கெளசல்யா சுப்ரஜா ராமா (1 & 2)
விடிகாலை சுமார் 3:00 மணி. கூட்டம் அதிகம் இல்லை!
குளிர் தென்றல் வீசுகிறது! சில பக்தர்கள் அங்கப் பிரதட்சிணம் செய்து முடிக்கிறார்கள்; இப்போது நாம் நிற்கும் இடம் திருமாமணி மண்டபம்!
இரண்டு பெரிய காண்டா மணிகள் வாசலுக்கு அருகே!
கருடன் நிற்கிறான். அவனுடன் சேர்ந்து நாமும் நிற்கிறோம்.
துவார பாலகர்கள் (ஜய விஜயர்கள்) இருபுறமும் காத்து நிற்கும் தங்க வாயில் (தெலுங்கில்: பங்காரு வாகிலி) மூடப்பட்டு உள்ளது.
அர்ச்சகரும், ஜீயரும் பூட்டின் சாவியை, துவார பாலகர்கள் அருகில் வைத்து, கதவைத் திறக்க அனுமதி பெறுகின்றனர்.
அன்னமாச்சார்யரின் பூபாள ராகப்பாடல் தெலுங்கில் இசைக்கப்படுகிறது; பின்னர் ஆழ்வாரின் ஈரத் தமிழில் திருப்பள்ளியெழுச்சி; சுப்ரபாதம் எல்லாம் அப்பறம் தான்!
மணிகள் ஒலிக்கின்றன; பேரிகையும் ஊதுகோலும் சேர்ந்தே ஒலிக்கின்றன;
திருக்கதவம் திறக்கப்படுகிறது!
இருப்பினும் திரை போடப்பட்டுள்ளது!!
கோபூஜை முடிந்து, பசுவுடன், இடையனுக்குத் தான் முதல் தரிசனம் தருகிறான் வேங்கடவன்! அந்தணருக்கு அல்ல!
உள்ளே சயன மண்டபத்தில், தொட்டிலில் தூங்கும் போகஸ்ரீநிவாசனை எழுப்புகிறார்கள்;
அன்றைய நாளின் முதல் தரிசனமாக, சுப்ரபாத சேவை என்கிற விஸ்வரூப தரிசனம்!
வெள்ளை ஆடையும், துளசி மாலை மட்டும் உடுத்தி இறைவன்!
மிகவும் எளியவனாக, கள்ளச் சிரிப்போடு காட்சி தருகிறான்.
தமிழில் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பள்ளி எழுச்சியும் பாடப்படுகிறது!
அனுதினமும், (மார்கழி மாதம் தவிர)
திருமாமணி மண்டபத்தில், துவார பாலகர்கள் முன்னே சுப்ரபாதம் ஓதப்படுகிறது;
திருமலையில், மார்கழியில் மட்டும் வடமொழிச் சுப்ரபாதம் Total Cut; Shd not at all be chanted; Only தமிழ்த் திருப்பாவை! இராமானுசர் ஏற்பாடு! (திருமலைக் கோயில் ஒழுகு)!
எல்லா நாளுமே திருப்பாவை உண்டு தான்!
ஆனா, பிற நாட்களில், பூசையின் போது, தமிழ்/ வடமொழி, இரண்டுமே ஓதப்படும்!
மார்கழியில், வடமொழி தவிர்த்து, தமிழ் மட்டுமே! அதுவும் முதன் முதலிலேயே!
வாருங்கள் எல்லாரும் சொல்லத் தொடங்கலாம்..."கெளசல்யா சுப்ரஜா ராமா பூர்வா..."
ஸ்ரீஹரி ஓம்:
(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)
கெளசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்
(இரண்டு முறை)
கோசலை குமரா ஸ்ரீராமா பொழுது புலர்கின்றதே
தெய்வீகத் திருச்சடங்குகள் செய்ய எழுந்தருள் புருடோத்தமா...
கெளசல்யா சுப்ரஜா = கோசலை பெற்றெடுத்த திருமகனே!
விசுவாமித்திரரின் யாகத்தைக் காக்க இராமனும், இலக்குவனும் சென்ற போது, இள வயது; தாய் தந்தையரை முதல் முறையாகப் பிரிந்திருக்கும் நிலை; அதனால் தான் முதலில் தசரதன் அனுப்பத் தயங்கினான்; இதையெல்லாம் மனத்தில் நினைத்தார் முனிவர்; என்ன தோன்றியதோ அந்தக் கோபக்கார முனிவருக்கு! தாய் அன்பு காட்டத் தொடங்கி விட்டார்!
மிக்க வாஞ்சையுடன் ஒரு தாய் எழுப்புவது போல எழுப்புகிறார்;
ஆதி கவியான வால்மீகியின் இந்த ராமாயண சொற்றொடரைத் தான், பெரும்பாலும் எல்லாப் பெருமாள் சுப்ரபாதங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்!
ராம = ராமா
ராம என்பது சர்வ மங்களத்தைக் குறிக்கும் சொல்; ஈசனும் இந்த "ராம" என்பதையே மனத்துள் ஜபிப்பதாக சகஸ்ரநாமம் சொல்கிறது; (ஸ்ரீ ராம ராம ராமேதி...);
காசியில் மரிப்போர் காதுகளில் ஈசன் இதையே ஓதி நல்லுலகம் சேர்ப்பதாக ஐதீகம்.
"சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்ற இரண்டு எழுத்தினால்", என்று கம்பரும் பேசுகிறார்.
பூர்வா ஸந்த்யா = அதிகாலை, சிற்றஞ் சிறுகாலை
பிரம்ம முகூர்த்த வேளை என்பார்கள்; சூர்யோதயத்துக்கு இரண்டரை நாழிகை முன்பாக!
Approx 3:30-4:00; ஆன்மிகப் பணிகளுக்கு மிகவும் உன்னதமான வேளை இது!
ப்ரவர்த்ததே = தொடங்குகின்றதே
உத்திஷ்ட = எழுந்திரு
நர ஸார்தூல = நரர்களில் (மனிதர்களில்), புலியைப் போன்றவனே
ராமன் மனிதனாய் வாழ்ந்து காட்டிச் சென்றான்; சர்வ சக்தியுள்ள கடவுளாகத் தன்னை வெளிக் காட்டவில்லை.
கர்த்தவ்யம் = உன் கடமைகள்
தைவ மாஹ்நிகம் = தெய்வீகமானவை, அணிகலனாய் அமைபவை
உன் நித்யக் கடமைகள் நின்றால் உலகம் என்னவாகும்? அதனால் கடமையைக் காட்டி எழுப்புகிறார்!
(நாம் கூட முக்கியமான வேலை என்றாலோ, விசா நேர்காணல் என்றாலோ, அலாரம் வைக்காமலேயே எழுந்து விடுகிறோமே! கடமையே என்று எழுந்து விடுகிறோம் அல்லவா?:-)
உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு
(இரண்டு முறை)
எழுந்தருள் எழுந்தருள் கருடக்கொடி ஏந்தும் கோவிந்தனே
எழுந்தருள் திருமகள் தலைவா மூவுலகும் செழித்தோங்கவே
உத்திஷ்டோ உத்திஷ்ட = எழுந்திரு எழுந்திரு
சிறு பிள்ளை அல்லவா; அதான் இத்தனை முறை "உத்திஷ்ட" என்று சொல்ல வேண்டியுள்ளது போலும்! :-)
கோவிந்த = கோவிந்தா
கோ+விந்தன்=உயிர்களாகிய பசுக்களைக் காப்பவன்; பெருமாளின் மிக முக்கியமான நாமங்களாவன: அச்சுதா, அனந்தா, கோவிந்தா!!
உத்திஷ்ட = எழுந்திரு
கருட த்வஜ = கருடக் கொடி உடையவனே
எம்பெருமானின் கொடியில் கூட கருடன் தான்; திருமலை பிரம்மோற்சவப் பதிவில் தான் பார்த்தோமே இந்தக் கொடியேற்றத்தை;
உத்திஷ்ட = எழுந்திரு
அட, மொத்தம் ஐந்து "உத்திஷ்ட"!
இன்னுமா எழ வில்லை?
(நாம தான் கேள்வி நல்லா கேப்போமே; நாம் எழும் போது தானே கஷ்டம் தெரியும் :-)வீட்டில் அம்மா நம்மை எழுப்பும் போது "எழுந்திரு, எழுந்திரு" என்று எத்தனை முறை எழுப்புகிறார்கள்? நாம் எத்தனை முறை புரண்டு புரண்டு படுக்கிறோம்? நம் ராமன் எப்படி?
குழந்தைகள் பெரும்பாலும் எழுந்திருந்தாலும், மீண்டும் மீண்டும் கொஞ்சி அழைப்பதை விரும்புகிறார்கள் - Added this line after the comment from Ms.Padma Arvinth)
கமலா காந்தா = தாமரை மலரில் உள்ளவள் விரும்பும் நாயகனே
தாமரை மீது மலர்ந்து அருளும் அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மி! அலைமகளைக் காந்தம் போல் தன் பால் ஈர்ப்பவன் ஆயிற்றே! லட்சுமிகாந்தன் என்று தானே அவன் பெயர்!
த்ரைலோக்யம் = மூன்று உலகுக்கும்
(பூலோகம், புவர்லோகம், சுவர்கலோகம்)
மங்களம் குரு = மங்களம் கொடுக்க
ராம=மங்களம் என்று பார்த்தோம். அந்த மங்களத்தை, மகிழ்ச்சியை, ஆனந்தத்தை உலகுக்கு அளிப்பதே அவன் கடமை; அதனால் தான் தனக்காக, தன் படிப்புக்காக எழச்சொல்லாது, உலக நலனுக்காக எழச் சொல்கிறார்.
இப்படிச் சொன்னால், அவனால் எழாமல் இருக்க முடியாதல்லவா?:-)
தயா சிந்து நாயகா, வேங்கடவா, திருக்கண் மலர்க!
-------------------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)3. தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) -
(Plays in Rhapsody player; If not installed, please wait till it auto installs; After that it plays by itself)
நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com,rhapsody.com
Pics: tirumala-tirupati.com
-------------------------------------------------------------------------------------
70 comments:
ராம = ராமா
ராம என்பது சர்வ மங்களத்தைக் குறிக்கும் சொல்; ஈசனும் இந்த "ராம" என்பதையே மனத்துள் ஜபிப்பதாக சகஸ்ரநாமம் சொல்கிறது; (ஸ்ரீ ராம ராம ராமேதி...);
காசியில் மரிப்போர் காதுகளில் ஈசன் இதையே ஓதி நல்லுலகம் சேர்ப்பதாக ஐதீகம்.
"சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்ற இரண்டு எழுத்தினால்", என்று கம்பரும் பேசுகிறார்
ராமா என்றால் என்ன அர்த்தம் "ரமயதி இதி ராம:" எல்லோரையும் ரமிக்க தன்னிடத்தில் வயப்படுத்திக்கொள்பவன் என்று கொள்ளலாம்.உதாரணம் வேண்டுமா. சூர்ப்பணகையையே ரமிக்கச்செய்யவில்லையா?
தியகராஜரும் "சக்கனி ராஜ" என்ற கரகரப்ப்ரியா ராகத்தில் அமைந்த கிருதியில்கூறுகிறார்'"முக்கண்டி நோட செலகே நாமமே' சிவபிரான் நாவில் எப்போதும் ஜபிக்கப்பட்ட ராமா என்ற நாமத்தைஉடையவனும் என்றுதான் ராமனை குறிப்பிடுகிறார்
திராச ஐயா, வாங்க!
உங்கள் வீட்டுத் திருநாள் அதுவுமா வந்திருக்கீங்க! வாழ்த்துக்கள்!! அம்மா செய்த பலகாரங்கள் எங்கே? :-)
அழகாச் சொன்னீங்க; ரம்யமானவன் தானே ராமன்! //எல்லோரையும் ரமிக்க தன்னிடத்தில் வயப்படுத்திக்கொள்பவன்// அதுவே உண்மை!
தண்டகாரண்யத்து முற்றும் துறந்த முனிவர்களே அவன் அழகில் மயங்கி கதி கலங்க வில்லையா?
தியாகராஜரை மேற்கோள் காட்டியமைக்கு நன்றி ஐயா! திருமலை அடியவர் பதிவில் அடுத்து அவர் தான்!
திருப்பதி வைபவங்களைப் புட்டு, புட்டு வைக்கிறீர்கள். எம்.எஸ் அம்மா வேங்கடேச சுப்ரபாதம் பாடி அதை மிகவும் பிரபலமாக்கிவிட்டனர். தமிழ் சுப்ரபாதம் மிக அழகாக வந்துள்ளது. அதையும் எம்.எஸ் மற்றும் பலர் பாடியுள்ளனர் (ராகா.காம்). உங்கள் விளக்கம் இளமைத் துள்ளளுடன் அழகாக வந்துள்ளது. பகவத் குணங்களில் ஈடுபட வயது ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்கு நல்ல முன்னுதாரணம் எங்கள் எழுத்து. ராமா என்பதின் சமிஸ்கிருத அர்த்தம் 'திருமால்' என்னும் தமிழ் சொல்லுடன் ஒத்துப்போகிறது. நிறைய கொடுக்கல், வாங்கல் இருந்திருக்கிறது!
பங்காரு வாகிலி பலே பாகுந்தி.
அப்படியே பிரமிச்சு நின்னுட்டேன். இப்பப் படிக்கும்போதுதான் தோணறது,
இது எதையுமே கவனிக்காம, நானும் எத்தனை முறை அங்கே நின்னுட்டு
வந்துருக்கென்னு தெரியுது.
அங்கே போனவுடன்,'அவனை'த்தவிர வேற எதையும் பார்க்கக் கண் ஓடறதில்லைப்பா.
போதாக்குறைக்கு, இந்தப் பாழுங் கண்களில் நீர்கட்டிக்கிட்டு, 'அவனைக்கூட' சரியாப்
பார்க்க முடியறதில்லை(-:
ரொம்ப நல்லா ஆரம்பிச்சு இருக்கீங்க.
மனசு நிறைஞ்சு சொல்றேன்,'நல்லா இருங்க'
ஆமா, இன்னிக்கு தி.ரா.ச. வீட்டுலெ என்ன விசேஷம்?
எதா இருந்தாலும் 'வாழ்த்து(க்)கள்.
மிகச் சிறப்பாக இருக்கிறது இரவிசங்கர். ஒவ்வொரு வரியையும் இரசித்துப் படித்தேன். அறியாத தகவல்கள் பல தந்திருக்கிறீர்கள்.
ஆக வடமொழி சுப்ரபாதத்திற்கு முன்னால் அன்னமாசாரியரின் தெலுகு கீர்த்தனையும் விப்ரநாராயணராம் தொண்டரடிப் பொடி ஆழ்வாரின் தமிழ் பாசுரங்களும் பாடப்படுகின்றனவா? திருக்கோவில்களில் தமிழுக்கு முதலிடம் இல்லை என்று குறை சொல்லப்படும் இந்நாட்களில் இந்த செய்தியை அறிந்தால் தமிழார்வலர்கள் மிக்க மகிழ்வார்கள். வைணவ ஆலயங்களில் தமிழுக்குத் தான் முதலிடம் எப்போதும் என்பது மிகவும் மகிழ்ச்சி தரும் ஒன்று.
ஒரு நாளில் இரண்டு சந்த்யைகள் உண்டு. ஒன்று இரவும் பகலும் சந்திக்கும் அதிகாலை - முதல் சந்த்யா - பூர்வ சந்த்யா; இரண்டாவது பகலும் இரவும் சந்திக்கும் மாலை - கடைசி சந்த்யா - உத்தர சந்த்யா. இங்கு பூர்வ சந்த்யா என்ற பிரம்ம முகூர்த்தம் கூறப்படுகிறது.
ஐந்து உத்திஷ்ட இருக்கிறது என்று சொல்லிவிட்டீர்கள். ஏன் ஐந்து முறை என்று சொல்லவில்லையே?! :-)
அடிக்கு அடி வியாக்யானமா?
ரொம்ப நல்லா இருக்கு.
ரவி சங்கர்!
பீற்றா ஆக்கிய பின் என் புளக்கர்;சிக்கலில் உள்ளதால் பின்னூட்டம் சொந்தப் பெயரில் இடமுடியவில்லை.நான் எழுதிய புதிய 3 பதிவுகளும் தெரியவில்லை. நிவர்த்தி செய்யும் வழி தெரியாததால்; எழுதுவதையும் நிறுத்திவிட்டேன்.
அதனால் பெயரிலியாக வருகிறேன்.
நான் அதிகாலை கண்விழிப்பதே!!! நித்யஸ்ரீ யின்;இன்குரலில் வரும் தமிழ்ச் சுப்ரபாதத்தின் ஒலியிலே!! பல வருடங்களாக அதனால்; அதிகாலைப் படபடப்பில்லை.
இறை நாமம் அன்றைய தினத்தை நம்பிக்கையுடையதாக்கிறது.
விளக்கத்திற்கு மிக்க நன்றி!!
யோகன் பாரிஸ்
//துளசி கோபால் said:
ஆமா, இன்னிக்கு தி.ரா.ச. வீட்டுலெ என்ன விசேஷம்?
எதா இருந்தாலும் 'வாழ்த்து(க்)கள்.//
டீச்சர், திராச ஐயா மற்றும் அம்மா ஆகியோரின் மணநாள் Nov 16!
Major Partner/Minor Partner என்று ஒரு பதிவும் போட்டு விட்டார். இதோ:
http://trc108umablogspotcom.blogspot.com/2006/11/blog-post_16.html
ரவி!
வரி வரிக்கு விளக்கம் மிக அருமை.
//அங்கே போனவுடன்,'அவனை'த்தவிர வேற எதையும் பார்க்கக் கண் ஓடறதில்லைப்பா.
போதாக்குறைக்கு, இந்தப் பாழுங் கண்களில் நீர்கட்டிக்கிட்டு, 'அவனைக்கூட' சரியாப்
பார்க்க முடியறதில்லை(-://
உண்மை தான் துளசியக்கா. அவனை பார்க்க போய், அவனை கண்டவுடன் கண் தானாகவே முடி விடுகின்றது.
//நா.கண்ணன் said...
திருப்பதி வைபவங்களைப் புட்டு, புட்டு வைக்கிறீர்கள்//
வருகைக்கும் தனிப்பதிவுக்கும் நன்றி கண்ணன் சார்.
//உங்கள் விளக்கம் இளமைத் துள்ளளுடன் அழகாக வந்துள்ளது. பகவத் குணங்களில் ஈடுபட வயது ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்கு நல்ல முன்னுதாரணம் எங்கள் எழுத்து.//
தங்கள் ஆசி, சார்! அன்பர்களில் ஊக்கமும் கூட!
//ராமா என்பதின் சமிஸ்கிருத அர்த்தம் 'திருமால்' என்னும் தமிழ் சொல்லுடன் ஒத்துப்போகிறது. நிறைய கொடுக்கல், வாங்கல் இருந்திருக்கிறது!//
இந்தக் கொடுக்கல், வாங்கலால் சுவையும் கூட, நன்மையும் கூட!
சிற்றஞ்சிறு காலை அல்லவா?
அதான், தமிழ்மண விண்மீன் வந்து, சுப்ரபாத சேவைக்கு, கொஞ்சம் ஒளி கொடுக்குறாங்க! :-)
//துளசி கோபால் said...
பங்காரு வாகிலி பலே பாகுந்தி.
அங்கே போனவுடன்,'அவனை'த்தவிர வேற எதையும் பார்க்கக் கண் ஓடறதில்லைப்பா.//
கரெக்டா சொன்னீங்க டீச்சர்; எனக்குக் கூட அப்படியே தான்! அவன் முன்னே இதெல்லாம் கவனிக்கக் கூடத் தோனாது! நாம தான் அந்த ஒரு முகத்தையே ஏங்கி ஏங்கிப் பாக்கவே சரியா இருக்கே!
பதிவில் பல விடயங்களைப் பெரியோர் சொல்லக் கேள்வி; அவர்கள் சொல்லச் சொல்ல எனக்கு அப்படியே நம்ம வீட்டு விடயம் பேசுவது போலவே இருக்கும்.
ஆனா அடுத்த முறை செல்லும் போது, அவங்க சொன்னதைப் பாத்தாகணுமே; எப்படிப் பார்ப்பது? இதுக்கு தனியா சில உபாயம் எல்லாம் இருக்கு; தனியாச் சொல்றேன்!
தரிசனத்தின் போது இல்லாமல், சில சேவைகளின் போது கோவிலை ஒரு ட்ரிப் அடிக்கலாம்; நம்ம ஆளு வீடு எப்படி இருக்குது ன்னு ஒரு ரவுண்டு வரலாம்.
அதில் ஒன்று ஏகாந்த சேவை. அப்படிப் பார்த்து ரசித்தது தான் பல விடயங்கள்!
//ரொம்ப நல்லா ஆரம்பிச்சு இருக்கீங்க.
மனசு நிறைஞ்சு சொல்றேன்,'நல்லா இருங்க'//
தங்கள் அன்புக்கும் ஆசிக்கும் மிக்க நன்றி டீச்சர்!
//குமரன் (Kumaran) said...
ஒவ்வொரு வரியையும் இரசித்துப் படித்தேன். அறியாத தகவல்கள் பல தந்திருக்கிறீர்கள்.//
வாங்க குமரன்; மிக்க நன்றி!
//வடமொழி சுப்ரபாதத்திற்கு முன்னால் அன்னமாசாரியரின் தெலுகு கீர்த்தனையும் விப்ரநாராயணராம் தொண்டரடிப் பொடி ஆழ்வாரின் தமிழ் பாசுரங்களும் பாடப்படுகின்றனவா?//
நீங்கள் சொல்வதில் ஒரு சிறு திருத்தம் குமரன். சுப்ரபாதத்திற்கு முன் அன்னமாச்சார்யரின் பூபாளக் கீர்த்தனையும், பின்பு சுப்ரபாதமும், சுப்ரபாத சேவையின் பின் திருப்பள்ளி எழுச்சியும் பாடப்படுகிறது.
வரிசைக் கிரமமாகப் பார்க்காமல், அன்புடன் பார்த்தால், சுப்ரபாதம் மட்டும் அல்ல; ஒவ்வொரு சேவையின் போதும் தமிழ்ப்பாடல் இல்லாத பூசையே இல்லை!
தோமாலை சேவையில் மந்திர புஷ்பம் மற்றும் ஆண்டாள் பாமாலை.
திருமஞ்சனத்தின் போது பெரியாழ்வார் நீராட்டம், நிவேதனத்தின் போது சோறூட்டல் என்று தொடங்கி, இரவு ஏகாந்த சேவையில் "மன்னு புகழ் கோசலை" பாசுரம் வரை எங்கும் தமிழ் எதிலும் தமிழே!
//ஒரு நாளில் இரண்டு சந்த்யைகள் உண்டு.
பூர்வ சந்த்யா;
உத்தர சந்த்யா.//
அழகாச் சொன்னீங்க குமரன்; முச்சந்தி என்கிறார்களே! நண்பகலையும் சேர்த்தோ? அதுக்குப் பேர் என்ன குமரன்?
//ஐந்து உத்திஷ்ட இருக்கிறது என்று சொல்லிவிட்டீர்கள். ஏன் ஐந்து முறை என்று சொல்லவில்லையே?! :-) //
என்னை எழுப்பும் போது எங்க அம்மா, "சங்கரா எழுந்திரு, சங்கரா எழுந்திரு" ன்னு நாலைஞ்சு முறை எழுப்புவாங்க;
நானும் இன்னும் அஞ்சு நிமிஷம்...இன்னும் அஞ்சு நிமிஷம்...ன்னு இழுப்பேன்!
அது போல ராமனை ஐந்து முறை எழுப்பி, அவரும் இழுத்தடிக்கிறாரோ? :-)))
தெரியலையே குமரன்! நீங்க தான் சொல்லணும் உத்திஷ்ட, உத்திஷ்ட, உத்திஷ்ட என்று ஐந்து முறை ஏனோ?!!
//வடுவூர் குமார் said...
அடிக்கு அடி வியாக்யானமா?
ரொம்ப நல்லா இருக்கு.
//
வாங்க குமார் சார்;
அடிக்கு அடியே தான், அடியேன் தர முனைந்துள்ளேன்; இப்படித் தரும் போது, சும்மா vadamozhi to tamizh meaning மட்டும் சொல்லாம, ஆழ்வார் அமுதம் எங்கெல்லாம் தொடர்பு வருகிறதோ, அங்கெல்லாம் சொல்லி விடுவேன் என்று இப்போதே "பயம்" காட்டி விடுகிறேன் :-))
//Anonymous said...
ரவி சங்கர்!
பீற்றா ஆக்கிய பின் என் புளக்கர்;சிக்கலில் உள்ளதால் பின்னூட்டம் சொந்தப் பெயரில் இடமுடியவில்லை.நான் எழுதிய புதிய 3 பதிவுகளும் தெரியவில்லை. நிவர்த்தி செய்யும் வழி தெரியாததால்; எழுதுவதையும் நிறுத்திவிட்டேன்.//
யோகன் அண்ணா, வாங்க!
என்ன இது; இன்னுமா இந்த பீட்டா பிரச்னை? இட்லி வடையார் எப்படி சரி செய்தாரோ தெரியவில்லையே! இந்தச் சுட்டியைப் பார்த்தீர்களா?
http://buzz.blogger.com/2006/09/known-issues-for-blogger-in-beta.html
//நான் அதிகாலை கண்விழிப்பதே!!! நித்யஸ்ரீ யின்;இன்குரலில் வரும் தமிழ்ச் சுப்ரபாதத்தின் ஒலியிலே!! பல வருடங்களாக அதனால்; அதிகாலைப் படபடப்பில்லை.
இறை நாமம் அன்றைய தினத்தை நம்பிக்கையுடையதாக்கிறது//
மிகவும் உண்மை அண்ணா! இது நடக்குமோ என்ற படபடப்பு குறைந்து, மனம் திட்டமிடுதலில் கவனம் செலுத்த முடிகிறது! இதற்குத் தான் சுலோகங்களின் பொருளும் தேவைப்படுகிறது!
பொருள் அறிந்தோ அறியாமலோ, கேட்டு, கேட்டுப் பலரும் ஏற்கனவே மனனம் செய்து விட்ட வடமொழிப் பாடல்; அதனால் தான் பொருள் உரைக்க வேண்டும் என்று அடியேன் விழைந்தேன்! மிக்க நன்றி அண்ணா!
//நாகை சிவா said...
ரவி!
வரி வரிக்கு விளக்கம் மிக அருமை.//
வாங்க சிவா.
வருகைக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி!
ரவி, குழந்தைகள் பெரும்பாலும் எழுந்திருந்தாலும் மீண்டும் மீண்டும் கொஞ்சி அழைப்பதை விரும்புகிறார்கள். முதல் முறை அன்னையருக்கே அதிகாலை எழுப்ப சற்றே தயக்கமாய் மெதுவாய் குரல் வரும். இங்கே ராமனை குழந்தையாய் பாவிப்பதால் பலமுறை எழுந்திரு என்று சொல்லி இருக்க கூடும்.
hello ravishankar, mikavum nanri
kaalaith thirupalli ezucchikku.
miindum paarkkalam.
ரொம்ப எளிது ரவி. முதல் சந்தி பூர்வ சந்த்யா, கடைசி சந்தி உத்தர சந்த்யா என்றால் நடுச்சந்தி (நடுப்பகல்) மத்ய சந்த்யா. :-)
முச்சந்தி என்று மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தையல்லவா சொல்வார்கள்?
திருப்பாவை முதல் ஐந்து பாசுரங்களும் பெருமாளின் ஐந்து உருநிலைகளைக் குறிப்பதாகச் சொல்வார்கள். இதுவரை இந்த முதல் இரு சுலோகங்களில் ஐந்து முறை உத்திஷ்ட வருவதைக் கவனித்ததில்லை. நீங்கள் சொன்ன பிறகு அதுவும் பெருமாளின் ஐந்து நிலை உருவங்களைக் குறிக்கிறதோ என்று தோன்றுகிறது. சரிதானா என்று பெரியோர்கள் சொல்ல வேண்டும்.
1. நர சார்தூல என்றதால் அவதாரமாம் விபவ உருவம் கூறப்பட்டது.
2. இருமுறை உத்திஷ்ட என்று குறையொன்றும் இல்லாத கோவிந்தனுக்குக் கூறப்பட்டது. முதல் தடவை சொல்வது அந்தர்யாமிக்கு. கோவிந்தன் என்றால் பசுக்களைக் காப்பவன் என்று பொருள். எவ்வுயிர்க்கும் உள் நின்று புலன்களாகிய பசுக்களை இயக்கிக் காப்பவன் அந்தர்யாமியாகிய கோவிந்தன்.
3. இரண்டாவது தடவை சொல்வது எளிவந்த தன்மையுடன் கோவிந்தனாக (இடையனாக) வந்த அர்ச்சை உருவத்தை. இதுவன்றோ கிணற்று நீரினைப் போல் எல்லோரும் எப்போதும் அள்ளி அள்ளிப் பருகும் படி அமைந்திருப்பது.
4. கருட த்வஜ என்றதன் மூல கருட அனந்த விஷ்வக்ஷேனர் முதலிய நித்யர்களும் பிரம்ம ருத்ர இந்திரன் முதலிய தேவர்களும் சேவிக்கும் திருப்பாற்கடலில் உள்ள வ்யூஹ திருவுருவம் சொல்லப்படுகிறது.
5. கமலா காந்த என்றதன் மூலம் பர ரூபம் சொல்லப்படுகிறது. திருவின் மணாளனாய் இருப்பதே பரம்பொருளின் அடையாளம் என்று பரம்பொருள் நிர்ணயம் சொல்லும் போது புருஷ சூக்தமும் சொல்கிறதே.
//பத்மா அர்விந்த் said...
ரவி, குழந்தைகள் பெரும்பாலும் எழுந்திருந்தாலும் மீண்டும் மீண்டும் கொஞ்சி அழைப்பதை விரும்புகிறார்கள்.//
உண்மை தாங்க பத்மா, இதை நான் என் தங்கைப் பெண்ணிடம் கண்டுள்ளேன்; ஐந்து வயது! கண் முழித்துக் கொண்டு தான் இருப்பாள்; ஆனால் கொஞ்சாமல், எழுந்திருக்கவே மாட்டாள்! நாம் விட்டு விட்டால் சிறிது நேரம் கழித்து அவளாகவே எழுந்து விடுவாள் என்று நினைப்போம். ஹூம்...2 மணி நேரம் ஆனாலும் சும்மாவே தூங்கும் அந்தக் குட்டி!
ராமனும் அதே மாதிரி "பாவ்லா" பண்ணுகிறார் போல:-))
//வல்லிசிம்ஹன் said...
hello ravishankar, mikavum nanri
kaalaith thirupalli ezucchikku.
miindum paarkkalam.//
வல்லியம்மா! வாங்க!
அனைவரும் நலமா! அப்புறம் தனி மடல் அனுப்புங்க; தொலைபேசலாம்!
//குமரன் (Kumaran) said...
ரொம்ப எளிது ரவி. முதல் சந்தி பூர்வ சந்த்யா, கடைசி சந்தி உத்தர சந்த்யா என்றால் நடுச்சந்தி (நடுப்பகல்) மத்ய சந்த்யா. :-)//
நன்றி குமரன், மாத்தியான்னிகம் பற்றிக் குறிப்பு தந்தமைக்கு!
//முச்சந்தி என்று மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தையல்லவா சொல்வார்கள்?//
ஹி ஹி...
அதுவும் முச்சந்தி தான்!
ஆனா, இதுவும் முச்சந்தி தாங்க! மூன்று சந்திகள்! தமிழில் பொருளானது, சிலேடைக்கு உபயோகப்படுத்துற மாதிரி எப்படி மாறுது பாத்தீங்களா? :-))
//குமரன் (Kumaran) said...
திருப்பாவை முதல் ஐந்து பாசுரங்களும் பெருமாளின் ஐந்து உருநிலைகளைக் குறிப்பதாகச் சொல்வார்கள். இதுவரை இந்த முதல் இரு சுலோகங்களில் ஐந்து முறை உத்திஷ்ட வருவதைக் கவனித்ததில்லை//
குமரன் தாங்கள் இப்படி லயித்துப் படிப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது!
திருப்பாவை முதல் ஐந்து, நீங்கள் சொன்னது போல் அடியேனும் பெரியோர் உரைக்கக் கேட்டுள்ளேன்!
1. நாராயணனே நமக்கே பறை தருவான் = பரம்
2. பையத் துயின்ற பரமன் அடி பாடி = வியூகம்
3. ஓங்கி உலகளந்த உத்தமன் = விபவம்
4. ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து/பத்மநாபன் கையில் = அர்ச்சை
5. வாயினால் பாடி, மனத்தினால் = அந்தர்யாமி
இதை "உத்திஷ்ட" விற்கு நீங்கள் சொல்வதும் பொருத்தமாய் தான் உள்ளது! அதே சமயம் பஞ்சாயுதங்களுக்கும் பொருத்தும் வண்ணமும் உள்ளது என்று இப்போது தான் எனக்குத் தோன்றுகிறது!
பஞ்சாயுதங்களுக்கு எப்படி வரும் என்பதைச் சொல்லுங்கள் இரவிசங்கர்.
ரவிக்குமார்
சுப்பிரபாதத்தை தமிழிலில் நன்றாக விளக்கியிருக்கிறீர்கள். மிகவும் அருமை. மேலும் எழுதுங்கள்.
சுந்தரி
ரவிக்குமார்
சுப்பிரபாதத்தை தமிழிலில் நன்றாக விளக்கியிருக்கிறீர்கள். மிகவும் அருமை. மேலும் எழுதுங்கள்.
சுந்தரி
//குமரன் (Kumaran) said...
பஞ்சாயுதங்களுக்கு எப்படி வரும் என்பதைச் சொல்லுங்கள் இரவிசங்கர்//
உத்திஷ்ட நர சார்துல (விபவம்) = ராமன் கையில் வில்
உத்திஷ்ட, உத்திஷ்ட கோவிந்த (அர்ச்சை)= சங்கு, சக்கரம்
உத்திஷ்ட கருடத்வஜ (வியூகம்) = வாள்; கொடி ஏந்திய அரசனுக்கு வாளும் உண்டே!
உத்திஷ்ட கமலா காந்தா (பரம்) = கதை; திருமகளுடன் வீற்றிருந்த கோலத்தில் இடக்கையில் கதை; வலக்கை அபயம்.
இவையே அடியேன் பொருத்திப் பார்த்த பஞ்சாயுதங்கள்!
நான் ரொம்ப நேரம் கழித்து வந்துவிட்டேனா? :-(
அருமையா எழுதியிருக்கறீங்க KRS...
கே.ஆர்.எஸ். / குமரன்
நீங்க ரெண்டு பேரும் சொல்லும் இந்த interpretations ரொம்ப நல்லா இருக்கு. இன்னும் சொல்லுங்க. கேட்டுக்கறேன்.
அற்புதமாக இருக்கிறது. வழங்கிய தங்களுக்கு நன்றி.
"கௌஸல்யா" என்பதற்கு பல விசேஷ பொருள்கள் இருக்கின்றன.
அவற்றை பின்னால் வேறொரு சமயம் சொல்கிறேன்.
"ராம" என்றால் அழகன். தூங்கும் சமயத்தில் அழகனாக இருப்பதால் அவனை பார்த்து "ராம" என்கிறார். இதையே பிராட்டி சீதை காகாசுர வத கதை சொல்லும்போதும் பின்னால் சொல்லப்போகிறாள்.
ராமன் தூங்கும்போது(ம்) அழகன்.
"பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே" - விடியற்காலை சூரியன் போல் உன்னை கௌஸல்யை பெற்றெடுத்தாள் என்று ஒரு அர்த்தம்.
அல்லது, தாயை கௌரவித்தது போல பூர்வ-ஸந்த்யா காலத்தையும் கௌரவிப்பாயாக என்று பொருள். (அதாவது ஸந்தியாவந்தனம் முதலிய காரியங்களால் கௌரவி என்று பொருள்)
அல்லது, "பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே" - ஸூரியன் தன் விரோதியான இருளை அழிப்பதுபோல் இது உன் விரோதிகளை அழிக்கும் ஸமயம் என்று பொருள் (விஸ்வாமித்திரர் வேண்டுவதும் அதுதான்...)
அல்லது "பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே" - உன்னை கண்டதும் அறிவின்மை என்ற இருள் நீங்கியது. பகவத் சாக்ஷாத்காரம் ஏற்பட்டது. இது கோவிந்த ராஜர் வியாக்கியானம்.
அதாவது, பொழுது நல்லபடி விடிந்தது. அல்லது, அகில உலகிற்கும் பகவானுடைய அவதாரத்தினால் ஸத்வ குண வளர்ச்சி காலம் வந்துவிட்டது என்றும் பொருள். பாகவதத்தில் அக்ரூரர் கிருஷ்ணனை பார்க்கப்போகும்போது இதே வார்த்தைகள் அங்கு உபயோகிக்கப்படுகின்றதால் இந்த அர்த்தம் விளங்குகிறது.
"அத்யமே ஸபலம் ஜன்ம ஸுப்ரபாதாச மே நிசா" என்கிறார் அங்கே.
அதாவது, இன்றே என் ஜன்மா விடிவுகாலம் ஏற்பட்டது. ஏன் என்றெல்லாம் என் இரவு நன்றாக விடிந்தது. நான் தாமரைக்கண்ணனை காணப்போகிறேன்" என்கிறார்.
அவ்வாறே, நமக்கும் வேங்கடவனின் உருவத்தால் ஜன்ம சாபல்யம் ஏற்பட்டது என்று பொருள்.
"நர சார்தூல" - நரர்களில் சிறந்தவனே - சிறந்தவனாகையால் நீயும் தினசரி கடமைகளை (ஸந்தியாவந்தனம் முதலிய) செய்வாயாக என்று விசுவாமித்திரர் சொல். ஏனென்றால் "யத்யதா சரதிச்ரேஷ்ட: தத்தவேதரேஜநா:" என்று சாத்திரம் (சிறந்தவனின் அனுஷ்டானத்தை பார்த்து மற்றவர்களும் அப்படியே செய்கிறார்கள்) அதனால் இவ்வாறு சொன்னார்.
"உத்திஷ்ட" - அண்டியவர்களின் விரோதிகளை அழிப்பதையே சுவ்பாவமாக உடைய உனக்கு தூக்கம் ஏது? எழுந்திரு.
"கர்தவ்யம் தைவமாந்ஹிகம்" - சர்வேச்வரனால் விதிக்கப்பட்ட கடமைகளை செய்யவேண்டும் என்று பொருள்.
அல்லது, தேவ சப்தத்தை ப்ரவர்த்தகமாக எடுத்துக்கொண்டால், "உன்னுடைய கட்டளையாகிய தினசரி கடமைகளை செய்யவேண்டும், அதை நீ அங்கீகரிப்பாயாக" என்று பொருள்.
அல்லது, தேவ ஆராதனம் என்கிற தினசரி கடமையை செய்யவேண்டும். அதனால், எழுந்திருப்பாயாக வேங்கடவா - என்றும் பொருள்.
என் எண்ணங்களை பதிக்க தூண்டிய உங்களுக்கு மிக்க நன்றி.
மேலும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நன்றி
ரவி,
மிக நன்றாக அமைந்திருக்கிறது. மீண்டும் மீண்டும் படித்தேன்.
5 முறை உத்திஷ்ட வருவது திருமாலின் ஐந்து உருநிலைகளைக் குறிப்பதாகக் கொள்வதும் பஞ்சாயுதங்களைக் குறிப்பதாகக் கொள்வதும் அதற்கு குமரனும் நீங்களும் அளித்த விளக்கங்கள் அருமை.
குமரன் ஒரு சிறிய ஐயம்
//இருமுறை உத்திஷ்ட என்று குறையொன்றும் இல்லாத கோவிந்தனுக்குக் கூறப்பட்டது. முதல் தடவை சொல்வது அந்தர்யாமிக்கு. கோவிந்தன் என்றால் பசுக்களைக் காப்பவன் என்று பொருள். எவ்வுயிர்க்கும் உள் நின்று புலன்களாகிய பசுக்களை இயக்கிக் காப்பவன் அந்தர்யாமியாகிய கோவிந்தன்.
3. இரண்டாவது தடவை சொல்வது எளிவந்த தன்மையுடன் கோவிந்தனாக (இடையனாக) வந்த அர்ச்சை உருவத்தை. இதுவன்றோ கிணற்று நீரினைப் போல் எல்லோரும் எப்போதும் அள்ளி அள்ளிப் பருகும் படி அமைந்திருப்பது. //
கோவிந்த என்பது வியூக நிலையைக் குறிப்பதாகக் கொள்ளலாமா?
வாசுதேவன், அநிருத்தன், ப்ரத்யும்னன், சங்கர்ஷணன் ஆகிய நாந்கு வியூக மூர்த்திகள் ஒவ்வொன்றிற்கும் மூன்று வியூகாந்தர மூர்த்திகள் உண்டு. மொத்தம் 12 . அவை
கேசவ, நாராயன, மாதவ
கோவிந்த, விஷ்ணு, மதுசூதன
த்ரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர
Hருசீகேஷ, பத்மனாப, தாமோதர
பாற்கடலில் கருடன் முதலிய நித்ய சூரிகளுடன் அமர்ந்திருப்பது பர ரூபமா அல்லது வியூக ரூபமா?
பாரதியாரின் பாரத மாத திருப்பள்ளியெழுச்சி யின் முதல் வரிகளும் இதே பொருளுடன் அமைந்துள்ளதைக் கவனித்திருக்கிறீர்களா?
"பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்
புன்மையிருட்கணம் போயின யாவையும்
எழு பசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கென்றே
தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்.
விழி துயில்கின்றனை இன்னமெம்தாயே
வியப்பிதுகாண் பள்ளி எழுந்தருளாயே"
நர சார்தூல என்பதற்கு மனிதருள் மிகச் சிறந்தவனே என்றும் பொருள் கொள்ளலாம்.
த்ரைலோக்யம் மங்களம் குரு - மூவுலகங்களுக்கும் நன்மையை செய்
குரு என்றால் "செய்" என்று பொருள். மூவுலகுக்கும் நன்மையை செய் என்று உரிமையுடன் கட்டளையிடுவதாகக் கொள்ளலாம்.
//வெட்டிப்பயல் said:
நான் ரொம்ப நேரம் கழித்து வந்துவிட்டேனா? :-(//
வாங்க பாலாஜி; லேட்டஸ்டா தான் வந்திருகீங்க! தமிழ்மணத்தில் இப்ப தான் தெரிய ஆரம்பிச்சுது! புது வலைப்பூ என்பதால், சிறு delay எடுத்துக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்!
//அருமையா எழுதியிருக்கறீங்க KRS...//
நன்றி பாலாஜி!
வடமொழியில் இருப்பதால், படிக்கக் கடினமா இருந்தால் உடனே சொல்லுங்க! இன்னும் சிம்பிள் ஆக்குகிறேன்!
நோக்கமே இதை அடிக்கடி கேட்பவர்கள், அடுத்த முறை கேட்கும் போது, பொருள் தொடர்புபடுத்தி பார்த்து, மகிழத் தான்!
//இலவசக்கொத்தனார் said...
கே.ஆர்.எஸ். / குமரன்
நீங்க ரெண்டு பேரும் சொல்லும் இந்த interpretations ரொம்ப நல்லா இருக்கு. இன்னும் சொல்லுங்க. கேட்டுக்கறேன்.//
வாங்க கொத்ஸ்,
உங்கள் ஊக்கத்தால், இன்னும் சிறப்பாகச் செய்ய முயல்கிறேன்! அவன் அருளாலே, அவனை எழுப்பி!:-)
//ஜயராமன் said...
அற்புதமாக இருக்கிறது. வழங்கிய தங்களுக்கு நன்றி.
"கௌஸல்யா" என்பதற்கு பல விசேஷ பொருள்கள் இருக்கின்றன.//
வாங்க ஜயராமன் சார்,
அமர்களப் படுத்தி இருக்கீங்க!
ஈடு வியாய்க்யானம்-ன்னு சொல்லுவாங்க! அது போல சொல்லி இருக்கீங்க! மிக்க நன்றி!
//அல்லது "பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே" - உன்னை கண்டதும் அறிவின்மை என்ற இருள் நீங்கியது. இது கோவிந்த ராஜர் வியாக்கியானம்.//
பகலவனைக் கண்ட இருள் நீங்குவது போல் என்று அருமையா எடுத்துக் கொடுத்துள்ளீர்கள்!
"தமசோ மா ஜ்யோதிர் கமய" என்பது இது தானே! அருமை! அருமை!!
//ஜெயஸ்ரீ said...
ரவி,
மிக நன்றாக அமைந்திருக்கிறது. மீண்டும் மீண்டும் படித்தேன்//
ஜெயஸ்ரீ, நீங்க இப்படி லயித்துப் படிப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது!
//வாசுதேவன், அநிருத்தன், ப்ரத்யும்னன், சங்கர்ஷணன் ஆகிய நாந்கு வியூக மூர்த்திகள் ஒவ்வொன்றிற்கும் மூன்று வியூகாந்தர மூர்த்திகள் உண்டு. மொத்தம் 12 //
மிகவும் அருமையான தகவல்கள் ஜெயஸ்ரீ!
அப்படி என்றால் இங்கே நீங்கள் குறிப்பிடுவது வியூக வாசுதேவன் அல்லவா?
பர வாசுதேவன் = பரம்
பரம பதம் என்னும் 108 ஆம் திவ்யதேசம்
தேசிகனின் பரமபத சோபனம் படிக்கும் ஆவலைத் தூண்டி விட்டீர்கள்!
வியூக வாசுதேவன், சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் = வியூகம்
திருப்பாற்கடல் என்னும் 107 ஆம் திவ்யதேசம்
இவர்கள் நால்வரும் உபவியூகம் என்னும் வியூகாந்தரம் என்று சரியாகக் குறிப்பிட்டுள்ளீர்கள் ஜெயஸ்ரீ! நன்றி!
//பாற்கடலில் கருடன் முதலிய நித்ய சூரிகளுடன் அமர்ந்திருப்பது பர ரூபமா அல்லது வியூக ரூபமா?//
வியூக ரூபம் தான் ஜெயஸ்ரீ!
எனக்குத் தெரிந்த வரை சொல்கிறேன்; மேல் விளக்கம் குமரன் வந்து தர வேண்டும்!
பரம்:
திருப்பரமபதம்; "நாராயண பரோ தேவம் விஸ்வம் நாராயணம்"!
இங்கே நாராயணன் என்னும் பர வாசுதேவன்.
ஆதிசேடன சிம்மாசனத்தில் ஸ்ரீ,பூ,நீளா தேவி சமேதனாய் அமர்ந்த திருக்கோலம்.
இங்கே திக்பாலகர்கள், துவார பாலகர்கள், பரிவாரங்கள், கணங்கள் மற்றும் நித்ய சூரிகள் சூழ எம்பெருமான் சேவை சாதிக்கின்றான்!
வியூகம்:
திருப்பாற்கடல்;
இங்கே ஆதிசேடன பாம்புப் படுக்கையில் கிடந்த திருக்கோலம்;
இங்கே திருமகளோடு, நித்ய சூரிகளான கருடன், நாரதர், தும்புரு, ரிஷிகள் சூழ எம்பெருமான் சேவை சாதிக்கின்றான்!
நீங்கள் சொன்ன 4X3 வியூகாந்தரங்கள் மொத்தம் 12 மாதங்களாக ஆகி வரும்;
மார்கழி துவங்கி, கார்த்திகை முடிய! ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு வியுக நிலை...விழிப்பில் இருந்து உறக்கம வரை;
அதற்கேற்றவாறு ஒவ்வொரு ஏகாதசியின் பெயரும் கூட மறி வரும்!
//Sunthary said:
ரவிக்குமார்
சுப்பிரபாதத்தை தமிழிலில் நன்றாக விளக்கியிருக்கிறீர்கள். மிகவும் அருமை. மேலும் எழுதுங்கள்.
சுந்தரி//
வாங்க சுந்தரி
ரவிக்குமார் இல்லீங்க; ரவிசங்கர்! :-)
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
அடிக்கடி வாங்க!
//ஜெயஸ்ரீ said:
பாரதியாரின் பாரத மாத திருப்பள்ளியெழுச்சி யின் முதல் வரிகளும் இதே பொருளுடன் அமைந்துள்ளதைக் கவனித்திருக்கிறீர்களா?
"பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்
புன்மையிருட்கணம் போயின யாவையும்
எழு பசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி//
அட ஆமாம்
பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே = எழு பசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது...இரவி!
நன்றி ஜெயஸ்ரீ! நல்ல ஒப்பு நோக்கு!!
கண்ணபிரான்
சுப்ரபாதத்தின் சொல்லினிமை மட்டும் சுவைத்த எம்மை அதன் பொருளினிமையும் சுவைக்க தந்தமை நன்று.
//வடமொழியில் இருப்பதால், படிக்கக் கடினமா இருந்தால் உடனே சொல்லுங்க! இன்னும் சிம்பிள் ஆக்குகிறேன்!
நோக்கமே இதை அடிக்கடி கேட்பவர்கள், அடுத்த முறை கேட்கும் போது, பொருள் தொடர்புபடுத்தி பார்த்து, மகிழத் தான்!//
இல்லைங்க நல்லா புரியுதுங்க...
வேணும்னா அடுத்த பகுதில முதல் பகுதியோட பாடலை மட்டும் கொடுங்க... புரியலைனா நாங்க மீண்டும் பழைய பதிவை பார்த்து ஞாபகம் வெச்சிக்கறோம்...
இப்படியே ஒவ்வொரு பதிவுக்கும் செய்தால் இறுதியாக என்றும் மறக்காத அளவு மனதில் பதியும்...
உங்களையும் என்றும் மறக்கமாட்டோம் :-)
//சாத்வீகன் said...
கண்ணபிரான்
சுப்ரபாதத்தின் சொல்லினிமை மட்டும் சுவைத்த எம்மை அதன் பொருளினிமையும் சுவைக்க தந்தமை நன்று.//
வாங்க சாத்வீகன்; நல்வரவு!
பொருள் கண்டு பின், தங்கள் அழகான தமிழ்க் கருத்துகளையும் வரும் பதிவுகளில் தாருங்கள்!
இரவிசங்கர் நன்றாக விளக்கியுள்ளார் ஜெயஸ்ரீ. வ்யூஹ வாஸுதேவனே திருப்பாற்கடலில் பள்ளி கொண்டவர்.
பரமபதமாகிய வைகுண்டம் பிரகிருதி மண்டலத்திற்கு அப்பால் இருப்பது. திருப்பாற்கடல் பிரகிருதி மண்டலத்திற்குள்ளேயே இருப்பது. எல்லா அவதாரங்களும் வ்யூஹ வாஸுதேவனின் அவதாரங்களே. நித்யர்களும் முக்தர்களும் மட்டுமே பரமபதத்தில் பெருமாளை தரிசிக்க முடியும். பிரம்ம ருத்ர இந்த்ராதி தேவர்கள் திருப்பாற்கடல் வரை மட்டுமே செல்ல முடியும்; அவர்கள் இன்னும் கர்மவச்யர்களாக இருப்பதால்.
பரமபதத்தைக் காரண வைகுண்டம் என்றும் இன்னொரு வைகுண்டம் - காரிய வைகுண்டம் - பிரகிருதி மண்டலத்திற்குள் இருக்கின்றது என்றும் அங்கு வாயிற்காவலர்களாக இருந்த ஜய விஜயர்களே சாபத்தினால் ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு - இராவணன், கும்பகர்ணன் - கம்சன், சிசுபாலன் - என்று மூன்று பிறவிகளில் இறைவனை வெறுப்பவர்களாய் பிறந்து அவன் கையால் அழிந்து மீண்டும் கார்ய வைகுண்டத்தைக் காக்கும் பதவியை அடைகின்றனர்.
தேவர்கள் பரமபதத்திற்குச் செல்ல முடியாது. ஆனால் நித்யர்கள் திருப்பாற்கடலுக்கு வரமுடியும். நித்யர்கள் ஆழ்வார்களாகவும் ஆசார்யர்களாகவும் வந்தது போல்.
புராணங்களில் கவனித்துப் பார்த்தால் ஒவ்வொரு அசுரனின் கொடுமைகள் அளவிற்கு அதிகமாகப் போகும் போது பிரம்மாதி தேவர்கள் திருப்பாற்கடலுக்குத் தான் செல்வார்கள்; பரமபதமாகிய வைகுண்டம் போவதில்லை; அவர்களால் செல்ல இயலாது. அவர்களைக் காக்க எடுக்கப்படும் அவதாரங்களும் திருப்பாற்கடலின் வ்யூஹ வாசுதேவன் எடுப்பதே.
ரவி,
அருமையான பதிவு!!
இன்னொன்றையும் சொல்லிக் கொள்கிறேன். சுவாமியின் ஐந்து நிலைகளிலும் எந்த ஏற்றத்தாழ்வுகளும் கிடையாது. எல்லாமே ஒரே இறைவன் தான். யாருக்கு எங்கே அருள்கிறான் என்பதில் தான் வேறுபாடுகள்.
பரத்திலும் வ்யூஹத்திலும் விபவத்திலும் அகத்திலும் அர்ச்சையிலும் அவனே அருள் புரிகிறான். எளிவந்த தன்மையில் அர்ச்சை மிகச் சிறந்ததாகவும் பரம் கீழ் நிலையில் இருப்பதாகவும் ஆசார்யர்கள் சொல்வார்கள். :-)
பரம், வ்யூஹம் - உவர்நீர்க்கடல்
விபவம் - நதி; நீர் வரும் போது அருந்தினால் உண்டு. அவதாரம் நடக்கும் போது அனுபவித்தால் உண்டு.
அந்தர்யாமி - ஆழ்கிணறு. ஆழத்தோண்டி அனுபவிக்க வேண்டும்.
அர்ச்சை - குளம். எல்லாரும் எப்போதும் அள்ளி அள்ளிப் பருகலாம்.
ரவி ,
விளக்கங்களுக்கு மிக்க நன்றி.
//நீங்கள் சொன்ன 4X3 வியூகாந்தரங்கள் மொத்தம் 12 மாதங்களாக ஆகி வரும்;
மார்கழி துவங்கி, கார்த்திகை முடிய! ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு வியுக நிலை...விழிப்பில் இருந்து உறக்கம வரை; //
அதனால்தான் மார்கழி மாதம் தேவர்களின் விடியற்காலை என்று சொல்லப்படுகிறதோ?
கண்னனும் "மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேண்" என்று சொல்கிறான்.
மார்கழி மாதத்தின் சிறப்பும் ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் உள்ளதன் காரணமும் இப்போது விளங்குகிறது .
மீண்டும் நன்றிகள்.
குமரன்,
தெளிவான விரிவான விளக்கத்துக்கு மிக்க நன்றி. உங்கள் விளக்கம் என் (மனதில் இருந்த) பல ஐயங்களுக்கு பதிலளித்தது.
// நித்யர்களும் முக்தர்களும் மட்டுமே பரமபதத்தில் பெருமாளை தரிசிக்க முடியும். பிரம்ம ருத்ர இந்த்ராதி தேவர்கள் திருப்பாற்கடல் வரை மட்டுமே செல்ல முடியும்; அவர்கள் இன்னும் கர்மவச்யர்களாக இருப்பதால் //
இதுவரை நான் சரியாகப் புரிந்துகொள்ளாத பல பல விஷயங்கள் இப்போது எனக்குப் புரியத் தொடங்குகின்றன.
உங்களுக்கு நன்றிகள் பல.
//ஜயராமன் said...
அல்லது, தேவ ஆராதனம் என்கிற தினசரி கடமையை செய்யவேண்டும். அதனால், எழுந்திருப்பாயாக வேங்கடவா - என்றும் பொருள்//
ஜயராமன் சார்,
அப்போதே கேட்க நினைத்தேன்; விட்டுப்போனது.
தேவ ஆராதனம் என்கிற தினசரி கடமை அவனுக்கா? நமக்கா?
என்ன தான் அவனை எழுப்பினாலும்,
சுப்ரபாதம் என்பது நமக்குத் தான்; அது போல் இதற்கும் நான் பொருள் எடுத்துக் கொள்கிறேன்!
தேவ ஆராதனம் என்கிற தினசரி கடமையை "நாங்கள் எல்லாம்" செய்யவேண்டும். அதனால், "நீ", எழுந்திருப்பாயாக!
இப்போது பொருள் பொருந்தி வருகிறது என நினைக்கிறேன்; நீங்களும் இப்படித் தான் சொல்ல வந்தீர்கள் போலும் அல்லவா?
இரவி. தைவமாஹ்நிகத்திற்கு நீங்கள் ஜயராமன் ஐயாவிடம் கேள்வியாகக் கேட்டிருக்கும் புரிதலே சரி. தெய்வீகமான சடங்குகளைச் செய்வதற்காக/நடத்துவதற்காக என்றும் இந்த சொற்றொடருக்குப் பொருள் படித்திருக்கிறேன்.
குமரன் வந்து மேலும் அழகாச் சொல்லியிருக்கார்! நன்றி குமரன்!
இப்பதிவைப் படிக்கும் சில நண்பர்களுக்குப் "பரம், வியூகம், விபவம்", என்றெல்லாம் பேசுவது கொஞ்சம் புதிதாக இருந்தால், இதோ உங்களுக்காக ஒரு எளிய அறிமுகம்.
குமரன், ஜெயஸ்ரீ,
ஏதாச்சும் மாறிப் பொருள் சொல்லினேன் என்றால், சுட்டிக்காட்டவும!
உருவமும், அருவமும் கடந்து நிற்கும் எம்பெருமான் ஐந்து நிலைகளில் அருள் பாலிப்பதாக வைணவ நோக்கு!
பரம் = பேருக்கு ஏற்றாற் போல SUPREME; பரம்பொருள் நிலை; தேவர்களுக்கும் எட்டாத நிலை; கர்ம பந்தங்கள் கடந்த நிலை; நமக்கு எட்டுமோ? அதனால் தான் கடல் நீர் என்று சொன்னார்கள்! எங்கும் சூழ்ந்திருந்தாலும், நாம் பருக முடியாது!
வியூகம் = திருப்பாற்கடலில் பெருமான் பள்ளி கொண்ட நிலை; இங்கே தேவர்கள் மற்றும் தவசிகள், இன்னும் சில கர்மங்களால் கட்டுப்பட்டு இருப்பவர்கள் சென்று இறைவனைத் தரிசிக்கலாம், முறையிடலாம்! திரைப்படங்களில் வருவது போல் எல்லாரும் வந்து பள்ளி கொண்ட பெருமாளிடம் முறையிடுவார்களே! அதுவே இது!
இதுவும் கடல் நீர் போலத் தான்! நாம் எட்ட முடியுமோ?
விபவம் = இது இறைவன் எடுக்கும் அவதாரங்கள்! ராமன், கண்ணன் போல!
இது காட்டாற்று வெள்ளம் போல;
வரும் போது அருந்தினால் உண்டு. அவதாரம் நடக்கும் போது நாம் பிறந்திருந்தால் அனுபவிக்க வாய்ப்பு உண்டு. சில சமயம் அப்படியே பிறந்திருந்தாலும், வினைப்பயன் காரணமாக அனுபவிக்க முடியாமலும் போகலாம்! நரசிம்ம அவதாரத்தை எல்லாரும் அனுபவிக்க முடியவில்லையே!
அர்ச்சை = இது கோவில்களிலும், இல்லங்களிலும் சிலை ரூபமாக நாம் வணங்கும் இறைவன்; இதை யாரும் காணலாம்; வணங்கலாம்! மிகவும் எளிய முறை; எல்லாம் கடந்தவன், ஒரு சிலையில் தன்னைக் குறுக்கி, நமக்காகச் செய்யும் பெரிய தியாகம்/உதவி இது! மனிதர் மட்டுமன்றி, தேவரும் முனிவரும் அசுரரும் யார் வேண்டுமானாலும் வந்து வணங்கும் நிலை!
தத்துவங்களும் கடந்த பக்தி இங்கு உதிப்பதால் தான், இதை ஆசாரியர்கள் எல்லாரும் கொண்டாடினார்கள்! குளத்து நீர் போல. எப்பவும் இருக்கும்; எல்லாரும் எப்போதும் அள்ளி அள்ளிப் பருகலாம்.
அந்தர்யாமி = எங்கும் பரவி அதே சமயம் நம் மனத்துள், அந்தராத்மாவில் உள்ள இறைவன்!
இது ஆழ்கிணறு போன்றது. முதலில் நீர் ஊற்று எங்கே என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்; இதுவே கடினம்; பின்பு ஆழத் தோண்டினால் தான் நீரை அனுபவிக்க முடியும்.
ஓரளவு தான் அடியேனால் சொல்ல முடிந்தது; இப்போது அனைவருக்கும் எளிதாகப் புரிந்தால் எனக்கு மகிழ்ச்சியே!!
//தேவ ஆராதனம் என்கிற தினசரி கடமை அவனுக்கா? நமக்கா?
என்ன தான் அவனை எழுப்பினாலும்,
சுப்ரபாதம் என்பது நமக்குத் தான்; //
சுப்ரபாதத்தின் முதல் ஸ்லோகம் (மட்டும் )வால்மீகி ராமாயணத்தில் விஸ்வாமித்திரர் ராமனைத் துயிலெழுப்பும் வரிகள் என்பதால் (திருமாலின் மானிட அவதாரமான) ராமபிரானுக்குத் தனது நித்ய கடமைகளான சந்தியாவந்தனம் முதலியவற்றை நினைவுறுத்துவதாக உள்ளது.
ஆஹ்னிகம் என்பது பகல்பொழுதில் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்யப்படும் தெய்வ சடங்குகளைக்குறிக்கும் .
உதா-- மாத்யாஹ்னிகம்
அதை திருமாலுக்கான திருப்பள்ளியெழுச்சியாகப் பார்க்கும்போது மானிடர்களாகிய நாம் அவனுக்குச் செய்யவேண்டிய நித்திய ஆராதனைகள் என்று கொள்ளவேண்டும்.
மிக நல்ல விளக்கம் இரவிசங்கர்.
கண்ணன் ஐயாவையும் தி.ரா.ச.வையும் எஸ்.கே.வையும் எ.அ.பாலாவையும் தேசிகனையும் கொஞ்சம் வந்து பின்னூட்டங்களைச் சரிபார்க்கச் சொல்லுங்கள்.
குமரன் ஐயா,
///தேவ ஆராதனம் என்கிற தினசரி கடமையை "நாங்கள் எல்லாம்" செய்யவேண்டும். அதனால், "நீ", எழுந்திருப்பாயாக!
இப்போது பொருள் பொருந்தி வருகிறது என நினைக்கிறேன்; நீங்களும் இப்படித் தான் சொல்ல வந்தீர்கள் போலும் அல்லவா?////
நிச்சயமாக அவ்வாறுதான் பொருளாகிறது. மற்றபடி இறைவனுக்கு தேவ ஆராதனம் ஒரு கடமை என்பது கொஞ்சம் பொருத்தமற்றதாகவே தோன்றும் இல்லையா? நானும் நீங்கள் தெளிவுபடுத்திய எண்ணத்திலேயே சொல்லியிருந்தேன். அவசரத்தில் எழுதுவதால் வார்த்தைகள் முழுமையாக சில சமயம் பொருந்துவதில்லை. தெளிவுபடுத்தியதற்கு உங்களுக்கு மிக்க நன்றி
மிகச் சிறப்பாக இருக்கிறது ரவி. ஆனால் என் குறை தான் படிக்க நேரம் தான் கிட்டவில்லை இன்று தான் படித்தேன் மிக மிக எளிதாக சொல்லியுள்ளீர்கள்.
நேற்று மாலை அந்த வேங்கடவனின் திருமலை கயிறு கிட்டியது. இன்று காலை எழுந்தவுடன் அவன் சுப்ரபாதம் கேட்டு, படித்து, புரிந்து கொள்ள முடிந்தது.
தொடருங்கள் அவனருள் துணை நிற்கும்.
//சிவமுருகன் said:
மிகச் சிறப்பாக இருக்கிறது ரவி. ஆனால் என் குறை தான் படிக்க நேரம் தான் கிட்டவில்லை இன்று தான் படித்தேன் மிக மிக எளிதாக சொல்லியுள்ளீர்கள்.//
நன்றி சிவமுருகன்.
நேரம் கிடைக்கும் போது படிங்க! கருத்தும் சொல்லுங்க!
//நேற்று மாலை அந்த வேங்கடவனின் திருமலை கயிறு கிட்டியது. இன்று காலை எழுந்தவுடன் அவன் சுப்ரபாதம் கேட்டு, படித்து, புரிந்து கொள்ள முடிந்தது//
ஆகா; எப்படி ஒன்றுடன் ஒன்று அமைகிறது பாருங்கள்! கயிறுடன் அவனையும் இறுக்கிக் கட்டிக் கொள்ளுங்க :-)
//தொடருங்கள் அவனருள் துணை நிற்கும்//
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
அவன் அருளாலே அவன் எழப் பாடி!
//இப்பதிவைப் படிக்கும் சில நண்பர்களுக்குப் "பரம், வியூகம், விபவம்", என்றெல்லாம் பேசுவது கொஞ்சம் புதிதாக இருந்தால், இதோ உங்களுக்காக ஒரு எளிய அறிமுகம்//
ரவி,
நிஜமாலுமே இது எதுவும் புரியாமல் இந்த பின்னூட்டங்களை படிக்காமல் விட்டுவிட்டேன். இப்போழுது தங்கள் விளக்கத்தால் நன்றாக புரிந்தது... மிக்க மகிழ்ச்சி!!!
மிகச் சிறந்த வாசிப்பனுபவம். ரவியின் சுப்ரபாத பொழிப்புரையும் அதற்கு திராச ஐயா, குமரன், ஜெயஸ்ரீ மற்றும் ஜெயராமனின் தொடர் விளக்கங்கள் மிகவும் அருமை.
ரவி - பலப்பல புதிய தகவல்கள் தந்திருக்கிறீர்கள். உங்களின் அனுபவமும், அறிவும், கொண்டுள்ள நோக்கமும் மிகவும் உயர்ந்தது. மிகவும் நன்றி!
ரவி சங்கர்
மன்னிச்சுக்கோடாம்பி. நோக்கு எதேனாச்சும் எழுதணுங்கிற அவசரத்துல கடைசில வர்ற "ர்" ஐ மட்டும் பார்த்தோனோல்லியோ அதா சங்கருக்கு பதிலா குமார்னு போட்டுட்டே.
ஏண்டாம்பி அடிக்கடி வரச்சொன்னியே பாத்தியோ! முத அடியிலேயே திரும்ப வந்துட்டனோல்லியோ,
//Sridhar Venkat said...
மிகச் சிறந்த வாசிப்பனுபவம். ரவியின் சுப்ரபாத பொழிப்புரையும் அதற்கு திராச ஐயா, குமரன், ஜெயஸ்ரீ மற்றும் ஜெயராமனின் தொடர் விளக்கங்கள் மிகவும் அருமை//
வாங்க Sridhar Venkat! முற்றிலும் உண்மை! திராச, குமரன், ஜெயஸ்ரீ, பாலாஜி இன்னும் பலர் கலந்துரையாடலுக்கு அழகாக மெருகு ஊட்டுகிறார்கள் பாருங்கள்! இவர்களுக்குத் தான் என் நன்றி!
//ரவி - பலப்பல புதிய தகவல்கள் தந்திருக்கிறீர்கள். உங்களின் அனுபவமும், அறிவும், கொண்டுள்ள நோக்கமும் மிகவும் உயர்ந்தது. மிகவும் நன்றி!//
அய்யோ, நீங்க சொல்றது பெரிய வார்த்தை! ஏமி அனுபவம், அறிவு லேது இக்கட! உங்களுக்குச் சொல்வதால் நானும் சேர்ந்தே கற்கிறேன்! அவ்வளவு தான்!
//சுந்தரி said...
ரவி சங்கர்
மன்னிச்சுக்கோடாம்பி. நோக்கு எதேனாச்சும் எழுதணுங்கிற அவசரத்துல கடைசில வர்ற "ர்" ஐ மட்டும் பார்த்தோனோல்லியோ அதா சங்கருக்கு பதிலா குமார்னு போட்டுட்டே.
ஏண்டாம்பி அடிக்கடி வரச்சொன்னியே பாத்தியோ! முத அடியிலேயே திரும்ப வந்துட்டனோல்லியோ//
:-))
என்னை ஏன் அம்பின்னு கூப்பிடறீங்க? :-))
நான் ஒரு சாதாரண சின்னத்தம்பி! :-))
சும்மாச் சொன்னேங்க! உங்க வருகை மகிழ்ச்சியே! உங்களுக்கு பயன்படுமானால் இன்னும் மகிழ்ச்சி! நன்றிம்மா!
ரவி,
நல்லா விளக்கி இருக்கிங்க. ஆனா மறுமொழியில் விளக்கம் கொடுத்து இருக்கும் பலர்(ஜெயராமன் சார்) வடமொழியில் நிறைய விளக்கம் குடுத்து இருப்பதால் புரிதல் கொஞ்சம் சிரம்மாக இருக்குது. முடிந்த வரையில் தமிழ்ல் விளக்கினால் எங்களுக்கும் கொஞ்சம் புரியும் :)). மத்தபடி பதிவும், பின்னூட்டங்களும் நல்லா விளக்கங்களுடன் வந்து இருக்கு..
//சந்தோஷ் said:
ரவி,
நல்லா விளக்கி இருக்கிங்க. ஆனா மறுமொழியில் விளக்கம் கொடுத்து இருக்கும் பலர்(ஜெயராமன் சார்) வடமொழியில் நிறைய விளக்கம் குடுத்து இருப்பதால் புரிதல் கொஞ்சம் சிரம்மாக இருக்குது.//
தங்கள் கருத்தைத் தயங்காமல் சொன்னதற்கு நன்றிஙக சந்தோஷ்!
எல்லாரும் படித்து இன்புற வேண்டும் என்பது தானே நோக்கம்!
புதியவர்கள், மற்றும் வல்லுநர்கள் எல்லாம் ஒன்று சேரும் இடம் ஆயிற்றே நம் வேங்கடவன்! அதனால் வல்லுநர்கள் பக்தியும் அன்பும் மிகுதியில், சில சமயம், மேற்கோள்களைப் பிரவாகமாக பொழிந்து விடுகின்றனர்.
இனி அவர்கள் அப்படிப் பொழிந்தாலும், அடியேன் அதைத் தமிழ்ப்படுத்தி, நீங்கள் எல்லாம் அறியும் வண்ணமும் தருகிறேன்!
என் தவறு தான்! மன்னிக்கவும்!!
இனி அனைவரும் ஒன்று கூடிச் சுவைக்கலாம்!
வந்து சரி பார்ப்பதா?
பிரமித்துப் போய் நிற்கிறேன், நீங்களும், குமரனும், ஜெயஸ்ரீயும், ஜெயராமனும் சொல்லி வரும் விளக்கங்களைப் படித்து!
மிகவும் நன்றி, ரவி!
மற்றவருக்கும் தான்!
தொடரட்டும்!
விளக்கத்தைத் தொடங்கி வைத்த தி.ரா.ச. அவர்களுக்கும் நன்றி!
உண்மை ..கலங்கும் கண்களுடன் வேண்டுதல்கள் அனைத்தும் மறந்து போக . பெருமாளே கோவிந்தா என்றே மனம் பொங்குகிறது
Post a Comment