Saturday, February 10, 2007

சுப்ரபாதம்(6) - சேயோன் வணங்கிடும் மாயோன்!

தடைக் காலம் முடிந்தது! தை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தோடு! (அனத்யயன காலம்) ; அதனால், தமிழ் மறைகளுடன் சேர்ந்து கொண்டு, மீண்டும் சுப்ரபாதம் தொடக்கம்!

சென்ற பதிவில் இறைவன் திருவடிச் சிறப்பும், சப்தரிஷிகள் அவனைத் துயில் எழுப்புவதையும் கண்டோம்!
சரி, ரிஷிகளுக்கு அடுத்தது யார் வருவார்கள்?
அவர்கள் ஓதும் பிரணவத்துக்குப் பொருள் சொன்னவர்கள் தான் வருவார்கள்.
தமிழ்க்கடவுள் முருகன் - பெருமாளின் ஆசை மருகன்,
திருமலைக் கோவிலுக்கு வந்து, இறைவனைத் துதித்து, துயில் எழுப்புகிறான்!
சேயோன், மாயோன் சந்நிதிக்கு வந்து சேவிக்கிறான்.

திருமலையில் முருகப்பெருமான் தவம் செய்த தீர்த்தம் (நீர்வீழ்ச்சி) ஒன்று உள்ளது. போய் இருக்கிறீர்களா? குமாரதாரை என்று பெயர். சற்றுக் கடினப் பட்டு, நடந்து தான் போக முடியும். ஆனால் இயற்கை வளம் கொஞ்சும் அருவி.



su_img6supr6


(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)




பஞ்சானன ஆப்ஜபவ சண்முக வாசவாத்யா
த்ரைவிக்ரமாதி சரிதம் விபுதா ச்துவந்தி
பாஷாபதி படதி வாசர சுத்திமாராத்

சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்

பஞ்சானன = ஐந்து முகங்கள் கொண்ட சிவபெருமான்
சிவனாருக்கு வெளியில் தெரியக்கூடிய ஐந்து முகங்கள்; ஆறாம் முகம் யோக காலங்களில் மட்டும் வெளிப்படும். பெருமாளின் இருதயத்தில் "அஜபா" என்ற நடனம் புரிபவன் ஈசன். அந்த இதயலிங்கத்துக்குத் தான் இன்று திருவாரூர் ஆலயத்தில் வழிபாடு நடக்கிறது.

ஆப்ஜ பவ = தாமரை மேல் உள்ள பிரம்மா
ஆப்ஜ=தாமரை; தாமரைத் தலைவன் பிரம்மன் என்று பொருள்.
ஈசனைப் பஞ்சமுகன் என்று சொன்னது போல், இவரை நான்முகன் என்று சொல்லவில்லை பாருங்கள். ஏன்?
முகக் கணக்கால் விளைந்த பிணக்கால் - இவருக்கு ஐந்து முகம் போய் நான்முகம் ஆனது தனிக்கதை. அதனால் தான் செருக்கின் மூலமே வேண்டாம் என்று தாமரை நாயகன் என்று சொல்லிவிட்டார்.
தத்துவம் என்னவென்றால்: உயர் பொறுப்பில் உள்ளவர்கள், அந்தப் பொறுப்போடு கூடவே வரும் பெரும் அதிகாரம். அந்தப் போதையில் மூழ்கி விடாமல், தாமரை இலை மேல் நீராய் இருக்க வேண்டும் என்பதே.

சண்முக = ஆறுமுகக் கடவுள், முருகப் பெருமான்
முருகப்பெருமானுக்கும் எம்பெருமானுக்கும் அப்படி ஒரு உறவு, அன்னோன்யம்.
இது பற்றித் தனிப் பதிவே போடலாம்; மால் மருகன் என்று பல இடங்களில் கொண்டாடப் படுகிறான்.

திருச்செந்தூரில் அசுர வதம் முடிந்து, சிவபெருமானை நோக்கித் தவக்கோலம் கொண்டான் முருகன். போர்க்கோலம் போய் இப்போது தவக்கோலம்.
எஞ்சியுள்ள சில அசுரர்களோ, அவர்கள் உறவினரோ, பழி வாங்கப் புறப்பட்டால்?
பார்த்தார் பெருமாள்! தியானத்தில் உள்ள மருகனைக் காக்கத் தானே கடலுக்கும் அவனுக்கும் நடுவில் பள்ளி கொண்டு விட்டார்!
குலசேகரப்பட்டினம் என்ற ஊர், திருச்செந்தூருக்கு மிக அருகில்! செந்தூர் ஆலயத்திலேயே பெருமாளுக்குத் தனிச் சந்நிதி இதனால் தான்!

வாசவ ஆத்யா = அமரர் தலைவன் இந்திரன் - இவர்கள் எல்லாரும்
(வாசவன்=இந்திரன்)

எல்லாம் சரி, இவர்கள் எல்லாரும் ஏன் ஒரே கூட்டமாக, இங்கு வந்துள்ளார்கள்?


த்ரைவிக்ரமாதி = திரிவிக்ரமன் - வாமனன் - உலகளந்த பெருமாள்!
திருக்கோவிலூர் என்ற ஊருக்குப் போய் உள்ளீர்களா?
கதை கதையாகச் சொல்லலாம் அந்த ஊரைப் பற்றி.

உலகளந்த பெருமாள் திருக்கோலம்.
அவதாரங்களிலேயே நடுநாயகமான அவதாரம். இதுவரை உள்ள ஒன்பதில், ஐந்தாம் அவதாரம் இந்த வாமன-திரிவிக்ரம அவதாரம்.
இதற்கு முன்பு விலங்குகள். இதற்குப் பின்பு மனிதர்கள் என்று பகுத்துக் காட்டும் அவதாரம்.
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே என்பார் வள்ளலார். அப்படி நடுவிலே நின்ற நாயகன் திரிவிக்ரமப் பெருமாள்.

அழிவு, சம்காரம் என்பதே இல்லாத ஒரே அவதாரம் இது ஒன்று தான்!

திருக்குறளப்பன், இந்த முறை, திருவை மறைத்து விட்டு,
வெறும் குறளப்பனாக வந்தான்.
"தீக்குறளை சென்றோதோம்" என்று சொல் ஒரு சொல் பதிவில் வருகிறதே - அந்தக் "குறளை" அல்ல இது! இது குள்ள உருவாய் வந்த குறள்.
இந்த அவதாரத்தில் தான் பூமிக்கும் பல நன்மைகள் நடந்தன. அதில் மிக முக்கியமான ஒன்று, கங்கை ஆறு தோன்றியது!

அதனால் தான் இந்த அவதாரத்தை மட்டும், எல்லாச் சமயங்களிலும், மதங்களிலும் சிறப்பித்துக் கொண்டாடுகிறார்கள்.
கணபதியைப் போலவே குள்ள உருவம் வாமனம். முருகபக்தர் அருணகிரியும் வாமனனைப் போற்றிப் பாடுகிறார்.
சைவ, வைணவ, சாக்த இலக்கியங்கள் மட்டும் இல்லை, ஜைன-பெளத்த இலக்கியங்களிலும் இந்த அவதாரக் குறிப்பு காணப்படுகிறது!

1189lordvamana

மேலும், எந்தப் பிரிவினர் செய்யும் யாகத்திலும், மூன்று முறை இந்தத் திரிவிக்ரமனுக்கு அவிர்ப்பாகம் அளித்தே தான் யாகம் செய்ய வேண்டும் என்பது நியதி.
அது கணபதி ஹோமம் ஆகட்டும், லலிதா சண்டி ஹோமம் ஆகட்டும், ஈஸ்வரனின் மிருத்யுஞ்ஜய ஹோமம் ஆகட்டும், வைணவ சுதர்சன ஹோமம் ஆகட்டும், அவ்வளவு ஏன் - காபாலிகள் செய்யும் அகோர ஹோமங்கள ஆகட்டும்! அனைத்திலும் உலகம் காத்த திரிவி்க்ரமனுக்கு மும்முறை துதி வழங்கப்படும். அத்தனை பெருமை இவனுக்கு!

திருப்பாவையும் ஒரு யக்ஞம் தானே! அதனால் தான்,
முதல் பத்தில் = ஓங்கி உளகளந்த உத்தமன் பேர் பாடி
இரண்டாம் பத்தில் = அம்பரம் ஊடுஅறுத்து ஒங்கி உலகளந்த
மூன்றாம் பத்தில் = அன்றிவ் வுலகம் அளந்தாய் அடி போற்றி

என்று ஆண்டாளும் இவ்வாறே மூன்று முறை அவிர்ப்பாகம் அளிக்கின்றாள், வாமன மூர்த்திக்கு!

சரிதம் விபுதா ஸ்துவந்தி = அந்த வாமனச் சரிதத்தைச் சொல்லித், துயில் எழுப்ப வந்துள்ளனர்.
எப்பேர்ப்பட்ட பாவமாக இருந்தாலும் சரி, மனம் திருந்தும் எண்ணம் வந்தாலே போதும்! வாய் விட்டுக் கூறக்கூட வேண்டாம்! திருத்தி ஆட்கொள்ள திரிபுவனமும் கடந்து வருவான் என்பதைக் காட்டும் வாமன அவதாரம்.
அதனால் தான் பாவங்களை எரிக்கும் (வேங்+கடம்) மலை மேல் நிற்பவனுக்கு, இந்த அவதாரக் குறிப்பைச் சொல்லித் துயில் எழுப்புகின்றனர் சிவன், பிரம்மா, முருகன், இந்திரன் எல்லாரும்.



வாசர சுத்திமாராத் = அன்றைய நாள் கணக்கான பஞ்சாங்கத்தை
வாசரம்=நாள்; சோமவாசரம் என்றால் திங்கட்கிழமை. ஒவ்வொரு நாள் காலையிலும் அந்த நாளின் வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்று ஐந்து அங்கங்கள்.
இதை இறைவன் முன்னிலையில் ஒரு weather report (வானிலை அறிக்கை) போலப் படிப்பது இன்றும் திருமலையில் வழக்கம். பஞ்சாங்க சிரவணம் என்று பெயர்.

பாஷாபதி படதி = பல மொழிகளில் வல்லவரான பிரகஸ்பதி, படிக்கிறார்
பொதுவாக நாம் பேசும் போது கூட, "இவரு என்ன பெரிய பிரகஸ்பதியா?" என்று கேட்போம். அப்படி கல்வி கேள்விகளில் சிறந்தவர் இவர். அதனால் அவர் பாஷா பதி (மொழியின் பதி). தேவர்களின் குரு. இந்திரனுக்குத் தர்மத்தைச் சொல்லி அவனை நல்வழிப்படுத்துபவர்.

இப்படி எல்லாத் தெய்வங்களும் உன் சந்நிதிக்கு வந்துள்ளார்கள்.
சேஷாத்ரி சேகர விபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே, திருவேங்கடநாதா

தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்! திருப்பள்ளி எழுவாயாக!!
சு+ப்ரபாதம் = உனக்கும், அதனால் எங்களுக்கும் சுகமான காலைப் பொழுதாக மலரட்டும்.

----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

22 comments:

Unknown said...

கண்னபிரான்,

நீங்கள் மாயமாக போய்விட்டீர்கள் என்று வெட்டிபயல் பாலாஜி ஒரே கலாட்ட செய்துகொண்டிருக்கிறார்.நீங்கள் மாயோனாக திரும்பி வந்துவிட்டீர்களே?:)))

Unknown said...

தமிழ் சுப்ரபாதம் ரொம்ப நாளாக தேடிக்கொண்டிருந்தேன் கண்ணபிரான்.அதை தந்ததற்கு நன்றி.செவிகுளிர இனி அதை கேட்க வேண்டும்

குமரன் (Kumaran) said...

மிக அருமையாக பொருள் சொல்லியிருக்கிறீர்கள் இரவிசங்கர். ஒவ்வொரு சொல்லுக்கும் விளக்கமாக இருக்கிறது பொருளுரை. பல முறை படிக்கலாம்.

ஐந்து முகம் கொண்டவனும், நீரில் பிறந்த தாமரையில் (அப்பு + ஜ = அப்ஜ) பிறந்த (பவ) நான்முகனும், ஆறுமுகனும், இந்திரன் முதலான தேவர்கள் (ஆத்யா), திருவிக்ரம சரிதம் முதலிய (ஆதி) உன்னுடைய சரிதங்களையெல்லாம் சொல்லி மிகச் சிறந்த அறிவுடையவர்களாய் (விபுதா) துதிக்கிறார்கள். பஞ்சாங்கத்தை மொழிக்குத் தலைவன் படிக்கிறார். சேஷ மலைச் சிகரத்திலும் எங்கும் நிறைந்தவனே (விபு)! தங்களுக்கு இனிய நற்காலையாகட்டும்.

அருமையான பாடல். அற்புதமான பொருளுரை.

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர். இப்படி சொல்லாமல் கொள்ளாமல் விடுமுறை எடுத்துக் கொண்டீர்கள். உங்களைக் காணாமல் தமிழ் ஆன்மிக இணையம் இளைத்துப் போனது. மீண்டும் வந்தீர்கள். இனி நல்லுணவு பெற்று நலமுறும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//செல்வன் said...
கண்னபிரான், நீங்கள் மாயமாக போய்விட்டீர்கள் என்று வெட்டிபயல் பாலாஜி ஒரே கலாட்ட ய்து கொண்டிருக்கிறார்.நீங்கள் மாயோனாக திரும்பி வந்துவிட்டீர்களே?:))) //

வாங்க செல்வன்.
எல்லாம் "பாலாஜி" லீலை!
பணி மிகுதியால், சும்மா மூன்று வாரம் அடக்கி வாசித்தால், தலைவர் காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு போட்டு விட்டார்....

இனியும் பொறுத்தால் எங்கே தனிப்படை, பூனைப்படை எல்லாம் போட்டு விடுவாரோ என்ற அச்சம் தான்...அதான் ஓடியாந்துட்டேன் :-)

VSK said...

அஹோ வாரும் பிள்ளாய்!
வசைத்தமிழ் ஒன்றே படித்து
வாடியிருந்த தமிழ்மணத்தை
வாசமுள்ள நறுமலராய் மாற்றி
வாசகரின் மனம் குளிரவைத்த
வீச்சுத்தமிழ் வித்தகரே!
வருக வருக வருக!

விளக்கங்கள் அருமை!
எவ்வளவு கதைகள் இதுக்குள்ளே!
அத்தனையும் அசைபோட ஒரு வாரம் போதாது!
மிக்க நன்றி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தமிழ் சுப்ரபாதம் ரொம்ப நாளாக தேடிக்கொண்டிருந்தேன் கண்ணபிரான்.அதை தந்ததற்கு நன்றி.செவிகுளிர இனி அதை கேட்க வேண்டும்//

தமிழ் சுப்ரபாதம் - பலர் எழுதி, பலர் பாடியுள்ளார்கள் செல்வன். அனைத்துமே நன்றாகத் தான் இருக்கும். மெட்டும் அப்படியே அழகாக வரும்!

ஆனால் மூல நூலில் சொல்லப்பட்ட பல கருத்துக்கள் மிஸ்ஸிங்; அதனால் தான் எல்லாருக்கும் நன்கு அறிமுகமான சுலோகத்தையே பொருள் உரைக்க எடுத்துக் கொண்டேன்.

முதலில் வடமொழி நூலை இங்கு எடுக்க மனம் ஒப்பவில்லை. தமிழ்ப் பாசுர மேற்கோள்கள் மூலநூலில் நிறைய வரும்! அவை விடுபடாது இருக்கவே இந்த முயற்சியை எடுத்துக் கொண்டேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
நீரில் பிறந்த தாமரையில்
(அப்பு + ஜ = அப்ஜ)//

அழகான பதம் பிரிப்பு குமரன்; நன்றி.

//சேஷ மலைச் சிகரத்திலும் எங்கும் நிறைந்தவனே (விபு)//

விபு = வியாபு, சர்வ வியாபி
எங்கும் நிறைதல்; சரியாகச் சொன்னீர்கள்.
விபு = அரசன் என்ற பொருளும் உண்டு, விபூதி = செல்வம்

//அருமையான பாடல். அற்புதமான பொருளுரை//

நன்றி குமரன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
இரவிசங்கர். இப்படி சொல்லாமல் கொள்ளாமல் விடுமுறை எடுத்துக் கொண்டீர்கள். உங்களைக் காணாமல் தமிழ் ஆன்மிக இணையம் இளைத்துப் போனது. மீண்டும் வந்தீர்கள். இனி நல்லுணவு பெற்று நலமுறும்.//

ஆகா...
ஆன்மீகத் தமிழ்ப் பயிர் மேயாது அடியேன் தான் இளைத்துப் போனேன்!
அலுவல் பளுவும் பயணங்களும் சற்றே அதிகமாகப் போய்விட்டது!

தங்கள் கோதைத் தமிழ்,
SK ஐயாவின் ஆத்திகத் தமிழ்,
ஜிராவின் அருணைத் தமிழ்,
மற்றும் திராச ஐயா, வல்லியம்மா, கீதாம்மா, கண்ணன் சார் என்று பலர் பதிவுகள் பின் சென்று படிக்க வேண்டும்.

அடுத்த வாரம் இந்தியப் பயணம்/தமிழ்ப் பயணம் வேறு உள்ளது! :-))))
டீச்சர் போடுவது போல் பயணக் கட்டுரைகளை cache செய்து போட்டு விடுவது நல்ல டெக்னிக் தான்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//SK said...
அஹோ வாரும் பிள்ளாய்!//

"சற்றே விலகி இரும் பிள்ளாய்" என்ற பாடல் கேட்டுள்ளேன் SK ஐயா.
உங்கள் "வாரும் பிள்ளாய்" - இதுவும் இனிமை தான்!

தங்கள் செஞ்சொற் தமிழமுதம் இனி என்னால் நிறைய சுவைக்க முடியும்.

//விளக்கங்கள் அருமை!
எவ்வளவு கதைகள் இதுக்குள்ளே!
அத்தனையும் அசைபோட ஒரு வாரம் போதாது!//

நன்றி SK ஐயா!
சேயோன் முருகன் பெருமாளைத் துதிக்கும் பதிவில், நீங்கள் வந்தது வேலனே வந்தது போலத் தான்!

துளசி கோபால் said...

ஆஹா.வந்தாச்சா?
வாங்க வாங்க வாங்க( நானும் 3 முறை சொல்லிட்டேன்!)
ஏதோ போர்க்களத்துலே நுழைஞ்சதுபோல மனசு ரொம்ப சோர்ந்துபோய்
இருந்தது, 'இங்கே நாட்டு நடப்பைப் பார்த்து'.

கொஞ்சம் சாமியைப் பத்திப் படிச்சுத் தெம்பாக்கிக்கணும்.
நல்வரவு KRS

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//துளசி கோபால் said...
ஆஹா.வந்தாச்சா?
வாங்க வாங்க வாங்க//

ஆமாம் டீச்சர்,
வந்தாச்சு, வந்தாச்சு, வந்தாச்சு:-)

//நல்வரவு KRS//

நன்றி டீச்சர்!
அன்று வரவேற்றதும் நீங்களே!
இன்று வரவேற்றதும் நீங்களே!

ஷைலஜா said...

இப்படி ரங்கநாதர் போஸ்ல படுக்கற போட்டோ பாக்கறப்பவே நினச்சேன் தூங்கிப்போயிடப்போறீங்கன்னு:) நல்லவேலை(ளை) வெட்டிபயல் உறக்கம் கலையவச்சிட்டார்!அருமையா பொறுமையா அர்த்தம் சொல்லி இதேபோல பதிவுகள் வந்துட்டே இருக்கணும் ஆமா?:)
ஷைலஜா

செல்லி said...

ரவி
வந்திட்டீங்கல்ல, இனி கண்ணனுக்கு கான மழைதான்.
நல்லது,நல்லது நாமும் கேட்டு அதில் நனையலாம், அல்லவா.

எங்க வீட்டு பிறிஸ்பேன் முருங்கையையும் ஒரு முறை பார்த்துவிட்டு போங்களேன்.
நன்றி

வல்லிசிம்ஹன் said...

காணமல் போனவர்கள் பட்டியலில் நுழைந்துவிட்டீர்களே என்று கவலையாக இருந்தது.
குமரன்.ஜி.ரா, எஸ்கே சார் பட்டியலில் என்னைச் சேர்த்தீர்களே!

கடை அடியேனுக்கும் அடியேன் இடம் எனக்கு.
அருமையான விளக்கம் கொடுத்து நொந்து போயிருக்கும் உள்ளங்களுக்கு புது உற்சாகம் கொடுத்தீர்கள்.
வரணும் வரணும் வரணும்.திரிவிக்கிரமன் படம் அருமை.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஷைலஜா said...
இப்படி ரங்கநாதர் போஸ்ல படுக்கற போட்டோ பாக்கறப்பவே நினச்சேன் தூங்கிப்போயிடப்போறீங்கன்னு:) நல்லவேலை(ளை) வெட்டிபயல் உறக்கம் கலையவச்சிட்டார்!//

ரங்கா, ரங்கா....
இது என்ன கொடுமை!
திருவரங்கப்ப்ரியா என்னைக் கிண்டல் செய்யவில்லை! அப்பிடின்னா உன்னைத் தானே செய்கிறார்கள்? :-)))

அந்தக் கொடுமையை ஏன் கேட்கறீங்க ஷைலஜா..அலுவலகத்தில் தமிழ்ப் பணி செய்யவும் விடவில்லை; சரி ரங்கநாதர் போஸில் தூங்கவும் விடவில்லை:-))

//அருமையா பொறுமையா அர்த்தம் சொல்லி இதேபோல பதிவுகள் வந்துட்டே இருக்கணும் ஆமா?:)//

தங்கள் உத்தரவு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// செல்லி said...
ரவி
வந்திட்டீங்கல்ல, இனி கண்ணனுக்கு கான மழைதான்.
நல்லது,நல்லது நாமும் கேட்டு அதில் நனையலாம், அல்லவா.//

நன்றி செல்லி.

//எங்க வீட்டு பிறிஸ்பேன் முருங்கையையும் ஒரு முறை பார்த்துவிட்டு போங்களேன்//

வெறும் பார்த்து தானா?
முருங்கைக் கீரைப் பொரியல் சுவைக்க எல்லாம் தர மாட்டீர்களா?
சரி, அடியேன் அடுத்த வாரம் சென்னை! மை டியர் அம்மா...வாழை இலையில், காராமணிக் குழம்பும், முருங்கைக் கீரைப் பொரியலும்..ஓகேவா? :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
காணமல் போனவர்கள் பட்டியலில் நுழைந்துவிட்டீர்களே என்று கவலையாக இருந்தது.
குமரன்.ஜி.ரா, எஸ்கே சார் பட்டியலில் என்னைச் சேர்த்தீர்களே!//

ஆகா...பட்டியல் எல்லாம் ஒன்றும் இல்லை வல்லியம்மா...எல்ல்லாம் அந்தப் பாலாஜி விளையாட்டு!

//அருமையான விளக்கம் கொடுத்து நொந்து போயிருக்கும் உள்ளங்களுக்கு புது உற்சாகம் கொடுத்தீர்கள்.
வரணும் வரணும் திரிவிக்கிரமன் படம் அருமை. //

நன்றி வல்லியம்மா!

தி. ரா. ச.(T.R.C.) said...

வாரும் பிள்ளைப் பெருமாளே.வாரும்!
மார்கழியில் எல்லாரையும் எழுப்பிவிட்டு விட்டு களைப்பால் துயில் கொண்டிரோ?
ஆண்டவன் ஏன் இன்னும் அவதாரம் எடுக்கவில்லை இவ்வளவு அக்கிரமங்கள் நடந்தாலும் என்று கேட்பவர்களுக்கு சொல்லுவார்கள் பெரியவர்கள். பல ஹிரண்மயகசிபுகள் இருந்தாலும் இன்னும் ஒரு பிரகலாதன் மாதிரி ஒருவன் பிறக்கவில்லை என்பார்கள்.
அதுபோல நாங்கள் உங்களை கூப்பிட்டாலும் வெட்டிப்பயல்தான் வரவழி செய்தார்.சென்னை வந்ததும் ஒரு போன்/மெயில் கொடுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

காணமலிருந்தவரை சுப்ரபாத்ஹம் பாடி எழுப்பின வெட்டிப் பயலுக்கும் நன்றி. ரவி, பட்டியல் என்று தவறாகச் சொல்லிவிட்டேன்.
லிஸ்ட் தான் சரியான வார்த்தை.

பெரியவர்கள் வரிசையில் என்னைச் சேர்த்துவிட்டீர்களே என்றுதான் சொன்னேன்.
நம்(என்) தமிழ் இன்னும் இரண்டாவது வகுப்பு கூடத் தாண்டவில்லை.:-)
நல்லபடியாகப் போய் வாருங்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தி. ரா. ச.(T.R.C.) said...
வாரும் பிள்ளைப் பெருமாளே.வாரும்!
மார்கழியில் எல்லாரையும் எழுப்பிவிட்டு விட்டு களைப்பால் துயில் கொண்டிரோ?//

ஆகா...அடியேன் பிள்ளை மட்டுமே! ஆமாம் திராச ஐயா, மார்கழியில் எழுப்பி விட்டு, தை மாதத்தில் அலுவலகத்தில் தூங்கலாம் என்றால், என்னை விடாமல் போட்டு நெருக்கி விட்டார்கள்!

அலுவலகத்தில் வேலை செய்யச் சொல்வது எவ்வளவு பெரிய அநியாயம்? :-)
தமிழ்ப் பணி செய்யாமல், இவர்கள் பணி செய்ய வேண்டுமாம்! எவ்வளவு பேராசை பாருங்க! :-))

//அதுபோல நாங்கள் உங்களை கூப்பிட்டாலும் வெட்டிப்பயல்தான் வரவழி செய்தார்.சென்னை வந்ததும் ஒரு போன்/மெயில் கொடுங்கள்.//

நிச்சயம் போன் செய்கிறேன். அதோடு தங்களைச் சந்திக்கவும் செய்கிறேன்!
Feb last week to Mar 2nd week - தருமமிகு சென்னை தான்!

வெட்டிப்பயல் said...

திருக்கோவிலூரை பற்றி சொல்லி கொண்டே போகலாம்... (பசங்களுக்கும் பிறந்த வீட்டு (ஊர்) பெருமை இருக்கலாம் இல்லையா?)... அதுக்கு தனி பதிவே போடலாம்...

அதையும் நீங்களே செஞ்சா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்...

பதிவுக்கு தாமதமாக வந்ததிற்கு மன்னிக்கவும்... அருமையாக இருந்தது.. படிச்சிக்கிட்டே இருக்கனும் போல...

சுப்ரபாதம் (தமிழில்):

ஒலிச் சுட்டிகள்!

முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் - நித்ய ஸ்ரீ பாடுவது (Windows Media Player)

நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com
Pics: tirumala-tirupati.com

சுப்ரபாதம் (மூலம்):

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP