சுப்ரபாதம் என்றால் என்ன? ஏன்?
சுப்ரபாதம் = சு + ப்ரபாதம் = சுகமான விடியல்;
(Subh + Prabhat); Very Good Morning.
அழகுத் தமிழில் "திருப்பள்ளி எழுச்சி" என்று சொல்வது வழக்கம்.
பொதுவாக, கோவில்களில் இறைவனைத் துயில் எழுப்பப் பாடப்படும் பாடல்!
ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு சுப்ரபாதம் உண்டு.
ஒரே கடவுளுக்குப் பல தலங்களில், வெவ்வேறு சுப்ரபாதமும் உண்டு.
திருமலையில் வேங்கடேஸ்வர சுப்ரபாதம் என்றால், திருவிண்ணகரில் ஒப்பிலியப்பன் சுப்ரபாதம்.
பலர், பல்வேறு கால கட்டங்களில் எழுதியவை இவை.
மீனாட்சியம்மன் சுப்ரபாதம், அண்ணாமலையார் சுப்ரபாதம் என்று இப்போது பல சுப்ரபாதங்கள் பிரபலமாக இருந்தாலும்,
காலத்தால் முதலில் பிரபலமானது ஸ்ரீ வேங்கடேஸ்வர சுப்ரபாதம்!
அதுவும் இசைவாணி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களால், இது பாடப்பட்டவுடன், பல இல்லங்களில் பிரபலம் ஆகி விட்டது!
(இப்போது அதே மெட்டில், தமிழ் சுப்ரபாதம் என்ற இசைத்தட்டும் வெளி்வந்துள்ளது. பின்னூட்டத்தில் பத்மா அரவிந்த் அவர்களும் இதைச் சொல்லியிருந்தார்.
Dr. சா. பார்த்தசாரதி என்பவர், "வந்துதித்தாய் ராமா நீ" என்று தொடங்கி, நன்கு மொழிபெயர்த்துள்ளார்)
மூலப்பாடல் ஐநூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. எழுதியவர்:
"பிரதிவாதி பயங்கரம்" என்ற பட்டப் பெயர் கொண்ட அண்ணங்காச்சாரியார்.
(பிரதிவாதி பயங்கரம்=வாதப் போரில் எதிர் அணியினருக்குப் பயங்கரமானவர்)
இராமானுசரின் மறு அவதாரமாக வணங்கப்படும், மணவாள மாமுனிகள் என்ற பெரும் வைணவ குருவின் சீடர் இவர்.
தம் குருவின் வேண்டுகோளை ஏற்று, திருவேங்கடமுடையானுக்கு அவர் இயற்றியதே இந்த சுப்ரபாதம்! இயற்கை வர்ணனைகளும், ஆழ்வார் பாசுரங்களில் இருந்து பல குறிப்புகளும் கொண்டுள்ளது!
மொத்தம் 4 பாகங்கள் கொண்டது இது!
1. சுப்ரபாதம் - பள்ளி எழல்
2. ஸ்தோத்திரம் - துதி, போற்றி
3. பிரபத்தி - திருமகளைப் பற்றித், திருவடிகளில் சரணாகதி
4. மங்களம் - சுபம்
தொடங்கி விடலாமா, சுப்ரபாதத்தை!
அது சரி;
தூக்கம், விழிப்பு எல்லாம் கடந்த இறைவனை, நாம் ஏன் துயில் எழுப்ப வேண்டும்? பின்னூட்டத்தில் சொல்லுங்க பாக்கலாம்!!
12 comments:
பதில் இங்கே!
http://emadal.blogspot.com/2006/11/blog-post_17.html
சனிக்கிழமைகளில் பல வீடுகளில் கேட்கப்படும் "நேயர் விருப்பம்" இது."பிரதிவாதி பயங்கரம்" போன்ற தகவல்கள் கேட்டு பல நாட்கள் ஆனதால் நினைவில் இருந்து அகன்று மீண்டும் புதுப்பிக்க இந்த பதிவு உதவியது.நன்றி
பிரதிவாதி பயங்கரம் அண்ணா அவர்களின் ஸ்ரீவசன பூஷணம் என்றொரு உரையுண்டு. கொஞ்சம் பொறுமையாக படிக்க வேண்டும். எவ்வளவு தீவிரமான/புரட்சிகரக் கருத்துக்களைச் சொல்கிறார்! (சில பாசுர மடல்களில் எடுத்தாண்டிருப்பேன்)
நா.கண்ணன் said...
பதில் இங்கே!
பதிலையே பதிவாப் போட்டு கலக்கிட்டீங்க சார்!
//பகவத் தரிசனம் முழுவதையும் கனா என்று சொல்லிவிடுகிறாள் கோதை//
சூப்பர் சார்! அருமையாச் சொன்னீங்க!
இதுவே சாரம்!
// மனிதன் விழித்தால்தான் பொதுக்காரியங்கள் நடக்கும்
எதற்கும் ஒரு பாதுகாப்பாக இருக்கட்டும் என்று மனிதர்கள் தினம், தினம் அவனை எழுப்புகின்றனர்//
பிம்பா-பிரதிபிம்பா பாவம்:
கண்ணாடியில் தன்னைப் பார்க்கும் ஒரு அழகான பெண், தனக்குப் பொட்டு வைத்துக் கொள்கிறாள்; அது கண்ணாடியிலும் தெரிகிறது. அழகு கூடுகிறது!
தன்னை எப்படி பாவிக்க நினைக்கிறாளோ, அதே போல் கண்ணாடியிலும் பாவிப்பது!
தான் உறங்க, இறைவன் உறங்கி,
தான் எழ, இறைவனும் எழுகிறான், என்று மனிதன் உண்மையில் தனக்குத் தானே பாடிக்கொள்கிறான் சுப்ரபாதம்!
சிற்றஞ்சிறு காலை வந்து, சிறப்பான விளக்கம் தந்து, சிறப்பித்த கண்ணன் சாருக்கு என் மனமார்ந்த நன்றி!
//வடுவூர் குமார் said...
சனிக்கிழமைகளில் பல வீடுகளில் கேட்கப்படும் "நேயர் விருப்பம்" இது."பிரதிவாதி பயங்கரம்" போன்ற தகவல்கள் கேட்டு பல நாட்கள் ஆனதால் நினைவில் இருந்து அகன்று மீண்டும் புதுப்பிக்க இந்த பதிவு உதவியது.நன்றி//
வாங்க குமார் சார்;
மீண்டும் நினைவுறுத்த இந்தப் பதி்வு உங்களுக்கு உதவியது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி!
தொடர்ந்து வந்து உங்கள் "நேயர் விருப்பம்" சொல்லுங்க!
//நா.கண்ணன் said...
பிரதிவாதி பயங்கரம் அண்ணா அவர்களின் ஸ்ரீவசன பூஷணம் என்றொரு உரையுண்டு.(சில பாசுர மடல்களில் எடுத்தாண்டிருப்பேன்)//
இப்போ தான் சார் நான் ஏழாம் மடலுக்கு வந்துள்ளேன்; சொன்னதற்கு நன்றி; "ஸ்ரீவசன பூஷணம்", நினைவில் இருத்தி தொடர்ந்து படிக்கிறேன்! உங்கள் குறிப்பு வரும் போது Correlate செய்கிறேன்!
பொதுவாகவே இந்திய ஆன்மீகத்தில் (இந்தியாவில் உருவான பல ஆன்மீகக் கருத்துகளில்) இறைவனை எங்கேயோ தேட வேண்டாம். ஏனென்றால் கடந்தும் உள்ளும் இருப்பதை உள்ளும் பார்க்கலாம் என்பதுதான் அடிப்படைக் கருத்து. அந்தக் கருத்தை ஒட்டி இறைவனை நம்மை நெருக்கியே நினைக்கும் வகையில்தான் சிலை வடிவ வழிபாடுகளும் (சிலை வழிபாடு அல்ல) பூஜை முறைகளும் உருவாயின. எப்படிப் பூஜை செய்வது என்பது வேறுபட்டாலும் பூஜை செய்வது என்பது ஒன்றாக இருந்திருக்கிறது. இருக்கிறது.
அப்படியொரு நெருக்கும் வழிபாட்டு முறைதான் திருப்பள்ளியெழுச்சி. ஏன் இது தேவை?
இறைச் சிந்தனை என்பது எந்த வேளையும் இருக்க வேண்டும் என்பது ஒரு கருத்து. அடிக்கடி நினைப்பது என்பது ஒரு கருத்து. ஆனால் விடியலில் நாம் துயில் எழுகையில் இறைவனை நினைக்க வேண்டும் என்ற நல்ல கருத்தின் அடிப்படையில் உருவான ஒரு முறைதான் திருப்பள்ளியெழுச்சி.
ஒரு சிறிய எடுத்துக்காட்டு சொல்கிறேன். கண்ணன் என் காதலன். காதலி. வேலைக்காரன். தந்தை. தாய். குழந்தை. என்றெல்லாம் சொல்லும் பொழுது இறைவனே நமது வாழ்வு. இறைவனே நமது செல்வம். இறைவனே நமது துயில் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். துயில் என்று நினைக்கையில் எழுதலும் வேண்டும். அப்படித்தான் திருப்பள்ளியெழுச்சி பாடுவது நடக்கிறது. சுருங்கச் சொன்னால் இறைவனை எங்கோ தேடாமல் நம் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் தேடுவதில் இதுவும் ஒரு முறை.
பிரதிவாதி பயங்கரம் இன்னொருவருக்கும் அடைப்பெயர். P.B.Srinivas.
P.B. Srinivas அவர்களின் பெயரில் இருக்கும் பிரதிவாதி பயங்கரம் அடைப்பெயர் இல்லை என்று நினைக்கிறேன் இராகவன். அவர் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் பரம்பரையில் வந்தவராய் இருப்பார். சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரி என்பதில் இருக்கும் சக்ரவர்த்தியைப் போல.
//G.Ragavan said...
துயில் என்று நினைக்கையில் எழுதலும் வேண்டும். அப்படித்தான் திருப்பள்ளியெழுச்சி பாடுவது நடக்கிறது. சுருங்கச் சொன்னால் இறைவனை எங்கோ தேடாமல் நம் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் தேடுவதில் இதுவும் ஒரு முறை//
ஜிரா வாங்க! மிக்க நன்றி!
கண்ணன் சார் தத்துவ விளக்கமாச் சொன்னார்;
நீங்க பக்தி விளக்கமாச் சொல்லி இருக்கீங்க!
இரண்டும் அருமை!
நம்முள் இருப்பவனை எழுப்புவது போல், நம்மையே எழுப்பிக் கொள்வது என்று இருவர் விளக்கங்களிலும் அழகாகப் பொருள்படுகிறது!
//குமரன் (Kumaran) said...
P.B. Srinivas அவர்களின் பெயரில் இருக்கும்....பரம்பரையில் வந்தவராய் இருப்பார். சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரி என்பதில் இருக்கும் சக்ரவர்த்தியைப் போல//
உண்மை தான் குமரன்!
அவர் வழி வந்தவர்கள் P.B என்று தான் தங்கள் பெயரில் சேர்த்துக் கொள்கிறார்கள்! அண்ணன் கோவில் என்ற தலத்தில் இருக்கும் பலர் அவர் வழி வந்தவர்கள். பலர் பெயரும் P.B என்றே துவங்கும்!
அட நம்ம P.B. ஸ்ரீநிவாஸ் கூட அப்படித் தானா! தகவலுக்கு நன்றி ஜிரா!!
ரவி சங்கர்!
PB எல்லாம் எங்களுக்குப் புதிய தகவல்கள். சுவாரசியமாக உள்ளது.
எழுதுங்கள்.
//Johan-Paris said...
ரவி சங்கர்!
PB எல்லாம் எங்களுக்குப் புதிய தகவல்கள். சுவாரசியமாக உள்ளது.
எழுதுங்கள்//
மிக்க நன்றி யோகன் அண்ணா;
புதிய தகவல்கள் என்னால் முடிந்த வரை தந்து நிச்சயம் எழுதுகிறேன்!
நீங்கள் ஊக்கப்படுத்துவது, மெத்த மகிழ்ச்சி!
Post a Comment