Saturday, December 09, 2006

சுப்ரபாதம் (5) - மலை குனிய நின்றான்!

அது சரி, உலகின் பல கதைகளிலும் நாகத்தை ஒரு குறியீடாகச் சொல்லியிருக்காங்க; ஏன்?
கதை என்று இல்லை; விஞ்ஞான மருத்துவக் கல்லூரிகளில் கூட, பெரும்பாலும் அவர்கள் முத்திரையில் நடுவில் ஒரு தண்டும் அதைச் சுற்றி ஒன்றோ, இரண்டோ நாகங்கள் இருக்கும்! ஏன்?
இன்றைய சுலோகத்திலும், இனி வரப்போவதிலும் சேஷன் என்ற நாகம் தான்!
சென்ற இரு பதிவிலும் "அன்னை, தயாநிதியை" எழுப்பினோம்!
(முந்தைய பதிவு -recap- மேலே சொடுக்கவும்);
இன்று அம்மையும் அப்பனும் எழுந்து கொள்ள, அவர்கள் கூடவே பொறுப்புள்ள மூத்த பிள்ளைகளும் எழுந்து விடுகின்றன! (இப்படிச் சொன்னதற்காக இளைய பிள்ளைகள் யாரும் என்கிட்ட சண்டைக்கு வராதீங்கப்பா:-) நான் சொன்னது சப்தரிஷிகள் என்னும் மூத்த பிள்ளைகள்!



இன்றைய சுலோகம் மிக விசேடமானது; முதல் முறையாக, நேரிடையாகவே, வேங்கடவனை எழுப்பும் சுலோகம்; "சேஷாத்ரி சேகர விபோ, தவ சுப்ரபாதம்" என்று இனி ஒவ்வொரு சுலோகத்திலும் வரப்போகிறது.


(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)







அத்ரிஆதி சப்தரிஷய சமுபாஸ்ய சந்த்யாம்
ஆகாச சிந்து கமலானி மனோகரானி
ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபந்நா
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்


அத்ரி ஆதி சப்த ரிஷய = அத்ரி முதலான சப்த (ஏழு) ரிஷிகள்
பால் வெளியில் (Milky Way), துருவ நட்சத்திரத்தைச் சுற்றி இருப்பது சப்த ரிஷி மண்டலம் (Ursa Major).
சப்த ரிஷிகள், உலகின் ஆதி தாய் தந்தையர்கள் ஆவார்கள்.
இறைவனின் மூத்த குழந்தைகள் என்றும் சொல்லுவர். அந்த ஏழு பேர் யார் யார் என்ற பட்டியல் சில சமயம் மாறுபட்டாலும், பொதுவாக இவர்களே:
அத்ரி, பரத்வாஜர், கெளதமர், ஜமதக்னி, காச்யபர், வசிஷ்டர், விஸ்வாமித்ரர்
(அத்ரியும், வசிஷ்டரும் பெரும்பாலும் எல்லாப் பட்டியல்களிலும் இருப்பர்; வசிஷ்டரின் மனைவி அருந்ததியும் வான மண்டலத்தில் அவருடன் இருப்பதாக ஐதீகம். "அம்மி மிதித்து அருந்ததி பார்த்து" என்ற வழக்கமும் வந்தது)


சமுபாஸ்ய சந்த்யாம் = வரப்போகும், சந்தியா வந்தன பூசைகளுக்காக
அதிகாலை கொஞ்சம் கொஞ்சமாக புலரத் தொடங்குகிறது; சந்தி செய்யும் வேளையும் வந்து விட்டது.

ஆகாச சிந்து = ஆகாச கங்கை நீர்வீழ்ச்சி, தீர்த்தத்தில் இருந்து
ஆகாச கங்கை என்ற நீர்வீழ்ச்சியைப் பற்றி திருமலை நம்பிகள் பதிவில் பார்த்தோம்; அந்த நீர் பாப விநாச தீர்த்தம் போலவே புனிதமானது; எம்பெருமான் தொடுத்த வில் அம்பினால் உருவானது;

கமலானி மனோகரானி = அழகான தாமரைப் பூக்களைக் கொண்டு வந்து உள்ளனர்
ஆகாச கங்கையில் மலர்ந்த அழகிய (மனோகரமான) தாமரைப் (கமலம்) பூக்களைக் கொண்டு வந்து உள்ளனர்


ஆதாய பாத யுகம் அர்ச்சயிதும் = (அவர்கள் கொண்டு வந்த மலர்களுடன்) பாதம் இரண்டையும் அர்ச்சிக்க
பாத யுகம் = இணை அடிகள் = இரண்டு திருப்பாதங்கள்.
மலர்ப் பாதங்களை, மலர்களால் அர்ச்சிக்க வந்துள்ளனர்;
இறைவனின் இணை அடிகளை பாத பத்மம் என்று சொல்லுவார்கள். ஏன்? தாமரை நீரில் மூழ்கவே மூழ்காது; நீரின் அளவுக்கு ஏற்ப அதுவும் உயர்ந்து கொண்டே இருக்கும். "நீர்அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்"; "வெள்ளத்து அனைய மலர் நீட்டம்" என்பன தமிழ்ப் பாடல்கள்.

அது போல் நாம் நம் புண்ணிய பாவக் கணக்குகளைக் கூட்டினாலும் சரி, குறைத்தாலும் சரி! அதற்காக அவன் பாதங்களை மறைத்து வைக்க மாட்டான்; புண்ணியமோ பாவமோ, எதைச் செய்தாலும் நம்மைக் கடைத்தேற்றுவதற்கு ஒரே வழி! எப்போதும் நன்கு தெரியும்படி, அடைக்கலம் புகும்படி, பாதங்களை மட்டுமாவது காட்டிக் கொண்டே இருப்பான்!
பற்றுவதும் பற்றாததும் நம் கையில் தான் இருக்கிறது! பெரும்பாலும் புண்ணியர்கள் பற்றிக் கொள்கிறார்கள்; பாவம் செய்தோர், காட்டினாலும் பற்ற மறுக்கிறார்கள்!

மற்ற திரு அவயங்கள் வேண்டுமானால் பக்திக்கு ஏற்றவாறு தோன்றும், மறையும்! கரங்கள் காக்கவும் செய்யும்; அம்பைத் தொடுத்து அழிக்கவும் செய்யும்!
ஆனால் திருப்பாதங்கள் அப்படி இல்லை! வாமன அவதாரத்தில் கூட சம்காரம்/அழிவு என்று இல்லாமல், மகாபலி தலை மேல் வைத்து காத்தது! ராமாவதாரத்தில் ராமனே உதவ முடியாமல் போன போது கூட, அவன் திருவடிப் பாதுகைகள் பரதனுக்கு உதவின! இந்தக் காலத்தில் நமக்கும் கோவில்களில் தலை மேல் சடாரியாக வைத்துக் காக்கப்படுகிறது!

பாதுகா சகஸ்ரம் என்ற ஒராயிரம் பாடல்கள் இந்தப் பாதுகைகள் மேல் உள்ளன! அவ்வளவு பெருமை மிக்க பாதங்களைத் தான் தினமும் திருநாமமாக நெற்றியில் அணிகின்றனர்!
இதற்கு ஊர்த்துவ புண்ட்ரம் என்று வடமொழிப் பெயர்! (புண்ட்ரம்/புண்டரீகம் = தாமரை)!
கொஞ்சு தமிழில் திருமண் காப்பு! இப்போது புரிகிறது அல்லவா ஏன் திருப்பாதங்களைத் தாமரையாகச் சொல்கிறார்கள் என்று!



ப்ரபந்நா = சரணம் அடைந்து, வந்துள்ளனர்.
அப்பேர்ப்பட்ட திருவடிகளில் சரணம் புக சப்த ரிஷிகளும் வந்துள்ளனர். ப்ரபத்தி என்றால் சரணாகதி; ப்ரபந்நன் என்றால் சரணாகதி செய்த ஜீவன். இதைப் பற்றி பின்னர் வரப்போகும், "சரணம் சரணம் ப்ரபத்யே", என்ற பகுதியில் பார்ப்போம். "புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே", என்பது ஆழ்வார் செய்யும் சரணாகதி!
அது போல ப்ரபந்நர்களான சப்த ரிஷிகளும் இங்கு பெருமாளைச் சேவிக்க வந்துள்ளார்கள்.



சேஷாத்ரி சேகர விபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே

சேஷன்= ஆதிசேஷன் என்ற பாம்பு! அத்ரி=மலை;
சேகரம்=உச்சி; விபோ = அரசன்;
சேஷ மலைச் சிகரத்துக்கு அரசன் திருவேங்கடநாதன்!
இனி வரும் ஒவ்வொரு சுலோகமும் இப்படித் தான் முடியப் போகிறது! ஏன்?
அப்படி என்ன சேஷனுக்கும், பெருமாளுக்கும் அவ்வளவு அன்னோன்யம்? பெருமாள் எங்கு சென்றாலும், அவனோடு திருமகள் நீங்காது இருக்கிறாள், சரி! ஒத்துக் கொள்ளலாம்!
இந்தத் சேஷன் தொண்டன் தானே! ஏன் எங்கு போனாலும் கூடவே ஒட்டிக் கொள்கிறான்? அடுத்த பதிவில் காணலாம்!!


திருமலையின் ஏழு முடிகளும் சேஷனின் தலைகள்; அந்த மலையே சேஷனின் உருவம் தான்! வளைந்து நெளிந்து பாம்பைப் போலவே தான் உள்ளது! அந்த சேஷ மலை, பக்தியாலும் பணிவாலும் குனிந்து நிற்க, அதன் மேல்
மலை குனிய நின்றான் பெருமாள்
என்று பெயர் பெற்று விளங்குகிறான் இந்தக் கலியுகத் தெய்வம்!
கல்வெட்டுகளிலும் மற்றும் பழந்தமிழ்ப் பாடல்களிலும் இந்தப் பெயர் சிறப்பாக வருகிறது!


தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்!
இப்படி சேஷ மலையின் மீது சேஷாத்ரி நாதனாக நிற்கும் மலையப்பா! ....சுப்ரபாதம் = சு+ப்ரபாதம் = உனக்கும், அதனால் எங்களுக்கும் சுகமான காலைப் பொழுதாக மலரட்டும்.

மலை குனிய நின்றான்

-------------------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
-------------------------------------------------------------------------------------

18 comments:

சாத்வீகன் said...

அருமையான விளக்கம் மற்றும் படங்கள்..

சப்தரிஷிகளை பட்டியலிட்டதுடன் ஆங்கில ஒப்பீடும் படமும் அருமை..

இறைவனின் பாதங்களை ஏன் தாமரைக்கு ஒப்பிடுகின்றனர் என்ற விளக்கம் நன்று.

பாதுகையின் சிறப்பினை தந்தமையும் நன்று..

இறைவனின் பாதங்களை தொழுது நாளினை தொடங்குதல் எத்துணை இனியது.

துளசி கோபால் said...

நல்லது. இன்னிக்கு எங்களுக்கு ஞாயிறு. அதனால் என்ன? எல்லா நாளும் நல்ல நாளே.

பெருமா(ளே)னே போற்றி போற்றி

வல்லிசிம்ஹன் said...

ரவி நல்ல விளக்கம்.
பாதுகைகளின் பெருமை தான் என்னே.
பாதுகா தேவி என்றே ஸ்ரீ வேதாந்த தேசிகர் சொல்லுவார்.
ஒரே பாட்டில் இத்தனை பொருள்களையும் கொடுத்தது மிக்க அருமை.

VSK said...

"சந்த்யாம்", 'ப்ரபாதம்" என்று சொன்னால் இன்னும் சரியாக இருக்குமென நினைக்கிறேன்.

தவறெனில் மன்னிக்கவும்.

உங்கள் பதிவை நான் கைப்பற்ர முயற்சிக்கவில்லை.

ஆனால், எப்போது "திருப்பாதங்கள்" பற்றிய கருத்து வந்தாலும், இதை நான் சொல்லாமல் இருப்பதில்லை!

ஆகவே, சொல்லுகிறேன்.

இன்று பல பதிவுகளில், நான்காவது வருணத்தை பாதத்திலிருந்து வந்ததை குறை சொல்லி வருகின்றனர்.

ஆனால், புருஷ சூக்தம் தொடங்கி, தமிழ் மறைகள் வரை அனைவரும் காண, அடைய, விரும்புவது இந்தப் பாதங்களே!

அதிலிருந்து ஒருவரைப் பிறப்பித்தான் இறைவன் என்றால் எத்துணை பெருமை!

இதை உணர வேண்டும் அனைவரும்!

மறுபடியும்,.... தவறெனில் மன்னிக்கவும்!

சீமாச்சு.. said...

ஆஹா..
அற்புதமான விளக்கம். நன்றி.. தவறாமல் படித்து வருகிறேன்.
அன்புடன்,
சீமாச்சு..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//SK said:
"சந்த்யாம்", 'ப்ரபாதம்" என்று சொன்னால் இன்னும் சரியாக இருக்குமென நினைக்கிறேன்.//

SK ஐயா, வாங்க! நீங்க சொல்றதும் சரி தான்; மாற்றி விட்டேன் பதிவில்! முந்தைய பதிவுகளில் நீங்க சொல்றா மாதிரி தான் எழுதினேன். தமிழ்ச் செய்யும் போது, சந்தியாம் என்று சில சமயம் அப்படி வந்து விடுகிறது!
தவறெனில் மன்னிக்கவும். :-))

//உங்கள் பதிவை நான் கைப்பற்ர முயற்சிக்கவில்லை//

அப்படியே "கை" ப்பற்றினாலும் "கால்" பணம் தேறுமா அடியேன் பதிவு? :-))ச்ச்சும்மா!

//இன்று பல பதிவுகளில், நான்காவது வருணத்தை பாதத்திலிருந்து வந்ததை குறை சொல்லி வருகின்றனர்.
அதிலிருந்து ஒருவரைப் பிறப்பித்தான் இறைவன் என்றால் எத்துணை பெருமை!//

போட்டீங்க SK ஐயா ஒரு போடு! நச்!!
அதுவும் நாலாம் வருணம் என்று சொல்லப்படும் அவர்கள் தோன்றிய பாதங்களை அல்லவா, எல்லாரும், (முதல் வருணம் உட்பட) கோவிலில் தலை மேல் வாங்கிக் கொள்கிறார்கள்!
அருமையாச் சொன்னீங்க! இன்னொன்று தெரியுமா? திருமலை முதல் தரிசனம் இடையனுக்கே! முந்தைய பதிவில் சொல்லி உள்ளேன்!

நீங்கள் சொல்வது போல எல்லாரும் உணர்ந்தால், வம்பு ஏது, வழக்கு ஏது?

//மறுபடியும்,.... தவறெனில் மன்னிக்கவும்!//

அட, இத்தனை முறை சொல்றீங்களே, மயிலை மன்னாரு மற்றும் நம்ம சுப்பையா சார் கொடுக்கும் தமிழ்மண விதிகளின் effectஆ?:-))))

SK ஐயா,
இதைச் சொல்ல வேண்டியவர்கள் சொல்ல மறுக்கிறார்கள்! சொல்லவே தேவையில்லாத நீங்கள் ஒன்றுக்கு இரண்டாய்ச் சொல்கிறீர்கள்! ஹூம்!
மு.மு!!

ஞானவெட்டியான் said...

ஏதோ எனக்குத் தெரிந்த நாலு கருத்தையும் உளறிவைக்கிறேன்.

//விஞ்ஞான மருத்துவக் கல்லூரிகளில் கூட, பெரும்பாலும் அவர்கள் முத்திரையில் நடுவில் ஒரு தண்டும் அதைச் சுற்றி ஒன்றோ, இரண்டோ நாகங்கள் இருக்கும்! ஏன்?//

அவைகள்தான் சூரிய சந்திர கலைகள். நடுவேயுள்ள தண்டு அக்கினி கலை. ஆக "முக்கலையும் சேர்த்துத் தவமியற்றிப்பின் என்னுடன் சேர்ந்துகொள்" என்கிறார் மலையப்பர்.

//அந்த ஏழு பேர் யார் யார் //

அவைகள்தான் மாயத் (வண்ணத்)திரைகள். அவைகளைத் தாண்டித்தான் முகுளமாம் பெருமாளைத் தரிசிக்கவேண்டும்.

//ஆகாச கங்கையில் மலர்ந்த அழகிய (மனோகரமான) தாமரைப் (கமலம்) பூக்களைக் கொண்டு வந்து உள்ளனர்//

ஆயிர இதழ்தாமரை= சிதாகாசம்.
ஆகாச கங்கை = அமிழ்து

மலர்ப்பாதங்கள்=திருவடிகள்= இரு கண்கள்= சூரிய சந்திர கலைகள்
//பற்றுவதும் பற்றாததும் நம் கையில் தான் இருக்கிறது!//

ஆமாம். முக்காலுமுண்மை.

புண்டரிகம் மூன்று பிரிவுடன் உள்ளது. அது குறிப்பதும் முக்கலைகளைத்தான்.

குமரன் (Kumaran) said...

அருமையான விளக்கம் இரவிசங்கர். அதிகமாகவும் சொல்லாமல் குறைவாகவும் சொல்லாமல் அளவாகச் சொல்கிறீர்கள். நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சாத்வீகன் said...
இறைவனின் பாதங்களை ஏன் தாமரைக்கு ஒப்பிடுகின்றனர் என்ற விளக்கம் நன்று.
இறைவனின் பாதங்களை தொழுது நாளினை தொடங்குதல் எத்துணை இனியது.//

வாங்க சாத்வீகன்.அழகாச் சொன்னீங்க!
பாதங்களை தொழுது நாளினை தொடங்குதல் மிகவும் இனியது மட்டும் அல்ல! செல்லும் வழிக்கு துணையாவதும் கூட! வருகைக்கு நன்றி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//துளசி கோபால் said...
நல்லது. இன்னிக்கு எங்களுக்கு ஞாயிறு. அதனால் என்ன? எல்லா நாளும் நல்ல நாளே.
பெருமா(ளே)னே போற்றி போற்றி//

டீச்சர் சாரி! ஞாயிறு போய், உங்கள் திங்கள் தான் வர முடிந்தது! விடுமுறைக் கொண்டாட்டங்கள் எப்படி? ஷாப்பிங் முடிந்ததா?

இனி அமெரிக்க வெள்ளிக்கிழமை, உலகெங்கும் சனிக்க்கிழமை, அப்போதே பதிவினை இட்டு விடுகிறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
பாதுகா தேவி என்றே ஸ்ரீ வேதாந்த தேசிகர் சொல்லுவார்.
ஒரே பாட்டில் இத்தனை பொருள்களையும் கொடுத்தது மிக்க அருமை.//

ஆமாம் வல்லியம்மா! கருணை என்று வரும் போது, தேவியாகிவிடுகிறது பாதுகையும்! அழகாச் சொன்னீங்க!

குழந்தை எப்படி உள்ளான்? பாட்டி நீங்கள் உங்க பிஸி நேரத்திலும் சுப்ரபாத சேவைக்கு வந்தமைக்கு நன்றி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Seemachu said...
தவறாமல் படித்து வருகிறேன்.
அன்புடன்,
சீமாச்சு..//

சீமாச்சு ஐயா, மிக்க நன்றி!
தொடர்ந்து படித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்! எளிமையாக உள்ளதா இல்லை வளர்த்தி விடுகிறேனா என்றும் சொல்லுங்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஞானவெட்டியான் said:
அவைகள்தான் சூரிய சந்திர கலைகள். நடுவேயுள்ள தண்டு அக்கினி கலை. ஆக "முக்கலையும் சேர்த்துத் தவமியற்றிப்பின் என்னுடன் சேர்ந்துகொள்" என்கிறார் மலையப்பர்//

அருமையான தத்துவ விளக்கம் ஞானம் அய்யா! "ஆதித்தன் இயக்கம், குமுத சகாயன் குணத்தையும் கூறி" என்பார்கள்;
சூர்ய, சந்திர கலைகளை, பாம்புடன் எதற்கு ஒப்பு நோக்குகிறார்கள் ஐயா?

//அவைகள்தான் மாயத் (வண்ணத்)திரைகள். அவைகளைத் தாண்டித்தான் முகுளமாம் பெருமாளைத் தரிசிக்கவேண்டும்.//

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா...
உன்னி
மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்!...என்ற எம்.எஸ் குரல் நினைவுக்கு வருகிறது!

//புண்டரிகம் மூன்று பிரிவுடன் உள்ளது. அது குறிப்பதும் முக்கலைகளைத்தான்.//

இது புதிய செய்தி ஐயா, அடியேனுக்கு!


//ஏதோ எனக்குத் தெரிந்த நாலு கருத்தையும் உளறிவைக்கிறேன்.//

இவ்வளவு முத்துக்களைக் கொட்டி விட்டு "உளறிவைக்கிறேன்" என்று சொல்கிறீர்கள்! எங்களுக்கு எல்லாம் "ஊட்டிவைக்கிறேன்" என்பதே சரி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
அருமையான விளக்கம் இரவிசங்கர். அதிகமாகவும் சொல்லாமல் குறைவாகவும் சொல்லாமல் அளவாகச் சொல்கிறீர்கள். நன்றி.//

குமரன்
உங்கள் தனி மடல் கிடைத்தது! சொற்கள் எந்த அடிகளோடு புழங்கி வருதல் பற்றி! நல்ல வேளை பொருள் எதுவும் மாற வில்லை என்று நீங்கள் சொன்னது ஆறுதல்!

பதிவிலும் திருத்தி அமைக்கிறேன்! உங்கள் அன்புக்கும், கருத்துக்கும் அடியேன் நன்றி என்றும்!

ஞானவெட்டியான் said...

அன்பு இரவி,
//சூர்ய, சந்திர கலைகளை, பாம்புடன் எதற்கு ஒப்பு நோக்குகிறார்கள் ஐயா?//
கலைகளின் உயிர்(மூச்சு) ஓட்டம் நேராக இருப்பதில்லை. வளைந்து வளைந்து புரிபோல் மேலேறும். அது பாம்பு ஊர்வதுபோல் இருக்கும்.
பாம்பாட்டிச் சித்தர் சொல்லுவார்,"வளைந்து வளைந்து ஆடு பாம்பே" என.
அதனால்தான்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஞானவெட்டியான் said...
கலைகளின் உயிர்(மூச்சு) ஓட்டம் நேராக இருப்பதில்லை. வளைந்து வளைந்து புரிபோல் மேலேறும். அது பாம்பு ஊர்வதுபோல் இருக்கும்//

இப்போது நன்கு புரிகிறது ஐயா! மிக்க நன்றி!!

SP.VR. SUBBIAH said...

ஆகாயகங்கை நீர்நிலைத் தாமரைகளோடு
சப்தரிஷிகள் வந்தனர் சந்தியா வந்தனம் செய்திட
ச்ரணமாகி வந்தனர் பாதமிரண்டை அர்சித்திட
சேசமலையரசெ என்னினிய காலை வணக்கங்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//SP.VR.சுப்பையா said...//

சுப்பையா சார்
உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை!
நீங்கள் அழகாக தந்த மொழி பெயர்ப்பை, அப்படியே பாடிப் பார்த்தேன் மெட்டோடு! அழகாகப் பொருந்துகிறது!

பேசாமல் உரை சொல்வதை நிறுத்தி விட்டு, இது போல நாலே வரியில் நறுக் என்று முடித்து விடலாமா என்று ஆசை வருகிறது.

ஒரு விண்ணப்பம்;
தாங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் சிரமம் பார்க்காது வந்து இப்படி நாலு வரிக் கவி கொடுத்தால் மிகவும் புண்ணியம் எங்களுக்கு!

சுப்ரபாதம் (தமிழில்):

ஒலிச் சுட்டிகள்!

முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் - நித்ய ஸ்ரீ பாடுவது (Windows Media Player)

நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com
Pics: tirumala-tirupati.com

சுப்ரபாதம் (மூலம்):

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP