Friday, November 24, 2006

கெளசல்யா சுப்ரஜா ராமா (3) - அம்மா எழுந்திரு!

பெரும்பாலான வீடுகளில் அம்மா தான் முதலில் எழுவாங்க! சில சமயங்களில் அம்மாவுக்கு முடியலைன்னா, அப்பா எழுந்து காபி போட்டுத் தருவதும் உண்டு!
பாசமுள்ள பல வீடுகளில், அம்மா எழுந்து அடுக்களையில் உருட்டும் சத்தம் கேட்டால் போதும், அப்பாவும் எழுந்து விடுவார், மற்ற வீட்டு வேலைகளைச் செய்ய!
வளர்ந்தும் வளராத சிறு பிள்ளைகளும், ஒரு சில நேரங்களில் அம்மாவுக்கு ஒத்தாசை செய்ய எழுந்துடுங்க!

அட... இது நம்ம வீட்டு விஷயம் போலவே இருக்குதுங்களா?
திருமலைக் கோயிலும் நம்ம வீடு மாதிரியே தாங்க!
அன்னை அலர்மேல் மங்கை முதலில் எழ, மார்பில் உள்ள உயிரே எழுந்து விட்டது, என்று அப்பனும் உடனே எழுந்து விடுகிறான்!

சென்ற பதிவில் "உத்திஷ்ட, உத்திஷ்ட" என்று ஐந்து முறை சொல்லியும் இன்னும் துயில் எழவில்லை நம் அப்பன்!
(முந்தைய பதிவுக்குச் சென்று, சுலோகமும் பொருளும், இன்னொரு முறை பார்த்து வரணும் என்று நீங்கள் நினைத்தால், மேலே சொடுக்கவும்)
சரி, இவன் எழுவதாகத் தெரியவில்லை! இதற்கு ஒரே வழி!
இப்போ அன்னையை எழுப்புவோம்!
அவள் எழுந்தவுடன் பாருங்கள், அவனும் கிடுகிடு என்று எழுந்து விடுவான்!

ஒரு வீட்டுக்கு மட்டும் அம்மாவான நம் தாயாருக்கே அவ்வளவு வேலைன்னா,
சகல உலகங்களுக்கும் அம்மா, ஜகன்மாதா எனப்படுபவள்,
அன்னை அலைமகளுக்கு எவ்வளவு வேலை இருக்கும்!
உலகக் குடும்பத்தின் ஆனந்தமே அவள் கையில் தானே உள்ளது!

(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரே
வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே
ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்


மாத சமஸ்த ஜகதாம் = சகல உலகங்களுக்கும் தாயே, ஸ்ரீ மகா லக்ஷ்மி!
சமஸ்த ஜகங்களுக்கும் மாதா = ஜகன் மாதா! பூவுலக உயிர்கள், மனிதர் மட்டும் இல்லை; தேவர், கின்னரர், கிம்புருடர், நாகர், பாதாள உலகினர், அசுரர் என்று அனைத்து தரப்பினருக்கும் அவளே அன்னை; நரகாசுரனின் அன்னையும் அவள் தானே! குழந்தைகள் செய்யும் தவற்றை எல்லாம் பொறுத்தருள எம்பெருமானிடம் சதா சர்வ காலமும் முறையிட்டு, அவன் சினம் தணிக்கும் அன்புத் தாய் ஆயிற்றே! (என்ன செய்வது சில சமயம், அவளுக்கும் தர்மசங்கடங்கள், நம் போன்ற பிள்ளைகளால்:-)

மது கைடபாரே = மது, கைடபன் என்ற கொடியவரை அழித்து, (வேதம் மீட்ட) பெருமாள்
முன்னொரு நாள், பிரம்மனிடம் இருந்து வேதங்களைக் களவாடினர் மது மற்றும் கைடபன் என்ற அரக்கர்கள்; ஹயக்ரீவனாய் தோன்றி அவர்களை வதைத்து, உலகுக்கே ஞானத்தை மீட்டுத் தந்தான் இறைவன்; "ஞான ஆனந்த மயம் தேவம்" என்று கல்விக்கு அரசனாய் இன்றும் வணங்கப்படுகிறான் ஹயக்ரீவன்!

வக்ஷோ விஹாரிணி = அவன் திருமார்பில் (வக்ஷ ஸ்தலத்தில்) கொலு இருப்பவளே!
அந்த ஞானகுருவான பெருமாளின், திருமார்பை அலங்கரிப்பவளே! அவனை விட்டு ஒரு நொடிப் பொழுதும் பிரியாதவளே! "அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன்", என்று முதலில் உன்னைச் சொல்லி விட்டுப், பின்னர் தானே அவனைச் சொல்கிறார்கள்! அவன் மார்பில் ஸ்ரீவத்ச மச்சமாய் இருக்கும் தாயே!
(வசந்த விகார் என்று சொல்வது போல, வக்ஷ விகார் = மார்பில் உறைபவள்)

மனோகர திவ்ய மூர்த்தே = அழகும் ஐசுவரியமும் நிறைந்தவளே!
மனோகரம் = மனத்தை லயிக்கச் செய்யும் அழகு! அழகு மட்டுமா? திவ்ய மூர்த்தி = திவ்யமான ஐசுவரியமும், குணநலன்களும் உடையவள் நம் அன்னை! சும்மாவா சொல்கிறார்கள், "அவள் மகாலட்சுமி போல" என்று!

ஸ்ரீ ஸ்வாமினி = சுவாமியின் இல்லத் தலைவியே!
தர்மன் ஒருவன் என்றால் உடன் சக தர்மினி; "பகவானே! பகவதியே!" என்று சொல்வது போல், சுவாமிக்கு சுவாமினி! வேங்கட வீட்டின் இல்லத்தரசி!

ச்ரித ஜன, ப்ரிய தான சீலே = நாடி வரும் அன்பருக்கு, அவர்கள் விரும்புவதை வாரி அளிக்கும் தூயவளே!
ச்ரித ஜனங்கள் = நாடி வரும் அன்பர்கள்; இவர்கள், தாயிடம் ஒடி வரும் குழந்தைகள் போல; பசுவிடம் ஒடி வரும் கன்றைப் போல!
ப்ரிய = விருப்பப்பட்டதெல்லாம்; தான சீல = வாரி வாரி தானம் கொடுக்கும் வள்ளல் போல!
தொலை தூரத்தில் கன்றைக் கண்ட பசுவுக்கு எப்படி பால் தானாக வழிகிறதோ, அதே போல் நாங்கள் உன் அருகில் வருவதற்கு முன்பே, எங்களுக்கு அருள் கொடுக்க எண்ணும் தாயே!

ஸ்ரீ வேங்கடேச தயிதே = திருவேங்கட நாதனின் தர்ம பத்தினியே
தவ சுப்ரபாதம் = இனிய பொழுதாய் விடிய, எங்கள் அம்மா, நீ கண் மலர்க!ஆண்டாளும் இதே தான் செய்கிறாள் பாருங்கள்!
"எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்" என்று முதலில் சொல்லிப் பார்க்கிறாள்! ஹூம்...ஒன்றும் நடக்கவில்லை!
அடுத்து, "குல விளக்கே, எம்பெருமாட்டி யசோதாய், அறிவுறாய்" என்று சொல்கிறாள்!
நந்தகோபாலனுக்கு "எழுந்திராய்", என்று சொன்னவள், யசோதைக்கு மட்டும் "அறிவுறாய்" என்று சொல்லக் காரணம் என்ன? சொல்லுங்க பார்ப்போம்!
இதோ யசோதை "விழித்து" விட்டாள்; கோகுலமே "எழுந்து" விட்டது!

அதே போல்,
தயா சிந்து நாயகி, எழுந்து விட்டாள்!
தயா சிந்து நாயகா, அப்பா வேங்கடவா, திருக்கண் மலர்க!


-------------------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) -
(Plays in Rhapsody player; If not installed, please wait till it auto installs; After that it plays by itself)
நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com,rhapsody.com
Pics: tirumala-tirupati.com

-------------------------------------------------------------------------------------

53 comments:

கைப்புள்ள said...

சனிக்கிழமை காலை சுப்ரபாதம் கேட்டு பல வருடங்கள் ஆகி விட்டது. ஒரு சிறிய பகுதியான போதிலும், பாடலின் பொருளோடு கேட்கத் தந்ததற்கு மிக்க நன்றி.

ஞானவெட்டியான் said...

அன்பு இரவி,
இயல்பான எளிமையான நடை.
செங்கிருதச் சொற்களை அழகுதமிழில் இயம்பியமைக்கு நன்றி.

நா.கண்ணன் said...

மிக அழகாக, வார்த்தைக்கு வார்த்தை விளக்கி பயன் பெறச் செய்துள்ளீர்கள். நன்றி. நித்யஸ்ரீ யின் பாடல் அமெரிக்கர்களுக்கு மட்டும் என்கிறது Rhapsody :-)

அது என்ன வேங்கடவுடன் அப்படியொரு பந்தம். பொறாமையாக இருக்கிறது ;-)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம், ரவிஷங்கர்
அம்மா எழுந்தாத்தான் ஐய்யாவுக்கும் உற்சாகம்/

அவளைத்தேடியே இறங்கி வந்தார் இல்லியா.

பொருளுரை ஆனந்தமாக இருக்கிறது.
நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

= அவன் திருமார்பில் (வக்ஷ ஸ்தலத்தில்) கொலு இருப்பவளே!
அந்த ஞானகுருவான பெருமாளின், திருமார்பை அலங்கரிப்பவளே! அவனை விட்டு ஒரு நொடிப் பொழுதும் பிரியாதவளே

விஷ்னுவுக்கு உகந்த சனிக்கிழமையன்று சுப்ரபாதத்தையும் அதன் பொருளையும் தந்ததற்கு நன்றி.
வக்ஷோ விஹாரிணி பாபநாசம் சிவன் நோக்கில்==

மஹா விஷ்ணுவின் மார்பெனும் மணிப்பீடமதில் அமர்ந்திடும் மன்மதனை ஈன்ற அருளும் தாயே தயா நிதியே மஹாமாயே .பங்கஜமலர் வளர் அன்னையே கடைக்கண் பார்.....

குமரன் (Kumaran) said...

வழக்கம் போல் மிக நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் இரவிசங்கர்.

இந்த இரு வரிகளை சுப்ரபாதம் பாடும் போது நிறுத்தி நிதானமாக இருமுறை பாடுவது அடியேன் வழக்கம். ஒவ்வொரு சொல்லுக்கும் எத்தனை அடுக்குகளில் பொருளாழங்கள்.

குமரன் (Kumaran) said...

மாத: ஸமஸ்த ஜகதாம் என்னும் போது அடியேனின் அன்னை மட்டுமின்றி அகில உலகிற்கும் அன்னையே என்றும், அதனால் அகில உலகத்தினரும் அடியேனின் உடன் பிறந்தவர்கள் என்றும், பெரியோர்களை அரவணைத்ததைப் போல் நீசனேன் என்னையும் அன்னை அரவணைப்பாள் என்ற ஆறுதலும், காக்கைக்குத் தன் குஞ்சு பொன்குஞ்சு என்றதனால் அடியேன் அழுக்குகளை பசுஞ்கன்றின் அழுக்குகளை நீக்கும் பசுவாக அன்னையிருந்து நீக்குவாள் என்றும், ஜகத் என்றதனால் அசையும் பொருள் அசையாப் பொருள் எல்லாவற்றிற்கும் அன்னை என்ற அறிவும், அதனால் உயர்வு தாழ்வு அசையும் பொருள் அசையாப் பொருள் இவற்றிடையும் இல்லை என்ற எண்ணமும், ஜகத் என்றதால் உலகம் 'இன்றிருந்தார் நாளை இல்லை' எனும் நிலையாமை உடையது என்ற அறிவும், அந்த நிலையில்லா உலகில் நிலைத்தச் சொந்தமாய் இருப்பவள் அன்னையே என்பதும், ஸமஸ்த ஜகதாம் என்றதால் இது அது என்று சுட்டிக்காட்டும் படி இன்றி அனைத்து உலகத்தினருக்கும் அன்னை என்றும், ஸமஸ்த என்றதால் ஈரேழு பதினான்கு உலகங்களும், மாத: என்று முதலில் சொன்னதால் 'கண்டேன் கற்பினுக்கணியை' என்று சொன்னதாற் போல் அடியேனின் நிலைத்தச் சொந்தமான அன்னை என்பதும், என பலவகையான பொருள் தோன்றி பரவசமாக்குமே.

enRenRum-anbudan.BALA said...

Kannabiran,
You are doing a very good translation job making it simple.

Sorry for typing in English. Leaving for some urgent work in a hurry :)))

குமரன் (Kumaran) said...

மதுகைடபாரே வக்ஷோ விஹாரிணி என்றதால் தீமையை அழித்து நன்மையைத் தரும் அப்பனைப் பற்றியும் அவன் மார்பில் அகலகில்லேன் இறையும் என்று நிற்கும் அன்னையைப் பற்றியும், மதுகைடபர் முதலிய அசுர குணங்களை அடியேனிடமிருந்து நீக்கும் அச்சுதன் அந்த அசுர குணங்களைக் கொண்டிருந்ததால் அடியேனைத் தண்டிப்பானோ என்ற ஐயம் இருக்கும் போது அவன் மார்பில் அன்னை நித்யவாசம் செய்வதால் அவள் நம்மை அளித்துக் காப்பாள் என்ற திட நம்பிக்கையும், விஹாரிணி என்றதால் சில நேரம் மட்டுமே அன்னை ஐயன் மார்பில் இருக்கிறாளோ என்ற ஐயம் நீங்கும் படி அன்னை ஐயன் மார்பில் என்றும் நிலைத்தக் கோயில் கொண்டுள்ளாள் என்பதும், அப்பனின் கோபம் கருணை என்னும் உணர்வுகள் தோன்றும் இடமான இதயத்தின் மிக அருகில் அன்னை கோயில் கொண்டுள்ளதால் அப்பன் சினம் கொள்ளும் முன்னரே கருணை கொள்ளும் படியாக அன்னை செய்வாள் என்பதும், என பல பொருள் தோன்றுமே.

குமரன் (Kumaran) said...

ஸ்ரீ ஸ்வாமினி என்றதால் நம்மையுடையவன் நாராயணன் நம்பியாம் நம் ஸ்வாமியின் தர்மபத்தினி என்பதோடு மட்டுமின்றி, நம்மையுடையவள் அன்னையுமே என்ற தெளிவும், அப்பனும் அன்னையும் இருவருமே நம்மையுடையவர்கள் என்ற உறுதியும், ஏகம் சத், ஏகம் அத்விதீயம் என்று வேதம் முறையிட அன்னையும் நம்மையுடையவள் ஆவது எப்படி, பரம்பொருள் ஒன்றே என்றல்லவோ வேதம் சொல்கிறது என்றால் மலரும் மணமும் போல, சுடரும் ஒளியும் போல அப்பனும் அன்னையும் நம்மையுடையவர்கள்; அதனால் வேதவிருத்தமில்லை என்பதும், ஓம்காரம், த்வயம், திருமந்திரம் எல்லாமும் சொல்லும் பொருள் அன்னையும் நம்மையுடையவள் என்பதும், என பல அடுக்குகளில் பொருள் தோன்றுமே.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கைப்புள்ள said...
சனிக்கிழமை காலை சுப்ரபாதம் கேட்டு பல வருடங்கள் ஆகி விட்டது.//

வாங்க கைப்பு! முதல் வரவுன்னு நினைக்கிறேன்! நல்வரவு!

//ஒரு சிறிய பகுதியான போதிலும், பாடலின் பொருளோடு கேட்கத் தந்ததற்கு மிக்க நன்றி//

ஆமாங்க கைப்ஸ், சிறுது சிறிதா பத்தி பிரிச்சு குடுத்தா பல பேருக்கு ஈசியா புரியும் இல்லையா?

பலருக்கு இது கேட்டு கேட்டு மனப்பாடமே ஆகி விட்டது!
பின்னர் சுப்ரபாதங்கள் பல வந்தாலும், ஏன் எம்.எஸ் அம்மா தமிழ் சுப்ரபாதம் பாடின பின்பும் கூட, மனப்பாடம் ஆனது என்னவோ இது தான்!
முதலில் பிரபலமானதால், மொழி கடந்த பாசம் பல பலருக்கு!

அதான் இந்த முயற்சி! அடுத்த முறை பொருள் பொருத்திப் பாத்து இன்புறுவார்கள் இல்லையா?


ஒரு சிறிய பகுதியான போதிலும் = பாடல் முழுதும் கேட்க கீழே சுட்டியும் கொடுத்துள்ளேனே; அடுத்த சனிக்கிழமை கேளுங்கள்! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஞானவெட்டியான் said...
அன்பு இரவி,
இயல்பான எளிமையான நடை.
செங்கிருதச் சொற்களை அழகுதமிழில் இயம்பியமைக்கு நன்றி//

வாங்க ஞானம் ஐயா! செங்கிருதத்தை நம் செம்மொழியில் பெயர்த்துக் கேட்கும் போது அதுவும் ஒரு தனி சுகம் தான் அல்லவா?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நா.கண்ணன் said...
மிக அழகாக, வார்த்தைக்கு வார்த்தை விளக்கி பயன் பெறச் செய்துள்ளீர்கள்//
வாங்க கண்ணன் சார்; நன்றி!

//நித்யஸ்ரீ யின் பாடல் அமெரிக்கர்களுக்கு மட்டும் என்கிறது Rhapsody :-)//
சுட்டிக் காட்டினீர்களே; இதோ கவனிக்கிறேன்; இந்தியாவுல எப்படிங்க? யாராச்சும் சொல்லுங்க!

raaga.com இலும் இது உள்ளது! ஆனால் விளம்பரம் போடுகிறார்கள்! அதான், இதைத் தந்தேன்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நா.கண்ணன் said...
அது என்ன வேங்கடவுடன் அப்படியொரு பந்தம். பொறாமையாக இருக்கிறது ;-)//

அட ஆமாம் போல தான் இருக்கு!
எனக்கே தெரியவில்லையே! :-)
முன்னம் அவனுடைய நாமம் கேட்டேன்; மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டேன்!....

//பொறாமையாக இருக்கிறது// :-)) ஹி ஹி!!!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// வல்லிசிம்ஹன் said...
ஆமாம், ரவிஷங்கர்
அம்மா எழுந்தாத்தான் ஐய்யாவுக்கும் உற்சாகம்
பொருளுரை ஆனந்தமாக இருக்கிறது//

வாங்க வல்லியம்மா! "குளிர்" காலையில் கேட்டுப் பின்னூட்டம் இட்ட உங்களுக்கு நன்றி!
அவன் பொருளில் ஆனந்தமா இருக்குன்னு அருமையாச் சொல்லறீங்க!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//தி. ரா. ச.(T.R.C.) said...
வக்ஷோ விஹாரிணி பாபநாசம் சிவன் நோக்கில்==
மஹா விஷ்ணுவின் மார்பெனும் மணிப்பீடமதில் அமர்ந்திடும் மன்மதனை ஈன்ற அருளும் தாயே தயா நிதியே மஹாமாயே .பங்கஜமலர் வளர் அன்னையே கடைக்கண் பார்..... //

வாங்க திராச ஐயா!
சிவன் வரிகள் எவ்வளவு இனிமை!
எந்தப் பாடல் சார் இது? starting line கொடுங்க!

பாபநாசம் சிவன், சுப்ரபாதத்துக்கு முன்பே, தமிழில் இசை சுப்ரபாதம் போல எழுதி இருந்தார்னா, இநநேரம் அது ஹிட் ஆகியிருக்கும்! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குமரன் (Kumaran) said...
இந்த இரு வரிகளை சுப்ரபாதம் பாடும் போது நிறுத்தி நிதானமாக இருமுறை பாடுவது அடியேன் வழக்கம். ஒவ்வொரு சொல்லுக்கும் எத்தனை அடுக்குகளில் பொருளாழங்கள்//

வாங்க குமரன்.
அடியேனும் அப்படியே! பொருள் ஆழம் காணவும் முடியுமோ? அதுவும் மாமுனிகள் பாசுரக் குறிப்புகள் சொல்லச் சொல்லக் கேட்டு உள் வாங்கி, அண்ணா எழுதியதாயிற்றே!

கீழே உங்கள் விளக்கங்களை இன்னும் படித்துக் கொண்டே இருக்கிறேன்! மீண்டும் வருகிறேன்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//enRenRum-anbudan.BALA said...
Kannabiran,
You are doing a very good translation job making it simple.//

No probs, Bala with English!
எளிய மொழி பெயர்ப்பு என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே! எங்காச்சும் over dosage போல் தெரிந்தால் சொல்லுங்கள்; எளிமையே முக்கியம்! அடிக்கடி வாங்க!

நாமக்கல் சிபி said...

அருமை! அருமை!!!

பாடல் கேட்கவும் அட்டகாசமாக இருந்தது...

மிக்க நன்றி!!!

குமரன் (Kumaran) said...

//கீழே உங்கள் விளக்கங்களை இன்னும் படித்துக் கொண்டே இருக்கிறேன்! மீண்டும் வருகிறேன்//

Over Doseஆ இருக்கா இரவி? அப்படி இருந்தா சொல்லுங்க. எளிமைப்படுத்தி எழுதுறேன். :-)

துளசி கோபால் said...

//அனைத்து தரப்பினருக்கும் அவளே அன்னை; நரகாசுரனின்
அன்னையும் அவள் தானே! குழந்தைகள் செய்யும் தவற்றை
எல்லாம் பொறுத்தருள எம்பெருமானிடம் சதா சர்வ காலமும்
முறையிட்டு, அவன் சினம் தணிக்கும் அன்புத் தாய் ஆயிற்றே!
(என்ன செய்வது சில சமயம், அவளுக்கும் தர்மசங்கடங்கள்,
நம் போன்ற பிள்ளைகளால்:-)//

நான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேனா? தினம்தினம் கேட்டு மனசுலே
பதிஞ்சுபோனதுக்கு எவ்வளவு அழகா, அருமையா விளக்கம் ? அப்படியே
அனுபவிச்சுப் படிச்சேன். நம்ம குமரன், இன்னும் ஒருபடிமேலே போய்,
வேறு கோணத்திலிருந்து அருமையாச் சொல்றார்.

ஹைய்யோ............. ச்சும்மா 'நல்லா இருக்கு'ன்னு ஒரு வார்த்தையிலே
சொல்ற விஷயமா இது?

நானும் நம்ம 'தாயாருக்கு' கன்சர்ண் லக்ஷ்மின்னுதான் சொல்றேன். போன
முறை எழுதுன ஒரு தொடரில் 'லக்ஷ்மியின் லுக்' பத்தி எழுதுனபத்தி இதோ.

"பத்து ரூபா கொடுத்துப் பூவை வாங்கிக்கிட்டு உள்ளே போனா, பெருமாள் பக்கத்துலே அவருக்கு
வலதுபுறம் சாக்ஷாத் மகாலக்ஷ்மி. மூக்குலே நத்து, கழுத்துலே நீலக்கல் அட்டிகை, காசுமாலைன்னு அமர்க்களமாப்
பட்டுப்பொடவையோட அமர்ந்த திருக்கோலம். ஆனா முகத்துலே சிரிப்பே இல்லை. பெருமாளைப் பார்த்தால்
வாயோரம் ஒரு புன்முறுவல். அய்யா நல்லா சிரிக்கறார். அம்மா ஏன் இப்படின்னு மனசுலே தவிப்பா இருக்கு. திரும்ப
உத்து உத்துப் பார்க்கறேன். ஒரு 'கன்சர்ண்டு லுக்' இருக்கு. அதுக்குள்ளே கூட்டம் நகர்ந்து நம்ம முறை வந்துருச்சு,
சாமி முன்னாலே நிக்கறதுக்கு. பயபக்தியோடு அந்தப் பூவை நீட்டுனா, அதை ஒரு கையாலே வாங்கி, பெருமாள்
பாதத்துலே ஒரு கடாசு கடாசுனார் பட்டர். அதுலே இருந்த தாமரை தரையிலே விழுந்தது. நமக்குத்தான் மனம்
பதைச்சதே தவிர, அவர் அதையெல்லாம் கண்டுக்கலை. இப்பத்தெரிஞ்சுபோச்சு, அம்மாவின் 'லுக்'குக்கு என்ன
அர்த்தமுன்னு."

கண்ணபிரான், இந்த சத்சங்கம் நல்லா களைகட்டி வரும் இந்த நேரத்தில்
இன்னொரு விண்ணப்பமும் வைக்கிறேன்.

சுப்ரபாதம் முடிஞ்சதும், 'ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம்' விளக்கம் எழுதுங்கோ.

( சமஸ்கிருதத்துக்கு தமிழில் செங்கிருதமா? புது வார்த்தை. கற்றுக்கொண்டேன்.)

பத்மா அர்விந்த் said...

அம்மா நீ இரங்காஎனில் புகலேது என்ற பாடலும் நினைவுக்கு வருகிறது. பொறுமையாக எழுதுவதற்கு நன்றி. இந்த பாடல்கள் அனைத்தும் அனிச்சையாய் வாய் முணுமுணுப்பது உண்டு. யோசித்து பார்த்தால் சொல்ல வேண்டும் என்றூ நினைத்து கூட சொல்லுவதில்லை.

குமரன் (Kumaran) said...

//சுப்ரபாதம் முடிஞ்சதும், 'ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம்' விளக்கம் எழுதுங்கோ.
//

துளசி அக்கா உங்களுக்கும் எனக்கு நல்ல போட்டி ஏற்படுத்துறார் இரவி. என் பட்டியலில் சுப்ரபாதம் இருந்தது. நீங்கள் எழுதத் தொடங்கினதும் பட்டியலில் நீங்கள் எழுதத் தொடங்கிவிட்டீர்கள் என்று குறித்துக் கொண்டேன். சஹஸ்ரநாமமும் இருக்கிறது. அதற்கும் துளசியக்கா வேட்டு வைக்கப் பாக்குறாங்க. பாக்கலாம் யாருக்கு அந்தக் கொடுப்பினை இருக்குன்னு. :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

கைப்புவின் பின்னூட்டத்தைப் படித்த போது திடீர் என்று வேறு ஒரு சிந்தனை!

ஒவ்வொரு சுலோகம் படிக்கும் போதும், அந்தச் சுலோகத்தை மட்டும் "கேட்டுப்" படித்தால், மனதில் இன்னும் நன்றாக ஏறும்.
அதனால் தான் சுப்ரபாத mp3ஐ, சிறு சிறு துண்டுகளாகச் செய்தேன்!

இவ்வாறு முழு சுப்ரபாத சுலோகத்தினைக் குட்டி குட்டியாக வெட்டுவது தவறு, என்று யாரேனும் நினைத்தாலோ, இல்லை பெரியவர்கள் அப்படிச் செய்யக் கூடாது என்று கருதினாலோ,
அடியேனை மன்னிக்கனும்! சொல்லுங்கள்! திருத்தி விடுகிறேன்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குமரன் (Kumaran) said...
Over Doseஆ இருக்கா இரவி? அப்படி இருந்தா சொல்லுங்க. எளிமைப்படுத்தி எழுதுறேன். :-)//

குமரன், ஹி ஹி....
அன்னையின் அருளே அருள் மழை; அதனுடன் உங்கள் விளக்க மழை!
கரும்பு தின்னக் கூலியா?

புல் ஸ்டாப்பே இல்லாமல், மூச்சு விடாம, அழகான விளக்க மழை கொடுத்தீங்களா? அதான் ஒவ்வொரு வரியா நிறுத்தி நிறுத்தி, படிச்சிக்கிட்டு இருந்தேன்!
அன்னை ஏன் இதயத்துக்கு அருகில் போய் அமர்ந்தாள் என்ற நோக்கு அருமையிலும் அருமை!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// வெட்டிப்பயல் said...
அருமை! அருமை!!!
பாடல் கேட்கவும் அட்டகாசமாக இருந்தது...
மிக்க நன்றி!!!//

வாங்க பாலாஜி! உங்களுக்கு மகிழ்ச்சி, பயனுள்ளதாய் இருப்பது எனக்கும் மகிழ்ச்சியே!
நீங்க சொன்ன idea - previous slokam recap ok வா?

குமரன் (Kumaran) said...

//கரும்பு தின்னக் கூலியா?
//

விளக்கம் வேண்டும் என்று சொல்வதாக எடுத்துக் கொள்கிறேன். சரியா?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//துளசி கோபால் said...
லக்ஷ்மியின் லுக்' பத்தி எழுதுனபத்தி இதோ.......பெருமாள்
பாதத்துலே ஒரு கடாசு கடாசுனார் பட்டர். அதுலே இருந்த தாமரை தரையிலே விழுந்தது. நமக்குத்தான் மனம் பதைச்சதே தவிர, அவர் அதையெல்லாம் கண்டுக்கலை. இப்பத்தெரிஞ்சுபோச்சு, அம்மாவின்
'லுக்'குக்கு என்ன அர்த்தமுன்னு."//

வாங்க டீச்சர்; நீங்கள் லயித்துப் படிப்பது மிகவும் ஆனந்தம்!
சில பட்டர்கள் இவ்வாறு உள்ளனர்! லயித்துச் செய்வது போய், பிழைப்புக்காக் செய்வது சில சமயங்களில் இந்த மாதிரி நேர்ந்து விடுகிறது! அவர்களும் அவமரியாதையாகச் செய்வதில்லை! ஆனால் இதற்கு எல்லாம் அரசின் துறையை நம்புவதும் complaint கொடுப்பதும்...சரியாக வராது!

ஒரே வழி!
பட்டரை விட வயதில் பெரியவர்கள் யாருச்சும் நம்ம கூட வந்தா, அவர் மூலமாச் சொல்லலாம்; தனியாகக் கூப்பிட்டு தன்மையா எடுத்துச் சொல்லத் தயங்கவே கூடாது!
நாம் அப்படிச் செய்து அதை பட்டர் தள்ளி இருந்து பார்க்கும் போது தான் அவருக்குக் கஷ்டம் புரியும்!

இருந்தாலும் நம் அன்னை அவரை மன்னித்து, நல் வழி காட்டுவாள்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கண்ணபிரான், இந்த சத்சங்கம் நல்லா களைகட்டி வரும் இந்த நேரத்தில் இன்னொரு விண்ணப்பமும் வைக்கிறேன்;
சுப்ரபாதம் முடிஞ்சதும், 'ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம்' விளக்கம் எழுதுங்கோ//

"ஆயிரம் பேர்" விருந்தைக் குமரன் கொடுக்க எண்ணியுள்ளார் டீச்சர்!
சொல்லியுள்ளார் பாருங்கள்!

உங்களுடன் நானும் வந்து விடுகிறேன்; பந்திக்கு முந்திக் கொள்ளலாம் :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// குமரன் (Kumaran) said...
துளசி அக்கா உங்களுக்கும் எனக்கு நல்ல போட்டி ஏற்படுத்துறார் இரவி. என் பட்டியலில் சுப்ரபாதம் இருந்தது. நீங்கள் எழுதத் தொடங்கினதும் பட்டியலில் நீங்கள் எழுதத் தொடங்கிவிட்டீர்கள் என்று குறித்துக் கொண்டேன்.//

அடடா, உங்கள் கைவண்ணத்தில் சுப்ரபாதம், சுடச்சுட பொங்கலாய் இருக்குமே!
அதனால் தான் அடியேன் தொடங்கும் முன் உங்கள் பதிவில் அறிவிப்புச் செய்தேன்;

பட்டியல் எங்கே உள்ளது குமரன்? எங்க கண்ணுல கொஞ்சம் காட்டுங்க! :-)
என்னன்ன விருந்து எஙகளுக்குக் காத்துக்கிட்டு இருக்கு?

//சஹஸ்ரநாமமும் இருக்கிறது. அதற்கும் துளசியக்கா வேட்டு வைக்கப் பாக்குறாங்க. பாக்கலாம் யாருக்கு அந்தக் கொடுப்பினை இருக்குன்னு. :-)//

தங்களுக்கே அந்தக் கொடுப்பினை! ஜிரா போட்டிக்கு வர மாட்டாரே :-))
நான் எண்ணியுள்ளவை இரண்டே இரண்டு தான் குமரன்!
திருவாய்மொழி - இது நிச்சயம் கூட்டு முயற்சி!
தியாகராஜ பஞ்ச ரத்னம்

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பத்மா அர்விந்த் said...
அனிச்சையாய் வாய் முணுமுணுப்பது உண்டு. யோசித்து பார்த்தால் சொல்ல வேண்டும் என்றூ நினைத்து கூட சொல்லுவதில்லை//

வாங்க பத்மா,
அதே தான் இங்கும்; வாய் தானாக முணுமுணுக்குமே தவிர இப்படி யோசித்தது இல்லை!

இதை எழுதத் தொடங்கிய பின் தான், நானும் உங்களுடன் சேர்ந்து படிக்கிறேன்; பொருத்திக் கேட்கும் போது மகிழ்சியா இருக்கு!

Anonymous said...

ரவி சங்கர்!
தங்கள் விளக்கம் ,அதையொட்டி வரும் பின்னூட்டங்கள் யாவும் சுவையாகவுள்ளது.இப்போதே பொருள் விளங்கிக் கேட்கிறேன்.
நீங்கள் துண்டு துண்டாக போடுவதையிட்டுக் கவலைப்படவேண்டாம். அது தவறல்ல!!! நீங்கள் பாடம் நடத்தலெனும் நற்பணி செய்கிறீர்கள்.
வாரியார் சுவாமிகள் தன் சொற்பொழிவுகளில்; திருப்புகழை....சந்தர்ப்பத்துக்குத்.....தேவையான வரியில் இருந்தே !சொல்லுவார்.
அதனால் அவரை நான் அருணகிரியாரின் மறுபிறவி என எண்ணுவேன்;ஆக்கியோனுகே!! அதன் அடி;நுனி தெரியும்;
யோகன் பாரிஸ்

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குமரன் (Kumaran) said...
மாத: ஸமஸ்த ஜகதாம் என்னும் போது அடியேனின் அன்னை மட்டுமின்றி அகில உலகிற்கும் அன்னையே என்றும், அதனால் அகில உலகத்தினரும் அடியேனின் உடன் பிறந்தவர்கள்//

அட, இது சூப்பர்!
எனக்கும் அன்னை; உனக்கும் அன்னை!
அப்ப நாம் ஏன் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டால்...ஆகா.....!!

குமரன் (Kumaran) said...

http://puthuvalaippuennam.blogspot.com/

பட்டியல் இங்கே இருக்கிறது ரவிசங்கர்.

ஷைலஜா said...

ஸ்லோகமாய் சொல்லி பழக்கம்தான் ..ஃபில்டரில் காபி இறக்கிக்கொண்டே குக்கரில் அரிசிபாத்திரத்தை வைத்தபடியே வாய் முணுமுணுக்கும்.ஆனால் சமஸ்க்ருதம் அறிவு அதிகமிலாமையால் அத்தனை வரிகளுக்கும் அர்த்தமே தெரியாது தெரிந்துகொள்ள முயற்சித்ததுமில்லை.
இங்கே படித்துப் பார்த்ததும் ஆனந்தமாய் இருக்கிறது ரவிசங்கர்.

அர்த்தம் தெரிந்து சொல்கிறபோது அன்னையுடன் இன்னமும் நெருக்கம் ஏற்படுகிற உணர்வு வருகிறது...
தொடரட்டும் உங்கள் பணி.
ஷைலஜா

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குமரன் (Kumaran) said...
'இன்றிருந்தார் நாளை இல்லை' எனும் நிலையாமை உடையது என்ற அறிவும், அந்த நிலையில்லா உலகில் நிலைத்தச் சொந்தமாய் இருப்பவள் அன்னையே என்பதும்//

அழ்காச் சொன்னீங்க குமரன்! ஒரு பிறவிக்குத் தாய், மறு பிறவிக்கும் இருப்பாரா என்று தெரியாது!
ஆனால் எல்லாப் பிறவிக்கும், எப்போதும் ஒரே தாய்!
என்றும் மாறாதவள்! அன்பும் மாறாதவள்!

//மாத: என்று முதலில் சொன்னதால் 'கண்டேன் கற்பினுக்கணியை' என்று சொன்னதாற் போல்//

கண்டேன் சீதையை என்று கம்பர் கண்டேனை முதலில் வைக்கிறார்! அதே போல் "மாத" என்று முதலில் வைத்தது நீங்கள் சொன்னப்பறம் தான் தெரிகிறது! மிக்க நன்றி!!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// குமரன் (Kumaran) said...
கோபம் கருணை என்னும் உணர்வுகள் தோன்றும் இடமான இதயத்தின் மிக அருகில் அன்னை கோயில் கொண்டுள்ளதால் அப்பன் சினம் கொள்ளும் முன்னரே கருணை கொள்ளும் படியாக அன்னை செய்வாள் என்பதும்//

இது தான் விடயமா? அன்னை சரியான இடமாப் பாத்து தான் போய் அமர்ந்துள்ளாள்; அப்பன் கோபத்தில் இருந்து நம்மைக் காப்பாற்ற!

ரொம்ப நாளா ஒரு கேள்வி; மருத்துவர்கள் வந்து பதில் சொன்னாலும் சரி! //உணர்வுகள் தோன்றும் இடமான இதயத்தின்//
உணர்வுகள் தோன்றுவது இதயத்திலா? இல்லை அறிவிலா??

இல்லை Mind என்பதைத் தான் இதயம் என்கிறோமோ?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// Johan-Paris said...
ரவி சங்கர்!
தங்கள் விளக்கம் ,அதையொட்டி வரும் பின்னூட்டங்கள் யாவும் சுவையாகவுள்ளது//

மிக்க நன்றி யோகன் அண்ணா!

//நீங்கள் துண்டு துண்டாக போடுவதையிட்டுக் கவலைப்படவேண்டாம். அது தவறல்ல!!!//

தங்கள் சொன்னது மனதுக்கு மிகவும் திருப்தி! அப்படியே தொடர்கிறேன்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குமரன் (Kumaran) said...
http://puthuvalaippuennam.blogspot.com
பட்டியல் இங்கே இருக்கிறது ரவிசங்கர்.//

ஆகா குமரன்,உண்மையிலேயே பெரிய விருந்து தான் காத்திருக்கிறது்!! அதுவும் நாம ராமாயணம்!

ஒரு suggestion! (யோசனை)
குமரன் அவர்களின் பட்டியலையே ஏன் ஒரு master list போல் நாம் அனைவரும் பயன்படுத்தக் கூடாது?


குமரன், நான் எண்ணியுள்ளதாய்ச் சொன்ன இரண்டும் அந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்கிறீர்களா?
ஒரு மைய இடத்தில் இருந்தால் எல்லாரும் காண ஏதுவாய் இருக்கும்!

ஞானவெட்டியான் said...

அன்பு இரவி,
////உணர்வுகள் தோன்றும் இடமான இதயத்தின்//
உணர்வுகள் தோன்றுவது இதயத்திலா? இல்லை அறிவிலா??//

இதயம் உயிர்த் துடிப்பு உள்ள இடம். உயிர் நாடி. அங்கேதான் அன்னை அமர்ந்துள்ளாள். உயிர் இல்லையேல்.....?

மனம் எங்கே உள்ளதென எல்லோரும் இன்னமும் தேடிக்கொண்டுள்ளனர்.

உணர்வுகள் தோன்றுவது அப்பன் வேங்கடவன் (முகுளம்)கட்டுப்பாட்டில் உள்ள மூளையில்.
ஏதோ எனக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.

குமரன் (Kumaran) said...

நன்றாய் செய்யலாம் ரவிசங்கர். நீங்கள் ஒரு யோசனை சொல்லியிருக்கிறீர்கள். கண்ணன் ஐயா ஒரு யோசனை சொல்லியிருக்கிறார். அடியார் என்ன சொல்கிறார்களோ அந்த வழியில் அடியேன் செல்கிறேன்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஷைலஜா said:
ஃபில்டரில் காபி இறக்கிக்கொண்டே குக்கரில் அரிசிபாத்திரத்தை வைத்தபடியே வாய் முணுமுணுக்கும்.//

மிகவும் உண்மை ஷைலஜா! அடியேனும் அப்படியே! காலையில் துணியை Iron செய்து கொண்டே, இல்லீன்னா குழாய்த் தண்ணீர் பிடித்துக் கொண்டே...வாய் முணுமுணுக்கும்!
இப்ப உங்களுடன் சேர்ந்து நானும் கற்கிறேன்!

//இங்கே படித்துப் பார்த்ததும் ஆனந்தமாய் இருக்கிறது ரவிசங்கர்.
அர்த்தம் தெரிந்து சொல்கிறபோது அன்னையுடன் இன்னமும் நெருக்கம்//

மிக்க நன்றிங்க! அன்னையின் நெருக்கம் அலாதியானது!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஞானவெட்டியான் said:
இதயம் உயிர்த் துடிப்பு உள்ள இடம். அங்கேதான் அன்னை அமர்ந்துள்ளாள்.
உணர்வுகள் தோன்றுவது அப்பன் வேங்கடவன்(முகுளம்)கட்டுப்பாட்டில் உள்ள மூளையில்//

அருமையாச் சொன்னீங்க ஐயா!
ஆழ்ந்து புரிந்துணர வேண்டும்! அம்மை அப்பன் அருள் தேவை!

Ponniyinselvan said...

asin,thrisha என்று பிதற்றிக் கொண்டிருக்கும் இந்த கால இளையோர் மத்தியில்,உங்களைப் போன்ரோரின் எழுத்துக்களை படிக்கும்போது மிகுந்த ஆச்சரியமும் பெருமிதமும் ஒருங்கே ஏற்படுகின்றது.வாழ்த்துக்கள்.

கீதா சாம்பசிவம் said...

உங்களோட விளக்கமும் சரி, குமரனின் விளக்கமும் சரி, நல்லா இருக்கு. சுப்ரபாதத்துக்கு அர்த்தம் இப்படி எளிமையான தமிழில் கொடுத்ததுக்கு நன்றி.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// Ponniyinselvan said...
asin,thrisha என்று பிதற்றிக் கொண்டிருக்கும்....உங்களைப் போன்ரோரின் எழுத்துக்களை படிக்கும்போது மிகுந்த ஆச்சரியமும் பெருமிதமும் ஒருங்கே ஏற்படுகின்றது.வாழ்த்துக்கள்//

பொன்னியின் செல்வரே வருக!
முதல் வருகை! நல்வரவு!
அசின், திரிஷா போன்ற செந்தமிழ் நாட்டு மங்கைகள் மேல் தங்களுக்குக் கோபம் ஏனோ? :-))

உங்க வாழ்த்துக்கு நன்றிங்க! வாங்க அடிக்கடி!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கீதா சாம்பசிவம் said...
உங்களோட விளக்கமும் சரி, குமரனின் விளக்கமும் சரி, நல்லா இருக்கு. சுப்ரபாதத்துக்கு அர்த்தம் இப்படி எளிமையான தமிழில் கொடுத்ததுக்கு நன்றி//

கீதாம்மா, நீங்க பின்னாடி வந்தாலும், ஒவ்வொரு பதிவும் அழகாப் படிச்சு ஊக்கம் கொடுக்கறீங்க! மிக்க நன்றிம்மா!

Ponniyinselvan said...

ரவி,
வலை முழுவதும் மேய்ந்தால்,கதை முழுவதும் தெரியும்..புரியும்.மீண்டும் ஒரு முறை என் பதிவுகளை ஆரம்பத்திலிருந்து படித்துப் பார்க்கவும்.
பொன்னியின்செல்வன்[செல்வி]

குமரன் (Kumaran) said...

மேலே அடியேன் 'மாத: ஸமஸ்த ஜகதாம்' என்பதற்கு இட்ட பின்னூட்டத்தை நண்பர்கள் அறிவுறுத்தலுக்கு ஏற்ப எளிதாகச் சொல்ல முயன்றிருக்கிறேன்.

http://koodal1.blogspot.com/2006/11/blog-post_27.html

ஜெயஸ்ரீ said...

மிக நன்றாகப் பொருள் சொல்லியிருக்கிறீர்கள் ரவி.

குமரன் , அடுக்கடுக்காக ஆழமாகப் பொருள் சொல்லியிருப்பது சிறப்பாக இருக்கிறது. விஷ்ணு பக்தர்களுக்கு வழக்கமாக அன்னையிடம் உள்ள அலாதியான சுவாதீனமும் , உரிமையும் ஒவ்வொரு சொல்லிலும் மிளிர்வதைத் தங்கள் விளக்கத்தைப் படித்தபின் இன்னும் உணர முடிந்தது.

//மாத: ஸமஸ்த ஜகதாம் என்னும் போது அடியேனின் அன்னை மட்டுமின்றி அகில உலகிற்கும் அன்னையே என்றும்//

இதற்குக் "கண்டனன் கற்பினுக்கணியை" உதாரணம் மிகப் பொருத்தம். வேறெதுவும் சொல்வதற்கு முன் "அன்னை" என்று சொல்லியாகிவிட்டது. அன்னையைவிட உற்றவர் நமக்கு வேறு யார் ?

சங்கரரும் கனகதாராஸ்தவத்தில்

"மாதுர் சமஸ்த ஜகதாம் மஹநீயமூர்த்தி" என்றே சொல்கிறார்.

"ஸ்ரீ விஷ்ணு ஹ்ருத் கமலவாஸினி" என்றே அறியப்படுபவள்.கார்முகில் வண்ணனான நாரயணன் நெஞ்சத்தைப் பீடமாக்கி அமர்ந்து மின்னலைப்போன்ற தனது அளவற்ற காந்தியால் அதை ஒளிரச்செய்பவள். (மதுவிஜயினக வஷ்ய பீடீம் ஸ்வகாந்த்யா பூஷயந்தீம் - தேசிகரின் ஸ்ரீஸ்துதி).அவனுக்கு ஸ்ரீனிவாசன் என்ற நாமத்தைப் பெற்றுத்தந்தவள்.

ஸ்ரீ ஸ்வாமினி - நாராயணன் நம்மையுடையவன். அவனது தர்மபத்னியான அன்னை யும் நம்மையுடையவள்.

//ஏகம் சத், ஏகம் அத்விதீயம் என்று வேதம் முறையிட அன்னையும் நம்மையுடையவள் ஆவது எப்படி, பரம்பொருள் ஒன்றே என்றல்லவோ வேதம் சொல்கிறது என்றால் மலரும் மணமும் போல, சுடரும் ஒளியும் போல அப்பனும் அன்னையும் நம்மையுடையவர்கள்; அதனால் வேதவிருத்தமில்லை//

தேசிகரும் ஸ்ரீ ச்துதியில் இதையே சொல்கிறார். "யுவாம் தம்பதீம் நஹ தைவதம் " - அரியும் அன்னையும் தம்பதியாக இணைந்தே பர தெய்வம் ஆகிறார்கள். ப்ரபத்தி யாகத்தின்போது ஆன்மா நிவேதனமாக (ஹவிசாக) இந்த தம்பதிகளான பரதெய்வத்திற்கே அர்ப்பணிக்கப்படுகிறது.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// Ponniyinselvan said...
ரவி,
வலை முழுவதும் மேய்ந்தால்,கதை முழுவதும் தெரியும்..புரியும்.மீண்டும் ஒரு முறை என் பதிவுகளை ஆரம்பத்திலிருந்து படித்துப் பார்க்கவும்.
பொன்னியின்செல்வன்[செல்வி]//

பார்த்தேன்; படித்தேன்; ரசித்தேன் கார்த்திக் அம்மா...
Belated Birthday Wishes too!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குமரன் (Kumaran) said...
நன்றாய் செய்யலாம் ரவிசங்கர். அடியார் என்ன சொல்கிறார்களோ அந்த வழியில் அடியேன் செல்கிறேன்.//

ஆண்டவன் சொல்றான்; அருணாச்சலம் செய்யறான் என்று சூப்பர் ஸ்டார் சொல்வது போல இருக்கு! :-))
நன்றி குமரன்! என் சிந்தனைகளையும் தங்கள் புது வலைப்பூ எண்ணம் பகுதியில் ஏற்றியமைக்கு!


நண்பர்களே,
நீங்கள் பதிக்க எண்ணியுள்ள ஆன்மீக வலைப்பூக்களை இந்தச் சுட்டியில் இட்டால்,
அனைவரும் அறிந்து மகிழலாம்!

http://puthuvalaippuennam.blogspot.com/

திட்டம் இடுதலுக்கும் ஏதுவாய் இருக்கும். இதை ஒரு Master List போல மெயின்டைன் செய்தால் அனைவருக்கும் பயன்படும்!

நீங்கள் மனத்தில் எண்ணியது ஏற்கனவே அங்கு இருந்தாலும், கவலைப்பட வேண்டாம்! தயங்காமல் சொல்லுங்கள்! கூட்டு முயற்சி தானே இன்னும் சிறந்தது!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஜெயஸ்ரீ said...
மிக நன்றாகப் பொருள் சொல்லியிருக்கிறீர்கள் ரவி.//

வாங்க ஜெயஸ்ரீ, நன்றி!
//விஷ்ணு பக்தர்களுக்கு வழக்கமாக அன்னையிடம் உள்ள அலாதியான சுவாதீனமும் , உரிமையும் //
மிகவும் உண்மை நீங்கள் சொல்லுவது! ஸ்ரீ என்று எதற்கும், எங்கேயும் அவளை முன்னிறுத்துவதே சிறப்பு! அவனுக்குப் பேர் வாங்கித் தந்தவளும் அவள் தானே!

தேசிகன் ஸ்ரீஸ்துதி தந்தமைக்கு நன்றி!
இந்த தம்பதிகளைப் போல் அவ்வளவு அன்னோன்யத் தம்பதிகளை வேறு எங்கும் காட்டவில்லை நம் தர்மம்!

மனைவியின் பேரைக் கணவன் சுமக்கிறான் பாருங்கள்! ஸ்ரீநிவாசன் என்று தானே அவனுக்குச் சிறப்பு!

சுப்ரபாதம் (தமிழில்):

ஒலிச் சுட்டிகள்!

முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் - நித்ய ஸ்ரீ பாடுவது (Windows Media Player)

நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com
Pics: tirumala-tirupati.com

சுப்ரபாதம் (மூலம்):

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP