Sunday, November 09, 2008

சுப்ரபாதம்(32&33) - திருப்பதியில் ஏது இம்புட்டு பணம்?

வேங்கடவனைப் போல பரம ஏழை வேறு யாரும் கிடையாது! அவன் ஒரு தரித்திரன்-அப்படின்னு தினமும் திருமலையில பாடுறாங்க! அடப்பாவிங்களா! அநியாயமா இல்லை? வாய்க்கூசாம பொய் சொல்லுறாங்களே? உண்டியல் காசு உலகத்துக்கே தெரியுமே! உண்டியலை ஷிப்ஃட்டு போட்டு எண்ணும் அவன் ஏழையா? இல்லை, ரெண்டே ரெண்டு லட்டுக்கு கால் கடுக்க நிக்கும் நாம ஏழையா?

"சமாதிக "தரித்திராய" வேங்கடேசாய மங்களம்!" என்று பெருமாளைத் தரித்திரன் என்றே குறிப்படுகிறார்கள்! = இதெல்லாம் டூ டூ மச்! பாக்கலாம் வாரீங்களா? இன்னிக்கி தோத்திரத்தை? :)

சரி, வேங்கடவன் மட்டும் எப்பிடி இம்புட்டுப் பணக்காரன் ஆனான்?
பல திவ்யதேச எம்பெருமான்கள் எல்லாம் மிடில் கிளாஸ், லோயர் மிடில் கிளாஸ், வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்க, இவனுக்கு மட்டும் என்ன அப்படிக் கொட்டுது? :)
பல பேரிடம் கேட்டுப் பார்த்தேன்! ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமாச் சொல்லுறாங்க! பகுத்தறிவு விமர்சனம் கூட ஒருத்தர் சொல்றாரு :)




ஜகத்குருவான ஆதி சங்கரரை ஒரு காபாலிகனிடம் இருந்து காப்பாற்றினார் நரசிம்மர். அவர் உடனே சிங்கவேள் குன்றம் (அகோபிலம்) சென்று நரசிம்மனை வழிபட்டார்!
அப்போது "திருமலை செல்! மோட்சத்துக்கு என்ன வழி? என்பதைச் சூசகமாக காட்டி நிற்கிறான்! அங்கு சென்றால் தான் உமக்கு விளங்கும்!" என்று உத்தரவானது! உடனே திருப்பதி யாத்திரையை மேற்கொண்டார் பகவத்பாதர்.

திருப்பதியில் இருப்பது பெருமாள் தானா? என்றெல்லாம் கிளப்பிவிடப்படாத கால கட்டம் அது! இளங்கோவடிகள் முதற்கொண்டு, ஆதி சங்கரரும் வேங்கடவன் பெருமாளே என்பதை மிக நன்றாக அறிவார்.
இத்தனைக்கும் இராமானுசருக்கு இருநூறு ஆண்டுக்கு முற்பட்டவர் சங்கரர். எட்டாம் நூற்றாண்டு. அவர் திருமலை வந்து எம்பெருமானைக் கண்ணாரக் கண்டு களித்தார்.

வைத்த கண்ணை எடுக்க முடியவில்லை! பிஞ்சிற் பழுத்த துறவியான அவரே பெருமாளின் பேரழகில் மனம் தடுமாறினார்! உடனே விஷ்ணு பாதாதி கேச ஸ்தோத்திரம் என்ற துதியை இறைவன் மேல் பாடத் தொடங்கி விட்டார். பாதம் முதலாக, உச்சி வரை, ஒவ்வொரு அங்கமாக வர்ணித்து வர்ணித்து, விஷ்ணும் நமாம்யஹம் என்று போற்றி மகிழ்ந்தார்.

இப்படி மோட்ச ரகசியம் காட்டிக் கொடுப்பவனை, ஊருக்கே காட்டிக் கொடுக்க எண்ணி விட்டார் ஆதி சங்கரர்! மக்கள் மலையேறி வந்து அல்லவா சேவிக்க வேண்டும்!
ஏறுவதற்கே மூனு மணி நேரம் மேலே ஆகுது! குளிர் வேற அப்பப்போ நடுங்குது! மிகவும் கடுமையான யாத்திரையாக இருக்கே! மக்கள் வராது போனால்? பெரும் புதையலை அல்லவா இழப்பார்கள்?

ஜனாகர்ஷ்ணம் (ஜன+ஆகர்ஷணம்=மக்கள் ஈர்ப்பு),
தனாகர்ஷணம்(தன+ஆகர்ஷணம்=செல்வ ஈர்ப்பு)

என்ற இரண்டு மந்திர யந்திரங்களைச் செய்வித்தார். தாமே யோகத்தில் இருந்து பெருமாளின் திருவடிகளில் ஸ்தாபிக்கச் செய்து விட்டார் ஜகத்குரு!

ஏற்கனவே அவன் பத்மபீடத்தின் அடியில், மனோ காரகனான சந்திரன் வேறு நிலை கொண்டுள்ளான்!
இன்னிக்கும் ஜோதிட பரிகாரங்களில், சந்திர தோஷ நிவர்த்தித் தலமாகத் திருப்பதி சொல்லப்படுகிறது! இப்போது இந்த ஜனாகர்ஷண யந்திரம் வேறு! சொல்லணுமா?
இது தான் திருமலைச் செல்வச் செழிப்புக்குக் காரணம் என்று பலரும் சொல்வார்கள்!

சங்கரருக்குப் பின் வந்த அனந்தாழ்வான்-இராமானுசர் காலத்தில் கூட அவ்வளவு செழிப்பு இல்லை! பூமாலைக்கே வழியின்றி இருந்தான் திருமலையான்!
சங்கரர் ஸ்தாபித்த யந்திரபலம் பிரசித்தமாகத் தெரிய காலப் பரிமாணம் ஆகுமில்லையா?
சில ஆண்டுகள் கழித்து, கொஞ்சம் கொஞ்சமாய், திருமலையே மக்கள் மலையாக மாறி விட்டது!



என் நண்பர் ஒருவர் பகுத்தறிவுவாதி! கம்யூனிஸ்ட்! ஆனால் வேங்கடவன் மேல் மட்டும் கொள்ளைப் பிரியம்! (வெளியில் தெரியாமல்!)
அவருக்கு இந்த யந்திர மந்திர தந்திரத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை! ஆனால் திருவேங்கடமுடையானை மட்டும் "நைசாக" யாருக்கும் தெரியாமல் போய் பார்த்து வருவார்!
திருப்பதியில் மட்டும் ஏன் இம்புட்டு செல்வம் என்பதற்கு அவர் "பகுத்தறிவுப் பாணியில்" ஒரு விளக்கம் சொன்னார்! கேட்டு ஆடிப் போயிட்டேன்! :)

"அடேய் கேஆரெஸ்!
என்னிக்குமே உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தான்! உழைச்சவன் தான் உசருவான்! தெரிஞ்சிக்கோ!
வேற ஊர் பெருமாளைப் பாரு! காலையில லேட்டா ஆறேழு மணிக்கு எழுந்துக்கறது! மதியம் கதவை மூடிக்கிட்டு ஒரு குட்டித் தூக்கம்! சாயங்காலம் கொஞ்ச நேரம் போக்கு காட்டிட்டு, எட்டு மணிக்கெல்லாம் மறுபடியும் தூங்கப் போயிடறது!

திருமலையான் அப்படியா? விடிகாலைல மூனு மணிக்குச் சிற்றஞ் சிறு காலே-ன்னு குளிர்ல நிக்க ஆரம்பிச்சவன் தான்......
சிறு காலே சிறு காலே-ன்னு கால் வலிக்க நின்னுகிட்டே இருக்கான்!
மதிய ஓய்வு கூட இல்லை! இராத்திரி ரெண்டு மணிக்கு, ஏகாந்த சேவை-ன்னு தூங்க வைக்குறானுங்க! கோயிலைப் பூட்டிட்டு அந்தாண்ட போறதுக்குள்ள, அடுத்த ஷிப்ட்டு ஆளு வந்து, கதவைத் தொறந்து விட்டு சுப்ரபாதம் பாடுறான்!
என்னிக்குமே உழைப்புக்கு ஏத்த கூலி தான்! யந்திரமும் இல்ல! மந்திரமும் இல்ல! தெரிஞ்சிக்கோ"-ன்னு சிரிச்சிக்கிட்டே சொன்னாரு!

இப்படிக் கூலியாளான வேங்கடவன் ஏழை தான்! ஏழைப் பங்காளன் தான்! ஏழைப் பங்கு ஆளனையே பாடேலோ ரெம்பவாய்! :)
அதுக்காக, "தரித்திராய வேங்கடேசாய!", தரித்திரன்-என்றா கடவுளைச் சொல்வது? சேச்சே!
சுப்ரபாதத்தின் தொடர்ச்சியாக, இந்தத் தோத்திரமும் அப்படித் தான் சொல்லுது! அழகான சந்தமான "தோடக விருத்தத்தில்" அமைந்துள்ளது பாட்டு! பாக்கலாம் வாங்க!



(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)


அதி வேல தயா தவ துர்விஷஹைர்
அனு வேல க்ருதைர் அபராத சதை:
பரிதம் த்வரிதம் வ்ருஷ சைல பதே!
பரயா க்ருபயா பரிபாஹி ஹரே!


அதி வேல தயா தவ = மிகப் பெரிதான அளவற்ற கருணை உனது!

துர்விஷஹை = துர் விஷயங்கள் என்னும் பாப கர்மாக்களை, தீச்செயல்களை
அனு வேல, க்ருதைர் = காலம் காலமாகச் செய்து கொண்டிருக்கேன்!
அபராத சதை = என் அபராதங்களோ நூறு, நூறாய்ப் பெருகுகிறது! (அதை எல்லாம்)
பரிதம் த்வரிதம் = (உன் கருணை) சூழ்ந்து கொண்டு, துரிதமாய் மூழ்கடிக்கின்றது!

வ்ருஷ சைல பதே! = விருஷபாத்ரி என்னும் விருஷமலைக்குத் தலைவா!
பரயா க்ருபயா = உன் பரம கருணையால்,
"பரிபாஹி" ஹரே = எங்களைப் பரிபூர்ணமாக, முழுவதுமாய்க் காப்பாயாக!

வேங்கடவனுக்கு மட்டும் "அளவுக்கு அதிகமான" தயை இருக்கக் காரணம் என்ன?
தனியாகத் தாயார் சன்னிதி கிடையாது. அவனோடவே அகலகில்லேன் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா-ன்னு வீற்றிருக்கிறாள்!
அதனால் தான் அவன் ஸ்ரீ-நிவாசன்! திரு-மால்!
அவள் தயா தேவி! அதனால் தான் வேதாந்த தேசிகர் அவன் மேல் பாடாது, தயா மேல் பாடினார்! தயா சதகம் என்பது அந்த நூல்!

இப்படி நூறு நூறாத் தீச்செயல் செஞ்சிக்கிட்டே இருக்கேன் நானு!
ஒன்னு செஞ்சாலே, அதை மறைக்க இன்னொன்னு செஞ்சி, இன்னொன்னை ஒளிக்க இன்னொன்னு செஞ்சி, இப்படி ஒன்னே, நூறு நூறா குட்டிப் போடுது!
அடுத்த பிறவிக்காகச், சஞ்சிதம் என்னும் பாவ மூட்டையில் இன்னும் கொஞ்சம் கட்டுச் சோறு போல கட்டிக்கறோம்! :)

இந்தச் சுழற்சியை நிறுத்த வழியே இல்லையா?
சஞ்சித-ஆகாம்யங்களை அறுத்து, இந்தப் பிறவிக்கான பிராரப்தங்களை முடிக்கவே முடியாதா? போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகப் பண்ணவே முடியாதா?

முடியும்! எப்படி முடியும்?
பற்றை விட்டால் பாவச் சுழற்சி நின்று விடும்!


என்னாது ஆசையை ஒழிக்கணுமா?
அடப் போப்பா! புத்தரே ஆசையை ஒழிக்கணும்-ன்னு ஆசைப்பட்டாரு!
எனக்கு அடுத்த மாசம் ப்ரமோஷன் வரப் போவுது! பல்க்கா ஒரு அமெளண்ட்டும் வரும்! அதை வச்சி அந்தப் பக்கத்து வீட்டுக்காரன் நிலத்தை எப்படி வளைச்சிப் போடறேன் பாரு! ரொம்ப நாளா அந்த நிலத்து மேல கண்ணு! பாவி விக்க மாட்டேங்குறான்!
பணத்துக்குப் படியலேன்னா, பவரைக் காட்டிற வேண்டியது தான்! ஏய் செல்லம், உங்கப்பாவுக்கு அந்த அமைச்சரு தெரியும் தானே?
ஏழுமலையானே! இத மட்டும் நல்லபடியா நடத்திக் கொடுத்துருப்பா! உனக்குத் தங்க வேலு காணிக்கையாப் போடுறேன்! :)

ஆக...பற்றை விடறது ரொம்ப கஷ்டம்! ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பற்று! அவனவனுக்கு அவனவன் நியாயம்! இதுல எப்படிப் பற்றை ஒழிக்கறது?
வள்ளுவம் வழி காட்டுகிறது பாருங்கள்!

பற்றுக பற்றற்றான் பற்றினை! - அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு!
பற்றில்லாத இறைவனின் திருவடிகளில் கொஞ்சம் கொஞ்சமா பற்றினால்...கொஞ்சம் கொஞ்சமா பற்று விடும்!

ஓக்கே கொஞ்சம் கொஞ்சமா விடும்! அப்படி விட்டால்? அடுத்து என்ன??
அற்றது பற்றெனில் உற்றது வீடு!

அதனால் தான் வெறுமனே "பாஹி" (காப்பாற்று) என்று வேண்டாது, "பரிபாஹி" என்று வேண்டுகிறார்!
பரி-பாஹி! பரிபூர்ணமாய்க் காப்பாற்று! விலக்கி விலக்கிக் காப்பாற்று!
தேவையில்லாத பற்றை விலக்கி விலக்கிக் காப்பாற்று!
மற்றை நம் காமங்களை மாற்றி மாற்றிக் காப்பாற்று!
பரயா க்ருபயா "பரிபாஹி" ஹரே!


இப்போ, தரித்திரன் என்று சொன்ன சொல்லுக்கு வருவோம்! தரித்திரன்-ன்னு யாரைச் சொல்லுவோம்?
அடுத்து வேளைக்கு ஒன்னுமே காட்ட முடியாத படி, அவனுக்கு எதுவுமே இல்லை, யாரையும் போய்க் கேட்க கூட யாருமில்லை! - அப்படி இருக்கறவனைத் தானே தரித்திரன்-ன்னு சொல்லுவோம்? வேங்கடவனும் அப்படித் தானாம்! எப்படி?

என் குணம் என்ன? = தப்பு பண்ணுறது!
எனக்குச் சமமா தப்பு பண்றவங்களா? = பல பேரைக் காட்டுவேன்!
என்னை விட அதிகமாத் தப்பு பண்றவங்களா? = இன்னும் பல பேரைக் காட்டுவேன்!
அதே போல,
உன் குணம் என்ன? = கருணை காட்டுவது!
உனக்கு சமமா கருணை செய்கிறவர்கள் = ஒருத்தரைக் காட்டு பார்ப்போம்!
உன்னை விட அதிகமா கருணை செய்கிறவர்கள் = ஒருத்தரைக் காட்டு பார்ப்போம்!

வேங்கடவா, உனக்குச் சமமான ஆளைக் காட்டு! = யாருமே இல்லை!
சரி போகட்டும், உனக்கு அதிகமான ஆளைக் காட்டு! = யாருமே இல்லை!

சுத்தம்...அப்படின்னா நீ சம+அதிக தரித்திரனே தான்! யாருமே இல்லை உனக்கு! யாரையும் சமமாகவோ, அதிகமாகவோ காட்ட முடியாது உன்னால! சமாதிக தரித்திராய வேங்கடேசாய மங்களம்!






அதி வேங்கட சைலம் உதாரம தேர்
ஜன தாபி மதா திக, தான ரதாத்
பர தேவ தயா, கதி தாந் நிகமை:
கமலா தயிதாந் ந பரம் கலயே!


அதி வேங்கட சைலம் = அந்த வேங்கட மலையில் நிற்கும்
உதாரமதேர் = கருணை மேகமே!
ஜனதா அபிமதா அதிக = மக்கள் வேண்டுவதை விட அதிகமாக (சமாதிகமாக)
தான ரதாத் = கொடுக்கும் வள்ளலே!

பர தேவ தயா = பரப்பிரம்மம் என்பவன் நீ தான்!
கதிதாந் நிகமை: = என்று நிகமங்கள், வேதங்கள் சாற்றுகின்றன!
கமலா தயிதாந் = கமலையின்(திருமகளின்) அன்பே!
ந பரம் கலயே = (உன்னையன்றி) வேறு ஒரு பரம்/கதி எனக்கு இல்லை!

வேண்டுவதை விட அதிகமாகவே கொடுப்பவன். ஜருகண்டி ஜருகண்டி-யில் பார்க்கவே நேரம் போதலை! இதுல எங்கே தனியா வேண்டிக்கறது?
அது அவனுக்கே தெரியும் போல! அதான் வேண்ட நினைத்ததை விட, அதிகமாகவே கொடுக்கிறான்! - ஜனதா அபிமதா அதிக!

பர தேவ தயா:
பரப்பிரம்மம் என்ற வாசகத்தை வேதங்கள் "நாராயண" என்ற பதத்துக்கே சொல்கின்றன!
சமய பேதங்கள் எல்லாம் கடந்து,
சங்கரர், இராமானுசர், மாத்வர், வல்லபர்...இன்னும் அத்தனை பேரும்,
யார் யாரெல்லாம் வேதத்துக்கு-பிரம்ம சூத்திரங்களுக்கு உரை எழுதினார்களோ...
அவர்கள் சைவரோ, வைணவரோ, சாக்தரோ, முருக அன்பரோ, எல்லாருமே...

வேதங்கள், பரப்பிரம்மம் என்று குறிப்பது, "நாராயண" என்ற பதத்தைத் தான்! என்று பாஷ்யம் எழுதி வைத்தார்கள்!

அந்த "நாராயண" என்கிற பதம் எந்தக் கடவுளை வேண்டுமானாலும் குறித்துக் கொள்ளட்டும்!
வெறும் சங்கு சக்கரத்தை மட்டும் நினைச்சிக்கிட்டு அந்தப் பதத்தைப் பார்த்தால், ஒரு சிலருக்குக் கோபம் கூட வரலாம்! என்ன இது, தேவியிடம் ஈடுபட்ட நம்ம ஆதிசங்கரர் கூட இப்படிச் சொல்லிட்டுப் போயிட்டாரே-ன்னு எனக்கும் தோன்றியது உண்டு!

ஆனால் ஆச்சார்ய ஹிருதயம் என்றுமே பொய்க்காது!
சமயம் கடந்து, வேத சத்தியத்தை உணர்த்திச் சென்றார்கள், பாஷ்யம் செய்த அத்தனை ஆச்சாரியர்களும்!

"நாராயண" என்னும் பதம், வைணவப் பெயர் போலவே நமக்குப் பழகி விட்டது! ஆனால், வைணவர்கள் மட்டுமே அதற்கு உரிமையும் கொண்டாட முடியாது! அத்தனை ஆச்சாரியர்களும் ஏகமனதாகச் சொன்ன பரப்பிரும்ம வாசகம் அது தான் என்பதில் ஐயமில்லை!

இதை ஏன் இங்கு சொல்றேன்னா....
பர தேவ தயா கதி தாந் நிகமை: என்று இந்தத் தோத்திரத்தில் வருவதால் தான்! உடையவர் செய்த பாஷ்யத்துக்கும், திருமலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு!

ஆதி சங்கரரின் பாஷ்யதுக்குச் சங்கர பாஷ்யம் என்றே பெயர்!
நாராயண பரோ வக்யாத் அண்டம் அவ்யக்த சம்பவம்! நாராயணஹ பரஹ! என்று தான் தம் பாஷ்யத்தை ஆரம்பிக்கிறார் சங்கரர்!

அவருக்குப் பின்னால் வந்த இராமானுசரும் பாஷ்யம் செய்ய விரும்பினார்.
ஆனால் அதற்கு மூல நூல், மற்ற உரைகள் எல்லாம் நல்லபடியாகக் கிடைக்க வேண்டுமே! மூல நூல் காஷ்மீரம் சரஸ்வதி பீடத்தில் உள்ளது! காஷ்மீரப் பண்டிதர்கள் கண்டிப்பானவர்கள்! வாசித்துப் பார்க்கக் கேட்டால் கூடத் தருவார்களா என்பது சந்தேகம் தான்!
அவ்வளவு தூரம் புறப்படும் முன்னர், திருமலைக்கு வந்து, மோட்சக் குறிப்பு காட்டுபவனை வேண்டிக் கொள்கிறார்! வழி காட்டுவாய் தயா தேவி என்று வேண்டுதல்!

வயதான காலத்தில் காஷ்மீரம் செல்கிறார்! காஷ்மீரப் பண்டிதர்கள் லேசுப்பட்ட ஆளா? கடைசியில் மன்னனின் ஆணையால் வேண்டா வெறுப்பாகக் கொடுக்கிறார்கள்! ஆனால் ராவோடு ராவாக நூல் களவு போகிறது! ஆனால் தயா தேவியின் அருளால் உடையவரின் சீடர் கூரத்தாழ்வான் இடைப்பட்ட நேரத்தில் பல பகுதிகளை மனப்பாடம் செய்துவிட்டார்!

இப்படிப் பல சிரமங்களுக்குப் பின் நல்லபடியாகப் பாஷ்யப் பணி நிறைவேறுகிறது! ஸ்ரீ பாஷ்யம் என்று பெயர்!
வடமொழியில் எழுதினாலும், தமிழ்ப் பண்பாட்டின் படியே, இராமானுசர் உரையைச் செய்கிறார்!

தமிழ் மரபுப் படி, அரும் பெரும் நூல்களை, உலகம் என்று வைத்துத் துவங்குதல் தான் வழக்கம்! தொல்காப்பியம் உலகம் என்று தொடங்காவிடினும், முதல் அடியிலேயே உலகம் என்று சொல்லி விடுகிறது!
* வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகத்து - தொல்காப்பியம்
* உலகம் உவப்ப வலனேர்பு - திருமுருகாற்றுப்படை!
* உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்துமாண் - வளையாபதி
* வையம் தகளியா - ஆழ்வார்களின் அருளிச் செயல் - நாலாயிர திவ்யப் பிரபந்தம்
* உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் - சிவபிரானே முதற்சொல் கொடுத்த பெரியபுராணம்!
* உலகம் யாவையும் தாமுள வாக்கலும் - கம்பராமாயணம்!

இந்தத் தமிழ்ப் பண்பாட்டை நினைவில் இருத்தி, அதே சமயம், "அ"கரம் என்று பிரணவம் வரும் படித் தொடங்குகிறார் இராமானுசர்.
அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே - என்று "அகிலம்" என்றே தொடங்குகிறார் உடையவர்!

திருமலைத் தயா தேவியை வேண்டிக் கொண்டு நிறைவேறிய பாஷ்யம் ஆதலாலே...
பிரம்மனி ஸ்ரீ-நிவாசே!
என்று மறக்காமல் ஸ்ரீ-யைச் சேர்த்து, நாராயண பரப்பிரும்மம் என்பதை உணர்விக்கிறார்!

இப்படி ஸ்ரீபாஷ்யம் எழுவதற்குக் காரணமான தலம் திருமலை! அதனால் தான், இந்தத் தோத்திரத்தில்.. "பர" தேவ தயா கதி தாந் நிகமை: என்று வருகிறது! நாமும் ந பரம் கலயே = (உன்னையன்றி) வேறு ஒரு பரம், பற்றுதல் எனக்கு இல்லை!
புகல் ஒன்று இல்லா அடியேன், உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே! - என்று புகுவோம் வாருங்கள்!

அடுத்த சனிக்கிழமை, அடுத்த தோத்திரங்களைப் பார்ப்போம்!
அதுவரை......ஸ்ரீம்! ஹரி ஓம்!

25 comments:

கோவி.கண்ணன் said...

//சரி, வேங்கடவன் மட்டும் எப்பிடி இம்புட்டுப் பணக்காரன் ஆனான்?
பல திவ்யதேச எம்பெருமான்கள் எல்லாம் மிடில் கிளாஸ், லோயர் மிடில் கிளாஸ், வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்க, இவனுக்கு மட்டும் என்ன அப்படிக் கொட்டுது? :)
பல பேரிடம் கேட்டுப் பார்த்தேன்! ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமாச் சொல்லுறாங்க! பகுத்தறிவு விமர்சனம் கூட ஒருத்தர் சொல்றாரு :)
//

:)

இதற்கான விளக்கம் தெரியும், சொன்னால் பகுத்தறிவாளர்கள் புறம் தள்ளிவிடுவார்கள், பக்தியாளர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். நானும் சொல்லப் போவது இல்லை, இருபக்கமும் அடி/ இடிவாங்க என்னால் முடியாது :)

திருப்பதியில் கூடும் கட்டுக்கு அடங்காத கூட்டம் மற்றும் செல்வம் குறித்து யாராவது ஆன்மிக ரீதியில் எழுதுவார்கள் என்று நினைத்துக் கொண்டு இருந்தது உண்மை.

திடீரென்று கடந்த ஐம்பது ஆண்டுகளில் திருப்பதியில் கூடும் கூட்டத்திற்கு வெறும் மக்கள் தொகையோ, மக்களின் மனக் கஷ்டமோ மட்டும் காரணமில்லை என்று கூறி பூடகமாக முடித்துக் கொள்கிறேன்.

:)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவி.கண்ணன் said...
இதற்கான விளக்கம் தெரியும், சொன்னால் பகுத்தறிவாளர்கள் புறம் தள்ளிவிடுவார்கள், பக்தியாளர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்//

அட, அப்போ பதிவில் காரணத்தைப் புட்டு வச்ச அந்தப் பகுத்தறிவாளர்-கம்யூனிஸ்ட்டு நண்பர் நீங்க இல்லியாண்ணே? :)

//நானும் சொல்லப் போவது இல்லை, இருபக்கமும் அடி/ இடிவாங்க என்னால் முடியாது :)//

ஹா ஹா ஹா!
உங்களை அடிப்பார் ஒருவர் உண்டோ? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//திருப்பதியில் கூடும் கட்டுக்கு அடங்காத கூட்டம் மற்றும் செல்வம் குறித்து யாராவது ஆன்மிக ரீதியில் எழுதுவார்கள் என்று நினைத்துக் கொண்டு இருந்தது உண்மை//

உங்க நினைப்பை நான் தீர்த்து வச்சிட்டேன் போல! ஐயகோ! :)

//திடீரென்று கடந்த ஐம்பது ஆண்டுகளில் திருப்பதியில் கூடும் கூட்டத்திற்கு வெறும் மக்கள் தொகையோ, மக்களின் மனக் கஷ்டமோ மட்டும் காரணமில்லை என்று கூறி பூடகமாக முடித்துக் கொள்கிறேன்//

பூடகமாகவா?
நீங்களா இப்படிப் பேசுறது? என்ன கொடுமை சரவணா? :)

கண்டிப்பா மக்கள் தொகை காரணமில்லை! அதுக்கு முன்னாடியும் வந்துக்கிட்டு தான் இருந்திச்சி! விகிதம் தான் கம்மி!

கண்டிப்பா மக்கள் பணக் கஷ்டம் காரணமே இல்லை! அங்கே மக்கள் பண்ணுற செலவைப் பாத்தாலே தெரியும்! :)

ஆனா மனக் கஷ்டம்?
அதுனால இல்லை-ன்னு உறுதியாச் சொல்ல முடியுமா?

கோவி.கண்ணன் said...

//அட, அப்போ பதிவில் காரணத்தைப் புட்டு வச்ச அந்தப் பகுத்தறிவாளர்-கம்யூனிஸ்ட்டு நண்பர் நீங்க இல்லியாண்ணே? :)//

எனது பதிவில் நான் எழுதியது பகுத்தறிவு காரணங்கள் மட்டுமே, உண்மையான காரணங்கள் உண்டு. அதைச் சொல்வதற்கு இல்லை.

திருப்பதியில் கூட்டம் கூடுவது போலவே, ஐயப்பனுக்கு பிரம்மச்சாரிய விரதத்துடன் கூடும் கூட்டமும் மிகுந்திருக்கிறது. அதற்கான காரணங்களும் கூட மிகவும் சிறப்பானவை. அவைபற்றியும் கூடச் சொல்ல முடியும், அதைச் சொல்லாமல் தவி(ர்)ப்பதற்கும் காரணங்கள் உண்டு.

:)

கோவி.கண்ணன் said...

//ஆனா மனக் கஷ்டம்?
அதுனால இல்லை-ன்னு உறுதியாச் சொல்ல முடியுமா?
//

ஜாலி ட்ரிப் போகிறவர்களும் இருக்கிறார்கள், எனவே மனக்கஷ்டம் மட்டும் தான் காரணமென்று சொல்ல முடியாது. ஆனால் ஜாலிட்ரிப், மனக்கஷ்டம் மற்றும் அவர்களாக அங்கே விரும்பிச் செல்லும் வேறு சில காரணங்கள், வேண்டுதல் நிறைவேறிய காரணங்கள் இவை எதுவாக இருந்தாலும் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையிலும் முன்பைக் காட்டிலும் கூட்டம் மிகுதிதான். ஆனால் அதற்கான (மறைமுக) காரணங்கள் வேறு.

:)

ஷைலஜா said...

//ஜனாகர்ஷ்ணம் (ஜன+ஆகர்ஷணம்=மக்கள் ஈர்ப்பு),
தனாகர்ஷணம்(தன+ஆகர்ஷணம்=செல்வ ஈர்ப்பு)
என்ற இரண்டு மந்திர யந்திரங்களைச் செய்வித்தார். தாமே யோகத்தில் இருந்து பெருமாளின் திருவடிகளில் ஸ்தாபிக்கச் செய்து விட்டார் ஜகத்குரு!//

ஜகத்குருவுக்குத்தான் எத்தனை பரந்தமனது!

//என்னிக்குமே உழைப்புக்கு ஏத்த கூலி தான்! யந்திரமும் இல்ல! மந்திரமும் இல்ல! தெரிஞ்சிக்கோ"-ன்னு சிரிச்சிக்கிட்டே சொன்னாரு!

//


>>மாற்றுக்கருத்தே இல்லை

//
வேங்கடவனுக்கு மட்டும் "அளவுக்கு அதிகமான" தயை இருக்கக் காரணம் என்ன?
தனியாகத் தாயார் சன்னிதி கிடையாது. அவனோடவே அகலகில்லேன் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா-ன்னு வீற்றிருக்கிறாள்!
அதனால் தான் அவன் ஸ்ரீ-நிவாசன்! திரு-மால்!
//

தேசிகரின் தயாசதகம் இதற்கு இன்னும்விளக்கம் அளிக்கும். நீங்க சொன்னதும் அருமை.

//காப்பாற்று!
தேவையில்லாத பற்றை விலக்கி விலக்கிக் காப்பாற்று!
மற்றை நம் காமங்களை மாற்றி மாற்றிக் காப்பாற்று!
பரயா க்ருபயா "பரிபாஹி" ஹரே!

//

>>>>பரிபாஹிக்கு விளக்கம் மிக அற்புதம்.


//நாராயண" என்னும் பதம், வைணவப் பெயர் போலவே நமக்குப் பழகி விட்டது! ஆனால், வைணவர்கள் மட்டுமே அதற்கு உரிமையும் கொண்டாட முடியாது! அத்தனை ஆச்சாரியர்களும் ஏகமனதாகச் சொன்ன பரப்பிரும்ம வாசகம் அது தான் என்பதில் ஐயமில்லை!
//

>>>நாராயணப்ரித்யர்த்தம் இதனால்தான்!



//ஸ்ரீபாஷ்யம் எழுவதற்குக் காரணமான தலம் திருமலை! அதனால் தான், இந்தத் தோத்திரத்தில்.. "பர" தேவ தயா கதி தாந் நிகமை: என்று வருகிறது!

நாமும் ந பரம் கலயே = (உன்னையன்றி) வேறு ஒரு பரம், பற்றுதல் எனக்கு இல்லை!
புகல் ஒன்று இல்லா அடியேன், உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே! - என்று புகுவோம் வாருங்கள்!

>>>வந்துவிட்டோம் முதலில்பந்தலுக்கு அப்புறம் மாதவனின் மகாசந்நிதிக்கு ...என்னைமாதிரி
சாமான்யர்களும் எளிதில்புரிஞ்சிக்கிறமாதிரி எழுதுவது ரவியின் சிறப்புத்தனமை அது இதிலும் இருக்கிறது.
வாழ்கபல்லாண்டு!

துளசி கோபால் said...

இன்னும் பதிவை முழுசாப் படிக்கலை. இது முதல் வரிக்கு மட்டும்.

அதென்ன 'திரித்திரன்' னு திரிச்சுக் கூறுவது?

துளசி கோபால் said...

கூடவே தாயார் இல்லைன்னா ( திருமார்புறையும் அம்மணியை இங்கே கொஞ்சம் மறந்துட்டு) ஐயாவுக்குத் தாராளமனசு வந்துரும்.

தங்கமணி ஊருக்குப்போயிட்டான்னு ரங்கமணிகள் அடிக்கும் கூத்தே சாட்சி.

அம்மா இருந்தாக் கவனிச்சுப் பார்த்து....இன்ன இன்னானுக்குக் கொடுக்கலாம். இவன் துஷ்டை.... கொடுக்கப்பிடாதுன்னு கட்டுபாடு செய்வாளா இருக்கும்.

பெண்களுக்கு இந்த (ஷ்ரூட்னஸ்) கவனித்துப் பார்க்கும் குணம் இயற்கையாவெ இருக்கு.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//துளசி கோபால் said...
இன்னும் பதிவை முழுசாப் படிக்கலை//

இன்னிக்கி உண்டியல் எண்ணும் பொறுப்பு உங்க கிட்ட டீச்சர்! பொக்கிஷாலு சாவி பத்திரம்! :)

//அதென்ன 'திரித்திரன்' னு திரிச்சுக் கூறுவது?//

மாத்திட்டேன், மாத்திட்டேன்!
அது எப்படித் தான் இந்த டீச்சர் கண்ணுல மட்டும் ஆன்ஸர் பேப்பர் அராஜகம் எல்லாம் படுதோ தெரியலை! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// துளசி கோபால் said...
கூடவே தாயார் இல்லைன்னா ( திருமார்புறையும் அம்மணியை இங்கே கொஞ்சம் மறந்துட்டு) ஐயாவுக்குத் தாராளமனசு வந்துரும்//

தாயார் இல்லீன்னா தாராள மனசு தன் மேல தான் வரும்! பார்ட்டி & பீட்சாவுக்கு! அடுத்தவங்க மேல தாராள மனசு வரும்-ங்கறீங்க? :)

//தங்கமணி ஊருக்குப்போயிட்டான்னு ரங்கமணிகள் அடிக்கும் கூத்தே சாட்சி//

டீச்சர் என்னைய திட்டலைப்பா! :)
கொத்ஸ், உங்களுக்குத் தெரியுதா யாரைத் திட்டுறாங்க-ன்னு? :)

//அம்மா இருந்தாக் கவனிச்சுப் பார்த்து....இன்ன இன்னானுக்குக் கொடுக்கலாம். இவன் துஷ்டை.... கொடுக்கப்பிடாதுன்னு கட்டுபாடு செய்வாளா இருக்கும்//

அச்சச்சோ!
துஷ்டைக்கும் போனாப் போவட்டும்-ன்னு இரக்கம் காட்டுறவளாச்சே அம்மிணி!

//பெண்களுக்கு இந்த (ஷ்ரூட்னஸ்) கவனித்துப் பார்க்கும் குணம் இயற்கையாவெ இருக்கு//

டீச்சர் இப்ப யாரையோ புகழறாங்க-ன்னு மட்டும் புரியுது! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இப்போ கொஞ்ச நேரத்துக்கு நான் கோவி அண்ணா இஷ்டைல்-ல பேசப் போறேன்!
//கோவி.கண்ணன் said...
எனது பதிவில் நான் எழுதியது பகுத்தறிவு காரணங்கள் மட்டுமே, உண்மையான காரணங்கள் உண்டு.//

அப்போ பகுத்தறிவு வேற, உண்மை வேற-ன்னு சொல்ல வரீங்க! :)
அடப்பாவமே, உங்களையும் கன்வர்ட் பண்ணிட்டாங்களா? :)

//திருப்பதியில் கூட்டம் கூடுவது போலவே, ஐயப்பனுக்கு பிரம்மச்சாரிய விரதத்துடன் கூடும் கூட்டமும் மிகுந்திருக்கிறது. அதற்கான காரணங்களும் கூட மிகவும் சிறப்பானவை//

ஒங்க லேட்டஸ்ட் பதிவைப் படிச்சாச்சி-ன்னு மட்டும் சொல்லிக்கறேன்! மீதியைச் செல்வன் பாத்துப்பாரு! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவி.கண்ணன் said...
ஜாலி ட்ரிப் போகிறவர்களும் இருக்கிறார்கள், எனவே மனக்கஷ்டம் மட்டும் தான் காரணமென்று சொல்ல முடியாது//

மிகவும் சரி!
நான் எப்பமே ஜாலி ட்ரிப் தான்! :)
திருப்பதில ஏடுகொண்டல வாடா, வேங்கடரமணா-ன்னு ஒருத்தர் கூவிட, நான் அரோகரா-ன்னு முடிச்சேனாம் சின்ன வயசுல!

அப்படியே திருத்தணீல, வெற்றி வேல் முருகனுக்கு-ன்னு கூவியவுடன், கோவிந்தா கோவிந்தா என்பேனாம்!

//ஆனால் ஜாலிட்ரிப், மனக்கஷ்டம் மற்றும் அவர்களாக அங்கே விரும்பிச் செல்லும் வேறு சில காரணங்கள், வேண்டுதல் நிறைவேறிய காரணங்கள் இவை எதுவாக இருந்தாலும்//

நீங்களே காரணத்தை எல்லாம் லிஸ்ட்டு போட்டுட்டீங்க!
கோயிலுக்கு, சரி பதிவை ஒட்டியே பேசுவோம், திருப்பதிக்கு மக்கள் எதுக்காக எல்லாம் போறாங்க?

மேற்சொன்ன காரணங்கள் இல்லாம,
நம்ம பையன் முகத்தைப் பாத்து நாளாச்சே! போயி பார்ப்போம்-ன்னு யாருமே போறதில்லையா?

//மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையிலும் முன்பைக் காட்டிலும் கூட்டம் மிகுதிதான். ஆனால் அதற்கான (மறைமுக) காரணங்கள் வேறு//

அதான் சொன்னா பகுத்தறிவாளர்கள் கோபிச்சிப்பாங்க-ன்னு பயப்படறீங்களே-ண்ணா! அப்படின்னா உண்டியல் விஷயமாத் தான் இருக்கும்! அவிங்க காசுக்கு மதிப்பு கொடுக்கறவங்க! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஷைலஜா said...//

தமிழ்மண நட்சத்திரமே வருக!
உங்க நட்சத்திர வாரத்தை என் பதிவில் சூப் சாப்பிட்டு முடிச்சி வைங்க! :)

//ஜகத்குருவுக்குத்தான் எத்தனை பரந்தமனது!//

அவர் சைவர் என்றாலும், பெருமாளிடம் ஓரவஞ்சனை காட்டிட்டாரு-க்கா! :)

//தேசிகரின் தயாசதகம் இதற்கு இன்னும்விளக்கம் அளிக்கும். நீங்க சொன்னதும் அருமை//

தயா சதகம் பற்றி யாராச்சும் ஒரு பதிவிட்டா எவ்ளோ நல்லா இருக்கும்!

//பரிபாஹிக்கு விளக்கம் மிக அற்புதம்//

நன்றிக்கா!

//நாராயண ப்ரித்யர்த்தம் இதனால்தான்!//

உம்ம்ம். நாராயண ஸ்மிருதி என்று சங்காராச்சாரியார்கள் கையொப்பாம் இடுகிறார்கள்!
சைவ சிந்தாந்த தேசிகர்கள், குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் நாராயணப் படி அளந்து என்று சொல்லித் தர்மங்களைச் செய்கிறார்கள்!

//வந்துவிட்டோம் முதலில் பந்தலுக்கு அப்புறம் மாதவனின் மகா சந்நிதிக்கு ...//

இது பந்தல் இல்லீக்கா! அவுட் ஆஃப் பந்தல்! அதான் அடக்கி வாசிக்கறேன்! :)

//என்னைமாதிரி
சாமான்யர்களும் எளிதில்புரிஞ்சிக்கிறமாதிரி எழுதுவது ரவியின் சிறப்புத்தனமை
அது இதிலும் இருக்கிறது.
வாழ்கபல்லாண்டு!//

ஹா ஹா ஹா
சாமான்யன் சாமன்யமாத் தான் எழுத முடியும்! அதான் அப்படி-க்கா!
நன்றி! நன்றி! நன்றி நட்சத்திரமே! இந்தாரும் ஃபார் ஏ சேஞ்ச்...லட்டு! :)

கோவி.கண்ணன் said...

//நீங்களே காரணத்தை எல்லாம் லிஸ்ட்டு போட்டுட்டீங்க!
கோயிலுக்கு, சரி பதிவை ஒட்டியே பேசுவோம், திருப்பதிக்கு மக்கள் எதுக்காக எல்லாம் போறாங்க?//

நான் லிஸ்ட் போட்டது வெளிப்படையான காரணங்கள் மட்டுமே. திருப்பதிக்கு மக்கள் எதுக்காக போகிறார்கள், இந்த நூற்றாண்டில் சிறுகோவில்களின் பெருக்கம் வெறும் மக்கள் தொகை அடிப்படையில் தேவையின் காரணமாகவும், துன்பம் மிகுதியானதால் மட்டும் வந்ததா ? அல்லது மூட நம்பிக்கை பெருத்துவிட்டதன் அடையாளமா ?

மூடநம்பிக்கையுடன் கோவில் பெருக்கத்தை நான் தொடர்பு படுத்த மாட்டேன். அவை ஒரு கோணம் மட்டுமே.

ஆனாலும் வேறு சில சிறப்பான காரணங்கள் இருக்கிறது. :)

ஷைலஜா said...

துளசி கோபால் said...
இன்னும் பதிவை முழுசாப் படிக்கலை. இது முதல் வரிக்கு மட்டும்.

அதென்ன 'திரித்திரன்' னு திரிச்சுக் கூறுவது?

10:11 PM,
>>>>>திரித்திரன் தான் சரியோன்னு நினச்சி ஆன்மீகசூப்பர் சறுக்குவாரோன்னு கேக்காம இருந்துட்டேனே ....டீச்சர் வாழ்க!!

?//பெண்களுக்கு இந்த (ஷ்ரூட்னஸ்) கவனித்துப் பார்க்கும் குணம் இயற்கையாவெ இருக்கு.

10:24 PM, November
//>>>>துள்சிமேடம் எங்க வாயக்காட்டுங்க என்பதிவுல கொடுக்காம போன மைபா இந்தாங்க வாங்கிக்குங்க!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஷைலஜா said...
10:11 PM,
திரித்திரன் தான் சரியோன்னு நினச்சி ஆன்மீகசூப்பர் சறுக்குவாரோன்னு கேக்காம இருந்துட்டேனே ....டீச்சர் வாழ்க!!//

யக்கா...எப்படிக்கா இப்படி? :)
டீச்சர் ஸ்பெல்லிங் மிஷ்டேக்கு எல்லாம் அரை மார்க் கட் பண்ணுவாங்க! அந்தப் பயம் தான்!

ஆனா சமாளிப்ஃபிகேஷன்ஸ் பண்ணனும்-னா, இதோ...
திரித்திரன் என்றால் திரி-திரன்...மூன்றானவன்! இயல்,இசை,சினிமா-ன்னு மூன்றான திரித்திரன்-ன்னும் சொல்லலாம்! :))

//பெண்களுக்கு இந்த (ஷ்ரூட்னஸ்) கவனித்துப் பார்க்கும் குணம் இயற்கையாவெ இருக்கு.

எங்க வாயக்காட்டுங்க என்பதிவுல கொடுக்காம போன மைபா இந்தாங்க வாங்கிக்குங்க!!//

ஒன்னா சேந்துக்குவீங்களே! :)
கவனித்துப் பாக்கும் குணம் இதானா? வந்தவங்களை நல்லா கவனிச்சி, பாத்து அனுப்பறீங்க! :)

Anonymous said...

:-)
எனக்கு பெர்மூடா முக்கோணத்தைப் பற்றி ஒரு சந்தேகம். ஆனால், அதைச் சொல்ல மாட்டேன். அதைச் சொன்னால், அது தப்பு என்று நீங்கள் நீருபிக்கக் கூடும். நிரூபிக்காமலும் இருக்கலாம். அப்படியே நிரூபித்தேன் என்று நீங்கள் நினைத்தாலும், அது நிரூபணம் என்று நான் ஒப்புக் கொள்வேனோ என்னவோ? ஆனால், நான் சொல்லாமல் இருப்பதால், எனக்கு அந்த சந்தேகம் இருக்கிறது என்று இப்போது எல்லாருக்கும் தெரியும்.

ஆமா, உங்களுக்கு இருப்பது எக்கச்சக்க பொறுமையா, எக்கச்சக்க நேரமா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Anonymous said...
:-)
எனக்கு பெர்மூடா முக்கோணத்தைப் பற்றி ஒரு சந்தேகம்//

யாருங்க நீங்க?
திருப்பதி உண்டியலுக்கும் பெர்மூடா முக்கோணத்துக்கும் கனெக்சன் கொடுக்கறது? :))

//அதைச் சொன்னால், அது தப்பு என்று நீங்கள் நீருபிக்கக் கூடும். நிரூபிக்காமலும் இருக்கலாம்//

இப்படி ஓவரா எல்லாம் பயப்படக் கூடாது! சும்மா சொல்லுங்க! :)

//ஆமா, உங்களுக்கு இருப்பது எக்கச்சக்க பொறுமையா, எக்கச்சக்க நேரமா?//

கிழிஞ்சுது கிருஷ்ணகிரி!
ஒடைஞ்சது ஒக்கனேக்கல்!

நேரமா? அது இருந்தா இந்நேரம் நண்பர்கள் பதிவுக்கு எல்லாம் போயி பின்னூட்டம் போட்டிருப்பேனே! இருக்குற வேலையில் படிக்கறதோட சரி இப்பல்லாம் :)

நேரம் என்பதற்கு முன்னாடி ஒன்னு சொன்னீங்க பாருங்க! அது தான் என் கிட்ட இருக்கும் போதைப் பழக்கம்! :)

கோவி.கண்ணன் said...

//:-)
எனக்கு பெர்மூடா முக்கோணத்தைப் பற்றி ஒரு சந்தேகம். ஆனால், அதைச் சொல்ல மாட்டேன். அதைச் சொன்னால், அது தப்பு என்று நீங்கள் நீருபிக்கக் கூடும். நிரூபிக்காமலும் இருக்கலாம். அப்படியே நிரூபித்தேன் என்று நீங்கள் நினைத்தாலும், அது நிரூபணம் என்று நான் ஒப்புக் கொள்வேனோ என்னவோ? ஆனால், நான் சொல்லாமல் இருப்பதால், எனக்கு அந்த சந்தேகம் இருக்கிறது என்று இப்போது எல்லாருக்கும் தெரியும்.

ஆமா, உங்களுக்கு இருப்பது எக்கச்சக்க பொறுமையா, எக்கச்சக்க நேரமா?//

ஆகா...பின்னூட்டம் யாருதுன்னு தெரிஞ்சு போச்சு, ஆனால் சொல்ல மாட்டேன்.

:)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// கோவி.கண்ணன் said...
ஆகா...பின்னூட்டம் யாருதுன்னு தெரிஞ்சு போச்சு, ஆனால் சொல்ல மாட்டேன்.:)//

சொல்ல மாட்டேன், சொல்ல மாடேன்-ன்னு சொல்லும் விரதம் போல் இன்னிக்கி! :)

சரி...பெர்ம்யூடா முக்கோணத்துக்குள்ள போனா என்ன ஆகும்? பதிவு மாயமாகுமா? :)

Raghav said...

அடடா.. சுப்ரபாதம் எல்லாம் பாடி முடிச்சாச்சா.. இப்போ தான் முதல் தடவையா வர்றேன்.. :(

Raghav said...

மிகவும் ரசித்து.. லயித்து படித்தேன். முதல் சில பதிவுகள் மட்டும் படிச்சுருக்கேன்.. எல்லா பதிவுகளையும் படிக்க வேண்டும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Raghav said...
அடடா.. சுப்ரபாதம் எல்லாம் பாடி முடிச்சாச்சா.. இப்போ தான் முதல் தடவையா வர்றேன்.. :(//

முதல் வரவுக்கு நல்வரவு ராகவ்!
அடிக்கடி வாங்க! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Raghav said...
மிகவும் ரசித்து.. லயித்து படித்தேன். முதல் சில பதிவுகள் மட்டும் படிச்சுருக்கேன்.. எல்லா பதிவுகளையும் படிக்க வேண்டும்//

சுப்ரபாதம் முதல் பகுதி மட்டுமே முடிச்சிருக்கேன்.
இப்போ ஸ்தோத்திரம்!
முக்கியமா பரபத்தி-ன்னு ஒன்னு இருக்கு!
அப்புறமா மங்களம் சொல்லி மங்களம் பாடிறலாம்! :)

Anonymous said...

Vanakkam sir,
Really I enjoyed,padithen,padithen,padithen,padithukkonde iruppen,enna solla.
vananguginren, inia anubavam.
like to write more, still dont know how to type in thamizh,sorry.
ARANGAN ARULVANAGA.
ANBUDAN,
k.srinivasan.

சுப்ரபாதம் (தமிழில்):

ஒலிச் சுட்டிகள்!

முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் - நித்ய ஸ்ரீ பாடுவது (Windows Media Player)

நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com
Pics: tirumala-tirupati.com

சுப்ரபாதம் (மூலம்):

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP