Sunday, November 30, 2008

சுப்ரபாதம்(38,39,40): விநா வேங்கடேசம்! இனி ஜருகண்டி இல்லை!

திருமலையில் எம்பெருமான் சன்னிதியில் 45 நிமிடம் நிற்க ஆசையா? நடக்கிற காரியமா அது? ஜருகண்டி ஜருகண்டி மட்டுமில்லை! போதாக்குறைக்குப் பொன்னம்மா-ன்னு, இப்போ தேவஸ்தானம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கு! பேரு=மகா லகு தரிசனம்! பெரிய "சுளுவான" தரிசனம்! இதுல என்ன சுளுவு-ன்னு கேக்கறீங்களா? ஹா ஹா ஹா! அங்க தான் ஆப்பு! :)

முன்பு போல, ஜய-விஜயர்களைத் தாண்டி, உள்ளே நுழைந்து, குலசேகரன் படிக்கு வெளியே, பெருமாளின் முன்னால், அரைக் கணமாச்சும் நின்று சேவிப்பது எல்லாம் இனிமேல் கிடையாது!
இனிமேல் துவார பாலகர்கள் கிட்ட இருந்தே தான் சேவித்துக் கொள்ளணும்! அதற்கு மேல் உள்ளே போக முடியாது! உள்ளே போய், வெளியில் வரும் வாக்கிங் டைம் மிச்சம்! ஹா ஹா ஹா! எப்படி இருக்கு ஐடியா?
இது தான் மகா லகு தரிசனம்? பெரிய "சுளுவான" தரிசனம்!:)

இதைக் கோயில் நிர்வாகம் எப்போதெல்லாம் நினைக்கிறதோ, அப்போதெல்லாம் அமல்படுத்தி விடுகிறது! நீங்க போகும் போது இந்த மகா லகு தரிசனம் இல்லாம இருந்தா, அது உங்க புண்ணியம்! இன்னும் பத்து வருஷத்தில், எல்லாரும் ஜன்னல் வழியாப் பாத்துக்குங்கப்பா-ன்னு சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை! :)

நிலைமை இப்படிப் போய்க் கொண்டு இருக்க, உங்களுக்கு மட்டும், சன்னிதியில் ஒரு முக்கால் மணி நேரம் அமர்ந்து கொண்டு, நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்துமாக, ஏகாந்தமாக, ஆசை தீர ருசித்துக் கொள்ளுங்கள் என்றால் எப்படி இருக்கும்?
அந்த வித்தை எப்படி-ன்னு தான் இன்னிக்கி சுப்ரபாதப் பதிவில் பார்க்கப் போகிறோம்!
வாங்க, தோத்திரத்தின் கடைசிப் பகுதிக்கு! இது உங்களில் பல பேருக்குத் தெரிந்த சுலோகம் தான்! மிகவும் இனிமையான பாடல்!
(இந்த சுலோகத்தைப் படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)

விநா வேங்கடேசம் ந நாதோ ந நாத
சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி
ஹரே வேங்கடேச ப்ரசீத ப்ரசீத
ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச


விநா வேங்கடேசம் = வேங்கடேசனைத் தவிர
ந நாதோ ந நாத = வேறு தலைவன் இல்லை! வேறு தலைவன் இல்லை!
சதா வேங்கடேசம் = எப்போதும் வேங்கடேசனையே
ஸ்மராமி ஸ்மராமி = நினைத்துக் கொண்டிருக்கிறேன்! நினைத்துக் கொண்டிருக்கிறேன்!

ஹரே வேங்கடேச = அப்பனே வேங்கடேசா
ப்ரசீத ப்ரசீத = கருணை காட்டு! கருணை காட்டு!
ப்ரியம் வேங்கடேச = விருப்பமான வேங்கடேசா
ப்ரயச்ச ப்ரயச்ச = (மங்களங்களைக்) கொடுப்பாய்! கொடுப்பாய்!

அது என்ன "ப்ரியம்" வேங்கடேச? யாருக்குப் ப்ரியமானவன்? யாரெல்லாம் வேங்கடவனை விரும்புகிறார்கள்? மாறன் சொல்வதைக் கேளுங்கள்!
நிகரில் அமரர், முனிக் கணங்கள் "விரும்பும்" திருவேங்கடத்தானே!
புகல் ஒன்று இல்லா அடியேன் உன், அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே!

அது என்ன "விரும்பும்" திருவேங்கடத்தான்? "ப்ரியம்" வேங்கடேச?

* குடும்பஸ்தர்கள் முதல் துறவிகள் வரை,
* வாலிபன் முதல் வயோதிகன் வரை,
* ஏழை முதல் பணக்காரன் வரை,
* கள்ள நோட்டு அடிப்பவன் முதல் கள்ளமில்லா உள்ளத்தான் வரை.....
* சைவர்கள் முதல் வைணவர்கள் வரை,
* இந்திக்காரர்கள் முதல் மறத் தமிழர்கள் வரை,
* ஆதி சங்கரர் முதல் இராமானுசர் வரை...
இவ்வளவு பேரும் "விரும்பும்" திருவேங்கடத்தான்! - ஏன்?

பணம் குவியுதே! அதுனாலயா?
இல்லை! பணம், பெருங்கூட்டம் எல்லாம் இப்போ தானே...சுமார் ஒரு அம்பது அறுவது ஆண்டுக்கு முன்னால் தானே!அதுக்கு முன்னாடியெல்லாம் ஆண்டுக்கு ஒரு முறை போய் வருவதற்கே சிரமப்படுவாங்களே! ஆனா அப்போதும் வீட்டில் இருந்து கொண்டே, அவனுக்குன்னு தனியா முடிஞ்சி வச்சிப்பாங்களே - ஏன்?

இரண்டாயிரம் வருசமா இருக்குதே! சிலப்பதிகாரம் காலம் தொட்டு அப்படி என்ன ஒரு ஈர்ப்பு? தமிழ் இலக்கியம் மட்டும் தானா அவனைக் கொண்டாடுகிறது? தெய்வத் தமிழுக்குப் பின்னால் வந்த
* தெலுங்குக் கீர்த்தனைகள்,
* கன்னட தாச நாமாக்கள்,
* மலையாள கானங்கள்,
* மராத்தி அபாங்குகள்,
* ஒரிய தரங்கங்கள்,
* குஜராத்திய கோலாட்டப் பாடல்கள்-ன்னு...
எப்படி இத்தனை மொழிகளிலும் இவன் "விரும்பும்" திருவேங்கடத்தான் ஆனான்? "ப்ரிய" பாலாஜி ஆனான்?

ஆண்டாள் அரங்கனைத் தானே விரும்பினாள்? மணந்து கொண்டாள்? ஆனால் அரங்கன் மேல் பத்தே பாடல் தான் பாடினாள்! வேங்கடவன் மேல் தான் அதிகமான பாடல்கள்! வேங்கடற்குத் தான் தன்னை விதிக்கச் சொல்கிறாள்!
குல முதல்வனான நம்மாழ்வார், சரணாகதி என்று வரும் போது மட்டும், அரங்கனிடம் செய்யாமல், வேங்கடவனிடம் செய்யும் மாயம் என்ன?
"புகல் ஒன்று இல்லா அடியேன், உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே" என்ற சரணாகதிக்கான ஒரே பாசுரம், வேங்கடவன் மேல் அமைந்தது வியப்பிலும் வியப்பே!

இப்படி அனைவருக்கும் "ப்ரியம்" வேங்கடேசனாய் இருக்கும் காரணத்தை அறியத் தான் முடியுமா? முடியும்! முன்பே சுப்ரபாதப் பதிவில் சொன்னது போல்,
வேங்கடத்து நெடியோன் மட்டும் தான் மோட்சத்துக்கான வழியை நம் எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்துக் கொண்டே நிற்கிறான்!


* ஒரு கரம் பாதங்களைக் காட்டிப் பற்றிக் கொள் என்கிறது!
* இன்னொரு கரம், அப்படிப் பற்றிக் கொண்டால், இந்த உலக சமுத்திரம் வெறும் முழங்கால் ஆழம் தான், என்று முழங்காலில் கை வைத்துக் காட்டுகிறது! இது தான் அந்த ரகசியம்!

மோட்சம் எல்லாம் யாருக்குப்பா வேணும்?
நான் இந்தப் பிறவியில் ஜாலியா இருக்கணும்! எனக்கு அது தான் வேணும், இது தான் வேணும் - என்று கேட்பவர்கள் தான் பலரும் உண்டு! ஹா ஹா ஹா! அதையும் வேண்டுவன வேண்டியபடியே தருகிறான்!
* மோட்ச ரகசியமும் சொல்ல முடியும்! காதல் கதையும் சொல்ல முடியும்!
* சின்னக் குழந்தையுடனும் பழக முடியும்! பெரிய ஞானிகளிடமும் பழக முடியும்!
* நல்லவனிடமும் பழக முடியும்! கொள்ளைக் கூட்டத்திடமும் பழக முடியும்!

ஒரே தாய், ஒவ்வொரு குழந்தைக்கும், அவரவர்க்குப் பிடித்தமான மாதிரி சமைத்துப் போடுகிறாள் அல்லவா?
அது போல, அவரவர்க்குப் பிடித்தமான மாதிரி...
உன்னத் தருகிறான் வேங்கடவன்! உண்ணத் தருகிறான் வேங்கடவன்!

அதான் இவ்வளவு "ப்ரியம்" வேங்கடேச! "விரும்பும்" திருவேங்கடத்தானை!!

சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி! ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச!!


இப்போ ஜருகண்டியை எப்படித் தவிர்க்கலாம் என்ற ரகசியம்:

அகம் தூர தஸ் தே பதாம்போஜ யுக்ம
ப்ரணாம் இச்சய ஆகத்ய சேவாம் கரோமி
சக்ருத் சேவயா நித்ய சேவா பலம் த்வம்
ப்ரயச்ச ப்ரயச்ச ப்ரபோ வேங்கடேச


அகம் தூர தஸ் = அடியேன் வெகு தூரத்திலிருந்து வந்துள்ளேன்!
தே, பத அம்போஜ யுக்ம = உன் தாமரை இணையடிகளை
ப்ரணாம் இச்சய ஆகத்ய = வணங்கும் ஆசையில் வந்துள்ளேன்!
சேவாம் கரோமி = உன்னைச் சேவிக்க வந்துள்ளேன்!

சக்ருத் சேவயா = எப்போதாவது ஒரு முறை, இப்படிச் செய்யும் சேவை,(அதை ஏற்றுக் கொண்டு)
நித்ய சேவா = உனை என்றும் கண் குளிரக் காணும் நீங்காத சேவை என்னும் நித்யப்படி சேவையை
பலம் த்வம் = நீ வரமாகக்
ப்ரயச்ச ப்ரயச்ச = கொடுப்பாய்! கொடுப்பாய்!
ப்ரபோ வேங்கடேச = பிரபோ வேங்கடேசா!

நீங்கள் போகும் போது, திரை போட்டு இருக்கா? அல்லது சன்னிதியில் ரொம்ப நேரம் நிற்க முடியவில்லையா? அதனால் என்ன?
நீங்கள் தான் அவனைப் பார்க்க முடியவில்லை! ஆனால் அவன் உங்களைப் பார்த்துக் கொண்டு தானே இருப்பான்? அவனை யாரும் ஜருகண்டி ஜருகண்டி-ன்னு சொல்ல முடியாதே! அப்புறம் எதற்கு வீண் கலக்கம்?

பத்தே நொடிகள் தான் தரிசனமா? அதனால் என்ன? ஒன்றே ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள்!
* எக்காரணம் கொண்டும் கண்களை மூடிக் கொள்ளாதீர்கள்!
வேண்டுதல் வைக்கக் கூட நேரம் இருக்காது! அதனால் பரவசப்பட்டு கண்களை மூடிக் கொள்ளாதீர்கள்! பத்தே நொடிகள் தான்! உங்கள் புறக் கண் என்னும் காமிராவிலும், அகக் கண் என்னும் வீடியோ கருவியிலும் அப்படியே ஆழமாகப் பதிந்து வைத்துக் கொள்ளுங்கள்!

மேயச் சென்ற மாடு அசை போடுமா? நன்றாக மேய்ந்து, வீட்டுக்கு வந்து தானே அசை போடும்! அது போல சன்னிதியில் கண்களை மூடாதீர்கள்! வீட்டுக்கு வந்த பின்னர், அப்போது மூடிக் கொள்ளுங்கள்! மனத்திரையில் ஜருகண்டி ஜருகண்டி இல்லாமல், நீங்கள் விரும்பிய வண்ணமே ஓடும்!

இதை வேங்கடவன் சன்னிதியில் அடுத்த முறை போகும் போது சொல்லிவிட்டு வாருங்கள்!
"என் வீடு மிகத் தொலைவில் இருக்கு! இருந்தாலும் உன் மேல் இருக்கும் காதலால் தான், உன்னைப் பாக்கணும்-னே இவ்ளோ தூரம் வந்திருக்கேன்!
இன்னிக்கி நான் பார்க்கும் இந்த திவ்ய மங்களச் சேவையை, நான் எப்போதெல்லாம் நினைக்கின்றேனோ, அப்போதெல்லாம் எனக்குக் காட்டி அருள்வாய் காதலனே!"


தாயே தந்தை என்றும், தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டு ஒழிந்தேன், "உனைக் காண்பதோர் ஆசையினால்"
வேயேய் மாபொழில் சூழ், விமலச் சுனை வேங்கடவா!
நாயேன் வந்து அடைந்தேன், நல்கி என்னை ஆட்கொண்டு அருளே!

இது தான், வேங்கடவன் சன்னிதியில், ஜருகண்டி ஜருகண்டிக்குப் பயப்படாமல், பல மணி நேரம் தரிசனம் செய்ய வல்ல ரகசியம்!

(* ஏகாந்த சேவை என்னும் நள்ளிரவுத் தாலாட்டு-பள்ளியறைச் சேவை ஒன்று உண்டு! முன்பதிவு கிடையாது! அன்று இரவு 09:00 மணி வாக்கில், விஜயா வங்கியில், முதல் ஐம்பது பேருக்கு சிறிய கட்டணத்தில் டிக்கெட் வழங்குவார்கள்! கூட்டம் அதிகம் இருந்தால் அப்போ இது பொது தரிசனம் இன்றித் தனியாகச் செய்யப்பட்டு விடும்!
இந்தச் சேவைக்குச் சென்றால், ஆர அமர்ந்து, எம்பெருமானைத் தமிழிலும் தெலுங்கிலும் இசையோடு தாலாட்டி, பால் பருக வைத்து, கொசுவலை போட்டு மூடி உறங்கச் செய்து, பாதாதி கேசமாக, ஆழ்ந்து அனுபவிக்க முடியும்! அந்த நாளின் கடைசிச் சேவை! நடை சார்த்தி, அடுத்த முக்கால் மணியில் சுப்ரபாதம்! அடுத்த முறை செல்லும் போது முயன்று பார்க்கவும் :)

அக்ஞானினா மயா தோஷான்
அ சேஷாந் விகிதாந் ஹரே
க்ஷம ஸ்வ த்வம் க்ஷம ஸ்வ த்வம்
சேஷ சைல சிகா மணே!

அக்ஞானினா மயா தோஷான் = அறிவொன்றும் இல்லாதவன் நான்! என் குற்றங்களை எல்லாம்
அ சேஷாந் = மீதமே இல்லாமல்
விகிதாந் ஹரே = செய்வாயாக!
க்ஷம ஸ்வ த்வம் க்ஷம ஸ்வ த்வம் = என்னை மன்னிப்பாய்! என்னை மன்னிப்பாய்!
சேஷ சைல சிகா மணே = சேஷ மலைச் சிகா மணியே!

இப்படி உன்னைச் சேவித்து வந்த பின்னாலும், என் சுய பிரதாபங்களும், ஆணவமும், சுயநலமும் அவ்வப்போது தலை விரித்து ஆடுகின்றனவே!
அடி மனத்தில்-அந்தராத்மாவில் நீ இருந்து கொண்டு, இது தவறு என்று காட்டிக் கொடுத்தாலும், "என்" அறிவும் புத்தியும், என் மனசின் மொழியைக் கேட்பதில்லையே! என்ன செய்ய?

அறிவொன்றும் இல்லாத ஆய்க் குலத்தில் உன் தன்னை,
பிறவிப் பெறும் தனை புண்ணியம் யாம் உடையோம்!
குறையொன்றுமில்லாத கோவிந்தா....
அறியாத பிள்ளைகளோம், அன்பினால் உன் தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே!...


எங்கள் குற்றங்களை எல்லாம் ஒன்று கூட மிச்சம் வைக்காமல், பொசுக்கி விடு!
* இந்தப் பிறவிக்குச் சேர்த்து வைக்கும் Recurring Deposit பாவங்களையும் (பிராரப்தம்)
* அடுத்த பிறவிக்கு நாங்கள் சேர்த்து வைக்கும் Fixed Deposit பாவங்களயும் (ஆகமியம்)
ஒன்று கூட மிச்சம் வைக்காமல் பொசுக்கி விடு! வேங்+கடம் என்றாலே வெம்மையான பாவங்களைப் பொசுக்கும் மலை அல்லவா!

சென்று சேர் திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ, நம் வினை ஓயுமே
- என்ற மாறன் வாக்கு பொய்யாகுமோ?
போய பிழையும், புகு தருவான் நின்றனவும்,
தீயினில் தூசாக ஆக்கி விடு! ஒன்று கூட மிச்சம் வைக்காதே!

க்ஷமஸ்வ த்வம் க்ஷமஸ்வ த்வம், சேஷ சைல சிகா மணே!
என்னை மன்னிப்பாய்! என்னை மன்னிப்பாய்! திருவேங்கடம் உடைய தேவே!

ஏடு கொண்டல வாடா, வேங்கட ரமணா - கோவிந்தா! கோவிந்தா!!
ஆபத் பாந்தவா, அனாத ரட்சகா - கோவிந்தா! கோவிந்தா!!

(சுப்ரபாதம் பாகம் 2of4 = வேங்கடேஸ்வர தோத்திரம் நிறைந்தது! சுபம்!)
அடுத்த பாகத்திலிருந்து, சரணெள, சரணம் ப்ரபத்யே-ன்னு, சரணாகதியைப் பார்ப்பதற்கு முன்....
அந்தரி இக்கட ரண்டி, பிரசாதம் தீஸ்கோண்டி, சரணாகதியை அப்பறம் செய்துக்கலாம்! பதிவர். அம்பி-காரு பொறந்த நாளு வேற! அல்வா இல்லைன்னாலும் லட்டாச்சும் கொடுப்போம் :)

18 comments:

கோவி.கண்ணன் said...

//எல்லாரும் ஜன்னல் வழியாப் பாத்துக்குங்கப்பா-ன்னு சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!//

ம் இதுக்கு பதிலாக பெரிய திரையில் நேரடி ஒலிப்பரப்பாக கூடத்துக்குள்ளேயே காட்டலாம், அதையும் படமெடுக்காமல் இருக்கவும் ஏற்பாடுகள் செய்து கொள்ளப்பட வேண்டும்.

****

2000 ஆண்டுகளாக பெருமாள் நின்றபடியே இருக்கிறாராம், துலுக்க நாச்சியாரை எப்போது கைபிடித்தார் ?

துளசி கோபால் said...

அர்ச்சனைக்குப் போக முன்பதிவு செஞ்சுக்கிட்டால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் திவ்யமாப் பார்க்கலாம். 200 பேருக்கு அனுமதி உண்டு.

நான் ஒரு முறை போயிருக்கேன்.
வரிசையில் முதல் பத்துக்குள்ளேதான் இருந்தோம். ஆனால் உள்ளே அனுமதிக்கும் நேரம்வந்ததும் ஒரே தள்ளுமுள்ளு.
நாங்க பேசாமல் ஓரமா நின்னுக் கடைசியில் உள்ளே போனோம்.

பெருமாளாப் பார்த்து எனக்கு நல்லது செஞ்சுட்டார். முன்னாலே போனவங்க எல்லாம் தரையில் உட்கார்ந்தாச்சு. எனக்குத்தான் கால் மூட்டு வலி இருக்கே. கடைசியில் நின்னுக்கிட்டே ஜாலியா சாமி கும்பிட்டோம் நானும், மகளும், கோபாலும்.

குமரன் (Kumaran) said...

வேங்கடேச ஸ்தோத்ரத்தில் எனக்கு மிகவும் பிடித்த மூன்று சுலோகங்கள் இவை இரவி. எவ்வளவு பொருள் பொதிந்தவை இவை. மீண்டும் மீண்டும் அனுசந்திக்கத் தக்கவை.

மிக நல்ல விளக்கங்களுடன் பொருத்தமான பாசுரங்களைத் தந்திருக்கிறீர்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவி.கண்ணன் said...
ம் இதுக்கு பதிலாக பெரிய திரையில் நேரடி ஒலிப்பரப்பாக கூடத்துக்குள்ளேயே காட்டலாம்//

ஹா ஹா ஹா!
கருவறை தவிர மற்ற இடமெல்லாம் டுரிஸ்ட் ஸ்பாட்டாகத் தான் இருக்கு! உங்க யோசனைப்படி செஞ்சா, முழுவதுமே டூரிஸ்ட் இஸ்பாட் ஆயிரும்! :)

//அதையும் படமெடுக்காமல் இருக்கவும் ஏற்பாடுகள் செய்து கொள்ளப்பட வேண்டும்//

தோடா, திரையில் காட்டுவாங்களாம், ஆனா படம் எடுக்கக் கூடாதா? இது நியாயமே இல்லை! :)

//2000 ஆண்டுகளாக பெருமாள் நின்றபடியே இருக்கிறாராம்//

நீங்க தங்க சிம்மாசனம் வாங்கிக் குடுங்க! நீங்க சொன்னா உக்காந்துக்கிடுவாரு! :)

//துலுக்க நாச்சியாரை எப்போது கைபிடித்தார் ?//

என்னடா கோவித்தனமான கேள்வி வரலையேன்னு பார்த்தேன்!
துலுக்கா நாச்சியாருக்கும் திருமலைக்கும் தொடர்பில்லை! அது ஒன்லி திருவரங்கம் & திருநாராயணபுரம் (மேலக்கோட்டை)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//துளசி கோபால் said...
அர்ச்சனைக்குப் போக முன்பதிவு செஞ்சுக்கிட்டால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் திவ்யமாப் பார்க்கலாம். 200 பேருக்கு அனுமதி உண்டு//

இப்பல்லாம் ரெண்டு-மூனு வருசத்துக்கு டிக்கெட் வித்துப் போயிரிச்சி டீச்சர்! :)

தினப்படி தோமாலை சேவை, அர்ச்சனை, வெள்ளிக்கிழமை திருமஞ்சனம், வியாழன் திருப்பாவாடை என்று சிறப்புச் சேவைகள் எல்லாம் அவுட் ஆப் டேட்! :)

//ஆனால் உள்ளே அனுமதிக்கும் நேரம்வந்ததும் ஒரே தள்ளுமுள்ளு//

ஏகாந்த சேவையில் இது இருக்காது!

//நாங்க பேசாமல் ஓரமா நின்னுக் கடைசியில் உள்ளே போனோம்//

நல்லது செஞ்சீங்க! நிம்மதியாப் பார்க்கலாம்!

//பெருமாளாப் பார்த்து எனக்கு நல்லது செஞ்சுட்டார். முன்னாலே போனவங்க எல்லாம் தரையில் உட்கார்ந்தாச்சு. எனக்குத்தான் கால் மூட்டு வலி இருக்கே. கடைசியில் நின்னுக்கிட்டே ஜாலியா சாமி கும்பிட்டோம் நானும், மகளும், கோபாலும்//

சூப்பரோ சூப்பர்!
முன்னாடி உக்காந்துக்கிட்டு, அச்சோ! இவர் மொட்டைத் தலை மறைக்குதே-ன்னு எல்லாம் கவலைப்படாமல், ஃபுல் வியூவ்-ல தரிசனம் பண்ணி இருக்கீங்க! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
வேங்கடேச ஸ்தோத்ரத்தில் எனக்கு மிகவும் பிடித்த மூன்று சுலோகங்கள் இவை இரவி//

எனக்கும் குமரன்!

//எவ்வளவு பொருள் பொதிந்தவை இவை. மீண்டும் மீண்டும் அனுசந்திக்கத் தக்கவை//

ஆமாம்! ரெண்டு முறை பாடுறாங்களே!

//பொருத்தமான பாசுரங்களைத் தந்திருக்கிறீர்கள்//

இந்தப் பாசுரங்களை ஒப்பிட்டும் தான் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரியார், தோத்திரங்களைச் செய்துள்ளார்! அது தானே மணவாள மாமுனிகளின் ஆக்ஞை?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

லட்டு-வடையைப் பத்தி டீச்சர் ஒன்னுமே சொல்லலையே! குமரன்-ன்னாச்சும் சாப்பிடக் கூச்சப்படுவாரு! :)

கோவி.கண்ணன் said...

//ஹா ஹா ஹா!
கருவறை தவிர மற்ற இடமெல்லாம் டுரிஸ்ட் ஸ்பாட்டாகத் தான் இருக்கு! உங்க யோசனைப்படி செஞ்சா, முழுவதுமே டூரிஸ்ட் இஸ்பாட் ஆயிரும்! :)//

கூட்டம் நிறைந்த திருமணங்களில் அருகில் சென்று பார்க்க முடியாத சூழல்களில் டிவி பெட்டியில் நேரடியாக ஒளிபரப்புவார்கள்.

கோவில் சூழலில் வேறு வழியின்றி சாமியை டிவி திரையில் பார்பது தவறாகத் தெரியவில்லை. படம் எடுக்கக் கூடாதென்பது ஐதீகம் என்பதால் படம் எடுக்க அனுமதிக்கத் தேவை இல்லை என்றேன்.

ஏற்கனவே 2 நாள் காத்திருப்பு தற்பொழுது 3, 4 நாள் என்று நீண்டு செல்வதால் எதிர்காலத்தில் ஒருவாரம் கூட ஆகலாம். நேரவிரயம் தானே ?

வெப்காம் வழியாக ஊரில் இருக்கும் பெற்றோர்களைப் பார்க்கும் போது உங்களுக்கு மகிழ்ச்சி தருவதில்லையா ? ஊருக்குச் சென்று நேரடியாகத் தான் பார்ப்பேன் இல்லாவிடில் பார்க்காமல் இருப்பதே தேவை இல்லை என்பீர்களா ?

காலமாற்றத்தில் தரிசனம் செய்வதற்கு வசதியாக கூடங்கள் அமைத்து அதில் நேரடி ஒளிபரப்பு செய்யலாம் தவறு அல்ல என்றே நினைக்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவி.கண்ணன் said...
கூட்டம் நிறைந்த திருமணங்களில் அருகில் சென்று பார்க்க முடியாத சூழல்களில் டிவி பெட்டியில் நேரடியாக ஒளிபரப்புவார்கள்//

இங்கே தான் அருகில் சென்று பாக்க முடியுதே! 9:00-10:30-க்குள்ளாற பாத்து அட்சதை போட்டுரணும்-னு அவசரம் எல்லாம் ஒன்னுமே இல்லையே! :)

//கோவில் சூழலில் வேறு வழியின்றி சாமியை டிவி திரையில் பார்பது தவறாகத் தெரியவில்லை//

இஸ்கான் போன்ற நவீன ஆலயங்களில் (ஆகம வடிவமைப்பல்லாத ஆலயங்களில்) இருக்கு கோவி அண்ணா!

//படம் எடுக்கக் கூடாதென்பது ஐதீகம் என்பதால் படம் எடுக்க அனுமதிக்கத் தேவை இல்லை என்றேன்//

படம் எடுத்தா சக்தி கொறைஞ்சிரும் என்பதெல்லாம் டுபாக்கூரு! :)
ஏன் படம் அல்லது Replica ஓவியம் கூட அப்படியே வரையக் கூடாது என்பதற்கு வேறு ஆகம/தத்துவ காரணங்கள் உண்டு! உங்களுக்குப் பிடிச்ச உருவமில்லா அருவம் கான்செப்ட் தான்! :)

//ஏற்கனவே 2 நாள் காத்திருப்பு தற்பொழுது 3, 4 நாள் என்று நீண்டு செல்வதால் எதிர்காலத்தில் ஒருவாரம் கூட ஆகலாம். நேரவிரயம் தானே ?//

ஆமாம்! அதுக்குத் தான் IIM-A மாணவர்கள் பல நல்ல திட்ட முன் வரைவுகளை வைத்துள்ளார்களே! கையில் பார்கோட் போட்ட பட்டையும் அவர்கள் சொன்னது தானே! இன்னும் நிறைய சொல்லி இருக்காங்க! ஆனால் அவை எல்லாம் வருமானத்தைக் கொஞ்சம் பாதிக்கும்-ஆன்மீகத்தனமான யோசனைகள் :)

//வெப்காம் வழியாக ஊரில் இருக்கும் பெற்றோர்களைப் பார்க்கும் போது உங்களுக்கு மகிழ்ச்சி தருவதில்லையா?//

கண்டிப்பா மகிழ்ச்சி தான்! ஆனா அதுக்காக சமையலறையில் ஒரு வெப்காம், டைனிங் டேபிள் பக்கம் ஒரு வெப்காம்-ன்னு ரூமுக்கு ரூம் வைச்சா, பிரைவசி? :)
அம்மா-அப்பாவுக்கும் ப்ரைவசி வேணும்-ல?

இருவரும் சேர்ந்து வந்து வெப்காமில் வரும் போது விஷயம் வேறு!
அதே போல் தான் இங்கும்! உற்சவர் தான் காமிரா, வீடியோ, வெப்காம்-ன்னு எல்லாத்துக்கும் இருக்காரே! இல்லை எனக்கு மூலவர் தான் வெப்காமில் வரணும்! உற்சவர் எல்லாம் சாமியே இல்லை-ன்னு சொல்ல முடியுமா? :)))

//காலமாற்றத்தில் தரிசனம் செய்வதற்கு வசதியாக கூடங்கள் அமைத்து அதில் நேரடி ஒளிபரப்பு செய்யலாம் தவறு அல்ல என்றே நினைக்கிறேன்//

தவறே இல்லை!
உற்சவரை இப்படிச் செய்கிறார்களே!
அதுவும் திருமலை உற்சவரை, தலித கோவிந்தம் என்ற அருமையான திட்டத்தில், தலித் குடியிருப்புகள் உட்பட ஊர் ஊராக எடுத்துச் செல்கிறார்களே! மிகவும் பயனுள்ள திட்டம்!

மூலவர் விஷயம் வேறு! அதே அரு-உருவம் டாபிக் தான் ஆகமத்தில் பேசப்படுகிறது! இன்னொரு நாள், இது பற்றியும் கருவறை பற்றியும் கொஞ்சம் தற்கால விளக்கமாய்ச் சொல்லுறேன்! இப்போ லைட்டா!

தாயின் கருவறை போலத் தான் கோயில் கருவறையும்!

எவ்வளவு நவீன வசதிகள் வந்தாலும், உள்ளிருக்கும் குழந்தைக்கு இருட்டா இருக்கேன்னு, மெல்லிய ஒளி எல்லாம் பாய்ச்சுகிறோமா என்ன? கருவறை ஆகம விதிகள் பல அறிவியல் நோக்குள்ளவை! ஆனால் அவை எல்லாம் யார் கடைப்பிடிக்கணுமோ அவர்களாலேயே கடைபிடிக்கப்படுவதில்லை என்பது தான் வேதனை! சமயத் தலைமையும், தணிக்கையும், மேலாண்மையும் தேவை!

அதை எல்லாம் ஒழுங்கா கடைபிடித்து இருந்தா, பழனியாண்டவர் இப்படி ஆகி இருக்கவே மாட்டார்! :(

கோவி.கண்ணன் said...

//உங்களுக்குப் பிடிச்ச உருவமில்லா அருவம் கான்செப்ட் தான்! :)//

உருவமில்லா என்றால் கண்களால் காணமுடியாத என்ற பொருளில் தான் சொன்னேன். உருவமற்றவர் என்றால் என்னுடைய அகராதியில் எங்கும் நிறைந்திருப்பவர் என்ற பொருள் இல்லை. இறைவனுக்கும் ஆன்மாவைப் போலாவே கண்களால் காணமுடியாத ஒளி உருவமும் சூரியனைப் போன்று (எங்கும் நிறைந்திருக்கும்) ஆற்றல் கிரணங்கள் மட்டுமே உண்டு என்றால் ஆதாரம் கேட்பீர்கள். :) உங்களை நம்பச் சொல்லவில்லை. ஆனால் எங்கும் நிறைந்திருக்கிறான் இறைவன் என்று நான் சொல்ல மாட்டேன். அப்படிச் சொல்கிறவர்கள் தான் மூலவருக்கும் உச்சவருக்கும் வேறுபாடு சொல்வார்கள் :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவி.கண்ணன் said...
உருவமில்லா என்றால் கண்களால் காணமுடியாத என்ற பொருளில் தான் சொன்னேன்//

:)
அப்போ முகர முடிஞ்சாலும், கேட்க முடிஞ்சாலும், சுவைக்க முடிஞ்சாலும், உணர முடிஞ்சாலும், அதுக்கு உருவம் இல்லை!
காண முடிஞ்சா மட்டும் தான் உருவம் இருக்கு! இல்லீங்களா? :)

//இறைவனுக்கும் ஆன்மாவைப் போலாவே கண்களால் காணமுடியாத ஒளி உருவமும் சூரியனைப் போன்று (எங்கும் நிறைந்திருக்கும்) ஆற்றல் கிரணங்கள் மட்டுமே உண்டு என்றால் ஆதாரம் கேட்பீர்கள். :)//

ஒளி உருவம் என்றாலே காண முடியுமே! அப்புறம் என்ன காண முடியாத ஒளி உருவம்? புற ஊதா ஒளியைக் கூட ஸ்பெக்ட்ரோமீட்டரில் பிரதிபலிக்கச் செய்து கண்டு விடலாம் :)

//அப்படிச் சொல்கிறவர்கள் தான் மூலவருக்கும் உச்சவருக்கும் வேறுபாடு சொல்வார்கள் :)//

உருவம் கடந்தவன், உருவமாகவும் இருக்க முடியும் என்று எண்ணத் தோன்றாதவர்கள் கூட வேறுபாடு சொல்வார்கள்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அப்படிச் சொல்கிறவர்கள் தான் மூலவருக்கும் உச்சவருக்கும் வேறுபாடு சொல்வார்கள் :)//

நீங்கள் இதைச் சொன்ன போதே சொல்லணும்-னு நினைச்சேன்! அப்படியே விவாதத்தில் மறந்து போய் விட்டது! இங்கே இதையும் பதிந்து வைக்கிறேன்!

திருமலையில் மொத்தம் மூலவர் + நான்கு உற்சவர்கள்! பஞ்ச பேரங்கள் என்று சொல்வார்கள்!

* மூல பேரம்/துருவ பேரம் = மூலத்தான முதல்வன்! திரு-வேங்கடமுடையான்! ஸ்ரீநிவாசன்!

* உற்சவ பேரம் = மலையப்ப சுவாமி, மலை குனிய நின்றான் பெருமாள்
(அனைத்து கல்யாண உற்சவங்கள், வீதியுலா, மற்றும் வாகன சேவைகளுக்கு)

* கெளதுக பேரம் = போக ஸ்ரீநிவாசப் பெருமாள்
(தினப்படி திருமஞ்சனம், ஏகாந்த சேவை, பள்ளியறை, தொட்டில் முதலான சேவைகளுக்கு)

* ஸ்நாபன பேரம் = உக்ர ஸ்ரீநிவாசப் பெருமாள், வேங்கடத்துறைவார்.
(பிரயோக சக்கரம் கொண்டுள்ள உக்கிரமான மூர்த்தி. சூரியனின் கதிர்கள் மேலே விழாதவாறு, நடு நிசியில், ஆண்டுக்கு ஒரே ஒரு முறை, கைசிக ஏகாதசி அன்று மட்டும் வீதியுலா வருவார்)

* பலி பேரம் = கொலுவு ஸ்ரீநிவாசப் பெருமாள்
(கோயில் நடைகளில் பலி சார்த்தப்படும் போது வரும் சிறிய ஊருலா மூர்த்தி. பஞ்சாங்கம் படிப்பதும், கோயில் கணக்குகளைப் படிப்பதும் இவரிடமே)

sri said...

That was very meaningful post. Thanks for letting people know not to close the eye , i say that to my family and friends too. Happy to have read it :) keep writing.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Srivats said...
That was very meaningful post//

Thanks Srivats.

//Thanks for letting people know not to close the eye , i say that to my family and friends too.//

ha ha ha! Just a sharing of happy thoughts with our folks.
Though there are many ways to enjoy, there is always a special way too, right? we call it "rasanai" ")

//Happy to have read it :) keep writing//
Sure I will! Gunanubhavam with fellow ppl makes me happy :)

BTW,
Neenga, thambi CVR friend thaane?

calibra said...

Free torrents download and torrent search.

Thilaga. S said...

ஸ்தோத்திரங்களின் விளக்கங்கள் தெரியாதவர்களுக்கு பயனுள்ள ,அற்புதமான படைப்பு..மிக்க நன்றி.

www.bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Padma said...

'Priyam Venkatesa' means Priyam(ana) Venkatesa.
But it could also mean that Priyam is Venkatesa, right?
ie, He alone defines love completely??

சுப்ரபாதம் (தமிழில்):

ஒலிச் சுட்டிகள்!

முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் - நித்ய ஸ்ரீ பாடுவது (Windows Media Player)

நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com
Pics: tirumala-tirupati.com

சுப்ரபாதம் (மூலம்):

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP