Friday, July 27, 2007

சுப்ரபாதம்(13)- வேங்கடம்- தமிழ்ச் சொல்லா? வட சொல்லா?

திருமலை திருப்பதி, தமிழ்நாட்டுக்கு உரியதா என்ன?
தமிழ்நாட்டின் எல்லை வடவேங்கடம் என்று எல்லாத் தமிழ் இலக்கியங்களும் பேசுகின்றன! - இலக்கியம் பேசினால் போதுமா? மக்கள் பேச வேண்டுமே!
அங்கேயோ மக்கள் பலர் தெலுங்கு பேசுவதால், வேங்கடம் ஆந்திரத்துக்குச் சென்று விட்டது! திருத்தணிகையை மீட்ட ம.பொ.சி அவர்களால் கூட திருப்பதியை மீட்க முடியவில்லை!

இன்றைய பதிவில் இருந்து ரூட் மாறப் போகுது! :-)
இது நாள் வரை "சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்" என்று தான் வந்தது...சேஷ மலைக்கு அரசனே எழுந்திரு-ன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க!
ஆனா பெருமாள் அப்படி லேசாத் துயில் கலையப் போகிறார்-ன்னு தெரிஞ்சதும்... எல்லாமே மாறிப் போச்சுது! பெருமாளைப் பற்றிப் பாடிக்கிட்டு இருந்தவர்கள், இனி பெருமாளுக்குப் பிடித்தமானவர்களைப் பற்றி எல்லாம் பாடப் போறாங்க!
இனிமேல் ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்-னு மாற்றிப் பாடப் போறாங்க!

எது என்ன வேங்கடம்?...அது என்ன தமிழ்ச் சொல்லா? வட சொல்லா?
அசலம்=மலை; இது வடசொல். தெரிஞ்சது தான்!
(சேஷாசலம், பத்ராசலம், ஹிமாச்சலம், அருணாச்சலம்...)
ஆனா வேங்கடம்?...இது மிகவும் அழகான தமிழ்ச் சொல்!

வேங்கடம் = வேம் + கடம் = கொடுங் கடன்கள் வேகும் மலை என்பது பொருள்.
வேம் என்பது வெப்பம், நெருப்பு, பொசுக்கல் என்ற பொருளில் வரும். (வேங்காலம், வேடைக் காலம் என்று கோடைக் காலத்தைச் சொல்வதுண்டு).

கடம் = கடன் = பிறவிக் கடன் (வினை)
கடம் பலகிடந்து காடுடன் கழிந்து என்று சிலப்பதிகாரம் சொல்கிறது!
கடம் உண்டு வாழாமை என்று கடன் வாங்குவதைப் பற்றி இனியவை நாற்பது என்னும் பழந்தமிழ் நூல் பாடுகிறது!
இந்தப் பிறவிக் கடனைப் (நல்வினை/தீவினை) பொசுக்க வல்ல மலை ஆனதாலே அது வேங்கட மலை!

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மாமலை உச்சி மீமிசை
பகை அணங்கு ஆழியும் பால் வெண் சங்கும்
தகை பெறு தாமரைக் கையில் ஏந்தி

என்று சங்கு சக்கரங்களோடு பெருமாள், வேங்கடத்தின் மேல் நிற்பதைச் சிலப்பதிகாரம் படம் பிடித்துக் காட்டுகிறது!சரி, ஒரு மலை எப்படி கடத்தைப் பொசுக்கும்?...
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய் என்ற திருப்பாவை நினைவுக்கு வருகிறதா?
போய பிழையும், இனி வரப் போகும் கர்ம வினைகளும், இவை போதாதென்று, இந்தப் பிறவியில் ஏற்றிக் கொண்ட பாவ மூட்டைகளும் - இப்படி எவ்வளவு கடனை நாம வாங்கி வைச்சிருக்கோம்! திருப்பிக் கட்ட வேண்டுமே! வட்டி கட்டி மாளுமா?

செல்போன் பில்லைக் கட்டாமப் போனாலே, Late Fee, Finance Charges, Delinquency அது இது என்று போட்டுத் தாளித்து விடுகிறார்கள்! கிரெடிட் கார்டு என்றால் இன்னும் ஒரு படி அதிகம் - சொல்லவே வேண்டாம்! வட்டிக்கு-வட்டிக்கு-வட்டி என்று ஏறிக்கொண்டே போக வேண்டியது தான்!

உண்மையான பண இருப்பை எண்ணிப் பார்க்காது, கையில் தான் கார்டு இருக்கே-ன்னு ஆடாத ஆட்டம் ஆடினால்?....திவால்!
அதே போல் உண்மையின் இருப்பான இறைவனை எண்ணிப் பார்க்காது, கையில் தான் வசதி இருக்கே, வாழ்க்கை இருக்கே-ன்னு ஆடாத ஆட்டம் ஆடினால்??? :-)


கொடும் பாபங்களையும் பொசுக்க வல்லது திருமலை!
மலையே வைகுந்த சாளக்கிரமாக இருக்கிறது!
அதன் மீது தன் கால் படவும் அஞ்சி, கீழிருந்தே சேவித்தார்கள் ஆழ்வார்கள்!
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே

என்று மலையைத் தொழுதாலே போதும், வினைகள் எல்லாம் ஓயும்! என்கிறார் வேதம் தமிழ் செய்த நம்மாழ்வார்!

அந்த வேங்கட மாமலைக்கு அதிபதி - அயர்வறும் அமரர்கள் அதிபதி -வேங்கடாசலபதி - தவ சுப்ரபாதம் என்று இனி மேல் வரப் போகும் சுப்ரபாதங்களைப் பார்ப்போம், வாருங்கள்!(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)(சுப்ரபாதத்தில் முக்கியமான சுலோகம் - இந்தச் சுலோகம் பொதுவாக இரண்டு முறை சாற்றப்படும் - மிகவும் எளிது கூட - வாய் விட்டுச் சொல்லிப் பாருங்கள்!)

ஸ்ரீ மந் அபீஷ்ட வரதாகில லோக பந்தோ
ஸ்ரீ ஸ்ரீநிவாச ஜகதேக தயைக சிந்தோ
ஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ மந் = ஸ்ரீ(மகாலக்ஷ்மி); அவளின் மனத்துக்கு இனியவனே!
Sweet Heart-ன்னு கேள்விப்பட்டு இருக்கீங்களா? அதான் ஸ்ரீமன் :-)
இந்த Sweet Heart-க்கு அப்படியே நேரான தமிழ்ப்பதத்தை ஆண்டாள் தருகிறாள்! என்னன்னு கண்டுபிடிச்சி சொல்லுங்க பார்ப்போம்!

அபீஷ்ட வரத = விருப்பங்களை நிறைவேற்றுபவனே!
அபீஷ்டம்=விருப்பம். நியாயமான நல்ல விருப்பங்கள். மற்றை நம் காமங்கள் அல்லாத விருப்பங்கள்...
இப்படி நம் ஆசை, விருப்பம், எண்ணங்களை எல்லாம் நிறைவேற்றி வைப்பவன் - வரம் தரும் வரதன் - நாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளுபவன்!


அகில லோக பந்தோ = எல்லா உலகத்துக்கும் உறவுக்காரனே
எல்லா உலகம் என்று ஏன் சொல்ல வேண்டும்?
தேவர்-அசுரர் என்றோ, மேலோர்-கீழோர் என்றோ, பணக்காரன்-ஏழை என்றோ, படித்தவர்-பாமரர் என்றோ, சாதி-மதம் என்றோ எந்தவொரு வேற்றுமையும் அவனுக்குக் கிடையாது!
வேற்றுமை நம்மிடத்தில் தான்! நாம் பார்க்கும் பார்வையில் தான்!
அவனோ கண்ணாடி போல!
எதுவாகப் பார்க்கிறோமோ, அதுவாகவே தெரிகிறான்! அகலில் அகலும்...அணுகில் அணுகும்...


ஸ்ரீ ஸ்ரீநிவாச = திரு-மாலே! ஸ்ரீநிவாசா
ஸ்ரீநிவாசன் என்பது மிகவும் முக்கியமான திருநாமம்..
பொதுவா அம்மாவுக்கு ஒரு பெயர் இருக்கும். அப்பாவுக்கு ஒரு பெயர் இருக்கும்! அம்மையப்பன் இருவருக்கும் சேர்த்து ஒரே பெயராக இருக்குமா?
இருக்கே! அதுவே திரு-மால்! ஸ்ரீ-நிவாசன்!

"பிரம்மநி ஸ்ரீநிவாசே" என்பது இராமானுசரின் ஸ்ரீபாஷ்யம்!
பரப்பிரும்மம் (பரம்பொருள்) யார் என்றால், அது ஸ்ரீநிவாசன் தான் என்று அவர் நிர்ணயம் செய்கிறார்! அவர் மட்டுமில்லை!
ஆதிசங்கரர், மத்வர், வல்லபர் போன்ற பலப்பல ஆச்சாரியர்களும் வேறு வேறு மார்க்கங்களைக் காட்டினாலும், நாராயணனே பரப்பிரும்மம் என்று ஒருமுகமாகச் சொல்கிறார்கள்!
"நாராயண பரோ வக்யாத்" என்று தான் ஆதிசங்கரரின் பாஷ்யமே தொடங்குகிறது! "நாரயணஹ, பரஹ" என்று முத்தாய்ப்பாகச் சொல்கிறார்!ஜகத் ஏக தயைக சிந்தோ = அனைத்து உலகுக்கும் கருணை சிந்துபவன் நீ ஒருவனே!
தயை=கருணை! தயா சிந்து=கருணைக் கடல்!
உலகத்துக்குக் கடல் தான் காப்பு! கடலில் நடக்கும் நிகழ்வுகளால் தான் உலகம் ஒரே சீராக இயங்குகிறது!

நீராரும் கடல் உடுத்த நில மடந்தை! விரிதிரை முந்நீர் உலகம் என்பதெல்லாம் தமிழ் இலக்கியம்! அதனால் தான் இறைவனைக் கடலாக உருவகிக்கிறோம்!
கடலில் இருந்து தோன்றியது எல்லாம் இறுதியில் கடலில் போய்த் தான் கலக்கிறது.
இறைவனோ கருணைக்கடல்! இருப்பதோ பாற்கடல்!


பெருமாள் மோவாய்க் கட்டையில் இருக்கும் வெள்ளைத் தழும்புக்கும் "தயா சிந்து" என்று தான் பெயர். இது பற்றி முன்பே மாதவிப் பந்தல் பதிவில் பார்த்தோம்!

இந்த "தயா" வின் மேல் தான், சுவாமி தேசிகன் என்னும் ஆச்சார்யர், தயா சதகம் என்னும் அற்புதமான நூலைப் பாடியுள்ளார்!

மோவாயில் பொட்டழகன்!ஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர = "ஸ்ரீ" என்று போற்றப்படும், அன்னை மகாலக்ஷ்மி உன் திருமார்பில் வசிக்கிறாள்

ஸ்ரீ மகாலக்ஷ்மிக்கு வீடு (க்ருஹம்) எது?
உன் திருமார்பே அவள் வீடு! வலப்பக்க மார்புக்கு வக்ஷ ஸ்தலம் என்றே பெயர்! அதில் அவள் நீங்காது நித்ய வாசம் செய்கின்றாள்!

ஒரு நொடிப் பொழுதும் உன்னை விட்டுப் பிரிய மாட்டாள்! மஞ்சள் குங்கும பூஷிதையாக, நித்ய சுமங்கலியாக இருக்கிறாள்! அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!

அவள் எதற்கு திருமார்பில் போய் இருக்க வேன்டும்? அவளுக்கு வேறு இடம் கிடைக்க வில்லையா என்ன?
அடியவர்கள் வரும் போது, அவர்கள் புண்ணிய பாபக் கணக்குகளை இறைவன் பார்க்கத் தொடங்கினால் யாரேனும் மிஞ்சுவமா? அதனால் தான் அவன் இதயத்துக்கு அருகில் போய் உட்கார்ந்து கொண்டாள்.
நாம் அவனிடம் செல்லும் போது, நம் தவறுகள் எல்லாம் அவன் மனத்தில் உதிக்காதவாறு, அவனைக் குளிர்விக்கிறாள்!

திவ்ய மூர்த்தே = திவ்யமான அழகை உடைய தலைவா!
எத்தனையோ மூர்த்திகள் உலகில்! ராம மூர்த்தி, கிருஷ்ண மூர்த்தி, சுந்தர மூர்த்தி!
ஆனால் இவனோ திவ்ய மூர்த்தி! அழகே வெட்கப்படும் அழகன்!

ஸ்ரீ வேங்கடாசல பதே = அப்பா, திருவேங்கட மலைக்கு அதிபதியே
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்! திருப்பள்ளி எழுக!!
----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

112 comments:

ILA(a)இளா said...

அஹா, நல்ல விளக்கம். தகவலுக்கு நன்றி.

VSK said...

//இந்த Sweet Heart-க்கு அப்படியே நேரான தமிழ்ப்பதத்தை ஆண்டாள் தருகிறாள்! என்னன்னு கண்டுபிடிச்சி சொல்லுங்க பார்ப்போம்!

மனதுக்கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்!

மனதுக்கினியான்

அருமையான..இல்லை... இல்லை! இனிமேல் அப்படி சொல்லக்கூடாது... ரவியான விளக்கம்,, ரவி!

வடுவூர் குமார் said...

Saturday special- Thanks a lot.

Anonymous said...

good post!
"வந்துதித்தாய் இராமா நீ கோசலைதன் திருமகனாய்" என்று தொடங்கும் எம் எஸின் தமிழ் சுப்ரபாதம் இருக்கிறதே!

பாரதிய நவீன இளவரசன் said...

nice blog; very useful info. thank you so much!

G.Ragavan said...

வேங்கடம் தமிழ்ப் பெயர்சொல்லே. அதில் மாற்றுககருத்தே இருக்கக் கூடாது.

திருப்பதிய மீட்க முடியலையா? பதிலுக்குச் சென்னையக் கேட்டாங்களே...அது தெரியாதா! சென்னையையும் தர முடியாதுன்னு...வந்தப்புறம் திருத்தணியா திருப்பதியான்னு ஒரு சண்டையப் போட்டு திருத்தணி ஒருவழியா கெடைச்சது. நல்லவேள. இல்லைன்னா முருகனக் கும்பிடக் கூட ஸ்டேட் விட்டு ஸ்டேட் போக வேண்டியிருக்கும்.

ஸ்ரீநிவாஸ்...இந்த வடமொழிப் பெயருக்குப் பொருள் என்ன? ஸ்ரீ என்றால் திரு. நிவாஸ் என்றால் வசிப்பது. திருமகள் குடிகொண்ட இடம் என்று பொருள். ஸ்ரீநிவாஸன் என்றால் அதற்கு ஆண்பால் விகுதி சேர்கிறது. திருமகளோடு என்றும் வாழ்கிறவன் என்ற பொருளாகிறது. சரி. ஸ்ரீநிவாஸ் என்பதற்கு இணையான தமிழ்ப் பெயர் என்ன? திருக்குடி என்பதே மிகப் பொருத்தமாக இருக்கும்.

குமரன் (Kumaran) said...

மிக எளிமையான இனிமையான இந்தப் பாடலுக்கு மிக நன்றாக பொருள் சொன்னீர்கள் இரவிசங்கர். மிக்க நன்றி.

திருமகள் கேள்வனே பரம்பொருள் என்பதை வேதத்தின் வழியின் நிற்கும் ஆசாரியர்கள் எல்லோரும் சொல்கிறார்கள் என்றே நானும் நினைக்கிறேன். நிர்குண பிரம்மத்தை எல்லாவற்றிற்கும் மேலாக வைக்கும் ஆதிசங்கரரும் அந்த பிரம்மம் சகுணமாக சகாரமாக (குணங்களுடன், உருவத்துடன்) வரும் போது திருமாலே உயர்ந்தவன் என்றே சொல்கிறார். மற்ற ஆசாரியர்கள் வைணவ ஆசாரியர்கள் என்பதால் அவர்கள் இயற்கையாகவே நாராயணனைப் பரம்பொருளாகச் சொல்கிறார்கள்.

குமரன் (Kumaran) said...

வேங்கடம் என்ற சொல்லுக்கு விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி இரவிசங்கர். வேங்கடத்துறைவார்க்கு நமவென்னல் ஆங்கடமை அது சுமந்தார்கட்கே என்ற நம்மாழ்வார் திருவாய்மொழியே ஒவ்வொரு முறையும் அடியேனுக்கு நினைவில் வருவது.

ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழிகுரல் அருவி திருவேங்கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திருவேங்கடத்தானுக்கு
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண்
பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ILA(a)இளா said...
அஹா, நல்ல விளக்கம். தகவலுக்கு நன்றி//

நன்றி இளா...
நீங்க தூங்கப் போற நேரத்துல சுப்ரபாதம் கேட்டிருக்கீங்க போலத் தெரியுது! :-)

நான் நம்மூர் மக்கள் சனிக்கிழமை காலைல கேட்கட்டுமே-ன்னு பதிவு போட்டேன்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//VSK said...
//இந்த Sweet Heart-க்கு அப்படியே நேரான தமிழ்ப்பதத்தை ஆண்டாள் தருகிறாள்! என்னன்னு கண்டுபிடிச்சி சொல்லுங்க பார்ப்போம்!

மனதுக்கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்!//

அதே அதே...இதுக்குத் தான் SK வேணும்ங்கிறது!
இனியான்=Sweet
மனது=Heart
ஆண்டாள் அப்பவே Sweet Heart-ன்னு எல்லாம் கூப்பிட்டு இருக்கா பாத்தீங்களா? :-)

//அருமையான..இல்லை... இல்லை! இனிமேல் அப்படி சொல்லக்கூடாது... ரவியான விளக்கம்,, ரவி!//

அச்சோ...இது இன்ன வம்பு!
ரவியான விளக்கம்-னா சூரியனான விளக்கம்-னு தானே சொல்ல வந்தீங்க? :-)
பார்ப்போம், சுப்ரபாதம் எல்லாம் சூடான பகுதிக்குப் போகுதான்னு! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வடுவூர் குமார் said...
Saturday special- Thanks a lot.
//

Anytime Kumar Sir!
More Specials to come! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Anonymous said...
good post!
"வந்துதித்தாய் இராமா நீ கோசலைதன் திருமகனாய்" என்று தொடங்கும் எம் எஸின் தமிழ் சுப்ரபாதம் இருக்கிறதே! //

நன்றி அனானி...
கேட்டீங்களே ஒரு கேள்வி! சுப்ரபாதப் பதிவு தொடங்கும் போதே, என்னையும் நான் இது மாதிரியே கேட்டுக்கொண்டேன்....அதுக்கப்புறம் ஒரு பின்னூட்டத்தில் இதன் நோக்கத்தைச் சொன்னேன்...இந்தாங்க, உங்களுக்காக ரிப்பீட்டு!


ஆமாங்க கைப்ஸ், சிறுது சிறிதா பத்தி பிரிச்சு குடுத்தா பல பேருக்கு ஈசியா புரியும் இல்லையா?

பலருக்கு இது கேட்டு கேட்டு மனப்பாடமே ஆகி விட்டது!
பின்னர் சுப்ரபாதங்கள் பல வந்தாலும், ஏன் எம்.எஸ் அம்மா தமிழ் சுப்ரபாதம் பாடின பின்பும் கூட, மனப்பாடம் ஆனது என்னவோ இது தான்!

முதலில் பிரபலமானதால், மொழி கடந்த பாசம் பல பலருக்கு!

அதான் இந்த முயற்சி! அடுத்த முறை பொருள் பொருத்திப் பாத்து இன்புறுவார்கள் இல்லையா?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பாரதிய நவீன இளவரசன் said...
nice blog; very useful info. thank you so much! //

வாங்க இளவரசரே!
நன்றி...ஒவ்வொரு சனிக்கிழமையும் (இந்திய நேரப்படி) இதை இட முயல்கிறேன்!

துளசி கோபால் said...

எங்க சனிக்கிழமையும் கேட்டுட்டு, உங்க சனிக்கிழமைக்கும் கேட்டேன்!

நீங்க சொன்னமாதிரி ச்சின்னவயசுலே இருந்தே இதைக் கேட்டுக்கேட்டுப் பழகிட்டதாலே,
தமிழ்ச்சுப்ரபாதம் என்னதான் பொருள் விளங்கினாலும், மனசில் 'சட்'னு ஒட்டலை(-:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//G.Ragavan said...
வேங்கடம் தமிழ்ப் பெயர்சொல்லே. அதில் மாற்றுககருத்தே இருக்கக் கூடாது.//

நன்றி ஜிரா!
வேங்கடம் தமிழ்ச் சொல்லே!
வேங்கடமுடையான் தமிழ்க் கடவுளே!

ஒன்று கவனித்தீர்களா?
வேங்கடமும் தமிழ்ச்சொல் தான்!
அரங்கமும் தமிழ்ச்சொல் தான்!

இங்கிருப்பதை எடுத்துக் கொண்டு அங்கும் கொண்டாடுகிறார்கள்!
தமிழ் வடமொழிக்கு அளித்த நற்கொடையின் மதிப்பு அளப்பரிய ஒன்று!

வேங்கடத்துக்கு இணையாக வட சொற்கள் உள்ளனவா? அடுத்த பதிவில் வரும்! :-)

//திருப்பதிய மீட்க முடியலையா? பதிலுக்குச் சென்னையக் கேட்டாங்களே...அது தெரியாதா!//

மதராஸ் மனதே! :-)

//திருத்தணியா திருப்பதியான்னு ஒரு சண்டையப் போட்டு திருத்தணி ஒருவழியா கெடைச்சது. நல்லவேள. இல்லைன்னா முருகனக் கும்பிடக் கூட ஸ்டேட் விட்டு ஸ்டேட் போக வேண்டியிருக்கும்.//

ஆமாங்க! ம.பொ.சி மற்றும் தமிழரசுக் கழகத்தினர், போராட்ட வீரர்களால் ஓரளவு நம் சொத்து நமக்கே கிடைத்தது! ஆனா எனக்கு இன்னொரு சந்தேகமும் இருக்கு! திருப்பதி மட்டும் தமிழ்நாட்டுல இருந்துச்சினா, நம்மூர் அரசியல்வாதிகள் என்னென்ன செஞ்சிருப்பாங்க-ன்னு நினைச்சுப் பார்க்க கொஞ்சம் பயமா இருக்கு! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஸ்ரீநிவாஸ் என்பதற்கு இணையான தமிழ்ப் பெயர் என்ன? திருக்குடி என்பதே மிகப் பொருத்தமாக இருக்கும்//

குமரன்,
ஜிராவின் வட சொல்லாராய்ச்சிய கவனிச்சீங்களா?

ஜிரா
என்னங்க இது திருக்குடி, தூத்துக்குடின்னு காமெடி பண்ணிக்கிட்டு? :-)

போதாக்குறைக்கு "ஸ" கரம் வேற போடறீங்க! அதான் தமிழில் "ச" கரம் இருக்கே! இல்லீன்னா பரவாயில்லை!ஸ்ரீநிவாசன் என்றே சொல்லுங்க!

திருக்குடியை விட திருவகன் இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கு!
குடி என்பது பெரும்பாலும் ஊர் பேரா போய் விடுகிறது!

நிவாசம் = அகம்
ஸ்ரீ நிவாசன் = திரு அகத்தான்
=திருவகன்

ஸ்ரீநிவாசன் = திருமகள் கேள்வன்
இன்னும் பொருத்தமா, இயைந்து, ஒரே சொல்லா மொழியாக்கணும்னா, ஆழ்வார்களிடமும் ஆண்டாளிடமும் தேடலாம்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குமரன் (Kumaran) said...
நிர்குண பிரம்மத்தை எல்லாவற்றிற்கும் மேலாக வைக்கும் ஆதிசங்கரரும் அந்த பிரம்மம் சகுணமாக சகாரமாக (குணங்களுடன், உருவத்துடன்) வரும் போது திருமாலே உயர்ந்தவன் என்றே சொல்கிறார்//

உண்மை தான் குமரன்!
மூன்று ஆசாரியர்களும் எழுதிய பாஷ்யத்திலும் இவ்வாறே உரைக்கிறார்கள்!

லலிதா சகஸ்ரநாமத்துக்கு உரை எழுத அவர் எவ்வளவோ முயற்சித்தும் விஷ்ணு சகஸ்ரநாமம் தான் அவருக்குக் கையில் கிடைத்ததாம் - படிச்சிருக்கீங்களா?

//மற்ற ஆசாரியர்கள் வைணவ ஆசாரியர்கள் என்பதால் அவர்கள் இயற்கையாகவே நாராயணனைப் பரம்பொருளாகச் சொல்கிறார்கள்//

அதனால் தான் இது போன்ற சமயங்களில் மற்ற நெறிகளில் திகழும் மற்ற ஆசாரியர்களின் கருத்தும் தேவைப்படுகிறது ஒப்பு நோக்க!

அப்பைய்ய தீட்சிதர் மதுரைக் கள்ளழகர் சன்னிதியில் பதினெட்டாம் படி கருப்பண்ண சாமியின் முன் உண்மையே உரைக்க வேண்டி, நாராயணப் பரம்பொருள் பற்றிச் சொன்னதும் நினைவுக்கு வருகி்றது!

சதாசிவப் பிரம்மேந்திரரும் பிரம்மனி -மானச சஞ்சரரே என்று தான் மயங்கிப் பாடுகிறார்!

Anonymous said...

//3. தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player//

)ஐய்யோ நான் சொன்னதோட நோக்கம் வேற. நீங்க கேக்க நித்திய ஸ்ரி பாடிய சுப்ரபாதம் குடுத்துருக்கீங்க. கண் தேடியது
எம் எஸ் பாடியதை. என் கிட்ட ஒரு ஒலி நாட இருந்தது. இப்ப இல்லை. அதனாலதான் அப்படி எழுதினேன். எனக்கு,
என்னைப் பொறுத்த வரை காந்தி சொன்ன மாதிரி எம் எஸ் பேசினாக் கூட போதும். கேட்க மிகவும் விருப்பப்படுவேன்.
உங்க குறை ஒன்றும் இல்லை பதிவை பல தடவை ரசிச்சிருக்கேன். இத்தனைக்கும் நான் ராஜாஜி ரசிகன் இல்லை. ஆன எம் எஸ் குரலைக் கேக்கும் போது கண்ணில் தண்ணி வந்திடும். நீங்க உங்க வழில போங்க. நன்றி!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Anonymous said...
ஐய்யோ நான் சொன்னதோட நோக்கம் வேற. நீங்க கேக்க நித்திய ஸ்ரி பாடிய சுப்ரபாதம் குடுத்துருக்கீங்க. கண் தேடியது எம் எஸ் பாடியதை//

ஆகா....அனானியாரே மன்னியுங்கள்!
அடியேன் வேறு மாதிரி பொருள் படுத்திக் கொண்டேன் போல!

எம்.எஸ் பாடும் தமிழ் சுப்ரபாதம் சுட்டி இருந்தால் கொடுங்க தலைவா!
முதலில் நானும் அதைத் தான் தேடினேன். கண்ணன் சாரும் சொன்னார்! ஆனால் கிடைக்கவில்லை! அப்புறம் தான் நித்யஸ்ரீ அவர்களின் சுட்டியைத் தந்தேன்!

//காந்தி சொன்ன மாதிரி எம் எஸ் பேசினாக் கூட போதும். கேட்க மிகவும் விருப்பப்படுவேன்.
உங்க குறை ஒன்றும் இல்லை பதிவை பல தடவை ரசிச்சிருக்கேன்//

மிகவும் உண்மைங்க!
எம்.எஸ் அவர்கள் பேச்சும் கனிவு தானே. அதுவும் உணர்ந்து பாடும் போது, உருக்கம் வராமல் இருக்க முடியுமா?
இசை என்பதே கனிவு தானே!

//நீங்க உங்க வழில போங்க. நன்றி!//

ஹிஹி...கோவிச்சிக்காதீங்க!
எல்லா வழியும் அவனிடிம் தான் இட்டுச் செல்லும்! வழித்துணைப் பெருமாள் அல்லவா அவன்!

Anonymous said...

//கோவிச்சிக்காதீங்க!//
மன்னிக்கணும், கோபமெல்லாம் இல்லை. எனக்கும் நெட்ல தமிழ் சுப்ரபாதம் எம்.எஸ் பாடியது கிடைக்கல.
தூணிலேயும் துரும்பிலேயும் இருக்கிறவன தேடறத நிறுத்தி ரொம்ப நாளாச்சு. உங்க பதிவுகள விரும்பிப் படிப்பதுண்டு.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// AM, July 28, 2007
குமரன் (Kumaran) said...
வேங்கடம் என்ற சொல்லுக்கு விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி இரவிசங்கர்.

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திருவேங்கடத்தானுக்கு
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண்
பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே//

பாசுரங்களுக்கு நன்றி குமரன்.
ஆனா இந்த நேரம் பார்த்து எனக்கு குமரன் பின்னூட்ட விதி ஞாபகம் வருது! என்ன செய்ய? :-))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//துளசி கோபால் said...
எங்க சனிக்கிழமையும் கேட்டுட்டு, உங்க சனிக்கிழமைக்கும் கேட்டேன்!//

ஓ...ரெண்டு சனிக்கிழமையும் கொண்டாடினா, ரெண்டு முறை பிரசாதம் கொடுக்கப்படும் டீச்சர். வெண்பொங்கல் + வடை :-)))

//நீங்க சொன்னமாதிரி ச்சின்னவயசுலே இருந்தே இதைக் கேட்டுக்கேட்டுப் பழகிட்டதாலே,
தமிழ்ச் சுப்ரபாதம் என்னதான் பொருள் விளங்கினாலும், மனசில் 'சட்'னு ஒட்டலை(-://

அது மட்டுமில்லை டீச்சர்...தமிழ் சுப்ரபாத வரிகள் எட்டு எட்டா வருது.
நாலு வரியில் சொல்லப்படுவது, அப்படியே பெரிதா விரிவா மொழி ஆக்கி இருக்காங்க!
மேலும் அழ்வார் பாசுரக் குறிப்புகள் எல்லாம் மிஸ்ஸிங்!

Anonymous said...

RAVI SIR,
Vanakkam, this article is like aravanai prasadam from ARANGAN.
ARANGAN ARULVANAGA.
Anbudan
k.srinivasan.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Anonymous said...
RAVI SIR,
Vanakkam, this article is like aravanai prasadam from ARANGAN.
ARANGAN ARULVANAGA.
//

நன்றி ஸ்ரீநிவாசன் சார்.
உங்க பேரைத் தான் விளக்கிச் சொல்லி இருக்கேன்! :-)

ஸ்ரீநிவாசன் என்பது மிகவும் முக்கியமான திருநாமம்..

Kailashi said...

It is a very nice site, good and meaningful explanations. let your service continue and let the Lord of Thirumala bestow you with all the good things.

S.Muruganandam

வெட்டிப்பயல் said...

அருமையா வந்திருக்கு KRS...

ஆனா எல்லா வார்த்தைக்கும் தமிழ்ல வார்த்தை தேடனுமா என்ன? (இந்த திருக்குடி, திருவகன் மாதிரி).

சரி அப்படினா நாராயணான்ற வார்த்தை எந்த மொழி???

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வெட்டிப்பயல் said...
அருமையா வந்திருக்கு KRS...//

நன்றி தல.

//ஆனா எல்லா வார்த்தைக்கும் தமிழ்ல வார்த்தை தேடனுமா என்ன? (இந்த திருக்குடி, திருவகன் மாதிரி).
சரி அப்படினா நாராயணான்ற வார்த்தை எந்த மொழி???//

நல்ல கேள்வி!
சரி..கேள்வி எனக்கா, ஜிராவுக்கா? :-)

என்னைக் கேட்டா,
நாராயண = வட சொல் ஆனா வட சொல் மாதிரி தெரியல :-)
ஸ்ரீநிவாசன் = வட சொல்லே தான். ஏன்னா "ஸ்ரீ" இருக்கே :-)

வெட்டிப்பயல் said...

////ஆனா எல்லா வார்த்தைக்கும் தமிழ்ல வார்த்தை தேடனுமா என்ன? (இந்த திருக்குடி, திருவகன் மாதிரி).
சரி அப்படினா நாராயணான்ற வார்த்தை எந்த மொழி???//

நல்ல கேள்வி!
சரி..கேள்வி எனக்கா, ஜிராவுக்கா? :-)
//
பேரையெல்லாம் தமிழ் படத்த முயலும் உங்களிருவருக்கும் தான் :-)

//என்னைக் கேட்டா,
நாராயண = வட சொல் ஆனா வட சொல் மாதிரி தெரியல :-)
//

அப்ப அதுக்கும் தமிழ் சொல் கண்டுபிடியுங்களேன்...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வெட்டிப்பயல் said...
நாராயண = வட சொல் ஆனா வட சொல் மாதிரி தெரியல :-)
அப்ப அதுக்கும் தமிழ் சொல் கண்டுபிடியுங்களேன்...//

ஓ கண்டுபுடிச்சிட்டா போச்சு! ஆனா ஒரு சிறு மாற்றம்.
"பாலாஜி"-என்பதில் இருந்து துவங்கலாமா? :-)))

ஜி=என்பது மாற்று மொழியில் மரியாதை விகுதி. அதற்குத் தமிழில் நேர் விகுதி "ர்" அல்லது "ங்க".
எ.கா..
அவன்=அவர்
சொல்லு=சொல்லுங்க
போலோ=போலியே ஜி

இப்ப "பாலா"வுக்கு வருவோம்!
பாலா=பையன்
ஜி=ர்
அப்ப ஒங்க பேரு பையரா? :-)
Payyarஆ இல்லை Fireஆ?

ஐயோ, நீங்க Fireஎன பொங்கி எழறது எனக்குத் தெரியுது....அடிக்க வராதீங்க சாமியோவ்!
ஜிரா எங்க இருந்தாலும் ஓடி வாங்க...அபயம்! அபயம்! :-))

வெட்டிப்பயல் said...

//
ஓ கண்டுபுடிச்சிட்டா போச்சு! ஆனா ஒரு சிறு மாற்றம்.
"பாலாஜி"-என்பதில் இருந்து துவங்கலாமா? :-)))//

தேவையில்லை.. எனக்கு மொழியில் பெரிதாக பற்றில்லை...

ஜி.ராக்கு வேணா ஆரம்பியுங்களேன். ராகம் தமிழ் வார்த்தையா?

ராகவன் தமிழ் வார்த்தையா?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பாலாஜி

இறைவனைத் துதிக்கும் சொற்களில், நாம் துதிக்கும் போது தமிழ்ச் சொற்களால் துதிப்பது இன்னும் சிறப்பு! அன்றிவ் வுலகம் அளந்தாய் அடி போற்றி-ன்னு சொல்லும் போது நம் மனம் இனிக்கும்.

தெலுங்கர்கள் துதிக்கும் போது தெலுங்குச் சொற்களால் துதிப்பது சிறப்பு! ப்ரோவய்ய ப்ரோவய்ய வேங்கடா ரமணா...ஏடு கொண்டல வாடா என்னும் போது அவர்கள் மனமும் இனிக்கும்.

இது துதியோடு நின்றால் சரி!
ஆனா அதுக்காக இறைவனின் பெயரை எல்லாம் தமிழ்ப் படுத்தறேன்னு இறங்கினா, அதுக்கு முடிவே இல்லாமப் போயிடும்!

திருவேங்கடமுடையான் என்னும் அழகிய தமிழ்ச் சொல் உள்ளதே! அதை எப்படி மாற்றி ஆக்க முடியாதோ, அதே போல் தான் ஸ்ரீநிவாசன் என்பதையும் மாற்றி ஆக்க முடியாது!

அதே போல் முருகன் முருகன் தான், கந்தன் கந்தன் தான், சுப்ரமணியன் சுப்ரமணியன் தான்! அரங்கன் எல்லா மொழியிலும் அரங்கன் தான்!

உங்களுக்கு இன்னொன்று தெரியுமா?
பெருமாள் என்பது தனித் தமிழ்ச் சொல் தான்! ஆனா அதை தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், வடமொழியாளர் எல்லாருமே "பெருமாள்" என்று தான் பயன்படுத்துகிறார்கள். யாரும் மாற்றவில்லை!

திருமலையில் உற்சவருக்கு மலையப்ப சுவாமி என்று தான் பெயர்!
மலையப்பன் = தூய தமிழ்ச் சொல்!

"யாதும் மறுக்காத மலையப்பா, நின் மார்பில்" என்று குறையொன்று மில்லை-யில் எம்.எஸ் பாடுவாங்களே!

இந்த மலையப்பனை யாரும் தெலுங்குப்படுத்தவில்லை! வடமொழிப்படுத்தவில்லை!
அப்படியே தான் ஆளுகிறார்கள்!

மலையப்ப சுவாமிநே நமோ நமஹ என்று தான் வடமொழி அர்ச்சனையிலும் வருகிறது!

தெலுங்கில் ஆஸ்தானம் சொல்லும் போது கோவிலில் "மலையப்ப சுவாமி வாரி ஒச்சினாரு! பராக் பராக்! மலையப்ப தேவுடு ஒச்சினாரு! பராக் பராக்!" - இப்படி மலையப்பன் என்று தான் கூறி மகிழ்கிறார்கள்!

G.Ragavan said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ணு முட்டுதே...இம்புட்டு கேள்வி மாறி மாறி மாரி மாதிரி கேட்டிருக்கீங்க. சொல்றேன்.

// வெட்டிப்பயல் said...
ஆனா எல்லா வார்த்தைக்கும் தமிழ்ல வார்த்தை தேடனுமா என்ன? (இந்த திருக்குடி, திருவகன் மாதிரி). //

அது தப்புங்குறியா? தப்புன்னா ஏன் தப்புன்னு சொல்லு.

// சரி அப்படினா நாராயணான்ற வார்த்தை எந்த மொழி??? //

கண்டிப்பாக தமிழ் இல்லை. நாராயண் என்பது வடமொழிப் பெயர். இன்னொரு அன் ஆண்பால்விகுதியாகச் சேர்ந்து நாராயணன்.

//// வெட்டிப்பயல் said...
//
ஓ கண்டுபுடிச்சிட்டா போச்சு! ஆனா ஒரு சிறு மாற்றம்.
"பாலாஜி"-என்பதில் இருந்து துவங்கலாமா? :-)))//

தேவையில்லை.. எனக்கு மொழியில் பெரிதாக பற்றில்லை... //

மொழிப்பற்றைக் கடந்த நல்ல பண்பு எங்களுக்கெல்லாம் இல்லப்பா. என்ன பண்றது. இதோ இங்க நெதர்லாந்து வந்திருக்கேன். இங்க கூட இந்திக்காரங்க வந்து நான் இந்தீலதான் பேசனும்னு எதிர்பார்க்குறான். பூடகமா கேலி பேசுறான். அவனுக்கு இருக்குற அளவுக்கு எனக்கு மொழிப்பற்று இல்லையேன்னு நான் வருத்தப்படலை.

// ஜி.ராக்கு வேணா ஆரம்பியுங்களேன். ராகம் தமிழ் வார்த்தையா?

ராகவன் தமிழ் வார்த்தையா? //

ராகங்குறதோ ராகவங்குறதோ தமிழ்ப் பேர் இல்லைய்யா. அதுனால என்ன சொல்ல வர்ர?

G.Ragavan said...

//// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//ஸ்ரீநிவாஸ் என்பதற்கு இணையான தமிழ்ப் பெயர் என்ன? திருக்குடி என்பதே மிகப் பொருத்தமாக இருக்கும்//

ஜிரா
என்னங்க இது திருக்குடி, தூத்துக்குடின்னு காமெடி பண்ணிக்கிட்டு? :-) //

ஆகா! திருக்குடிங்குறது காமெடியாப் போச்சா! இன்னும் சரியாச் சொன்னா திரு தங்குமிடம். அதாவது திருத்தங்கல். அது இன்னமும் பொருத்தம். அட...அந்த பேர்ல ஒரு ஊரும்..அந்த ஊர்ல ஒரு கோயிலும் இருக்குறது தெரியாதா!

// போதாக்குறைக்கு "ஸ" கரம் வேற போடறீங்க! அதான் தமிழில் "ச" கரம் இருக்கே! இல்லீன்னா பரவாயில்லை!ஸ்ரீநிவாசன் என்றே சொல்லுங்க! //

அப்ப ஸ்ரீ மட்டும் ஏன் போடனும். பேசாம சீனிவாசன்னு சொல்வோமே!

// இது துதியோடு நின்றால் சரி!
ஆனா அதுக்காக இறைவனின் பெயரை எல்லாம் தமிழ்ப் படுத்தறேன்னு இறங்கினா, அதுக்கு முடிவே இல்லாமப் போயிடும்! //

எங்க போகும்? எங்கையும் போகாது. அந்தப் பேர் எதுனால வந்துச்சுன்னு எல்லாருக்கும் புரியும். அவ்வளவுதான். கலைமகள் அலைமகள் மலைமகள்ளாம் அப்ப இனிமே கூப்பிட வேண்டாம். சரஸ்வதி, லஷ்மி, பார்வதீன்னே கூப்புடுவோம்.

// திருவேங்கடமுடையான் என்னும் அழகிய தமிழ்ச் சொல் உள்ளதே! அதை எப்படி மாற்றி ஆக்க முடியாதோ, அதே போல் தான் ஸ்ரீநிவாசன் என்பதையும் மாற்றி ஆக்க முடியாது! //

ஆக்க விருப்பமில்லை என்று சொல்லுங்கள். மொழி மாற்றித்தான் நீங்கள் கூப்பிட வேண்டும் என்ற கட்டாயமில்லை. அதே போல மாற்றிக் கூப்பிடக்கூடாது என்று நீங்கள் கட்டாயப்படுத்தவும் முடியாது.

//// அதே போல் முருகன் முருகன் தான், கந்தன் கந்தன் தான், சுப்ரமணியன் சுப்ரமணியன் தான்! அரங்கன் எல்லா மொழியிலும் அரங்கன் தான்! //

ஆமா ஆமா ஆமா...வடக்கத்திக்காரன் முருக் தோ பியாசா, முருகு மக்கன்வாலான்னு பக்திப் பரவசமாக் கேக்கைல நமக்கும் புல்லரிக்குதே. ரங்கா ரங்கா!

வெட்டிப்பயல் said...

//ராகங்குறதோ ராகவங்குறதோ தமிழ்ப் பேர் இல்லைய்யா. அதுனால என்ன சொல்ல வர்ர?//

முதல்ல உங்க பேரை தமிழ் படுத்துங்க... ஊருக்கெல்லாம் உபதேசம் பண்றதுக்கு முன்னாடி கெசட்ல உங்க பேரை மாத்துங்க...

வெட்டிப்பயல் said...

//சரஸ்வதி, லஷ்மி, பார்வதீன்னே கூப்புடுவோம்.//

ஊரே இப்படி தான் கூப்பிடுது...

அப்ப அப்படி கூப்பிட்டா சாமி வராதா?

வெட்டிப்பயல் said...

//ஆகா! திருக்குடிங்குறது காமெடியாப் போச்சா!//

ஊருக்கு வேணா இப்படி வைக்கலாம் ஆளுக்கு இப்படி வெச்சா அது காமெடி தான்.. பேரரசு படம் மாதிரி

G.Ragavan said...

// தெலுங்கில் ஆஸ்தானம் சொல்லும் போது கோவிலில் "மலையப்ப சுவாமி வாரி ஒச்சினாரு! பராக் பராக்! மலையப்ப தேவுடு ஒச்சினாரு! பராக் பராக்!" - இப்படி மலையப்பன் என்று தான் கூறி மகிழ்கிறார்கள்! //

ஆனா பாருங்க ரவி, மலையப்பா அப்படீங்குறது தெலுங்குப் பேரு கன்னடப் பேருன்னு அவங்கவங்க சொல்லிக்குவாங்க. அதே நேரத்துல ஸ்ரீநிவாஸ் வடமொழிப் பேருன்னு அப்படியே புளகாங்கிதம் அடைஞ்சிருவாங்க. இதுதான் எல்லாப் பேர்களுக்கும். அதுனால எனக்கு ஒன்னுமில்லை. ஆனா தமிழ்ப் பேரைச் சொல்லிச் சொல்லி மகிழ்கிறாங்கன்னு நீங்க சொன்னதாலச் சொன்னேன்.

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...

// தெலுங்கில் ஆஸ்தானம் சொல்லும் போது கோவிலில் "மலையப்ப சுவாமி வாரி ஒச்சினாரு! பராக் பராக்! மலையப்ப தேவுடு ஒச்சினாரு! பராக் பராக்!" - இப்படி மலையப்பன் என்று தான் கூறி மகிழ்கிறார்கள்! //

ஆனா பாருங்க ரவி, மலையப்பா அப்படீங்குறது தெலுங்குப் பேரு கன்னடப் பேருன்னு அவங்கவங்க சொல்லிக்குவாங்க. அதே நேரத்துல ஸ்ரீநிவாஸ் வடமொழிப் பேருன்னு அப்படியே புளகாங்கிதம் அடைஞ்சிருவாங்க. இதுதான் எல்லாப் பேர்களுக்கும்.//

ஜி.ரா,
விதண்டா வாதம் வேண்டாம்...

தெலுகில் மலைக்கும் கொண்டலம்\பர்வதம்னு தான் சொல்லுவாங்க...

சும்மா காசா, பணமானு அடிச்சி விடாதீங்க. ஆன்மீக பதிவெழுதுவதற்கு பதில் நீங்கள் அரசியல் பதிவெழுதலாம்...

G.Ragavan said...

//// வெட்டிப்பயல் said...
//ராகங்குறதோ ராகவங்குறதோ தமிழ்ப் பேர் இல்லைய்யா. அதுனால என்ன சொல்ல வர்ர?//

முதல்ல உங்க பேரை தமிழ் படுத்துங்க... ஊருக்கெல்லாம் உபதேசம் பண்றதுக்கு முன்னாடி கெசட்ல உங்க பேரை மாத்துங்க... //

அடடே! ஓ அப்படி வாரியா நீ! இந்த பாருப்பா...நான் ஒன் பேர மாத்தல. ஒன்னோட பங்காளி பகையாளி பேர மாத்தலை. எல்லாருக்கும் பொதுன்னு சொல்ற சாமியோட பேருக்குத் தமிழ்ல என்ன பொருள்னு கண்டுபிடிச்சிச் சொல்லிக்கிட்டிருக்கோம். சாமி கும்புடுறவனுக்கு அதுகூடத் தெரியக் கூடாதுன்னா ரொம்ப சந்தோசம்.

// வெட்டிப்பயல் said...
//சரஸ்வதி, லஷ்மி, பார்வதீன்னே கூப்புடுவோம்.//

ஊரே இப்படி தான் கூப்பிடுது...

அப்ப அப்படி கூப்பிட்டா சாமி வராதா? //

அப்படிக் கூப்பிடக் கூடாதுன்னு நான் சொல்லலை. மேல ரவிக்கு நான் சொல்லீருக்குறத படி. அந்தப் பேரை மாத்தாமக் கூப்புடுறது தப்புன்னு நான் சொல்ல வரலை. மாத்திக் கூப்புடக்கூடாதுன்னு நீங்க சொல்லக்கூடாதுன்னுதான் நான் சொல்றேன். சரி..கலைமகள் அலைமகள் மலைமகள்னு கூப்டா சாமி வராதா?

// வெட்டிப்பயல் said...
//ஆகா! திருக்குடிங்குறது காமெடியாப் போச்சா!//

ஊருக்கு வேணா இப்படி வைக்கலாம் ஆளுக்கு இப்படி வெச்சா அது காமெடி தான்.. பேரரசு படம் மாதிரி //

ஓ! அது ஆளா! நாங்கூட சாமீன்னு நெனச்சுட்டேன்பா. இப்ப என்ன பண்றது. பீ.பி.ஸ்ரீநிவாஸ்னு ஒரு பாடகரு இருக்காரு. அவர உட்லண்ட்ஸ் ஓட்டல்ல பாத்தேன். அவருகிட்டப் போயி "ஐயா திருக்குடியாரே திருக்குடியாரே"ன்னு பேசலை. ஏன்னா அவரு ஒரு பாடகரு. ஒரு மனிதன். வித்தியாசம் புரியுதா?

வெட்டிப்பயல் said...

//அதே நேரத்துல ஸ்ரீநிவாஸ் வடமொழிப் பேருன்னு அப்படியே புளகாங்கிதம் அடைஞ்சிருவாங்க. இதுதான் எல்லாப் பேர்களுக்கும்.//

தாய்மொழி பற்று தமிழர்களுக்கே உரியதுனு நினைச்சா சிரிப்பு தான் வருது. அவனவனுக்கு அவன் தாய் மொழி மேல பற்று இருக்கும். இங்க நீங்க கன்னடர்களுக்கும், தெலுங்கர்களுக்கும் தாய் மொழி பற்று இல்லைனு சொல்ல வரீங்களா?

G.Ragavan said...

// ஜி.ரா,
விதண்டா வாதம் வேண்டாம்...

தெலுகில் மலைக்கும் கொண்டலம்\பர்வதம்னு தான் சொல்லுவாங்க...

சும்மா காசா, பணமானு அடிச்சி விடாதீங்க. ஆன்மீக பதிவெழுதுவதற்கு பதில் நீங்கள் அரசியல் பதிவெழுதலாம்... //

:)))))))))))) ஏம்ப்பா இப்பிடி....திருமலா அப்படீன்னா என்ன? அப்படித்தான தெலுங்குதேசம் அந்த ஊரக் கூப்பிட்டுக்கிட்டிருக்கு!

என்னது கொண்டலா? ஹெ ஹெ கொண்டல் என்பதும் தமிழ்ச்சொல்தான்னு தெரியாது போல.

நான் அரசியல் பதிவெழுதப் போறது இருக்கட்டும். நீ கொஞ்சம் தமிழைப் படிச்சிட்டு வந்து தப்புல்லாம எழுதுனாத் தாவிலை.

வெட்டிப்பயல் said...

ஏடு கொண்டல வாடா என்பது தெலுங்கு தான் ஜி,ரா.

இங்கே தெலுகு பேசும் நண்பர்களிடையே கேட்டு தான் சொன்னேன்...

G.Ragavan said...

// வெட்டிப்பயல் said...
//அதே நேரத்துல ஸ்ரீநிவாஸ் வடமொழிப் பேருன்னு அப்படியே புளகாங்கிதம் அடைஞ்சிருவாங்க. இதுதான் எல்லாப் பேர்களுக்கும்.//

தாய்மொழி பற்று தமிழர்களுக்கே உரியதுனு நினைச்சா சிரிப்பு தான் வருது. அவனவனுக்கு அவன் தாய் மொழி மேல பற்று இருக்கும். இங்க நீங்க கன்னடர்களுக்கும், தெலுங்கர்களுக்கும் தாய் மொழி பற்று இல்லைனு சொல்ல வரீங்களா? //

மொதல்ல நான் என்ன சொன்னேன்னு முழுசாக் கீழ தர்ரேன். அதுக்குக் கீழ விளக்கம் சொல்றேன்.

// மலையப்பா அப்படீங்குறது தெலுங்குப் பேரு கன்னடப் பேருன்னு அவங்கவங்க சொல்லிக்குவாங்க. அதே நேரத்துல ஸ்ரீநிவாஸ் வடமொழிப் பேருன்னு அப்படியே புளகாங்கிதம் அடைஞ்சிருவாங்க. இதுதான் எல்லாப் பேர்களுக்கும். அதுனால எனக்கு ஒன்னுமில்லை. ஆனா தமிழ்ப் பேரைச் சொல்லிச் சொல்லி மகிழ்கிறாங்கன்னு நீங்க சொன்னதாலச் சொன்னேன். //

திரும்பவும் சொல்றேன். அவங்க அது கன்னடம் தெலுங்குன்னு சொல்லி மகிழ்றது தப்புன்னு சொல்லலை. அவங்க அதத் தமிழ்ப் பேரா நெனைச்சுச் சொல்றாங்கன்னு சொன்னது தப்புன்னு சொல்றேன்.

திரும்பத் திரும்பச் சொல்றேன். என்ன பேர்ல வேணுமோ அப்படியே கூப்புட்டுக்கோங்க. ஆனா அப்படித்தான் எல்லாரும் கூப்புடனும்னு சொன்னா ஏத்துக்க முடியாது. இதுதான் என்னுடைய கருத்து. ஸ்ரீநிவாஸ், சீனிவாசன் இப்படிக் கூப்புடுறவங்க கூப்புடுங்க. ஆனா நான் திருத்தங்கல்னு கூப்புடக்கூடாதுன்னு நீ சொல்லக் கூடாது. அந்தத் திருத்தங்கல் சொல்லட்டும்.

வெட்டிப்பயல் said...

//
திரும்பவும் சொல்றேன். அவங்க அது கன்னடம் தெலுங்குன்னு சொல்லி மகிழ்றது தப்புன்னு சொல்லலை. அவங்க அதத் தமிழ்ப் பேரா நெனைச்சுச் சொல்றாங்கன்னு சொன்னது தப்புன்னு சொல்றேன்.//

கடவுளை அவர்கள் உங்களை மாதிரி மொழியை வைத்து அளவிடுவதில்லைனு நான் சொல்றேன்...

G.Ragavan said...

// வெட்டிப்பயல் said...
ஏடு கொண்டல வாடா என்பது தெலுங்கு தான் ஜி,ரா.

இங்கே தெலுகு பேசும் நண்பர்களிடையே கேட்டு தான் சொன்னேன்... //

ஏடு கொண்டல வாடானி பிலிசேதி தெலுகு அனி நாக்கு தெலுசு. ஆனா தமிழ்லயும் கொண்டல்னா மலைதான்.

வெட்டிப்பயல் said...

இங்க வேற வேலை கொடுத்துருக்கானுங்க. ஒரு 10 நிமிஷம் இருங்க வரேன்...

வெட்டிப்பயல் said...

//
திரும்பத் திரும்பச் சொல்றேன். என்ன பேர்ல வேணுமோ அப்படியே கூப்புட்டுக்கோங்க. ஆனா அப்படித்தான் எல்லாரும் கூப்புடனும்னு சொன்னா ஏத்துக்க முடியாது. இதுதான் என்னுடைய கருத்து. ஸ்ரீநிவாஸ், சீனிவாசன் இப்படிக் கூப்புடுறவங்க கூப்புடுங்க. ஆனா நான் திருத்தங்கல்னு கூப்புடக்கூடாதுன்னு நீ சொல்லக் கூடாது. அந்தத் திருத்தங்கல் சொல்லட்டும்.//

நீங்க திருத்தங்கல்னோ இல்லை வெறும் தங்கல்னோ கூட சொல்லிக்கோங்க...

ஆனா இந்த பேருக்கு தமிழ்ல இல்லை இந்த பேருக்கு தமிழ்ல இல்லைனு புலம்பறதை நிறுத்துங்க. இறைவனை மொழியை வைத்து அளவிடவதை நிறுத்துங்க...

இல்லைனா இந்த மாதிரி எப்பவும் மத்தவங்களோட சண்டை போட்டுட்டே இருங்க. இறை தொண்டு செய்யனும்னு ஆசைபடாதீங்க. அதுக்கு உங்களுக்கு நேரம் கிடைக்காது. சண்டை போடத்தான் சரியா இருக்கும்...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//G.Ragavan said...
ஏடு கொண்டல வாடானி பிலிசேதி தெலுகு அனி நாக்கு தெலுசு.
ஆனா தமிழ்லயும் கொண்டல்னா மலைதான்//

இல்லை ஜிரா
தமிழ்-ல கொண்டல்-னா மேகம்!
மலை கிடையாது!

கொண்டல் மீது அணவும் சோலை...
என்றும்
கொண்டல் வண்ணனை, கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன்...என்றும் கொண்டல் மேகமாகவே வருகிறது!

வெட்டிப்பயல் said...

சரி அப்ப சுப்பிரமணிய எப்படி மாத்தலாம்னு KRS இல்லை குமரன் சொல்லுங்க?

எனக்கு சம்ஸ்கிரதம் தெரியாது...

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//G.Ragavan said...
ஏடு கொண்டல வாடானி பிலிசேதி தெலுகு அனி நாக்கு தெலுசு.
ஆனா தமிழ்லயும் கொண்டல்னா மலைதான்//

இல்லை ஜிரா
தமிழ்-ல கொண்டல்-னா மேகம்!
மலை கிடையாது!

கொண்டல் மீது அணவும் சோலை...
என்றும்
கொண்டல் வண்ணனை, கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன்...என்றும் கொண்டல் மேகமாகவே வருகிறது! //

எனக்கு தூய தமிழ் வார்த்தை தெரியாதுனு ஏமாத்த பார்த்தீங்க ஜி.ரா...

அப்படினா முதல்ல நீங்க போயி படிச்சிட்டு வாங்க. சொல் ஒரு சொல்னு ஊருக்கே சொல்லி தரீங்க...

G.Ragavan said...

// நீங்க திருத்தங்கல்னோ இல்லை வெறும் தங்கல்னோ கூட சொல்லிக்கோங்க...

ஆனா இந்த பேருக்கு தமிழ்ல இல்லை இந்த பேருக்கு தமிழ்ல இல்லைனு புலம்பறதை நிறுத்துங்க. இறைவனை மொழியை வைத்து அளவிடவதை நிறுத்துங்க...

இல்லைனா இந்த மாதிரி எப்பவும் மத்தவங்களோட சண்டை போட்டுட்டே இருங்க. இறை தொண்டு செய்யனும்னு ஆசைபடாதீங்க. அதுக்கு உங்களுக்கு நேரம் கிடைக்காது. சண்டை போடத்தான் சரியா இருக்கும்... //

ம்ம்ம். தம்பி...நான் என்ன சொல்ல வர்ரேன்னே புரிஞ்சிக்காம பேசுனா என்ன செய்றது? இறைத்தொண்டு செய்ற பக்குவம் எனக்குக் கிடையாது. நான் சாதாரணமானவன். நான் புனிதனல்ல. அதை மட்டும் சொல்லிக்க விரும்புறேன். சரி. நாந்தான் சண்டை போடுறேன். அப்படியே இருக்கட்டும். ரெண்டே ரெண்டு கருத்து சொல்லீட்டு முடிச்சிக்கிறேன்.

1. தமிழில் கும்பிட்டால்தான் சாமி காப்பாத்தும்னு நான் சொல்ல வரலை. அதை நான் எங்கையும் சொல்லவும் இல்லை. கடவுள் மொழியைப் பார்த்து அளவிடுவார்னு நானும் சொல்லலை. ஆனா எனக்குப் பிடிச்ச மாதிரிதான் கடவுளைக் கூப்புடுவேன். அது தப்புன்னு யாரும் சொல்ல முடியாது. அது தப்புன்னா....நீ என் கிட்ட என்ன தப்பு சொல்றியோ அந்தத் தப்பு உங்கிட்ட இருக்கு.

2. தமிழ்ல அது இல்ல இது இல்லன்னு நாங்க யாரும் அழலை. ஆனா தமிழுக்கு எதுவும் தேவைன்னா அதைச் செய்ய வேண்டியதும் இருக்கு. நாம இந்தக் கருத்தைப் பத்தி இந்தப் பதிவுல பேசலை. இந்தப் பதிவுல சாமிப் பெயரைத் தமிழ்ப் படுத்தலாமான்னுதான் பேசினோம். அதைத் தாண்டி நான் வெளிய போகலை.

G.Ragavan said...

// எனக்கு தூய தமிழ் வார்த்தை தெரியாதுனு ஏமாத்த பார்த்தீங்க ஜி.ரா...

அப்படினா முதல்ல நீங்க போயி படிச்சிட்டு வாங்க. சொல் ஒரு சொல்னு ஊருக்கே சொல்லி தரீங்க... //

பாலாஜி, உன்னைய ஏமாத்தி எனக்கு என்ன ஆகப் போகுது. கொண்டல் கேள்விக்கு உனக்குதான் விளக்கம் சொல்றேன். ரவிக்கு இல்லை. ஏன் தெரியுமா? கொண்டல்னா மேகம்னு அவரு முடிவெடுத்துட்டாரு. அவருக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. ஆனா அவர் சொன்னத வெச்சு நீ பேசுறதால ஒனக்குச் சொல்றேன்.

வளை என்றால் வளைப்பதுமாகும். எலியிருக்குமிடமும் ஆகும். குலை என்றால் குலைப்பதும் ஆகும். குலை தள்ளுவதும் ஆகும்.

கொண்டல் காற்று கேள்விப்பட்டிருக்கியா? மலையிலிருந்து வீசும் காற்றுக்குக் கொண்டல் என்று பெயர். சித்திரையில் அது மாறும். அது வெயில் காலம். கார் கொண்டற் கால் தள்ள வாய்ப்பில்லை.

எனக்குத் தமிழ் முழுக்கத் தெரியும்னு நான் சொல்லிக்கலை. சொல்லவும் மாட்டேன். ஏன்னா தமிழ்ல எவ்வளவு எனக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும். நன்றி.

G.Ragavan said...

பாலாஜி, இன்னோன்னு, என்னுடைய விளக்கங்களையெல்லாம் சொல்லீட்டேன். இனியும் ஏதாவது ஐயப்பாடு இருந்தால் நல்ல தமிழாசிரியராக பார்த்துக் கேட்டுத் தெரிந்து கொள்.

Anonymous said...

http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D&display=utf8&table=tamil-lex

கருங்கொண்டல் (p. 0753) [ karungkoṇṭal ] n karu-ṅ-koṇṭal . < id. +. South-east wind; தென்கீழ்காற்று. (W.)

கொண்டல்¹ (p. 1143) [ koṇṭal¹ ] n koṇṭal . < கொள்-. 1. Receiving, taking; கொள்ளுகை. உணங்கற் றலையிற் பலிகொண்ட லென்னே (தேவா. 614, 5). 2. [M. koṇṭal.] Cloud; மேகம். கொண்டல் வண்ணா குடக்கூத்தா (திவ். திருவாய். 8, 5, 6). 3. Rain; மழை. (ஞானா. 43, 14, உரை.) 4. [prob. mis read as ஷை] Aries, a constellation of the zodiac; மேஷராசி. (சாதகசிந். காலநிக. 24.) 5. See கொண்டற்கல். (சங். அக.) 6. A girls' game; மகளிர் விளையாட்டுவகை. (W.)

கொண்டல்² (p. 1143) [ koṇṭal² ] n koṇṭal . < குணக்கு. 1. East wind; கீழ்காற்று. கொண்டன் மாமழை பொழிந்த . . . துளி (புறநா. 34, 22). 2. Wind; காற்று. (பிங்.) 3. East; கிழக்கு. Naut.

கொண்டல்வண்ணன் (p. 1143) [ koṇṭalvaṇṇaṉ ] n koṇṭal-vaṇṇaṉ . < கொண்டல்¹ +. [M. koṇṭalvaṇṇan.] Viṣṇu, as the cloud-coloured; [மேகநிறமுடையவன்] திருமால். கொண்டல்வண்ணனை (திவ். அமலனாதி. 1).

கொண்டற்கல் (p. 1143) [ koṇṭaṟkal ] n koṇṭaṟ-kal . < கொண்டல்¹ +. A kind of black stone; மந்தாரச்சிலை. (யாழ். அக.)

சோழகக்கொண்டல் (p. 1676) [ cōẕakakkoṇṭal ] n cōḻaka-k-koṇṭal . < id. +. The S. E. wind; தென்கீழ்காற்று. (W.)

கருங்கொண்டல் (p. 195) [ karungkoṇṭal ] n karuṅ-koṇṭal . < id. +. North-west wind; வடகீழ்க்காற்று. (யாழ். அக.)

கொண்டல்மிதித்தல் (p. 250) [ koṇṭalmitittal ] n koṇṭal-mitittal . perh. கொந்தழல் +. Fire-walking; தீமிதிக்கை. (யாழ். அக.)

வெட்டிப்பயல் said...

ஜி.ரா,
சீரியஸா அரசியல் வாதி மாதிரி தான் பேசறீங்க...

நீங்களே ஆன்மீகம் பெருசில்லனு சொன்னதுக்கப்பறம் உங்ககிட்ட அதை எதிர்பார்க்கிறது என் முட்டாள் தனம்.

தெய்வயானையையே பத்தி அசிங்க அசிங்கமா வந்த பின்னூட்டத்தை நீங்க பிரசுரிச்சப்பவே எனக்கு புரிஞ்சிருக்கனும். முருகனும் தெய்வயானையும் ஒண்ணுனு கூட தோனாம முதல் பொண்டாட்டி யாருனு உலக மகா ஆராய்ச்சி பண்ணப்பவே புத்தி வந்திருக்கனும்.

உங்களை ஆன்மீக பதிவர்னு நான் இன்னும் நினைப்பது முட்டாள் தனம்...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//G.Ragavan said...
ஆனா தமிழ்ப் பேரைச் சொல்லிச் சொல்லி மகிழ்கிறாங்கன்னு நீங்க சொன்னதாலச் சொன்னேன்//

ஜிரா
நான் சொல்ல வந்ததை நீங்க புரிஞ்சிக்கல போல...
மலையப்பன் என்பது தமிழ்ப் பேரு-ன்னு சொல்லிச் சொல்லி அவங்க நிச்சயமா தமிழுக்காக மகிழலை!

ஆனா அதே சமயத்துல அந்தப் பேரை அப்படியே வரிக்கு வரிக்கு மாத்தவும் இல்லை! இறைவனின் திருப்பெயராக இருப்பதனால் அதை அப்படியே எடுத்துக்கிட்டாங்க!

மலை+அப்பன் என்பதைக் கொண்டல+நைனா-ன்னு லிட்டரலா மாத்தியிருக்கலாம்!
மலையப்ப சுவாமி என்பதைக் "கொண்டல நைனா சாமி"-ன்னு இன்னிக்கும் கூப்பிடலாம்! ஆனா அவங்க அப்படிப் பண்ணல! அதைத் தான் சொல்ல வந்தேன்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஆக்க விருப்பமில்லை என்று சொல்லுங்கள். மொழி மாற்றித்தான் நீங்கள் கூப்பிட வேண்டும் என்ற கட்டாயமில்லை. அதே போல மாற்றிக் கூப்பிடக்கூடாது என்று நீங்கள் கட்டாயப்படுத்தவும் முடியாது//

அடியேன் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை ஜிரா!
என் தாய் தந்தையரை நீங்கள் எல்லாரும் இப்படித் தான்டா கூப்பிட வேண்டும் என்று என் நண்பர்களை நான் கட்டாயப் படுத்துவேனா? :-)

அவங்க ஏடு கொண்டல வாடா-ன்னு செல்லமா அவிங்க மொழியிலயும் கூப்பிடுக்கறாங்க!
அதே போல நாமும் அழகிய தமிழ்ப் பெயர்களால் இறைவனை அழைப்போம்! அழைத்தே ஆக வேண்டும்! அதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை! கோதைத் தமிழால் கோவலனைக் கொண்டாடி மகிழ வேண்டும்! துளியும் ஐயம் இல்லை!

சொல்ல வந்தது என்னன்னா
வரிக்கு வரிக்கு மாற்றுகிறேன் பேர்வழி-ன்னு விபரீதமான மாற்றங்களைத் தவிர்க்க வேண்டும்!


இவ்வாறான மாற்றங்களைச் செய்யும் போது இறைப் பற்றைப் பின்னுக்குத் தள்ளி, மொழிப் பற்றை முன்னுக்குத் தள்ளினால் பிரச்சனைகள் தான் வளருமே தவிர, அதனால் ஒரு பயனும் இருக்காது!
மொழியுணர்வும் சிதைபட்டு, மொழி அழகும் கெடும்! இறையுணர்வும் சிதைபட்டு, அதுவும் கெடும்!

இதுவும் ஒரு காதல் உணர்வு போலத் தான்! இதை மெல்லிதாகத் தான் அணுக வேணும்!
மலரினும் மெல்லிது காமம் - சிலர் அதன்
செவ்வித் தலைப் படுவார்!


வம்பு/வீம்பாகப் பார்க்காமல்,
அன்பு/அருளாகப் பார்த்தால் மட்டுமே இறைத் தமிழ் என்னும் மலர் பூத்துக் குலுங்கும்!

வைணவ ஆலயங்களில் மட்டும் எப்படி நம் இன்பத் தமிழ் அன்றும், இன்றும், கொடி கட்டிப் பறக்கிறது? அதற்குக் காரணம் இந்த approach தான்!

சிலர் அதன் செவ்வித் தலைப்பட்டார்கள் அன்று!
அதனால் தான் வைதிகத்தையும் வடமொழிகளையும் தாண்டி, தமிழ் பெருமாள் கோவில்களில் எல்லாம் கோலோச்சுகிறது!


எங்க கிராமத்துல கேக்குறா மாதிரியே கேட்கிறேன் ஜிரா!
உங்களுக்குக் காரியம் பெருசா இல்லை வீரியம் பெருசா?

எனக்கு வீரியம் பெரிசில்லை ஜிரா! நம் தமிழை நம் இறைவன் முன்னிறுத்தும் காரியமே பெருசு!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//G.Ragavan said...
கொண்டல் கேள்விக்கு உனக்குதான் விளக்கம் சொல்றேன். ரவிக்கு இல்லை. ஏன் தெரியுமா? கொண்டல்னா மேகம்னு அவரு முடிவெடுத்துட்டாரு. அவருக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை//

என்ன ஜிரா இப்படிச் சொல்லிட்டீங்க!
எனக்குப் பதில் சொல்ல மாட்டீங்களா? எனக்கு சொல்லுக்குப் பொருள் தெரியலீன்னா ஒரு நண்பனா சொல்லிக் கொடுக்க மாட்டீங்களா? :-(

வெட்டிப்பயல் said...

//சொல்ல வந்தது என்னன்னா
வரிக்கு வரிக்கு மாற்றுகிறேன் பேர்வழி-ன்னு விபரீதமான மாற்றங்களைத் தவிர்க்க வேண்டும்!

இவ்வாறான மாற்றங்களைச் செய்யும் போது இறைப் பற்றைப் பின்னுக்குத் தள்ளி, மொழிப் பற்றை முன்னுக்குத் தள்ளினால் பிரச்சனைகள் தான் வளருமே தவிர, அதனால் ஒரு பயனும் இருக்காது!
மொழியுணர்வும் சிதைபட்டு, மொழி அழகும் கெடும்! இறையுணர்வும் சிதைபட்டு, அதுவும் கெடும்!//

என்னுடைய கருத்து இது மட்டுமே

சரியாக எடுத்து கொடுத்ததற்கு நன்றி!!!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பீ.பி.ஸ்ரீநிவாஸ்னு ஒரு பாடகரு இருக்காரு. அவர உட்லண்ட்ஸ் ஓட்டல்ல பாத்தேன். அவருகிட்டப் போயி "ஐயா திருக்குடியாரே திருக்குடியாரே"ன்னு பேசலை. ஏன்னா அவரு ஒரு பாடகரு. ஒரு மனிதன். வித்தியாசம் புரியுதா?//

எனக்கு நல்லாப் புரியுது ஜிரா
அவரைப் போயி நீங்க திருக்குடி, சாத்துக்குடி-ன்னு கூப்பிட்டு இருந்தீங்கன்னா அவரு குல்லாவால உங்களைக் குட்டி இருப்பாரு!

ஆனா பெருமாள் அப்படிக் குட்ட மாட்டாரு, அப்பாவி-ன்னு தானே அவர மட்டும் வம்பு பண்ணறீங்க? :-)

திருத்தங்கல் தெரியும் ஜிரா - சாத்தூர் கிட்ட இருக்கு. திவ்ய தேசம். அங்க எம்பெருமான பேரு நின்ற நாராயணப் பெருமாள்.
திருக்குறுங்குடியும் தெரியும். அங்க குறுங்குடி நம்பி!

நீங்க திருக்குடி நம்பின்னோ, திருக்குடியான் என்றோ சொல்லி இருந்தீங்கன்னா கூட நான் அப்படியே ரசிச்சிட்டுப் போயிருப்பேன்.
ஆனா திருக்குடி-ன்னு சொன்னா மொட்டையா ஊர் பெயரைச் சொல்லுறாப்பல இருக்கு! அது போயி எப்படி ஸ்ரீநிவாசனுக்குச் சரியா வரும் ஜிரா?

அலைமகள், மலைமகள், கலைமகள் எல்லாம் அழகான ஆக்கங்கள்! அதனால் அவை எனக்குப் பிடித்தமான ஒன்று தான்! மலர் மாமகள் நாச்சியார் என்றே தாயாருக்கு ஒரு பெயர் உண்டு!
அது போல ஒரு நல்ல சொல்லா சொன்னீங்கனா எனக்கு மிக்க மகிழ்ச்சி!

ஸ்ரீநிவாசனை மாற்றுவது ஒன்று தான் நோக்கம். அதற்காக ஏதோ ஒரு ஊர்ப்பெயரை இட்டுச் சரிக்கட்டுவது சரியாக வராது ஜிரா!
ஆழ்வார் பாசுரங்களில் இதற்கு ஈடு உண்டா என்று தேடிப் பார்த்து அழகான ஆக்கமாச் சொல்லுங்களேன்; நாங்களும் தெரிஞ்சிக்கறோம்!

அன்புத்தோழி said...

மிகவும் அருமையான விளக்கம் திரு ரவி. ஆனா திருப்பதியை வேற மாநிலத்துக்கு சொந்தம் ஆக்கிக்டாங்களே என்ன பண்றது.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வெட்டிப்பயல் said...
எனக்கு சம்ஸ்கிரதம் தெரியாது...//

எனக்கும் தான் பாலாஜி!
சில பேரு வடமொழியை ஆகா ஓகோன்னு தலையில தூக்கி வைச்சி ஆடுவாங்க! போதாக்குறைக்குத் தெய்வத் தமிழை நக்கல் அடிப்பாங்க! அப்ப எல்லாம் எனக்கு கோபம் கோபமா வரும்!

அதுக்கப்புறம் தான் அப்படி என்ன தான் அதுல இருக்குன்னு தெரிஞ்சிக்கிறதுக்காக கேள்வி ஞானமா தெரிஞ்சிக்க ஆரம்பிச்சேன்.
தமிழ் மொழியையும் ஆழ்வார் பாசுரங்களையும் வானளாவப் பாராட்டி வரும் வேதாந்த தேசிகரின் சுலோகங்களைப் பற்றி அவுங்களுக்கே எடுத்துச் சொன்னவுடன்.....பசங்க நக்கல் பண்ணறது எல்லாம் நின்னு போச்சு! :-)

அப்புறம் தான் தெரிஞ்சிச்சு..இங்க மொழிகளுக்கும் இறைவனுக்கும் இடையே பிரச்சனையே இல்லை! ....
சரியாப் புரிஞ்சிக்காம தானும் சண்டையிட்டு, அடுத்தவங்களும் சண்டையிட்டு, இந்த மனுசங்களுக்கு மத்தியில் தான் பிரச்சனையே என்று!

இறைவனை மறந்து விட்டு, இறுமாப்பை மட்டும் பிடித்துக் கொண்டார்கள்! ஐயகோ! :-(((


//சரி அப்ப சுப்பிரமணிய எப்படி மாத்தலாம்னு KRS இல்லை குமரன் சொல்லுங்க?//

சுப்பிரம்=வெள்ளை
மணி=மாணிக்கம்/அணிகலன்

சிம்பிளா திருக்குடி ஸ்டைலில் மாத்தணும்-னா.....
வெள்ளைமணி-ன்னு ஆக்க வேண்டியது தான்! :-)))

உங்களுக்கும் கவுண்டமணி பிடிக்கும், அதுனால வெள்ளமணியும் பிடிக்கும்-னு நினைக்கிறேன்! :-))
அதான் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அழைக்க உரிமை இருக்குன்னு சொல்லறாங்களே!
(சு+பிரம்மணியம்=அழகான கடவுள் என்றும் பிரிக்கலாம்!)

அப்பனே முருகா! இது தேவையா? என்னமோ, போப்பா...
சிலர் அதன் செவ்வித் தலைப்பட தமிழ்க் கடவுள் நீ தான் அருள வேணும்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வெட்டிப்பயல் said...
நீங்களே ஆன்மீகம் பெருசில்லனு சொன்னதுக்கப்பறம் உங்ககிட்ட அதை எதிர்பார்க்கிறது என் முட்டாள் தனம்.
உங்களை ஆன்மீக பதிவர்னு நான் இன்னும் நினைப்பது முட்டாள் தனம்...//

பாலாஜி...
ஜிரா ஆன்மீகம் பெரிசில்லை-ன்னு சொல்லலையே! "சீரியஸா அரசியல் வாதி மாதிரி தான் பேசறீங்க..."-ன்னு நீஙக அவரைச் சொல்லலாம்...தப்பில்ல!

ஆனா அவர் ஆன்மீகப் பதிவர் இல்லைனு நீங்க சொல்லறது கொஞ்சம் கடுமையானது! அப்படிச் சொல்லாதீங்க பாலாஜி!
அவர் தமிழும் ஆன்மீகமும் அமுதமாய் தருபவர்.

அவர் தமிழுக்கு அநீதி நடந்து விடக் கூடாது என்ற அச்சத்தில்
"ஆன்"மீகத்தைக் கொஞ்சம்
"ஆண்"மீகமா வெளிப்படுத்தறார்!
முருகன் அருளால் தெளிவு பிறக்கும்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அன்புத்தோழி said...
மிகவும் அருமையான விளக்கம் திரு ரவி. ஆனா திருப்பதியை வேற மாநிலத்துக்கு சொந்தம் ஆக்கிக்டாங்களே என்ன பண்றது.
//

வாங்க அன்புத்தோழி...
வேறு மாநிலத்துக்குப் போனாலும் நிர்வாகம் நல்லபடியா நடந்துச்சுனா சரி...நம்ம மாநிலத்திலேயே இருந்திருந்தா...நம்மூர் அரசியல்வாதிகள் தன்னாட்சி நிறுவனமா TTDஐ ஆக்கி இருப்பாங்களா என்பது கொஞ்சம் சந்தேகம் தான்! :-)

ஒரே சந்தோஷம்! வேறு மாநிலத்துக்குப் போனாலும் தமிழ் கோவிலில் முழங்கிக் கொண்டு தான் இருக்கு! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Kailashi said...
It is a very nice site, good and meaningful explanations. let your service continue and let the Lord of Thirumala bestow you with all the good things//

வாங்க முருகானந்தம் சார்!
முருகானந்தம் - பெயரே ஆனந்தமா இருக்கு! முருகன் வாயால் பெருமாளைப் போற்றுவது போல இருக்கு! :-)

தங்கள் நல்லாசிக்கு நன்றி.
இந்தத் தொடர் நல்லபடியா நிறைய திருவேங்கடமுடையான் திருவருள் வேண்டும்!

குமரன் (Kumaran) said...

சூடு பறக்கும் பின்னூட்ட விவாதங்களுக்குப் பின்னால் வருகிறேன். மேலோட்டமாகப் படித்த போதே சூடு தாங்கவில்லை. பின்னூட்டங்கள் ஒவ்வொன்றாகப் படித்து வந்து பின்னர் ஏதாவது சொல்லத் தோன்றினால் சொல்கிறேன்.

குமரன் (Kumaran) said...

மனத்துக்கினியானைப் பற்றி எஸ்.கே.சொல்லியிருந்ததால நான் சொல்லாம விட்டுட்டேன் இரவிசங்கர். இடுகையில உங்க கேள்வியைப் பாத்ததுமே இது தான்னு தோணியிருச்சு. :-)

பின்னூட்டத்துல பாசுரங்கள் எழுதுறப்பவே நினைச்சேன். பின்னூட்ட விதி இருக்கே. அதை நாமளே பின்பற்றாட்டி எப்படின்னு? நீங்களும் கேட்டுட்டீங்க. :-)

ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழிகுரல் அருவி திருவேங்கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.

காலம் காலமாக கூடவே வாழ்ந்து குற்றமொன்றில்லாத அடிமைத் தொழில் செய்ய வேண்டும் நாம் - யாருக்கு? - மிகுந்த, இனிமையான ஒலியைக் கொடுக்கும் அருவிகள் நிறைந்த திருவேங்கடத்தில் வாழும் அழகுள்ள சோதியாம் என் தந்தைக்குத் தந்தைக்குத் தந்தையானவனுக்கு. (பிரம்மதேவரை பிதாமஹர் - தாத்தா என்று கூறுவார்கள். இவன் அந்தத் தாத்தாவுக்கு அப்பா - என் தந்தை தந்தை தந்தை)

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திருவேங்கடத்தானுக்கு
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண்
பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே.

அவன் வானவர்களுக்கு ஈசன் என்று சொல்வேன். அப்படிச் சொன்னால் அதில் ஏதாவது பெருமை உண்டோ திருவேங்கடத்தானுக்கு? இழிவானவனும் நல்ல குணங்கள் எதுவுமற்றவனும் ஆன என் மேலும் பாசம் வைத்த அந்த பரஞ்சுடர் சோதிக்கு? (நற்குணங்கள் இல்லாத என் மேல் பாசம் வைத்ததே அவனுக்குப் பெருமை - அவனுடைய எளிவந்த தன்மையைப் போற்றுகிறார்).

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர். கடம் என்பதற்கு கடன் என்ற பொருளைக் கூறியிருக்கிறீர்கள். கடத்திற்குப் பாவம் என்றொரு பொருளும் உண்டு தமிழில். அதனால் பாவத்தைப் பொசுக்கும் மலை என்றும் வேங்கடத்திற்குப் பொருள். இந்த இடத்தில் பிறவிக்கடனைப் பொசுக்கும் மலை என்பதை விட பாவங்களைப் பொசுக்கும் மலை என்பது இன்னும் பொருத்தம் என்று நினைக்கிறேன்.

ஸ்ரீனிவாசனே பரம்பொருள் என்று இடுகையில் இருந்ததற்கு 'திருமகள் கேள்வன்' என்ற இனிய தமிழ்ப்பதத்தைச் சொல்லியிருக்கிறேன். ஆனால் அதற்குள் வடசொல்லாராய்ச்சி தொடங்கிவிட்டிருக்கிறது. :-( & :-)

குமரன் (Kumaran) said...

//நன்றி ஜிரா!
வேங்கடம் தமிழ்ச் சொல்லே!
வேங்கடமுடையான் தமிழ்க் கடவுளே!//

பேச்சோடு பேச்சா நம்ம முருகனை வம்புக்கு இழுத்திருக்கார் பாத்தீங்களா இராகவன்? நாம கொஞ்ச நாளைக்கு முன்னாடி கண்ணனும் தமிழ்க்கடவுளே என்று வாதிட்டோமே; அது நினைவுக்கு வருகிறது. :-)

குமரன் (Kumaran) said...

//
திருப்பதி மட்டும் தமிழ்நாட்டுல இருந்துச்சினா, நம்மூர் அரசியல்வாதிகள் என்னென்ன செஞ்சிருப்பாங்க-ன்னு நினைச்சுப் பார்க்க கொஞ்சம் பயமா இருக்கு! :-)//

:-)

//லலிதா சகஸ்ரநாமத்துக்கு உரை எழுத அவர் எவ்வளவோ முயற்சித்தும் விஷ்ணு சகஸ்ரநாமம் தான் அவருக்குக் கையில் கிடைத்ததாம் - படிச்சிருக்கீங்களா?//

நல்லாத் தெரியுமே. :-) அந்த நிகழ்ச்சியை நீங்க எழுதுறீங்களா நான் எழுதட்டுமா? :-)
//
அப்பைய்ய தீட்சிதர் மதுரைக் கள்ளழகர் சன்னிதியில் பதினெட்டாம் படி கருப்பண்ண சாமியின் முன் உண்மையே உரைக்க வேண்டி, நாராயணப் பரம்பொருள் பற்றிச் சொன்னதும் நினைவுக்கு வருகி்றது!
//
இது எனக்குத் தெரியாதே. விவரமாகச் சொல்லுங்கள். அப்பைய தீட்சிதரும் சுவாமி தேசிகனும் நல்ல நண்பர்கள் என்று மட்டும் தெரியும். அப்பைய தீட்சிதரும் ஒரு மத்வ மத ஆசாரியரும் செய்த வாதத்திற்கு தேசிகன் நடுவராக இருந்தார் என்று படித்திருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

திருமலா என்பது திருமலை என்ற தமிழ்ச்சொல்லை அப்படியே அவர்கள் கூப்பிடுவது. சென்னப்பட்டினம் சென்னை ஆனது போல். திருமலா தெலுங்குச் சொல் இல்லை.

கொண்டல் தமிழ்ச்சொல் தான் ஆனால் அதற்கு மேகம் என்றே நான் படித்த வரை பொருள் சொல்லியிருக்கிறது. காற்று என்றும் ஒரு பொருள் உள்ளதென்பது அனானியார் கொடுத்துள்ள பட்டியலில் தெரிகிறது. ஆனால் தமிழில் அதற்கு மலை என்ற பொருள் உண்டா? அறியேன். இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. அனானியார் கொடுத்தப் பட்டியலிலும் பலவகைக் கொண்டல்கள் - பலவகைக் காற்றுகள் தான் தரப்பட்டிருக்கின்றன; ஆனால் கொண்டல் என்ற சொல் மலையைக் குறித்து பின் மலையிலிருந்து வீசும் காற்றையும் குறிக்கிறதா என்றால் ஐயமாகத் தான் இருக்கிறது.

கொண்டல் என்ற சொல் தெலுங்கில் மலை என்ற பொருளில் வழங்குகிறது என்று நினைக்கிறேன். அந்தப் பொருளில் பல பாடல்களைக் கேட்டிருக்கிறேன். கொண்டலலு நிலைகொன்ன கோனேரி ராயலுவாடு என்று தொடங்கும் பாடல் ஒரு எடுத்துக்காட்டு. மலைகளில் வாழ்கின்ற (நிலை கொண்ட) கோனேரி அரசர்பெருமானே என்று பொருள் - பாருங்கள் எத்தனைத் தமிழ்ச் சொற்களை அப்படியே வழங்குகிறார்கள் அங்கே - தமிழிலிருந்து பிறந்த மொழி அது என்பதால் அது மிக இயற்கை. சுவாமி புஷ்கரணி என்று வழங்கும் திருமலைமேல் இருக்கும் திருக்குளத்திற்கு அழகான தமிழ்ப்பெயர் தான் கோனேரி - கோன் + ஏரி = சுவாமி + புஷ்கரணி. ஆழ்வார்கள் செய்த மொழி மாற்றமோ? இங்கிருந்து அங்கு மொழி பெயர்க்கப்பட்டதா, அங்கிருந்து இங்கு மொழிபெயர்க்கப்பட்டதோ அறியேன்.

குமரன் (Kumaran) said...

சரி இங்கே சூடாக விவாதிக்கப்பட்டவைகளுக்கு என் சிற்றறிவிற்கு ஏற்றக் கருத்துகளைச் சொல்கிறேன்.

பொதுவாகப் பெயர்ச்சொற்களை மொழி மாற்றம் செய்யக் கூடாது என்றொரு வாதம் இருக்கிறது. என்னைக் கேட்டால் பல இடங்களில் மொழி மாற்றம் செய்யக்கூடாது என்பதை விட செய்ய முடியாது என்பதே சரி.

ஆனால் இறைவன் திருப்பெயர்களை மொழி மாற்றம் செய்யலாமா என்றால் பல இடங்களில் அது முடியும்; செய்யலாம் என்பதே என் கருத்து. இறைவன் திருப்பெயர்கள் ஒவ்வொன்றும் குணங்களின் அடிப்படையில் இருப்பது. ஒரு பெயர் ஒரு உரு என்று இல்லாதவனுக்குப் பல பெயர்களும் பல உருக்களும் இருப்பது எதன் அடிப்படையில்? குணங்களின் அடிப்படையில் தானே? விஷ்ணு சஹஸ்ரநாமங்களில் ஒவ்வொன்றும் ஒரு குணத்தைக் குறிப்பது தானே. அதற்குப் பொருள் சொல்லுவதோடு நின்று விடாமல் அந்தப் பெயர்ச் சொற்களைத் தமிழ்ப்பெயர்ச்சொற்களாக மாற்றினால் என்ன தவறு? அதனால் தமிழின் வளம் மிகும் என்பதில் ஐயமே இல்லை.

பெரியவர்கள் செய்தால் பெருமாளே செய்த மாதிரி என்று சொல்வார்களே?! ஆழ்வார்கள் நாயன்மார்கள் திருப்பாடல்களில் சென்று பார்த்தீர்களென்றால் அவர்கள் செய்த இறைவன் திருப்பெயர்களின் மொழிமாற்றங்களைக் காண்பீர்கள். அச்சுதன், கேசவன், விட்டுணு, சிரீதரன், நாரணன், இருடீகேசன் போன்று வடசொற்களை அப்படியே தமிழ்ப்பலுக்கலில் சொன்னதையும் காண்பீர்கள்; திருமகள் கேள்வன் (ஸ்ரீநிவாச), ஆழிவல்லான் (சக்ரதாரி), நாகப்பகைக்கொடியான் (கருடத்வஜ), நாகணைப்பள்ளிகொண்டான் (அனந்தசயன) என்று வடசொற்களைத் தமிழாக்கி அவன் குணங்களைப் போற்றுவதையும் காண்பீர்கள். அந்தப் பெரியவர்கள் சென்ற வழி சென்று நாமும் தமிழாக்கி அவன் திருப்பெயர்களைச் சொல்வதும் சரியே. அப்படியே தமிழ்ப்பலுக்கலுல் (தமிழ் உச்சரிப்பில்) வடசொற்களைச் சொன்னாலும் சரியே. இது சரி அது தவறு என்று சொல்வதில் பொருளில்லை.

அப்படி தமிழ்ப்படுத்தியதால் அவர்கள் பெயரையும் தமிழ்ப்படுத்திக் கொண்டு வாருங்கள் என்று யாரும் சொல்லவில்லை. ராகவன் தமிழ்ப்பலுக்கலில் இராகவன் ஆனதைப் போல் விஷ்ணுசித்தன் தமிழ்ப்பலுக்கலில் விட்டுசித்தன் ஆகிவிடுகிறார் - அப்படித் தான் அவர் தன் பாடல்களில் கையொப்பம் இடுகிறார், நம் இராகவன் 'பக்தியுடன்' கையொப்பம் இடுவதைப் போல். :-)

குமரன் (Kumaran) said...

//வம்பு/வீம்பாகப் பார்க்காமல்,
அன்பு/அருளாகப் பார்த்தால் மட்டுமே இறைத் தமிழ் என்னும் மலர் பூத்துக் குலுங்கும்!

வைணவ ஆலயங்களில் மட்டும் எப்படி நம் இன்பத் தமிழ் அன்றும், இன்றும், கொடி கட்டிப் பறக்கிறது? அதற்குக் காரணம் இந்த approach தான்!

சிலர் அதன் செவ்வித் தலைப்பட்டார்கள் அன்று!
அதனால் தான் வைதிகத்தையும் வடமொழிகளையும் தாண்டி, தமிழ் பெருமாள் கோவில்களில் எல்லாம் கோலோச்சுகிறது!

எங்க கிராமத்துல கேக்குறா மாதிரியே கேட்கிறேன் ஜிரா!
உங்களுக்குக் காரியம் பெருசா இல்லை வீரியம் பெருசா?

எனக்கு வீரியம் பெரிசில்லை ஜிரா! நம் தமிழை நம் இறைவன் முன்னிறுத்தும் காரியமே பெருசு!
//

இந்தக் கருத்து ஏற்புடைத்தே. ஆனால் அது இராகவனுக்காக இல்லாமல் பொதுவாகச் சொன்ன கருத்தாக இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அண்ணாமலையாரும் உண்ணாமுலையம்மனும் எப்படி யாருக்கும் தெரியாமல் அருணகிரீஸ்வரராகவும் அபீதகுஜாம்பாளாகவும் ஆனார்களோ அது போல் வேங்கடேஸ்வர ஸ்வாமியும் பத்மாவதியும் யாருக்கும் தெரியாமல் திருவேங்கடமுடையானாகவும் அலர்மேல்மங்கையாகவும் ஆகிவிடவேண்டும். இப்படி திருப்பெயர்கள் மொழி மாற்றம் அடைவது மிக இயற்கை. அதில் வீம்பும் வீரியமும் காட்டப்படுவது இல்லை.

வெட்டிப்பயல் said...

குமரன்,
மறுபடியும் சொல்றேன். உங்களை மாதிரி ஆன்மீகத்தை வளர்க்கிறேன் பெருசா கிழிக்கிறேனு சொல்ற ஆளுங்கதான் தமிழ் வார்த்தையா தெலுகு வார்த்தையா சம்ஸ்கிரதமா வார்த்தையானு ஆராய்ச்சி பண்றீங்க.

சாதாரணமா பக்தியோட இருக்கவனுக்கு அந்த வார்த்தையை கேட்டவுடனே உடனே இறைவனின் திருவுருவம் தான் கண் முன்னே நிற்கும்.

உங்களை மாதிரி மொழினு ஒரு லேயரை நடுவுல போட்டு பார்க்கிறதில்லை.

கோவிந்தா கோவிந்தானு சொல்றவனுக்கு அது எந்த மொழினு தெரியறதில்லை. அரோகரானு சொல்றவனுக்கும் அது எந்த மொழினு தெரியறதில்லை. அவன் கண்ணுக்கு இறைவன் திருவுருவம் மட்டும் தான் தெரியும். இதுக்கூட புரியாம நீங்க எல்லாம் எண்ணத்த எழுதி கிழிக்கிறீங்கனு எனக்கு புரியல.

VSK said...

இறையை மொழியால் உணர்கையில் பரவசம் அதிகம் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

அதுமொழியை மட்டுமே பார்ப்பவர்க்கு மட்டும்!

ரோஜாவை எப்பெயர் சொல்லி அழைப்பினும் அது ரோஜாதான் என ஷேக்ஸ்பியர் கூறிச் சென்றான்.

நம்மவர் அதனை இன்னும் உணராமல், இது வட சொல்லா, தமிழ்ச்சொல்லா எனச் சண்டையிடுவது அவர்களது முதிர்ச்சியையே[!!>??] காட்டுகிறது.

எப்படி அழைப்ப்பினும் உன்னை? எங்கே காண்பேன் உன்னை? என நம் சிந்தனை இருப்பதே ஆன்மீகம்.

மொழி ஆராய்ச்சி தேவயல்ல என்பது என் பணிவான் கருத்து.

பாலாஜி சற்று உணர்ச்சிவசப்பட்டு சொல்லியிருப்பினும், அவர் கருத்தோடு நான் பெரும்பாலும் ஒன்றுகிறேன்.

ஆண்டவனை அழையுங்கள்...அவனை அடைய!

அழைக்க மட்டுமே அல்லாமல்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குமரன் (Kumaran) said...
இரவிசங்கர். கடம் என்பதற்கு கடன் என்ற பொருளைக் கூறியிருக்கிறீர்கள்.....
இந்த இடத்தில் பிறவிக்கடனைப் பொசுக்கும் மலை என்பதை விட பாவங்களைப் பொசுக்கும் மலை என்பது இன்னும் பொருத்தம் என்று நினைக்கிறேன்.
//

பாவங்களைப் பொசுக்கும் மலை. பாவங்களை மட்டுமா பொசுக்கும்?
புண்ணியக் கணக்கையும் தீர்க்குமே குமரன்!

அதனால் தான் புண்ணியம், பாவம் இரண்டையும் கடந்து, பிறவி என்னும் கடனைத் தீர்த்து வைக்கும் மலை என்று கடத்துக்கு "கடன்" என்று பொருள் கொண்டேன் குமரன்.

வெம்மையான பிறவிக் கடனைத் தீர்க்கும் மலை - வேங் கட மலை!

அதை ஒன்றுமே தொழ நம் வினை (நல்வினை/தீவினை இரண்டுமே) ஓயுமே!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திருவேங்கடத்தானுக்கு//.

அப்படிச் சொன்னால் அதில் ஏதாவது பெருமை உண்டோ திருவேங்கடத்தானுக்கு? இழிவானவனும் நல்ல குணங்கள் எதுவுமற்றவனும் ஆன என் மேலும் பாசம் வைத்த அந்த பரஞ்சுடர் சோதிக்கு....//

அது தேசமோ திருவேங்கடத்தானுக்கு?
எவ்வளவு அழகான விளக்கம்!
மிக மிக நன்றி குமரன்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குமரன் (Kumaran) said...
//நன்றி ஜிரா!
வேங்கடம் தமிழ்ச் சொல்லே!
வேங்கடமுடையான் தமிழ்க் கடவுளே!//

பேச்சோடு பேச்சா நம்ம முருகனை வம்புக்கு இழுத்திருக்கார் பாத்தீங்களா இராகவன்?//

ஆகா, அது என்ன "நம்ம" முருகன், அதுவும் ஜிரா-வை பார்த்து?
எங்க எல்லாரின் முருகன் அவன்! அவனை என்னைக்கும் எங்க எல்லார் கிட்ட இருந்தும் விட்டுக் கொடுக்க மாட்டோம், ஆமாம்! :-)))))

குமரன் (Kumaran) said...

//மறுபடியும் சொல்றேன். உங்களை மாதிரி ஆன்மீகத்தை வளர்க்கிறேன் பெருசா கிழிக்கிறேனு சொல்ற ஆளுங்கதான் தமிழ் வார்த்தையா தெலுகு வார்த்தையா சம்ஸ்கிரதமா வார்த்தையானு ஆராய்ச்சி பண்றீங்க.
//

பாலாஜி, இதே போன்ற தேவையற்ற வார்த்தைகளைத் தான் இராகவனை நோக்கியும் வீசியிருந்தீர்கள். ஆழ்வார்களின் அருளிச்செயல்களை எடுத்துக் காட்டியிருந்தேன். அவர்களை நோக்கியும் உங்கள் சுடுசொற்கள் நீளவில்லையென்று நம்புகிறேன். எல்லா பெயர்களும் இறைவனை நினைவூட்டும் போது இருடீகேசன் என்றால் என்ன 'புலனாள்வான்' என்றால் என்ன? இரண்டும் ஒன்று தானே. மொழி அறிவும் இருக்கும் என்னைப் போன்றோருக்கு இருடீகேசன் என்றவுடன் எப்படி இறைவன் திருவுருவம் தோன்றுகிறதோ அது போல் 'புலன்களை ஆள்பவன்' என்னும் போதும் தோன்றுகிறது. மொழியைப் பற்றித் தெரியாதவர்கள் இருடீகேசன் என்னும் போது அவன் திருவுருவத்தைக் காண்பதைப் போல் தம் மொழியில் 'புலன்களை ஆள்பவன்' என்னும் போது அவனுடைய நற்குணங்களுடன் சேர்ந்து அவன் திருவுருவத்தைக்காண்பார்களே?! இறைவனை ஆயிரம் நாமங்களுடன் பாடுவது எதற்காக? அவன் திருக்குணங்களையும் சிந்திப்பதற்காகத் தானே? ஆழ்வார்கள் எல்லோரும் இறைவனை வணஙகுவதைப் பெரியவர்கள் 'குணானுபவம் செய்தல்' என்பார்கள் - அதாவது அவன் திருக்குணங்களை எண்ணி எண்ணி அனுபவித்தல் என்று பொருள். அந்த குணானுபவம் கோவிந்தா என்றாலும் நடக்கும்; மொழி புரியாதவர்களுக்கு 'பசுக்களை மேய்ப்பவனே' என்னும் போது கூடுதலாக நடக்கும். நாங்கள் மொழியை வேண்டுமென்றே நடுவில் இடுவதில்லை. மொழியால் நடுவில் ஏற்படும் திரையை நீக்கி இறையனுபவம் எல்லோருக்கும் இன்னும் கூடவேண்டும் என்று எண்ணுகிறோம். அது கூட புரியாமல் வாதம் புரிய நீங்கள் வந்திருக்கலாம். இந்தக் கேள்விகளை எல்லாம் பல ஆண்டுகளாகக் கேட்டு பெரியவர்கள் எப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்து அதன் படி நடக்கத்தான் நான் முயல்கிறேன். மற்றபடி ஆன்மீகத்தை வளர்க்கிறேன் பேர்வழி என்று நானாகச் சொல்லிக் கொண்டதில்லை. பெரியோர்களான ஆழ்வார் ஆசாரியர்கள் செய்யாத இறைத்தொண்டை அடியேன் செய்வதாக எண்ணுவதில்லை. அவன் அருளால் நீங்களும் நானும் அவன் திருப்பெயர்களைச் சொல்லி நம் பாவபுண்ணியங்களைக் கிழிப்போம். அதனைக் கிழிக்கத் தான் நாம் இங்கே இருக்கிறோம். வேறொன்றையும் கிழிக்க இல்லை. இப்போது எதனைக் கிழிக்கிறேன் என்று புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

குமரன் (Kumaran) said...

எஸ்.கே. நீங்கள் சொல்வது போன்ற உவமைகளை பள்ளியில் படிக்கும் போதே அடியேன் நண்பர்களுக்குச் சொல்லியிருக்கிறேன். ரோஜாவை எப்பெயர் கூறி அழைத்தாலும் அது ரோஜா தான்; இல்லையெனவில்லை. நோய் தீர்ப்பதற்காகக் கொடுக்கப்படும் மருந்தை அந்த மருந்தின் பெயரோ அந்தப் பெயரின் பொருளோ தெரியாமல் அருந்தினாலும் அந்த மருந்து தன் வேலையைச் செய்து நோயைத் தீர்க்கும். அது போல் இறைவனின் திருப்பெயரை அதன் பொருள் தெரியாமல் உரைத்தாலும் அதன் வேலையை அது செய்து பிறவி நோயைத் தீர்க்கும்; வழிப்பறி திருடன் மரா என்று சொல்லி முதல் காவியம் இயற்றியதைப் போல். அதே போல் 'சுகர்' என்று சொன்னால் ஆங்கிலம் தெரிந்த நம்மால் அந்த சர்க்கரையின் இனிப்புச் சுவையை (அதன் குணத்தை) உடனே உணரமுடியும்; ஆங்கிலம் தெரியாதவர்க்கு? 'சர்க்கரை' என்னும் போது அவர்களுக்குக் கிடைக்கும் குணானுபவம் 'சுகர்' என்னும் போது கிடைக்காது. அவர்களிடம் 'சுகர் என்றால் சர்க்கரை' என்று எடுத்துச் சொன்னால் அது மொழிவெறி ஆகிவிடுமா? அவர்களிடம் நீங்கள் எல்லாம் ஆங்கிலம் படித்து என்னதான் கிழிக்கிறீர்கள் என்று ஆவேசப்படுவார்களா? :-)

நம்மவர் வடசொல்லா தமிழ்சொல்லா என்று சண்டையிடவில்லை எஸ்.கே. எந்த உணர்வு உண்ணாமுலையம்மையை அபீதகுஜாம்பாள் ஆக்கியதோ அதே போன்ற உணர்வே வடசொல்லைப் பார்க்கும் போது வருகிறது. கோனேரி என்றும், திருமலா என்றும், மலையப்பா என்றும் மொழியை மாற்றாமல் சொல்பவர்களைப் போல் நம்மவர்களும் இருடீகேசா, வாமனா, திரிவிக்கிரமா என்று மொழியை மாற்றாமல் சொல்கிறோம். ஆனால் தெலுங்கர்களிலே தமிழும் தெலுங்கும் அறிந்தவர்கள் இருந்தால் அவர்கள் கட்டாயம் கோனேரி, திருமலா, மலையப்பா போன்றவை தமிழ்ச்சொற்கள் என்று சொல்லுவார்கள். அப்படி எடுத்துச் சொல்வது சண்டையாகாது. ஏன் எடுத்துச் சொல்கிறீர்கள் என்று கேட்கப்படும் போது காரண காரியங்களை அமைதியாக எடுத்துக் கூறுகிறோமே அதுவே எங்கள் முதிர்ச்சியைக் காட்டுகிறது. அதனை விடுத்து 'என்ன கிழிக்கிறீர்கள்' என்று ஆவேசப்படுவது? :-)

மொழி ஆராய்ச்சி தானாக நடப்பது, இயற்கையானது என்பதை மேலே விளக்கியிருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

எம்பெருமான் வேங்கடநாதன் பாலாஜி என் பொறுமை சோதிக்கிறானோ சுடுசொற்களை வீசி? :-)

குமரன் (Kumaran) said...

ஆமாம் இரவிசங்கர். புண்ணிய பாவங்கள் இரண்டையும் நீக்கி சமன் கொள் வீடு தரும் தடங்குன்றம் தான் திருவேங்கடம். கடம் என்பதற்கு பாவம், கடன் என்று இரண்டு பொருளும் இருக்கிறது.

நம்ம என்றால் உங்களையும் சேர்த்து தானே இரவிசங்கர்? :-) எங்க ஊருக்கு வந்தீங்கன்னா 'எங்க' என்ற சொல்லுக்கும் 'நம்ம' என்ற சொல்லுக்கும் வேறுபாடு இல்லாம புழங்குவோம். 'நம்ம வீடு', 'நமக்கு அதுதான் பிடிக்கும்' அப்படி சொல்லிக்கிட்டே போகலாம். :-) சில தாய்மார்கள் தப்பித்தவறி 'நம்ம பையன்'ன்னு சொல்லி மாட்டிக்கிறதும் உண்டு. :-)

குமரன் (Kumaran) said...

திருக்குடி, திருத்தங்கல், திருவகன் போன்ற சொற்களை நாமாகப் பரிந்துரைப்பதை விட ஆழ்வார்களின் அருளிச்செயல்களிலும் மற்றைய இலக்கியங்களிலும் என்ன சொற்களை எடுத்தாண்டிருக்கிறார்கள் என்று பார்த்தால் இன்னும் நல்லது. அந்த இலக்கியங்கள் தெரிந்தால் அப்படி செய்வது இயற்கையாக நடக்கும்; தெரியாத போது நாமே முயன்று பார்த்தால் அதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. புதிது புதிதாகப் பொருளுரைகளும் புதிய பெயர்களும் செய்தால் இறை அனுபவத்திற்கு இன்னும் கூடுதல் சுவை தானே?! பரஸ்பரம் பாவயந்தி - ஒருவருக்கொருவர் என் பெருமைகளையும் குணநலன்களையும் சொல்லி மகிழ்வுறுங்கள் என்று கீதாசாரியன் சொன்னது இதனைத் தானே?!

(திருக்குடி என்றதோடு நிறுத்திவிடலாம். திருக்குடியன் என்றால் ஒரு மாதிரியாக இருக்கிறது. :-)) )

வெட்டிப்பயல் said...

குமரன்,
உங்க மனம் புண்படற மாதிரி பேசினதுக்கு மன்னிக்கவும்.

பக்தியோடு செய்யப்படும் போது எதுவும் தவறாக தெரிவதில்லை. இங்கே VSK ஐயா மனதிற்கினியானு சொன்னது அழகான தமிழ் பதம். இப்படி ஒரு சொல் இருக்குனு அவர் சொல்றப்ப அது கேட்கவே சந்தோஷமா இருக்கு.

அதே பக்தியோட சொல்லியிருந்தா திருக்குடினு வந்திருக்காது. மரியாதைக்காக சேர்க்கப்படும் விகுதிக்கூட சேர்க்கப்படவில்லை.

நானும் வீம்புக்காக சுப்பிரமணியை வெள்ளைமணினு சொல்றேனு சொல்லலாம் குமரன். ஆனா அது கேட்க நல்லா இருக்கானு சொல்லுங்க.

//ஸ்ரீநிவாஸ், சீனிவாசன் இப்படிக் கூப்புடுறவங்க கூப்புடுங்க. ஆனா நான் திருத்தங்கல்னு கூப்புடக்கூடாதுன்னு நீ சொல்லக் கூடாது. அந்தத் திருத்தங்கல் சொல்லட்டும்.//

இதையே மாத்தி முருகனை கேவலமா ஒரு வார்த்தைல சொல்லி நான் அப்படித்தான் கூப்பிடுவேன். அப்படி கூப்பிடக்கூடாதுனு அந்த முருகனே வந்து சொல்லட்டும்னு சொல்லலாமா குமரன்?

அதைதான் நீங்க ஆதரிக்கறீங்களா?

இந்த விதண்டாவாதத்தை தான் நான் உங்ககிட்ட (இறை தொண்டாற்றும் பதிவர்கள்) வெறுக்கிறேன். உங்களுக்கு எல்லாம் புரிய வைக்கறதுக்காக இந்த மாதிரி முருகனை சொல்றோம்னு நினைக்கக்கூட மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கு.

எனக்கு ஹரியும் சிவனும் ஒன்று தான். இதையே இங்க விளக்கம் சொன்ன எல்லாரையும் சொல்ல சொல்லுங்க பார்க்கலாம்.

இந்த பதிவே சமஸ்கிரத பாட்டை தமிழ்ல எல்லாருக்கும் புரிய வைக்கதானே. இதை நான் தப்புனு சொல்லலையே.

//ஆனா பாருங்க ரவி, மலையப்பா அப்படீங்குறது தெலுங்குப் பேரு கன்னடப் பேருன்னு அவங்கவங்க சொல்லிக்குவாங்க. அதே நேரத்துல ஸ்ரீநிவாஸ் வடமொழிப் பேருன்னு அப்படியே புளகாங்கிதம் அடைஞ்சிருவாங்க.//

//திருத்தணியா திருப்பதியான்னு ஒரு சண்டையப் போட்டு திருத்தணி ஒருவழியா கெடைச்சது. நல்லவேள. இல்லைன்னா முருகனக் கும்பிடக் கூட ஸ்டேட் விட்டு ஸ்டேட் போக வேண்டியிருக்கும்.//

இதுக்கெல்லாம் விளக்கம் என்னனு சொல்லுங்க. நான் தான் ஞான சூனியம். நீங்க கொஞ்சம் விளக்குங்களேன். யாருக்கு பற்று எதில்னு கொஞ்சம் தெளிவா என்னோட மரமண்டைக்கு புரியற மாதிரி சொல்லுங்களேன்.

அப்படியே கடவுள் என்ற பதத்திற்கும் அர்த்தம் சொல்லுங்களேன். நான் தமிழ்லயும் கொஞ்சம் வீக்.

குமரன் (Kumaran) said...

பாலாஜி. என் விளக்கங்கள் எல்லாம் இந்தக் கேள்வியில் என் கருத்து என்ன என்பது தான். அதனை இராகவன் சொன்னதற்கோ அவர் கருத்துக்களுக்கோ ஆன விளக்கம் என்பது போல் உங்களுக்குத் தோன்றியிருந்தால் அப்படித் தோன்ற செய்ததற்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் சொன்ன விளக்கங்களின் பகுதிகள் பலவற்றில் இராகவனுக்கு ஒப்புதல் இருக்காது என்பதே என் எண்ணம். அதனால் என் எண்ணங்களையும் விளக்கங்களையும் அவர் சொன்ன கருத்துகளுக்கான விளக்கம் என்று எண்ணவேண்டாம்.

சுப்ரமணி என்றால் வெள்ளைமணி என்று சொன்னது தவறான விளக்கம். சுப்ரம்மணியம் என்பது தான் சரியான பெயர். அதற்கான பொருளையும் சரியாகவே தந்திருக்கிறார் இரவிசங்கர்.

இராகவன் திருக்குடி என்றார். எடுத்தவுடனேயே நீங்கள் எகிறினீர்கள். அதற்கு மாற்றுக்கருத்து சொல்ல இராகவனும் எகிறினார். நீங்களும் இராகவனும் இரவிசங்கரும் நானும் எந்த அளவிற்கு நண்பர்கள் என்பதனை நாம் அறிவோம். நீங்கள் இருவரும் பரிமாறிக் கொண்டதை நண்பர்களுக்கு இடையிலே நடந்த கருத்து மோதல் என்றே எடுத்துக் கொள்ளலாம்.

இப்போது கோவிலுக்குச் செல்கிறோம். போய் வந்தவுடன் உங்கள் கேள்விகளுக்கு பதில்களாக இன்னும் சொல்கிறேன்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அச்சோ பெருமாளே! இந்தப் பதிவை நான் அடுப்பங்கரையில் அமர்ந்து கொண்டு எழுதினேனா என்ன? இப்படிச் சூடாகுதே!

குமரன், நீங்கள் பெரிய பெரிய விளக்கமாகப் பின்னூட்டம் இட்டும் உடனே வெளியிட முடியவில்லை! வீட்டில் நெட் டவுன்! மன்னிக்கவும்! ப்ளாக்பெர்ரியில் யூனிகோட் தெரிய என்ன செய்ய வேண்டும் என்று யாரேனும் தெரிஞ்சா சொல்லுங்களேன்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இது நெட் போகும் முன், குமரனுக்கு டைப் செய்து வைத்தது.

// குமரன் (Kumaran) said...
சென்னப்பட்டினம் சென்னை ஆனது போல். திருமலா தெலுங்குச் சொல் இல்லை//

மிகவும் சரி, குமரன்!

//கொண்டல் தமிழ்ச்சொல் தான் ஆனால் அதற்கு மேகம் என்றே நான் படித்த வரை பொருள் சொல்லியிருக்கிறது. ஆனால் தமிழில் அதற்கு மலை என்ற பொருள் உண்டா? அறியேன். இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது//

இது வரை இல்லை என்று தான் நானும் நினைக்கிறேன் குமரன். இலக்கியங்களில் அப்படி யாரும் எடுத்தாளவில்லை, இது வரை!

//கொண்டல் என்ற சொல் தெலுங்கில் மலை என்ற பொருளில் வழங்குகிறது என்று நினைக்கிறேன். கொண்டலலு நிலைகொன்ன கோனேரி ராயலுவாடு//

அருமையான அன்னமாச்சர்யர் கீர்த்தனை குமரன்!

//எத்தனைத் தமிழ்ச் சொற்களை அப்படியே வழங்குகிறார்கள் அங்கே//

இதைத் தான் நானும் குறிப்பிட்டேன் குமரன். ஆக்கம் செய்யலாம், அது அழகான ஆக்கமாகவும், இயைந்தும் இருக்க வேணும். அவ்வளவே!
"கோனேரி ராயலுவாடு" என்பதில் கோனேரியை தமிழில் இருந்து அப்படியே எடுத்துக் கொண்டார்கள்! அந்தக் கோனேரிக்கு அவன் "ராயலு" என்று தெலுங்காக்கிக் கொண்டார்கள்!
(தெலுங்கின் பிரபலமான "உ" வை இதுக்கும் சேத்துகிட்டாங்கப்பா :-))))))

//கோனேரி - கோன் + ஏரி = சுவாமி + புஷ்கரணி. ஆழ்வார்கள் செய்த மொழி மாற்றமோ? //

இந்தப் பதம் பற்றி அடுத்த சுப்ரபாதப் பதிவில் வருகிறது குமரன்.
ஸ்வாமி புஷ்கரிணி என்ற நீண்ட சொல்லை எவ்வளவு "பதமா" பதம் ஆக்கியிருக்காரு பாருங்க!
இப்படிப்பட்ட ஆக்கங்கள் தான் தேவை!

கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே என்பது குலசேகராழ்வார் பாசுரம்.
கோனேரி ராஜபுரம் என்ற ஒரு ஊர் தமிழ்நாட்டில் உள்ளது, தெரியுங்களா?

குமரன் (Kumaran) said...

'இறைவனின் திருப்பெயரை மொழி மாற்றம் செய்வதற்கு அவருக்கு உரிமை இல்லை என்று இவர் சொல்லக்கூடாது. அதே நேரத்தில் மொழி மாற்றம் செய்யாமல் அப்பெயரை அழைப்பதில் இவருக்கு உரிமை இல்லை என்று அவர் சொல்லக்கூடாது.' - இந்தக் கருத்தில் எனக்கு முழு ஒப்புதல் உண்டு பாலாஜி. அதனை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறை இருக்கும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த. அந்த வெளிப்படுத்தல்களை எப்படி வேண்டுமானாலும் நாம் புரிந்து கொள்ளலாம். அந்தப் புரிதல்களில் உண்மையும் சில நேரம் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்.

ஒருவர் சொல்வது பக்தியுடன் சொல்வதாகவும் இன்னொருவர் சொல்வது பக்தியின்றிச் சொல்வதாகவும் உங்களுக்குப் பட்டால் அது உங்கள் புரிதல். அவ்வளவு தான். எனக்குத் திருக்குடி என்றதும் திருவகன் என்றதும் திருத்தங்கல் என்றதும் பக்தியின்றிச் செய்ததாகத் தோன்றவில்லை. மேலே சொன்னது போல் 'மனத்துக்கினியானை'ப் போல் ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் இருந்து எடுத்துச் சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆண்டாளும் 'மனத்துக்கினியான்' என்று தான் சொன்னாள்; 'மனத்துக்கினியார்' என்று மரியாதையுடன் சொல்லவில்லை. அதனால் அவளுக்கும் பக்தியில் குறைவென்று சொல்லிவிடுவோம். சரியா? :-)

வம்பும் வீம்பும் இறையடியார்கள் நடுவில் இருக்கவேண்டாம் என்று சொன்னாலும் காலகாலமாக அது இருந்தே வந்திருக்கிறது. சிவபெருமானை தாசி வீட்டுக்குத் தூது அனுப்பினானே என்று 'தம்பிரான் தோழர்' சுந்தரர் மேல் கோபம் கொண்ட நாயன்மாரும் உண்டு. அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாட மாட்டேன் என்று சொன்ன ஆழ்வாரும் உண்டு. அது போல் ஒரு விவாதம் இங்கே சிறிய அளவில் நடக்கிறது என்றே நினைக்கிறேன்.

நான் இதுவரை சொல்லிவந்ததெல்லாம் 'விதண்டாவாதம்' என்று தோன்றினால் ஒன்று நான் சொன்னதெல்லாம் உங்களுக்குப் புரியவில்லை; அல்லது புரிந்தாலும் புரியாத மாதிரி இருக்கிறீர்கள். விதண்டாவாதம் என்றால் பொருளில்லாமல் விவாதிப்பது; அடுத்தவரை சூடுச் சொற்களால் பேசி வெல்ல முயல்வது. என் வாதங்களில் எங்கேயாவது இந்த இரண்டும் இருந்தால் சொல்லுங்கள். அதனை விதண்டாவாதம் என்று ஏற்றுக் கொண்டு அடுத்த முறை அந்தத் தவறுகள் நடக்காமல் இருக்க முயல்கிறேன்.

அடியேன் உங்கள் வெறுப்புக்கு ஆளானதற்கு வருந்துகிறேன். ஆனால் தெள்ளத் தெளிவாக என் நிலையையும் ஏன் என்று ஆழ்வார்கள் ஆசாரியர்கள் இவர்கள் எடுத்துக்காட்டுகளின் மூலமாகவும் சொல்லிவிட்டேன். இதற்கு மேலும் இதனை விதண்டாவாதம் என்று சொல்லி நீங்கள் வெறுத்தால் அப்புறம் அது அரங்கன் விருப்பம்; அவன் அருள் என்று இருந்து விடுகிறேன்.

கட்டாயம் இங்கே விளக்கம் சொன்ன எல்லோரும் ஹரியும் சிவனும் ஒன்றென்றே சொல்வார்கள்; அவரவருக்கு இஷ்ட தெய்வம் உண்டு; அதுவும் எல்லோருக்கும் தெரியும்.

வேற்று மொழியாளர்கள் செய்வதை அனுபவத்தில் கண்டோ அதிலிருந்து தோன்றிய புரிதல்களைக் கொண்டோ இராகவன் பேசியிருக்கிறார். அது அவரது அனுபவம்/புரிதல். அதனைக் குறையாக நீங்கள் எண்ணினாலும் முருகனும் அவன் மாமனும் எண்ண மாட்டார் என்று இராகவன் எண்ணுகிறார் என்றெண்ணுகிறேன். அந்த எண்ணத்தில் குறையில்லை.

கடவுள் என்ற பதத்திற்கு 'இனியது கேட்கின்' பதிவில் சில முறை இராகவன் விளக்கம் சொல்லியிருக்கிறார். உங்களுக்கு உண்மையிலேயே தெரியாது என்றால் அங்கே தேடிப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

சுபம் பவதி. நன்மைகள் உண்டாகட்டும்.

கோவி.கண்ணன் said...

கேஆர்எஸ்,

ஜீராவுக்கு துணையாக நான் இங்கே குதிக்கட்டுமா?

:)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// கோவி.கண்ணன் said...
கேஆர்எஸ்,
ஜீராவுக்கு துணையாக நான் இங்கே குதிக்கட்டுமா?:)//

ஆகா, வாங்க GK!
இதில் குதிக்க என்ன இருக்கு! நீங்க High Jump Champion போல பள்ளியில்? :-)

ஜிராவுக்குத் துணை செய்யத் தான் வரணும் என்பது ஒன்று!
தாராளமாக உங்கள் எண்ணமும் கருத்தும் சொல்ல வரணும் என்பது இன்னொன்று :-)

எனக்குத் தான் துணை யாருமே இல்ல! :-)
வேலும் மயிலுமே துணை!
தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//
//சிலர் அதன் செவ்வித் தலைப்பட்டார்கள் அன்று!
அதனால் தான் வைதிகத்தையும் வடமொழிகளையும் தாண்டி, தமிழ் பெருமாள் கோவில்களில் எல்லாம் கோலோச்சுகிறது!//
இந்தக் கருத்து ஏற்புடைத்தே. ஆனால் அது இராகவனுக்காக இல்லாமல் பொதுவாகச் சொன்ன கருத்தாக இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்//

நான் அதைப் பொதுவாகத் தான் சொன்னேன் குமரன்.
ஜிரா என் நண்பர் என்பதால் அவருக்கும் அந்தக் கருத்தை எடுத்துக் காட்டினேன்! அவ்வளவே!

ஆனா, அது ஜிராவுக்கு மட்டுமில்லை, எனக்கும் சேர்த்து தான்!
எனக்கும், நம் நண்பர்களுக்கும், மற்ற அனைவருக்கும், தமிழ்-இறை என்ற ஆர்வலர்கள் அனைவருக்கும் ஆன கருத்தே அது!

நம் வாழ்நாளில் அது நடந்து, அதை நாம் கண்டு, இன்புற வேண்டும்!
எந்நாளோ? இனிய நாளோ?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

குமரன்
பாலாஜி சுடுசொற்களை வீசினார் என்று நீங்கள் கருதினாலும்...அந்தப் பின்னூட்டத்தை அனுமதித்தது அடியேன் தான்!
அதற்கு முதலில் என்னை மன்னித்து விடுங்கள், குமரன்.
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்! :-)

முத்தாய்ப்பாக அடியேன் சிலவற்றைச் சொல்ல ஆசைப்படுகிறேன்!

1. @பாலாஜி - கொஞ்சமா கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். இலட்சுமணன் மாதிரி கோபம் பொசுக் பொசுக் ன்னு வருது உங்களுக்கு!
அதுவும் அடியவர்களை ஏதாச்சும் சொல்லிட்டா, உங்களுக்கு வரும் கோபம், அப்பாடியோ!
குமரன் சொன்ன குணானுபவம் என்பது மிகவும் முக்கியம். அதை இன்னொரு முறை நாம் எல்லாரும் படிச்சுப் பார்க்கலாம், வாங்க!

2. @SK
//எப்படி அழைப்ப்பினும் உன்னை? எங்கே காண்பேன் உன்னை? என நம் சிந்தனை இருப்பதே ஆன்மீகம்
மொழி ஆராய்ச்சி தேவயல்ல என்பது என் பணிவான் கருத்து//

கரெக்டா சொன்னீங்க SK! ஒரே ஒரு திருத்தம்! மொழி ஆராய்ச்சி தேவை தான்! அது மொழி வளர்வதற்காக! இறையியல் - அதிலும் மொழி வளர வேண்டும்!

ஆனா இறைப்பணிக்கு வரும் போது, வேற்றுமைகளைக் கொஞ்ச நேரம் மறந்து விட வேண்டும்!
இறை உணர்வை முன்னுக்குத் தள்ளி விட்டு, மொழியுணர்வை பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்! அவ்வளவே!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

3. @குமரன்
//(திருக்குடி என்றதோடு நிறுத்திவிடலாம். திருக்குடியன் என்றால் ஒரு மாதிரியாக இருக்கிறது. :-))//

இங்கு தான் பிரச்சனையே! திருக்குடியன் என்றால் உங்களுக்கு எப்படி ஒரு மாதிரி இருக்கோ, அதே போல திருக்குடி-ன்னா பாலாஜிக்கும் ஒரு மாதிரி இருக்கு!

பாலாஜியும் பெயர்ச்சொல் மாற்றங்களை வரவேற்கிறார் என்று தான் நான் நினைக்கிறேன்!
விட்டுணு, சிரீதரன், நாரணன், இருடீகேசன், திருமகள் கேள்வன், ஆழிவல்லான், நாகப்பகைக்கொடியான் என்ற சொற்களை எல்லாம் அவரும் விரும்புகிறார், பாராட்டுகிறார் தான்!

அவர் சொல்வது என்னவென்றால் இறைவனின் திருப்பெயரை ஆக்கும் போது, மொழியை மட்டும் மூலமாக வைத்து ஆக்காதீங்க.
பக்தியை முன்னிறுத்தி, மொழியையும் உடன் நிறுத்தி ஆக்குங்க என்பது தான்!

அடுத்த ஸ்டேட்காரன் நம்ம மொழிப் பேரை, இறைவனுக்கு வச்சிருக்கானா? அப்படியே வச்சிருந்தாலும் அதை உணர்ந்து தான் கூப்பிடறான்னா? என்ற சிந்தனைகளை எல்லாம் இறைப் பெயரை மொழியாக்கும் போது கொண்டு வராதீங்க என்று தான் பாலாஜி கேட்கிறார்.

நல்ல தமிழில் ஆக்குங்க, ஆனா அதை வேற்றுமை உணர்வை மனதில் வைத்துக் கொண்டு ஆக்காதீங்க என்பது தான் அவர் வாதம் - சரியா பாலாஜி?

(டிஸ்கி:
இந்த மொழியாக்க guidelines, இறைவன் திருப்பெயர்களுக்கு மட்டுமே! மற்ற ஆக்கங்களை எல்லாம் இங்கு பேச வில்லை!)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

4. @ஜிரா & @ பாலாஜி
ஜிரா - உங்க நண்பன் என்ற உரிமையில், நீங்கள் சொன்ன சொல்லைச் சற்றே மாற்றி, எல்லாருக்கும் இனிப்புடையதாக ஆக்குகிறேன்.

திருக்குடி நம்பி - இது பக்தியை மட்டுமே மனதில் வைத்து ஆக்கியது, பாலாஜி! இப்ப இந்தச் சொல் பரவாயில்லையா பாலாஜி?

ஸ்ரீநிவாசன் = திருவாழ் மார்பன் என்ற பெயர் ஏற்கனவே மலையாள நாட்டில் உள்ள கோவிலில் பிரபலம் (திருவல்லவாழ் ஊரின் பெயர் - தற்காலப் பெயர் திருவல்லா)

இப்போ திருக்குடி நம்பியையும் அதோடு சேர்த்துக் கொள்ளுங்கள். குணானுபவம் நம் எல்லார்க்கும் கிடைக்கட்டும்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

5.
இறைவனின் திருநாமங்கள் யாருக்கு? இறைவனுக்காகவா?
அவருக்கு என்ன சான்றிதழ் பெயர்கள் எல்லாம் தேவையா என்ன கல்லூரி அட்மிஷனுக்கு? :-)

அந்தத் திருநாமங்கள் எல்லாம் அடியவர்கள் உண்டு மகிழத் தான்!
குணானுபவம் செய்யும் போது, மொழிகள் மற்றும் கலாச்சார வேறுபாடுகள் எழுவது இயற்கை!

நீ சொல்லக் கூடாது. அந்தத் திருத்தங்கல் சொல்லட்டும், என்றெல்லாம் உரிமை விஷயமாக இதைப் பார்க்கவே வேண்டாம்!

ஒரு உண்மையான அடியவர் குணம் எப்படி இருக்கும்னா...
இறைவன் திருநாமத்தைப் பலுக்கிச் சொல்லும் போது, சில பெயர்ச் சொற்களால் மற்ற அடியவர்களின் மனம் நோகிறதே என்றால், அந்த முதலாம் அடியவர் அதையே பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்க மாட்டார்.

தான் சொன்ன சொல்லாக மட்டும் பார்க்காமல், சற்றே மாற்றி, பிற அடியவர்களும் மகிழ்ந்து இன்புற வேண்டும் என்று நினைப்பதுவே குணானுபவங்களில் தலையாய குண அனுபவம்!
அதைத் தான் அவன் நம் எல்லார்க்கும் அருள வேண்டும்.

நாமம் "பலவும்" நவின்றேலோ எம்பாவாய் என்று தான் பாடி வைத்தாள்!

நாமும் பல நாமங்களைக் "கூடி இருந்து", "குளிர்ந்தே" சொல்லிடுவோம்!

குமரன் (Kumaran) said...

திருக்குடி நம்பி = ஸ்ரீநிவாசப் பெருமாள்? :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குமரன் (Kumaran) said...
திருக்குடி நம்பி = ஸ்ரீநிவாசப் பெருமாள்? :-) //

அழகாகத் தான் உள்ளது குமரன்!

திருக்குறுங்குடி நம்பி நினைவுக்கு வருகிறார்! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இந்தச் சூட்டில், இந்த வார சுப்ரபாதப் பதிவு தள்ளிப் போய் விட்டதே!

நாளை, இல்லை அதற்கு மறு நாள் இட முயல்கிறேன்!
ஆடிப் பூரம் தொடர் வேறு எழுத வேண்டும்!

வெட்டிப்பயல் said...

//அவர் சொல்வது என்னவென்றால் இறைவனின் திருப்பெயரை ஆக்கும் போது, மொழியை மட்டும் மூலமாக வைத்து ஆக்காதீங்க.
பக்தியை முன்னிறுத்தி, மொழியையும் உடன் நிறுத்தி ஆக்குங்க என்பது தான்!

அடுத்த ஸ்டேட்காரன் நம்ம மொழிப் பேரை, இறைவனுக்கு வச்சிருக்கானா? அப்படியே வச்சிருந்தாலும் அதை உணர்ந்து தான் கூப்பிடறான்னா? என்ற சிந்தனைகளை எல்லாம் இறைப் பெயரை மொழியாக்கும் போது கொண்டு வராதீங்க என்று தான் பாலாஜி கேட்கிறார்.

நல்ல தமிழில் ஆக்குங்க, ஆனா அதை வேற்றுமை உணர்வை மனதில் வைத்துக் கொண்டு ஆக்காதீங்க என்பது தான் அவர் வாதம் - சரியா பாலாஜி?//

அவ்வளவுதான்...

வெட்டிப்பயல் said...

குமரன்,
நான் முதல்ல எங்க எகிறினேனு நீங்க சொன்னா நல்லா இருக்கும். நான் பணிவா தான் கேட்டேன். நக்கலா கேள்வி கேட்டது KRSம், ஜி.ராவும் தான்.

அடுத்து உனக்கு தமிழ் தெரியாதுனு தப்பா ஒரு அர்த்ததை சொல்லிட்டு, போய் நல்ல வாத்தியார்ட கத்துக்கோனு சொன்னது அவர்.

தூயதமிழ்ல நக்கல் பண்ணா நல்லவன். கொஞ்சம் பேசற தமிழ்ல கேள்வி கேட்டா கெட்டவன். நல்ல லாஜிக்.

நாராயணனைவிட உங்களுக்கு ராகவனோட நட்பு முக்கியமா இருக்கலாம். ஆனா எனக்கு அப்படியில்லை.

//என்னங்க இது திருக்குடி, தூத்துக்குடின்னு காமெடி பண்ணிக்கிட்டு? :-) //
இதை எனக்கு முன்னாடியே ஒருத்தர் சொல்லிட்டாரு...

மனசுல படறதை உங்களை மாதிரி எல்லாம் எனக்கு பாலிஷ் போட்டு சொல்ல தெரியாது.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பாலாஜி

என்னங்க இது? இன்னும் கோபம் தணியலையா? ஒரு தபா திருத் தணிகைக்கு்ப் போய் வரலாமா? :-)

வரிக்கு வரிக்கு மாத்தறேன் பேர்வழி-ன்னு வீம்பு செய்ய இறங்கக்கூடாது-ன்னு நாம தானே சொன்னோம்! இப்ப நாமளே ஜிரா,குமரன்,KRS,பாலாஜி சொன்ன வரிகளை வரிக்கு வரி பார்த்துக் கொண்டு இருக்கலாமா?

தூய தமிழ்ல நக்கல் பண்ணா நல்லவன். கொஞ்சம் பேசற தமிழ்ல கேள்வி கேட்டா கெட்டவன்-ன்னு எல்லாம் நினைச்சுக்காதீங்க பாலாஜி!
உங்களைப் போய் கெட்டவன்-னு சொல்ல இங்க யாருக்காச்சும் மனசு வருமா?

என்னைப் பொறுத்தவரை எங்க எல்லாரையும் விட நீங்க தான் நல்ல ஆன்மீகப் பதிவர்! வவாச-ல போட்டேனே பாக்கலையா? :-)

மிகவும் பொறுப்பா சிந்திச்சி, நட்புகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு, இறைவனை மட்டுமே முன்னிறுத்தறீங்க! அதுவும் மேற்கோள், பாட்டு-ன்னு எதுவுமே சொல்லாம உங்களால் இப்படிச் செய்ய முடியுதுன்னா...We are all proud of you!

சரி, மாதவிப் பந்தலை எப்போது என் கையில் இருந்து வாங்கிக்கப் போறீங்க? எனக்குப் பாரம் தாங்கலை! சீக்கிரமா ஒரு நல்ல முடிவா ஊர் அறியச் சொல்லுங்க! :-)

குமரன் (Kumaran) said...

நான் உங்களைக் கெட்டவன்னு எல்லாம் சொல்லலை பாலாஜி. அப்படி நினைச்சிருந்தா இவ்வளவு நேரம் செலவு பண்ணி இந்த அளவிற்குப் பின்னூட்டம் எல்லாம் போட்டிருக்க மாட்டேன். ஓகேயா?

பாலிஷா சொல்றேனா? இருக்கலாம். கோபப்படாம சொல்லணும்ன்னு நினைக்கிறதால அப்படி வந்திருக்கலாம். ஆனால் நானும் கோபப்பட்ட நாட்கள் உண்டு. இனிமேலும் அப்படிப்பட்ட நாட்கள் வரலாம். நேற்று கூட கோவிலுக்குச் சென்ற போது மகளைக் கோபப்பட்டேன். வீட்டில் அதனால் மன வருத்தம் - கோவிலுக்கு வர்றப்பவும் குழந்தையை ஏன் திட்டறீங்கன்னு :-)

இராகவன் நட்பு முக்கியமா நாராயணன் முக்கியமான்னு எல்லாம் பாக்கலை பாலாஜி. கருத்துகளைச் சொன்னேன். அவ்வளவு தான். எதனையும் பூசி மெழுகி மறைக்கவில்லை. அதனை அந்தர்யாமி அறிவான்.

சில கருத்துகளைச் சொல்லும் போது இராகவன் நட்பை எண்ணிப்பார்க்காமல் அவர் கருத்துக்கு எதிர் கருத்து சொன்னதுண்டு. அவரும் அப்படியே. எதிர் கருத்து சொல்பவரெல்லாம் எதிரிகள் இல்லை என்று பல இடங்களில் அவர் சொல்லிவந்திருக்கிறார். அத்னால் அவர் ந்ட்பைப் பெரிதாக எண்ணி எதிர் கருத்து சொல்லாமல் இருக்கத் தேவையில்லை எனக்கு. சரியா?

சரி. இந்த இடுகையில் 100 பின்னூட்டங்கள் தாண்டிவிட்டது. வணக்கம் சொல்லிடலாமா? அடுத்த இடுகையில் வேண்டுமானால் தொடரலாம். :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வணக்கம் சொல்லிடலாமா? அடுத்த இடுகையில் வேண்டுமானால் தொடரலாம். :-)//

வணக்கம்!
வணக்கம்!
வணக்கம்! :-)

கோவி.கண்ணன் said...

103 எண் சரியில்லை.

ஒரு 108 ஆவது வரவேண்டாமா ?

:)

இராம.கி said...

இந்த உரையாடல்களைத் தொடர்ந்து வேங்கடத்து நெடியோன் என்ற தலைப்பில் ஒரு தொடர் என் வளவு வலைப்பதிவில் (www.valavu.blogspot.com) இப்பொழுது எழுதுகிறேன். விருப்பம் இருப்பவர்கள் அங்கு வந்து கருத்துச் சொன்னால் நன்றாக இருக்கும்.

அது பெரிய பதிவாய் இல்லாவிட்டால் இங்கேயே முன்னிகையாக (comment) போட்டிருப்பேன்.

அன்புடன்,
இராம.கி.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கோவி.கண்ணன் said...
103 எண் சரியில்லை.
ஒரு 108 ஆவது வரவேண்டாமா ?
:) //

குறும்பு GK உங்களுக்கு!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இராம.கி said...
இந்த உரையாடல்களைத் தொடர்ந்து வேங்கடத்து நெடியோன் என்ற தலைப்பில் ஒரு தொடர் என் வளவு வலைப்பதிவில் (www.valavu.blogspot.com) இப்பொழுது எழுதுகிறேன். விருப்பம் இருப்பவர்கள் அங்கு வந்து கருத்துச் சொன்னால் நன்றாக இருக்கும்.

அது பெரிய பதிவாய் இல்லாவிட்டால் இங்கேயே முன்னிகையாக (comment) போட்டிருப்பேன்//

அருமையான வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய பதிவு.
நண்பர்கள் எல்லாரும் கட்டாயம் பாருங்கள்!

அதிலும் இரண்டாம் பகுதியில் சிலப்பதிகாரப் பாடல்கள் மூலமாக வேங்கடத்தையும் பெருமாளையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்!

இதோ சுட்டிகள்!
வேங்கடத்து நெடியோன் - 2

வேங்கடத்து நெடியோன் - 1

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கோவி.கண்ணன் said...
ஒரு 108 ஆவது வரவேண்டாமா ?//

இதோ வந்து விட்டது! GK!
நீங்க சொன்னா நடக்குது பாருங்க! :-)

பி.க. என்றால்
இலவசக் கொத்தனார் அவர்களே மன்னிக்கவும்! :-)))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பாலாஜி தொலைபேசியில் உரையாடியதால், இந்தப் பதிவைச் சும்மா மீண்டும் எட்டிப் பார்த்தேன்! :)

என் உயிர்த் தோழன் ஞாபகம் கொஞ்சம் அதிகமாகும் போதெல்லாம், சில பழைய பதிவுகளை இப்படி எட்டிப் பார்ப்பதுண்டு! :)
Sweet are those chaNdai pOtting days! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

திருக்குடி என்பது குடவாசல் பக்கத்துல இருக்கும் ஒரு ஊரு பேராம்! :) இதோ!

இராம.கி ஐயா சொல்வது இதோ:
"திரு. ஜி.ராகவன் சொன்னது போல் திருக்குடி என்றெல்லாம் புதிதாகச் சொல்ல வேண்டுவதில்லை.
திருப்பதியான் என்ற சொல்லே மேலோட்டப் பொருண்மையைப் பார்த்த வகையில் ஸ்ரீநிவாசனுக்கு இணையாய் அமைய முடியும்"

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஆழ்வார்களும் "ஸ்ரீநிவாசனை" இனிய அழகு கொஞ்சும் தமிழில் அனுபவித்து உள்ளார்கள்!

உன் "திருமலிந்து" திகழ்மார்வு தேக்க வந்து - பெரியாழ்வார்

மரங்கள் நின்று மதுதாரைகள் பாயும்
மலர்கள் வீழும் வளர்கொம்புகள் தாழும்
இரங்கும் கூம்பும் "திருமால்" நின்றநின்ற - பெரியாழ்வார்

"திருவாழன்" திருப்பதிமேல்
திருவரங்கத் தமிழ்மாலை
விட்டுசித்தன் விரித்தனகொண்டு - பெரியாழ்வார்

விண்ணீல மேலாப்பு விரித்தாற் போல் மேகங்காள்,
தெண்ணீர்பாய் வேங்கடத்து என் "திருமாலும்" போந்தானே - ஆண்டாள்

செடியாய வல்வினைகள் தீர்க்கும் "திருமாலே"
நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல் - குலசேகராழ்வார்

இப்படித் திருவேங்கடமுடையானை,
* ஸ்ரீநிவாசன் = திருமால்
* ஸ்ரீநிவாசன் = திருவாழன்
* ஸ்ரீநிவாசன் = திருமலிவான்
என்று ஆண்டாளும், ஆழ்வார்களும் திருவேங்கடப் பாசுரங்களில் விளித்துள்ளார்கள்!
-----------------------------
இப்போ வடமொழியில்...

நிவாசம் = வெறுமனே தங்கும் இடம் என்பது மட்டும் பொருள் அல்ல!
அதற்கு வாசம், வாசஸ்தலம் என்று சொல்லி விட்டுப் போகலாமே! எதற்கு "நி"+வாசம்? நி-வாசம் என்றால் உயர்ந்த இடம், மாண்புக்குரிய இடம், Abode என்ற பொருளில் எல்லாம் வரும்!
---------------------------

இப்போ
மால் என்றால் என்ன-ன்னும் பார்ப்போம்!
மால் = மயங்குதல் என்ற ஒரு பொருள் இருப்பினும், மாண்பு, உயர்வு, பெருமை என்ற பொருளும் உண்டு!

மால்&sup4;(லு)-தல் māl-

, 3 v. intr. < மால்³. To be magnified, glorified; மாட்சிப்படுதல். மான்ற பூண்முலையினாள் (காஞ்சிப்பு. திருக்கண். 174).
மால்³ māl

n. cf. mahat. 1. Greatness; பெருமை. (பிங்.) சினமால் விடையுடையான் (திரு வாச. 34, 3). 2. Great man; பெருமையுடையவன். மாமஞ்ஞை யூர்ந்து நின்றமால் (சீவக. 286). 3. cf. māla. Viṣṇu; திருமால். நீர் செல நிமிர்ந்த மாஅல் போல (முல்லைப்
-----------------------

ஆக,
ஸ்ரீநிவாசன் = திருமகள் விரும்பி வாழும் மாண்புக்குரிய இடம் = திரு+மால்

திருவாழன்
திருவுறையான்
திருக்குடி நம்பி
திருவாழ் மார்பன்
என்று நாமாக உருவாக்கும் பல பேர்கள் பொருந்தினாலும்...

திருமால் என்ற பெயரே அனைவரும் அறிந்த இனிய பெயராக உள்ளதே!

தோழி ஆண்டாளும், வேங்கடத்து என் "திருமாலும்" போந்தானே என்று பாடுகிறாளே!

அதனால் ஸ்ரீநிவாசன்=திருமால் என்ற அனைவரும் அறிந்த பெயரே பலவிதங்களில் பொருத்தம் உடைத்தாய் இருக்கும் என்பது அடியேன் எண்ணம்!

Prince of Pearl City said...

தமிழ் சுப்ரபாதம் mp3 இருந்தால் தயவு செய்து mariappandct@gmail.com க்கு அனுப்பவும்.

சுப்ரபாதம் (தமிழில்):

ஒலிச் சுட்டிகள்!

முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் - நித்ய ஸ்ரீ பாடுவது (Windows Media Player)

நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com
Pics: tirumala-tirupati.com

சுப்ரபாதம் (மூலம்):

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP