Saturday, December 15, 2007

சுப்ரபாதம்(28&29): திருப்பதியில் பெருசா அப்படி என்னய்யா இருக்கு?

இன்னியோட சுப்ரபாதப் பதிவுகள் நிறைவு அடையப் போகின்றன! திருப்பதியில் மட்டும் அப்படி என்னாங்க சிறப்பு? எதுக்கு இம்புட்டு கூட்டம், இத்தினி பில்டப்பு? :-)

குடும்பஸ்தர்கள் முதல் துறவிகள் வரை, வாலிபன் முதல் வயோதிகன் வரை, ஏழை முதல் பணக்காரன் வரை, கள்ள நோட்டு அடிப்பவன் முதற்கொண்டு கள்ளமில்லா உள்ளத்தான் வரை.....இவ்வளவு பேருக்கும்...திருமலையில் அப்படி என்ன ஒரு உணர்வு பூர்வமான ஒட்டுதல்? ஏன்-ஏன்-ஏன்?

பணம் குவியுதே! அதுனாலயா? இல்லை! பணம், பெருங்கூட்டம் எல்லாம் இப்போ தான்...சுமார் ஒரு அம்பது அறுவது ஆண்டுக்கு முன்னால் இருந்து தான்! அதுக்கு முன்னாடியெல்லாம் ஆண்டுக்கு ஒரு முறை போய் வருவதற்கே சிரமப்படுவாங்க! ஆனா எல்லாரு்க்கும் வீட்டில் இருந்து கொண்டே ஒரு தனி ஒட்டுதல் இருக்கும்! - ஏன்?

இரண்டாயிரம் வருசமா இருக்குதே! ஆழ்வார்கள் தங்கள் கால்களை, மலைமேல் வைத்து மிதிக்கவும் அஞ்சினார்களாமே!
சிலப்பதிகாரம் காலம் தொட்டு அப்படி என்ன ஒரு ஈர்ப்பு? தமிழ் இலக்கியம் மட்டும் தானா?
தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரிய மராத்தி இலக்கியங்கள், கீர்த்தனைப் பாடல்கள்-ன்னு...அப்படி என்ன தான்யா இருக்கு இங்கே? :-)

வாங்க, இன்னிக்கி சுலோகத்தைப் பார்த்தால், இந்த ரகசியம் புரிந்துவிடும்! கிடுகிடு-ன்னு பாட்டைப் பார்த்துவிட்டு, இந்த முக்கியமான செய்திக்குப் போவோம்!இது மிகவும் முக்கியமான இறுதி சுலோகம். இரண்டு முறை ஓதுவாங்க! (இந்த சுலோகத்தைப் படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)
லஷ்மீ நிவாச நிரவத்ய குணைக சிந்தோ
சம்சார சாகர சமுத்தர அநைக சேதோ
வேதாந்த வேத்ய நிஜ வைபவ பக்த போக்ய
ஸ்ரீவேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

லஷ்மீ நிவாச = திருமகள் வசிக்கும் பெருமானே

(அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்மங்கை உறைபவனே!)

நிர வத்ய குணைக சிந்தோ = குறையொன்றும் இல்லாத குணக் கடலே

(சிந்து=கடல்; நிர வத்ய குணக் கடல் = குறையொன்றுமில்லாத கல்யாண குணங்களின் கடல்! - இது அப்படியே ஒரு பாசுரம்! என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்!)

சம்சார சாகர சமுத்தர = வாழ்க்கைப் பெருங் கடலில் (சம்சார சாகரம்)
அநைக சேதோ = (எங்களைக் கரையேற்றி விடும்) ஒரே அணை நீ தான்!

(இது தான் மேலே சொன்ன ரகசியம்!!! கீழே விரிவாகப் பார்ப்போம்!!!)

வேதாந்த வேத்ய = வேதாந்தங்களும் அறிய விரும்பும் ஞானப்பொருள், நீ!
நிஜ வைபவ = உண்மையான குணங்களைக் கொண்டவன் நீ! (எண்குணத்தான் - கல்யாண குணங்கள் கொண்டவன்)

பக்த போக்ய = பக்தர்களுக்குப் போகமாக இருப்பவன் நீ! அடியார்கள் இன்புற்று இருப்பது ஒன்றிலேயே இன்புற்று இருப்பவன் நீ!


ஸ்ரீ வேங்கடாசல பதே = திரு வேங்கடம் உடையானே,
தவ சுப்ரபாதம் = உனக்கும் அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!அடுத்து சுலோகம் நூற்பயன் (பலஸ்ருதி) என்று சொல்லுவார்கள்...நூலை உணர்ந்து படிப்பதால் வரும் நற்பயனைச் சொல்லும் சுலோகம்!


இத்தம் விருஷாசல பதே, இக சுப்ரபாதம்
யே மானவா, ப்ரதி தினம் படிதும் ப்ர-விருத்தா
தேஷாம் பிரபாத சமயே, ஸ்மிருதி ரங்க பாஜாம்
பிரஜ்ஞாம், பர ஆர்த்த சுலபாம், பரமாம் ப்ரசுதே


இத்தம் = இப்படியாக
விருஷா சல பதே = விருஷ மலை எனப்படும் திருமலைக்கு அதிபதியான
திருவேங்கடமுடையான்
இக சுப்ரபாதம் = அவனின் இந்த சுப்ரபாதம்

யே மானவா = அனைத்து மக்களும்
ப்ரதி தினம் படிதும் = தினமும் படித்து
ப்ர-வ்ருத்தா = ஒழுகுவார்களே ஆனால்

தேஷாம் பிரபாத சமயே = தினமும் வைகறைப் பொழுதில்,
ஸ்மிருதி ரங்க பாஜாம் = எம்பெருமான் முன்னர், நினைந்து (ஸ்மிருதி), ஓதுவார் தமக்கு

பிரஜ்ஞாம் = சிதறாத மனம் (பிரக்ஞை) சித்திக்கும்!
பர ஆர்த்த சுலபாம் = உயர்ந்த செல்வமான (நித்ய விபூதி = வீடுபேறு), சுலபமாய்க் கிட்டும்!
பரமாம் பிரசுதே = பரமபதம் வாய்க்கும்! பரமபதம் வாய்க்கும்!

------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com

-------------------------------------------------------------------சரி....ரகசியத்துக்கு வருவோம்!

திருப்பதிக்கு மட்டும் அப்படி என்னய்யா சிறப்பு?
ஏன்னா - திருப்பதியில் மட்டும் தான், இறைவன் ஒரு வித்தியாசமான கோலத்தில் நிற்கிறான்!
கூட்டத்தில் உன்னிப்பாகப் பார்க்க முடியவில்லையே-ன்னு சொல்லறீங்களா? பரவாயில்லை! காலண்டரில், படத்தில் எங்கு வேணுமானாலும் பாருங்க! பட்டுன்னு தெரியும்!

ஆன்மீகம்-னாலே ஏதோ நாலு பாட்டு, நாப்பது தத்துவம்,
புரியாத மொழியல தஸ்ஸூ புஸ்ஸுன்னு ஏதோ ஒன்னு!
அட, புரிஞ்ச மொழியான தமிழ்-ல கூட, வெளக்கம் சொன்னாத் தான்யா வெளங்குது!
படிக்காதவன், பாமரன்,....படிச்சும் அறிவில்லாதவன் - இவங்க கதி எல்லாம் என்ன? இறைவனை அனுபவிக்கவே முடியாதா?

கீதையும், அனுபூதியும் படிச்சாத் தான் ஞானம், பக்தி எல்லாம் பொறக்குமா?
இனிமே எங்கிட்டுப் போயி, இதெல்லாம் படிச்சி, எப்போ நான் கரையேறது? சரி......மாதா, பிதா, குருவைக் கேட்கலாம்-னா.........
இந்தக் காலத்துல "குரு"-ன்னு சொல்லிக்கிட்டு "குரு"ட்டாம் போக்குல வண்டி ஓட்டுறவங்க தான், அதிகமா இருக்காங்க! - யாரை நம்பறதுன்னே தெரியலையே! அடப் பெருமாளே!!

"அட,
உனக்கு ஏன்-பா இவ்ளோ குழப்பம்? நீ புதுசா எதையும் படிக்க வேணாம்! யாரையும் போயி புதுசா நம்பவும் வேணாம்!
உனக்கு கீதைக்குக் கீதையா, அனுபூதிக்கு அனுபூதியா,
குருவுக்கு குருவா....நான் தான் இருக்கேனே! அப்புறம் என்ன?
என் தோற்றத்தைக் கொஞ்சம் நல்லா உற்றுப் பாரு! வெவரம் புரிஞ்சிடும்!" பெருமானின் வலது கை = கீழே நோக்கித் தன் பாதங்களைக் காட்டுகிறது!
பெருமானின் இடது கை = தன் முழங்காலில் வைத்துக் கொண்டு நிற்கிறது!
எவன் ஒருவன், இந்தப் பாதங்களைப் பற்றிக் கொண்டு, விசுவாசத்துடன் தஞ்சம் அடைகின்றானோ, அவனுக்கு உலகம் என்னும் இந்த பெரிய சமுத்திரம்...இதோ வெறும் முழங்கால் ஆழம் தான்!
இப்படிச் சொல்லாமல் சொல்லி விளக்கும் முத்திரைக் கோலம்! = சம்சார சாகர சமுத்தர அநைக சேதோ = பிறவிப் பெருங்கடல் நீந்துவார்; நீந்தார் இறைவனடி சேராதார்!பாதகங்கள் தீர்க்கும், பரமன் அடி காட்டும் = இது கோதைத் தமிழ்!
சர்வ தர்மான் பரித்யஜ்ய....மாம் "ஏகம்" சரணம் வ்ரஜ = இது கீதையின் ரகசியம், சரம சுலோகம்!! - எல்லாத் தர்மங்களையும் நீங்கி, என்னொருவனையே சரணம் புகுந்தவனைக் காத்து, வீடும் அளிப்பேன்!
இதை எல்லாம் தனித் தனியாகப் போய் எங்கு படிப்பது? அந்தக் கருத்துகளை எல்லாம் அப்படியே கற்சிலையில் காட்டி நிற்கிறான் இறைவன்!

இது போன்றதொரு கோலத்தை, வேறெங்கும் காண முடியாது! வேறு பெருமாள் கோவில்களில் கூட இப்படிக் காண முடியுமான்னு கேட்டா, முடியாது!
பொதுவா இறைவனை, அபயம் தரும் கரம் கோலத்திலோ, இல்லை வரங்கள் கொடுக்கும் வரத ஹஸ்தம் கோலத்திலோ தான் (வரம்-தரு-கரம்) அமைத்து இருப்பார்கள்!

இப்படி, முட்டி மேல் கையை வைச்சிக்கிட்டு, விறைப்பா எதுக்கு நிக்கணும்?
பெருங்கடல் நீந்தும் வழியைச் சொல்லிக் கொடுக்கத் தான்!
பாதங்களைக் காட்டுவது போல் காட்டி, வீடுபேறைக் காட்டும் திருக் கோலம்...அரிதிலும் அரிது!
மோட்சத்தையும் சுலபமாக்கிய ஒரே காரணத்தால் தான் கலியுகத் தெய்வம் = வேங்கடவன், என்று ஓகோவென்று கொண்டாடுகிறார்கள்!

இந்தக் கோலத்தின் உள்ளார்ந்த தத்துவம், கண்ணுக்குப் புலப்படுதோ, இல்லையோ, மனசுக்குப் புலப்படுதோ, இல்லையோ,
இந்த உன்னதம் தான், திருமலைக்கு இவ்வளவு சிறப்பைச் சேர்க்கிறது! ஒன்றும் புரியாவிட்டாலும் கூட, சன்னிதியில் நிற்கிறோமே சில நிமிடம்; அப்போது அந்த அடிமனசு மட்டும், இறைவா இறைவா என்று அதிர்கிறது அல்லவா? அதுக்கு இந்த மோட்சத் திருக்கோலம் தான் மறைமுகக் காரணம்!

ரகசியம், ரகசியம் என்று பொத்திப் பொத்தி வைத்த மறை பொருளை,
எந்தப் பேதமும் இன்றி அனைவருக்கும் "பப்ளிக்கா போட்டு உடைக்கும்", கோலம் தான் திருவேங்கடத் திருக்கோலம்!
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே
என்று நம்மாழ்வார் ஒரே போடாகப் போடுகிறார்!
எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே....என்று மலை மேல் ஏதாச்சும் ஒன்னாய் ஆக மாட்டோமா என்று அத்தனை ஆழ்வார்களும் உருகுகிறார்கள்!

ஒரு முறை இராமானுசரும் அவர் சீடர்களும், திருமலை யாத்திரையின் போது, வழி தவறிப் போய் விட்டார்கள்! பக்கத்து வயலில் ஏற்றம் இறைச்சிக்கிட்டு இருந்தான் ஒரு ஏழை விவசாயி; மலைக்குப் போகும் சரியான ரூட்டை அவங்களுக்குச் சொன்னான்!
உடனே அவனைக் கீழே விழுந்து கும்பிட்டாராம் இராமானுசர்! அட, இது என்ன சின்னப்புள்ளத் தனமால்ல இருக்குன்னு எல்லாரும் கூவ...

"மோட்சத்துக்கு வழிகாட்டிக் கொண்டு நிற்கிறான் வேங்கடவன்!
அந்த வழிகாட்டிக்கே, வழியைக் காட்டினான் பாருங்க இந்த விவசாயி! இவனும் ஒரு குரு தான்" என்று சொல்லி, மற்ற எல்லாரையும் தன் கூடவே விழுந்து கும்பிடச் சொன்னாராம்!
சரியான புனித பிம்பமா இருப்பாரு போல இருக்கே-ன்னு சொல்றீங்களா? :-)
இதில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள், திருமலைக்கு ஏன் அவ்வளவு சிறப்பு என்று!இது வரைக்கும் எம்பெருமானின் திருப்பள்ளி எழுச்சியை, ஆர்வமுடன் வந்து கேட்ட அனைத்து நண்பர்களுக்கும், நன்றி சொல்லிக் கொள்கிறேன்!
பொதுவா ஆன்மீகப் பதிவுகளில்.....அதுவும் இது போன்று சுலோகம், பாட்டு-ன்னு வர பதிவுகளில் எல்லாம், பின்னூட்டப் புயல் அவ்வளவா வீசாது! :-)

ஆனால் சுப்ரபாதப் பதிவுகளில் 100+ பின்னூட்டங்களும் வந்துள்ளன.
பரம், வியூகம்-னு பயனுள்ள விவாதங்கள் நடந்துள்ளன.
வேங்கடம், திரு+மால் என்று தமிழறிவு முயற்சிகள் பேசப்பட்டுள்ளன.
இதற்கு மேல்விளக்கப் பதிவுகள், இராம.கி. ஐயா போன்ற மற்ற மூத்த பதிவர்களால் போடப்பட்டுள்ளன!

வெறுமனே பொழிப்புரையாக மட்டும் சொல்லிக் கொண்டு போய் இருந்தால், இது எப்போதோ முடிந்திருக்கும்! ஆனால் அப்படிச் செய்ய என் மனம் ஒப்பவில்லை!
1. சுப்ரபாதம் எதுக்கு? நமக்கா? கடவுளுக்கா?
2. கோவிலுக்குக் குளிக்காமப் போனாத் தீட்டா?
3. வேங்கடம் வட சொல்லா? தமிழ்ச் சொல்லா?
4. தமிழுக்காகச் சுப்ரபாதம் பாதியில் நிறுத்தம்!
5. வைணவத்தில் நவக்கிரகங்கள் ஏன் இல்லை?
6. தீர்த்தம் ஏன் கொடுக்கறாங்க? சடாரி ஏன்??
என்று பல விளக்கங்களைப் பார்த்தோம்!

சும்மானா போனோமா வந்தோமா-ன்னு இல்லாம, இன்றைய இளைஞர்கள் மனத்தில் பல கேள்விகள் இருக்கு! அது ஏன் அப்படி.......இது ஏன் இப்படி-ன்னு பகுத்து அறிந்த பின்னர் தான், நடக்க நினைக்கிறார்கள்! அது தான் நல்லதும் கூட! அப்போது தான் ஒரு உடைமைக் குணம் (sense of ownership) வரும்!
அதான் பொழிப்புரை மட்டுமே சொல்லாம, பல கோணங்களில் "இது ஏன், அது ஏன்" என்று அலசிக்கிட்டே போனோம்!

இத்துடன் சுப்ரபாதம் நிறைந்தது! இதோ தங்க வாசல் திறந்தது!
எம்பெருமானின் காணத் தெவிட்டாத திருக்கோலம்! நீல மேனி நெடியோன் நின்ற வண்ணமும்!!
ஒற்றை வெள்ளை வேட்டியில்,
ஒற்றைத் துளசி மாலையில்,
வேறு ஆபரணங்கள் இன்றி,
பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்குமாய் - சங்கு சக்கரங்களுடன்,
மோவாயில் பக்தன் அடித்த வெள்ளைத் தழும்பு - "தயா சிந்து" துலங்க,
திருமார்பில் அன்னை வீற்றிருந்து, நம் எல்லாரையும் "வாங்கப்பா வாங்க" ன்னு சொல்ல...
இந்த நாளின் முதல் சேவை = சுப்ரபாத சேவை!!!

தோள் கண்டார் தோளே கண்டார், தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார், தடக் கை கண்டார்
என்று எல்லாரையும் மயக்கிப் போடும் ஒரு எளிவந்த திருக்கோலம்!

காலைச் சுத்திகள் முடிந்து, இன்றைய பொழுதின் தரிசனம் தொடங்கியது...
முதல் மணி ஒலிக்க, நவநீத ஆரத்தி என்னும் முதல் தீபம் காட்டப்படுகிறது! கோவிந்தா கோவிந்தா என்னும் முழக்கம்!
பாதங்களைக் காட்டி, முழங்காலில் கை வைத்து நிற்கும் கோலம் தெரிகிறது அல்லவா? நேரில் செல்லும் போதும் காண முயலுங்கள்!

இந்த முயற்சிக்கு உறுதுணையாய் இருந்த நண்பர்கள் பலருக்கும் நன்றி சொல்லிக்கிறேன்!
உலகில் not so privileged என்பார்களே, அந்தச் சில பிஞ்சுக் குழந்தைகளுக்காக, அப்பனை இறைஞ்சிக் கொள்கிறேன் - ஷ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணும்!!

வெறுமனே ஆரவாரத்தை விட்டு ஒழித்து,
அறிவும், செறிவும், வளர்க்க உதவுவது தான் ஆன்மீகம் என்ற நிலை வரவேண்டும். அதற்கான சிறுசிறு முயற்சிகள் பெருக இறைவன் துணை செய்யட்டும்!

தூங்குவது போல் தூங்கிக் கொண்டிருக்கும் நம்மையெல்லாம் தட்டி எழுப்ப, ஒரு சுப்ரபாதம் ஓங்கி ஒலிக்கட்டும்!!

கோவிந்த நாம சங்கீர்த்தனம் - கோவிந்தா கோவிந்தா!
திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்!

55 comments:

மதுரையம்பதி said...

ஏழுமலைவாசா, வெங்கடரமணா, கோவிந்தா-கோவிந்தா.

ஸ்ரீவேங்கடேச சரணம், சரணம் ப்ரபத்யே!

நேற்றிலிருந்து எதிர்பார்த்தேன் இந்த பதிவினை, இன்று கிடத்தது.

கலெள வேங்கட நாயக - கலியுகத்திற்கு நாயகன் வேங்கடவன் தான்.

"சித்தேப்யநந்ய மநஸாம் ஸம-மாஹிதெளதே" - ஒரே மாதிரி ஸமமாக அருளும். யாருக்கெல்லாம் சமமாக, தன் திருவடிகளை நினைப்பவன் எவனாகிலும் அவனுக்கெல்லாம் ஒரே மாதிரி ஸமமாக அருளுபவனாம் வேங்கடவன்.

//அட, புரிஞ்ச மொழியான தமிழ்-ல கூட, வெளக்கம் சொன்னாத் தான்யா வெளங்குது!//

என் போன்றவர்க்கு மிக உண்மை.

தல, போன பதிவுக்கு நானிட்ட பின்னூட்டம் நினைவிருக்கில்ல?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

Dec 16 இல் இருந்து மார்கழி மாதம் தொடக்கம்!
திருமலையில், தமிழுக்கு ஏற்றம் கொடுக்க...
மார்கழி மாதம் முழுதும் சுப்ரபாதம் நிறுத்தப்பட்டு,
தெய்வத் தமிழில் திருப்பாவை ஓதப்படும்!
இது பற்றிய அடியேன் முந்தைய பதிவு இங்கே! http://verygoodmorning.blogspot.com/2006/12/blog-post_15.html

அதனால் தான் சுப்ரபாதத் தொடரை, இன்னைக்குள்ளாற முடிக்கணும்னு...
உட்கார்ந்து பரபரவென்று எழுதத் தொடங்கினேன்!

சுப்ரபாதம் என்னும் பள்ளி எழுச்சி முடிஞ்சாலும்...அதைத் தொடர்ந்து சில துதிகள் உண்டு...அதையும் பாடி முடித்த பின்னர் தான், கோயிலில் தரிசனம் துவங்கும்!

தோத்திரம் = கமலா குச சூசுக குங்குமதோ ன்னு தொடங்கும் பாடல்

ப்ரபத்தி = ஸ்ரீவேங்கடேச சரணம், சரணம் ப்ரபத்யே ன்னு ஒவ்வொரு வரியும் வரும் பாடல்

மங்களம் = வேங்கடேசாய மங்களம்-னு ஒவ்வொரு வரியும் வரும் பாடல்!

இவையே அவை!
இதற்கும் வேகமாப் பொருள் சொல்ல வேண்டுமானால் சொல்லுங்க...
கொஞ்சம் gap விட்டுத் தொடங்கலாம். இதைக் குழுப் பதிவாச் செஞ்சா இன்னும் நல்லா இருக்கும்! என்ன சொல்றீங்க மக்களே?

cheena (சீனா) said...

கோவிந்த நாம சங்கீர்த்தனம் - கோவிந்தா கோவிந்தா!
திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்! சரணம்!!

நன்றி கேயாரெஸ்

மதுரையம்பதி said...

//இவையே அவை!
இதற்கும் வேகமாப் பொருள் சொல்ல வேண்டுமானால் சொல்லுங்க...
கொஞ்சம் gap விட்டுத் தொடங்கலாம். //

ஒருமாத இடைவெளி விட்டுத் தொடருங்கள்.

துளசி கோபால் said...

ஏடு கொண்டலவாடா
வெங்கட்டரமணா
எக்கட உன்னாவுரா?
& எட்டல உன்னாவுரா?

கோவிந்தா கோவிந்தா ......
கோவிந்தா

மனம் நிறைவா இருக்கு கேஆரெஸ்.

இப்பத்தான் ஒரு கல்யாணம் நம்ம ஹரே கிருஷ்ணாவில் போயிட்டு வந்தேன்.

வந்து பார்த்தா...கண்குளிர கோவிந்தன் நிற்கின்றான்.

ரொம்ப நிறைவு தந்த தொடர்.

நல்லா இருங்க.

இலவசக்கொத்தனார் said...

யப்பா ரவி,

கொஞ்சம் கால்களை காமிப்பா. பின்ன, ராமானுஜரே அந்த விவசாயி காலில் விழுந்தது வெறும் வழி சொன்னதுக்கு.

நீங்க என்னடான்னா பிரமாதமா விளக்கம், கதை அப்படின்னு சொல்லி தூள் கிளப்பி இருக்கீங்க. அப்புறம் இது கூட இல்லைன்னா எப்படி?

VSK said...
This comment has been removed by the author.
VSK said...

மிகச் சிறந்த சேவை செய்து மாதவம் இயற்றியிருக்கிறீர்கள், ரவி.

நடராஜர் கூட ஒரு கையால் காலைக் காட்டியும், மறுகாலால் எதையும் தாண்டிவிடலாம் என மறுகாலாலும் காட்டியும் நிற்பதால்தான், அவரை இவரும், இவரை அவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ!

:))
ஓம் நமசிவாய!
ஓம் நமோ நாராயணாய!

muthusamy said...

wonderfull,very intresting and informative.keep it up,thank you.if you can compile all subhrabatham and send me,it will be very usefull to me. also tell me how to save each article.thank you

Anonymous said...

Vanakkam sir,
Chapter ten Bhakthi yoga in gita there is one sloka starts with,DESHA MAHAM the meaning is what you mentioned,THIRUVENGADAVAN stands for that purpose.Arangan arulal, vazhga valarga,Thanks Ravi sir,
ARANGAN ARULVANAGA.
Anbudan
k.srinivasan.

நாகை சிவா said...

நீங்க எதுக்கு நன்றி சொல்லுறீங்க.. நாங்க தான் உங்களுக்கு நன்றி சொல்லனும்.. தெரியாத பல விசயங்களை தெரியபடுத்தியமைக்கு.

PDF பைலாக மாற்றி அனுப்பி வைங்க. பதிவுலகை தவிர்த்த நண்பர்களுக்கு அனுப்ப உதவும்.

Expatguru said...

தங்களின் இந்த பதிவு அருமையிலும் அருமை. எளிய நடையில் பிரமாதமாக விளக்கம் அளித்துள்ளீர்கள். நன்றி.

கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!!

G.Ragavan said...

நல்ல பதிவு. நன்றாக எழுதியிருக்கின்றீர்கள். உலகெங்கும் அன்பும் அமைதியும் வளமும் கல்வியும் நட்பும் இன்னபிற நல்லன எல்லாம் பெருகட்டும்.

k said...

aacharyan thiruvadigaley saranam

Gyanadevan said...

அற்புதம். படிக்க படிக்க பேரானந்தமாக இருந்தது. நன்றி மற்றும் வாழ்த்துக்கள் ரவி.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//மதுரையம்பதி said...
கலெள வேங்கட நாயக - கலியுகத்திற்கு நாயகன் வேங்கடவன் தான்.//

நச்-னு கொடுத்திருக்கீங்க!
த்ரேதாயாம் ரகு நந்தன
துவாபரம் வாசுதேவயஸ்ய
கலெள வேங்கட நாயக!
ன்னு வரும்னு நினைக்கிறேன்!

//அட, புரிஞ்ச மொழியான தமிழ்-ல கூட, வெளக்கம் சொன்னாத் தான்யா வெளங்குது!//
என் போன்றவர்க்கு மிக உண்மை.//

அட, மார்கழிப் பூவே போடறவருக்கு இம்புட்டு தன்னடக்கமா? :-)

//தல, போன பதிவுக்கு நானிட்ட பின்னூட்டம் நினைவிருக்கில்ல?//

நினைவிருக்கு தல! நினைவிருக்கு! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//cheena (சீனா) said...
கோவிந்த நாம சங்கீர்த்தனம் - கோவிந்தா கோவிந்தா!
திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்! சரணம்!!//

நன்றி சீனா சார்!

வெட்டிப்பயல் said...

அருமை! அருமை!!!

இதை PDF ஆ மாத்தி தாங்களேன்!!! புத்தகமே அடிச்சிடலாம்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//துளசி கோபால் said...
ஏடு கொண்டலவாடா
வெங்கட்டரமணா
எக்கட உன்னாவுரா?
& எட்டல உன்னாவுரா?
கோவிந்தா கோவிந்தா ......
கோவிந்தா//

என்ன டீச்சர்...
பெருமாளிடம் ஃபோன் போட்டு பேசறீங்களா என்ன? :-)

//மனம் நிறைவா இருக்கு கேஆரெஸ்//

ஞாபகம் இருக்கா?
நீங்க தான் சுப்ரபாதம் தொடங்கும் போது வந்து...ஆதரவு கொடுத்தீங்க...விடாம எழுதச் சொல்லி! சகஸ்ரநாமம் வேறு எழுதச் சொன்னீங்க! ஆனா அது குமரன் லிஸ்ட்! அவரு கோச்சிக்கிட்டாரு, அவரு லிஸ்டை எடுத்து இப்படிக் கொடுத்ததற்கு! :-))

ஒவ்வொரு பதிவிலும் வந்து சென்ற கோபால் சாருக்கும் (எனக்குத் தெரியுமே! :-)
உங்களுக்கும் நன்றி டீச்சர்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இந்த தருணத்தில்
துளசி டீச்சருக்கு நன்றி சொல்லும் போது...
இன்னொருவரையும் கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும்!

நமக்கு வடமொழிப் புலமை எல்லாம் ஒன்னும் கிடையாது! கேள்வி ஞானம் மற்றும் தட்டுத் தடுமாறி சுய முயற்சி தான்! தமிழ்-ல மட்டும் பெருசா என்ன வாழுது-ன்னு கேக்கறீங்களா? :-))

அதனால் சுலோகங்களின் வரிக்கு வரி பொருளை, இன்னொரு முறை யாராச்சும் சரி பார்த்துக் கொடுத்தால் நல்லா இருக்கும்னு தோனிச்சு!

அப்போ, ஒரு நல்ல உள்ளம் உதவிக்கு வந்தது!
பல வேலைகளுக்கு இடையிலும், இந்தச் சனிக்கிழமை சுப்ரபாதம் எங்கே-ன்னு கேட்டு (கிட்டத்தட்ட மிரட்டி) வாங்கிச் சரி பார்த்துக் கொடுக்கும் அந்த உள்ளத்தின் பெயரை நேரடியாச் சொல்லக் கூடாது-ன்னு கட்டளை! :-)

அதனால்...
கூடல் கோபுரமே
அடியேன் சிறிய ஞானத்தனே
நன்றி! நன்றி!
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

மேலும் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசிக்குள் முடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டுத் தூண்டி விட்ட மாப்பிள்ளைத்திரு. பாலாஜி மனோகரனுக்கும் நன்றி சொல்லிக்கிறேன்-பா!

தல
Dec-20 தான் ஏகாதசி.
Dec-15 பிராஜக்ட் முடிச்சாச்சே!
நல்லா பெரிய போனஸா அனுப்பி வையுங்க! :-))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இலவசக்கொத்தனார் said...
யப்பா ரவி,
கொஞ்சம் கால்களை காமிப்பா.//

நோ! நோ!
அதுக்கெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன்!
அண்ணா நீங்க! தம்பி நானு!!
அம்புடு தான் சொல்லிபுட்டேன்!!

வேணும்னா ஒங்களா முடிஞ்ச ஒன்னு...ஏதோ சின்னதா...
சிறந்த வலைப்பதிவு விருது வேணும்னா கொடுத்துக்குங்க! :-))))

//பின்ன, ராமானுஜரே அந்த விவசாயி காலில் விழுந்தது வெறும் வழி சொன்னதுக்கு//

இதைத் தனிக் கதையா போடணும்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்!
சுருக்கமா இங்கனயே போட்டாச்சு!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//VSK said...
மிகச் சிறந்த சேவை செய்து மாதவம் இயற்றியிருக்கிறீர்கள், ரவி//

நன்றி SK!
சொல்வது ஒரு சேவைன்னா
கேட்பதும் ஒரு சேவை தான்!
செவி குளிரக் கேட்ட உங்களுக்கும் நன்றி.

//நடராஜர் கூட ஒரு கையால் காலைக் காட்டியும், மறுகாலால் எதையும் தாண்டிவிடலாம் என மறுகாலாலும் காட்டியும் நிற்பதால்தான்//

ஆமாம் SK!
நடராஜ தாண்டவ தத்துவம்! ஒரு திருக்கரத்தால் தூக்கிய பொற் பாதத்தைக் காட்டுவார் ஈசன்!
இதைப் பற்றிக் கொள் என்று காட்டுகிறார் சரி!

ஆனால் மறுகால் முயலகன் மீதல்லவா இருக்கு? எதையும் தாண்டி விடலாம் என்று எங்கு காட்டுகிறார்? தெரியலையே! கொஞ்சம் விளக்குங்களேன்!

//அவரை இவரும், இவரை அவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ!//

அதே அதே!
பெருமாள் மனத்துள் ஈசன் ஆடியதும் நடனம் அல்லவா?
தென்னாடுடைய சிவனே போற்றி
வடமலை வேங்கடவா போற்றி போற்றி!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//muthusamy said...
wonderfull,very intresting and informative.keep it up,thank you.//

நன்றி திரு.முத்துசாமி

//if you can compile all subhrabatham and send me,it will be very usefull to me//

will do and post a link on the left side of this blog.

//also tell me how to save each article.//

the pdf button on thamizmanam toolbar is not working. you can try saving from google toolbar instead.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Anonymous said...
Vanakkam sir,
Chapter ten Bhakthi yoga in gita there is one sloka starts with,DESHA MAHAM the meaning is what you mentioned,//

ஆகா...சுலோகத்தையும் நீங்களே சொல்லி இருக்கலாமே! நீங்க சொல்றது பன்னிரண்டாம் பாகம் - பக்தி யோகத்தில் வரும் - கேட்டா மாதிரி தான் இருக்கு!

திருமலையில் எம்பெருமான் நிற்கும் கோலம்
சரம சுலோகம் என்று சொல்லப்படும் கீதையின் ரகசியத்தை விளக்கும் திருக்கோலம் என்று ஆசாரியர்கள் சொல்லி உள்ளனர்.

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷ இஷ்யாமி மா சுச
என்பதற்கு direct explanation தான்
வேங்கடவன்.

எல்லா விதமான பந்தங்களைப் பற்றிய ஒட்டுதல்களை விட்டுவிட்டு என்னையே சரணம் அடைவாய். உன்னை எல்லா விதமான பாவங்களில் இருந்தும் விடுவித்து வீட்டினில் சேர்க்கிறேன்.

உலகத்தையும் உறவுகளையும் விட்டு ஓடி விடச் சொல்லவில்லை பாருங்கள்!
இருக்கும் இடத்திலேயே கடமையைச் செய்து கொண்டு இரு!

அந்த இடத்தை முழங்கால் ஆழம் ஆக்கி விடுகிறேன்! மூழ்கிப் போக மாட்டாய் என்று தான் உணர்த்துகிறான்! - இப்படி ரொம்ப சிம்பிள் ஆக்கிக் காட்ட வேங்கடவனை விட்டால் வேறு யார்?

//THIRUVENGADAVAN stands for that purpose.Arangan arulal, vazhga valarga,//

நன்றி ஸ்ரீநிவாசன் சார்!
திருமலை தரிசனம் எப்படி இருந்தது?
உங்க மின்னஞ்சல் இப்ப தான் பார்த்தேன்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நாகை சிவா said...
நீங்க எதுக்கு நன்றி சொல்லுறீங்க..//

ஆகா...
ஆர்வமா வந்து கேட்டதற்கு நன்றி சொல்லாம இருக்க முடியுமா புலி?
அது மட்டுமில்லை! இதுல இன்னோரு விஷயம் கீதுப்பா! :-)

வடமொழிப் பாட்டு! எங்கே வடை மொழி, தோசை மொழி-ன்னு திசை திரும்பிடுமோ-ன்னு எனக்கு
இதை எடுக்கும் போதே கொஞ்சம் தயக்கம்!

வடமொழியில் இருந்தாலும், இதைத் துணிவுடன் எடுத்துக்கிட்ட ஒரே காரணம்...இது நன்கு பிரபலம் அடைந்து விட்டது என்ற ஒரே காரணத்துக்காகத் தான்! என் மற்ற வலைப்பூக்கள் எல்லாம் தமிழ்ப் பாக்களும் பூக்களுமாய் இருக்கின்றன! இது ஒன்னு தானேன்னு, அப்படியே மூல நூலை எடுத்துக்கிட்டேன் !

தமிழ் சுப்ரபாதம் என்று அதே எம்.எஸ், பின்னாளில் பாடினாலும் கூட, அந்த வரிகள் எல்லாம் யாருக்கும் மனப்பாடம் ஆகவில்லை! சுப்ரபாதம்-னு பார்த்தா, இது மட்டும் தான் அப்படியே நின்று விட்டது!

ஆழ்வார்கள் குறிப்பை ஆங்காங்கு அள்ளித் தெளித்து செய்த நூல் இது! தமிழ் தெரியாத முருடருக்கும், ஆழ்வார்களின் தீஞ்சொற் கவிகள் போய்ச் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டது!

தமிழ் முனிவரான மணவாள மாமுனிகள் ஆணையிட, அவர் மாணாக்கரான அண்ணங்காச்சாரியார் இதைச் செய்து கொடுத்தார்!
நானும் ஒவ்வொரு சுலோகத்திலும் ஆழ்வார்கள் குறிப்புகளை ஆங்காங்கே கொடுத்துள்ளேன்!

//PDF பைலாக மாற்றி அனுப்பி வைங்க. பதிவுலகை தவிர்த்த நண்பர்களுக்கு அனுப்ப உதவும்//

கண்டிப்பா!
மற்ற நண்பர்களும் பயன் பெறக் கட்டாயம் செஞ்சிடலாம்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Expatguru said...
தங்களின் இந்த பதிவு அருமையிலும் அருமை. எளிய நடையில் பிரமாதமாக விளக்கம் அளித்துள்ளீர்கள்.//

நன்றி expatguru.
எளிமையாவும் கொஞ்சம் லோக்கலாவும் சொன்னாத் தான், பல பேரையும் சென்றடையும்!

வேதாந்த விளக்கமாச் சொல்ல பல பெரியவர்கள் இருக்காங்க! அதைக் கேட்கவும் ஒரு மூடு இருக்குறவங்க கேட்பாங்க! மத்தவங்க நிலைமை? அதனால் தான் இப்படி!

ரொம்ப லோக்கலா போயிருந்தா, மன்னிச்சுக்குங்கப்பா!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//G.Ragavan said...
நல்ல பதிவு. நன்றாக எழுதியிருக்கின்றீர்கள்.//

ஜிரா அண்ணா, நன்றி!

//உலகெங்கும் அன்பும் அமைதியும் வளமும் கல்வியும் நட்பும் இன்னபிற நல்லன எல்லாம் பெருகட்டும்//

என்னங்கண்ணா இது? லோக சம்ஸ்தா சுகினோ பவந்து-ன்னு எல்லாம் வாழ்த்தறீங்க! ;-)

நீங்க தான் சுப்ரபாதம் ஏன்? எதுக்கு எழுப்பணும்னு மொத பின்னூட்டம் போட்டீங்க! நினைவிருக்கா?
இந்த மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்பதை அருணகிரியும் அப்படியே ஆண்டிருக்காரு!
அதைச் சொல்லுவீங்க-ன்னு காத்துகிட்டு இருந்தேன்!

நீங்க மடத் தலைவர் ரேஞ்சுக்கு ஆசிர்வாதம் கொடுத்துட்டு போயிட்டீங்களே! :-)
தமிழ் மழை பொழிங்க தல!

G.Ragavan said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//உலகெங்கும் அன்பும் அமைதியும் வளமும் கல்வியும் நட்பும் இன்னபிற நல்லன எல்லாம் பெருகட்டும்//

என்னங்கண்ணா இது? லோக சம்ஸ்தா சுகினோ பவந்து-ன்னு எல்லாம் வாழ்த்தறீங்க! ;-) //

என்னது சமோசாவா? ஆசையக் கெளப்புறீங்களே. இங்க கெடைக்காதே. :)

வடமொழியில தெரியலைங்க. தமிழ்ல தெரிஞ்சதச் சொல்லீட்டேன். கற்றது கீபோர்டு அளவு. கல்லாதது இண்டர்நெட் அளவுன்னு மட்டுந்தான் எனக்குத் தெரியும். :)

// நீங்க தான் சுப்ரபாதம் ஏன்? எதுக்கு எழுப்பணும்னு மொத பின்னூட்டம் போட்டீங்க! நினைவிருக்கா?
இந்த மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்பதை அருணகிரியும் அப்படியே ஆண்டிருக்காரு!
அதைச் சொல்லுவீங்க-ன்னு காத்துகிட்டு இருந்தேன்! //

அருணகிரி ஆண்டிருக்காரா? ஓ சுப்ரபாதத்துல இருந்து அருணகிரி ஆண்டிருக்காரா. அடடா...தெரியாமப் போச்சே. தெரிஞ்சா சொல்லாமலா போகப் போறேன்.

// நீங்க மடத் தலைவர் ரேஞ்சுக்கு ஆசிர்வாதம் கொடுத்துட்டு போயிட்டீங்களே! :-) //

என்னைய மடையன்னு ரொம்ப நாகரீகமாச் சொல்றீங்க. சரி. சரி. புரியுது.

// தமிழ் மழை பொழிங்க தல! //

தமிழ் மழையா?

கருமுகில் தருமழை எனபல
நறுமொழி பெருதொகை பொலிவது
வருவது அறுமுகன் ஒருவனின்
திருப்புகழ் மகிழ்வுடன் செப்பிடவே! ;)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//என்னங்கண்ணா இது?
லோக சம்ஸ்தா சுகினோ பவந்து-ன்னு எல்லாம் வாழ்த்தறீங்க! ;-) //

என்னது சமோசாவா? ஆசையக் கெளப்புறீங்களே. இங்க கெடைக்காதே. :)//

ஹிஹி
லோக சமஸ்தா சமோசா பவந்து-ன்னு மாத்திரலாமா ஜிரா? :-)
நியுயார்க்குல கெடைக்குது சமோசா...ஒக்க ப்ளேட்டு ஆம்ஸ்டர்டாம் பார்சேல்...

//அருணகிரி ஆண்டிருக்காரா? ஓ சுப்ரபாதத்துல இருந்து அருணகிரி ஆண்டிருக்காரா//

சுப்ரபாதத்துல இருந்து இல்லீங்கண்ணா!
மாம் ஏகம் சரணம் வ்ரஜ = கண்ணனின் கீதை! எல்லாப் பற்றையும் விலக்கி, என் ஒருவனையே தஞ்சம் புகுந்தவனுக்கு....இப்படி வரும் அநுபூதி நினைவிருக்கா?

உங்க அநுபூதி தொடர்-ல இந்த கீதையைப் பின்னூட்டமாப் போட்டதா ஞாபகம்!
அதான் இப்ப நீங்க அநுபூதியைப் பின்னூட்டமாப் போடுவீங்க-ன்னு நெனச்சேன்!

இந்தாங்க க்ளூ!
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே - இப்ப ரோசிச்சி சொல்லுங்க!

VSK said...

//ஆனால் மறுகால் முயலகன் மீதல்லவா இருக்கு? எதையும் தாண்டி விடலாம் என்று எங்கு காட்டுகிறார்? தெரியலையே! கொஞ்சம் விளக்குங்களேன்!//

அதி இரவு[!!] 1 மணிக்கு எழுதியதால், சொல்ல நினைத்ததைக் கோர்வையாகச் சொல்லாமல் விட்டது என் தவறே! மன்னிக்கவும்.

பெருமாள் இரு கைகள், கால்களால் சொன்ன தத்துவத்தை ஆடல்வல்லான் ஒரு கை, ஒரு கால் மூலமே காட்டினான் என்பதே நான் சொல்ல நினைத்தது.

"இதோ இந்த தூக்கிய திருவடியைப் பற்றிக் கொள்! எல்லாவற்றையும் தாண்டிவிடலாம்" என்பதைக் காட்டுகிறான்!

திருச்சிற்றம்பலம்.
ஏடுகொண்டலவாடா!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// நீங்க மடத் தலைவர் ரேஞ்சுக்கு ஆசிர்வாதம் கொடுத்துட்டு போயிட்டீங்களே! :-) //
என்னைய மடையன்னு ரொம்ப நாகரீகமாச் சொல்றீங்க. சரி. சரி. புரியுது.//

அட, நான் மடத்தைச் சொன்னேங்க! ஜீரா மடத்துல அம்ச தூளிகா-ல இருந்து எல்லாமே அம்சமா இருக்குமே! அதான் சீடன் ஆவுறதுக்கு அப்ளிக்கேசன் போட்டேன்! இன்னும் பதில் வரல! :-)

//தமிழ் மழையா?
கருமுகில் தருமழை எனபல
நறுமொழி
பெருதொகை பொலிவது
வருவது அறுமுகன்//

சூப்பரு!

//ஒருவனின்
திருப்புகழ் மகிழ்வுடன் செப்பிடவே! ;)//

இங்கன தளை தட்டுதே! யப்பா கொத்சு! ஒதவிக்கு வாப்பா!

ஒருவனின் தமிழ்மொழி ஒருபதும் இருபதும்
தருதிருப் பாவையின் அரிதிரு மாலே!
- இப்போ சரியா வந்துடுச்சா? :-))

மதுரையம்பதி said...

//த்ரேதாயாம் ரகு நந்தன
துவாபரம் வாசுதேவயஸ்ய
கலெள வேங்கட நாயக!
ன்னு வரும்னு நினைக்கிறேன்!//

அதே, அதே...

G.Ragavan said...

//// //தமிழ் மழையா?
கருமுகில் தருமழை எனபல
நறுமொழி
பெருதொகை பொலிவது
வருவது அறுமுகன்//

சூப்பரு!

//ஒருவனின்
திருப்புகழ் மகிழ்வுடன் செப்பிடவே! ;)//

இங்கன தளை தட்டுதே! யப்பா கொத்சு! ஒதவிக்கு வாப்பா!//

அட...இங்க தளை தட்டினா என்ன தட்டாட்டி என்ன....இது வெண்பா கலிப்பா இல்லை. களிப்பான என்பா. அதுல பிழை இருக்கான்னு பாக்கத்தான் ரவிக்குத் தெரியும். என்ன பாக்கனும்னு முருகனுக்குத் தெரியும். ;)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//k said...
aacharyan thiruvadigaley saranam//

நன்றி k!

//Gyanadevan said...
அற்புதம். படிக்க படிக்க பேரானந்தமாக இருந்தது. நன்றி மற்றும் வாழ்த்துக்கள் ரவி.//

நன்றி ஞானதேவன்! உங்களுக்கு அகமகிழ்ச்சியா இருந்தது குறித்து அடியேனுக்கும் மகிழ்ச்சியே!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//VSK said...
//அதி இரவு[!!] 1 மணிக்கு எழுதியதால், சொல்ல நினைத்ததைக் கோர்வையாகச் சொல்லாமல் விட்டது என் தவறே! மன்னிக்கவும்//

ஆகா...ஒரு மணி வரைக்கும் முழிச்சிப் பின்னூட்டமா? கலக்குங்க! :-)

//இதோ இந்த தூக்கிய திருவடியைப் பற்றிக் கொள்! எல்லாவற்றையும் தாண்டிவிடலாம்" என்பதைக் காட்டுகிறான்!//

சூப்பர்! நன்றி SK!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வெட்டிப்பயல் said...
அருமை! அருமை!!!//

தல...I kept up my promise to you! :-)

//இதை PDF ஆ மாத்தி தாங்களேன்!!! புத்தகமே அடிச்சிடலாம்.//

சூப்பரு! Hurrah! பப்ளிஷர் ரெடி! :-)
பாலாஜி பதிப்பகம்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//G.Ragavan said...
அட...இங்க தளை தட்டினா என்ன தட்டாட்டி என்ன....இது வெண்பா கலிப்பா இல்லை. களிப்பான என்பா.//

தோடா...
கலிப்பா-களிப்பா வா? :-)

//அதுல பிழை இருக்கான்னு பாக்கத்தான் ரவிக்குத் தெரியும். என்ன பாக்கனும்னு முருகனுக்குத் தெரியும். ;)//

ஹிஹி
முருகன் தான் நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே சொல்ல என்னைய அனுப்பி வச்சாரு! :-)

பிழை பார்க்க மனமில்லை ஜிரா!
இழை விட்ட ஒரு நூலைச் சரியாக்கி
தழை விட்டேன்! தமிழாடை கந்தனுக்குத்
தழைய விட்டேன்!! :-)

dubukudisciple said...

கோவிந்த நாம சங்கீர்த்தனம் - கோவிந்தா கோவிந்தா!//

நானும் கும்பலோட கோவிந்தா போட்டுக்கறேன்..

தி. ரா. ச.(T.R.C.) said...

அலர்மேல் மங்கை மார்பனுக்கு மங்களம்.ஸ்ரீ வேங்கடநிவாசாய ஸ்ரீநிவாசாய மங்களம். ஆமாம் இந்த ஸ்ரீநிவாசன் யார்? "வெங்கடேஸ்வரே நாம ரூபேன.... ஸ்ரீ சுப்ரம்ணியேன ரக்க்ஷிதோகம்" சுத்தன்யாசி ராகத்தில் அமைந்த கீர்த்தனையில் முத்துஸ்வாமி தீக்ஷதர் இப்படி குறிப்பிடுகிறார். "முருகா உனக்கு வேங்கடேஸ்வரன் என்ற பெயரும் உண்டு".திருமாலையும் மால் மருகனையும் ஒன்றாகவே பார்ப்பவர்கள் உண்டு.பார்ப்பவர்கள் கண்ணுக்கு அவர்கள் இஷ்ட தெய்வமாகவே காட்சி அளிப்பவன் வேங்கடமுடையான்

குமரன் (Kumaran) said...

//இரண்டாயிரம் வருசமா இருக்குதே! //

இராம.கி. ஐயாவும் அரைபிளேடு பதிவில் இதே கருத்தைத் தான் சொல்லியிருக்கிறார். 2000 வருடங்களாக வேங்கடவன் கோவில் விண்ணவன் கோவிலாகத் தான் இருக்கின்றது என்று.

//நிர வத்ய குணைக சிந்தோ = குறையொன்றும் இல்லாத குணக் கடலே
(சிந்து=கடல்; நிர வத்ய குணக் கடல் = குறையொன்றுமில்லாத கல்யாண குணங்களின் கடல்! - இது அப்படியே ஒரு பாசுரம்! என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்!)
//

குற்றமொன்றில்லா கோவிந்தா உன் தன்னை... பாசுரம். சரியா? :-)

குமரன் (Kumaran) said...

பலஸ்ருதி சுலோகத்தையும் இரண்டு முறை பாடுவார்கள் தானே இரவிசங்கர்?!

//படிச்சும் அறிவில்லாதவன் //

அடியேன் அடியேன் அடியேன் தானே.

இரவிசங்கர். பெருமாளின் வலக்கரமும் இடக்கரமும் சொல்லும் செய்திகளை அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். அந்த முத்திரைக்கு சின்முத்திரை என்று தான் பெயரா? சின்முத்திரை என்பது ஐயப்பன் காட்டுவது என்ற புரிதல் எனக்கு இருக்கிறது. சரி பார்க்க முடியுமா?

//இது போன்றதொரு கோலத்தை, வேறெங்கும் காண முடியாது! வேறு பெருமாள் கோவில்களில் கூட இப்படிக் காண முடியுமான்னு கேட்டா, முடியாது!
//

பிரசன்ன வெங்கடாசலபதி கோவில்கள் என்று பல கோவில்கள் இருக்கின்றனவே அங்கெல்லாம் இந்தத் திருக்கோலத்தைக் காணலாமே இரவிசங்கர். மதுரையிலும் தெற்கு கிருஷ்ணன் கோவில் என்ற பெயர் கொண்ட பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் இருக்கும் மூர்த்தி இதே திருக்கோலத்தில் தான் இருக்கிறார்.

குமரன் (Kumaran) said...

//இதற்கும் வேகமாப் பொருள் சொல்ல வேண்டுமானால் சொல்லுங்க...
கொஞ்சம் gap விட்டுத் தொடங்கலாம். இதைக் குழுப் பதிவாச் செஞ்சா இன்னும் நல்லா இருக்கும்! என்ன சொல்றீங்க மக்களே?
//

வேகமா எல்லாம் பொருள் சொல்ல வேண்டாம். மெதுவா சுப்ரபாத இடுகைகள் போன்றே சொல்ல வேண்டும். குழுப்பதிவா செய்வது உங்கள் விருப்பம். யாரைச் சேர்த்துக் கொள்ளப் போகிறீர்கள்? (அடியேனிடம் ஏற்கனவே கேட்டு அடியேன் அன்புடன் மறுத்துவிட்டேன் என்பதையும் இப்போதே சொல்லிக் கொள்கிறேன்). :-)

//ரொம்ப நிறைவு தந்த தொடர்.//
ரிப்பீட்டே.

//நல்லா இருங்க. //

இன்னுமொரு நூற்றாண்டிரும்.

//உலகெங்கும் அன்பும் அமைதியும் வளமும் கல்வியும் நட்பும் இன்னபிற நல்லன எல்லாம் பெருகட்டும்.
//

ததாஸ்து. அப்படியே ஆகட்டும்.

//சகஸ்ரநாமம் வேறு எழுதச் சொன்னீங்க! ஆனா அது குமரன் லிஸ்ட்! அவரு கோச்சிக்கிட்டாரு, அவரு லிஸ்டை எடுத்து இப்படிக் கொடுத்ததற்கு! :-))
//

நான் கோவிச்சுக்கிட்டேனா? சான்ஸே இல்லை. என் பட்டியலில் இருக்குன்னு வேணும்னா சொல்லியிருப்பேன். சஹஸ்ரநாமமும் நீங்களே தொடங்குவதா இருந்தா சொல்லுங்க இரவி. அது வேணும்னா கூட்டுப்பதிவா போடலாம். ஆனால் அதுக்கும் இப்போதைக்கு நேரமில்லை. அபிராமி அந்தாதி நிறைந்த பிறகு, கோதை தமிழையும் விட்டுசித்தரின் பாசுரங்களையும் பார்க்க வேண்டும்.

குமரன் (Kumaran) said...

//சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷ இஷ்யாமி மா சுச
என்பதற்கு direct explanation தான்
வேங்கடவன்.
//

மாம் ஏகம் சரணம் வ்ரஜன்னு இன்னொரு கோவில்லயும் சொல்றாரே பெருமாள்?! :-)

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர். மிக நன்றாக இருந்தது இந்த தொடர். கோபுரத்து உச்சியின் மேல் நின்று எல்லோருக்கும் திருமந்திரப் பொருளை ஓங்கி உரைத்த இளையாழ்வார் இராமானுஜரைப் போல் எல்லோருக்கும் புரியும் படி எளிமையாகப் பொருள் சொல்லிச் சென்றீர்கள். இப்போது வலையுலகில் இருக்கும் சுலோகங்களுக்குப் பொருள் சொல்லத் தெரிந்த அன்பர்களில் எவருக்கும் இந்த திறன் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் நீங்களே தொடர்ந்து மற்ற சுலோகங்களுக்கும் பொருள் சொல்லி மகிழ்விக்க வேண்டுகிறேன்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//மாம் ஏகம் சரணம் வ்ரஜன்னு இன்னொரு கோவில்லயும் சொல்றாரே பெருமாள்?! :-) //

தன் ஒப்பார் இல் அப்பன் = ஒப்பிலியப்பன் தானே சொல்றீங்க குமரன்!
அங்கும் "வேங்கடாசலபதி" தேவஸ்தானம்-னு தான் போர்டு! :-)
திருமலை அப்பனுக்கு அண்ணா-ன்னு திருமலை உறவை வைத்துத் தான் சொல்லுறாங்க! :-))

//பிரசன்ன வெங்கடாசலபதி கோவில்கள் என்று பல கோவில்கள் இருக்கின்றனவே அங்கெல்லாம் இந்தத் திருக்கோலத்தைக் காணலாமே இரவிசங்கர்//

ஹூம்! பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயங்கள், சிகாகோவில் உள்ள பெருமாள், சிங்கப்பூர் வேங்கடாசலபதி என்று இவை எல்லாம் பின்னாளில் வந்த ஆலயங்கள், குமரன்!
இன்னொன்னு கவனித்தீர்களா? இவை எல்லாம் கூட "வேங்கடாசல" பதி என்று "வேங்கடத்தின்" பெயரைத் தான் தாங்கிக் கொண்டு இருக்கு!

பின்னாளில் அமைக்கப்பட்ட ஆலயங்களில், திருமலை வேங்கடவனுக்கு என்றே,
அது மாதிரி வடிவம், அதே மாதிரி கோலம், அதே பெயர் என்று, வெவ்வேறு ஊர்களில் அமைத்து விட்டார்கள்! ஆனால் அத்தனையும் "வேங்கடாசல" என்று தான் இருக்கின்றன! இந்தச் சிறப்பைத் தான் சொல்ல வந்தேன்!

பொதுவா கண்ணன், இராமன், பெருமாள்-னு ஆலயங்கள் எழுப்புவது வழக்கம்! ஆனால் ஒரு திவ்யதேச எம்பெருமானுக்கு என்றே பலப்பல ஊர்களில் ஆலயம் அமைப்பது என்பது இது வரை கண்டிராத ஒன்று!

அரங்கன், அனந்தபுரத்தில் பத்மநாபன் ஆகி விடுவான்!
ஆனால் போகும் இடம் எல்லாம் "வேங்கடத்தை" கூடவே கூட்டிச் செல்வது இவர் தான்! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//dubukudisciple said...
கோவிந்த நாம சங்கீர்த்தனம் - கோவிந்தா கோவிந்தா!//
நானும் கும்பலோட கோவிந்தா போட்டுக்கறேன்..//

அலோ சுதாக்கா
கும்பலோட கோவிந்தா போடவே இல்லியே! வாய்வுட்டுச் சொல்லுங்க! அப்பத் தான் கோவிந்தா போட்டா மாதிரி இருக்கும்! :-)))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//தி. ரா. ச.(T.R.C.) said...
அலர்மேல் மங்கை மார்பனுக்கு மங்களம்.ஸ்ரீ வேங்கடநிவாசாய ஸ்ரீநிவாசாய மங்களம்.//

மங்களம் அழகாச் சொல்லிட்டீங்க திராச.

//"வெங்கடேஸ்வரே நாம ரூபேன.... ஸ்ரீ சுப்ரம்ணியேன ரக்க்ஷிதோகம்" சுத்தன்யாசி ராகத்தில் அமைந்த கீர்த்தனையில் முத்துஸ்வாமி தீக்ஷதர் இப்படி குறிப்பிடுகிறார்//

இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து என்று ஆழ்வாரும் பாடி உள்ளார்! அருமையாச் சொல்லி இருக்கீங்க திராச!
தீட்சிதர் வேங்கடவன் மேல் கிருதி எழுதி இருக்காரா என்ன? நீங்கள் சொன்ன அந்த வரிகளை இப்போ தான் கேள்விப்படுகிறேன்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நிர வத்ய குணைக சிந்தோ = குறையொன்றும் இல்லாத குணக் கடலே

குற்றமொன்றில்லா கோவிந்தா உன் தன்னை... பாசுரம். சரியா? :-)//

குமரன்...நீங்க தான் வந்து இதுக்குப் பதிலைச் சொல்லணும்-னு இருக்கு பாத்தீங்களா? :-)

குறையொன்று மில்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!
இந்தப் பாசுரம் 28ஆம் பாசுரம்
இந்த ஸ்லோகமும் 28ஆம் சுலோகம்
கவனிச்சீங்களா? :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குமரன் (Kumaran) said...
பலஸ்ருதி சுலோகத்தையும் இரண்டு முறை பாடுவார்கள் தானே இரவிசங்கர்?!//

ஆமாங்க, குமரன்!
எம் எஸ் அப்படித் தான் பாடுகிறார். ஆனால் கோயில் அர்ச்சகர்கள் இதை ஏனோ இரண்டு முறை சேவிப்பதில்லை!

//படிச்சும் அறிவில்லாதவன் //
அடியேன் அடியேன் அடியேன் தானே.//

ஹை! நைசா என்னை விட்டுட்டீங்களா?
அடியேனும் தான் அப்படியே! :-)

அந்த அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறிவிப் பெருந்தனை புண்ணியம் "நாம்" உடையோம்!

//அந்த முத்திரைக்கு சின்முத்திரை என்று தான் பெயரா? சின்முத்திரை என்பது ஐயப்பன் காட்டுவது என்ற புரிதல் எனக்கு இருக்கிறது. சரி பார்க்க முடியுமா//

குமரன்
தவறுக்கு மன்னிக்கவும்! வெறும் முத்திரை என்று எழுத வந்தது...வேகத்தில் சின்முத்திரை என்று சொல்லிவிட்டேன்!

நீங்கள் சொல்வது சரி! ஐயப்பன், மற்றும் யோகத்தில் காட்டுவது சின்முத்திரை!
மேல்நோக்கிக் காட்டினால் ஞான முத்திரை! கீழ்நோக்கிக் காட்டினால் சின்முத்திரை!

இங்கு பெருமாள் கீழ்நோக்கிக் காட்டுகிறார். ஆனால் ஆட்காட்டி மற்றும் கட்டை விரலைச் சேர்க்கவில்லை! எனவே சின்முத்திரை இல்லை!
இதற்கு வேறு பெயர் உண்டு! கத்யாவலம்பித முத்திரை என்று இதற்குப் பெயர்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குமரன் (Kumaran) said...
வேகமா எல்லாம் பொருள் சொல்ல வேண்டாம். மெதுவா சுப்ரபாத இடுகைகள் போன்றே சொல்ல வேண்டும்//

ஆகா..இது என்ன குமர கட்டளையா?

//நான் கோவிச்சுக்கிட்டேனா? சான்ஸே இல்லை.
என் பட்டியலில் இருக்குன்னு வேணும்னா சொல்லியிருப்பேன்.//

சான்ஸே உண்டு! ஆமா நீங்க கோச்சிக்கிட்டீங்க! -))
இந்தாங்க, பழைய பின்னூட்டம்!
//துளசி அக்கா உங்களுக்கும் எனக்கு நல்ல போட்டி ஏற்படுத்துறார் இரவி. என் பட்டியலில் சுப்ரபாதம் இருந்தது. நீங்கள் எழுதத் தொடங்கினதும் பட்டியலில் நீங்கள் எழுதத் தொடங்கிவிட்டீர்கள் என்று குறித்துக் கொண்டேன். சஹஸ்ரநாமமும் இருக்கிறது. அதற்கும் துளசியக்கா வேட்டு வைக்கப் பாக்குறாங்க//

ஹிஹி....சும்மாத் தான் குமரன்! வெளையாட்டுக்குச் சொன்னேன்! :-)
நீங்க போயி கோச்சிப்பீங்களா? எங்களுக்குத் தெரியாதா?

இப்போது சகஸ்ரநாமம் தொடங்கும் திட்டம் ஏதும் இல்லை, குமரன்! முதலில் எடுத்துக் கொண்டதை எல்லாம் முடிப்போம்! எண்ணித் துணிக கருமம்! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குமரன் (Kumaran) said...
இப்போது வலையுலகில் இருக்கும் சுலோகங்களுக்குப் பொருள் சொல்லத் தெரிந்த அன்பர்களில் எவருக்கும் இந்த திறன் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் நீங்களே தொடர்ந்து மற்ற சுலோகங்களுக்கும் பொருள் சொல்லி மகிழ்விக்க வேண்டுகிறேன்//

அச்சோ...
சரி சரி...அடியேனே பொருள் சொல்லி விடுகிறேன்! அதுக்காக இப்படி எல்லாம் பெரிய வார்த்தை சொல்லி நம்மள திட்டாதீங்க! :-)

குமரன் (Kumaran) said...

//ஆனால் ஒரு திவ்யதேச எம்பெருமானுக்கு என்றே பலப்பல ஊர்களில் ஆலயம் அமைப்பது என்பது இது வரை கண்டிராத ஒன்று!
//

மினசோட்டாவில் இருக்கும் பெருமாள் கோவில் வரதராஜ பெருமாள் கோவில். வரதப்பா வரதப்பா கஞ்சி வரதப்பான்னு போன வாரம் போனப்பவும் பாடிக்கிட்டு இருந்தேன். :-)

//கத்யாவலம்பித முத்திரை என்று இதற்குப் பெயர்!
//

பெயரை அறிந்து சொன்னதற்கு நன்றி.

//சரி சரி...அடியேனே பொருள் சொல்லி விடுகிறேன்! //

நன்றி நன்றி நன்றி.

TV de Plasma said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the TV de Plasma, I hope you enjoy. The address is http://tv-de-plasma.blogspot.com. A hug.

நாகு (Nagu) said...

இலவசக் கொத்தனார் சொன்னதுக்கு ரிபீட்டு..
இதில் பெரியவர் சின்னவர்ன்னு எல்லாம் பாக்காமே நாங்க எல்லாருமே விழனும். நீங்க சொன்ன மாதிரி ராமானுஜரே விழலயா...

அற்புதமான பதிவு. வளர்க உம் ஆன்மீகத் தொண்டு...

சுப்ரபாதம் (தமிழில்):

ஒலிச் சுட்டிகள்!

முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் - நித்ய ஸ்ரீ பாடுவது (Windows Media Player)

நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com
Pics: tirumala-tirupati.com

சுப்ரபாதம் (மூலம்):

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP