சுப்ரபாதம்(9&10) - நாரதா, ஒனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா?
காலாங்காத்தால வந்துட்டான்-பா கடன்காரன் என்று நம்மில் பல பேர் எத்தனை முறை சலித்துக் கொண்டிருப்போம்! அதுவும் தூங்கி எழுந்து பெட் காபி குடிக்கலாம் என்று வாய்க்கு அருகே லோட்டாவைக் கொண்டு போகும் வேளையில்................நம் முன்னே நாரதர் வந்து நின்றால்?.....
அய்யோ! அவர் கலக்கும் கலகக் காபி, இதை விட படு ஸ்டாராங்கா இருக்குமே! "நாரதா, இன்று உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா" என்று கேட்பார் அல்லவா சிவாஜி, திருவிளையாடல் படத்தில்!
பெருமாள் துயில் எழும் வேளையிலும், அதே போல் கன்-டைமுக்கு வந்து நிற்கிறார் நாரதர். என்ன விஷயமோ?....... பார்ப்போம் வாருங்கள்!
சென்ற பதிவில்
"கிளிகள்" பெருமாளை எழுப்பின; இன்றோ "கிலிகள்" எழுப்ப வந்துள்ளன! :-)
(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)
தந்த்ரீ ப்ரகர்ஷ மதுர ஸ்வநயா விபஞ்ச்யா
காயத்ய நந்த சரிதம் தவ நாரதோபி
பாஷாச மக்ர அசக்ருத் கரசார ரம்யம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்
தந்த்ரீ= தந்தி; ப்ரகர்ஷ = அடர்ந்து நீண்ட
நாரதர் தோளில் எப்போதும் தொங்குமே, அது ஒரு விசேட வீணை. அதற்கு மஹதி என்று பெயர்.
அப்போதே எளிதில் எங்கும் எடுத்துச் செல்லக் கூடிய (மொபைல்) வீணையைக் கையாண்டுள்ளார் பாருங்கள்! ஏன் ஊர் ஊராக எடுத்துச் செல்ல வேண்டும்?
எங்கும் ஒரு இடத்தில் நிலையாக இல்லாது......திரிந்து கொண்டே இருப்பது அவர் பெற்ற சாபம். அது தனிக் கதை! அதற்கு ஏற்றவாறு ஒரு இசைக் கருவி மஹதி!
இன்று நாம் கச்சேரிகளில் காணும் வீணையைத் தோளில் தொங்க விட்டுக் கொண்டு, நடமாட முடியுமா என்று கற்பனை செய்து பாருங்கள்! :-)
அடர்ந்து நீண்ட தந்தி உடைய அந்த வீணையில்...
மதுர ஸ்வநயா விபஞ்ச்யா = மதுரமான உன் நாமங்களை சொல்லிக் கொண்டு
பெருமாள் அழகன் என்பது அனைவரும் அறிந்ததே! அவன் திருநாமம் அவனை விடவும் அழகு, இனிமை! அதனால் தான் அது மதுரமான நாம சங்கீர்த்தனம்...
"நாராயண நாராயண ஜெய கோவிந்த ஹரே!" என்று தான் நாரதர் பொதுவாக மீட்டுவாராம்!
நாராயணா என்ற பெயரைக் கேட்டாலே எரிந்து விழும் இரணியகசிபு கூட, இதன் ராகத்தில் மயங்கினானாம்! நாராயண நாமத்தை வாய் விட்டுப் பாடினால் தானே அவன் வம்பு செய்வான்! பாடாமல், மீட்டினால்?
பாவம், நாரதர் தன் எதிரியின் திவ்ய மங்களத் திருநாமங்களைத் தான் பாடுகிறார் என்று அவனுக்கு தெரியாமால், ஆகா ஓகோ என்று ரசித்தானாம்:-)
காயத்ய நந்த சரிதம் = உன் சரிதத்தை, நந்த கிருஷ்ண சரிதத்தைக், கானம் பாடுகிறார்
தவ நாரதோபி = தவ ஒழுக்கத்தில் சிறந்த நாரத முனி!
நாரதர் சார்பு நிலைகள் எதுவும் அற்றவர். தேவர், அசுரர் என்று எல்லாரும் அவரை வரவேற்று உபசரிப்பார்கள்! தர்மம் தழைக்க, இறைவனின் திருவுள்ளப்படி காரியம் ஆற்றுபவர்!
கலகப் பிரியர் என்று உலகம் பழித்தாலும் புகழ்ந்தாலும், அந்தச் சாபத்தையும் வரமாக ஆக்கிக் கொண்டவர்! நாரதர் கலகம் நன்மையில் தானே முடியும்!
நாரதர் சிறந்த முருக பக்தர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
வள்ளித் திருமணத்தில் பெரும் பங்கு வகிப்பவர்! முருகனுக்கே அறிவுரை சொல்லி, காதல் திருமணம் தான் என்றாலும், வள்ளியின் பெற்றோருடைய ஆசி திருமணத்துக்குத் தேவை என்று வலியுறுத்துவார்.
அப்பேர்பட்ட மகரிஷி, கர்நாடக இசையின் ஆதி குரு,
இதோ.......திருமலையில், எம்பெருமான் சந்நிதி முன்பு, பங்காரு வாகிலி (தங்க வாயில்) நின்று கொண்டு, பூபாள ராகத்தில் கீர்த்தனை மீட்டி, திருப்பள்ளி எழுச்சி பாடுகிறார்!
பாஷா சமக்ரம் அசக்ருத் = முழு வாக்கியங்களை ஒரு முறை மட்டும் பாடி நிறுத்தி விடாது, தொடர்ந்து பாடி
தொடர்ந்து பாடுவது என்பது ஒரு cycle, சுழற்சி! ஓம் நமோ வேங்கடேசாய, என்று ஜபிப்பது போல!
காலையில் நம்மை எழுப்ப, நம் அம்மாவும், "எழுந்துருடா" என்று ஒரு முறை சொன்னால் வேலைக்கு ஆகுதா? தொடந்து ஜபம் செய்கிறார்களே, அது போலத் தான்! :-)
கரசார ரம்யம் = இனிமையான, ரம்மியமான நாரத சங்கீர்த்தனம் கேட்கிறதே!
சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்! திருப்பள்ளி எழுவாயாக!!
அடுத்து...............பாருங்க! ஒரு சூப்பர் இயற்கைக் காட்சி!
ஷாப்பிங் மாலில் இரவு நேரம்! எல்லாரும் வெளியேறி விட்டார்கள் என்று நினைத்துக் கதவடைத்து விட்டார்கள்!
ஆனால் பாவம்...எங்கோ உள்ளே இருந்து கொண்டு, விலை ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்த நீங்கள் மாட்டிக் கொண்டீர்கள்! யாருக்காச்சும் இப்படி நடந்துள்ளதா? :-)
இரவெல்லாம் தனியாக மாட்டிக் கொண்டு, எப்போதடா விடியும் என்று காத்துக் கொண்டிருக்குது ஒரு ஜீவன், திருப்பதி மலையின் மேலே!
யார் அது?.............. பாட்டைப் பாருங்கள்!
ப்ருங்காவலீ ச மகரந்த ரஸா நுவித்த
ஜங்கார கீத நிநதைஸ் சக சேவநாய
நிர்யாத்யு பாந்த சரஸீ கமலோ தரேப்ய
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்
ப்ருங்காவலீ ச மகரந்த
ரஸா நுவித்த = மகரந்த ரசத்தை அனுபவிக்கும் வண்டுகள் சிறைபட்டுக் கிடக்கின்றன
தாமரைப் பூ எவ்வளவு உத்தமமான காதலி! மாலை வேளை ஆனதும், சூரியக் காதலன் போய் விடுவான் என்று தெரிந்து, தானும் தன் இதழ்களை மூடிக் கொள்கிறாள்!
பாவம், இவர்கள் காதலின் ஆழத்தை அறியாத வண்டுகள்,
இன்பமாக தேன் குடித்துக் கொண்டு போதையில் இருக்கின்றன. தாமரை கூம்பிக் கொள்கிறது. உள்ளேயே மாட்டிக் கொண்டன வண்டுகள்!
இன்பம் என்று நினைத்த தேனே எமனாய் ஆகிவிட்டது வண்டுக்கு! இரவெல்லாம் தாமரைச் சிறைவாசம்!....................................
அதே இன்பத் தேன் இப்போது கசக்க ஆரம்பித்து விட்டதோ வண்டுக்கு?
எப்போதடா பகல் வேளை வரும், எப்போது தாமரை விரியும், எப்போது மீண்டு வரலாம் என்று கணக்கு போடத் துவங்கி விட்டது வண்டு! - நம் ஆன்மாவும் இப்படித் தானோ?
ஜங்கார கீத நிநதைஸ்,
சக சேவநாய = ரீங்கார சப்தத்தை இனிய கீதம் போல் எழுப்புகின்றன. உன்னைச் சேவிக்கின்றன!
சிறைவாசத்தால் சித்தம் தெளிந்த வண்டு, உன்னை மனத்துக்குள்ளேயே சேவித்து, ரீங்கார கீதம் பாட....அதற்கும் ஒரு விடியல் பிறக்கிறது!
நிர்யாத்யு பாந்த
சரஸீ கமலோ தரேப்ய = அந்தக் குளத்தில் (சரஸ்) இருக்கும் தாமரை (கமலம்), இதோ விரிகிறது....ஆன்மா விடுகிறது!
விடியல் கிடைக்கிறது, தாமரை விரிகிறது, சிறை ஒழிகிறது, வண்டு பறக்கிறது!
சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்! திருப்பள்ளி எழுவாயாக!!
சு+ப்ரபாதம் = உனக்கும், அதனால் எங்களுக்கும் சுகமான காலைப் பொழுதாக மலரட்டும்.
----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------
17 comments:
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்.
இந்தப் பதிவிலும் தொடர்ந்து எழுதுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் இரவிசங்கர். நிறைய இடைவெளி கொடுக்க வேண்டாம்.
நானும் ஒரு முறை இந்தப் பாடல்களைச் சொல்லிப் பார்த்துக் கொள்கிறேன்.
தந்த்ரீ ப்ரகர்ஷ மதுர ஸ்வனயா விபஞ்ச்யா
காயதி அனந்த சரிதம் தவ நாரத அபி
பாஷா ச மக்ரம் அசக்ருத் கர சார ரம்யம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்
தன்னுடைய மஹதி என்னும் வீணையில் இனிய நாதத்தை எழுப்பிக் கொண்டு உன்னுடைய முடிவற்ற புண்ணிய கதைகளை தன் இனிய குரலால் பாடிக் கொண்டு ஒரு கையை அந்தப் பாடல்களுக்கு ஏற்ப அழகாக அசைத்துக் கொண்டு நாரதரும் வந்துவிட்டார். சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்.
ப்ருங்க ஆவலீ ச மகரந்த ரஸானுவித்த
ஜங்கார கீத நிநதைஸ் ஸஹ ஸேவநாய
நிர்யாத் உபாந்த சரஸீ கமல உதரோப்ய
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்
வண்டுகளின் கூட்டமும் (வரிசையும்) தேனை உண்டு அனுபவித்துவிட்டு குளங்களில் இருக்கும் தாமரைகளின் வயிற்றிலிருந்து (உள்ளிலிருந்து) ஜங்கார கீதம் செய்து கொண்டு உனக்கு சேவை செய்வதற்காக உன் அருகில் வந்திருக்கின்றன. சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்.
அனானி..நிறைய டைப் செய்துள்ளீர்கள்!
இருந்தாலும் உங்கள் பின்னூட்டம் அனுமதிப்பதற்கு ஏற்றதாக இல்லையே!
மன்னிக்கவும்!
// குமரன் (Kumaran) said...
இந்தப் பதிவிலும் தொடர்ந்து எழுதுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் இரவிசங்கர். நிறைய இடைவெளி கொடுக்க வேண்டாம்.//
செய்கிறேன் குமரன்.
வடமொழி அடியேனுக்கு அவ்வளவு தேர்ச்சி அல்ல! அதான் கேட்டு, பார்த்து எழுத வேண்டி உள்ளது!
இத்தொடர் நிறைவுறும் வரை தாங்கள் தொடர்ந்து ஊக்கம் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!
//ப்ருங்க ஆவலீ//
வண்டுகள் கூட்டம்
ஆவளி - கூட்டம், வரிசை....
தீபாவளீ என்பது போல் தானே குமரன்?
//மக்ரம் அசக்ருத் கர சார ரம்யம்//
//ஒரு கையை அந்தப் பாடல்களுக்கு ஏற்ப அழகாக அசைத்துக் கொண்டு//
கரம் அசக்ருத் = கரத்தை அசைத்துக் கொண்டு என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா குமரன்?
நன்றாக இருக்கிறது....குமரன் சொல்லியது போல மிகுந்த இடைவெளி தாராது தொடருங்க
//மதுரையம்பதி said...
நன்றாக இருக்கிறது....குமரன் சொல்லியது போல மிகுந்த இடைவெளி தாராது தொடருங்க//
நன்றி மெளலி சார்.
நிச்சயம் தொடர்கிறேன், உங்கள் அனைவரின் ஆதரவால்!
RAVI SIR.
VANAKKAM.I really enjoyed, like to read more,also please write THIRUPPALLIEZHUCHI, with meanings.
ARANGAN ARULVANAGA.
ANBUDAN
k.srinivasan.
//Anonymous said...
RAVI SIR.
VANAKKAM.I really enjoyed, like to read more//
நன்றி ஸ்ரீநிவாசன் சார்
//also please write THIRUPPALLIEZHUCHI, with meanings.
ARANGAN ARULVANAGA//
சுப்ரபாதம் பதிவுகளில் எங்கெங்கே ஆழ்வாரின் திருப்பள்ளி எழுச்சி எடுத்தாளப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிடுகிறேன்! போன பதிவில் கூட பாளை/கமுகு பற்றி சொல்லி உள்ளேன். பாருங்கள்.
சுப்ரபாதம் முடிந்த பின்னர், திருப்பள்ளி எழுச்சி, தனியாகத் தொடரலாம்!
//அனானி..நிறைய டைப் செய்துள்ளீர்கள்!
இருந்தாலும் உங்கள் பின்னூட்டம் அனுமதிப்பதற்கு ஏற்றதாக இல்லையே!
மன்னிக்கவும்! //
இரவி,
உங்களுக்குக் கூட அனானி பின்னூட்டம் அனுமதிக்க முடியாத படி இருக்கிறதா ? வருத்தம் அளிக்கிறது. அந்த அனானி அண்ணார் திருந்த வேண்டும்.
அந்த 'மால்' மூடியதாலன்றோ, இவ்வண்டுகள் அங்கே இருந்து இப்போது இந்த 'மாலை'ப் பள்ளியெழுப்பும் பாக்கியம் பெற்றன!
குமரன் சொன்னது போல, இடைவெளி இல்லாமல் இதை தொடர்ந்து செய்யுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேஏன்.
//இரவி,
உங்களுக்குக் கூட அனானி பின்னூட்டம் அனுமதிக்க முடியாத படி இருக்கிறதா?//
வாங்க GK...
இது எல்லாம் Professional Hazard மாதிரி! :-)
இருக்கட்டும். நான் திசை மாறிப் போகாமல் இருக்க இவர்களும் உதவுகிறார்களே!
எனக்கு என்ன வருத்தம்-னா பாவம் அவர் ரொம்ப டைப் செய்திருக்காரு! அதை இந்த இடத்தில் வெளியிட என்னால் முடியவில்லை! அந்த ஆற்றல் வீணாவது தான் வருத்தம் அளிக்கிறது!
//VSK said...
அந்த 'மால்' மூடியதாலன்றோ, இவ்வண்டுகள் அங்கே இருந்து இப்போது இந்த 'மாலை'ப் பள்ளியெழுப்பும் பாக்கியம் பெற்றன!//
சொல் விளைக்கும் வித்தகரின் சொல் விளையாட்டுச் சுவை! - வாங்க SK!
//குமரன் சொன்னது போல, இடைவெளி இல்லாமல் இதை தொடர்ந்து செய்யுங்கள்//
அவனருளால் அவ்வண்ணமே செய்கிறேன் SK!
ரவி, சுப்ரபாத சேவை அமிர்தமாக இருக்கிறது.
வழக்கமாகச் சுப்ரபாதம் சொன்னாலும்,
இந்த அர்த்தத்தோடு இத்தனை நுணுக்கத்தோடு பொருள் கேட்டுக் கொள்வதற்கு நன்றாக இருக்கிறது.
மீண்டும் மீண்டும் விழுகிறோம் எழுகிறோம்,வண்டு செய்யும் ரீங்காரம் போல இடையாறாமல் அவனை நினைக்க இந்தப் பதிவுகள் மிகவும் தேவை.
//வல்லிசிம்ஹன் said...
ரவி, சுப்ரபாத சேவை அமிர்தமாக இருக்கிறது.
வழக்கமாகச் சுப்ரபாதம் சொன்னாலும்,
இந்த அர்த்தத்தோடு இத்தனை நுணுக்கத்தோடு பொருள் கேட்டுக் கொள்வதற்கு நன்றாக இருக்கிறது.//
நன்றி வல்லியம்மா!
பொருள் பொருத்தி அதே மெட்டில் கேட்கும் போது, மனத்துக்குள் ரீங்காரம் தான் வல்லியம்மா! எத்தனை காலைப் பொழுதுகள் இதைக் கேட்டு, மகிழ்ந்து, துவங்கியது!
அருமை அருமை...
அதுவும் நாரதரின் பெருமை... அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்!!!
//வெட்டிப்பயல் said...
அருமை அருமை...
அதுவும் நாரதரின் பெருமை... அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்!!! //
தெரியுமே!
பாலாஜிக்கு யாரைப் புகழ்ந்து சொன்னா ரொம்பப் பிடிக்கும்-னு! :-)
நாரதா! நாரதா!
Post a Comment