சுப்ரபாதம்(23&24) - தமிழ் ஆட்டம்! மச்சாகூர்-மாகோலா-சிங்காவா-மாராமா!
சரி, அது என்னா மச்சாகூர்-மாகோலா-சிங்காவா-ராமாரா?:-)
மாகோலா, கோக்கோ கோலா-ன்னுகிட்டு என்ன உளறல்-னு பாக்குறீங்களா?ஹிஹி..அது ஒரு தமிழ் விளையாட்டு! பதிவின் கடைசிலே பாருங்க!
இன்னிக்கி சுப்ரபாதம் என்னன்னா? காதலில் வெற்றி அடைய வேண்டுமா?
மன்மத விரதம் இருங்க!
மன்மதன்-ரதி கோவிலுக்குப் போங்க-ன்னு யாராச்சும் இது வரை சொல்லி இருக்காங்களா?
அப்படிச் சொன்னாக்கா, இளைஞர் பட்டாளம் முழுக்க எந்தக் கோவிலுக்குப் போகும்-னு நினைக்கிறீங்க? பேசாம மெரீனா பீச்சுக்கு எதிர்தாப்புல ஒரு மன்மதன் கோயில் கட்டிடலாமா? :-)
அட, சும்மா இல்லீங்க! ஆனானப்பட்ட ஆண்டாளே மன்மதனை வேண்டினாளாம், தன்னைக் கண்ணனோட சேர்த்து வைக்கச் சொல்லி!
பாவைநோன்பு இருந்தவள், மன்மத நோன்பும் இருந்தாளாம்!
காயுடை நெல்லொடு கரும்பு அமைத்துக்
கட்டி அரிசி அவல் அமைத்து,
வாய் உடை மறையவர் மந்திரத்தால்
மன்மதனே உன்னை வணங்கு கின்றேன்
- என்று வேறு பாடுறா! எதுக்காம்?
தேயம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன்
திருக் கைகளால் என்னைத் தீண்டும்வண்ணம்,
சாயுடை வயிறும் மென் தடமுலையும்
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே
- திரிவிக்ரமன் அணைப்புக்காம்!
அடுத்த முறை, கோவிலில் காதலர்களை யாரும் திட்டினாங்கனா, ஆண்டாள் பாட்டை எடுத்து வுடுங்க! கப்-சிப்புன்னு ஆயிடுவாங்க! :-)
மன்மத லீலையை வென்றார் உண்டோ? மன்மதன் எல்லாரையும் மயக்குவான், அதிலும் புது மாப்பிள்ளைகளை அதிகம் மயக்குவான் சரி!
ஆனா அந்த மன்மதனையே மயக்கி அவன் தொழிலையே மறக்கச் செய்ய முடியுமா? யாரால் முடியும்?
ஒரே ஒரு ஜோடியால் தான் முடியும்! யார் அது? பார்க்கலாம் வாங்க!
(இந்த சுலோகத்தைப் படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)
கந்தர்ப்ப தர்ப்ப ஹர சுந்தர திவ்ய மூர்த்தே
காந்தா குசாம் புருஹ குட்மல லோல த்ருஷ்டே
கல்யாண நிர்மல குணாகர திவ்ய கீர்த்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்
கந்தர்ப்ப = காதலின் தேவன், மன்மதன்
தர்ப்ப = அவனின் தற்பெருமையை
ஹர = விரட்டிடும்
சுந்தர திவ்ய மூர்த்தே = அழகும், புனிதமும் கொண்ட மூர்த்தியே, பெருமாளே!
மன்மதனை எரித்தவன் சிவபிரான்! அப்படிச் சிவனாரின் தவத்தையே கலைக்கும் அளவுக்கு தொழில் புரிந்த மன்மதன், தன் தொழிலையே மறந்து மயங்குகிறான் என்றால்?
எவரையும் தன் கரும்பு வில் பாணத்தால் மயங்கச் செய்பவன் என்ற அவனுடைய தற்பெருமை...ஒன்றுமில்லாமல் போகிறது! எதைப் பார்த்து?
திவ்ய தம்பதிகள் இருவரைப் பார்த்து!
அவர்களின் காதலும், அன்பும் கண்டு அவனே வெட்கி நிற்கிறான்!
மன்மத பாணம் பாய்ந்தால். கொஞ்ச நேரம் தான் மோகம் இருக்கும்!
ஆனால் இங்கு அவன் பாணத்தின் சக்தி, தூய்மையான காதல் முன் தலைகுனிந்து நிற்கிறது! ஏனாம்?
பெருமாள் உறக்கம் கலையாமல், தன் மனத்துக்கினிய மனையாள், மகாலக்ஷ்மியை அணைத்துக் கொண்டு, உறங்கிய வண்ணமே இருக்கிறான்!
இவர்கள் உறங்கும் அழகு,
கண்கள் மூடினாலும், ஒருவரை ஒருவர் உறக்கத்திலும் பார்த்துக் கொண்டிருக்கும் அழகு,
எனக்கு நீ, உனக்கு நான் என்னும் காதலின் அழகு,
சம்சார சாகரத்தைக் காதலினால் கடக்கலாம் என்று காட்டும் அழகு!
குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்!
இவர்கள் அன்பைக் கண்டு மன்மதனே வாயடைத்துப் போய் நிற்கிறான்!
இப்படியும் ஒரு ஈடுபாடா? பின்னிப் பிணைதலா?
இது அன்பா? இல்லை மாரன் அம்பா?
மன்மத அம்பும் கூர் மழுங்கிப் போய் நிற்கும் மகோன்னத அன்பு!
காந்தா = மனத்துக்கினியவள், மகாலக்ஷ்மி தாயாரின்
குச = திருமார்போடு
ஆம்புருஹ குட்மல = தாமரைத் தண்டு போல
அணைத்துக் கொண்டு, இன்னும் உறக்கமா?
மைத்தடங் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்றகு இல்லாயால்
தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்!
உங்கள் காதலைப் பிறகு வைத்துக் கொள்ளுங்கள்! உங்க குழந்தைகள் எல்லாரும் கோவிலுக்கு வந்திருக்கோம்! முதலில் எங்களைக் கவனிங்க, என்று செல்லமாகச் சிணுங்கித் துயில் எழுப்புகிறார்கள்!
லோல த்ருஷ்டே = சிரிக்கும் குறும்புப் பார்வை கொண்டவனே
கல்யாண = மங்களகரமானவனே
நிர்மல = குறையொன்றும் இல்லாத கோவிந்தா
குணாகர = குணங்களின் உறைவிடமே
திவ்ய, கீர்த்தே = புனிதமானவனே, புகழ் ஓங்குபவனே!
துயில் களைக! எங்கள் துயர் களைக!
ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!
கவி காளமேகத்திடம் ஒரு புலவர், திருமாலின் பத்து அவதாரங்களையும் ஒரே வெண்பாவில் பாட முடியுமான்னு கேட்க,
ஒரு வெண்பா என்ன? அரை வெண்பாவிலேயே பாடுகிறேன் என்று சொல்லிப் பாடியும் காட்டினார்.
மெச்சுதிரு வேங்கடவா வெண்பாவிற் பாதியில் என்
இச்சையில் உன்சன்மம் இயம்பவா? - மச்சாகூர்
மாகோலா சிங்காவா மாராமா ராமாரா
மாகோபா லாமாவா வா
அட என்னங்க இது.....மாராமா ராமாரா-ன்னு நாக்கு குழறுதா?
பதம் பிரிங்க; புரியும்! :-)
மச்சா-கூர்மா-
கோலா-சிங்கா-வாமா-ராமா-ராமா-
ராமா-கோபாலா-மாவா வா
(கோலா =வராகம்
வாமா =வாமனா
ராமா-ராமா-ராமா =பரசுராமா-ராமா-பலராமா-ன்னு மூன்று இராமன்கள்
மா-வா =குதிரையின் மேல் வரும் கல்கி...
என்னங்க, தமிழ் விளையாடுதா? எங்க இன்னொரு தரம் நாக்குழறாம வேகமா சொல்லுங்க பார்ப்போம்,
மாகோலா சிங்காவா மாராமா ராமாரா, மாகோபா லாமாவா வா :-)
மீனாக்ருதே- கமட- கோல- ந்ருசிம்ம- வர்ணிந்
ஸ்வாமிந்- பரஸ்வத தபோதன- ராமசந்திர-
சேஷாம்ச ராம- யது நந்தன- கல்கி ரூப-
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்
1. மீன ஆக்ருதே = மீன வடிவம் - மச்சாவதாரம்
2. கமட = ஆமை - கூர்மாவதாரம்
3. கோல = பன்றி - வராக அவதாரம்
4. ந்ருசிம்ம = நரசிம்ம அவதாரம்
5. வர்ணிந் ஸ்வாமிந் = பிரம்மச்சாரி, பெரும் சுவாமியாய் - வாமன/திருவிக்ரம அவதாரம்
6. பரஸ் வத தபோதன = பரசு தாங்கும் தவமுனி - ப்ரசுராம அவதாரம்
7. ராமசந்திர = ராமாவதாரம்
8. சேஷாம்ச ராம = சேஷனின் அம்சமாய் ராமன் - பலராம அவதாரம்
9. யது-நந்தன = யது குலத் தோன்றல் - கிருஷ்ணாவதாரம்
10. கல்கி ரூப = கல்கி அவதாரம்
பத்து அவதாரங்களும் இந்த ஒரே சுலோகத்தில் வருகிறது! முடிந்தால் மனப்பாடம் செய்து கொள்ளுங்க! தசாவதார தோத்திரம்-னு வேதாந்த தேசிகர் ஒரு அருமையான படைப்பைச் செய்துள்ளார். அதன் சாரம் போல இருக்கு! இப்படி அத்தனை அவதாரங்களின் சாரமாக நிற்கிறான் திருவேங்கட மாமலையில்!
ஒவ்வொரு அவதாரத்திலும் நோக்கம் என்ன? - தர்ம பரிபாலனம்! அறம் காத்தல்!
தன்னை வந்தடையும் வழியை உயிர்களுக்கு எளிதாகப் புரியுமாறு காட்டி அருளல்!
இதைத் தான் திருவேங்கடமுடையான் காட்டிக் கொண்டு நிற்கிறான்!
வேறு எந்த ஆலயத்திலும் (சைவமாகட்டும் வைணவமாகட்டும்), காண முடியாத ஸ்பெஷல் போஸ் திருமலையில்! :-)
ஆலயத்தில் தரிசனம் செய்யும் போது பார்த்தால், அந்தச் சின்முத்திரைக் கோலம் புலப்படும்!
சுப்ரபாதம் இறுதிப் பதிவில்(29), இது பற்றி விரிவாகச் சொல்கிறேன்!
அதனால் தான் சுலோகத்தில் தசாவதாரங்களின் தொகுப்பாகத் திருமலை நாதனைச் சொல்கிறார்! கலியுக வைகுந்தம் என்று திருமலையும் போற்றப்படுகிறது!
இன்றும், ஆலயத்தில் தசாவதார ஆரத்தி பெருமாளுக்கு உண்டு! தசாவதாரங்களும் பொறித்த பெரிய தாம்பாளத் தட்டில் இந்த ஆரத்தியை எடுக்கிறார்கள்!
தசாவதாரத் தத்துவமே,
ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!
----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------
11 comments:
Can you explain how dasavatharam is related to thirupathi balaji, a bit more?
tamil poem on 10 avatars is good.
கண்ணுக்கினியன கண்டேன்.
படித்து மகிழ்ந்தேன்.
நல்லா இருங்க.
//மாராமா ராமாரா//
வால்மிகி பற்றிய செய்தி மனதில் வந்தது....
கலக்குங்க கே.ஆர்.எஸ்
//
அடுத்த முறை, கோவிலில் காதலர்களை யாரும் திட்டினாங்கனா, ஆண்டாள் பாட்டை எடுத்து வுடுங்க! கப்-சிப்புன்னு ஆயிடுவாங்க! :-)
//
ஓ கோவிலுக்கு வர்றவங்க எல்லாம் தெய்வீகக் காதலர்களோ? :-)
//அதிலும் புது மாப்பிள்ளைகளை அதிகம் மயக்குவான் சரி!
//
புதுசா கல்யாணம் ஆனவங்களுக்குச் சரி. இன்னும் கொஞ்ச நாள்ல ஆகப் போகறவங்களுக்கு எப்படி? அவங்களையும் சேத்துத் தானே சொன்னீங்க? :-)
காமனார் தாதை காமனே வெட்கப்படும் அளவிற்கு இருப்பதில் என்ன வியப்பு? மன்மத மன்மதன் அல்லவா அவன்?!
எல்லா அவதாரங்களும் ஆன எம்பெருமானின் பத்து அவதாரங்களை விதப்பாகச் சொல்கிறார்கள். அந்த பத்து அவதாரங்களை இந்த சுலோகத்தில் சொல்லியிருக்கிறார் இந்த சுப்ரபாதத்தை இயற்றிய தென்கலை ஆசாரியர்.
தென்கலை என்றால் தமிழ்; வடகலை என்றா வடமொழி என்று ஒரு தவறான புரிதல் மக்களிடையே இருக்கிறது. இரு பிரிவினரும் தமிழ், வடமொழி இரண்டையும் சமமாக, சொல்லப்போனால் தமிழை வடமொழியை விட உயர்வாகக் கொள்கிறார்கள்.
இந்த சுலோகங்களை 'வடமொழியில்' இயற்றியவர் 'தென்கலை' ஆசாரியர்.
இன்னொரு கருத்தும் அண்மையில் சொல்லப்பட்டது - அவதாரங்கள் என்னும் கொள்கை தென்கலையாருக்கு மட்டுமே உரியது என்று. வடகலை ஆசாரியரான வேதாந்த தேசிகனும் 'தசாவதார ஸ்தோத்ரம்' என்றொன்றை எழுதியிருக்கிறார் என்பதை நீங்கள் குறித்திருக்கிறீர்கள்
//Anonymous said...
Can you explain how dasavatharam is related to thirupathi balaji, a bit more?
tamil poem on 10 avatars is good.//
அனானி நன்றி!
திருமலை எம்பெருமானும் பத்து அவதாரங்களும் - இதன் தொடர்பைப் பதிவிலியே சொல்லி இருக்கேனே!
//ஒவ்வொரு அவதாரத்திலும் நோக்கம் என்ன?
தன்னை வந்தடையும் வழியை உயிர்களுக்கு எளிதாகப் புரியுமாறு காட்டி அருளல்!
இதைத் தான் திருவேங்கடமுடையான் காட்டிக் கொண்டு நிற்கிறான்!//
இரு கைகளால் ஒரு தத்துவக் கோலம் காட்டி நிற்கிறான். இதை சுப்ரபாத இறுதி சுலோகத்தில் சொல்கிறேன்! இன்னும் ரெண்டு பதிவு தானே. வெயிட் மாடி :-)
/துளசி கோபால் said...
கண்ணுக்கினியன கண்டேன்.
படித்து மகிழ்ந்தேன்.
நல்லா இருங்க.//
நன்றி டீச்சர்!
சுப்ரபாதம் முடியப் போகுது!
இதன் துவக்கத்தில் இருந்தே நீங்க கொடுக்கும் ஆதரவு தான் முடிக்க முடிந்தது!
//மதுரையம்பதி said...
//மாராமா ராமாரா//
வால்மிகி பற்றிய செய்தி மனதில் வந்தது....//
அட ஆமாம்!
மரா மரா...இதை நான் நோட் பண்ண மறந்துட்டேன்! நன்றி மெளலி! இதுக்குத் தான் மதுரை அம்பதி மன்னவன் வேணுங்கிறது! :-)
//குமரன் (Kumaran) said...
புதுசா கல்யாணம் ஆனவங்களுக்குச் சரி. இன்னும் கொஞ்ச நாள்ல ஆகப் போகறவங்களுக்கு எப்படி? அவங்களையும் சேத்துத் தானே சொன்னீங்க? :-)//
ஹிஹி! ஆமாம்!!
//காமனார் தாதை காமனே வெட்கப்படும் அளவிற்கு இருப்பதில் என்ன வியப்பு?//
மன்மதனின் தந்தை பெருமாள் என்பதை நான் மறந்து போனேன்! எடுத்துச் சொன்னதற்கு நன்றி குமரன்!
//தென்கலை என்றால் தமிழ்; வடகலை என்றா வடமொழி என்று ஒரு தவறான புரிதல் மக்களிடையே இருக்கிறது//
ஆமாம் குமரன்!
வட-தென் கலைக்கும், மொழிக்கும் தொடர்பில்லை! அது தத்துவம் பாற்பட்டது!
வட கலை அதிகம் புழங்கும் காஞ்சி மற்றும், வட தமிழ் நாட்டில், வட மொழி விளக்கங்கள் மிகுந்து காணப்படுவதால் ஏற்படும் தோற்றம் இது!
//இந்த சுலோகங்களை
'வடமொழியில்' இயற்றியவர் 'தென்கலை' ஆசாரியர்.//
ஆமாம் குமரன்!
சுப்ரபாதம் எழுதிய பிரதிவாதி பயங்கரம் அண்ணாங்காச்சர்யர் தென்கலை தான்! மணவாள மாமுனிகளின் சீடர்!
கவி காளமேகத்தின் வெண்பாவும் அதன் விளக்கமும் அருமை அருமை. பத்து அவதாரத்தையும் அரை வெண்பாவில் கூற அவரால் மட்டுமே முடியும்
ஐயா,
இந்தப் பதிவின் தலைப்பையும், முதல் வரியையும் மறுபடியும் பாருங்கள்:
“மச்சாகூர்-மாகோலா-சிங்காவா-ராமாரா“
பாடலில் உள்ள வடிவத்தையும் பாருங்கள்:
“மச்சாகூர் மாகோலா சிங்காவா மாராமா ராமாரா“
தலைப்பிலும் முதல் வரியிலும் ஒரேஒரு எழுத்து விட்டுப் போயிருப்பது தெரிகிறதா? மாற்றிவிடுங்கள். (மச்சா கூர்மா என்று எளிதாகப் பிரிக்க முடிகிறது என்றாலும், குள்ளனின் தலையெழுத்தைக் காணாத காரணத்தால் தலைசுற்றித் தடுமாற வேண்டியிருந்த காரணத்தால் சொல்கிறேன். தவறாக எண்ணவேண்டாம்.
வாழ்த்துகள்.
//ஹரி கிருஷ்ணன் said...
தலைப்பிலும் முதல் வரியிலும் ஒரேஒரு எழுத்து விட்டுப் போயிருப்பது தெரிகிறதா? மாற்றிவிடுங்கள்//
மாற்றி விட்டேன் ஹரி அண்ணா! சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!
//குள்ளனின் தலையெழுத்தைக் காணாத காரணத்தால் தலைசுற்றித் தடுமாற வேண்டியிருந்த காரணத்தால் சொல்கிறேன். தவறாக எண்ணவேண்டாம்.//
ஹா ஹா ஹா
இதிலென்ன தவறாக எண்ண அண்ணா? ஹரி அண்ணா காரணம் இல்லாம சொல்வாரா என்ன? திருப்பள்ளி எழுச்சி பதிவு முதல் வருகைக்கு நன்றி-ண்ணா! :)
Post a Comment