தமிழுக்காக, சுப்ரபாதம் பாதியில் நிறுத்தம்!
மார்கழி மாதம் தொடங்கியது! (Dec-16-2006);
தமிழுக்காக, சுப்ரபாதம் பாதியில் நிறுத்தப்பட்டது!
எங்கு?... தமிழ் அறிஞர் ஒருவரின் வீட்டிலா? இல்லை....
தமிழக அரசு ஏதாச்சும் ஆணை பிறப்பித்து உள்ளதா?? இல்லை! அதெல்லாம் இல்லை!
இது காலம் காலமாக விரும்பிச் செய்யப்பட்டு வரும் ஒரு வழக்கம்! எங்கு?
திருமலை திருப்பதியில்!
அதனால், இங்கு அடியேன் வலைப்பூவிலும் சுப்ரபாதப் பதிவு, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் படுகிறது!
ஏன் இப்படி?
ஆண்டாளுக்குப் பெருமை சேர்க்க; தமிழுக்குப் பெருமை சேர்க்க!
திருமலையில் ஒவ்வொரு இரவும் பள்ளியறை (ஏகாந்த) சேவையில், போக ஸ்ரீநிவாசனைத் தொட்டிலில் கிடத்துவது வழக்கம்!
ஆனால் மார்கழியில் மட்டும், கண்ணனைக் கிடத்துகிறார்கள்!
மறுநாள் காலையில், நம் ஆண்டாள் கண்ணனை எழுப்பிப் பாட்டு இசைக்கி்றாள்! திருப்பாவை முப்பது பாடல்களும் தினமும் பாடுகிறார்கள், வேங்கடவனின் முன்பு! அதுவும் பூசையின் முதல் பாட்டே, கோதையின் தமிழ்ப் பாட்டு தான்!
இப்படி தமிழுக்குப் பெருமை சேர்க்க, ஏற்பாடுகள் செய்தது யார் தெரியுமா?
எம்பெருமானார், உடையவர் என்றெல்லாம் வைணவர் உலகம் கொண்டாடும் இராமானுஜர் தான் இவ்வாறு செய்தது!
இதைக் திருமலைக் கோவில் ஒழுகு விதியாகவே ஏற்படுத்தினார்! திருப்பாவை மீது அவருக்கு அவ்வளவு பாசம்! திருப்பாவை ஜீயர் என்ற ஒரு பெயரும் அவருக்கு உண்டு!
திருப்பாவை முழுவதும் பாடிய பின் தான், அவனுக்கு முதல் ஆரத்தி காட்டுகிறார்கள்!
நாமும் பாடலாமா? மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்...
மார்கழியைத் தனுர் மாதம் என்றும் சொல்லுவார்கள்!
மாதங்களில் நான் மார்கழி என்று கண்ணன் கீதையில் மொழிகிறான்!
அவனைக் காதலித்து, அவனில் ஈடழிந்து,
அவன் வாய்ச்சுவை எப்படியோ என்று வெண் சங்கைப் பார்த்துக் கேட்கிறாள் ஒரு பேதை! அவள் பெயர் கோதை!
அந்தக் கோதை அவனை அடைய நோன்பு இருக்கிறாள், இந்த மார்கழியில்! வெறுமனே நோன்பு இருந்தால் அவளோடு கதை முடிந்து விடுமே!
அப்புறம் நாம் எல்லாம் எப்படிக் கடைத்தேறுவதாம்?
அதனால் பாட்டு பாடி நோன்பு இருக்கிறாள்! அவள் எண்ணியது சரி தான்!
இப்போது நமக்கும் அந்தப் பாட்டு கிடைத்து விட்டது அல்லவா?
ஐயைந்தும் (5*5) + ஐந்தும்(5) =25+5 = 30 பாடல்கள்; திருப்பாவை!
ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒவ்வொரு பொருள் தோன்றும்!
பல ஆச்சாரியர்களும், குருமார்களும், புலவர்களும், கவிஞர்களும் இதற்கு உரை எழுதி உள்ளார்கள்!
அப்படியும் முழுப் பொருளைக் காண முடிந்ததா? அறிதோறும் அறியாமை கண்டற்றால்!
2004 இல், நண்பர் தேசிகன், தினம் ஒரு பதிவு தந்தார்
2005 இல், தோழர் ஜி.இராகவன், தினம் ஒரு பதிவு தந்தார்
குமரனும், கோதைத் தமிழமுதத்தை அப்போதும், இப்போதும் தந்து கொண்டு இருக்கிறார்.
மீண்டும் படித்துச் சுவைப்போம் அவற்றை!
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு!
நம்மை வம்புக்காக இந்தப் பூமி சுமந்தால்....ச்சே நன்றாகவா இருக்கும்?
வாருங்கள், பாவைப் பாடல்களை, மீண்டும் வாசிப்போம்!...
(சுப்ரபாதம், மீண்டும் தை மாதம் துவங்கும்!) .....
அது வரை,
1. கோதை கண்ட அவதாரங்கள், திருப்பாவையில் - இயற்கை, உணவு, விஞ்ஞானம், வானவியல் என்று சிறப்புக் கண்ணோட்டப் பகுதிகளாக வாரம் ஒரு முறையாவது, மாதவிப் பந்தலில் அடியேன் இட முயல்கிறேன்!
2.௧ண்ணன் பாட்டு வலைப்பூவிற்கு அன்பர்கள் பலர், பாடல்கள் அனுப்பி உள்ளனர்.
ஞானவெட்டியான் ஐயா,
மதுமிதா அக்கா,
பெங்களூரில் இருந்து சுதா,
சாத்வீகன்,
பிரேம்குமார் சண்முகமணி,
பாலராஜன் கீதா
இன்னும் பலர் அனுப்பி உள்ளனர். கூட்டு முயற்சியின் சிறப்பே தனி!
இவர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி! அதோடு குமரன், பாலாஜி, அடியேன்.
அந்தப் பாடல் மலர்களை எல்லாம் ஒவ்வொன்றாய்த் தொடுத்து, தினம் ஒரு மாலையாக கண்ணன் பாட்டில் இட எண்ணம்!
பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை - பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு!
நாமும் தினம் ஒன்றாய் இந்த மார்கழியில் தொடுத்துக் கொடுப்போம்!
என்ன, சரி தானே நண்பர்களே? தினம் ஒரு மாலைக்கு இங்கே செல்லுங்கள்: கண்ணன் பாட்டு
26 comments:
தகவலுக்கு நன்றி. ராமாநுஜர் தன்னை திருப்பாவை ஜீயர் என்று அழைக்கவே விரும்பினார். ( என் பதிவு இன்னும் ரெடியாகவில்லை :-).
நன்றி.
தேசிகன்
மார்கழி மதிநிறைந்த நன்னாளில் தமிழிசைத்து திருவெங்கடவனை துயிலெழுப்பும் செய்தி எனக்கு புதிது..
கோதையின் தமிழை தங்கள் பக்கங்களில் காண காத்திருக்கிறேன்.
நன்றி.
சாத்வீகன்
அநத்யயன காலம் என்று வேதஙகளை ஓதுவதையும் இந்த மாதத்தில் நிறுத்தி வைப்பார்கள் இல்லையா இரவிசங்கர்? வைகுண்ட ஏகாதசியைத் தொட்டு அநத்யயன காலம் என்று தெரியும். ஆனால் என்று தொடங்கி என்று முடியும் என்று தெரியாது.
மார்கழியில் திருமலையில் சுப்ரபாதம் நிறுத்தப்படும் என்பதும் புதிய செய்தி.
இரவிசங்கர். தங்களுக்கு ஒரு தனிமடல் அனுப்பியிருக்கிறேன். பார்த்தீர்களா?
திருப்பாவையில் 30 பாசுரங்கள் மட்டும் அல்ல, 31ம் இருக்கிறது. தை முதல் நாள் பாடுவதற்க்காக.
"தையொரு திங்கள் ..." என்று தொடங்கும். முழு பாட்டும் சரிவர ஞாபகம் வரவில்லை. யாருக்கேனும் தெரிஞ்தால் எழுதுங்கள்.
ஆஹா! இனி தினமும் மதி நிறைந்த நன்னாளா? ஒரு மாதத்திற்கு!
அதிகாலை எழுந்து, நீராடி, மார்கழிப் பனியை அனுபவித்தவாறே மாயவனின் புகழைத் தமிழில் பாடி ....
ஆஹா! அந்த சுகமே தனிதான் அல்லவா கே.ஆர்.எஸ் அவர்களே!
இராமானுஜரின் தமிழ்ச் சேவை மண்ணுளவும் போற்றற்குரியது. பரனூர் அண்ணா சொல்லுவார், பத்ரிகாசலத்தில் ஒரு பண்டா (புஜாரி) தமிழ்ப் பாசுரம் பாடிக் கொண்டிருந்தான் என்று! தாய்லாந்தில் திருப்பாவை பாடப்படுவதாக ஒரு வலைஞர் முன்பு பதிப்பித்து இருந்தார்.
தமிழ் முன் செல்ல, திருமால் பின் செல்ல, பின் வேதம் செல்லும் அமைப்பை வைணவ உற்சவங்களில் மட்டுமே காணமுடியும். சிதம்பரத்தில் இன்னும் தமிழ் நுழைய தடுமாறுவதை நோக்கும் போது 'திருப்பாவை ஜீயரின்' தொலை நோக்கு புரிகிறது!
நிறுக்தம்' தலைப்பு நெஞ்ஞில் அடித்தது
உறுத்தலுடன் சற்று உள்ளே வந்தேன்
நிறுத்தம் மார்கழி நிறைவு வரைக்கும் - என்ற
அறிவிப்பைக் கண்டேன் :ஆனந்தம் கொண்டேன்!
ஆண்டாள் என்றவுடன் தேசிகன் சார், முதல் ஆளாய் வந்து நிற்கிறார்! :-))
வாங்க சார்! முதல் வருகை என்று நினைக்கிறேன்! நல் வரவு!
//ராமாநுஜர் தன்னை திருப்பாவை ஜீயர் என்று அழைக்கவே விரும்பினார்.//
ஆமாம் தேசிகன்; இதன் கதையை 18 ஆம் நாள் இடுகிறேன்! உந்து மத களிற்றன்!
//என் பதிவு இன்னும் ரெடியாக வில்லை//
காத்து இருக்கிறோம்! :-)
//சாத்வீகன் said...
மார்கழி மதிநிறைந்த நன்னாளில் தமிழிசைத்து திருவெங்கடவனை துயிலெழுப்பும் செய்தி எனக்கு புதிது..//
உண்மை தாங்க சாத்வீகன்; அதனால் தான் பலர் அறியத் தர அடியேன் ஆசை!
// குமரன் (Kumaran) said...
இரவிசங்கர். தங்களுக்கு ஒரு தனிமடல் அனுப்பியிருக்கிறேன். பார்த்தீர்களா?//
குமரன் பார்த்தேன்; மிக்க நன்றி! :-)
ரவி,
வணக்கம்.
தெரியாத ஒரு விடயத்தைக் கேட்க விரும்புகிறேன். குறை நினைக்காது பதில் தருவீர்கள் என நம்புகிறேன்.
ஸ்ரீநிவாசன் என்றால் எக் கடவுள்? கிருஷ்ணரின் அவதாரமா?
மிக்க நன்றி.
நல்ல நல்ல தகவல்களையும் தமிழையும் தரும் உங்களுக்கு நாராயணன் நலம் தரட்டும். நன்றி.
குமரன் தங்கள் அநத்யயன கேள்வி, மற்றும் வெற்றி, தங்கள் கேள்விக்கும், பாஸ்டனில் வலைப் பதிவர் மாநாட்டில் இருந்து பதில் சொல்ல முனைகிறேன்! :-)
வெற்றி
//தெரியாத ஒரு விடயத்தைக் கேட்க விரும்புகிறேன். குறை நினைக்காது பதில் தருவீர்கள் என நம்புகிறேன்//
இதில் குறை நினைக்க என்னங்க இருக்கு, வெற்றி? தாராளமாய்க் கேளுங்க! "கேள்வியே வேள்வி!"
சுருக்கமாய்
ஸ்ரீநிவாசன்=
ஸ்ரீ(லட்சுமி)+நிவாசன்(வசிப்பவன்);
திருமகள், அவன் மார்பில் தங்கும் திருவினன்; திருமகள் தலைவன்;
அவன் திருமால் தான்!
ராமன், கண்ணன் என்று பல அவதாரங்கள் அவன் செய்தவை.
திருமலையில் இந்தப் பெயர் கொண்டு எம்பெருமான் மிகப் பிரதானமாக அழைக்கப்படுகிறார், அவ்வளவே!
எனவே ஸ்ரீநிவாசன் என்பது கண்ணனின் அவதாரம் என்று கொள்வது பொருள் பயக்காது!
கண்ணன் தான், ஸ்ரீநிவாசன் என்றும் அழைக்கப்படும் திருமாலின் அவதாரம்!
திருவேங்கடத்தில் ஸ்ரீநிவாசன் என்ற சிறப்புப் பெயரில் அழைக்கப்படுகிறார்!
எப்படி வைத்தீஸ்வரன் கோவிலில் முருகப் பெருமானை, முத்துக் குமார சுவாமி என்று சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கிறார்களோ,அதே போலத் தான்! திருமாலை, ஸ்ரீநிவாசன் என்று திருப்பதியில் மிகச் சிறப்பாக அழைக்கிறார்கள்!
தமிழில் எழுதும் போது சீனிவாசன் என்று ஆகி விடுகிறது.
சீனியாய் சர்க்கரையாய் நம் உள்ளத்தில் இனிப்பாக வசிப்பவன் என்று கொள்ள வேண்டியது தான் :-))
ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தன
கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தன யோக த்ரிஷ்யாம்
சாக்ஷாத் தமாம் கருணயாம் கமலாபி வாம்யாம்,
கோதாம்!
அனன்ய சரண்யஹ
சரணம் பிரபத்யே!
சதமக மணி நீலா சாரு கல்ஹார ஹஸ்தா!!
ஸ்தன பர நமிதாங்கி !
ஷாந்த வாத்ஸல்ய சிந்துஹூ!
விஷ்ணு சித்தன் மகளைக் கொண்டாடுவோம்.
அரங்கனாதனின் செல்லப் பெண்டாட்டியை ஏத்திப் பாராட்டுவோம்.
தாயே! நாடு சிறக்க நல்லார் வளம் பெற நீயே துணை.
நன்றி ரவி.
நல்ல ஒரு விருந்து காத்திருக்கிறது.கண்ணபிரான் தங்கம் ஒன்றாக இருந்தாலும் அதைசங்கிலியாகவும்,வளையலாகவும்,தோடாகவும் போடும்போது புதுப்பொலிவொடு அணிந்தவருக்கு அழகுசேர்க்கும். அதுபோல திருப்பாவை விளக்கம் குமரன் ,ஜி.ரா கண்ணபிரான் யார் அளித்தாலும் படிக்கத்திகட்டாது புதுப்புது கோணத்தில் கருத்துக்கள் உருவாகலாம்
அருமையா எழுதறீங்க, திருப்பாவை முப்பதுக்கும் அர்த்தத்தோடு கூடிய பதிவைச் சீக்கிரமே எதிர்பார்க்கிறேன். உங்கள் நோக்கமும் சரி, எழுத்தும் சரி, உன்னதமாக இருக்கிறது. உங்கள் படைப்புக்கள் புத்துணர்ச்சியைத் தருகிறது என்றால் மிகை இல்லை.
//ஏன் இப்படி?
ஆண்டாளுக்குப் பெருமை சேர்க்க; தமிழுக்குப் பெருமை சேர்க்க!//
ரவி...!
உங்களை நினைத்தாலே பெருமையாக இருக்கு ! நீங்கள் தமிழுக்காக எடுக்கு சிரத்தைக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
திருவெம்பாவை பதிவில் கவனம் போனதால் இதைப் படித்ததும் உடனே வந்து பின்னூட்டம் இட முடியாமற் போனதற்கு மன்னிக்கவும்.
சுப்ரபாதம் வேறு வகையில் பாடப் போகிறீர்கள்!
மிக்க மகிழ்ச்சி!
எனது படிவிற்கு சுட்டி கொடுத்ததற்கும் மிக்க நன்றி!
இன்னும் பாஸ்டனில் தான் உள்ளேன், வலைப்பதிவர் மாநாடு முடிந்து!
இரவு நியூயார்க் வந்த பின் மற்ற பின்னூட்டங்களைப் பதிப்பிக்கிறேன்!
thiru krs,
arithorum ariyamai kandatral ...virivana vilakkam alithal padithu magizhvom.
suprabhathatheye thatrkaligamaga niruthi kannan i thuilezha cheyyum THIRUPPAVAI pattugal engum olikka Thiruppavai Jeern thiruvadigalai namaskarikum....adiyen sundaram.
நன்றி நண்பரே,
திரு தேசிகனோ, அல்லது தாங்களோ, குமரனோ, யாராவது ஒருவர் இராப்பத்து, பகல் பத்து உத்ஸவத்தினையும் பதிவிட வேண்டுகிறேன்.
மெளலி....
உங்க ஃபாண்ட் சைஸ் கண்ணுக்கு சோதனையாக இருக்கிறது. விசுவரூபம் வேண்டாம் ; )
பக்தர்களுக்காக எழுத்துருவை கொஞ்சம் பெரிதாக்க முடியுமா?
//Boston Bala said...
உங்க ஃபாண்ட் சைஸ் கண்ணுக்கு சோதனையாக இருக்கிறது. விசுவரூபம் வேண்டாம் ; )
பக்தர்களுக்காக எழுத்துருவை கொஞ்சம் பெரிதாக்க முடியுமா?//
பாபா,
பக்தர்களைச் சோதனை செய்வது தானே விளையாட்டு வாடிக்கை வேடிக்கை! :-)
இப்ப பாருங்க!
இந்த font போதுமா?
இன்னும் கொஞ்ச்ம் வேணுமா? :-)
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளில் திருப்பாவைப் பாக்கள் உள்ளத்தில் மலர்ந்து பூக்களாகி மணம் பரப்புவது மகிழ்ச்சி. ஆண்டாள்....திருக்கால்களால் திருவில்லி தாண்டாள். மற்றவரைக் கண்ணால் தூண்டாள். கண்ணனையன்றி வேண்டாள். ஆனாலும் உலகையே ஆளும் ஆண்டவனை ஆண்டாள். அந்தப் பாக்களை எத்தனை படித்தாலும் தமிழ் கற்றவர் இன்புறுவரெம்பாவாய்! வாழ்க. வளர்க.
//ஞானதேவன் said...
திருப்பாவையில் 30 பாசுரங்கள் மட்டும் அல்ல, 31ம் இருக்கிறது. தை முதல் நாள் பாடுவதற்க்காக.
"தையொரு திங்கள் ..." என்று தொடங்கும். முழு பாட்டும் சரிவர ஞாபகம் வரவில்லை. யாருக்கேனும் தெரிஞ்தால் எழுதுங்கள்.//
தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்,
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா,
உய்யவும் ஆங்கொலோ வென்றுசொல்லி
உன்னையு மும்பியை யும்தொழுதேன்,
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே
தைத் திங்கள் நாளில் இல்லத்தையும் முற்றத்தையும் நன்கு திருத்தி அழகு செய்வோம்! முன் மெழுகி, செம்மண் இட்டு இன்னும் அலங்காரங்கள் செய்வோம்!
காம தேவனும் அவன் சகோதரன் சாம தேவனும் என் மீது கருணை காட்டட்டும். அக்கினிப் பொறிகளை வீசிச் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் சக்கரத்தைத் தன் கையில் ஏந்தியுள்ளான் திருவேங்கடத்தான்! அவனுக்கே மனையாளாய் என்னை விதிக்கட்டும்!
(மார்கழி மாதம் நோன்பிருந்து
தை மாசம் கல்யாணப் பேச்சு இப்படித் தான் ஆரம்பிக்கிறது போலும்!)
Post a Comment