Saturday, October 20, 2007

சுப்ரபாதம்(19&20) - சிற்றின்பம் வேண்டும்! பேரின்பம் வேண்டாம்!

மோட்சத்துக்குப் போய்க் கொண்டு இருக்காரு ஒரு பக்தர்! இறைவனின் தூதர்களே வந்து அவரை அழைத்துப் போறாங்க! போகும் வழியில் திருமலைக் கோவிலின் கோபுரம் தெரியுது! ஆனந்த நிலைய விமானம் மின்னுது! என்ன நினைச்சாரோ தெரியலை! "விஷ்ணு தூதர்களே...மோட்சம் எல்லாம் வேண்டாம்! நான் இங்கயே இறங்கிக்குறேன்-னு"...ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாரு!

என்னய்யா சொல்றீரு? அவனவன் மோட்சம் கிடைக்காதா-ன்னு தவம் கிடக்கிறான்! நீங்க என்னான்னா ஏதோ பாதி வழியில, போதும்...நான் இந்த எக்ஸிட்ல இறங்கிக்கறேன்னு சொல்றது போல பேசறீங்களே! என்ன ஆச்சு உமக்கு?

இல்லீங்க, எனக்குச் சிற்றின்பமே போதும்! பேரின்பம் எல்லாம் வேண்டாம்!
அடப்பாவி மனுஷா...போயும் போயும் இந்த மாதிரி ஒரு ஆளையா, நாம மோட்சம் கூட்டிப் போகலாம்-னு எண்ணினோம்? கணக்கு வழக்குல ஏதோ தவறு நடந்திடுச்சா? சிற்றின்பப் பிரியனா இவன்?

இறைவன் நாம ரூபங்களை எல்லாம் கடந்தவன். அவனை ஒரு உருவத்தில் அடக்கி வழிபடுவது எல்லாம் கீழ்ப்படியாச்சே! இதுவும் ஒரு வகை சிற்றின்பம் தானே! - அப்படின்னு நினைக்கிறீங்களா தூதர்களே?
சரி, சிற்றின்பம்-னே வைச்சிக்கோங்க! எனக்கு அந்தச் சிற்றின்பமே போதும்!
அந்த இன்பத்தில் தான் இறைவனைத் தான் மட்டும் தனியே அனுபவிக்காமல், அடியவர்களோடு அடியவர்களாய், ஒருவருக்கு ஒருவர் ஒன்றாகக் கூடி, அவன் குணானுபவங்களைப் பேசியும் பாடியும், சேர்ந்து அனுபவிக்க முடிகிறது!

அதோ அடியவர்கள் எல்லாம் கீழே இருக்காங்க! கோவிலில் சுப்ரபாதம் ஒலிக்கிறது! இன்னும் சற்று நேரத்தில் நடை திறந்திடுவாங்க! தமிழ்ப் பாசுரங்கள் முழங்கப் போறாங்க! நான் இறங்கி விடுகிறேன்! வருகிறேன் தூதர்களே! மன்னித்துக் கொள்ளுங்கள்!

என்னடான்னு பாக்குறீங்களா - இன்னிக்கி சுப்ரபாதத்தின அவுட்லைன் இதான்! :-)
கொஞ்சம் பெரிய பதிவு தான்! ஆனா முழுசா சொன்னாத் தான் பொருள் விளங்கும்! நேரம் எடுத்துப் படிங்க...
பெரியது கேட்கும் எரிதவழ் வேலோய்! - தொண்டர் தம் பெருமை பதிவிடவும் பெரிதே! :-)



(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)




த்வத் பாத தூளி, பரித ஸ்புரித உத்தமாங்கா
சுவர்கா அபவர்க நிரபேக்ஷ, நிஜாந்த ரங்கா!
கல்ப ஆகம ஆகலநயா ஆகுலதாம் லபந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

த்வத் பாத தூளி = உன் பாத தூளியை (திருமண்)
இறைவனின் பாத தூளி பற்றி பக்தி இலக்கியங்கள் பல கதைகளைப் பேசும்!
எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வச்சோம்...அப்படின்னு இந்தக் காலத்துல கூட பாட்டு போடறாங்க! :-)
கடவுள் வாழ்த்து பற்றிச் சொல்ல வந்த திருவள்ளுவர் கூட, இறைவனை விட்டு விட்டு இறைவனின் பாதங்களைத் தான் பற்றிக் கொள்கிறார். முதல் அதிகாரத்திலேயே திருவடிகள் தான் எங்கும் நிறைந்திருக்கு!

வாலறிவன் "நற்றாள்" தொழாஅர் எனின்
மலர்மிசை ஏகினான் "மாணடி" சேர்ந்தார்
வேண்டுதல் வேண்டாமை "இலானடி" சேர்ந்தார்க்கு
தனக்குவமை இல்லாதான் "தாள்"சேர்ந்தார்க் கல்லால்
அறவாழி அந்தணன் "தாள்"சேர்ந்தார்க் கல்லால்
எண்குணத்தான் "தாளை" வணங்காத் தலை
நீந்தார் இறைவன் "அடி" சேராதார்.
......என்று திருக்குறளில் கூட எங்கு பார்த்தாலும் "திருவடிகள்" தான்!

வைணவத்தில் திருவடிகளுக்கு மிகப் பெரிய இடம் உண்டு. பல தத்துவங்களும் கதைகளும் உண்டு! பாதுகை ஏன் நாட்டை ஆண்டது என்பதற்கும் விளக்கம் உண்டு!
மற்ற சமயங்களிலும் இலக்கியங்களிலும் கூட இறைவனின் இணையடிகள் ஏத்தப்படுகிறது. ஈசன் எந்தை இணையடி நீழலே என்று அப்பர் சுவாமிகள் உருகுகிறார்!
ஆனால் அவை பெரும்பாலும் பாட்டோடும் கருத்தோடும் நின்று விடும்! - மக்களிடம் நேரடியாகச் சென்றடையும் வழிபாட்டு முறைகளில் திருவடிகள் வெளிப்படையாகத் தெரிவதில்லை!

ஆனால் வைணவத்தில் திருவடிகள், மக்களிடம் நேரடியாக முன்னிறுத்தப்படுகின்றன.
நெற்றியில் இட்டுக் கொள்ளும் நாமம் = திருவடி
கோவிலில் தலை மேல் வைக்கும் சடாரி = திருவடி
கருடன் = பெரிய திருவடி
அனுமன் = சிறிய திருவடி
திருவடி சம்பந்தம், பாதுகா சகஸ்ரம், பாத பூசை என்று திருவடி இல்லாத இடமே கிடையாது!

அது ஏன் திருவடிக்கு மட்டும் இவ்வளவு பெருமை?
கையைச் சொல்லலாமே! அது தானே அபயம் கொடுக்கிறது? - முகத்தைச் சொல்லலாமே! அது தானே நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது?
எதுக்குக் காலைச் சொல்லணும்?
முன்னரே ஒரு சுப்ரபாதப் பதிவில் சொல்லி இருக்கிறேன். பாருங்க!

அந்தத் திருவடியின் அடியில் உள்ள கோடானுகோடி துகள்களில், ஒரு துகளாக இருக்க மாட்டோமா என்று எல்லாச் சமயத்து அன்பர்களுமே விரும்புகின்றார்கள்.
அந்தத் திருவடித் துகளைத் தான், அடியவர்கள் தங்கள் தலையின் மேல் சூடிக் கொள்கிறார்கள்! திருமண் என்று சிலாகித்துப் பேசுகிறார்கள்!

பரித ஸ்புரிதோ = தாங்கிக் கொண்டு, புல்லரித்துப் போய் நிற்கிறார்கள், அடியவர்கள்!
உத்தமாங்கா=
உத்தம+அங்கா= உன் திருவடித் துகள் ஒன்றே அவர்கள் அங்கங்களை எல்லாம் சுத்தம் செய்து விட்டது!
பொதுவா மண்ணுன்னா அழுக்கு; நீருன்னா சுத்தம். ஆனாப் பாருங்க, திருவடித் துகளே அங்கங்களைச் சுத்தம் செய்து விட்டதாம்!
சைவத்திலும் கூட, குளிக்காமலேயே திருநீறு தரிக்கலாம் என்ற விதி இருக்கு!


சுவர்கா, அபவர்க நிரபேக்ஷ = சொர்க்கப் பதவி, மோட்ச நிலை - இவற்றில் கூட ஆசையில்லாமல்
நிஜா அந்தரங்கா = அந்தரங்க சுத்தியுடன் உன்னையே விரும்புகிறார்கள்
சேக்கிழார் சுவாமிகள் மிக அருமையாகச் சொல்லுவார் பெரிய புராணத்தில்! அது தான் அடியவர்களின் உண்மையான லட்சணம்!
கூடும் அன்பினால் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்!

அடியார்கள் சொர்க்கம், மோட்சம் இதன் மேல் கூட ரொம்ப விருப்பம் வைக்காமல், அவனையே விரும்பி நிற்கிறார்கள்!
அவனின் திருவுள்ள உகப்பிற்கு மட்டும் தான் தாங்கள் இருக்கிறோம் என்ற அன்பு நிலை அது! அதனால் அவர்கள் மோட்சம், பிறவா வரம் என்று தனியாக விரும்புவது எல்லாம் ஒன்றும் இல்லை!

சொர்க்கம்-நரகம் = அவரவர் செயல் வினைகளில், அவ்வப்போதே இன்ப துன்பங்கள் விளைந்து விடுகின்றன!

மோட்சம் = பிறவிச் சுழல்களில் சிக்காமல் பரமபதம் என்னும் மோட்சம் அடைந்து விட்டால், மீண்டும் வரவேண்டாம் அல்லவா?
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே! என்கிறார் நம்மாழ்வார்!
அப்பிடின்னா என்ன அர்த்தம்?

தேவர்களாகப் பிறந்தாலும் கூட, வைகுந்தம் செல்ல வேண்டும் என்றால், மனிதப் பிறவி எடுத்துத் தான் செல்ல முடியும்!
சரி, அப்படிச் சென்று விட்டால், மீண்டும் வராமல், ஜாலியா அங்கேயே இருக்கலாம் அல்லவா? - இப்படி எல்லாம் கணக்கு போடமாட்டார்களாம் அடியவர்கள்!
அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் அவனின் திருவுள்ள உகப்பு ஒன்று தான்!

ஆழ்வார் ஏற்கனவே மோட்சம் அடைந்து வைகுந்தத்தில் தான் இருக்கிறார். ஆனால் இனி பிறவி இல்லை என்று அவர் கணக்கு போட்டுக்கொண்டு இருக்கிறாரா?
ஆதிசேஷன் பரமபதத்தில் நித்ய வாசம் செய்பவர். அவர் இராமானுசர், மணவாள மாமுனிகள் என்று அவதாரம் செய்து, மாறி மாறிப் பூமிக்கு வரவில்லையா?

மற்ற மண்ணுலக மக்கள் எல்லாரும் கடைத்தேறும் பொருட்டு, அடியவர்களை பூமிக்கு அனுப்பி அவதரி்ப்பிக்கின்றான் இறைவன்!
அடப் போங்க பெருமாளே, நானே படாத பாடுபட்டு மோட்ச பதவி வாங்கிக் கொண்டு வந்திருக்கேன்....என்னைப் போயி திரும்பிப் போகச் சொல்லுறீங்களேன்னு முரண்டு செய்வார்களா என்ன? :-)

மற்ற அடியவர்களும், உயிர்களும் கடைத்தேறும் பொருட்டு, இறைவன் அனுப்பினால், அதுவும் அவர்களுக்கு மோட்சமே!
அதான் கூடும் அன்பினால், வீடும் வேண்டா விறலின் விளங்கினார்! - இறைத் தொண்டில் தன்னல தர்மத்தைக் காட்டிலும் பொதுநல தர்மம் தான் முன்னிற்கும்!
முன்பே மாதவிப் பந்தல் வைகுண்ட ஏகாதசிப் பதிவில், இது பற்றி பார்த்தோம்!

மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் என்ற திருப்பாவை வாசகம் தான், இதன் பின்னே மறைந்துள்ள பொக்கிஷம்!
முப்பது நாளும் நோன்பு நோற்றுவிட்டு, கடைசி நாளில் மோட்சம் வேண்டாம் என்று சொல்லும் பைத்தியக்காரப் பெண்ணா ஆண்டாள்?
இற்றைப் பறை கொள்வாம் அன்று! காண் கோவிந்தா என்று ஆண்டாள் பறை வேண்டாம் என்று சொல்லி விடுகிறாள்! - பின்ன, என்ன தான் வேணுமாம்?

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது - உன் பணிகளுக்கு எங்களை ஆட்படுத்திக் கொள்!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், உற்றோமே ஆவோம் - பிறவிகள் பிறந்தாலும், உன் உள்ளத்து உகப்புக்கு மட்டும் நாங்க இருந்தாப் போதும் என்ற காதல் நெஞ்சம் தான்! அதுவே உண்மையான பக்தியின் சிகரம்! - நின் அருளே புரிந்து இருந்தேன், இனி என்ன திருக்குறிப்பே?


கல்ப ஆகம, ஆகலநயா = கல்பம் (யுகம்) ; ஒவ்வொரு நொடியும் ஒரு கல்பமாய் கழிகிறது அடியார்களுக்கு!
இறைவனை "எப்போதும்" கூடி இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் வாட்ட
ஆகுலதாம் லபந்தே = துன்பப்பட்டு இருக்கின்றார்கள்!

கல்பம்=4,320,000 ஆண்டுகள்! 4 யுகம் = 1 கல்பம்!
Time between creation and deluge...
இது பற்றி விஞ்ஞான நோக்கில், வானுக்குள் விரியும் அதிசயங்கள் போல, ஒரு பதிவிட வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாள் ஆசை! :-) சரி, மேட்டருக்கு வருவோம்...

இப்போது தெரிகிறது அல்லவா, தேவர்களைக் காட்டிலும், எதுக்கு அடியவர்களை உயர்வாகச் சொல்லுறாங்க-ன்னு! திருவேங்கடமுடையான் ஆலயத்தில் பெருமாளின் தரிசனத்துக்கு, நின்று கொண்டு இருக்காங்க! அடியார் இவர்களுக்கு அன்பு காட்டிட, வேங்கடவா எழுந்தருள்வாய்!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!







த்வத் கோபுர ஆக்ர சிகராணி, நிரீக்ஷ மாணா
ஸ்வர்கா அபவர்க பதவீம், பரமாம் ச்ரயந்த!
மர்த்யா மநுஷ்ய புவனே, மதி மாச்ரயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்!

த்வத் கோபுராக்ர சிகராணி = உன் ஆலய கோபுரத்தின் சிகரத்தைக்
நிரீக்ஷ மாணா = கண்ணாரக் கண்டு

கோபுர தரிசனம், பாப விமோசனம்-னு சொல்லுவாங்க!
அப்படின்னா நான் கூடத் தான் தினப்படி கோபுரத்த பாக்கறேன். என் நண்பர் ஒருத்தர் நடத்தும் மதுபானக் கடை, கோபுரத்துக்கு எதுத்தாப்புல தான் இருக்கு! :-)
அவருக்கும், எனக்கும் பாவ விமோசனம் ஆயிடுச்சா என்ன? - அதான் "கண்ணாரக் கண்டு" ன்னு சொல்லுறாங்க - கோபுரத்தைக் கோவிந்தனா பாக்கும் போது பாப விமோசனம்!

ஸ்வர்கா அபவர்க பதவீம் = சொர்க்கம் மற்றும் மோட்சப் பதவியைக் கூட விரும்பாமல்!
பரமாம் ச்ரயந்த= உத்தமமான உன் சேவையில், திருத் தொண்டில் மட்டும் ஈடுபாடு கொண்டுள்ளார்கள்!
சென்ற சுலோகத்திலேயே, இதுக்கு விளக்கம், பார்த்து விட்டோம்! தவத்தினால் அடைந்த பதவிகளைக் கூட இறைவனுக்காக உதறித் தள்ள தயாராய் இருப்பவர்கள் அடியார்கள்! சேவித்து இருப்பதுவே செவ்வடியார் செழுங்குணம்!

மர்த்யா மநுஷ்ய = அழியும் மானிடப் பிறவிகள் வாழும்
புவனே = பூவுலகில், பிறக்கத் தான்
மதிம் ஆச்ரயந்தே = அவர்கள் எண்ணம் போகின்றது

இப்படித் தொண்டு ஒன்றில் மட்டும் கருத்துடைய அடியவர்கள், உன் முகம் காண வந்திருக்காங்கப்பா! தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே! சீக்கிரம் எழுந்து, உன் குளிர்முகம் காட்டு!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம்
(நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

14 comments:

Anonymous said...

Vanakkam sir,
Thiruppanazhwar in his AMALANADHIPIRAN passuram,first paragraph he mentioned, thirukkamala paadham vandhu,boodhathar also mentioned that manivannan paadham nee maravel nenje,all the azhwars and acharyas mentioning thiruvadi thozhal.Thiruvengadamudayan thiruvadigale saranam.nalla padhivu,enjoyed.
ARANGAN ARULVANAGA.
Anbudan
k.srinivasan.

RATHNESH said...

திருவடி குறித்த கருத்துக்கள் அருமை. திருக்குறள் உதாரணங்கள் மிகப் பொருத்தம்.பணியுமாம் என்றும் பெருமை என்பதன் தாத்பர்யமே அது தானே. "அடி உதவுதல் போல் அண்ணன் தம்பி உதவான்" என்கிற பழமொழியைக் கூட இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே பார்க்க முடியும். அடிபணிதலின் பலன்கள் அரசியலிலும் கண்கூடே.

மணிப்பக்கம் said...

nice blog, keep blogging...!

குமரன் (Kumaran) said...

மர்த்யா மனுஷ்ய புவனே மதி மாச்ரயந்தே - மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே - இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் - இப்படி பட்டியல் இட்டுக் கொண்டே போகலாம். மிகச் சுவையாக சுவர்க, அபவர்க்கங்களை வேண்டாத அர்ச்சாவதார உருவில் இருக்கும் இறைவனைத் தொழுது தொண்டாற்றுவதையே விரும்பும் மெய்யடியார்களைப் பற்றி நன்கு சொல்லியிருக்கிறீர்கள். இறைவனை உருவத்தில் சிலையில் வைத்து வழிபடுவது எல்லாம் கீழ்ப்படி என்று இறைவனின் கருணையை அறியாதவர்களும் ஞானக்கருவம் கொண்டவர்களும் நினைக்க வாய்ப்புண்டு. அடியார்க்கடியரான விஷ்ணு தூதர்கள் அப்படி எண்ண வாய்ப்பில்லை இரவிசங்கர்.

மஞ்சூர் ராசா said...

அனைத்து விளக்கங்களும் அருமையாக நறுக்கென்று இருக்கிறது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Anonymous said...
Vanakkam sir,
Thiruppanazhwar in his AMALANADHIPIRAN passuram,first paragraph he mentioned, thirukkamala paadham vandhu,//

ஆமாங்க ஸ்ரீநிவாசன் சார்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன வொக்கின்றதே என்று பாதங்கள் தான் முதல் தெரிகிறது! :-)

//Thiruvengadamudayan thiruvadigale saranam.nalla padhivu,enjoyed.//

நீங்க மகிழ்ந்து கண்டு எனக்கும் மகிழ்ச்சியே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//RATHNESH said...
திருக்குறள் உதாரணங்கள் மிகப் பொருத்தம்.பணியுமாம் என்றும் பெருமை என்பதன் தாத்பர்யமே அது தானே.//

ஆமாங்க ரத்னேஷ்
"அப்பற்றைப் பற்றுக" பற்று விடற்கு என்று இன்னொரு குறளிலும் ஐயன் சொல்லுறாரு!
எல்லார்க்கும் நன்றாம் பணிதல்-ன்னும் சொல்லறாரு!

//"அடி உதவுதல் போல் அண்ணன் தம்பி உதவான்" என்கிற பழமொழியைக் கூட இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே பார்க்க முடியும்.//

இது ராமாயணக் கதையை ஒட்டி வந்த பழமொழி என்றும் கூறுவார்கள்!

//அடிபணிதலின் பலன்கள் அரசியலிலும் கண்கூடே//

:-)))
அரசியலில் அடி பணிதல் அடி வருடல் எல்லாம் அடியை உருவுவதற்காக!

ஆனா இறையன்பில் அடி பணிதல், அடியைப் பணிவதற்காகவே தவிர, வேறில்லை!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சிவாஜி - The Boss! said...
nice blog, keep blogging...!
//

தலைவா, நன்றி!
அடுத்த படம் எப்போ? :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
மர்த்யா மனுஷ்ய புவனே மதி மாச்ரயந்தே - மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே - இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் - இப்படி பட்டியல் இட்டுக் கொண்டே போகலாம்.//

வாங்க குமரன்!
நியாயமா இந்தப் பதிவை, இரண்டு பதிவா போட்டிருக்கணும்! அப்படிப் போட்டிருந்தா அடுத்த சுலோகத்துக்கும் இன்னும் நிறைய தமிழ்ப் பாடல் கொடுத்திருக்கலாம்!

ஆனா ஒரு வெட்டியான பதிவர் - பையலான நண்பர், வைகுண்ட ஏகாதசிக்குள் சுப்ரபாதம் முடிக்கணும்-னு ஆணையிட்டு இருக்காரு! :-)

அதுக்கென்ன, அதான் நீங்க பின்னூட்டத்தில் அழகாச் சொல்லப் போறீங்களே!
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே ---- இனித்தமுடைய எடுத்த பொற் "பாதமும்" காணப் பெற்றால் -னு அங்கும் திருவடி தான்...பாத்தீங்களா?

//மிகச் சுவையாக சுவர்க, அபவர்க்கங்களை வேண்டாத அர்ச்சாவதார உருவில் இருக்கும் இறைவனைத் தொழுது தொண்டாற்றுவதையே விரும்பும் மெய்யடியார்களைப் பற்றி நன்கு சொல்லியிருக்கிறீர்கள்.//

நன்றி குமரன்

//ஞானக்கருவம் கொண்டவர்களும் நினைக்க வாய்ப்புண்டு. அடியார்க்கடியரான விஷ்ணு தூதர்கள் அப்படி எண்ண வாய்ப்பில்லை இரவிசங்கர்.//

ஹிஹி
அந்த உரையாடல் சுவைக்காக சேர்த்தேன் குமரன்! பதிவுல ஒரே தத்துவமா வரப் போகுதே என்பதற்காக ஒரு லைட் மெனு தான் அது :-)

அதனால் தான் தூதர்கள் அவ்வாறு சொல்வதாகச் சொல்லவில்லை!
சிற்றின்பம்-னா ஒரு வேளை இப்படி-ன்னு நினைச்சிட்டீங்களா-ன்னு அடியவர் கேட்பதாக எழுதி விட்டேன்!

விஷ்ணு தூதர்களும் அடியவர்க்கு அடியவர் தானே! அவர்களுக்கு அப்படி ஒரு எண்ணம் எழுமா?
அஜாமிளனைக் காப்பாற்றி, எம் தூதர்களிடம் வாதாடி அழைத்துச் சென்றவர்களாச்சே அவர்கள்! சும்மாவா? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மஞ்சூர் ராசா said...
அனைத்து விளக்கங்களும் அருமையாக நறுக்கென்று இருக்கிறது.
//

வாங்க மஞ்சூர் ராசா.
விளக்கங்கள் இந்தப் பகுதியில் கொஞ்சம் மிகுந்து விட்டன!
என்றாலும் எழுதி முடித்த பின் எனக்கும் ரொம்ப பிடிச்சி இருந்தது!

வல்லிசிம்ஹன் said...

அடைந்து வைகுந்தத்தில் தான் இருக்கிறார். ஆனால் இனி பிறவி இல்லை என்று அவர் கணக்கு போட்டுக்கொண்டு இருக்கிறாரா?
ஆதிசேஷன் பரமபதத்தில் நித்ய வாசம் செய்பவர். அவர் இராமானுசர், மணவாள மாமுனிகள் என்று அவதாரம் செய்து, மாறி மாறிப் பூமிக்கு வரவில்லையா?//

இந்த வரிகள் அட்சரலட்சம் பெறும் ரவி.
பாதுகா தேவி பெருமையும்,திருவடிகள் பெருமையும்,
திருமால் சரண் திண் சரணாகக் கொண்ட வைணவப் பெருமையும் வாக்கிய ரூபத்தில் ஒளிர்கின்றன.
நன்றி நன்றி நன்றி.

நாகை சிவா said...

நல்ல தெளிவான விளக்கம் ரவி :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
அடைந்து வைகுந்தத்தில் தான் இருக்கிறார். ஆனால் இனி பிறவி இல்லை என்று அவர் கணக்கு போட்டுக்கொண்டு இருக்கிறாரா?//

//இந்த வரிகள் அட்சரலட்சம் பெறும் ரவி//

நன்றி வல்லியம்மா!

//பாதுகா தேவி பெருமையும்,திருவடிகள் பெருமையும்,திருமால் சரண் திண் சரணாகக் கொண்ட வைணவப் பெருமையும் வாக்கிய ரூபத்தில் ஒளிர்கின்றன//

ஒளிரட்டும் ஒளிரட்டும்!
ஒளியில் தான் தெளிவு கிடைக்கும் இல்லீங்களா வல்லியம்மா? :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நாகை சிவா said...
நல்ல தெளிவான விளக்கம் ரவி :)//

ஆகா...
புலி சுப்ரபாதத்துக்கு வந்துச்சா! :-)

அது என்ன தெளிவான விளக்கம்-னு ஒரு தெளிவான சிரிப்பான்? :-)

சுப்ரபாதம் (தமிழில்):

ஒலிச் சுட்டிகள்!

முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் - நித்ய ஸ்ரீ பாடுவது (Windows Media Player)

நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com
Pics: tirumala-tirupati.com

சுப்ரபாதம் (மூலம்):

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP