Friday, November 14, 2008

சுப்ரபாதம்(34&35) - ஆண்/பெண்களுக்குப் பிடித்தது இராமனா? கண்ணனா??

வேங்கட"ராமன்"-ன்னு பேரு கேள்விப்பட்டு இருப்பீங்க! வேங்கட "கிருஷ்ணன்"-ன்னு பேரும் கேள்விப்பட்டு இருப்பீங்க! இரண்டில் எது சரி? வேங்கடவன் = இராமனா? கண்ணனா?? இரண்டும் வேற வேற அவதாரங்கள்! வேற வேற கால கட்டங்கள்! எப்படி ஒரே நேரத்தில் வேங்கடத்தில் இருக்க முடியும்? வாங்க, இன்னிக்கு சுப்ரபாதம் பார்க்கலாமா?

* பெண்களுக்குப் பிடித்தது யார்? = கண்ணனா? இராமனா??
* ஆண்களுக்குப் பிடித்தது யார்? = இராமனா? கண்ணனா??


இராமன் புனித பிம்பம்! :)
ஆண்கள் இராமனை மதிப்பார்கள்! ஆனால் லயிக்க மாட்டார்கள்!
கண்ணன் மனித பிம்பம்! :)
பெண்கள் கண்ணனில் லயிப்பார்கள்! ஆனால் மதிக்க மாட்டார்கள்!

இந்த ஸ்தோத்திரம் ஆணும் பெண்ணும் பாடுவது போல் இருக்கு பாருங்கள்! பெண் யாரைப் பாடறா, ஆண் யாரைப் பாடுறான்-ன்னும் நீங்களே பாருங்க! லேடீஸ் ஃபர்ஷ்ட்! பெண்கள் பாடுவதைக் கேளுங்கள் :)




(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)
கல வேணு ரவா, வச கோப வதூ
சத கோடி வ்ருதாத், ஸ்மர கோடி ஸமாத்!
ப்ரதி வல்லவிகா அபி மதாத் சுகதாத்
வசுதேவ சுதாந் ந பரம் கலயே!!


கல வேணு ரவா = அருமையான புல்லாங்குழல் (வேணு) ஒலியால்
வச கோப வதூ = வசப்பட்ட கோபி கன்னிகைகள்
சத கோடி வ்ருதாத் = நூறு கோடி பேர் சூழ்ந்துள்ளார்கள்!
ஸ்மர கோடி ஸமாத் = கோடி மன்மதனுக்கு (ஸ்மரனுக்கு) ஒப்பானவனே!

(அப்படி நூறு கோடி பேர் சூழ்ந்தாலும்)
ப்ரதி வல்ல விகா = ஒவ்வொரு ப்ரிய கோபிக்கும்
அபிமதாத் சுகதாத் = அவர்கள் அபிமானித்தாற் போலே சுகமளிப்பவனே!
வசுதேவ சுதாந் = வசுதேவன் மகனே!
ந பரம் கலயே = (உனை அல்லால்) வேறு பரம்/கதி இல்லை!

மன்மதனை, விஷ்ணுவுக்கு மகனாகச் சொல்வார்கள்! மன்மதனுக்கு அனங்கன் என்றும் பெயர்! அதாச்சும் அன்+அங்கம்! உருவம் இல்லாதவன்!
சூப்பர்! உருவ வழிபாடு பிடிக்காதவங்கெல்லாம் இனி மன்மதனைக் கும்பிட்டுக்குங்க-ப்பா! லவ்வுக்கும் லவ்வும் ஆச்சு! ஆன்மீகத்துக்கும் ஆன்மீகமும் ஆச்சு! :)

ஆண்டாளும் மார்கழி நோன்பு முடிச்சி, தையொரு திங்களில், மன்மதனைத் தான் வணங்குகிறாள்! "அனங்க தேவா, உய்யவும் ஆங்கொலோ என்று சொல்லி உன்னையும் உம்பியையும் தொழுதேன்" என்று பாடுகிறாள்!

நெற்றிக் கண்ணால் எரித்த பின்னர், சிவபெருமானால் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்ட மன்மதன், உருவம் இல்லாமல் இருக்கிறான்! உருவம் இல்லாது இருக்கும் போதே, காதலில் இத்தனை பேரைப் பாடாய்ப் படுத்துகிறான்! இன்னும் உருவமும் இருந்து விட்டால்? அதுவும் மன்மதனைப் போலக் கோடி அழகர்கள் தோன்றி விட்டால்?

அதென்ன தோன்றி விட்டால்? அதான் தோன்றியாகி விட்டதே!....அவன் தான் கள்ளச் சிரிப்பழகன், கருப்பழகன், எழுகமலப் பூவழகன், கண்ணன்! அவனைச் சுற்றிச் சத கோடி கோபியர்கள்! இருவரையும் கட்டி வைப்பது புல்லாங் குழலின் பிரணவ நாதம்!

சரி, கோடி கோபியர்கள் சூழ்ந்தால் ஒரே ஒரு கண்ணன் என்ன செய்ய முடியும்? அத்தனை பேரும் அவரவர் அபிமானித்தாற் போலே, அவரவர்க்கு அவ்வவ்வாறு காட்சி தருகிறான் இறைவன்! இந்தக் க்ளோனிங் எஃபெக்ட் வேறு எந்த அவதாரத்திலும் இல்லை! :)

எப்படி H2O என்பதில் இரு ஹைட்ரஜன் அணுக்கள் ஒரு உயிர்வளிக்குக் (ஆக்சிஜன்) கட்டப்பட்டிருக்கு? Single Covalent Bond என்பதாலே! இது எத்தனை ஹைட்ரஜன் அணுக்களையும் அதனதன் தன்மைக்கு ஏற்ப ஏற்றுக் கொள்ளக் கூடியது! Thatz why we have more covalent bonds than ionic bonds.

அதனால் தான் H2O என்னும் நீருக்கு அனைத்தும் கரைக்க வல்ல குணம் (Universal Solvent)! நாரணம் என்பதும் இந்த நீர் தான் என்பதை முன்னரே சுப்ரபாத-தீர்த்தப் பதிவிலே சொல்லி இருக்கேன்! இந்த வேதியியல் நீர் என்பதைக் கொண்டே பல நுட்பமான படைப்புத் தத்துவங்களை அறிவியல் பார்வையில் புரிந்து கொள்ள முடியும்!

எப்படி பல ஹைட்ரஜன் அணுக்கள் ஒரு உயிர்வளிக்குக் கட்டப்பட்டிருக்கோ, அதே போல பல ஆத்மாக்களும் ஒரே பரம்பொருளுடன் கட்டப்பட்டு இருப்பது பிரணவ நாதம் என்ற சப்த மாத்திரத்தினால்! படைப்புத் தொழிலைப் பிரணவம் கொண்டு செய்கிறேன் என்று பிரம்மன் கூறுவதும் இதனால் தான்! பிரணவப் பொருளை முருகன் சிவனார்க்கு உரைப்பதும் இப்படித் தான்! முருகன் ஈசனின் காதில் சொன்னதை, அடியேன் உங்கள் காதிலும் சொல்கிறேன்! - மாதவிப் பந்தலில் பின்னொரு நாள்! :)

அது போல ஒரே இறைவன், பல கோபிகைகளுக்கும், பலப்பல கண்ணன்களாய்த் தோற்றம் காட்டுகிறான்! இப்படி மாயம் செய்யும் வசுதேவனின் மகனே, வாசுதேவா! உனை அல்லால் எங்களுக்கு வேறு பரம்/கதி இல்லை!

(வசு+தேவன்=செல்வம்+மிகுந்தவன்! வசுதேவன் வேறு! வாசுதேவன் வேறு!
வசுதேவன் மகன் வாசுதேவன் என்று கொண்டாலும், இறைவனுக்கு வாசுதேவன் என்பது மூலப்பெயர்! அவதார காலங்களை எல்லாம் கடந்த பெயர் அது! பர-வாசுதேவன்!)


அடுத்து ஆண்கள் பாடுவதைக் கேட்போமா? அவர்களுக்கு இராமனைத் தானே பிடிக்கும்! எல்லாக் கோபிகைகளையும் அவனே எடுத்துக் கொள்ளாமல், அவன் ஏக பத்தினி விரதனாய் இருப்பதால், எத்தனை ஆண்களுக்குப் போட்டி இல்லாமற் போகிறது! :)
நம் பதிவுலக நண்பர்களில் யாரெல்லாம் கண்ணன்? யாரெல்லாம் இராமன்?? சொல்லுங்க பார்ப்போம்! ஹிஹி! வாங்க பாட்டுக்குப் போவோம்!
அபி ராம, குணா கர, தாசரதே!
ஜக தேக தநுர் தர, தீர மதே
ரகு நாயக, ராம, ரமேச, விபோ!
வரதோ பவ! தேவ, தயா ஜலதே


அபி ராம = எல்லாரும் மிக விரும்பும் (ரமிக்கும்),
குணா கர = குணக் கொழுந்தே!
தாசரதே = தசரதன் புதல்வா!
ஜகத் ஏக = உலகிலேயே நீ தான்
தநுர் தர = கூர் வில்லாளன்!
தீர மதே = கூர் மதி கொண்டன்!

ரகு நாயக = ரகு குலக் கொழுந்தே!
ராம = ராமா (ராம என்னும் தாரக மந்திரம்)
ரமேச = ரமா என்னும் சீதைக்குத் தலைவா!
விபோ = சர்வமும் வியாபித்து இருப்பவனே!
வரதோ பவ = (எங்களுக்கு) என்றும் அருள் செய்வாய்! - (விஜயீ பவ என்பதைப் போலே, வரதோ பவ என்று கேட்கிறார்கள் அடியவர்கள்)
தேவ, தயா ஜலதே = இறைவனே! கருணைக் கடலே!

ராமா-ரமா - இதன் நுட்பத்தைத் தெரிஞ்சிக்கணும்!
ரமித்தல் என்றால் விரும்புதல்!
* பலராலும் ரமிக்கப்படுபவன் (விரும்பப்படுபவன்) = ராமன்!
* அவனை ரமிப்பவர்கள் = ரமா!

ரமா என்பது பொதுவாக அன்னையைக் குறிக்கும் சொல்! மகாலக்ஷ்மி, சீதை!
ஆனால் ரமிக்கும் அடியவர்களையும் ரமா என்று குறிக்கும் வழக்கம் உண்டு!
அவன் ராமன்! நாம் ரமா!

இந்த ராமம் என்பது வெறும் இராமவதாரம் மட்டுமன்று! சீதையின் கணவனைக் குறிக்கும் சொல் மட்டுமல்ல!
வாசுதேவன் என்பதைப் போலவே ராம என்பதும் பொதுவான இறை நாமம் தான்! மிகவும் நுட்பமான நாமம்! இன்னும் ஒரு படி மேலே! நுட்பமான மந்திரம்!

ராம - என்பதற்குத் தாரக மந்திரம் என்று பெயர்! இந்தத் தாரக மந்திரத்தைத் தான் காசியில் முக்தி அடையும் உயிர்களின் செவிகளில், சிவபெருமான் ஓதுகிறார்!
நமோ நா"ரா"யணாய ("ரா") + ந"" சிவாய ("ம") = "ராம"
இது தான் ராம என்னும் தாரக மந்திர மூலப் பொருள்!

* ம-வை எடுத்து விடுங்கள்! ந+சிவாய என்று ஆகி, மங்களம் இல்லை என்று ஆகி விடும்!
* ரா-வை எடுத்து விடுங்கள்! நமோ நாணாய என்று ஆகி, நீர் ஆதாரமே போய் விடும்!
ஆக "ராம" என்பது தான் இரு பெரும் மந்திரங்களையும் ஒரு சேரக் கட்டுகிறது!

அதனால் தான் சஹஸ்ரநாமத்தில் இதன் பொருள் பெரிதாக வைத்துப் பேசப்படுகிறது! ஈசன் பார்வதிக்கு உபதேசித்து அருள்கிறார்!
ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோ ரமே!
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வராணனே!!


இதன் பொருளையும் நுட்பத்தையும் அன்பர்கள்/அடியவர்கள் யாரேனும் இங்கு பகிர்ந்து கொள்ளுமாறு விண்ணப்பித்துக் கொள்கிறேன்!



இப்படித் திருவேங்கடமுடையான் இராமனாகவும் கண்ணனாகவும் மாறி மாறிக் காட்சி கொடுக்கிறான்!
* இன்றும் வேங்கடவன் திருமேனித் தோள்களிலே, அம்புறாத் தூணி கட்டப்பட்ட தழும்புகளும், நாணேற்றிய தோள் தழும்பும் இருக்கும்!
* இன்றும் திருவயிற்றுப் பகுதியிலே, உரலில் பிணைக்கப்பட்ட தாம்புக் கயிற்றுத் தழும்புகளும் இருக்கும்!

அதனால் தான் நம்மாழ்வார்,
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவாவோ,
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ,
திணர் ஆர் மேகம் எனக் களிறு சேரும் திருவேங் கடத்தானே,
திணரார் சார்ங்கத்து உன் பாதம் சேர்வது அடியேன் எந்நாளே?
* மரம் ஏழ் துளைத்து, இராமனாய் வில் சுமந்ததையும்,
* மரம் இரண்டு புகுந்து, கண்ணனாய், வயிற்றில் உரல் தேய்ந்ததையும்
,
என்று வேங்கடவனுக்கு மட்டும் இணைத்துப் பாடுகிறார்!

மலையப்ப சுவாமி = அனுமந்த வாகன இராமனாய்! காளிங்க நடனக் கண்ணனாய்!

இப்படி
வேங்கட"ராமன்"-ன்னு என்றும்
வேங்கட "கிருஷ்ணன்" என்றும்,

வெவ்வேறு யுகக் காட்சிகளை, ஒரே சமயத்தில் காட்டி,
தரிசன மகா பாக்கியம் செய்து வைக்கிறான் திருமலை ஆனந்த நிலையத்தில்!

வேங்கட-கிருஷ்ணா, வேங்கட-ரமணா, கோவிந்தா! கோவிந்தா!
திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்!! ஹரி ஓம்!

22 comments:

பத்மா அர்விந்த் said...

சஹஸ்ரநாமம் முழுதும் சொல்ல முடியாதவர்கள் அல்லது சொல்ல தெரியாதவர்கள் எப்படி விஷ்ணுவின் அருளை பெற எளிய வழியை பார்வதி கேட்க ராம நாமம் சொன்னால் போதும் என்பதுதானே பொருள்? இந்த ஸ்லோகம் மூன்று முறை வரும்.

ஷைலஜா said...

அருமையான பதிவு..ஆழ்ந்து லயித்துப்படிச்சேன்..சம்ஸ்ருத வார்த்தைகளுக்கான தமிழ் அர்த்தங்கள் அற்புதம்...சிற்றஞ்சிறுகாலே எழுந்ததும் கிடைத்த பிரசாதம் இது..இன்னும் விவரமாக பதிவு பற்றி கருத்து சொல்ல காலைபானம் அருந்துவருகிறேன்!!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

எல்லாத்தை விட இந்திய மூவர்ணத் திருக்கொடி நிலவில் பறப்பதும், கொடி வர்ணம் நிலவில் பூசப்பட்ட செய்தியும் இப்ப தான் பார்த்தேன்! மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! Am so happy! :))))

CA Venkatesh Krishnan said...

அருமையான பதிவு.

மிக்க நன்றி,
வெங்கடேஷ் கிருஷ்ணன்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// பத்மா அர்விந்த் said...
சஹஸ்ரநாமம் முழுதும் சொல்ல முடியாதவர்கள் அல்லது சொல்ல தெரியாதவர்கள் எப்படி விஷ்ணுவின் அருளை பெற எளிய வழியை பார்வதி கேட்க ராம நாமம் சொன்னால் போதும் என்பதுதானே பொருள்?//

அப்படித் தான் நினைக்கிறேன் பத்மா!
குமரன் வந்து மேலதிக விளக்கம் கொடுப்பாரு! பார்க்கலாம்!

//இந்த ஸ்லோகம் மூன்று முறை வரும்//

ஆமா, மூன்று முறை ஓதுவார்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஷைலஜா said...
அருமையான பதிவு..ஆழ்ந்து லயித்துப்படிச்சேன்..//

திருவேங்கடப் ப்ரியா ஆகிட்டீங்களா-க்கா? :)

//சம்ஸ்ருத வார்த்தைகளுக்கான தமிழ் அர்த்தங்கள் அற்புதம்...//

இது குழு முயற்சி-க்கா!
குமரன் மற்றும் மெளலி அண்ணாவுக்கும் மை.பா கொடுங்க!

//சிற்றஞ்சிறுகாலே எழுந்ததும் கிடைத்த பிரசாதம் இது..இன்னும் விவரமாக பதிவு பற்றி கருத்து சொல்ல காலைபானம் அருந்துவருகிறேன்!!!//

நானே இன்னும் ஆடியோ சேர்க்கலை! வேகமாக இட்ட பதிவு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இளைய பல்லவன் said...
அருமையான பதிவு.//

நன்றி வெங்கடேஷ் கிருஷ்ணன்!
உங்க பேர்லயும் வேங்கட கிருஷ்ணனா? சரியாத் தான் வந்திருக்கீங்க பதிவுக்கு! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கேட்டுக்கொண்ட நண்பர்கள் பிசியாக இருக்கின்றார்கள் போலும்! இதோ அடியேனே சொல்லிவிடுகிறேன்!

ஈஸ்வரோ உவாச = சிவனாத் சொல்வது:
ஸ்ரீ = திருமகள் சொரூபமாய், மங்களகரமாக விளங்கிடும்
ராம ராம ராம = இந்த (ரமா-ராம) சம்பந்தமான "ராம ராம ராம" என்னும் மந்திரம்
இதி = இதுவே!

ரமே = நான் ரமிக்கும்(மிகவும் விரும்பும்)
ராமே = ராம என்னும் மந்திரமே
மனோ ரமே! = மிகவும் அழகான-ஆனந்த மயமானது!

சஹஸ்ர நாம தத்= (இறைவனின்) ஆயிரம் நாமங்களான இத்தனைக்கும்
துல்யம் = ஒப்பானது
ராம நாம = ராம என்னும் இந்த மந்திர நாமம்

வர அனானே = அழகுத் திருமுகம் கொண்ட மங்கையே(பார்வதியே)!

கோவி.கண்ணன் said...

உள்ளேன் ஐயா

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவி.கண்ணன் said...
உள்ளேன் ஐயா//

ஆகா! எங்கு உள்ளீர்கள் ஐயா? :)

கோவி.கண்ணன் said...

//ஆகா! எங்கு உள்ளீர்கள் ஐயா? :) //

'நான்' சர்வவியாபி கிடையாது, எனவே எங்கு இருக்க முடியுமோ அங்கு மட்டும் இருப்பேன்.

துளசி கோபால் said...

வீட்டுலே பொம்மனாட்டிக்கு ஆயிரம் வேலை. அவர் பூஜை பண்ண வரார்ன்னா
அவள் எல்லா வேலையையும் கச்சிதமாச் செஞ்சு வச்சுருக்கணும். விளக்கைத் தேய்ச்சு, திரி யிட்டு, எண்ணெய் ஊற்றி, சாமி மாடம் சுத்தம் செஞ்சு கோலம் போட்டு, பூக்களையெல்லாம் பறிச்சு மாலைக் கட்டி, சாம்பிராணிக்கு தேவையான தீக்கங்குளை தயார் செஞ்சு, கைக்கு எட்டும் தூரத்தில் ( இது ரொம்பவே முக்கியம்)சந்தனாதிகளையும், கற்பூர, ஊதுபத்திகளையும் எடுத்து வச்சு ...... எல்லாத்துக்கும் மேலா ஸ்வாமி நைவேத்தியம் தயாரா செஞ்சு எடுத்துவச்சுன்னு.......
ஒரு தப்பும் வராம திவ்யமா 'சேவை' செய்யணும். அய்யா வந்து இருந்த இடத்தில் இருந்தே பூஜை செஞ்சு மங்களம் பாடுவார்.

இத்தனை களேபரத்துலே அவள் தனியா உக்காந்து அரைமணி போல நேரம் செலவு செஞ்சு சகஸ்ரநாமம் பூராவும் சொல்லிண்டிருக்க முடியுமா?

இதோ...பூஜை முடிஞ்சு அவர் பலகாரம் பண்ண வந்துருவாரேன்னு அடுத்த வேலைக்கு அடுக்களைக்கு ஓடணும்.

பொம்பளையோட கஷ்டம் இன்னொரு பொம்பளைக்குத்தானே தெரியும்? அதுதான் பார்வதி கேக்கறாள். அரைமணி நேரம் சாவகாசமா உக்கார நேரமில்லைப்பா. ஆயிரம் பேர் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது. எனக்கோ ஆயிரம் வேலை இருக்கு. சட் புட்னு அரை நிமிஷத்துலே சொல்றாப்புலே சகஸ்ரநாமம் இருக்கா? அதுக்கு ஒரு வழி சொல்லு.

அப்பத்தான் பகவான் சொல்றார், இந்த

ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோ ரமே!
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வராணனே!!

"இதைச் சொல்லிக்கோ. உனக்கு ஆயிரம் பேர் சொன்ன பலன் கிடைச்சுருமுன்னு."

இதை மூணு முறை சொல்லணுமுன்னு யார் சொல்லிவச்சாங்களோ தெரியலைப்பா.

ராமா ன்னு ஒரே ஒரு முறை சொன்னாவே போதும். என்னைப்பொருத்தவரை இதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சது.

கோயில்களைப் பத்தியும் கொஞ்சம் சொல்லணும். ஒருநாள் சாவகாசமாச் சொல்றேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// கோவி.கண்ணன் said...
'நான்' சர்வவியாபி கிடையாது எனவே எங்கு இருக்க முடியுமோ அங்கு மட்டும் இருப்பேன்//

இதுக்குத் தான் அனானி ஆப்ஷன் இல்லீன்னா போலிகளை வச்சிக்கிடனும்-னு சொல்லுறது! சர்வ வியாபியா இருக்குலாம்-ல! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வாங்க டீச்சர்...என்ன இம்புட்டுப் பெரீய்ய்ய்ய பின்னூட்டம்?

//கைக்கு எட்டும் தூரத்தில் ( இது ரொம்பவே முக்கியம்)சந்தனாதிகளையும், கற்பூர, ஊதுபத்திகளையும் எடுத்து வச்சு ......//

அச்சோ...எங்கம்மா இப்படிச் சொல்லிக்கிட்டே தான் பண்ணுவாங்க! அப்பாவுக்கு கைக்கெட்டும் தூரத்துல கரீட்டா வச்சிருக்கணும்! :)
இப்படி வீட்டுக்கு வந்து நேர்-ல பாத்தாப் போல லிஸ்ட்டு போடுறீயளே!

//அய்யா வந்து இருந்த இடத்தில் இருந்தே பூஜை செஞ்சு மங்களம் பாடுவார்//

ஹா ஹா ஹா!

//பொம்பளையோட கஷ்டம் இன்னொரு பொம்பளைக்குத்தானே தெரியும்? அதுதான் பார்வதி கேக்கறாள்//

அடா அடா அடா!
என்னா ஒரு சகஸ்ரநாம பாஷ்யம் எழுதிப் புட்டீங்க! நான் போய் மெளலி அண்ணாவையும் குமரனையும் பொருள் சொல்லுங்க வந்து-ன்னு கேட்டுக்கிட்டுருந்தேனே! :)

பார்வதீ ஓ...பார்வதி! :)

//இதை மூணு முறை சொல்லணுமுன்னு யார் சொல்லிவச்சாங்களோ தெரியலைப்பா//

ஹிஹி! சிவபெருமான் தான்
ஸ்ரீ ராம ராம ராம்-இதி-ன்னு மூனு முறை அவரு தான் சொல்லச் சொல்லுறாரு!

அவரு ராம என்பதைத் தான் மூனு முறை சொல்லச் சொன்னாரு!
நம்பாளுங்க சுலோகத்தையே மூனு முறை-ன்னு ஆக்கிட்டாங்க!

டீச்சர் சுடும் பிரசாதங்களை எல்லாம் மூனு முறை "சேவிக்கணும்"-னு நானும் புதுசா எதுனா கெளப்பி விடலாமான்னு பாக்குறேன்! :))

//ராமா ன்னு ஒரே ஒரு முறை சொன்னாவே போதும். என்னைப்பொருத்தவரை இதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சது//

சூப்பர்!
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்ற இரண்டு எழுத்தினால்!

//கோயில்களைப் பத்தியும் கொஞ்சம் சொல்லணும். ஒருநாள் சாவகாசமாச் சொல்றேன்//

நன்றி டீச்சர்! இங்கேயே வந்து சொல்லீருவீங்களா? சுப்ரபாதப் பதிவை இனி நீங்க போடுங்களேன்! அழைப்பு அனுப்பட்டுமா?

குமரன் (Kumaran) said...

அருமை துளசி அக்கா. ரொம்ப நல்லா இருக்கு உங்க பின்னூட்டம். இடுகைக்குப் பின்னூட்டத்தால அழகா பின்னூட்டத்திற்கு இடுகையால அழகான்னு போட்டியே வைக்கலாம்.

Muthu said...

ஓஷோ விளக்கம் (கண்ணன் - ராமன் - அனுமன் ஒப்பீடு) படிச்சப்புறமா நமக்கு புடிச்சது கண்ணன்தாம்பா !

தூள் KRS !

அன்புடன்
முத்துக்குமார்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
அருமை துளசி அக்கா. ரொம்ப நல்லா இருக்கு உங்க பின்னூட்டம். இடுகைக்குப் பின்னூட்டத்தால அழகா பின்னூட்டத்திற்கு இடுகையால அழகான்னு போட்டியே வைக்கலாம்//

டீச்சரின் பின்னூட்டம் என்றால் சும்மாவா? சுப்ரபாதம் தொடங்கிய போது டீச்சர் இட்ட பின்னூட்டங்களை நினைச்சிப் பார்க்கிறேன்!

குமரன், ஐடியாவுக்கு நன்றி!
அடுத்த புதிரா புனிதமாவில் - புகைப்படம் போலவே - இவை எந்தப் பிரபல பதிவர்களின் பின்னூட்டங்கள்? என்று ஒரு போட்டி வச்சிறலாமா? :)

சரி, சகஸ்ரநாமம் பத்தி ஒன்னுமே சொல்லலையே! பதிவில் பல கேள்விகள் வேற இருக்கு உங்களுக்கு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Muthukumar said...
ஓஷோ விளக்கம் (கண்ணன் - ராமன் - அனுமன் ஒப்பீடு) படிச்சப்புறமா நமக்கு புடிச்சது கண்ணன்தாம்பா !//

அது என்ன ஓஷோ விளக்கம் முத்துக்குமார்?
அதுக்கப்புறம் கண்ணனைப் பிடிக்குதுன்னா இங்கும் அறியத் தாருங்க! :)

குமரன் (Kumaran) said...

ஆண்கள் இராமனை மதிப்பார்கள் ஆனால் லயிக்க மாட்டார்கள்!
பெண்கள் கண்ணனில் லயிப்பார்கள் ஆனால் மதிக்க மாட்டார்கள்!

அப்ப இராமன்கிட்ட லயிக்கிறவங்க யாருமே இல்லையா? கண்ணனை மதிக்கிறவங்க யாருமே இல்லையா? ஓட்டை ஏரணமா இருக்கே? :-)

குமரன் (Kumaran) said...

நீரை வைத்து விளக்கியது நன்றாக இருக்கிறது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
ஆண்கள் இராமனை மதிப்பார்கள் ஆனால் லயிக்க மாட்டார்கள்!
பெண்கள் கண்ணனில் லயிப்பார்கள் ஆனால் மதிக்க மாட்டார்கள்!

அப்ப இராமன்கிட்ட லயிக்கிறவங்க யாருமே இல்லையா? கண்ணனை மதிக்கிறவங்க யாருமே இல்லையா? ஓட்டை ஏரணமா இருக்கே? :-)//

ஹா ஹா ஹா
"பெரும்பாலான", "அருளாளர்கள் அல்லாத பொதுவான" என்று முன்னாடி போட்டுக்குங்க குமரன்! ஓட்டை அடைச்சாச்சா? :)

எக்ஜாம்பிள்:
நான் இராமனைப் போனாப் போகட்டும், நல்ல பையன்-ன்னு மதிப்பேன்! :)
கண்ணனை, டேய் வாடா, ஃபிராடு-ன்னு மதிக்காம உரிமையாக் கூப்புடுவேன்! :)

கண்ணன் பாட்டுல இதைப் பப்ளிக்கா சொல்லிறாதீங்க! உங்கள் மனங்குளிர இரு செவி மீதில் மட்டும் பகர்கிறேன் :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
நீரை வைத்து விளக்கியது நன்றாக இருக்கிறது.
//

ஓ! H2O சொல்றீங்களா குமரன்?
திடீர்-னு தோனியது! சொன்னாப் பொறவு நான் தான் சொன்னேனா-ன்னா எனக்கே ஒரு டவுட்டு!

உ.கு: நண்பன் இங்கு கெமிஸ்டிரி பேராசிரியர் :)

சுப்ரபாதம் (தமிழில்):

ஒலிச் சுட்டிகள்!

முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் - நித்ய ஸ்ரீ பாடுவது (Windows Media Player)

நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com
Pics: tirumala-tirupati.com

சுப்ரபாதம் (மூலம்):

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP