Saturday, December 02, 2006

கெளசல்யா சுப்ரஜா ராமா (4) - அம்மா தயாநிதி!

யாராச்சும் சூரியன் உதித்த பின்னரும் வானத்தில் நிலாவைப் பாத்திருக்கீங்களா? அப்படிப் பாக்கலீன்னா இன்னைக்கு இந்தப் பதிவில் காணலாம்!

சென்ற பதிவில் "அன்னை-சகல உயிர்களுக்கும்", அவளை எழுப்பினோம்!
(முந்தைய பதிவுக்குச் சென்று, சுலோகமும் பொருளும், இன்னொரு முறை பார்த்து வரணும் - recap - என்று நீங்கள் நினைத்தால், மேலே சொடுக்கவும்);
நண்பர் குமரனும், அப்பனின் திருமார்பில் அவள் கொலுவிருப்பதைப் பற்றி அழகிய விளக்கம் கொடுத்து இருந்தார்.

இன்றும் அன்னை மீது தான் பாடல்.
வெளியூரில் இருந்து வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் போது, குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும் பரிசுப்பொருள் வாங்கிச் செல்வோம் இல்லையா? ஒரு சிலர் அம்மாவுக்கு மட்டும் ஸ்பெஷலாக இரண்டு பரிசுகள் வாங்கிச் செல்வார்கள்! ஊர் அறிய ஒன்று; தனியாக அடுக்களையில் ஒன்று "நைசாகத்" தரப்படும்! :-)
அது போலத் தான் நேற்றும் இன்றும், இரண்டு பாடல்கள், ஜகன் மாதா ஸ்ரீ மகாலக்ஷ்மியின் மீது!(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)
தவ சுப்ரபாதம் அரவிந்த லோசனே
பவது பிரசன்ன முக சந்திர மண்டலே
விதி சங்கரேந்திர வனிதாபிர் அர்ச்சிதே
விருஷ சைலநாத தயிதே தயாநிதே

தவ சுப்ரபாதம் = மங்களமான காலைப் பொழுதாக மலரட்டும்!
சுப்ரபாதம்=சு+பிரபாதம்=சுகமான காலை
அரவிந்த லோசனே = தாமரை போன்று சிவந்த, குளிர்ந்த கண்களைக் கொண்டவளே
அரவிந்தம்=தாமரை; லோசனம்=கண்
தாமரையை எதற்குக் கண்களுக்குச் சொல்கிறார்கள்? காலையில் திறந்து இரவில் மூடிக்கொள்வதாலா? இருக்கலாம்! ஆனால் இங்கு அன்னையின் கண்கள் தாமரைப்பூ போல் மெல்லிய சிகப்பு (pink) ; குளிர்ச்சி! தாமரைக்குப் பூங்கொத்து தேவையில்லை! ஒரு பூ போதும். அவ்வளவு தெய்வீக அழகு!

பவது பிரசன்ன முக = உன் முகம், எப்போதும் சிரித்த முகமாய் இருக்கும்
சந்திர மண்டலே = சந்திரனைப் போல் முகம் கொண்டவளே
"வதனமே சந்திர பிம்பமோ" என்று தானே ஒரு பிரபலமான பாடல்; சந்திரன் அமைதியாக ஒளிர்வான்; அது போல் அன்னையும் அடக்கமாக, அமைதியாக, இதழ்க் கோட்டோரம் ஒரு மெல்லிய புன்னகை பூத்து, சிரித்த முகமாய் இருக்கிறாள்!
அது சரி, அதான் காலை புலர்கின்றதே! இன்னும் சிறிது நேரத்தில் நிலவு போய் விடும் அல்லவா? கவலை வேண்டாம்! சூரியன் வந்தாலும் இந்த நிலா மறையாது! அன்னையின் முகநிலாவுக்கு தேய்வு தான் உண்டோ?


விதி சங்கர் இந்திர வனிதாபிர் = பிரம்மா (விதி), சங்கரன் (சிவபெருமான்), இந்திரன் ஆகியோரின் மனைவியர் எல்லாம்
வனிதா=பெண்
விதியைத் தலையில் எழுதும் கடவுள் = பிரம்மன்; இவர் மனைவியான கலைமகளும் (சரஸ்வதியும்),
சங்கரன் = சிவபிரான்; ஈசனின் அன்பு மனைவி, அன்னை மலைமகளும் (பார்வதியும்),
இந்திரன் மனைவியான சசிதேவியும் (இந்திராணி),

அர்ச்சிதே = (உன்னை) அர்ச்சிக்கிறார்கள்.
அன்னைக்கும், மற்ற தெய்வங்களின் மனைவியருக்கும் அவ்வளவு தோழமை பாருங்கள்; விரும்பி நன்மொழிகளால் அர்ச்சனை செய்கிறார்கள்! அதுவும் நம் அன்னை யார்?
அண்ணனின் மனைவி என்பதால், பார்வதிக்கு அண்ணி;
கணவரின் (பிரம்மா) அம்மா என்பதால், சரஸ்வதிக்கு மாமி;
கணவரின் (இந்திரன்) தலைவர் என்பதால், சசிதேவிக்குத் தலைவி;
இப்படிப் பிறந்த வீடும், புகுந்த வீடும், எல்லாரும் அன்னை மகாலக்ஷ்மியிடம் அன்பு பாராட்டுகிறார்கள்!


விருஷ சைல நாத= விருஷபாசலம் என்னும் திருமலைக்கு நாதன்
திருமலையில் உள்ள ஒரு மலைக்கு விருஷபாசலம் என்று பெயர்! ஏழு மலைகள் என்னன்ன என்று பின்னர் ஒரு சுலோகத்தில் வருகிறது, அப்போது பார்ப்போம்!
விருஷப+அசலம்=விருஷப மலை; விருஷபன் என்ற ஒரு அசுரனின் நினைவாக! அசுரனின் பேரில் பெருமாளுக்கு மலையா? இது தனிக் கதை. தெரிந்தவர்கள் யாரேனும் சொல்லுங்கள்!

அதை எதற்கு இங்கு சொன்னார்கள்? வேறு ஒரு மலையைச் சொல்லி இருக்கலாமே? இது தாயார் சுலோகம் அல்லவா? அவள் தான் அசுரன், தேவன் என்றெல்லாம் வேறுபடுத்திப் பார்க்க மாட்டாளே! மாத; சமஸ்த ஜகதாம்! கருணைக் கடல் அல்லவா அவள்!!

தயிதே, தயா நிதே = அவனின் விருப்பமான மனைவியே! தயா நிதியே!
தயிதே = Beloved; பெருமாளின் அன்பே ஆருயிரே! தயா+நிதி = கருணை+செல்வம். அன்னை கருணைச் செல்வமானவள்!
அவள் தானே எல்லாச் செல்வத்துக்கு அதிபதி! அவளே ஒரு செல்வமா?
ஆமாம்! காருண்ய லக்ஷ்மி! அஷ்ட லட்சுமிகளில் ஒருவள் காருண்ய லக்ஷ்மி.
எத்தனை செல்வம் வந்தாலும் போனாலும், இந்தக் காருண்யம் மட்டும் என்றும் நிலைத்து நிற்கும்! அதனால் தான் ஒரு மகாகுரு, திருமலை எம்பெருமான் மீது தயா சதகம் என்று ஒரு நூறு பாடல் பாடினார்!

இவ்வளவு பெருமைகள் கொண்ட அம்மா, உனக்கு இனிய காலை வணக்கங்கள்!

-------------------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
-------------------------------------------------------------------------------------

28 comments:

சாத்வீகன் said...

சுப்ரபாதத்தை பலமுறை கேட்டு வரிகளை அறிந்திருந்தாரும் பொருள் அறியாதிருந்தேன். அரவிந்த லோசனே, முக சந்திர மண்டலே ஆகிய வர்ணணைகள் இறைவனை குறித்து என்றே எண்ணியிருந்தேன். தங்கள் பதிவை படித்த பின்பே இவை இறைவியை குறிக்கின்றன என்று அறிந்தேன். மிக்க நன்றி. காலை பொழுதுகளை இனிதாக்கும் தங்கள் சுப்ரபாத சேவை தொடரட்டும்.

ஞானவெட்டியான் said...

அன்பு இரவி,
திருபள்ளியெழுச்சி களை கட்டுகிறது!
தொடருங்கள். இரசிக்கிறோம்; உருசிக்கிறோம்.

SP.VR.சுப்பையா said...

கே.ஆரெஸ் அவர்களே பாடல் அருமையாக இருக்கிறது!
தீனதயாபரிப்பற்றிய - பாடல் மனதைக் கிறங்க அடிக்காதா?

அவ்வையார் தனது வினாயகர் பாடலில்கூட லெட்சுமிதேவியின் அருள் கிடைக்கச் சுருக்கமான வழியைச் சொல்லுவார்

வினாயகரை வணங்குங்கள் அவர் உங்களுக்குத் தன்னருளுடன் திருமகளின்அருளையும் சேர்த்துபெற்றுத்தருவார் என்பார்

வாக்குண்டாம், மனமுண்டாம், மாமலராள் நோக்குண்டாம் என்று துவங்கும் அந்த வெண்பா
-------------------------------------------------
தவ சுப்ரபாதம் அரவிந்த லோசனே
பவது பிரசன்ன முக சந்திர மண்டலே
விதி சங்கரேந்திர வனிதா அபிர் அர்ச்சிதே
விருஷ சைலநாத தயிதே தயாநிதே

தாமரைக் கண்களைக் கொண்டவளே
சிரித்த, சந்திர முகத்தவளே,
கலைமகளால், மலைமகளால் இந்திராணியால்
அன்புடன் அர்ச்சிக்கப் பெற்றவளே
விருஷபாசலமலை நாயகனின் மனம்கவர்ந்தவளே
காருண்யலெட்சுமியே! காலை வணக்கங்கள்!
---------------------------------------------------------------------------
உங்களுடைய முத்துக்களையே (வரிகளையே) மாலையாகக் கோர்த்துவிட்டேன்.

நன்றாக இருக்கிறதா?

சிவமுருகன் said...

KRS அருமையான விளக்கம், தேவியர் வணங்கும் தேவியை வணங்குவோம்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// SP.VR.SUBBIAH said...
தாமரைக் கண்களைக் கொண்டவளே
சிரித்த, சந்திர முகத்தவளே,
கலைமகளால், மலைமகளால் இந்திராணியால்
அன்புடன் அர்ச்சிக்கப் பெற்றவளே
விருஷபாசலமலை நாயகனின் மனம்கவர்ந்தவளே
காருண்யலெட்சுமியே! காலை வணக்கங்கள்!

உங்களுடைய முத்துக்களையே (வரிகளையே) மாலையாகக் கோர்த்துவிட்டேன்.
நன்றாக இருக்கிறதா?//

இருக்கிறதா"வா"????
அருமையா இருக்கு வாத்தியார் ஐயா!
எளிய சொற்களை அப்படியே போட்டு இருக்கீங்க! மிக்க நன்றி!
//சிரித்த, சந்திர முகத்தவளே//
ஒரே லைன்ல அழகா கோர்த்துட்டீங்க!!

உண்மை தான் ஐயா!
"மாமலராள் நோக்குண்டாம்" - கணபதியான் பாடல்
"வீரலட்சுமிக்கு விரு்ந்துணவாக" - கந்தன் கவசம்
இப்படி கணபதி, முருகன் பாடல்களிலும் அன்னை அழகுடன் உலா வருகிறாள்!

நா.கண்ணன் said...

உங்களுக்கு இதமாகவும், தெளிவாகவும் சொல்லத் தெரிகிறது. வாழ்த்துக்கள். அன்னையின் சந்நிதியையை 'தாயார் சந்நிதி' என வழங்கும் முறை அழகானது!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//சாத்வீகன் said...
சுப்ரபாதத்தை பலமுறை கேட்டு வரிகளை அறிந்திருந்தாரும் பொருள் அறியாதிருந்தேன். அரவிந்த லோசனே, முக சந்திர மண்டலே ஆகிய வர்ணணைகள் இறைவனை குறித்து என்றே எண்ணியிருந்தேன்//

வாங்க சாத்வீகன்!
நானும் உங்களைப் போல் தான் பலநாள் நினைத்திருந்தேன்; முனைந்து உட்கார்ந்து எழுதும் போது நமக்கே அப்போ தான் நிறைய பொருள் புரிகிறது! எல்லாச் சுப்ரபாத சேவைக்கும் வாங்க!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஞானவெட்டியான் said...
அன்பு இரவி,
திருபள்ளியெழுச்சி களை கட்டுகிறது!
தொடருங்கள். இரசிக்கிறோம்; உருசிக்கிறோம்.//

வாங்க ஞானம் ஐயா!
தங்கள் அன்பும் ஆசியும், குருவைப் பற்றிக் கோபாலனைப் பற்றுவது போல!
தங்கள் ஞான முத்துக்களை இங்கும் தர சத்சங்கம் சார்பா வேண்டுகிறோம்.

நாமக்கல் சிபி said...

தாமரை சூரியனைப் பார்த்தும் மலர்வதை போல நாராயணனை கண்டதும் அவள் இமைகள் தானாக திறக்கிறது என்று வைத்துக் கொள்ளலாமா?

நாமக்கல் சிபி said...

//விருஷப+அசலம்=விருஷப மலை; விருஷபன் என்ற ஒரு அசுரனின் நினைவாக! அசுரனின் பேரில் பெருமாளுக்கு மலையா? இது தனிக் கதை. தெரிந்தவர்கள் யாரேனும் சொல்லுங்கள்!
//
இந்த கதையும் சொல்லுங்களேன்!!!

Seemachu said...

நல்லா இருக்கு.. பிடிச்சிருக்கு..
தயவு செய்து விடாமல் தொடருங்கள்..

வாழ்த்துகள்...
சீமாச்சு..

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//சிவமுருகன் said:
KRS அருமையான விளக்கம், தேவியர் வணங்கும் தேவியை வணங்குவோம்.//

வாங்க சிவமுருகன்! கார்த்திகை தீப வாழ்த்துக்கள்!

தேவியர் வணங்கும் தேவியை வணங்குவோம்! முப்பெருந்தேவியர் ஒருவரோடு ஒருவர் கொள்ளும் நட்பை, சுலோகங்கள் அருமையா காட்டுகின்றன!

சினிமாவில் தான் சண்டை எல்லாம்:-)) ஜனரஞ்சகத்துக்காக!

enRenRum-anbudan.BALA said...

//தவ சுப்ரபாதம் அரவிந்த லோசனே
பவது பிரசன்ன முக சந்திர மண்டலே
விதி சங்கரேந்திர வனிதா அபிர் அர்ச்சிதே
விருஷ சைலநாத தயிதே தயாநிதே
//
கண்ணபிரான்,
சுப்ரபாதத்தில் நான் மிகவும் விரும்பும் ஸ்லோகம் இது ! அழகான விளக்கத்திற்கு நன்றி.
எ.அ.பாலா

துளசி கோபால் said...

'அவள்'தான் எல்லோருக்கும் அம்மா. மகா பெரிய அம்மா.
ஆ( யா)ருயிருக்கும் அம்மா. அதால்தானே 'தாயார்'ன்னே சொல்றோம்.

காலையில் ஒருக்காப் படிச்சுட்டு ஓடிப்போயிட்டேன். இப்பத்தான் நிதானமா
இன்னும் ரெண்டு தடவை படிக்க முடிஞ்சது.

நல்லா எழுதறீங்க. அருமை.

( இங்கே நியூஸியில் சூரியன் வந்தபிறகும், ஏன் பலசமயம் நடுப்பகலில் கூட நிலவைப்
பார்க்க முடிகிறது) அம்மா எங்களை அங்கிருந்து பார்க்கிறார்ன்னு வச்சுக்கறேன்:-)

குமரன் (Kumaran) said...

கருணைக்கடல் அன்னையை எத்தனை முறை போற்றினாலும் தகும். அரவிந்த லோசனனுக்கு ஏற்ற அரவிந்த லோசனை. அடியார்களைக் கருணையுடன் நோக்கியே மனத்திலிருக்கும் கருணை கண்களிலும் தெரியும் வண்ணம் தாமரை வண்ணம் கொண்டவை இறைவன் இறைவியின் திருக்கண்கள்.

மகளிர் அன்னையை வணங்குவது இயல்பு. தேவாசுர மானிடப் பெண்கள் வணங்குவது மட்டும் இன்றி முதல் மூவர் எனப்படும் பிரமன், சங்கரன், இந்திரன் இவர்களின் தேவியரும் அன்னையை வணங்குகிறார்கள்.

யாதும் மறுக்காத மலையப்பா - உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

SK said...

கிருத யுகத்தில் வ்ருஷபாசுரன் என்னும் ஒரு அசுரன் ஏழு மலைகளில் ஒரு மலையைக் கைப்பற்றி அதில் முனிவர்கள் அனைவரும் அஞ்சும் வண்ணம் ஒரு கொடிய யாகத்தை 5000 ஆண்டுகள் விடாமல் செய்தான்.

ஒவ்வொரு நாள் யாக முடிவிலும் தன் தலையை அறுத்து ஒரு மலருடன் யாகத்தில் போட்டான்.

அவன் தலை மீண்டும் முளைத்தது.

திருமால் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் எனக் கேட்க, அவன் விநோதமான ஒரு வரம் கேட்டான்.

திருமாலுடன் போர் புரிய வேண்டும் என்பதே அது!

திருமாலும் அதற்கு இணங்க, இருவருக்குமிடையே கடும் போர் நிகழ்ந்தது.

இறுதியில், மஹாவிஷ்ணு தன் சுதர்சன் சக்கரத்தைப் பிரயோகித்து, அவனை அழித்தார்.

சுதர்சன சக்கரத்தால் அழிக்கப்படுபவர், அழியாமல், திருமாலையே போய்ச் சேர்ந்தடைவர் என்பது தெரிந்தே இம்மாதிரி வரம் கேட்டிருக்கிறான் அவன்!

திருமாலும் அவன் வாழ்ந்த மலையையே வ்ருஷபாத்ரி என்னும் பெயரிட்டு வழங்குமாறு, கிருத யுகத்தில் அருளினாராம்.

இதுவே சுருக்கமாக இந்த வ்ருஷபாத்ரி மலை பற்றிய புராணம்!

**********

மூடி விரியும் தாமரை, அல்லி போன்றவற்றை அதே போல் மூடி விரியும் கண்களுக்கு உதாரணமாகச் சொன்னாரோ!

அதே போல், தோன்றி மறையும் நிலவையும், சூரியனையும் கண்களுக்கு சொல்லுவர்.

கண்ணின் உருவன்ம் போல் இருப்பதால், மீன் வந்ததோ?

வல்லிசிம்ஹன் said...

ரவி.
மிகவும் அருமை. இப்படி எல்லோரையும் சேர்த்து சேவிக்க வைத்தீர்கள்.
ஆண்ட்டள் திருப்பாவைக்கு முன்னால்
இந்தப் பதிவும் தாயார் மூலமாகப் பெருமாளை அடைய
வழி சொல்கிறது.நன்றி.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

முதலில் SK ஐயா
அவர்களுக்கு நன்றி!

அழகாச், சுருக்கமா, விருஷாபாசுரன் கதையைச் சொல்லியிருக்கீங்க ஐயா!
கூடவே அருமையான ஒரு கருத்தும் சொல்லியிருக்கீங்க! சக்கரப் பிரோயகத்தால் நற்கதி கிடைக்கும் என்று!!
புறப்பட்ட சக்கரம் அழிக்காமல் திரும்பியும் வந்துள்ளது; தனிப் பதிவில் சொல்கிறேன்!

விருஷாபாசுரன் நரசிம்ம உபாசகனும் கூட; அவன் தலை காளைத் தலை (ரிஷபம்)! அதனால் தான் விருஷாபாசுரன்!

பாலாஜி - நீங்க கேட்ட மாத்திரத்தில் கதை எப்படிக் கிடைக்குது பாருங்க, உங்களுக்கு! அதுவும் SK ஐயா சொல்ல, நாம் எல்லாரும் கேட்பதுன்னா எவ்வளவு சுவை!!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நா.கண்ணன் said...
உங்களுக்கு இதமாகவும், தெளிவாகவும் சொல்லத் தெரிகிறது. வாழ்த்துக்கள். அன்னையின் சந்நிதியையை 'தாயார் சந்நிதி' என வழங்கும் முறை அழகானது!//

கண்ணன் சார்! மிக்க நன்றி!
தாயார் என்று கூப்பிடும் போது இன்னும் நெருக்கமாகிறது! எனக்கும் தாயார் என்று தான் அன்னையை அழைக்கப் பிடிக்கும்! "என்னைப் பெற்ற தாயார்" என்றே ஒரு திருநாமம், திவ்யதேசத்தில்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வெட்டிப்பயல் said...
தாமரை சூரியனைப் பார்த்தும் மலர்வதை போல நாராயணனை கண்டதும் அவள் இமைகள் தானாக திறக்கிறது என்று வைத்துக் கொள்ளலாமா?//

பாலாஜி, லவ் ஸ்டோரி எழுதி எழுதி, உங்களுக்குக் கற்பனை பிச்சிக்கிட்டு போகுது! :-))) ச்ச்ச்சும்மா...
கீழே பாருங்க! SK ஐயாவும் இதற்கு அழகா சொல்லி இருக்கார்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Seemachu said...
நல்லா இருக்கு.. பிடிச்சிருக்கு..
தயவு செய்து விடாமல் தொடருங்கள்..

வாழ்த்துகள்...
சீமாச்சு.. //

நன்றிங்க சீமாச்சு! குழந்தை C-program எழுதுகிறாளா?:-)))
தங்கள் வாழ்த்துக்களோடு நிச்சயம் தொடர்கிறேன்!

ஏதாச்சும் புரிவது கடினமா எழுதினேன்னாலும் தயங்காம சொல்லுங்க!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

enRenRum-anbudan.BALA said...
//தவ சுப்ரபாதம் அரவிந்த லோசனே
சுப்ரபாதத்தில் நான் மிகவும் விரும்பும் ஸ்லோகம் இது ! அழகான விளக்கத்திற்கு நன்றி//

வாங்க பாலா! நீங்க விரும்பும் சுலோகத்துக்குப் பொருள் சொன்னதில் அடியேனுக்கும் மகிழ்ச்சியே!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//துளசி கோபால் said...
மகா பெரிய அம்மா.
ஆ( யா)ருயிருக்கும் அம்மா.//

டீச்சர் இப்படி செந்தமிழ்ச் சிலேடையில் (ஆ(யா))ன்னு பின்னறீங்க போங்க!
டீச்சர்னா சும்மாவா?

//இங்கே நியூஸியில் சூரியன் வந்தபிறகும், ஏன் பலசமயம் நடுப்பகலில் கூட நிலவைப்
பார்க்க முடிகிறது) அம்மா எங்களை அங்கிருந்து பார்க்கிறார்ன்னு வச்சுக்கறேன்:-)//

அடடே? அது எப்படி நடுப்பகலில்? மேற்கில் தெரியும் நிலா???

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குமரன் (Kumaran) said...
அரவிந்த லோசனனுக்கு ஏற்ற அரவிந்த லோசனை.
அடியார்களைக் கருணையுடன் நோக்கியே மனத்திலிருக்கும் கருணை கண்களிலும் தெரியும்//

அருமையான சிந்தனை, குமரன்!
தயா சிந்து, இதயத்தில், கண்களில், கைகளில், திருப்பாதங்களில், அப்பறம் மோவாயில்!

//உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு//

தயா சாகரி = கருணைக் கடல்
ஆமாம், "ஏதும்" தர அவள் இருக்க, குறையும் உண்டோ?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//தேவாசுர மானிடப் பெண்கள் வணங்குவது மட்டும் இன்றி முதல் மூவர் எனப்படும் பிரமன், சங்கரன், இந்திரன் இவர்களின் தேவியரும்//

குமரன், தனி மடலில் நீங்களும், ஜெயஸ்ரீயும் "வனிதாபிர்" சொல்லுக்குப் பொருள் சொன்னவாறு மாற்றி விட்டேன்! நன்றி!

முதலில்
வனிதா+அபிர்=பெண்கள்+விருப்பத்துடன் அர்ச்சிக்கிறார்கள் என்று தான் கொண்டேன்!(அபிர்=அபிலாஷை=விருப்பம்) என்று!

பின்னர் அபிர் என்றால் "உடன்" என்று பொருள் சொன்னதால் "இப்பெண்கள் எல்லாருடனும் சேர்ந்து அர்ச்சிக்கிறார்கள்" என்று மாற்றி விட்டேன்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//SK said: மூடி விரியும் தாமரை, அல்லி போன்றவற்றை அதே போல் மூடி விரியும் கண்களுக்கு உதாரணமாகச் சொன்னாரோ!

அதே போல், தோன்றி மறையும் நிலவையும், சூரியனையும் கண்களுக்கு சொல்லுவர்.//

ஆமாம் SK ஐயா,
இறைவன் திருக்கண்களுக்குச் சூரியனையும் சந்திரனையும் சொல்வது வழக்கம், பல தத்துவ நோக்குகளில்!
சிவனாரின் மூன்றாவது கண்ணுக்கு, அக்கினியைச் சொல்லுவர்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
இப்படி எல்லோரையும் சேர்த்து சேவிக்க வைத்தீர்கள்.
ஆண்ட்டள் திருப்பாவைக்கு முன்னால்
இந்தப் பதிவும் தாயார் மூலமாகப் பெருமாளை அடைய
வழி சொல்கிறது.நன்றி.//

வல்லியம்மா, பனித் தூறல் போதுமா?:-)
எல்லாரும் சேர்ந்து சேவிக்கத் தானேம்மா, சுப்ரபாதம்! குழுவாகப் பாடும் போது சுகமே தனி!

நாமக்கல் சிபி said...

//பாலாஜி - நீங்க கேட்ட மாத்திரத்தில் கதை எப்படிக் கிடைக்குது பாருங்க, உங்களுக்கு! அதுவும் SK ஐயா சொல்ல, நாம் எல்லாரும் கேட்பதுன்னா எவ்வளவு சுவை!!//

SK ஐயாவிற்கு நன்றிகள் பல. இதை என்னை கேட்க தூண்டிய உங்களுக்கும் நன்றி!!!

//பாலாஜி, லவ் ஸ்டோரி எழுதி எழுதி, உங்களுக்குக் கற்பனை பிச்சிக்கிட்டு போகுது! :-))) ச்ச்ச்சும்மா...
கீழே பாருங்க! SK ஐயாவும் இதற்கு அழகா சொல்லி இருக்கார்!//
ஆஹா... இது பக்தியை வைத்துதான் சொன்னேன்...

இதெல்லாம் கவிதை எழுதுபவர்களுக்குத்தான் தோன்றும் கதை எழுதுபவர்களுக்கு இல்லை :-)

சுப்ரபாதம் (தமிழில்):

ஒலிச் சுட்டிகள்!

முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் - நித்ய ஸ்ரீ பாடுவது (Windows Media Player)

நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com
Pics: tirumala-tirupati.com

சுப்ரபாதம் (மூலம்):

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP