Saturday, August 11, 2007

சுப்ரபாதம்(14) - கோவிலுக்குக் குளிக்காமப் போனாத் தீட்டா?

சிவனாரும், பிரம்மனும், முருகனும் பெருமாளைத் தரிசிக்கும் ஆவலில், க்யூ வரிசையை உடைத்து விட்டு ஒடோடி வருகிறார்கள்! அவர்கட்கு பிரம்படி வேறு!
இன்னொரு விஷயம்! தரிசனம் செய்யணும்னா கட்டாயமா குளிக்கணுமா என்ன? குளிக்கா விட்டா தீட்டா?.....
ஆமாம், தீட்டு தான் என்றால் தீட்டு கழிப்பது எப்படி? பார்க்கலாம் வாங்க! :-)
(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)
ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி- காப்லவ நிர்மலாங்கா
ச்ரேயோர் திநோ, ஹர விரிஞ்சி சனந்தன ஆத்யா
த்வாரே வசந்தி வரவேத்ர ஹதோத்த மாங்கா:
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி = ஸ்ரீ சுவாமியின் திருக்குளத்தில்
புஷ்கரிணி = குளம்; திருவேங்கடமுடையான் ஆலயத் திருக்குளத்துக்கு சுவாமி புஷ்கரிணி என்று பெயர். இதைக் குலசேகர ஆழ்வார் எவ்வளவு அழகா தமிழில் ஆக்குகிறார் பாருங்கள்!
சுவாமி+புஷ்கரிணி = கோன்+ஏரி = கோனேரி

கோனேரி ராஜபுரம் என்ற ஊர், தமிழ்நாட்டில் உண்டு.

பொதுவா வடமொழிச் சொற்களைத் தமிழில் ஆக்கும் போது, தமிழ்ப் பெயர் சற்று நீண்டு விடும் என்று சிலர் குறைபட்டுக் கொள்வார்கள்.
ஆனா இங்க பாருங்க...வடமொழியில் நீள்ள்ள்ள்ள்ள்ளமான பெயர்...ஆனால் தமிழில் ரத்தினச் சுருக்கமா "கோனேரி".
வடமொழி-தமிழ் ஆக்கும் போது, நிறைய சொற்களுக்குக் கடினப்படுகிறீர்களா?

கவலைய விடுங்க! ஆழ்வார்களிடமும், குறிப்பா ஆண்டாளிடமும் தேடினாலே பாதிச் சொற்கள் கிடைத்து விடும்!

கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே என்பது ஆழ்வார் பாசுரம்.

அதாச்சும் இறைவன் திருக்குளத்துக்கு அருகிலேயே வாழும் ஒரு கொக்காய் பிறந்தால் கூட பேரின்பம் தான் என்கிறார் ஆழ்வார்!
வைகுண்டத்தில் உள்ள விரஜா நதியே கோனேரி ஆனது என்பது தாத்பர்யம்.


கா அப்பு லவ, நிர்மலா அங்கா = கோனேரி நீரைத் தெளித்துக் கொண்டு, அகமும் புறமும் தூய்மை அடைந்து
அப்பு=நீர், லவ=கொஞ்சமாக
மலம் = குற்றம்/அழுக்கு; நிர்மலம் = குற்றமின்மை
அது சரி, கோயிலுக்குப் போகணும்னா கட்டாயம் குளிச்சிட்டுத் தான் போகணுமா?


பண்டரிபுரம் பாண்டுரங்கன் ஆலயத்துக்குப் போனீங்கனா தெரியும். வடக்கத்திக்காரர்கள் அதுவும் குறிப்பா தாக்கூர்கள் கோயிலுக்குள் திபுதிபு-ன்னு ஒடி வருவாய்ங்க! சில பேர் கிட்ட வந்தா நாறும்! என்னைக்குக் குளிச்சானோ என்னமோ? :-)
ஆனாப் பாருங்க! கோயிலில் வேற எந்த ஒரு வார்த்தையும் பேச மாட்டாங்க!
ஹே பாண்டுரங்கா, ஹே விட்டலா...ன்னு ஓடி வந்து பாண்டுரங்கன் காலில் விழுந்திடுவான்.

தீட்டு தீட்டு-ன்னு சொல்றாங்களே! அப்பிடி-ன்னா என்ன? -
நம் ஐயன் வள்ளுவரும் சொல்கிறார்! கன்னடத்துக் கவி புரந்தரதாசரும் சொல்கிறார்!
குளிக்காம கோவிலுக்குப் போனா தீட்டு! - அது சரின்னே இப்போதைக்கு வைத்துக் கொள்வோம்! சரி, அங்கே போயி, கோவிலில் வம்பு பேசினா? - அதைக் காட்டிலும் இது தீட்டு! :-)
கோவிலுக்கு மடியா போகணும் மடியாப் போகணும்-னு சொல்லிட்டு, அங்கு போய் வம்பு பேசினா? மடி மடின்னு, மடியே மடிந்து விடுகிறது! :-)

சரி தீட்டாயிடிச்சு!...இதுக்கு எப்படி தீட்டு கழிக்கறது?

சும்மா தண்ணியில் ரெண்டு முக்கி முக்கி எழுந்துட்டா தீட்டு போயிடுமா? - இல்லவே இல்லை!
சிறப்புக் குளியல் செய்யணும்! அது என்ன சிறப்புக் குளியல்?
கோவிலில் அந்நிய வார்த்தைகளை விடுவது தான் சிறப்புக் குளியல்! உயர்ந்த ஸ்நானம், எல்லாம்!

அதைத் தான் புரந்தரதாசர், "தனுவு நீர் ஓளகத்தி பளவேனு, மனதல்லி திட பக்தி இல்லாத மனுஜனு!" என்கிறார். நம் ஐயன் வள்ளுவர் ஒரு படி மேலே போய் விடுகிறார்.
புறத்தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
திருக்குளத்தில், கங்கையில், காவிரியில், குமரியில், எங்கு குளித்தாலும்... குளிக்கும் போது புறத்தை மட்டும் தூய்மை செய்யாமல்,
அகத்தையும் சேர்த்துத் தான் தூய்மை செய்ய வேண்டும்!

சரி, புறத்துக்கு சோப்பு/ஷாம்பூ போடலாம்; சில பேர் பால், பயத்தமாவு கூட பயன்படுத்தறாங்க!

ஆனா அகத்துக்கு எது சோப்பு? - இறைவனின் திருநாமம் தான் அழுக்கு நாசினி, கிருமி நாசினி, எல்லாம்!
விடியற் காலை அங்கப் பிரதிட்சணம் செய்தவர்களுக்கும், மொட்டை போட்டுக் கொள்பவர்களுக்கும் இது நல்லாத் தெரியும்!
அதிகாலைக் குளிரில் நடுங்கிக் கொண்டே,
திருமலைக் குளத்தில் ஒரு முங்கு, முங்கி எழுங்க!
அதுவும் மனதாரக் "கோவிந்தா கோவிந்தா" என்று சொல்லிக் கொண்டே எழுங்க!
குளிரில் உடம்பும் நடுங்கி,

உள்ளே உள்ள பாவங்களும் நடுங்கி விடாதா என்ன?


ச்ரேய ஆர்த்திநோ = பரிபூர்ணமான நலமுடன் வாழ வேண்டிக் கொண்டு ஆனந்தமும் நலமும் கிடைக்க வேண்டிக் கொண்டு,
ஆனந்த நிலையத்தில், யார் யார் எல்லாம் காத்திருக்கிறார்கள்?

ஹர, விரிஞ்சி, சனந்தன ஆத்யா = சிவன், பிரம்மன், சனந்தனர் முதலான மகரிஷிகள்
ஹரன் = சிவபெருமான்
விரிஞ்சி = பிரம்மன் (ஜனனி ஜனனி பாடலில் கூட ஹரி ஹர விரிஞ்சி-ன்னு ஒரு வரி வரும்)
சனந்தன ஆத்யா = சனகாதி முனிவர்கள்;
சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நால்வரும் வயதில் இளைய ரிஷிகள். ஆனால் பக்தியும் ஞானமும் ஒருங்கே கைவரப் பெற்றவர்கள்!
இதில் சனத்குமாரர் கார்த்திகேயனான முருகப் பெருமானின் அம்சம் என்றும் சொல்லுவார்கள்.
இந்த 4 பேரால் தான்...நமக்கு 4 அவதாரங்கள் கிடைத்தது...என்னன்னு பின்னூட்டத்தில் சொல்லுங்க பார்ப்போம்!
:-)

த்வாரே வசந்தி, = மகா துவாரம் என்னும் உன் ஆலய வாசலிலே நிற்கிறார்கள்.
(அப்போது சேனை முதலியாரின் தொண்டர்கள், தங்கள் கையில் உள்ள பொற் பிரம்பால், அனைவர் தலையின் மேலும், மெல்லிதாய் வைத்து, அனுகிரகம் செய்ய)


வர வேத்ர ஹத= பொற் பிரம்பால் தட்டி முறைப்படுத்த,

உத்தம அங்கா = அதனால் இன்னும் தூய்மை அடைகிறார்கள்!

வேத்ரம்=பிரம்பு; வர வேத்ரம்=பொற் பிரம்பு
அந்தக் காலத்தில் ஆசிரியர் என்றால் கையில என்ன இருக்கும்? - பிரம்பு!
யாராச்சும் பார்த்து இருக்கீங்களா? இல்லை அடி வாங்கித் தான் இருக்கீங்களா? :-)
மாணவர்களை அவர் அடிக்கிறாரோ இல்லையோ, ஆனால் கையில் பிரம்புடன், வேட்டி-கோட்-தலைப்பாகை-குடை; வாயில் கணீரென்று தமிழ்ச் செய்யுள்...ஆகா! ஆகா!

பெருமாளின் படைகளுக்கு பிரதான தளபதியாய் இருப்பவர் விஷ்வக்சேனர்.

தமிழில் சேனை முதலியார் என்று போற்றுவார்கள்! விநாயகரைப் போலவே, வைணவ பூசைகளில் முதல் பூசை இவருக்குத் தான்! - இவர் தான் வைணவ சம்பிரதாயத்தில் முதல் ஆசிரியர்!
பெருமாள் தாயாருக்கு உபதேசிக்க, தாயார் நம் மீது உள்ள கருணையால் இவருக்கு உபதேசம் செய்து வைத்தார்! - இவரே தலைமை ஆசிரியர்! நம்மாழ்வாரின் குரு!

அந்தக் குருவின் கையில் பொற் பிரம்பு!
அந்தப் பிரம்பில் இருந்து எழும் இனிய நாதம்!...

என்னது பிரம்பில் இருந்து இசையா? நம்ப முடிய வில்லையா? பிரம்பைக் காற்றில் வீசிப் பாருங்க...தெரியும்! :-)
மெல்லிசைக் கச்சேரிகளில், வாத்தியங்களுக்கு முன்பு நின்று கொண்டு ஒரு மனுஷர் கையில் பிரம்பை வைத்து அப்படியும் இப்படியும் ஆட்டுவார்! - music conductor


நாம் நினைப்போம் - இந்த மனுஷன் ஒன்னுமே செய்யாம, சும்மா பந்தா கட்டுகிறாரே என்று! ஆனால் அத்தனை வாத்தியங்களின் நாதமும் ஒருங்கே சுருதி சேர்ந்து ஒன்றாய் ஒலிக்கிறது என்றால், அதற்கு இவரே காரணம்.
அதே போலத் தான், உயிர்கள் எல்லாம் பல பாதைகளில் சென்றாலும்,

எம்பெருமானின் திருநாமம் என்னும் நாத இன்பத்தை எல்லா உயிர்களும் ஒருங்கே அடைய, பிரம்பை வீசுகிறார் விஷ்வக்சேனர்!


அவருடைய சேனைகள் கையிலும் பொற்பிரம்பு இருக்கிறது!....எதற்கு?
கோயிலுக்கு வருபவர்களை எல்லாம் அடித்து விளாசவா? இல்லையில்லை! :-)

வானவர்களை எல்லாம் தலையில் பொற்பிரம்பால் தொட்டு, தரிசனத்துக்கு, ஒவ்வொருவராக அனுப்பி வைக்கிறார்கள்! அப்படி பிரம்போசையால் ஏற்படும் ஓங்காரம், யார் எந்த மன நிலையில் இருந்தாலும், அதை எல்லாம் விலக்கி,
பரம்பொருள் ஒருவனையே நெஞ்சில் நிறைத்து விடுகிறது! - ஆனாப் பாருங்க, வானவர்களுக்கு மட்டும் தான் இந்த "அடி"! நமக்கு இல்லை - ஏன் இப்படி? :-)

தானம் தவம் செய்த முனிவர்கள், வானவர்கள் எல்லாரையும் கீழே இறக்குகிறார் பெருமாள்!
பாவங்கள் புரியும் நம்மையோ மேலே ஏற்றுகிறார்!

மேலோர் எல்லாரும் அவரவர் நிலையில் இருந்து கீழிறங்கி திருமலைக்கு வருகிறார்கள், பெருமாளின் திருமேனி செளந்தர்யம் என்னும் வடிவழகைச் சேவிக்க!
நாமோ, ஒன்றுமே செய்யாமல், மேலேறிச் செல்கிறோம், மேல்நிலையை அடைய! - இது தான் இறைவனின் கேழில் பரங்கருணை!

இப்பேர்ப்பட்ட எம்பெருமானைப் பார்த்துப் பார்த்து அனுபவிக்க வந்துள்ளார்கள்...
கயிலை நாதன் சிவபெருமான்
சத்யலோக நாதன் பிரம்மா
தமிழ்வேள் முருகப் பெருமான்
சனகாதி முனிவர்கள்
....
எல்லாரும் வந்து, பங்காரு வாகிலியில் உன்னைச் சேவிக்க நிற்கிறார்கள்!
ஆவல் மிகுதியால் எட்டி எட்டிப் பார்க்கிறார்கள்...
பெருமாளின் வடிவழகைக் அப்படியே கண்களால் உறிஞ்சிப் பருகுவதற்கு!

துவார பாலகர்கள், இவர்கள் ஆவலை எல்லாம் முறைப்படுத்தி,

ஓங்காரப் பிரம்போசையால் மனம் ஒன்றச் செய்து, தரிசனத்துக்கு வழிவகை செய்து வைக்க...
என் அப்பனே, திருவேங்கடமுடையானே...
சிவபெருமானின் அன்பை பெற்றுக் கொள்ளவும்,
சண்முகனின் அன்பைப் பெற்றுக் கொள்ளவும்,
பிரம்ம சனகாதிகள் அன்பைப் பெற்றுக் கொள்ளவும்.....சீக்கிரமாகத் திருப்பள்ளி எழுவாயே!


ஸ்ரீ வேங்கடாசல பதே = அப்பா, திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்! திருப்பள்ளி எழுக!!

குறிப்பு:
இப்படி சிவபெருமானும் முருகப்பெருமானுமே ஆவல் மிகுதியால் காத்துக் கொண்டு நிற்கும் போது நாம் எல்லாரும் எம்மாத்திரம்?

- அதனால் அடுத்த திருமலை யாத்திரையில்,
க்யூ வரிசையில் நிற்கும் போது, அலுப்பு ஏற்பட்டு மனம் சலித்துக் கொள்ளாதீர்கள் :-)

முனிவர்களே பிரம்போசை கேட்கும் போது, நாம் எல்லாம் எம்மாத்திரம்?
கோவில் பணியாளர்கள் சற்றே கடுமையாக நம்மை நகர்த்தி விட்டாலும்,

அதற்காக எல்லாம் சலனப் படாதீர்கள்!
இதையெல்லாம் தாண்டிய பெரும் பொக்கிஷம் நம் முன்னே நிற்க,

இதெல்லாம் ஒரு பொருட்டா என்ன? :-)
----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

29 comments:

கோவி.கண்ணன் said...

//அது சரின்னே இப்போதைக்கு வைத்துக் கொள்வோம்! சரி, அங்கே போயி, கோவிலில் வம்பு பேசினா? - அதைக் காட்டிலும் இது தீட்டு! :-) //

இதுசூப்பர்,

ஆன்மிகம் உங்களைப் போன்ற ந(ண்)பர் பேசும் போது இனிக்கவே செய்கிறது. சிலர் ஆன்மிகம் பேசுவதைப் பார்க்கும் போது சிறப்பாக இருக்கிறது, ஆனால் அவர்கள் நடவடிக்கைகள் முற்றிலும் மாறாக இருக்கும். அவர்களையே திருத்தாத ஆன்மிகம் எப்படி உயர்ந்ததாக இருக்க முடியும் என்பதுதான் அவர்களின் ஆன்மிக கருத்தாக பரிணமிக்கிறது. நடைமுறையில் நிறைய பார்த்திருக்கிறேன். ஆன்மிகம் கேவலப்படுவதற்கு காரணம் அது தவறான நபர்களிடம் சிக்கி இருப்பதே என்பது என் எண்ணம்.

துளசி கோபால் said...

அடப் போங்கப்பா............

அருமை அருமை அருமைன்னு சொல்றதைத் தவிர வேற என்ன இருக்கு.

'கியூ வரிசை'யில் இன்னிக்கு நான் முதலில் இருக்கேனோ? :-)

Anonymous said...

//தீட்டு தான் என்றால் தீட்டு கழிப்பது எப்படி? பார்க்கலாம் வாங்க! :-)//

தீட்டிலேயே மிக முக்கியமானது, நம் அறிவை மறைக்கும் அகங்காரம், இளக்காரம் தான்.
அடுத்தவர் மன உணர்வுகளுடன் விளையாடுவது, உள்குத்து பதிவிடுவது எல்லாம் அவற்றின் விளையாட்டுத்தான்.
உங்கள் பதிவினில் முன்புபோல் அமைதியை, நெகிழ்வைக் காணமுடியவில்லை. திரிகரண தீட்டுக் கழித்தல் வேண்டுமோ!!!?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கோவி.கண்ணன் said...
இதுசூப்பர்
//அவர்களையே திருத்தாத ஆன்மிகம் எப்படி உயர்ந்ததாக இருக்க முடியும் என்பதுதான் அவர்களின் ஆன்மிக கருத்தாக பரிணமிக்கிறது//

GK
இது பலப்பல காலமாக உள்ளது தானே! சொல் வேறு செயல் வேறு என்பது அரசியல், ஆன்மீகம், பணியிடம், விஞ்ஞானம்...எல்லா இடத்திலும் உண்டு!
என் அலுவலகத்தில் அடிக்கடி குறைபட்டுக் கொள்ளும் என் அணியில் உள்ள சிலருக்கு நான் சொல்லும் வாசகம்..It's not a fair world...but let's make it bit fairer என்பது தான் :-)

அரசியலில் பல நல்ல முன்னோடிகள் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் இன்றைய அரசியலைத் திருத்தப் போதுமானதாக இல்லை.
அதற்காக மக்களாட்சி எப்படி உயர்ந்த ஒன்றாக இருக்க முடியும் என்று கேட்க முடியுமா? அது போலத் தான் இதுவும்!

அரசியல் சட்டம் எழுதி வைத்த அம்பேத்கார் கூட என்ன தான் நுணுக்கமாக சட்ட வரைவுகள் வைத்தாலும்...அப்படியும் மீறி விதி மீறல்கள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்காக அவர் இன்னும் சரியாக எழுதி வைத்திருக்கலாம் என்று குறைபட்டுக் கொள்ள முடியுமா? கொஞ்சமாச்சும் மனசாட்சியையும் நம்பித் தான், சட்டங்கள் கூட உருவாக்கப்படுகின்றன.

ஆனா இங்கே பிரச்சனை என்னன்னா, ஆன்மீகம்னு வரும் போது மட்டும்...நம் எதிர்ப்பார்ப்புகள் பன் மடங்கு அதிகமாகி விடுகிறது...அதன் மேல் எல்லா நோய்க்கும் ஒரே மருந்து...one size fits all...பரிபூர்ணமான பரிசுத்தம் போன்ற ஒரு எதிர்பார்ப்பு அமைந்து விடுகிறது...அதனால் தான் தவறுகள் நடக்கும் போது...ரொம்பவே வெறுத்துப் போய் விடுகிறோம்...

இந்தப் பிரச்சனை நாளைக்கும் இருக்கும்...இடையறாது இருக்கும்...
களை இல்லாது பயிர் வளர்வது கற்பனையில் மட்டும் தான்.

களை எடுத்துக் கொண்டு தான் இருக்க வேண்டும்!
பயிர் வளர்த்துக் கொண்டு தான் இருக்க வேண்டும்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//துளசி கோபால் said...
அடப் போங்கப்பா............
அருமை அருமை அருமைன்னு சொல்றதைத் தவிர வேற என்ன இருக்கு//

ஹிஹி..நன்றி டீச்சர்...
போர் அடிச்சாச் சொல்லுங்க...
சும்மானாங்காட்டி சண்டை போட்டுக்கலாம், ஜாலியா:-)))
பதிவுல ஏதாச்சும் ஒன்னை இதுக்குன்னே ஈசியா தேடி எடுத்துறலாம் :-)

//'கியூ வரிசை'யில் இன்னிக்கு நான் முதலில் இருக்கேனோ? :-)//

நீங்க தான் எப்பமே முதலில். நியூசி டைமுக்குத் தானே சுப்ரபாதம் ரிலீஸ் ஆகுது? :-))
இன்னிக்கி கூட லேடீஸ் கியூவில்...நீங்க தான் முதலில் இருக்கீங்க!!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Anonymous said...
தீட்டிலேயே மிக முக்கியமானது, நம் அறிவை மறைக்கும் அகங்காரம், இளக்காரம் தான்.//

மிகச் சரியாச் சொல்லி இருக்கீங்க அனானி சார்!
அகங்காரம் தங்குமிடத்தில் ஓங்காரம் இருக்குமோ? அதான் சதா அகங்காரத்தைச் சுத்தி செய்து கொண்டே இருக்கணும்! அதுக்குத் தானே "அடியேன்" என்னும் மருந்து இருக்கு!

//அடுத்தவர் மன உணர்வுகளுடன் விளையாடுவது, உள்குத்து பதிவிடுவது எல்லாம் அவற்றின் விளையாட்டுத்தான்//

என்ன சொல்ல வரீங்க-ன்னு இன்னும் கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்களேன்..இந்த உள்குத்து என்ற சொல்லே ரொம்ப நாளா எனக்குக் குழப்பம் தான். பதிவுலகில் தான் இச்சொல் அதிகம் புழங்குகிறதோ!

//உங்கள் பதிவினில் முன்புபோல் அமைதியை, நெகிழ்வைக் காணமுடியவில்லை. திரிகரண தீட்டுக் கழித்தல் வேண்டுமோ!!!?//

ஆகா...இப்படிச் சொல்லிட்டீங்களே! ஏன் எதனால் என்றும் சொல்லி அடியேனை நேர் உறுத்தலாமே!

அமைதியும் நெகிழ்வும் அன்பும் தான் ஆன்மீகத்துக்கு அரண்!
அடியேன் இந்தப் பதிவிலும் கூட அப்படித் தான் எழுதினேன். இன்னும் அப்படித் தான் எனக்கு ஃபீலிங் உள்ளது.

குளிப்பது, தீட்டு என்ற வார்த்தைகள் தான் உங்களைக் கொஞ்சம் திசை திருப்புகிறதா, சொல்லுங்கள்...வேறு நல்ல சொற்களை போட்டுக் கொள்ளலாம்! புரந்தரதாசரே இப்படித் தான் சொல்கிறார். அதைத் தான் நான் அப்படியே எழுதினேன்.

பதிவில் எங்கும் புண்படுற மாதிரி கருத்துக்கள் கூட இல்லையே! கோவிலில் அந்நிய வார்த்தைகளை விடுவதே உயர்ந்த குளியல் என்றல்லவா வருகிறது!

//திரிகரண தீட்டுக் கழித்தல் வேண்டுமோ!!!?//

திரிகரண சுத்தி மிகவும் தேவை தான். மனம் மொழி மெய் மூன்றிலுமே சுத்தி செய்து கொள்ளத் தான் இறைவன் திருநாமம் என்னும் சோப்பு உள்ளது என்று பதிவில் வருகிறது. அதையே அடியேனுக்கும் பயன்படுத்திக் கொள்வது தான் என் வழக்கமும் கூட!

வெட்டிப்பயல் said...

அருமையிலும் அருமை...

அந்த நான்கு அவதாரம்
1. வராகம்
2. நரசிம்மம்
3. ராமன்
4. கிருஷ்ணன்

G.Ragavan said...

எனக்கு ஒன்று தோன்றுகிறது. இந்தப் பதிவை வெட்டிப்பயல் இன்னமும் படிக்கவில்லை என்று தோன்றுகிறது. அல்லது பின்னூட்டம் போடாமல் இருக்க விரும்புகிறாரோ என்று தோன்றுகிறது.

முருகன் நான்முகனைத் தலையில் குட்டியதையே பெரிய கேள்வியாகக் கேட்டு...ஆதிசிவனின் தவறை எடுத்துக்காட்டிய வெட்டியார்....இறைவன் அனைவரும் ஒருவரே என்று சொல்லும் பொழுது ஒரு கடவுள் இன்னொரு கடவுளைத் தாழ்திச் சொல்லலாமா என்று கேள்விகள் கேட்டவர்...இங்கு அமைதியாக இருப்பது வியப்பில் ஆழ்த்துகிறது.

வீட்டு வாசலில் அரனும் அயனும் வந்து நின்றார்கள் என்று சொல்லிக் காட்டுவதை அவர் ஏற்றுக்கொள்கிறார் போலத் தெரிகிறது. அதனால்தான் இங்கு கேள்வி கேட்கவில்லையோ? அதற்குக் காரணம் என்ன? வெங்கடேசனும் சிவனும் நான்முகனும் இல்லை என்று நம்பும் அவரது கருத்து இந்தப் பாடலைப் பொறுத்தவரை என்ன?

பி.கு..இது ரவிக்கு. சனகாதி முனிவன் பெயரை முருகன் என்று திரித்துச் சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

குமரன் (Kumaran) said...

பாடலின் நேர்ப்பொருளை மட்டும் கூறிச் செல்லாமல் அதற்குத் தொடர்புடைய மற்ற சான்றோர்களின் கருத்துகளையும் சொல்லிச் செல்கிறீர்கள் இரவிசங்கர். மிக்க நன்று.

தீட்டு எது என்பதற்கான விளக்கங்களைப் படிக்கும் போது கோதை நாச்சியாரின் திருமொழிகள் தான் நினைவுக்கு வந்தன.

தூமலர் தூவி
வாயினால் பாடி
மனத்தினால் சிந்தித்து

என்று மனம், மெய், சொல் என்ற மூன்றாலும் தூய்மையடைவதே தீட்டில்லாதது என்று சொல்வாளே.

புறத்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை
வாய்மையால் காணப்படும்

என்னும் பொய்யாமொழியும் மிகப்பொருத்தம்.

***

அந்த அந்தக் கடவுளர்களைப் போற்றும் புராணங்கள் அந்தக் கடவுளர்களை உயர்த்தியும் அப்படி உயர்த்தும் போது மற்றவர்களைத் தாழ்த்தியும் பேசுவது வழக்கம். தேவார திருவாசக பிரபந்த அபிராமி அந்தாதி போன்ற தமிழ்ப்பாடல்களிலும் இங்கே சுப்ரபாதம், முன்பு நான் பொருள் சொன்ன இலிங்காஷ்டகம், இன்னும் நாம் யாரும் பொருள் சொல்லாத சௌந்தர்யலஹரி போன்ற வடமொழிப்பாடல்களிலும் அதனைக் காணலாம். அப்படி இருப்பவற்றை எடுத்து அந்தக் காலத்தில் நிறைய சண்டைகள் போட்டிருக்கிறார்கள். இக்காலத்தில் அப்படி இல்லை. அதனால் இந்த மாதிரி கருத்துகள் வரும் போது அவற்றை போகும் போக்கில் பொருள் சொல்லிக் கொண்டே சென்று விடுவது நல்லது. அவற்றை அழுத்திச் சொல்லும் போது எந்தக் கடவுளர்கள் இங்கே தாழ்த்தப்படுவதாகத் தோன்றுகிறதோ அந்தக் கடவுளர்களை வணங்குபவர்கள் மனம் வருத்தப்படும். அவர்களும் உங்கள் சாமி எங்க சாமியைக் கும்புட்டதை நான் எடுத்து எழுதவா என்று கிளம்புவார்கள். அப்புறம் முன்பு நடந்தது போன்ற தேவையற்ற சண்டைகள் தானே?

இலிங்காஷ்டகத்தின் முதல் சுலோகமே 'பிரம்ம முராரி சுரார்சித லிங்கம்' அதற்கு 'பிரம்மனும் திருமாலும் தேவர்களும் வணங்கும் இலிங்கம்' என்று பொருள் சொல்லி அதனை அழுத்திச் சொல்லாமல் விட்டேன்.

***

சுலோகங்களிலும் செய்யுள்களிலும் வரும் இந்த மாதிரி வரிகளைக் கண்டு மனம் வருந்தி அதற்கு எதிர்வினை செய்ய வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன். நம் இஷ்ட தெய்வமே எல்லா தெய்வங்களும் என்ற திட நம்பிக்கையுடன் இருப்போம்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அவற்றை போகும் போக்கில் பொருள் சொல்லிக் கொண்டே சென்று விடுவது நல்லது. அவற்றை அழுத்திச் சொல்லும் போது//

மிகவும் பிடித்தமாகவும் சரியாகவும் சொன்னீங்க குமரன்.
அக்காலச் சூழல் இக்காலத்தில் இல்லை! எனவே வரிகளை மட்டும் பிடித்துக் கொண்டு பாடலின் ஆத்மாவை நாம் மறந்து விடவே கூடாது!...

அதனால் தான் அடியேனும்...பல இடங்களில் மெல்லியல் படுத்தி
//சிவபெருமானின் அன்பை பெற்றுக் கொள்ளவும்,
சண்முகனின் அன்பைப் பெற்றுக் கொள்ளவும்,
........சீக்கிரமாகத் திருப்பள்ளி எழுவாயே!//
என்று முடித்து விட்டேன்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வெட்டிப்பயல் said...
அருமையிலும் அருமை...
அந்த நான்கு அவதாரம்
1. வராகம்
2. நரசிம்மம்
3. ராமன்
4. கிருஷ்ணன்//

மிகவும் சரி பாலாஜி! அதானே ஆன்மீகப் பதிவர், கவுண்டரின் தோழர் நீங்க சொன்னாச் சரியில்லாமப் போகுமா? :-)

அப்படியே ஜய விஜயர்கள் ஒவ்வொன்றிலும் யார் யாராய்த் தோன்றினார்கள்-ன்னும் சொல்ல முடியுமா? :-)

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...

எனக்கு ஒன்று தோன்றுகிறது. இந்தப் பதிவை வெட்டிப்பயல் இன்னமும் படிக்கவில்லை என்று தோன்றுகிறது. அல்லது பின்னூட்டம் போடாமல் இருக்க விரும்புகிறாரோ என்று தோன்றுகிறது.

முருகன் நான்முகனைத் தலையில் குட்டியதையே பெரிய கேள்வியாகக் கேட்டு...ஆதிசிவனின் தவறை எடுத்துக்காட்டிய வெட்டியார்....இறைவன் அனைவரும் ஒருவரே என்று சொல்லும் பொழுது ஒரு கடவுள் இன்னொரு கடவுளைத் தாழ்திச் சொல்லலாமா என்று கேள்விகள் கேட்டவர்...இங்கு அமைதியாக இருப்பது வியப்பில் ஆழ்த்துகிறது.

வீட்டு வாசலில் அரனும் அயனும் வந்து நின்றார்கள் என்று சொல்லிக் காட்டுவதை அவர் ஏற்றுக்கொள்கிறார் போலத் தெரிகிறது. அதனால்தான் இங்கு கேள்வி கேட்கவில்லையோ? அதற்குக் காரணம் என்ன? வெங்கடேசனும் சிவனும் நான்முகனும் இல்லை என்று நம்பும் அவரது கருத்து இந்தப் பாடலைப் பொறுத்தவரை என்ன?//

ஆமா. நான் வந்து கேள்வி கேட்டா உடனே புனித பிம்பம்னு சொல்லுவீங்க. அடுத்த உண்மையை புரிஞ்சிக்கற அளவுக்கு உனக்கு பக்குவம் வரலைனு சொல்லுவீங்க. இது வைணர்கள் நம்பிக்கை உனக்கு எல்லாம் புரியாதுனு சொல்லுவீங்க.
அப்பறம் உனக்கு ஞான மார்கம் புரியாது, நீ பக்தி மார்கத்துல போயிட்டனு சொல்லுவீங்க. ஒரு மண்ணும் எனக்கு புரியாது.

கேள்வி கேட்டு உங்ககிட்ட எல்லாம் திட்டு வாங்கி ஊர்ல இப்ப எல்லாம் என்னை சண்டைக்காரனா பாக்கறாங்க.

அப்பறம் நான் சண்டை போட்ட பதிவெல்லாம் எடுத்து ஒரு லிஸ்டே கூட போடுவீங்க. இனிமே இந்த ஆன்மீக பதிவர்கள்கிட்ட எல்லாம் சண்டை போட வேண்டாம்னு விட்டுட்டேன். உங்க கருத்து உங்களுக்கு என் கருத்து எனக்கு. அவ்வளவு தான். இது தான்

எல்லாரும் ஒண்ணு தானே கேட்டா ஒண்ணு தான்... இது தான் என் நம்பிக்கை.

வெட்டிப்பயல் said...

1. இராண்யாட்சயன், இரண்யன்
2. இராவணன், கும்பகர்ணன்
3. சிசுபாலன், ???

குமரன் (Kumaran) said...

1. ஏனமாய் (பன்றியாய்) தங்கக்கண்ணனைக் (ஹிரன்யாக்ஷனைக்) கொன்றார். ஆளரியாய் (நரசிங்கமாய்) அவன் தம்பி பொன்னாகனைக் (தங்க உடலனைக் - ஹிரண்யகசிபுவைக்) கொன்றார்.
2. இராமனாய் அல்வண்ணனையும் (இராவண்ணனையும்) குடக்காதனையும் (கும்பகர்ணனையும்) கொன்றார்.
3. கண்ணனாய் குழந்தைப்பையனையும் (சிசுபாலனையும்) பல்நகனையும் (தந்தவக்த்ரனையும்) கொன்றார்.

சரியா இரவிசங்கர்? :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

சரியான விடைகள் குமரன்.
அழகான தமிழாக்கமும் கூட!

பாலாஜி...குமரனின் விடைகளைப் பாருங்க! அவர் சொன்ன பதில்களில் உள்ள அசுரர்களை நீங்களும் கேள்விப்பட்டு இருப்பீர்கள்!
தந்தவக்ரன் பற்றி மட்டும் இதோ கொஞ்சம் மேலதிக தகவல்.

சாபத்தின் கடுமை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைகிறது கிருஷ்ணாவதாரத்தில்...அதனால் தான் இருவரும் மிகவும் உக்கிரமான தீத்தொழில் புரியவில்லை!

ஜராசந்தன் மறைவுக்குப் பழிவாங்கத் தான் சிசுபாலன் கண்ணனை ஒரு நூறு முறைக்கு மேல் அவமதித்து சபையில் சக்ராயுதம் பட்டு மாண்டான்.

சால்வன் மறைவுக்குப் பழிவாங்க அவன் நண்பன் தந்தவக்ரன், கண்ணனின் முன் தோன்றினான். சரியான ஆயுதங்கள், தேர் எதுவும் இல்லாமல் கோபம் ஒன்றே ஆயுதமாக வந்தான். கண்ணனும் போர் தருமங்களின் படி, தேரை விட்டு இறங்கி வெறும் கதையினால் போரிட்டு, தந்தவக்ரனை மாய்த்தான்...

அத்தோடு ஜய, விஜய சாபக் கணக்கு தீர்ந்தது!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பி.கு..இது ரவிக்கு. சனகாதி முனிவன் பெயரை முருகன் என்று திரித்துச் சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை//

வாங்க ஜிரா.
இங்கு திரித்துச் சொல்ல வேண்டும் என்றெல்லாம் நினைத்துச் சொல்லவில்லைங்க ஜிரா.
இந்தக் குறிப்பிட்ட ஸ்லோகத்துக்கு, TTD வெளியிட்டுள்ள சுப்ரபாத நூலும் குறுந்தகடும், அவ்வாறே சொல்லியுள்ளார்கள். இந்த ஸ்லோகத்துக்கு உண்டான படத்திலும் முருகப்பெருமான் காட்டப்படுகிறார்.

மேலும் சனத்குமாரர் என்பவர் முருகப்பெருமானின் அம்சம் என்பது சிவ/ஸ்கந்த புராணத்தில் உள்ள சனத்குமார சம்ஹிதையில் சொல்லப்படுகிறது. கதிர்காமத் தொடர்பும் சனத்குமாரருக்கு காட்டப்படுகிறது murugan.orgஇல்.

அதனால் தான் இங்கு அவ்வாறே கையாண்டேன்...இந்த சுலோகத்தில் முருகன் என்று வெளிப்படையாகக் குறிக்கப்படாவிட்டாலும், ஆறாம் ஸ்லோகத்தில் "சண்முக" என்று வெளிப்படையாகவே வருகிறது. இதற்கு முந்தைய பதிவுகளில் சேயோன் வணங்கிடும் மாயோன் என்று இட்டிருந்தேனே...
பார்க்கவில்லையா?

http://verygoodmorning.blogspot.com/2007/01/6.html

குமரன் சொன்னது போல் தாழ்த்தவோ உயர்த்தவோ உண்டான நோக்கம் இதில் இல்லை! ஒருவரோடு ஒருவர் இயைந்த அன்பும் விசாரிப்பும் தான் எனக்கு ஸ்லோகங்களில் படுகிறது!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//தீட்டு எது என்பதற்கான விளக்கங்களைப் படிக்கும் போது தூமலர் தூவி
வாயினால் பாடி
மனத்தினால் சிந்தித்து...//

அருமையா எடுத்துக் கொடுத்தீங்க, குமரன்..மிக்க நன்றி!

அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ...என்றும் உடலால் குளிராது உள்ளத்தில் குளிரவும் சொல்வாளே!

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ என்றும் சொல்லும் போதும் இதே சிந்தனை தான் என்று நினைக்கிறேன்!

ஷைலஜா said...

அருமையான பதிவு ரவி.ஆழ்ந்த விளக்கம். 'தூயோமாய் வந்தோம்;' என்கிறாள் ஆண்டாளும் திருப்பாவையில். மனத்தூய்மைதானெ இதில் முக்கியம்?

"பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும் ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர்வேண்டா விருப்புடைய வெஃகாவே சேர்ந்தானை மெய்மலர்த் தூய்க்கை தொழுதால் அஃகாவே தீவினைகள் ஆய்ந்து"
என்கிறார் பேயாழ்வார்.உண்மைதானே ரவி? பாராட்டுக்கள் உங்களின் சிறந்த இந்தப்பதிவிற்கு.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஷைலஜா said...
அருமையான பதிவு ரவி.ஆழ்ந்த விளக்கம். 'தூயோமாய் வந்தோம்;' என்கிறாள் ஆண்டாளும் திருப்பாவையில். மனத்தூய்மைதானெ இதில் முக்கியம்?//

சரியாகச் சொன்னீங்க ஷைலஜா! மனத்தூய்மை தான் முக்கியம்.
தூயோம் என்று சொல்கிறாள். தூய்மையாய் என்று சொல்லவில்லை பாருங்கள்!

//பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும் ஐந்து
நெருப்பிடையே நிற்கவும் நீர்வேண்டா விருப்புடைய
வெஃகாவே சேர்ந்தானை மெய்மலர்த் தூய்க்கை தொழுதால்
அஃகாவே தீவினைகள் ஆய்ந்து"
என்கிறார் பேயாழ்வார்.//

சூப்பர் பாசுரம்
இயல் சாற்று மறை!
கலக்கறீங்க ஷைல்ஸ்! :-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரவிசங்கர்!
விளக்கம் மிக அருமை.
மனச் சுத்தமிருந்தால் கோவிலுக்கே போகத் தேவையில்லை.
சுத்தமாகக் கோவிலுக்குப் போய் வம்பு பேசுதல்... அருமையாகச் சொல்லியுள்ளீர்.
இதை அச்சுப்பதித்து கோவில்களில் வினியோகிக்க வேண்டும்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ரவிசங்கர்!
விளக்கம் மிக அருமை.
சுத்தமாகக் கோவிலுக்குப் போய் வம்பு பேசுதல்... அருமையாகச் சொல்லியுள்ளீர்.
இதை அச்சுப்பதித்து கோவில்களில் வினியோகிக்க வேண்டும்.//

எனக்கு இந்த ஏக்கம் சின்ன வயசிலேயே உண்டு யோகன் அண்ணா. வீட்டுல சாமி கும்பிடும் போதாச்சும் கொஞ்சம் வாய மூடிக்கிட்டு இருப்பாங்க, ஆள் இல்லாதததால்!

ஆனாக் கோயிலுக்குப் போயி ஆளுங்கள பார்த்த உடனே, கண்டதும் பேச ஆரம்பிச்சிடுவாங்க சில மக்கள்; எங்க வீட்டு மக்கள் சிலர் கூட. ஏதோ கல்யாணம் காய்ச்சி-ன்னு பேசினாக் கூட ஓக்கே...ஆனா ஊர் வம்பு தான் சொல்லி மாளாது...அப்பவே நான் கோவிச்சுக்குவேனாம்...அதுனாலேயே சித்தி, மாமி எல்லாம் என் கூட கோவிலுக்கு வரணும்னா பயப்படுவாங்க! :-)))

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர். எங்களுக்கெல்லாம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தான் முதல் பிக்னிக் ஸ்பாட்டே. :-) இப்பவும் நண்பர்களைச் சந்திக்க கோவிலுக்குத் தான் வரச் சொல்கிறேன். ஆடி வீதியிலோ பொற்றாமரைக்குளக்கரையிலோ உட்கார்ந்து கொண்டு தான் கதைகள் பேசுவோம். சாமி சன்னிதியில் பேசுவதில்லை. ஆனால் கோவிலில் தான் எங்கள் நட்பெல்லாம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா வளர்ந்தது. :-)

நிச்சயம் பண்ணின பிறகு கல்யாணத்துக்கு முந்தி வருங்கால மனைவியைக் கூட கோவிலுக்குக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லி முதல்ல கோவிலுக்குப் போயிட்டு அப்புறம் ஊர் சுத்துறது எங்க ஊரு வழக்கம் :-) கோவிலுக்குப் போறோம்ன்னு சொன்னா உடனே வீட்டுல இருந்து பொண்ணை அனுப்பிடுவாங்களே. (இப்ப எல்லாம் சில பெருசுங்க கோவிலுக்கா 'சிவாஜி' கூட்டிக்கிட்டுப் போங்கன்னு சொல்றாய்ங்களாம்).

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குமரன் (Kumaran) said...
இரவிசங்கர். எங்களுக்கெல்லாம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தான் முதல் பிக்னிக் ஸ்பாட்டே. :-) இப்பவும் நண்பர்களைச் சந்திக்க கோவிலுக்குத் தான் வரச் சொல்கிறேன்//

மிகவும் நல்ல விடயம் தான் குமரன்.
நான் அடிக்கடி சொல்வது என்னன்னா...
நம் ஆலயங்கள் லைப்ரரியோ...
சாமியார் மடமோ இல்லை. வாய் மூடிக் கொண்டு வருவதற்கு!
அவை ஒரு Community Center!
அதுவும் மதுரை, தஞ்சை, அரங்கம், பழனி பெரிய கோவில்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.

ஆனால் வம்பு தும்பு, அடுத்தவரைப் புறங் கூறுவது இது போன்றவற்றைத் தான் விட வேண்டும்! வீட்டில் விட முடியா விட்டாலும், ஆலயம் வந்திருக்கிறோம் என்ற உணர்வு வந்தாலே போதும். பல விஷயங்களையும் விஷமங்களையும் செய்ய மாட்டோம் அல்லவா?
-காதல் ஜோடிகளுக்கும் இது பொருந்தும் :-)
-ஆலய அர்ச்சகர்கள், பணியாளருக்கும் இது பொருந்தும்!

நம் தாய் தந்தையர் முன் எதை எல்லாம் செய்ய மாட்டோமோ அதே தான் ஆலயத்துக்கும் applicable :-)
சரியா, குமரன்?


//சாமி சன்னிதியில் பேசுவதில்லை//

இது தான் முக்கியம்!

//நிச்சயம் பண்ணின பிறகு கல்யாணத்துக்கு முந்தி வருங்கால மனைவியைக் கூட கோவிலுக்குக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லி முதல்ல கோவிலுக்குப் போயிட்டு அப்புறம் ஊர் சுத்துறது எங்க ஊரு வழக்கம் :-)//

ஹை ஹை
ஒங்க ஊரு வழக்கமா?
இல்லை ஒங்க வழக்கமா? :-))
Anyway thanks for the idea...பாலாஜி CVR எல்லாருக்கும் உதவியா இருக்கும்!

//இப்ப எல்லாம் சில பெருசுங்க கோவிலுக்கா 'சிவாஜி' கூட்டிக்கிட்டுப் போங்கன்னு சொல்றாய்ங்களாம்).//

அடங் கொப்புரானே!

மதுரையம்பதி said...

இந்தப் பதிவினை இன்றுதான் பார்த்தேன்....சூப்பர் கேஆரெஸ்.

நான் முன்பு எடுத்த குறிப்பிலிருந்து ஒரு பேயாழ்வார் பாசுரம்....

"தாழ்கடையும், நீன்முடியும் ஒண் மழுவும் சக்கரமும்,
சூழரவும், பொன் நாணூம் தோன்றுமால் சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இயைந்து"

மதுரையம்பதி said...

//இன்னும் நாம் யாரும் பொருள் சொல்லாத சௌந்தர்யலஹரி//

குமரன் - கே.ஆர்.எஸ், உங்களிருவரின் ஒத்துழைப்புடன் நான் ஆரம்பிக்கட்டுமா?....

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//மதுரையம்பதி said...
இந்தப் பதிவினை இன்றுதான் பார்த்தேன்....சூப்பர் கேஆரெஸ்//

நன்றி மெளலி. அருமையான பேயாழ்வார் பாசுரம், தாழ்சடையும் நீள்முடியும்...இது பற்றித் தனியாகப் பதிவிடுகிறேன்

//இன்னும் நாம் யாரும் பொருள் சொல்லாத சௌந்தர்யலஹரி//
குமரன் - கே.ஆர்.எஸ், உங்களிருவரின் ஒத்துழைப்புடன் நான் ஆரம்பிக்கட்டுமா?....

ஓ எஸ்! சக்தி உபாசகர் நீங்க செய்யறது இன்னும் பொருத்தமா இருக்கும்!
அப்படியே இங்கும் சென்று, உங்கள் ஆசையைப் பதிவு செய்து விடுங்கள்! :-)

http://puthuvalaippuennam.blogspot.com/2006/10/blog-post.html

குமரன் (Kumaran) said...

மௌலி. அந்த வரியை எழுதும் போது உங்களை நினைத்துக் கொண்டே தான் எழுதினேன். அபிராமி அந்தாதி இடுகைகளில் நீங்கள் லலிதா சகஸ்ரநாமத்திலிருந்தும் சௌந்தர்யலஹரியிலிருந்தும் எடுத்து எழுதிய பின்னூட்டங்களில் எவ்வளவு செய்திகள் இருந்தன என்றும் நினைத்துக் கொண்டேன். :-)

விரைவில் தொடங்குங்கள்.

Anonymous said...

dear KRS,

Sri Yogan Paris-in AVA,ippathivugalai THIRUMALAIL Bakthargalukku koduthal miga miga upayogamaga irukkum.

sundaram

மதுரையம்பதி said...

குமரன், கே ஆர் எஸ்,

நன்றி.....கே.ஆர்.எஸ் சொனன அந்த பதிவிலும் பின்னூட்டமிட்டுள்ளேன். விரைவில் ஆரம்பிப்போம்.

சுப்ரபாதம் (தமிழில்):

ஒலிச் சுட்டிகள்!

முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் - நித்ய ஸ்ரீ பாடுவது (Windows Media Player)

நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com
Pics: tirumala-tirupati.com

சுப்ரபாதம் (மூலம்):

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP