Monday, December 10, 2007

சுப்ரபாதம்(26&27): கோயிலில் முதல் தரிசனம் இவனுக்கா?

காலையில் சில பேர் எழுந்தவுடன், கட்டிலை விட்டு, முதலில் கண்ணாடி முன்னாடி போய் நிப்பாங்களாம்? எதுக்குன்னு கேக்கறீங்களா?
கூட்டுக் குடும்பத்தில் இருந்திருந்தா உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்!
தலை கலைஞ்சி, கண்ணு சொக்கி, வாயில் ஜொள்ளு ஒழுகி, ஹா-ன்னு ஒரு கொட்டாவி விட்டு...காலாற எழுந்திரிச்சி நடந்தா...

அய்யோ.....வாஷ்பேசினுக்கு போற வழியில அத்தைப் பொண்ணு வந்து நிக்குறா...இவ எங்க இங்க வந்தா?
நம்ம கலைஞ்சி போன மூஞ்சிய பாத்திருப்பாளோ? நேத்துன்னு பாத்து, ஷேவிங் கூடப் பண்ணல! இப்பிடி யோசித்துக் கொண்டே, கையாலயே தலை சீவிக்கிற "சீவிப் பசங்க", இருக்குறாங்க! :-)
இப்படிப் பெருமாளும் துயில் களைஞ்சி ஒரு சீவு சீவிக்குறாரு! :-)



சுப்ரபாதப் பதிவுகள், அடுத்த பதிவோட முடியப் போகுது! அதனால் அடுத்த பதிவு மிகவும் ஸ்பெஷலான பதிவு! அதுக்கு முன்னோட்டமா, சில தகவல்களை இன்னிக்குப் பாக்கலாம்!

திருமலையில் சுப்ரபாத சேவைன்னே ஒரு தரிசனம் உண்டு! விடியற்காலை சுமார் 02:30 மணிக்கு துவங்கும் சுப்ரபாதம்.
அதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு தான் நடை சாத்திக் கோவிலை மூடி இருப்பாங்க.
சடக்குன்னு அடுத்த நாளுக்காக, மீண்டும் திறந்திடுவாங்க! கோவிலில் முதல் தரிசனம் யாருக்குத் தெரியுமா?

வேதம் ஓதுபவர்களுக்கா? - இல்லை!
தமிழ் ஓதும் விற்பன்னருக்கா - இல்லை!
அரசனுக்கா? மந்திரிக்கா? - இல்லை! இல்லை!!
படித்த மேதைக்கா - இல்லை!
நேத்து உண்டியலில் எல்லாரையும் விட அதிகமாப் பணம் கொட்டினவருக்கா? - இல்லவே இல்லை!

இவர்கள் எல்லாரும் கைகட்டிக் காத்திருக்க, எங்கிருந்தோ "மாஆஆ" என்று ஒரு சத்தம்!
கூட்டம் அதிகம் இல்லை! குளிர் தென்றல் வீசுகிறது! சில பக்தர்கள் அங்கப் பிரதட்சிணம் செய்து முடிக்கிறார்கள்;

இப்போது நாம் நிற்கும் இடம் திருமாமணி மண்டபம். இரண்டு பெரிய காண்டா மணிகள் வாசலில்! அருகே நந்தா விளக்கு!
எதிர்ப் பக்கம் கருடன் நிற்கிறான். அவனுடன் சேர்ந்து நாம் எல்லாரும் நிற்கிறோம்.
வாயிலைக் காக்கும் துவார பாலகர்கள் (ஜய விஜயர்கள்) இருபுறமும் காத்து நிற்கும் தங்க வாயில் (தெலுங்கில்: பங்காரு வாகிலி) மூடப்பட்டு உள்ளது.

அர்ச்சகர்கள் குடங்களில் நீருடன் நிற்கின்றனர். பூக்குடலைகள் தாங்கிக் கொண்டு இன்னும் சில பேர் காத்துள்ளனர் - யாருக்கு?

திருமலையில் ஜீயர் என்னும் வைணவத் தலைவருக்கு "பெரிய கேள்வி அப்பன்" என்ற தூய தமிழ்ப் பெயர்! ஆலய நிர்வாகத்தில் கேள்வி கேட்கும் உரிமை பெற்றவர்; ஆதலால், கேள்வியப்பன் என்ற தமிழ்ப்பெயரைச் சூட்டி, அந்தப் பதவியை உருவாக்கினார் இராமானுசர்.
அந்தக் கேள்வியப்பர் பூட்டின் சாவியைத், துவார பாலகர்கள் அருகில் வைத்து, கதவைத் திறக்க அனுமதி பெறுகின்றார்; பின்னர் அவரும் காத்துள்ளார் - யாருக்கு?

அன்னமாச்சார்யரின் பூபாளக் கீர்த்தனை தம்பூராவில் இசைக்கப்படுகிறது;
தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் தமிழ்த் திருப்பள்ளி எழுச்சியின் முதல் பாசுரமும் அப்படியே இசைக்கப்படுகிறது! - வேறு மொழிச் சத்தங்களோ, கோஷங்களோ ஏதும் இல்லை!

மணிகள் ஒலிக்கின்றன; பேரிகையும் ஊதுகோலும் சேர்ந்து ஓசை எழுப்புகின்றன;
காற்றில் நெய் தீபத்தின் மணமும், பச்சைக் கர்ப்பூரத்தின் வாசனையும் மூக்கைத் துளைக்கிறது!
இதோ.....திருக்கதவம் திறக்கப்படுகிறது!
எல்லோர் கண்களும் எக்கி எக்கி, எம்பெருமானைச் சேவிக்கத் துடியாய்த் துடிக்க...
அடச்சே!....வெள்ளைத் திரை ஒன்று போடப்பட்டுள்ளதே! நாம் காண முடியாதா? - முடியாது...முதல் தரிசனம் வேறு யாரோ ஒருவருக்கு! - யாரப்பா அது?

ஜீயர், அர்ச்சகர்கள் எல்லாரும் உடனே ஒதுங்கிக் கொள்கிறார்கள்!
படிக்காத, பகட்டு இல்லாத ஒருவர் உள்ளே வர,
எல்லாரும் வழிவிட்டு ஓரமாக நின்று கொள்கிறார்கள்!

யாருக்கு இப்படி ஒரு மரியாதைன்னு பாக்குறீங்களா? - ஒரு மாட்டு இடையனுக்கு!
பசுவும், கன்றுமாய் ஓட்டி வரும் இடையன், பொற்கதவின் முன் வந்து நிற்க...
மெல்லத் திரையை விலக்கி....அவன் மட்டும் இறைவனை ஹா...வென்று பார்க்கிறான்! அவனுடன் பசுவும் கன்றும் இறைவனைக் காண்கின்றன!
பசுவும் கன்றுமாய், வரும் கோனாரின் முகத்தில் தான் திருமலை அப்பன் முதலில் விழிக்கின்றான்!

கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும் என்று மாணிக்கவாசகர் பாடுவது தான் எவ்வளவு பொருத்தமாய் இருக்கு!
இந்தப் பழக்கம் பல நூற்றாண்டுகளாய் இருந்து வரும் ஒன்று! சாதி வித்தியாசங்கள் பார்க்கப்பட்ட காலத்தில் கூட, இந்த வழக்கம் நடைபெற்றுக் கொண்டு தான் இருந்தது.
கோ+விந்தன் = பசு+காப்போன் அல்லவா அவன்!
உயிர்கள் என்னும் பசுக்களைக் காத்து மேய்க்கும் "நல்ல மேய்ப்பன்"! அதனால் தான் பசுவைக் காட்டி, அன்றைய பணியை, இறைவனுக்கே அறிவுறுத்திச் செல்கிறான் இந்த இடையன்!

அதற்கு அப்புறம் தான் ஜீயரும், அர்ச்சகர்களும், இன்ன பிற அடியவர்களும் ஒவ்வொருவராய் உள்ளே செல்கிறார்கள்! அனைவர் கையிலும் மங்கலப் பொருட்கள் - கண்ணாடி, விளக்கு, மலர்மாலை என்று...
கண்ணாடியைத் தூக்கிப் பிடித்து, இறைவனுக்குக் காட்டியபடியே செல்கிறார்கள்!

அடுத்த நிறைவுப் பதிவில், எந்த அலங்காரமும் இன்றி, வெள்ளைத் துவராடையில், ஒற்றைத் துளசி மாலையுடன், மிக எளிமையாக ஒரு கோலத்தை நாம் எல்லாரும் காணப் போகிறோம்! திருப்பதியில் மட்டும் அப்படி என்ன பெருசா சிறப்பு இருக்குன்னு, சில பேர் கேக்கறாங்க இல்லையா? அடுத்த பதிவில் தெரிந்து விடும் பாருங்கள், உங்களுக்கு!

சுப்ரபாதத்தின் இறுதி வரிகள் ஒலித்துக் கொண்டு இருக்க....வாங்க, இன்றைய சுப்ரபாதத்துக்குப் போகலாம்;




(இந்த சுலோகத்தைப் படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)





பாஸ்வான் உதேதி விகசாநி சரோருகானி
சம்பூர யந்தி நினதை ககுபோ விகங்கா
ஸ்ரீவைஷ்ணவா சததம் அர்த்தித மங்களாஸ்தே
தாமாச்ரயந்தி தவ வேங்கட சுப்ரபாதம்

பாஸ்வான் உதேதி = கதிரவன் உதித்து விட்டான்!
விகசாநி சரோருகானி = மலர்ந்து விட்டன தாமரைகள்!

சம்பூரயந்தி நினதை = முழுமையாக ஒலிக்கத் தொடங்கிவிட்டது
ககுபோ விகங்கா = மலைப் பறவைகளின் ஒலி!

கீசு கீசு என்றும் ஆனைச்சாத்தன் கலந்து...
புள்ளும் சிலம்பின காண், புள்ளரையன் கோவிலில்
...என்ற திருப்பாவை வரிகள் அப்படியே நினைவுக்கு வருகின்றன!

ஸ்ரீவைஷ்ணவா = வைணவ அடியவர்கள்
சததம் அர்த்தித = என்றும் உன்னையே விரும்பிக் கொண்டு
மங்களா அஸ்தே = மங்களப் பொருட்களைக் கையில் தாங்கி நிற்கிறார்கள்!

தாமா ச்ரயந்தி = விடாப்பிடியாக இன்னும் தூக்கமா?

தவ வேங்கட சுப்ரபாதம் = திருவேங்கடமுடையானே, உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!








பிரம்மா ஆதய சுரவரா ச மகர்ஷ யஸ்தே
சந்தஸ் சனந்தன முகாஸ் தவ யோகி வர்யா
தாமாந்திகே தவஹி மங்கள வஸ்து ஹஸ்தா
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்


பிரம்மா ஆதய = பிரம்மன் முதலான
சுரவரா = அமரர்கள்
ச மகர்ஷ யஸ்தே = இவர்களுடன் மகரிஷிகள்

சந்தஸ் சனந்தன = சந்தையாக வந்துள்ளனர், சனந்தனர் முதலான முனிவர்கள்
முகாஸ், தவ யோகி வர்யா = உன் கோயில் முகத் துவாரத்திலே, தவ யோகிகள் நிரம்பி உள்ளனர்!

தாமாந்திகே தவஹி = மின்னுகின்ற உயர்ந்த
மங்கள வஸ்து = மங்களப் பொருட்களை,
ஹஸ்தா = கையில் ஏந்தியுள்ளனர்.


எவை அந்த மங்கலப் பொருட்கள்? - நீர்க்குடம், தீபம், சாமரம், கண்ணாடி, வெண் துவராடை, துளசிதளம்!
காலையில் எழுந்தவுடன் மங்கலப் பொருட்களைப் பார்க்கும் வழக்கம் விஷூக் கனி என்று மலையாள மக்கள் கொண்டாடுவாங்க! ஆனா அது தமிழ் நாட்டு வழக்கம் தான்! எப்படி அதை நாம் தொலைத்தோம்-ன்னு தான் தெரியலை! :-)


வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மாநிதி கபிலை ஒண் "கண்ணாடி" முதலா
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
ஏற்பனவாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ?
- என்று இது அப்படியே திருப்பள்ளி எழுச்சியிலும் வருகிறது!


ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!
----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

9 comments:

துளசி கோபால் said...

மங்கலப் பொருட்களில் மறைந்திருக்கிறேன், எம் பெருமா(ன்)ள் கண் பார்வை படாதா என்று.

ஆச்சு. மார்கழி பொறந்துட்டா...சுப்ரபாத சேவை ஒரு மாசத்துக்கு இல்லை. அதனால் மார்கழி பிறக்குமுன்னே நீங்களும் முடிச்சிருங்கோ.

ஆண்டாளம்மா கோச்சுக்கப்போறா:-)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//துளசி கோபால் said...
மங்கலப் பொருட்களில் மறைந்திருக்கிறேன், எம் பெருமா(ன்)ள் கண் பார்வை படாதா என்று//

ஹிஹி
துளசியைச் சொல்லுறீங்களா டீச்சர்?

//ஆச்சு. மார்கழி பொறந்துட்டா...சுப்ரபாத சேவை ஒரு மாசத்துக்கு இல்லை. அதனால் மார்கழி பிறக்குமுன்னே நீங்களும் முடிச்சிருங்கோ//

ஆமாம்...தமிழுக்காகச் சுப்ரபாதம் பாதியில் நிறுத்தம்! மார்கழி Dec 16 தானே! வரும் சனிக்கிழமை தொடரை நிறைவு செய்து விடுகிறேன்!

குமரன் (Kumaran) said...

சுப்ரபாதம் முழுவதும் முடிந்த பிறகு ஸ்தோத்ரம், மங்களம் எல்லாவற்றிற்கும் பொருள் சொல்லப் போகிறீர்கள் தானே?! அனத்யயன காலம் வந்துவிடுகிறது என்று சுப்ரபாதத்தோடு நிறைவு செய்து மற்றவற்றைப் பின்னர், மார்கழி முடிந்த பின்னர் தொடராமல் விட்டுவிடாதீர்கள்.

உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டு என்று கோதை நாச்சியாரும் சொன்னவை தானே இந்த மங்கலப் பொருட்கள். கன்றுடன் கூடிய பசு மிகவும் மங்கலகரமான பொருள் என்பதும் ஒரு நம்பிக்கை. அவற்றின் முகத்தில் முழிக்கிறான் திருவேங்கடமுடையான். அவற்றைக் காக்கும் கோபாலருக்கு அதனால் தினமும் அவனை முதன்முதலில் தரிசிக்கும் சௌபாக்கியம். நன்கு சொன்னீர்கள்.

நீங்கள் இந்த நிகழ்ச்சியைச் சொன்னவுடன் திருவானைக்காவினில் தினந்தோறும் அன்னை செய்யும் கோபூஜை நினைவிற்கு வந்துவிட்டது. அன்னையின் உருவில் அருச்சகர் சேலை கட்டிக் கொண்டு நடுப்பகல் நேரத்தில் கன்றுடன் கூடிய பசுவினைப் பூஜிப்பதை பல முறை தரிசித்திருக்கிறேன்.

Unknown said...

ஆஹா! எனக்குத் தெரியாத செய்தி கோ-பாலருக்கே கோவிந்தனின் முதல் தரிசனம் என்று. எப்போதும் போல் அழகாய்க் கொடுத்திருக்கிறீர்கள்! நன்றி

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
சுப்ரபாதம் முழுவதும் முடிந்த பிறகு ஸ்தோத்ரம், மங்களம் எல்லாவற்றிற்கும் பொருள் சொல்லப் போகிறீர்கள் தானே?!//

ஹூம்...
இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம்-னு நினைச்சேன்!
இல்லைன்னா விரிவுரை மாதிரி இல்லாம....வேகமாப் பொழிப்புரை மாதிரி சொல்லிக் கொண்டு போய் விடலாமா? என்ன சொல்றீங்க குமரன்?

//உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டு என்று கோதை நாச்சியாரும் சொன்னவை தானே இந்த மங்கலப் பொருட்கள்//

அதே அதே!
உக்கமும் தட்டொளியும் பதிவு ஞாபகம் வந்திடுச்சு!

//அவற்றைக் காக்கும் கோபாலருக்கு அதனால் தினமும் அவனை முதன்முதலில் தரிசிக்கும் சௌபாக்கியம். நன்கு சொன்னீர்கள்//

பசுவும் கன்றும் மங்கலம் தான்.
ஆனால் அதுக்காக மட்டுமில்லை குமரன்!
வேங்கடவன் முன்பு ஆகாசராஜனுக்கு கொடுத்த வாக்குறுதியின் படியும், கோனாரின் முகத்தில் தான் விழிப்பேன் - என்று தல வரலாறும் சொல்கிறது!

//நீங்கள் இந்த நிகழ்ச்சியைச் சொன்னவுடன் திருவானைக்காவினில் தினந்தோறும் அன்னை செய்யும் கோபூஜை நினைவிற்கு வந்துவிட்டது//

ஆமாம் குமரன். நானும் சிலமுறை உச்சி கால பூசையில் கண்டு மகிழ்ந்துள்ளேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
ஆஹா! எனக்குத் தெரியாத செய்தி கோ-பாலருக்கே கோவிந்தனின் முதல் தரிசனம் என்று.//

கோ-விந்தன் கோ-பாலனுக்குக் கொடுக்கும் சேவை! :-)
நன்றி கெக்கேபிக்குணி!

Srikanth said...

Nice postings... enjoyed reading :)

மெளலி (மதுரையம்பதி) said...

அடடா! எப்படி இந்த பதிவினை பார்க்காமல் விட்டேன்.

//இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம்-னு நினைச்சேன்!
இல்லைன்னா விரிவுரை மாதிரி இல்லாம....வேகமாப் பொழிப்புரை மாதிரி சொல்லிக் கொண்டு போய் விடலாமா? //

ஹலோ, ஹலோ என்ன அவசரம்?. இன்னும் 2-3 பதிவு வருமா?, நிதானமா எழுதுங்க சார். ஆனா விரிவா எழுதுங்க.

பாட்டு- படத்துடன் எழுதுவதை மாற்றிவிடாதீர்கள் கே.ஆர்.எஸ்.
(பாட்டு-பைட்டு ஸூப்பர் அப்படின்னு மதுரை பககத்து சினிமா போஸ்டர்கள்ல கீழ கடைசியா ஒரு வரி போட்டிரூக்கும்,அது போல)

பாவை நோன்பு பற்றி எழுத ஆரம்பிக்கையில் ஊக்கமும் தட்டொளியும் பதிவினை நினைத்தேன். மீண்டும் ஒரு தரம் படிக்க வேண்டும்.

வடுவூர் குமார் said...

படிக்க கொடுத்து வைத்திருக்கனும்.Thanks a lot.

சுப்ரபாதம் (தமிழில்):

ஒலிச் சுட்டிகள்!

முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் - நித்ய ஸ்ரீ பாடுவது (Windows Media Player)

நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com
Pics: tirumala-tirupati.com

சுப்ரபாதம் (மூலம்):

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP