Friday, July 13, 2007

சுப்ரபாதம்(11&12) - பெண் தாமரைக்கும் ஆண் வண்டுக்கும் சண்டை!

தாமரை-ன்னா பெண்! வண்டு-ன்னா ஆண்!
இது தான் பொதுவா இலக்கியங்களில் சொல்லப்படும் ஒப்புமை! இதை வைத்தே பெரும்பாலான பெண்கள் ஒரு டயலாக்கை நிரந்தரமாக்கி விட்டார்கள்!

தாமரை = அழகு, பொறுமை, காதல் இதெல்லாம்!
வண்டு = மலர் விட்டு மலர் தாவும் எண்ணம் கொண்டது!
"அட, உங்களுக்கு என்னங்க? ஆம்பிளைங்க நீங்கள் எல்லாம் வண்டு போல; ஹூம்...நாங்க தான் தாமரை போல!", என்ற தங்கமணிகளின் பேச்சு அன்றும், இன்றும், என்றும் உள்ளது தான்! :-)

சுப்ரபாதத்திலும் கிட்டத்திட்ட இதே வசனம் வராத குறை! இதனால் தாமரைகளுக்கும் வண்டுகளுக்கும் ஒரே போட்டா போட்டி! பஞ்சாயத்து பண்ண யாரு?......
அட நம்ம வேங்கட "கிருஷ்ணன்" தான்! கண்ணன் யார் பக்கம் தீர்ப்பு சொல்லுவான்-ன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன? வாங்க பார்க்கலாம்!
சென்ற பதிவில் நாரதர் வந்தார்!
அவர் பின்னாலேயே, இந்தப் பதிவில் வண்டு-தாமரை சண்டை வருகிறது! :-)





(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)







யோஷா கணேன வரதத்னி விமத்ய மானே
கோசால யேஷூ ததி மந்தன தீவ்ர கோஷா
ரோஷாத் கலிம் விததே ககுபஸ்ச கும்பா
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்


யோஷா கணேன = இளமையான பெண்கள் கூட்டம்;

கோசால யேஷூ, ததி மந்தன = கோ சாலை - பசுக்கள் வாழும் இடைச்சேரியில் - தங்கள் கை வளையல்கள் குலுங்கத் தயிர் கடைகிறார்கள்!
கடைவது பாலை! அப்படிக் கடைந்தால் வருவது தயிர்!
அப்படியிருக்க தயிர் கடைகிறார்கள் என்று எப்படிச் சொல்லலாம்?
பால் கடைகிறார்கள் என்று அல்லவா சொல்ல வேண்டும்? - இதற்கு ஒரு இலக்கணக் குறிப்பு கூட இருக்கு தமிழில்! பள்ளியில் படிச்சது ஞாபகம் இருந்தா சொல்லுங்க பார்ப்போம்! :-)

பெரிய கடலைக் கடைந்த போதே தாங்கி நின்ற பரம்பொருள், இன்று ஆயர் சேரியில், சிறிய தயிரைக் கடையும் போதும், தாங்கி நிற்கிறான்!


தீவ்ர கோஷா = தீவிரமான கோஷம் - தயிர் கடையும் பெரும் சப்தம் எழுகிறது!
சாதாரண தயிர் கடையும் விஷயம் - அது எப்படிப் பெரும் சத்தம் எழும்?
"ஆய்ச்சியர் மத்தினால், ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?" என்ற ஆண்டாளின் பாசுரத்தை நினைவிற் கொள்ளுங்கள்!
விடியற் காலை; திருமலை மீது;

அப்போதெல்லாம் மலை மேல் ஆள் அரவம் அதிகம் இல்லை போலும்! அதனால் தான் தயிர் அரவம் அதிகம் கேட்கிறது!

கிராமத்தில் பெரிய பானைகளில் கடைவதைப் பார்த்திருந்தாலோ, கேட்டிருந்தாலோ தெரியும்! பெரிய பானையைத் தூணை ஒட்டி வைத்து,
தூணில் பெரிய மத்தை நாணல் கயிற்றினால் கட்டி, அதைக் கடையும் போது,
கர்..கர்...கர்ர்ர்....கர்ர்ர்ர் என்று பெரும் சத்தம் எழும்பும்...கேட்டு மகிழ்ந்துள்ளீர்களா?
(மிக்சியில் விப்பிங் ப்ளேடு போடு, விப் செய்தால் இதை விடச் சத்தம் கூடுதலாக வரும் என்று யாரோ சொல்வது காதில் விழுகிறதே:-)


ரோஷாத் கலிம் விததே = இந்தப் பெரும் ஒலி, எங்கும் பரவி எதிரொலிக்கிறது!
ககுபஸ்ச கும்பா = பானையின் ஒலி, மலையின் மேல் முழங்குகிறது!
பெருமாளே! இதைக் கேட்டுமா, நீ இன்னும் எழாமல் இருக்கிறாய்?

சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்! திருப்பள்ளி எழுவாயாக!!


அடுத்து இதோ.......பெண் தாமரைக்கும் ஆண் வண்டுக்கும் சண்டை!







பத்மேச மித்ர சதபத்ர கதாலி வர்க்கா
ஹர்த்தும் ச்ரியம் குவலயஸ்ய நிஜாங்க லக்ஷ்ம்யா
பேரீ நிநாத மிவ பீப்ரதி தீவ்ர நாதம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்


பத்மேச மித்ர = தாமரைப் பூவின் (பத்மம்) நட்புக்குப் பாத்திரமான வண்டு

குவலயஸ்ய = குவளைப் பூ
கருநீல நிறத்தில் இருக்கும் குவளை மலர்! பார்ப்பதற்கு அதுவும் வண்டின் நிறம் போலவே உள்ளது! அதைப் பார்த்து வண்டு பொறாமை கொள்கிறது. பகைமை கொள்கிறது!
"எனக்குப் போட்டியாக, அதே நீலமா?" என்ற முணுமுணுப்பு...சிறிது நேரத்திலேயே ரீங்கார ஒலியாகி...பெரும் சப்தம்!


பேரீ நிநாத மிவ = பேரிகை (முரசு) கொட்டுவது போல
பீப்ரதி தீவ்ர நாதம் = பெரும் ஓசை, தீவிரமான நாத சத்தம்
வண்டுகள் எல்லாம் தங்கள் நீலமே, குவளையின் நீலத்தை விட அழகாக இருக்கிறது என்று பொறாமைக் கீதங்கள் பாடுகின்றன.
அடே நீல வண்ணா! பாவம் அவற்றுக்குத் தெரியவில்லை போலும்,

உன் நீலம் ஒன்றும் உலகத்தில் உள்ளது என்று! அந்த நீல மேக சியாமளத்தின் முன் வேறு எந்த நீலமும் நிற்க முடியுமா என்ன?

பெருமாளே! இன்னுமா எழவில்லை?
இனித் தான் எழுந்திராய்...ஈதென்ன பேர் உறக்கம்?

வண்டுகளுக்கும், தாமரைப் பூக்களுக்கும் நடக்கும் இந்த ஊடலைத் தீர்த்து வைக்கவாவது...சீக்கிரம் எழுந்திருப்பாயாக!

சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்! திருப்பள்ளி எழுவாயாக!!
சு+ப்ரபாதம் = உனக்கும், அதனால் எங்களுக்கும் சுகமான காலைப் பொழுதாக மலரட்டும்.

----------------------------------------------------------------------------
இனி மேல், இந்த வலைப் பூவில்..."சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்" வராது!
----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

9 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஒரு வாரம் பாக்டீரியா காய்ச்சலால் பல பதிவுகளுக்கு வர முடியவில்லை!

இந்த இடுகையிலும் விளக்கம் அவ்வளவு விரிவாக இல்லையே என்றாலும், தரம் குறைந்து இருந்தாலும்....நண்பர்கள் மன்னித்துக் கொள்ளவும்!

VSK said...

வேறோர் இடத்தில், பிரிதொரு விளக்கமும் கேட்டேன்.

0-ம் பாடலில் தேன் குடித்து உறங்கிய வண்டுகள் அங்கேயே தூங்க, தாமரை இதழ்கள் அப்ப்டியே மூடிக் கொண்டனவல்லவா?

இப்போது விடியும் நேரம் வந்துவிட்டது.
மலர்கள் இன்னும் விழிக்கவில்லை.

ஆனால், வண்டுகள் விழித்து விட்டன!!
வெளியே சென்று வேங்கடவனைக் காண ஆவல் கொள்கின்றன.

இதழ்களைத் திறக்கச் சொல்லி ஒரு சின்ன சிணுங்கல்!
சத்தம் இப்போது, வர, வரப் பெரிதாகின்றது.
ஒரே கூச்சல்!

மலர்களோ, நாங்கள் பார்க்கும் முன்னர் நீங்கள் எப்படி மாலவனைப் பார்க்கலாம், எல்லாம் நாங்கள் அங்கே போன பின்னர், அவனைப் பார்த்து நாங்கள் அனுபவிக்கும் போது, நீங்களும் பார்க்கலாம் என இறுக்க மூடியிருக்கின்றனவாம்.

இதுவும் சண்டைக்கு ஒரு காரணமாம்!!

ஆனந்தம்! ஆனந்தம்!!
ரவி சொல்லக் கேட்பது இன்னும் ஆனந்தம்!

வல்லிசிம்ஹன் said...

பெருமாள் அனுக்கிரகத்தில் உடல் நலம் பெற்று இருக்கும்னு நினைக்கிறேன்.

மிகவும் சிரத்தையாக எழுதுகிறீர்கள். பகவான் விஷயத்தில் சுருக்கம் பெருக்கம் எல்லாம் பார்க்க முடியாது.சாரம் நல்லது,அதனால் மனநிறைவோடு சொல்லும் வார்த்தைகளும் அழகாகத் தான் வரும்.
சேஷாத்திரியின் விபு நன்றாக பள்ளியெழுந்து கொள்ளுகிறான்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Sankar said...
வேறோர் இடத்தில், பிரிதொரு விளக்கமும் கேட்டேன்.

0-ம் பாடலில் தேன் குடித்து உறங்கிய வண்டுகள் அங்கேயே தூங்க, தாமரை இதழ்கள் அப்ப்டியே மூடிக் கொண்டனவல்லவா?//

வாங்க சங்கர்
நீங்க சொல்லும் தாமரைக்குள் இர்வு எல்லாம் சிறைப்பட்ட வண்டு்...காலையில் விடுதலை பெற்று வேங்கடத்தானைத் தரிசிக்க வந்தனவே!

இது முந்தைய சுலோகம். சென்ற பதிவைப் பாருங்களேன்! அதில் படம் போட்டுச் சொல்லி உள்ளேன்! :-)

சரி...எப்படிப் பார்த்தாலும்
லேடீஸ் ஃப்ர்ஸ்ட்...ஸோ
வண்டுகள் நெக்ஸ்ட் :-)
அருமையான பின்னூட்டத்துக்கு நன்றி, சங்கர்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
பெருமாள் அனுக்கிரகத்தில் உடல் நலம் பெற்று இருக்கும்னு நினைக்கிறேன்//

கொஞ்சம் தேறியுள்ளது வல்லியம்மா! 106 இல் இருந்து குறைந்து இப்ப 100 டிகிரி ஆகி உள்ளது!

//மிகவும் சிரத்தையாக எழுதுகிறீர்கள். பகவான் விஷயத்தில் சுருக்கம் பெருக்கம் எல்லாம் பார்க்க முடியாது.சாரம் நல்லது,அதனால் மனநிறைவோடு சொல்லும் வார்த்தைகளும் அழகாகத் தான் வரும்//

உண்மை தான் வல்லியம்மா!
காய்ச்சலில் கூட சுப்ரபாதம் சொல்லும் போது மனநிறைவு தான்!
மனத்துக்கு இனியான் (Sweet Heart) அல்லவா? :-)

Anonymous said...

//இனி மேல், இந்த வலைப் பூவில்..."சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்" வராது//

Oh...why? what happened? Please continue Ravi. I am enjoying the meanings so nicely.
-Dr.Balu

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Anonymous said...
//இனி மேல், இந்த வலைப் பூவில்..."சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்" வராது//

Oh...why? what happened? Please continue Ravi. I am enjoying the meanings so nicely.
-Dr.Balu//

வாங்க டாக்டர்!
பொருள் இசைந்து கேட்பதற்கு நன்றி!
நான் இனி மேல் வராது-ன்னு சொன்னது யாராச்சும் கண்டு பிடிக்கறீங்களா-ன்னு பாக்கத் தான் :-)

சுப்ரபாதத்தை அடியேன் பாதியில் நிறுத்திடுவேனா?

"சேஷாத்ரி சேகர விபோ" என்று வருவது இத்துடன் முடிந்து விடும்!
இனி வரப் போவது...
"ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்" - அதைத் தான் அப்படிச் சொன்னேன்! :-)

வெட்டிப்பயல் said...

இந்த பகுதில ஏதோ மிஸ் ஆகற மாதிரி ஒரு ஃபீலிங் :-((

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வெட்டிப்பயல் said...
இந்த பகுதில ஏதோ மிஸ் ஆகற மாதிரி ஒரு ஃபீலிங் :-((
//

ஜூர வேகத்தில் எழுதினேன்!
என்ன மிஸ் ஆகுது பாலாஜி?

எல்லாப் பதங்களுக்கும் word by word பொருள் சொல்லவில்லை...
மேலோட்டமான கருத்து மட்டும் தான் சொன்னேன். அதுவா?

சுப்ரபாதம் (தமிழில்):

ஒலிச் சுட்டிகள்!

முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் - நித்ய ஸ்ரீ பாடுவது (Windows Media Player)

நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com
Pics: tirumala-tirupati.com

சுப்ரபாதம் (மூலம்):

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP