Friday, April 27, 2007

சுப்ரபாதம்(7&8) - கிளி கூவிற்று! தூக்கம் போயிற்று!!

யாராச்சும் வயற்காட்டிலோ, தோப்பிலோ தூங்கி இருக்கீங்களா? சரி விடுங்க!
வீட்டின் மொட்டை மாடியிலாச்சும் தூங்கி இருக்கீங்களா?
அப்படி தூங்கினவங்களுக்குத் தெரியும், மறு நாள் காலை, அலாரம் இல்லாமலேயே தானாக எழுந்திரிக்க முடியும் என்று!

அது எப்படி? யார் எழுப்புவாங்க?
"கொய்ங்க்க்க்க்க்க்" என்ற சப்தம் - வண்டுகள் பறக்கும் வயலில், தோட்டத்தில்!
போதாக்குறைக்குப் பறவைகளின் சத்தம்...அதுவும் கிளி!
சத்தம் மட்டும் போடாது; சும்மானாங்காட்டியும் இறக்கையைப் படபட என்ற அடித்துக் கொண்டே இருக்கும்!
சேவல், மாடு எல்லாம் இருந்தா சொல்லவே வேண்டாம்! எழுந்திரிச்சே ஆக வேண்டும்!
பெட் காபி எல்லாம் கிடைக்காது; கோமியம் வேண்டுமானால் கிடைக்கும்! :-)))

அட, இதெல்லாம் பத்தாம் நூற்றாண்டு என்கிறீர்களா? அட எங்கப்பா நடக்குது? திருமலையில்...
அங்கு கிளிகள் எல்லாம் பாயாசம் குடிக்குதுங்க! வாங்க, பார்க்கலாம்!
சென்ற பதிவில் முருகன் வந்தான். மாமா என்றான். பெருமாளைத் துயிலும் எழுப்பினான்! இந்தப் பதிவில் வரி வண்டும், பச்சைக் கிளியும்!
(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)

ஈஷத் ப்ரபுல்ல சரசீருஹ நாரிகேள
பூகத்ருமாதி சு மநோகர பாலிகாநாம்
ஆவாதி மந்த மநிலஸ் சக திவ்யகந்தை
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்ஈஷத் ப்ரபுல்ல சரசீருஹ = அழகாக மலரத் துவங்கியுள்ள தாமரை
இன்னும் சூரியன் உதிக்க வில்லை. இருப்பினும் தாமரை சற்றே மலரத் துவங்கியுள்ளது!
இது எப்படி?
இறைவன் திருமுகம் கோடி சூர்யப் பிரகாசம் அல்லவா? அவன் இன்னும் அரைகுறைத் தூக்கத்தில் உள்ளான்...அரைகுறை விழிப்பிலும் உள்ளான்.
அதனால் அவன் முகச் சூரியனைக் கண்டு, தாமரையும் அரைகுறை மலர்ச்சியில் உள்ளது! :-)


நாரிகேள = தென்னை மரம்
பூ கத்ருமாதி சு மநோகர = மலையில் நீண்டு நிற்கும் அழகான
பாலிகாநாம் = பாளைக் கமுகு என்னும் பாக்கு மரங்கள்

ஆவாதி மந்த மநிலஸ் = இப்படி மெல்லிய தென்றல், இந்த மரங்களில் புகுந்து வீச
சக திவ்யகந்தை = திவ்யமான நறுமணம், காலையில் எழும்புகின்றதே!

கமுகு, தென்னம் பாளைகள் பார்த்துள்ளீர்களா...?
இல்லை மலையாளத்து நண்பர் யாராவது இருந்தால் தெரியும்!
அந்தப் பாளைகளை விரித்தால், வீசும் பாருங்க ஒரு வாசம்....அவ்வளவு சுகந்தமா இருக்கும்.

தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பள்ளி எழுச்சியில் வருவதை,
இங்கு அப்படியே காட்டுகிறார், சுப்ரபாதம் எழுதிய அண்ணங்காச்சாரியார்.
சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம்
....
பாயிருள் அகன்றது
பைம்பொழில் கமுகின்
மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம்
இதுவோ?


சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்! திருப்பள்ளி எழுவாயாக!!
உந்மீல்ய நேத்ர யுக முத்தம பஞ்ஜரஸ்தா
பாத்ரா வசிஷ்ட கதலீபல பாயசாநி
புக்த்வா சலீலமத கேளிசுகா: படந்தி
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்


உந்மீல்ய நேத்ர = (நேத்ரம்=கண்); தங்கள் குட்டிக் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு
யுக முத்தம பஞ்ஜரஸ்தா = (பஞ்ஜரம்=கூண்டு); தங்கள் ஜோடிகளுடன், உயரமான கிளிக் கூண்டுக்குள்ளே அமர்ந்து கொண்டு......
தியாகராஜரும் "ஓங்கார பஞ்சர கீ" என்று முதல் பஞ்சரத்னக் கீர்த்தனையில் (ஜகதா என்று தொடங்கும் கீர்த்தனை) பாடுகிறார்.
நம் மனம் என்னும் கிளி, ஓங்காரக் கூண்டிலே ஒடுங்குவதாகப் பாடுகிறார்.

பாத்ரா வசிஷ்ட = பாத்திரங்களில் மீதி வைக்கப்பட்டுள்ள
கதலீ பல பாயசாநி = வாழைப் பழம் கொண்டு செய்யப்பட்ட பாயசத்தை புக்த்வா = சாப்பிடுகின்றன
ஒவ்வொரு நாள் இரவும், சுவாமிக்கு ஏகாந்த சேவை ஆகும் போது, வாழைப்பழங்கள்/முந்திரிகள் கலந்த பால் பாயசம் நிவேதனம் செய்வார்கள்.
பின்னரே போக ஸ்ரீநிவாசனை, சயன மண்டபத்தில், கட்டிலில் கிடத்தி, தூங்கப் பண்ணுவார்கள்.
திரை போட்ட பின்னர், அந்தக் கெட்டியான பாயசத்தை, நமக்கும் பிரசாதமாகத் தருவார்கள்.....இதையே கிளிகள் மறுநாள் காலையில் உண்கின்றன.
உடுத்துக் களைந்த பீதக ஆடை போல...அவன் உண்ட மிச்சத்தை, அவை உண்கின்றன!
சேஷத்தை (மிச்சத்தை) உண்டு, சேஷத்வம் பெறுகின்றன!


சலீலமத கேளி சுகா = (சுகம்=கிளி); மிக இன்பமாக விளையாடும் பச்சைக் கிளிகள்
படந்தி = உன் நாமங்களை பாடுகின்றன!
"கோவிந்தா, கோவிந்தா" என்று மதுரமாக கிளிகள் எல்லாம் கீச்கீச் என்று கொஞ்சினால் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்!
வரிசையில் நிற்கும் அடியார்களுக்கு இதைக் கண்டால் கால்களும் கடுக்குமோ?

சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்! திருப்பள்ளி எழுவாயாக!!
சு+ப்ரபாதம் = உனக்கும், அதனால் எங்களுக்கும் சுகமான காலைப் பொழுதாக மலரட்டும்.

----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

14 comments:

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர். ரொம்ப நாளா கேக்கணும்ன்னு இருந்தேன். நீங்களே மீண்டும் இந்தப் பதிவில் இடுகை இட்டுவிட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி. :-)

வல்லிசிம்ஹன் said...

ரவி,
சனிக்கிழமை வருவதற்குமுன் சுப்ரபாதம்,
கிளி,பாயசம் எல்லாம் வந்துவிட்டதா.
சுப்ரபாதத்துக்குத் தமிழில் பொருள் படிக்கும்போது இன்னும் அருமையாக இருக்கிறது.
வெங்கடேசா எழுந்தருள்வாய்.
பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள் ரவி.

துளசி கோபால் said...

இன்னிக்குச் சனிக்கிழமை.

மீண்டும் ஒரு சனி நல்லா விடிஞ்சது:-))))))

நாரிகேள= தேங்காய்

மலையாளத்துலே தேங்காய்க்கு நாளிகேரமுன்னு சொல்றாங்க. எப்படி இந்த
ரி & ள இடம் மாறி இருக்கு பாருங்க:-)

அருமையான விளக்கம் . நன்றி KRS


ஒரு சமயம் மொட்டை மாடியில் படுத்துட்டு, சூரியன் ச்சுள்ன்னு வந்தவுடன்
அடிச்சுப் பதறி கீழே ஓடுனா........ மணி அப்பத்தான் காலை 4. இடம் பிஜித்தீவு.

Anonymous said...

RAVI sir,
you have an excellent hand,specially writing about ARANGAN,(VENGADAVAN, ARANGANE ENDRU THIRUPPANAZHWAR passuram)
ARANGAN ARULVANAGA.
ANBUDAN
k.srinivasan.

குமரன் (Kumaran) said...

பலவிதமான மலர்களிடையே சென்ற தென்றல் நறுமணத்துடன் வீசுகிறது; அதனை அனுபவிக்க எழுந்திடுவாய் என்பதும் பச்சைக்கிளிகளின் கீச்சுக் குரலைக் கேட்பதற்காக எழுந்திடுவாய் என்பதும் அருமையாக இருக்கிறது. நம்மையும் இப்படி எழுப்பினால் எழுந்திருப்போமோ என்னவோ?! பள்ளிக்கூடத்திற்குப் போக வேண்டும், வேலைக்குப் போக வேண்டும் என்று எழுப்பும் போது இன்னும் கொஞ்ச நேரம் போர்த்திக் கொண்டு படுக்கத் தான் தோன்றுகிறது. :-)

இன்று என் மகளிடம் இதனை முயன்று பார்க்கப் போகிறேன். வசந்தம் வந்துவிட்டது; பறவைகளும் வந்துவிட்டன; அவற்றின் பாடல்களைக் கேட்கலாம் என்று எழுப்பப் போகிறேன். :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குமரன் (Kumaran) said...
இரவிசங்கர். ரொம்ப நாளா கேக்கணும்ன்னு இருந்தேன். நீங்களே மீண்டும் இந்தப் பதிவில் இடுகை இட்டுவிட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி. :-)//

ஆமாம் குமரன்
கடைசியா பிப்ரவரி மாதம் இட்டது....
அதுக்கப்புறம் அப்படியே இந்தியப் பயணம், அது இது என்று ஓடி விட்டது...
நேத்து சுப்ரபாதம் நண்பர் வீட்டில் ஒலிக்கக் கேட்டேன்...உடனே பரபரவென்று இட்டு விட்டேன் :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ரவி,
சுப்ரபாதத்துக்குத் தமிழில் பொருள் படிக்கும்போது இன்னும் அருமையாக இருக்கிறது.//

நன்றி வல்லியம்மா..
எல்லாருடனும் ஒன்றி விட்ட பாடல் என்பதால் அதன் பொருளைத் தமிழில் அறிவது மிகவும் பொருத்தமானது.

இப்ப தான் பதிவர் மீட்ட்ங் முடிஞ்சு வந்தோம்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//துளசி கோபால் said...
மலையாளத்துலே தேங்காய்க்கு நாளிகேரமுன்னு சொல்றாங்க. எப்படி இந்த ரி & ள இடம் மாறி இருக்கு பாருங்க:-)//

டீச்சர்,
தேங்காய்க்குச் சொந்தமான ஊர்...
அதனால அவங்க எப்படி மாத்திப் போட்டாலும் நாம ஒண்ணும் செய்ய முடியாது! :-)


//ஒரு சமயம் மொட்டை மாடியில் படுத்துட்டு, சூரியன் ச்சுள்ன்னு வந்தவுடன் அடிச்சுப் பதறி கீழே ஓடுனா........ மணி அப்பத்தான் காலை 4. இடம் பிஜித்தீவு//

ஆகா எப்பவும் அங்க சூரியன் ஆட்சி தான் போல...காவா என்ற பானம், மிளகுச் செடியின் வேரில் இருந்து எடுப்பது அங்கு ரொம்ப பிரபலம் என்று சொல்வார்களே டீச்சர்...நீங்க ட்ரை செய்தீர்களா? :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Anonymous said...
VENGADAVAN, ARANGANE ENDRU THIRUPPANAZHWAR passuram)//

விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்....

நன்றி ஸ்ரீநிவாசன் சார்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குமரன் (Kumaran) said...
நம்மையும் இப்படி எழுப்பினால் எழுந்திருப்போமோ என்னவோ?!//

ஏய், கிளி மாடியில் காயப் போட்டிருந்த உன் Lee சட்டையைக் கொத்தியது என்றால் உடனே எழுந்து ஓட மாட்டோமா? :-)

//இன்று என் மகளிடம் இதனை முயன்று பார்க்கப் போகிறேன். வசந்தம் வந்துவிட்டது; பறவைகளும் வந்துவிட்டன; அவற்றின் பாடல்களைக் கேட்கலாம் என்று எழுப்பப் போகிறேன். :-) //

செஞ்சு பாத்தீங்களா குமரன்?
அந்தப் பறவைகள் காலையில் மட்டும் தான் பாடும்...மீதி நேரங்களில் சும்மா கூவும் என்று முந்தைய நாள் இரவே சொல்லி விட்டால், அடுத்த நாள் காலையில் ஒரு ஆர்வம் தொத்திக் கொள்வதை நான் பார்த்திருக்கிறேன்.

துளசி கோபால் said...

காவா.......... மிளகு செடியிலே இருந்தா? யாரோ உங்ககிட்டே
நல்லா சுத்தி இருக்காங்க:-))))

கொஞ்சம் காரமா இருக்குமாம். அது அங்கே தேசீய ட்ரிங். அதைக் கலக்கிக்
கொடுக்கறதே ஒரு செரிமனி( ஜப்பானின் டீ செரிமனி போல)
எந்த உலகத்தலைவர்கள் வந்தாலும் அதைக் கொஞ்சமாவது ருசி பார்க்கத்தான்
வேணும். அப்படியிருக்க நான்....?
ச்சும்மா............:-)))) கோபால் ஒரு முறைக் கொஞ்சம் ருசி பார்த்துருக்கார்.
குடிச்சபிறகு நாக்குக் கொஞ்சம் மரத்தாற்போல் உணருவோமாம்.

ஷைலஜா said...

//பாயிருள் அகன்றது பைம்பொழில் கமுகின்
மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ//

டக்குனு பிடிச்சிடீங்க ரவி! ரசித்தேன் மிகவும்
ஷைலஜா

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//துளசி கோபால் said...
காவா.......... மிளகு செடியிலே இருந்தா? யாரோ உங்ககிட்டே
நல்லா சுத்தி இருக்காங்க:-))))//

போச்சுடா...மிளகுச் செடி சுத்தலா...
காரத்தில் கூட சுத்தறாங்களே! அடுக்குமா:-)

//எந்த உலகத்தலைவர்கள் வந்தாலும் அதைக் கொஞ்சமாவது ருசி பார்க்கத்தான் வேணும். அப்படியிருக்க நான்....?//

நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் cultural ambassador தான் டீச்சர்...உங்களுக்கு பானத்தைத் தந்தே ஆகணும்! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஷைலஜா said...
//பாயிருள் அகன்றது பைம்பொழில் கமுகின்
மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ//

டக்குனு பிடிச்சிடீங்க ரவி! ரசித்தேன் மிகவும்//

நீங்க ஏன் ரசிச்சீங்கன்னு எனக்குத் தெரியுமே, ஷைலஜா!
ஏன்னா...பாட்டின் முடிவில் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே-ன்னு தானே வருது! :-)

சுப்ரபாதம் (தமிழில்):

ஒலிச் சுட்டிகள்!

முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் - நித்ய ஸ்ரீ பாடுவது (Windows Media Player)

நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com
Pics: tirumala-tirupati.com

சுப்ரபாதம் (மூலம்):

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP