் தான் தீர்த்தம் என்றில்லை! நீராட்டம் இல்லாத ஆலயங்களிலும் கூட வெறும் நீரைச் சேமித்து வைத்து தீர்த்தம் தருவது உண்டு!
எம்பெருமானுடைய திருமேனி சம்பந்தத்தால், வாசனை நீர், வாசவன் நீராக ஆகிறது.
தினமும் திருமஞ்சனம் நடக்காத கோயில்களில் கூட, சுவாமியின் திருப்பாதங்களுக்கு நீராட்டு உண்டு! அதை ஸ்ரீ பாத தீர்த்தம்-னு சொல்லுவாங்க!
மேலும் திருமஞ்சனம் செய்த பின், சுவாமியின் திருமேனியில் உள்ள ஈர ஆடையைக் களைந்து, கைகளில் சுற்றிக் கொண்டு, ஒவ்வொருவருக்கும் ஈரவாடைத் தீர்த்தம் தருவது வழக்கம்! உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை-ன்னு பெரியாழ்வார் பாசுரம்!
சிவாலயங்களில் கூட சில சமயம் தீர்த்தம் உண்டு! பூவும் நீரும் கண்டு என்பது அப்பர் பெருமானின் பதிகம்.
திவ்யம் வியத் சரிதி = அழகாக ஓடும் ஆற்று நீரை (ஆகாச கங்கை நீர் வீழ்ச்சியில் இருந்து)
ஹேம கடேஷூ பூர்ணம் = தங்கக் குடங்களில் முழுமையாக நிரப்பி,
ஆகாச கங்கை என்னும் அருவியில் இருந்து தான், திருவேங்கடமுடையானுக்கு திருமஞ்சன நீர் எடுக்கப்பட்டது!
இந்த நீர்க் கைங்கர்யம் செய்யுமாறு பெரிய திருமலை நம்பிகளை வேண்டிக் கேட்டுக் கொண்டார் இராமானுசர். மலர் கைங்கர்யத்துக்கு அனந்தாழ்வானை நியமித்து அருளினார்!
இது பற்றி முன்னரே மாதவிப் பந்தல் பதிவில் "தண்ணி காட்டிய இறைவன்" என்னும் இடுகையில் பார்த்துள்ளோம்!
பாபவிநாசம் | ஆகாசகங்கை |
மிகவும் வயதான திருமலை நம்பிகளின் உடல் நலம் கருதி, இறைவனே வந்து திருவிளையாடல் செய்தான். பாபவிநாசம் என்னும் இன்னொரு தீர்த்தத்தைக் கோவிலுக்கு அருகிலேயே உண்டாக்கினான். இப்போது இங்கிருந்து தான் தீர்த்தம் எடுக்கிறார்கள்!
இன்றும் திருமலை நம்பிகளின் வம்சத்தவர், (தோழப்பர் என்று அழைக்கப்படுபவர்கள்) ஆண்டுக்கு ஒரு முறை தண்ணீர் அமுது உற்சவத்தின் போது, பழைய ஆகாச கங்கையில் இருந்து நீர் கொணர்ந்து சமர்ப்பணம் செய்கிறார்கள்!
அது தவிர, மோசமான வானிலை போன்ற சூழ்நிலைகளில், கோவிலின் உள்ளேயே உள்ள பொற்கிணற்றில் (பங்காரு பாவி) நீர் சேந்திக் கொள்வதுண்டு. Water Management என்னும் நீர் மேலாண்மை மாதிரி தான்! இந்தக் கிணற்றைத், தரிசனம் முடித்து விமானப் பிரகாரத்துக்கு வந்தவுடனேயே எதிரில் காணலாம்!
த்ருத் வாத்ய = வேகமாக எடுத்து வருகிறார்கள்
வைதிக சிகாமணய = வேத ஓதும் விற்பன்னர்கள்!
ப்ருஹ்ருஷ்டா = மகிழ்ச்சியுடன் (வந்து உன் சன்னிதியில் நிற்கும் அவர்களுக்கு)
திஷ்டந்தி = காத்திருந்து அருள் புரிவாய்!
இவ்வாறு பொற்குடங்களில் நீர் எடுத்து வரும் விற்பன்னர்கள், ஆலய வாசலுக்கு வேகமாக ஓடி வருகிறார்கள்! மலை இறக்கம் வேறு அல்லவா? தானாகவே அவர்களைத் தள்ளுகிறது!
அன்று முழுதும் அடியார்க்கு நல்லபடி தரிசனம் கிடைக்க வேண்டுமே! அதற்கு காலம் தாமதிக்காது, தீர்த்தம் கொணர்ந்தால் தானே முடியும்! அதனால் தான் இந்த ஓட்டமும் நடையும்!
வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால், கதிரொளித் தீபம் கலசமுடன் ஏந்தி, கோவில் வாசலுக்கு குறித்த நேரத்தில் வந்து நிற்கின்றனர்!
அப்பா பெருமாளே, அவர்கள் வரத் தாமதம் ஆனாலும் ஆகலாம்; அதனால் இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்று நீயும் சின்னக் குழந்தையைப் போலச் சேட்டை செய்யாதே!
அவர்கள் சொன்ன வண்ணம் சொன்ன நேரத்துக்கு வந்து விடுவார்கள்! போதும் தூக்கம்!
அவர்கள் வருகைக்காக நீ எழுந்து காத்திரு! - தீர்த்தம் வந்த அடுத்த விநாடி ஒரு கணமும் தாமதியாது, எழுந்து தயராகி விடு!
நாளெல்லாம் உன்னைக் காண அடியார்கள் கால் கடுத்து நிற்கிறார்கள்! நீ தாமதிக்கலாமா? தத்துவம் அன்று! தகவேலோ ரெம்பாவாய்!
வேங்கட பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!
----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------
69 comments:
Your writing style feels like dinamalar - vaaramalar - somewhat different and nice. Keep going.
இது நேற்றே (சனிக்கிழமை இட வேண்டிய இடுகை); சில காரணங்களாலும், என் சோம்பலாலும் தாமதம் ஆகியது! மன்னிக்கவும்!
அதே போல் வாரா வாரம் கொடுத்து வந்த இது, நேரமின்மையால், நடுவில் சில நாள் விட்டு விட்டு வந்தது.
இன்னும் 4 சுலோகங்கள் தான் மீதம் உள்ளது.
அடுத்த இரு வாரங்களில், அவற்றையும் இட்டு, நிறைவு செய்து விடுகிறேன்!
அலங்காரப் பிரியனான நாராயணனின் எல்லா கோவில்களிலும் அபிஷேக மூர்த்தி என்று ஒரு சின்ன விக்ரஹம் இருக்கும், அதற்கு நித்திய அபிஷேகம் நடத்தி அந்த தீர்த்தம் தான் நமக்கு இல்லையா ரவி?.
எல்லா சிவன் கோவில்களிலும் தீர்த்தம் கண்டிப்பாக உண்டு, ஆனால் அது அர்ச்சகர் தருவதில்லை....அந்த நேரத்தில் கருவறையின் கோமுகத்திலிருந்து நேரே நாமே எடுத்துக் கொள்வதுதான். ஏனெனில் ஈசனுக்கு 5 காலமும் அபிஷேகம் உண்டு, அதனால் அதனை தனியாக சேமித்து வைத்துக் கொடுப்பதில்லை என்று நினைக்கிறேன் :)
பெருமாள் கோவிலுக்குச் சென்று தீர்த்தம் வாங்கி, சடாரி சாத்திக்கொண்டு வருவது பொதுவாக் செய்யும் செயல். பல பேர் இதைக் கோவிலில் செய்ய வேண்டிய சடங்காகக் தான் செய்து வருகிறார்கள்.ஏன் எதற்காக என்று சிந்திக்க நேரமுமில்லை - தேவையும் வரவில்லை.
அருமையான பதிவு. விளக்கம் அற்புதம். தீர்த்தத்தில் இத்தனை பொருட்கள் கலந்திருக்கின்றன என்பதும் சடாரியில் பெருமாளின் பாத கமலங்கள் இருக்கின்றன என்பது புதிய செய்திகள். நன்றி கேயாரெஸ் நன்றி.
//மதுரையம்பதி said...
அபிஷேக மூர்த்தி என்று ஒரு சின்ன விக்ரஹம் இருக்கும்// - சரியே!
//அதற்கு நித்திய அபிஷேகம் நடத்தி அந்த தீர்த்தம் தான் நமக்கு இல்லையா ரவி?// - இல்லை
தீர்த்தம் என்பது அபிஷேக தீர்த்தம் மட்டும் இல்லை!
அபிஷேகம் இல்லாத காலங்களில் கூடத் தீர்த்தம் உண்டு!
அதற்குக் காரணம் நீர்மையின் தத்துவம் தான்!
திருமஞ்சனம் செய்த நீரும் தீர்த்தத்தில் சேர்க்கப்படுகிறது. அவ்வளவே!
வடநாடு, இஸ்கான் போன்ற பளிங்கு மூர்த்தி ஆலயங்களில் கூட, அபிசேகம் இல்லா விட்டாலும் தீர்த்தம் உண்டு!
நீர்மைத் தத்துவம் வைணவத் தத்துவத்தில் தனித்தன்மையான ஒன்று!
//ஏனெனில் ஈசனுக்கு 5 காலமும் அபிஷேகம் உண்டு, அதனால் அதனை தனியாக சேமித்து வைத்துக் கொடுப்பதில்லை என்று நினைக்கிறேன் :)//
ஹிஹி
ஈசனின் அபிடேகத் தீர்த்தம் கோமுகத்தில் சொட்டாத காலங்களில் பக்தர்கள் எதைப் பருகுவார்கள்? :-)
தீர்த்தமும் சடாரியும் தத்துவ வழக்கம்!
இதைச் சைவ-வைணவ ஒப்பீடாகக் கருதக் கூடாது!
பெருமாளுக்கு நீரு!
ஈசனுக்கு நீறு!
//ஈசனின் அபிடேகத் தீர்த்தம் கோமுகத்தில் சொட்டாத காலங்களில் பக்தர்கள் எதைப் பருகுவார்கள்? :-)//
கண்டிப்பாக நீங்க பதிவின் ஆரம்பத்தில் சொன்ன தீர்த்தத்தை பருகமாட்டார்கள்.... :)
//மதுரையம்பதி said...
//ஈசனின் அபிடேகத் தீர்த்தம் கோமுகத்தில் சொட்டாத காலங்களில் பக்தர்கள் எதைப் பருகுவார்கள்? :-)//
கண்டிப்பாக நீங்க பதிவின் ஆரம்பத்தில் சொன்ன தீர்த்தத்தை பருகமாட்டார்கள்.... :)//
ஹிஹி
எனக்கு கல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்து விட்டன மெளலி.
பசங்க ஹாஸ்டலில் ஒரே லூட்டி தான்!
ஒரு சமயம் இன்னொரு மதத்துப் பையனை, போற வழியில் தீருநீர்மலைக் கோயிலுக்கு அழைச்சிகிட்டுப் போனானுங்க! என்ன சொல்லித் தெரியுமா? அங்கு தீர்த்தம் கொடுப்பாங்கன்னு! சுடலை மாட சாமிக்குச் சில சமயம் வைக்கறா மாதிரிடா இந்தக் கோயில்ல-ன்னு கண்ட கதையச் சொல்லி...பாவம் அவனை இஸ்துக்கினு போனாங்க :-)
அவனும் வெள்ளந்தியா ஆசை ஆசையா வந்தான். அப்பறம் தான் அவனுக்குத் தெரிஞ்சுது அது ஒரிஜினல் தீர்த்தம்-னு!
இருந்தாலும் ஸ்போர்டிவ்வா எடுத்துகிட்டான் போல!
வரும் வழியில் அவங்க தீர்த்தம் வாங்கி வந்தது தனிக்கதை! :-)
வந்து, நடந்ததை என்னிடம் சொல்லிச் சொல்லிச் சிரிச்சானுங்க!
மெளலி
கேரளத்தில் சில சிவாலயங்களிலும்,
தமிழ்நாட்டில் ஏதோ சில ஊர்களில் சிவன்/முருகன் ஆலயத்தில் தீர்த்தம் உண்டு!
எங்குன்னு தெரியுமா?
//கோயிலில் ஏன் தீர்த்தம் கொடுக்கறாங்க? //
உண்டியலில் செலுத்தும் காணிக்கைக்கு மாற்றுதவியாக 'தண்ணி காட்டுவது' என்று சொன்னால் பொருள் சரியாக வருமா ?
:)))
நல்ல அனுபவம்தான்....பாவம் அந்த பையன், இப்படியா ஏமாற்றுவது....
//கேரளத்தில் சில சிவாலயங்களிலும்,
தமிழ்நாட்டில் ஏதோ சில ஊர்களில் சிவன்/முருகன் ஆலயத்தில் தீர்த்தம் உண்டு!எங்குன்னு தெரியுமா?//
தெரியல்லை, கண்ணபிரான் அருளில்தான் தெரிந்து கொள்ளவ்வேண்டும்.....
ஆமாம், பெருமாள் கோவில்களில் 5 பாத்திரங்களில் பெருமாள் முன் இருக்கும் நீரில் ஒன்றைத்தான் நமக்குத் தருகிறார்கள். அதென்ன பஞ்ச பாத்திரங்கள், நமக்கு பஞ்சபாத்திரம் என்பது ஒரு பாத்திரம் தானே?. ஒரு பாத்திரத்தில் அர்க்கியம், ஆசமன தீர்த்தம் போன்ற உபசாரங்களை சேர்க்கின்றதை கவனித்திருக்கிறேன். இன்னொன்றை ந்மக்கு அளிக்க எடுத்துவருகிறார்கள், மிச்சமிருக்கும் 3 எதற்காக?.. கொஞ்சம் தெளிவாக்குங்களேன்
அருமையாக சொல்லியுள்ளீர்கள்.முழு குடும்பத்துக்கும் படித்துக்காண்பித்தேன்.
மிக்க நன்றி.
பொதுவா கேயாரெஸ் பதிவுகளிலே, பின்னூட்டங்கள் - கேள்வி பதிலா, விவாத மேடையா, இருக்கும். பலப்பல ஐயப்பாடுகள், புதுப்புது செய்திகள் ஆதார பூர்வமா, மனப்பூர்வமாக பேசப்படும். சண்டை யாக இல்லாமல் மாற்றுக் கருத்துகளும், நகைச்சுவை கலந்து பேசப்படும். நான் பதிவுகளாஇ எப்படி கவனமாக படிக்கிறேனே, அதே கவனத்துடன் மறுமொழிகளையும் படிக்கிறேன்.
இரவிசங்கர். நிறைய தகவல்களை நன்கு கோர்த்துச் சொல்லியிருக்கிறீர்கள். வரிசையாகப் படித்து வரும் போது மகிழ்ச்சியான வியப்புடன் அடியேன் புருவங்கள் பல முறை உயர்ந்தன. :-)
வைணவ சம்ப்ரதாயத்தில் திருவடி சம்பந்தத்தைப் பெருமையாகச் சொல்வார்கள். எம்பெருமானின் திருவடிகளாக நம்மாழ்வார் சடகோபன் இருக்கிறார். அவரது திருவடிகளாக நாதமுனிகளும், அவரது திருவடிகளாக ஆளவந்தார் யமுனைத்துறைவரும் அவரது திருவடிகளாக யதிராஜர் இராமானுஜ முனியும் என்று தொடர்ந்து வரும். சில நேரங்களில் அந்த ஆசாரியரின் திருவுருவச் சிலையின் கீழ் அவரது சீடர்களின் சிறிய திருவுருவங்களும் இருக்கும். அடியேன் சில தினங்களுக்கு முன்னர் இட்ட மணவாள மாமுனிகளைப் பற்றிய இடுகையில் தந்துள்ள அவருடைய திருமேனியின் படத்திலும் பார்க்கலாம்; அவரது திருமேனியின் கீழ் சிறிய உருவங்கள் இருக்கும்; அவை அவரது சீடர்களின் உருவங்கள். இப்படி திருவடி சம்பந்தம் பெருமையாகப் போற்றப்படும் வைணவத்தில் வைகுண்ட பதவி அடைந்தார் என்று குறிப்பதையும் ஆசாரியன் திருவடி அடைந்தார் என்று குறிப்பதைக் காணலாம்.
தலையில் கிரீடம் வைக்கிறார்கள் என்று மிக்க மகிழ்வுடன் நாம் வாங்கிக் கொள்ளும் போது பெருமாள் தன் திருக்கருணையால் நாம் தேடிப் போகாத தன் திருவடிகளைத் தானே நம்மிடம் கொணர்ந்து திருவடிச் சம்பந்தம் ஏற்படுத்துகிறார் என்று அழகாகக் கூறியிருக்கிறீர்கள்.
தீர்த்தத்தைப் பற்றிப் படிக்கத் தொடங்கியவுடன் ஆசாரியர் வேதாந்த தேசிகனின் நினைவு வந்துவிட்டது. திருக்கோவில்களில் தீர்த்தமும் சடாரியும் சாதிக்கப்படும் போது அவர் எல்லோரிலும் கடைசியாகப் போய் நின்று கொள்வாராம். ஏன் சுவாமி இப்படி செய்கிறீர்கள் என்று கேட்கும் போது 'அடியேன் அபராத சக்ரவர்த்தி. அதனால் கடைசியில் போய் நிற்கிறேன்' என்று சொல்வாராம்.
மீண்டும் வந்து மற்றவற்றைப் பற்றிப் பேசுகிறேன்.
மிக அருமையாக உள்ளது; மனசுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றிகள்.
திருவேங்கடமுடையான் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.
ராஜப்பா
//கோவி.கண்ணன் said...
//கோயிலில் ஏன் தீர்த்தம் கொடுக்கறாங்க? //
உண்டியலில் செலுத்தும் காணிக்கைக்கு மாற்றுதவியாக 'தண்ணி காட்டுவது' என்று சொன்னால் பொருள் சரியாக வருமா ? -:)))//
கோவி அண்ணா.
உண்டியலில் செலுத்தும் காணிக்கைக்கு மாற்று உதவியாக தண்ணி காட்டுறாங்களா?
- சூப்பரோ சூப்பர்! உய்! உய்! உய்! (சும்மா விசில் அடிச்சேன்)
இது தெரியாமப் போச்சே! தெரிஞ்சிருந்தா இதே ஐடியாவை கொஞ்சம் extend பண்ணி
முருகன் கோவில், சிவன் கோவில், சக்தி கோயில், புள்ளையார் கோவில் இன்னும் பல ஆலயங்களில் தீர்த்தம் ஊத்தச் சொல்லலாமே? யாருமே இதுவரை பண்ணலையே!
அய்யகோ! :-)
அதிக காணிக்கை கொட்டினா
அதிகமா தண்ணி காட்டப்படும் ன்னு
ஒரு விளம்பரம் போர்டும் வச்சிட்டா, பணம் கொட்டாதா என்ன? சரியான ஐடியா மன்னரா இருக்கீங்களே! :-)
நான் கோவில் ஏதாச்சும் கட்டினேனா எனக்கு நீங்க தான் ஆஸ்தான பொருள்வள மேம்பாட்டாளர்! :-)
செல்வத்திரு கோவி கண்ணன் வாழ்க! வாழ்க!!
(கோவில் கட்டுவேனா-ன்னு எல்லாம் நிச்சயமாத் தெரியாது! ஆனா எங்க கிராமத்துல உயர்நிலைப் பள்ளி கட்டும் ஆசை மட்டுமிருக்கு! பசங்க மூனு மைல் செய்யாறுக்குப் போயி படிக்கணும்!)
Vanakkam sir,
Theerthamum, sadarium petruk konden.Some of your writings are sadari to me,excellent.
ARANGAN ARULVANAGA.
Anbudan,
k.srinivasan.
//குமரன் (Kumaran) said...
எம்பெருமானின் திருவடிகளாக நம்மாழ்வார் சடகோபன் இருக்கிறார்.
அவரது திருவடிகளாக நாதமுனிகளும்,
அவரது திருவடிகளாக ஆளவந்தார் யமுனைத்துறைவரும்
அவரது திருவடிகளாக யதிராஜர் இராமானுஜ முனியும் என்று தொடர்ந்து வரும்.//
ஆமாம் குமரன்!
ஒவ்வொன்றின் சம்பந்தமும் கடைசியில் இறைவன் திருவடியில் போய் நின்று விடும்!
ஆரம்ப விளக்கம் என்பதால் இறைவன் திருவடி - சடகோபம் - நம்மாழ்வாரோடு விளக்கத்தை நிறுத்திக் கொண்டேன்!
பின்னூட்டத்தில் அதை முழுசா முடிச்சு வச்சீங்க! மிக்க நன்றி!
//சில நேரங்களில் அந்த ஆசாரியரின் திருவுருவச் சிலையின் கீழ் அவரது சீடர்களின் சிறிய திருவுருவங்களும் இருக்கும்.//
ஆமாம்..
இன்னொரு செய்தி...
உதாரணமா இராமானுசரின் சன்னிதியிலும் ஒரு சடாரி இருக்கும்! அதுக்கு முதலியான் என்றே பெயர்!
இராமானுசரின் திருவடிகளை, அவர் சீடர் முதலியாண்டான் நமக்குக் கொண்டு வந்து தருவதாக...அதற்கு சீடரின் பெயரே பெயராக உள்ளது!
இப்படியாக ஒவ்வொரு குருவின் சன்னிதியில் உள்ள சடாரிக்கும், அவரின் சீடரின் பெயரே சடாரியின் பெயராக இருக்கும்!
//வைகுண்ட பதவி அடைந்தார் என்று குறிப்பதையும் ஆசாரியன் திருவடி அடைந்தார் என்று குறிப்பதைக் காணலாம்.//
ஆமாம். பதிவில் இதைச் சொல்லாது போனேனே!
ஆசாரியன் திருவடி அடைந்தார் என்று திருவடி சம்பந்தத்தைத் தான் குறிப்பிட்டுச் சொல்லுவார்கள்!
//தலையில் கிரீடம் வைக்கிறார்கள் என்று மிக்க மகிழ்வுடன் நாம் வாங்கிக் கொள்ளும் போது பெருமாள் தன் திருக்கருணையால் நாம் தேடிப் போகாத தன் திருவடிகளைத் தானே நம்மிடம் கொணர்ந்து திருவடிச் சம்பந்தம் ஏற்படுத்துகிறார் என்று அழகாகக் கூறியிருக்கிறீர்கள்//
நன்றி குமரன்!
கிரீடம் வாங்க குனிகிறோம்!
நம் சுயநலப் பெருமைக்கு நாம் குனிந்தாலும்,
அவர் திருவடியைக் கருணையுடன் வைத்து, கிரீடத்தையும் வைத்து் அருள் செய்கிறார் அல்லவா!
இது தான் கேழில் பரங்கருணை!
ஹைய்யோ..........
அருமை அருமை அருமை.
பச்சைக்கற்பூரம் ஏலக்காய் மணக்கும் தீர்த்தம்...அடடா.....
நம்ம வீட்டுலே இதுக்கு 'சாமி வாசனை'ன்னே பேரு.
'எல்லாத்துக்கும் மேலாக துளசி'
ரசிச்சேன்:-))))
ஆகா,, ஆகா - துளசி ரசிக்காத துளசியா - இல்ல பெருமாளா - சாமி வாசனை - பொருத்தமான பெயர்.
கண்ணபிரான் நானும் பல முறை சடாரி தரிசனம் கிடைக்கப் பெற்றுள்ளேன். ஆனால் இவ்வளவு உள்ளார்த்தம் தெரியாது. இப்போது தங்கள் புண்ணியத்தால் தெரிந்து கொண்டேன்.. நன்றி..
வாமனனாக வந்து மூன்றாவது அடியாக தலைமேல் வக்கும் பாதங்களை குறித்து வந்ததன்றோ சடாரி. அகங்காரத்தை அடக்கி அருள் புரிவதை கூறிப்பது. ஆனால் இப்போதெல்லாம் சின்ன சின்ன சடாரிகளாக வீட்டு பூஜையில் வைப்பது போல செய்து கடைகளில் விற்பதால் இதுவும் ஒரு அனிச்சை செயலாகி விட்டது.
அதேபோல திருத்துழாய் தீர்த்தத்திற்கு பதிலாக குங்குமப்பூ சேர்த்து காய்ச்சிய பாலை கொடுப்பதையும் காணலாம்.
//CresceNet said...
Oi,...//
என்னங்க இது இங்க இப்பிடி திட்டிட்டு போயிருக்காங்க;-))) வைணவ வாழ்த்து, சைவ ?ழ்த்துல (:-)பிறைநிலாவுமா;-))) (ஒண்ணுமில்ல, அத க்ரெஸன்ட்னு படிச்சேன்!)
சில செய்திகள் தெரிந்தவை என்றாலும் நீங்கள் கொடுக்கும் விதமும் அத்துடன் குமரன் சேர்ந்து அக்காரவடிசிலாய் வழங்குவது எப்பவுமே அதிசுவை....
பதிவுக்கு தொடர்பில்லாத பிறைநிலா கேள்வி: ஆளவந்தார் யமுனைத்துறைவர் சிறுவயது விவாதம் பற்றி என் சின்ன வயதில் படித்திருக்கிறேன்... உங்கள் யாருக்கேனும் நினைவு உண்டா? (கூகிளாண்டவர் கை கொடுக்கல)... தெரிந்தால் உரலோ, இடித்தோ கொடுக்கவும், நன்றி.
பெருமாளின் எளிவந்த தன்மையான நீர்மையைப் பற்றி அழகாகக் கூறியிருக்கிறீர்கள் இரவிசங்கர். அந்த நீர்மையைக் குறிக்கும் வகையில் தீர்த்தம் வழங்கப்படுகிறது என்பது இதுவரை அடியேன் அறியாதது.
நீரின்றியும் நீர்வண்ணன் அன்றியும் உலகு அமையாது; நாராயண நாம விளக்கம்; துப்பார்க்குத் துப்பாய குறளுக்கு பெருமாள் இந்த பிரபஞ்சத்திற்கு எல்லாவித காரணமுமாக இருக்கிறான் என்ற தத்துவ விளக்கத்தைத் தந்தது; நீரினைப் போல் பெருமாளும் எல்லா உருவத்திலும் நிறைவது; என்று சுவைத்தவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
திருவரங்கத்தில் ஒரே ஒரு முறை ஈரவாடைத் தீர்த்தம் பெறும் பாக்கியம் பெற்றிருக்கிறேன்.
ஏலம், லவங்கம், பச்சைக் கர்ப்பூரம் போன்ற பொருட்களால் மணம் மிக்கதான தீர்த்தத்தை உன்னுடைய திவ்யமான சரிதங்களை எல்லாம் பேசிப் போற்றிக் கொண்டு பொற்குடங்களில் நிரப்பிக் கொண்டு வாத்திய கோஷங்களுடன் வேதங்கள் அறிந்தவர்களில் சிறந்தவர்களான அடியவர்கள் மிக்க மகிழ்வுடன் கூடிய மனத்துடன் வந்து உன் திருமுன் நிற்கிறார்கள். வேங்கடபதியே துயிலெழ வேண்டும்.
கெக்கேபிக்குணி உங்களுக்காக...
Once an arrogant vidwAn by name Akkiyalvan was challenging and humiliating learned men. Yamuna (as a 16 year old boy) accepted the challenge and went to the court to argue with him. The queen was so impressed with the boy that she told the king and pursuaded him to give away half the kingdom if he won in the debate and offered herself to be thrown to wild dogs, if the
boy failed. Akkiyalvan asked the boy to state three propositions positive or negative which he offered to counter. And, if he could not, the boy would be declared the winner.
Yamuna asked (or stated) three statements. He asked Akkialwan to counter.
( i ) Your mother is not a barren woman- Naturally he could not counter saying that his mother is a barren woman (he is very much standing in front of Yamunacharya).
( ii ) The king is a righteous and powerful ruler - Obviusoly he can not afford to conuter this.
and
( iii ) The queen is a model of chastity. - oh no! Never can he counter this.
Akkialvan accepted defeat and the King now asked Yamuna to disprove his own statements.
Yamuna clarified by observing the following:-
( i ) The sacred laws say that an only son is no son at all. So,
Akkiyalvan's mother was as good as barren in the eyes of the law.
( ii ) The king cannot be called righteous when he entertained such an arrogant person to be his chaplain and his not dismissing the chaplain showed that the king was indeed powerless.
( iii ) According to the Sruti texts, every woman is wedded first to Soma, then Gandharva and then Agni before marrying her earthly partner. The queen was no exception and therefore cannot be deemed a model of chastity.
(This is only to drive home a point that logic can not be the solution
fully. One needs to fall back on Saasthras and Sruthi/Smrthis for
praMANams.)
The King sent Akkiyalvan out of his kingdom and gave Yamuna half his kingdom. The queen hailed the boy as "Alavandhaar"- One who came to save me.
ரவிசங்கர்!
சடாரி பற்றி ஏற்கனவே அறிந்தேன். தீர்த்தம் பற்றிய தங்கள் செய்தி புதிய சுவையான செய்தி.
ஈழத்தில் நான் பெருமாள் கோவிலில் மாத்திரம் இந்த மணம் கமழும் தீர்த்தம் பருகியுள்ளேன்.
அத்துடன் படித்ததாக ஞாபகம் தீர்த்தக் கரண்டி தலை, பாம்பு வடிவில் உள்ளது. திருப்பாற்கடலைக் கடைந்ததை நினைவூட்டுவது. அந்த அமிர்தமே இந்தத் தீர்த்தம்.
நீங்கள் அறிந்தீர்களா?? இது சைவ நம்பிக்கையா??
அருமையான பதிவு, புரியும்படி எழுதி்ய
எளிமையான நடை - எங்களின் வாழ்த்துக்கள் - இந்த பதிவை மறறவர்களுக்கும்
forward செய்வது எப்படி
அன்புடன் - ராகவன்
//கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
//CresceNet said...
Oi,...//
என்னங்க இது இங்க இப்பிடி திட்டிட்டு போயிருக்காங்க;-)))//
ஹிஹி...நல்லாவே லிங்க் எல்லாம் கொடுத்து திட்டி இருக்காரு! இல்லீங்களா? :-)
//வைணவ வாழ்த்து, சைவ ?ழ்த்துல (:-)பிறைநிலாவுமா;-))) (ஒண்ணுமில்ல, அத க்ரெஸன்ட்னு படிச்சேன்!)//
அட, பிறைநிலவும் நமக்கு பிடித்தம் தாங்க கெக்கேபிக்குணி!
பெருமான் சூடும் தூவெண் மதி ஆச்சே! அது அம்மதத்தில் இருந்தாலும் சம்மதமே!
//சில செய்திகள் தெரிந்தவை என்றாலும் நீங்கள் கொடுக்கும் விதமும் அத்துடன் குமரன் சேர்ந்து அக்காரவடிசிலாய் வழங்குவது எப்பவுமே அதிசுவை....//
குமரன் கொடுப்பது தாங்க நெய் மணக்கும் அக்கார அடிசில்! எனக்குப் பிடித்த சர்க்கரைப் பொங்கலும் அதுவே! லபக் லபக்னு சாப்பிட்டுடுவேன்! :-)
//பதிவுக்கு தொடர்பில்லாத பிறைநிலா கேள்வி: ஆளவந்தார் யமுனைத்துறைவர் சிறுவயது விவாதம் பற்றி என் சின்ன வயதில் படித்திருக்கிறேன்... உங்கள் யாருக்கேனும் நினைவு உண்டா?//
குமரன் கொடுத்துட்டாரு, பாருங்க!
அவர் எப்பமே ஃபாஸ்டு! ஏன்னா அவர் கிட்ட மயில் இருக்கு! :-)
இராமானுசர் கட்டளையால் அமைக்கப்பட்ட பூ மண்டபத்துக்கு திருமலையில் இன்னும் "யாமுனைத் துறை" ன்னு தான் பேரு!
//ஆமாம், பெருமாள் கோவில்களில் 5 பாத்திரங்களில் பெருமாள் முன் இருக்கும் நீரில் ஒன்றைத்தான் நமக்குத் தருகிறார்கள். அதென்ன பஞ்ச பாத்திரங்கள், நமக்கு பஞ்சபாத்திரம் என்பது ஒரு பாத்திரம் தானே//
என்னங்க மெளலி
இப்படி அசால்டா கேட்டுட்டீங்க! குருவி தலையில பனம்பழம் வச்சாப் போல இருக்கே! பச்சப்புள்ள நான் என்ன பண்ணுவேன்? :-)
இதெல்லாம் எனக்குப் பழக்கமே இல்ல! குருநாதர் சொன்னது கொஞ்சம் ஞாபகம் இருக்கு! சொல்றேன்!
குமரன் நீங்க வந்து சரியா-ன்னு பாருங்க!
அர்க்கயம் - கைகளுக்கு
பாத்யம் - பாதங்களுக்கு
ஆசமனீயம் - இது ஆசமனம்
ஸ்நானீயம் - திருமேனிக்கு
சர்வார்த்த தோயம் - மற்ற அனைத்துக்கும்
- இவை தான் பஞ்ச பாத்திரங்கள்!
இவை இல்லாமல் தண்ணீர் முகந்து வைக்க இன்னொரு பெரிய பாத்திரம், தரையில் இருக்கும். அதில் இருந்து நீர் எடுத்து தான் இந்த பாத்திரங்களுக்கு நீர் விடுவார்கள்!
நமக்குக் கொண்டு வந்து கொடுக்கும் தீர்த்தம், சர்வார்த்த தோயம் என்ற அந்த ஐந்தாம் பாத்திரத்தில் இருந்து. அது தான் நடுவில் வைக்கப்பட்டு இருக்கும்! மற்ற அனைத்தின் நீரும் இந்த ஐந்தாவதில் இருந்து தான் போயும், வரவும் செய்யும்! common denominator மாதிரி.
அம்புட்டு தான் நான் அறிந்தது! மத்தது எல்லாம் வெவரமானவங்க வந்து தான் சொல்லோணம்!
ஆனா எல்லா வேளைகளிலும் ஐந்தும் இருக்காதே! பூசை, நிவேதனம், மற்றும் சோடச உபசாரங்களின் போது தான் ஐந்து வைத்திருப்பார்கள். மற்றபடி ஒண்ணே ஒண்ணு! கண்ணே கண்ணு தான்! :-)
//srikanth said...
Your writing style feels like dinamalar - vaaramalar - somewhat different and nice. Keep going.//
ஆகா, தினமலர்-வாரமலரா?
திட்டறீங்களா-ன்னு தெரியலையே! :-)
சும்மா சொன்னேன் ஸ்ரீகாந்த்! எளிமையாச் சொன்னாத் தான் பசங்க புரிஞ்சுப்பாங்க!
உங்கள் வாழ்த்துக்கு நன்றி!
//குமரன் (Kumaran) said...
அவர் எல்லோரிலும் கடைசியாகப் போய் நின்று கொள்வாராம். ஏன் சுவாமி இப்படி செய்கிறீர்கள் என்று கேட்கும் போது 'அடியேன் அபராத சக்ரவர்த்தி. அதனால் கடைசியில் போய் நிற்கிறேன்' என்று சொல்வாராம்.//
ஆகா...
தேசிகரா அபராதச் சக்ரவர்த்தி?
அப்படின்னா அடியேன் என்னவோ! அபரிமித அபராத அடியனோ? பொடியனோ?
குமரன்
தேசிகர் இப்படிச் சொன்னதால், அவரைப் "புனித பிம்பம்"-ன்னு சில பேர் வலையுலகில் சொல்லலாம்! :-)
ஆனால் இப்படி...
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து
ன்னு குறள் வழி நடக்க தேசிகரால் முடிந்தது!
தமிழைச் சொல்லால் மட்டும் அன்றி குணத்தாலும் செயலாலும் கடைப்பிடித்தவர்கள் தான் அவர்கள்!
//SA Narayanan said...
மிக அருமையாக உள்ளது; மனசுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றிகள்.
திருவேங்கடமுடையான் உங்களை ஆசிர்வதிக்கட்டும்//
தங்கள் மனம் மிகழ்ந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி!
அன்பும் ஆசிக்கும் நன்றி ராஜப்பா சார்!
//பத்மா அர்விந்த் said...
வாமனனாக வந்து மூன்றாவது அடியாக தலைமேல் வக்கும் பாதங்களை குறித்து வந்ததன்றோ சடாரி. அகங்காரத்தை அடக்கி அருள் புரிவதை கூறிப்பது.//
வாங்க பத்மா...அருமையாச் சொன்னீங்க!
நேரடியாக இறைவனே, திருவடியைத் தலையில் சூட்டியது வாமன அவதாரத்தில் தான் முதலில்!
ஆனால் அதற்கு முன்பேயும் திருவடி சூட்டல் என்பது நடந்துள்ளது. ஹயக்ரீவர் பிரம்மனுக்குச் சூட்டினார்!
பிரகலாதன் தனக்குத் தானே சூட்டிக் கொண்டான்! பின்னர் பரதன் திருவடி தலையில் தாங்கினான்!
அதனால் சடாரி வாமன அவதார நிகழ்ச்சியால் மட்டும் வந்தது அல்ல!
அது தத்துவ விளக்கமாக வந்து ஒன்று தான்!
//ஆனால் இப்போதெல்லாம் சின்ன சின்ன சடாரிகளாக...கடைகளில் விற்பதால் இதுவும் ஒரு அனிச்சை செயலாகி விட்டது//
ஹூம்...இதுவும் ஒரு வணிக மயமாக்கலோ? சந்தைப் பொருளாதாரமோ? :-)
//அதேபோல திருத்துழாய் தீர்த்தத்திற்கு பதிலாக குங்குமப்பூ சேர்த்து காய்ச்சிய பாலை கொடுப்பதையும் காணலாம்.//
ஆமாம்
பெரும்பாலும் இரவுப் பூசைகளில், ஏகாந்த சேவை, ராக்காலம் (அர்த்த ஜாமம்) ஆகியவற்றின் போது காய்ச்சின பாலைத் தருவார்கள்!
இரவு நிவேதனம் முடிந்து தரும் பால் இது! இரவு வேளையில் குளிர்ந்த துளசி நீருக்குப் பதிலாக இப்படி!
காலை வேளையில் காய்ச்சாத பாலும், திருமஞ்சனத்துக்குப் பின் தருவதுண்டு!
//cheena (சீனா) said...
சடங்காகக் தான் செய்து வருகிறார்கள்.ஏன் எதற்காக என்று சிந்திக்க நேரமுமில்லை - தேவையும் வரவில்லை//
ஆமாம் சீனா ஐயா!
அதுக்குத் தான் இந்த சுப்ரபாதத்தின் போது சொல்லி விடலாமே-ன்னு சொல்லி விட்டேன்!
அடுத்த முறையாச்சும் நம்மில் ஒருவர், இப்படி வாங்கும் போது, ஏன் என்பதை அறிந்து, ஆத்மார்த்தமா தீர்த்தமும் சடாரியும் வாங்கிக் கொள்வார் இல்லையா!
//தீர்த்தத்தில் இத்தனை பொருட்கள் கலந்திருக்கின்றன என்பதும் சடாரியில் பெருமாளின் பாத கமலங்கள் இருக்கின்றன என்பது புதிய செய்திகள். நன்றி கேயாரெஸ் நன்றி.//
உங்கள் உற்சாகமான பின்னூட்டங்களுக்கு அடியேன் தான் நன்றி சொல்ல வேண்டும்!
//வடுவூர் குமார் said...
அருமையாக சொல்லியுள்ளீர்கள்.முழு குடும்பத்துக்கும் படித்துக் காண்பித்தேன். மிக்க நன்றி//
ஆகா, குமார் அண்ணா!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் என் மனமார்ந்த நன்றி! பொறுமையாகப் படித்ததற்கும் கேட்டதற்கும்!
//cheena (சீனா) said...
பொதுவா கேயாரெஸ் பதிவுகளிலே, பின்னூட்டங்கள் - கேள்வி பதிலா, விவாத மேடையா, இருக்கும்//
அச்சோ! எல்லாப் பதிவுகளும் அப்படி இல்லீங்க சீனா! :-)
//சண்டை யாக இல்லாமல் மாற்றுக் கருத்துகளும், நகைச்சுவை கலந்து பேசப்படும். நான் பதிவுகளாஇ எப்படி கவனமாக படிக்கிறேனே, அதே கவனத்துடன் மறுமொழிகளையும் படிக்கிறேன//
மிகவும் நன்றி!
மறுமொழி இடுபவர்கள் கேட்கும் கேள்விகளும் பதில்களும், விவாதங்களும், சிந்தனையும் தான் பதிவை மேலும் அழகு படுத்துகின்றன!
சீரியஸ் விவாதம் கூடக் கொஞ்சம் நகைச்சுவை கலந்தா இன்னும் சோபிக்கும்!
மாதவிப் பந்தலில் மறுமொழி இடுபவர்களும், படிப்பவர்களும் தான் இங்கு துழாய் மணம் மலர்ந்து வீசக் காரணம்! அடியார் ஒருவொருக்கொருவர் அவன் குணானுபவங்களைப் பேசியும் உணர்ந்தும் மகிழ்வதே ஒரு ஆனந்தம்! ஆத்ம திருப்தி!
அதை அடியேனுக்கு அளிக்கும் நீங்களும், ஏனைய நண்பர்களும்....
எந்தரோ மகானுபாவுலு
அந்தரிகி வந்தனமுலு!
//குமரன் (Kumaran) said...
வரிசையாகப் படித்து வரும் போது மகிழ்ச்சியான வியப்புடன் அடியேன் புருவங்கள் பல முறை உயர்ந்தன. :-)//
குமரன், என் தங்கை கொஞ்ச நாள் நடனம் கற்றுக் கொண்டிருந்தாள்! அப்போ புருவத்தை உயர்த்தி உயர்த்தி என்னை மிரட்டுவாள்! :-)
நல்ல வேளை குமரன் புருவத்தை அப்படி நெறிக்கவில்லை! :-)
//அர்க்கயம் - கைகளுக்கு
பாத்யம் - பாதங்களுக்கு
ஆசமனீயம் - இது ஆசமனம்
ஸ்நானீயம் - திருமேனிக்கு
சர்வார்த்த தோயம் - மற்ற அனைத்துக்கும்
- இவை தான் பஞ்ச பாத்திரங்கள்!
இவை இல்லாமல் தண்ணீர் முகந்து வைக்க இன்னொரு பெரிய பாத்திரம், தரையில் இருக்கும். அதில் இருந்து நீர் எடுத்து தான் இந்த பாத்திரங்களுக்கு நீர் விடுவார்கள்!
நமக்குக் கொண்டு வந்து கொடுக்கும் தீர்த்தம், சர்வார்த்த தோயம் என்ற அந்த ஐந்தாம் பாத்திரத்தில் இருந்து. அது தான் நடுவில் வைக்கப்பட்டு இருக்கும்! மற்ற அனைத்தின் நீரும் இந்த ஐந்தாவதில் இருந்து தான் போயும், வரவும் செய்யும்! common denominator மாதிரி.
//
லாஜிக்கலாக நீங்க சொல்வது சரியாக இருக்கு. ஆனா நீங்க சொல்லியிருக்கிற ஒவ்வொன்றும் ஒருவித உபசாரம், இதெல்லாமே சேர்ந்ததைத்தான் நமக்கு பிரசாதமாக தருகிறார்கள் (திருவாராதனம் முடிந்து பிரசாதம் வினியோகிக்கும் சமயத்தில் இந்த 5 கிண்ணங்களிலிருந்தும் சிறிது, சிறிதாக எடுத்து ஒன்றில் சேர்த்து அதனை ந்மக்கு எடுத்து வருவார்கள்). இருக்கும் 5ல் ஒன்றையே அர்ச்சகர் தனது ஆசமனத்திற்கும் எடுத்துக் கொள்வதை கவனித்திருக்கிறேன். எனவே எனது சந்தேகம் ஒவொரு கிண்ணத்திற்கும் வேறு ஏதோ ஆகம விதிகள் இருக்கலாம் என்பதே. யாரேனும் ஆகம விதிகள் தெரிந்தவர் இன்னும் விளக்கலாம்.
கே.ஆர்.எஸ்.
சடாரி பற்றி ஒரளவு தெரியும், இன்று மிகவும் விளக்கமாக தெரிந்துக் கொண்டேன். கூடவே தீர்த்தத்தின் மகிமையும் உணர்ந்தேன். நன்றிகள் பல.
உங்கள் திருப்பணி தொடரட்டும் :)
//Anonymous said...
Theerthamum, sadarium petruk konden.Some of your writings are sadari to me,excellent.//
வாங்க ஸ்ரீநிவாசன் சார்
தீர்த்தம் - பஞ்ச பாத்திரம் பற்றி மதுரையம்பதி கேள்வி மேல கேள்வி கேக்குறாரே!
நீங்க விளக்க முடியுமா?
//துளசி கோபால் said...
ஹைய்யோ..........
அருமை அருமை அருமை//
நன்றி டீச்சர்!
//பச்சைக்கற்பூரம் ஏலக்காய் மணக்கும் தீர்த்தம்...அடடா.....
நம்ம வீட்டுலே இதுக்கு 'சாமி வாசனை'ன்னே பேரு.//
ஆகா...சாமி வாசனை! பேரே வாசனையாத் தான் இருக்கு!
சுகந்தப் பொடின்னும் சொல்லுவாங்க!
//'எல்லாத்துக்கும் மேலாக துளசி'
ரசிச்சேன்:-))))//
இத எழுதும் போது, சத்தியமா ஒங்களத் தான் நினைச்சேன்! நீங்களும் மார்க் பண்ணி காட்டி இருக்கீங்க! :-)
//இரண்டாம் சாணக்கியன் said...
கண்ணபிரான் நானும் பல முறை சடாரி தரிசனம் கிடைக்கப் பெற்றுள்ளேன். ஆனால் இவ்வளவு உள்ளார்த்தம் தெரியாது. இப்போது தங்கள் புண்ணியத்தால் தெரிந்து கொண்டேன்..//
நன்றி..இரண்டாம் சாணக்கியன்!
நமக்குத் தெரிஞ்ச கொஞ்ச நஞ்சத்தைப் பகிர்ந்துக்கத் தானே பதிவு!
அடுத்த முறை தீர்த்தம்/சடாரி வாங்கும் போது பொருத்திப் பாத்துக்கோங்க! :-)
//குமரன் (Kumaran) said...
அந்த நீர்மையைக் குறிக்கும் வகையில் தீர்த்தம் வழங்கப்படுகிறது என்பது இதுவரை அடியேன் அறியாதது//
இதைச் சென்னைக்குப் போன் போட்டு உறுதியும் செய்து கொண்டேன் குமரன்! அதான் பதிவிட லேட்டாச்சு!
//திருவரங்கத்தில் ஒரே ஒரு முறை ஈரவாடைத் தீர்த்தம் பெறும் பாக்கியம் பெற்றிருக்கிறேன்//
அடியேன் திருவல்லிக்கேணியில் பெற்றுள்ளேன் குமரன்!
பத்மா,
ராத்திரி கோயிலை அடைக்குமுன் செய்யும் அர்த்தஜாம பூஜையின்போதுதான்
சுண்டக்காய்ச்சிய பால் குங்குமப்பூ மணத்தோடு நிவேதனமாகி நமக்குக் கிடைக்கிறது.
ஒரு சமயம்( அன்று எங்கள் 20 வது கல்யாணநாள்) திநகர் திருப்பதி தேவஸ்தானம் கோயிலுக்குப் போறோம். அண்ணன் எங்களைக் கடைக்குக் கூட்டிட்டுப்போய் எனக்கு ஒரு நவரத்தின மோதிரம் பரிசாக வாங்கினார். அதை கொண்டுபோய் ஸ்வாமி சந்நிதியில் வச்சுத்தரணுமுன்னு அவருக்கு எண்ணம்.
ட்ராஃபிக்லே மாட்டிக்கிட்டுக் கோயில் போகும்போது வாசல் அடைச்சாச்சு. பரவாயில்லைன்னு அங்கே அந்தப் படியில் மோதிரத்தை வச்சு எடுத்து எனக்குத் தந்தார். அந்த க்ஷணம் பக்கவாட்டில் இருக்கும் வாசலில் இருந்து வெளிவந்த பட்டர் அந்த நிவேதனப்பாலை எங்களுக்குத் தந்தார். வேற யாருமே இல்லாததால் மொத்தமும் எங்கள் கைகளில். ஹப்பா.......... என்ன மணம்!!!
எம் பெருமா(ன்)ள் ஸ்வாமியே எங்களுக்கு அருள் செய்ததா அப்படி ஒரு மனத்திருப்தி.
எல்லாம் போன ஜென்மத்தில் செஞ்ச புண்ணியமா இருக்கலாம்.
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ரவிசங்கர்!
சடாரி பற்றி ஏற்கனவே அறிந்தேன். தீர்த்தம் பற்றிய தங்கள் செய்தி புதிய சுவையான செய்தி.//
நன்றி யோகன் அண்ணா!
//ஈழத்தில் நான் பெருமாள் கோவிலில் மாத்திரம் இந்த மணம் கமழும் தீர்த்தம் பருகியுள்ளேன்.
அத்துடன் படித்ததாக ஞாபகம் தீர்த்தக் கரண்டி தலை, பாம்பு வடிவில் உள்ளது.//
சில சமயங்களில் சக்கரம் கூட கரண்டியின் தலையில் இருக்கும் யோகன் அண்ணா!
//திருப்பாற்கடலைக் கடைந்ததை நினைவூட்டுவது. அந்த அமிர்தமே இந்தத் தீர்த்தம். நீங்கள் அறிந்தீர்களா??//
ஹூம்.
அமிர்த பானத்தைக் காட்டிலும் தீர்த்தம் பெருமை வாய்ந்தது! அமிர்தத்துக்கு பெருமாள் திருமேனி சம்பந்தம் இல்லை! தீர்த்தத்துக்கு உண்டு!
அமிர்தம் கஷ்டப்பட்டு கடைந்தார்கள்!
தீர்த்தம் நல்லார், பொல்லார் என்ற பாகுபாடு இன்றி எல்லார்க்கும் கிடைக்கும்!
//இது சைவ நம்பிக்கையா??//
இல்லை-ன்னு தான் நினைக்கிறேன்!
//Anonymous said...
அருமையான பதிவு, புரியும்படி எழுதி்ய எளிமையான நடை - எங்களின் வாழ்த்துக்கள்//
நன்றி இராகவன்!
//இந்த பதிவை மறறவர்களுக்கும்
forward செய்வது எப்படி//
தமிழ்மணப் பட்டை, pdf வேலை செய்யலைன்னு நினைக்கிறேன்!
பதிவின் கீழே /கமெண்டுகளின் முன்னால் ஒரு அஞ்சல் அட்டை (envelope) போல் படம் இருக்கு பாருங்க! அதைக் கிளுக்குங்க!
இல்லீன்னா google toolbar உங்கள் browser-இல் இருந்தா, அங்கிருந்து அனுப்பலாம், எந்த இணையப் பக்கத்தையும்!
//நாகை சிவா said...
கே.ஆர்.எஸ்.
சடாரி பற்றி ஒரளவு தெரியும், இன்று மிகவும் விளக்கமாக தெரிந்துக் கொண்டேன்.//
நாகை அழகியாரைக் கண்ணாரக் கண்ட புலிக்குத் தெரியாதா என்ன சடாரி மகிமை!
//கூடவே தீர்த்தத்தின் மகிமையும் உணர்ந்தேன்.
உங்கள் திருப்பணி தொடரட்டும் :)//
எதுக்குப் புலி சிரிப்பான் போட்டீங்க!
என்னைய வச்சி, ஜிரா மாதிரி, காமெடி கீமெடி பண்ணலையே! :-)
//குமரன் (Kumaran) said...
கெக்கேபிக்குணி உங்களுக்காக...//
நன்றி, நன்றி, நன்றி...!!!!!! ஆக்கியாழ்வான் பெயர் மறந்தே போனேன்... அவர் பெயர் படித்ததும் எல்லாம் நினைவு வந்தது - நான் "கல்கி-கோகுல"த்தில் படித்தது! கூகிளாண்டவர் துணையோடு தமிழில் யமுனா யாருடைய பேரனார் என்பது இன்னும் நினைவுக்கு வரவில்லை... இந்த கதையை இப்போது என்னால் இயன்ற வரை என் ஏழு வயது குழந்தைக்குச் சொல்லிக் கொடுத்தேன்.. (ஒவ்வொரு "ஏன்"உக்கும் "பதிலோ"டு:-)))) உங்கள் தமிழில் கிடைத்திருந்தால் அக்கார அடிசில் லைனில் இரண்டாவது முறை நின்று வாங்கினாற்போல் இருக்கும் (தானம் கொடுத்த...!)
எப்படியோ, பதிவிலும் பின்னூட்டங்களிலுமாக ஆன்மிகம் பெருக்கி வருவதற்கு உங்கள் அனைவருக்கும் மிக்க்க்க்க்க்க்க்க்க்க நன்றி!
ஹிஹி, கேயாரெஸ் என் முந்தைய பின்னூட்டத்தின் உள்குத்தை கவனிக்கல... கவனிச்சவங்க சொல்லாம இருக்கறதும் நல்லது;-) நான் அமைதியா போயிடறதும் நல்லது...!
//கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
யமுனா யாருடைய பேரனார் என்பது இன்னும் நினைவுக்கு வரவில்லை...//
நாதமுனிகளின் பேரனார் ஆளவந்தார்!
அவரை அரச போகத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வருவது மணக்கால் நம்பிகள் - தூதுவளைக் கீரையின் உதவியோடு!
//இந்த கதையை இப்போது என்னால் இயன்ற வரை என் ஏழு வயது குழந்தைக்குச் சொல்லிக் கொடுத்தேன்..//
ஓ...ஸ்டோரி டெல்லரா நீங்க! வாழ்த்துக்கள் :-)
குழந்தைக்கேற்ற பல அருமையான இறைவன் கதைகள் தொகுக்க ரொம்ப நாள் எண்ணம்!
//உங்கள் தமிழில் கிடைத்திருந்தால்//
அதற்கென்ன இட்டுவிட்டால் போகிறது! மாதவிப் பந்தலும் கூடலும் இங்கு தானே இருக்கு!
//ஹிஹி, கேயாரெஸ் என் முந்தைய பின்னூட்டத்தின் உள்குத்தை கவனிக்கல... //
என்னப்ப இது உ.கு, வெ.கு ன்னுகிட்டு!
ரவி,
சடகோபம் பாபம் போக்கும்.
தீர்த்தம் ஆன்ம சுத்தி கொடுக்கும்.
இந்த இரண்டு நம்பிக்கைகளும் இருந்தால் வாழ்வு செம்மைப்படும். இது நாம் வளரும் சம்பிராதயம் இல்லையா.
நீங்கள் இத்தனை விவரமாகச் சொல்லும்பொழுதுதான் அந்த நம்பிக்கை இன்னும் வலுப்படுகிறது.
நன்றிம்மா.
//குழந்தைக்கேற்ற பல அருமையான இறைவன் கதைகள் தொகுக்க ரொம்ப நாள் எண்ணம்!//
இப்போ எனக்கு ரொம்பத் தேவையான ஒன்று....சீக்கிரம் பண்ணுங்கய்யா....
//அர்க்கயம் - கைகளுக்கு
பாத்யம் - பாதங்களுக்கு
ஆசமனீயம் - இது ஆசமனம்
ஸ்நானீயம் - திருமேனிக்கு
சர்வார்த்த தோயம் - மற்ற அனைத்துக்கும்
- இவை தான் பஞ்ச பாத்திரங்கள்!//
- அடியேன் தம்பி(அம்பியின்),மிகசரியாக சொன்னேள்,வைஷ்ணவத்தில் வைகானசம்,பான்யராத்ரம் அப்படி 2 சம்ப்ரதாயம் உண்டு,அதில் காணலாம்.ஆசமனீயம் பண்ணிவிட்டு திருமால் வாய் தொடைக்க ஒரு வஸ்திரம் அவர்கள் தோளில் எப்போதுமிருக்கும்
அதே போல் திருவடிக்கு எப்பொதும் வைஷ்ணவத்தில் தனிமரியதை உண்டு //அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவமாட்டார்கள்// என்று ஒரு பழமொழி உண்டு அது வைஷ்ணவத்தில் இருந்து வந்ததுதான்.பெரிய திருவடி என்பது கருடாள்வாருடய பெயர்,சின்ன திருவடி என்பது அனுமாருலயபெயர் ராமாயணதில் நாக பாணம் தாக்கி இளயாள்வார் இருக்கும் போது ராமனுக்கு உதவ அவருடய தம்பிமார் எவருமில்லை,மலையை கொன்டு வந்தது சின்னதிருவடி,மருந்தாக வந்தது(கருட கொடி)சஞீவினி பெரியதிருவடி.ரவி அண்ணா சரிதானா? தவறு இருப்பின் திருத்தவும்.
அடியேன்,
கணேசன்
பதிவு மட்டுமல்ல பின்னூட்டங்களும் உங்க கடையில் சுவாரசியமாக இருக்கும். :))
தம்பி வந்துட்டு போயாச்சா?
//அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவமாட்டார்கள்//
@thambi, இதுல ஏதோ உள்குத்து இருக்கற மாதிரி இருக்கே!
eppadeenga ippadi???
enaku nijamave enna solrathune puriyala
supernga...
//ambi said...
பதிவு மட்டுமல்ல பின்னூட்டங்களும் உங்க கடையில் சுவாரசியமாக இருக்கும். :))//
ஹிஹி!
கடை-ன்னு முடிவு பண்ணிட்டீங்களா அம்பி! சரி பரவாயில்லை! க்ரெடிட் கார்டை எடுங்க! :-)))
//தம்பி வந்துட்டு போயாச்சா?//
அண்ணன் வரும் பின்னே! - நல்ல
தம்பி வரும் முன்னே! :-)
//அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவமாட்டார்கள்//
@thambi, இதுல ஏதோ உள்குத்து இருக்கற மாதிரி இருக்கே!//
உமக்கு ரெண்டுமே தான் விழப் போகுது! உள்குத்து, வெளிக்குத்து! :-)
//dubukudisciple said...
eppadeenga ippadi???
enaku nijamave enna solrathune puriyala//
சொல்லுங்க சுதாக்கா...
பயப்படாம தெகிரியமாச் சொல்லுங்க!
திட்ட வந்தீங்க...பாதியில் நிறுத்தலாமா? ரெடி,ஸ்டார்ட் மீசிக்! :-)))
//dubukudisciple said...
supernga...//
ஓ...இதைச் சொன்னீங்களா?
நன்றி சுதாக்கா!
//Thambi said...
வைஷ்ணவத்தில் வைகானசம்,பான்யராத்ரம் அப்படி 2 சம்ப்ரதாயம் உண்டு,அதில் காணலாம்.
ஆசமனீயம் பண்ணிவிட்டு திருமால் வாய் தொடைக்க ஒரு வஸ்திரம் அவர்கள் தோளில் எப்போதுமிருக்கும்//
வாங்க கணேஷ் தம்பி. நலமா?
ஒங்க அண்ணனுக்கு ஏதோ உள்குத்து வேணுமாமே! ஆசைபட்டுக் கேக்காரு! கொடுத்துடுங்க! :-)
பான்யராத்ரம் = பாஞ்சராத்ரம்
//பெரிய திருவடி என்பது கருடாள்வாருடய பெயர்,சின்ன திருவடி என்பது அனுமாரு//
மிகவும் சரியாச் சொன்னீங்க!
இன்னொன்னு...
பெரிய திருவடி-ன்னு கருடனைச் சொல்வதால் அனுமன் சிறியவன்-னு பொருள் இல்ல!
பெரிய/சிறிய அடைமொழி பக்தர்களைக் குறிக்கவில்லை! பெருமாளைத் தான் குறிக்குது!
பெரிய பெருமாள் அரங்கனின் வாகனம் கருடன் = அதனால் பெரிய திருவடி!
சிறிய பெருமாள் இராமனின் வாகனம் அனுமன் = அதனால் சிறிய திருவடி! :-)
//ராமனுக்கு உதவ அவருடய தம்பிமார் எவருமில்லை,மலையை கொன்டு வந்தது சின்னதிருவடி,மருந்தாக வந்தது(கருட கொடி)//
கலக்குறியே கணேசா!
மிகவும் சரி!
அண்ணன்-தம்பி என்று எவரும் ஏதும் செய்ய முடியாத சூழ்நிலை! மற்ற தம்பிகளான குகன், சுக்ரீவன், வீடணன் கூட ஏதும் செய்ய முடியவில்லை!
அனுமனும்/கருடனும் தான் நாக பாசத்தை நீக்கினார்கள்!
அதான் திருவடி உதவுவது போல், அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள்-னு வந்தது.
இதற்கு இன்னொரு கதையும் உண்டு!
இலக்குவன் பேச்சைக் கேட்காமல் கூடவே வந்தான்!
பரதனும் ஆளமாட்டேன் என்று சொல்லிட்டான்!
கடைசியில் அண்ணன் பேச்சைக் கேட்டு ஆண்டது பாதுகை என்னும் திருவடி தான்! இராமனோடு கூடவே இருக்கனும் என்கிற தன்னலத்தை விடப் பொதுநலத்தை மதித்து, அவனை விட்டுப் பிரிந்து அவன் சொற்படி நடந்தது "அடி" தான்!
அதான் அடி உதவினாற் போலே, அண்ணன் தம்பி உதவினாரில்லை என்ற வழக்கும் எழுந்தது - இது இன்னொரு பரிமாணம்!
சரி...அடி உதவுவது போல்னு, இதைச் சொல்லிச் சொல்லியே, அடி கொடுக்க நினைக்கும் சில அண்ணன்களை என்ன பண்ணலாம் சொல்லுங்க? :-))
//வல்லிசிம்ஹன் said...
ரவி,
சடகோபம் பாபம் போக்கும்.
தீர்த்தம் ஆன்ம சுத்தி கொடுக்கும்.//
இதுக்குத் தான் வல்லியம்மா வேணும்கிறது!
இவ்ளோ பெரிய பதிவை, நச்சுன்னு ரெண்டே வரியில் சொல்லீட்டீங்க!
கலக்கல்!
//துளசி கோபால் said...
பரவாயில்லைன்னு அங்கே அந்தப் படியில் மோதிரத்தை வச்சு எடுத்து எனக்குத் தந்தார். அந்த க்ஷணம் பக்கவாட்டில் இருக்கும் வாசலில் இருந்து வெளிவந்த பட்டர் அந்த நிவேதனப்பாலை எங்களுக்குத் தந்தார். வேற யாருமே இல்லாததால் மொத்தமும் எங்கள் கைகளில். ஹப்பா.......... என்ன மணம்!!!
எம் பெருமா(ன்)ள் ஸ்வாமியே எங்களுக்கு அருள் செய்ததா அப்படி ஒரு மனத்திருப்தி//
சின்னச் சின்ன சம்பவங்கள் தான் பெரிய பெரிய நெகிழ்வைக் கொடுக்குது டீச்சர்!
எனக்கும் இப்படித் திருமலையில் ஓரிரு முறை ஆகியுள்ளது! கூடை நிறைய பிரசாதங்கள் நடு இரவு இரண்டு மணிக்கு கைக்கு வருகிறது! சும்மா ஓரமா நின்னு நண்பர்களுடன் கதை அடிச்சுக்கிட்டு இருந்த என்னிடம்!
வடை, அதிரசம், அன்னக் கூடை...
அத்தனையும் சாப்பிடவும் முடியாது. கொஞ்சம் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு, மறுநாள் காலை, குளக்கரையில் மற்ற பக்தர்களுக்கு ஒவ்வொரு பிடி கொடுத்து விட்டோம்!
திருவடியை பற்றி இன்னொறு தகவலும் நினைவிற்கு வருகிறது பரதாள்வாரும்,சத்ருக்கனாள்வாரும் சுதர்சன,பாஞ்ஜஜன்ய அம்சம் என்பது நம்பிக்கை,இளயாள்வாரோ ஆதிசேஷ அம்சம்.இவர்கள் ஒரு நாள் பெருமாளுடைய பாதுகையை ஏளனம் செய்தனர்.//ஏ பாதுகையே!நீ பெருமாளுடைய கால்களில் இருப்பவன் நாங்களோ அவரின் திருகரங்களில் இருப்பவர்கள்// என்றனர்.பாதுகையின் வருத்தம் கண்ட பெருமாள் ராமாவதாரத்தில் அந்த பாதுகையை பரதன் தலையில் சுமக்க வைத்தார்,சத்ருக்கனனோ சாமரம் வீசினார்,சுவாமி போல் 14வருடம் பாதுகை ஆட்சி செய்தது.அரங்கன் திருவடி பணிந்தவரை அவர்கள் எண்ணிப்பார்காத ஒரு நிலைக்கு உயர்துவார்.இதை கம்பர் கர்ணன் வாய் வழியாக //வான் பெற்ற நதிகமல்தாள் வணங்கப்பெற்றேன் //என்று போற்றுவார்.
தம்பி ஆட்டம் ஜாஸ்த்தியா இருக்கே! :p
சரி, நம்ப பங்குக்கு கொஞ்சம் எடுத்து விடுவோம்.
கால் வண்ணம்(வாமனர்) அங்கு கண்டேன்!
கை வண்ணம்(ராமர்) இங்கு கண்டேன்!னு பெருமாளின் பெருமையை கம்பர் பாடிருக்கார். கம்பர் தானே? :))
அம்பியும் தம்பியும் இப்படிப் போட்டு மாறி மாறித் தாக்குறாங்கலேப்பா! இந்தப் பொடியன் என்ன செய்வேன்! :-)
இரண்டு யானைகளுக்கு இடையில் மாட்டிக் கொண்ட ஒரு எறும்பு ஆயிட்டேன், போலக் கீதே! :-)
//கம்பர் தானே? :))//
கம்பரே தான்! பின்ன நீங்களா? :-)
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
இனி, இந்த உலகுக்கு எல்லாம்
உய்யவண்ணம் அன்றி, மற்று ஓர்
துயர் வண்ணம் உறுவது உண்டோ
மை வண்ணத்து அரக்கி போரில்,
மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்
கால் வண்ணம் இங்குக் கண்டேன்
////கால் வண்ணம் (வாமனர்) அங்கு கண்டேன்!
கை வண்ணம் (ராமர்) இங்கு கண்டேன்!னு//
வாமனர்-ராமர் ஒப்புமையும் நல்லாத் தான் இருக்கு அம்பி!
கம்பர் வேறு ஒரு சூழலில் பாடறாரு!
மை வண்ணத்து அரக்கி போரில் = தாடகையைக் கொன்றது கைவண்ணம்!
பின்னர் அகலிகைக்கு உயிர் கொடுத்தது கால்வண்ணம்!
முதலில் கைவண்ணம்!
அப்பறம் கால்வண்ணம்!
//Thambi said...
அந்த பாதுகையை பரதன் தலையில் சுமக்க வைத்தார்,சத்ருக்கனனோ சாமரம் வீசினார்//
பேசாம, நீங்க ஒரு வலைப்பூ தொடங்கி இப்படி அருமையா ஒவ்வொன்னாச் சொல்லலாமே தம்பி!
சீக்கிரம் துவங்குங்க!
மேலும், அண்ணன் லைன் தான் க்ளியர் ஆயிடுச்சுல்ல! :-)
//ஒரு நிலைக்கு உயர்துவார்.இதை கம்பர் கர்ணன் வாய் வழியாக //வான் பெற்ற நதிகமல்தாள் வணங்கப்பெற்றேன் //என்று போற்றுவார்.
கம்பர்-கர்ணனா?
ஆகா! எங்கே! எப்போது?
//தாடகையைக் கொன்றது கைவண்ணம்!
பின்னர் அகலிகைக்கு உயிர் கொடுத்தது கால்வண்ணம்!
முதலில் கைவண்ணம்!
அப்பறம் கால்வண்ணம்!
//
அண்ணா, நான் சரண்டர், அதுக்காக யானை, எறும்புனு எல்லாம் எங்கள வெச்சு காமடி கீமடி பண்ணாதீங்க. :)))
//கம்பர்-கர்ணனா?
ஆகா! எங்கே! எப்போது?
//
சாரி எஜமான், கம்பர் இல்லை. அது வில்லிப்புத்தூரார்.
நின் தமிழோடு விளையாடவே யாம் இங்கு வந்தோம்!
ஹிஹி, இப்படி தான் சமாளிக்கனும்!னு என் அண்ண சொல்லி குடுத்தான்.
//எனக்கும் இப்படித் திருமலையில் ஓரிரு முறை ஆகியுள்ளது! கூடை நிறைய பிரசாதங்கள் நடு இரவு இரண்டு மணிக்கு கைக்கு வருகிறது! சும்மா ஓரமா நின்னு நண்பர்களுடன் கதை அடிச்சுக்கிட்டு இருந்த என்னிடம்!
வடை, அதிரசம், அன்னக் கூடை...
//
ஏன் கிடைகாது! இப்படி திருப்பதி தேவஸ்தானம் official website மாதிரி எழுதினா கூடை நிறைய கிடைக்காம எப்படி அண்ணா இருக்கும்,என்ன துளசி கோபால் டீச்சர் நான் சொல்லுவது உண்மைதானே.....:) LoL
நேத்து நம் வீட்டுக்கு வந்த நண்பருடன் பேசுனப்ப ( எல்லாம் நம்ம வீட்டு பண்டிட் கஸ்தூரிதான்) உங்க பதிவுகளைக் கட்டாயம் படிச்சுப்பாருன்ங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன்.
அவுங்களுக்கு அனுப்பணுமுன்னு லிங்க்ஸ் தேடி அனுப்பியது இது.
புதுசா வர்றவங்களுக்கு இப்போதைக்கு இது பயன்படும் என்று ஒரு தோணல்,
நீங்க pdf ஆக மாத்துற வரை.
http://verygoodmorning.blogspot.com/2006/11/blog-post_15.html
http://verygoodmorning.blogspot.com/2006/11/blog-post_116361653246238992.html
http://verygoodmorning.blogspot.com/2006/11/1-2.html
http://verygoodmorning.blogspot.com/2006/12/4.html
http://verygoodmorning.blogspot.com/2006/12/5.html
http://verygoodmorning.blogspot.com/2006/12/blog-post_15.html
http://verygoodmorning.blogspot.com/2007_02_01_archive.html
http://verygoodmorning.blogspot.com/2007_04_01_archive.html
http://verygoodmorning.blogspot.com/2007_07_01_archive.html
http://verygoodmorning.blogspot.com/2007_08_01_archive.html
http://verygoodmorning.blogspot.com/2007_09_01_archive.html
http://verygoodmorning.blogspot.com/2007_10_01_archive.html
http://verygoodmorning.blogspot.com/2007_11_01_archive.html
http://verygoodmorning.blogspot.com/2007/12/26.html
http://verygoodmorning.blogspot.com/2007/12/blog-post.html
Post a Comment