Friday, August 24, 2007

சுப்ரபாதம்(15) - மலைகள் ஏழும், மேய்க்கும் மேனேஜரும்!

திருமலையில் நிஜமாலுமே ஏழு மலைகள் இருக்கா? அவற்றின் பெயர் என்னென்ன? ரோம் நகரத்தில் கூட ஏழு மலைகள் தான். The City of Seven Hills என்று தான் பெயர்.
திருமலையில் ஒரு இயற்கைத் தீம்-பார்க் கட்டி பொதுமக்களுக்குச் "சேவை" செய்யலாம் என்று ஆந்திர அரசின் சுற்றுலாத் துறை ஒரு முறை நினைத்ததாம்! பின்னர் எதிர்ப்புகள் கிளம்ப அத்திட்டத்தைக் கைவிட்டு விட்டது. அப்படி என்ன திருமலையில் அவ்வளவு இயற்கை அழகும், வளமும்?

மலைப்பாதையில் நடந்து போனால் காட்சிகள் நல்லாத் தெரியுது. பேருந்தில் சென்றால் அவ்வளவாகத் தெரிவதில்லை. ஆனால் ஆலயத்துக்கு இன்னும் மேலே சென்றால் அருவிகள், சுனைகள், இயற்கையாய் அமைந்த அதிசயக் கல் வளைவு, மூலிகைப் பண்ணைகள் என்று பல இடங்கள் பார்க்கலாம்! ஆனால் கடவுளை விடப் பிசியாக இருக்கும் நமக்குத் தான் அதற்கெல்லாம் நேரம் கிடைப்பதில்லை! :-)


தண்ணீர்த் தட்டுப்பாடு திருமலைக்கும் வந்து விட்டது. அருவிகளில் நீர் சிறிதளவாச்சும் சொட்டிக் கொண்டு தான் உள்ளது. மின் காற்றாடிகள், நீர்த்தேக்க அணைகள் என்று நவீனங்கள் வந்தாலும், வனச்சூழல் இன்னும் இருக்கத் தான் செய்கிறது.

ஒருமுறை மாலையில், மலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன் நண்பர்களுடன். அப்போது, கண் முன்னே மின்னல் தோன்றி மறைய, அது எங்கோ மரத்தில் பட்டது போலும்; அடுத்த நிமிடம் தீப்பிழம்பாய் அந்த இடமே பரபரவெனப் பற்றி எரிந்த காட்சியை மறக்கவே முடியாது!
வேங்கட மலையில் காட்டுத்தீ பற்றிக் கொண்டு, விலங்குகள் அது கண்டு பயந்து ஓடும் காட்சியை இலக்கியங்களில் காணலாம்.

குற்றாலத்தில் அருவி விழும். ஆனால் அது தொட்டியில் விழுமா?
திருமலை அருவி ஒன்று, ஆழ்வார் தீர்த்தம் என்னும் குளத்தில், கொட்டி விழும் காட்சி மிகவும் அழகு!
இன்றைய பதிவில் ஏழுமலைகள் எவை எவை என்று பார்க்கலாம் வாங்க!



(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)




ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி
நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
ஆக்யாம் த்வதீய வசதே ரநிசம் வதந்தி
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

1. சேஷாசலம்
2. கருடாசலம்
3. வேங்கட மலை - வேங்கடாசலம் (அசலம்=மலை)
4. நாராயணாத்ரி (அத்ரி=மலை)
5. விருஷபாத்ரி
6. விருஷாத்ரி என்னும் வேதாத்ரி
7. அஞ்சனாத்ரி

ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி
நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
= என்ற இந்த ஏழு மலைகளில்

1. சேஷாசலம் = ஆதிசேஷனே மலை ரூபமாய் பெருமாளைத் தாங்குவதாக ஐதீகம். அவன் ஏழு தலைகளே (ஏழு படங்களே) ஏழு மலைகள்.
அவன் உடல்=அகோபிலம்- நரசிம்மர் ஆலயம், வால்=ஸ்ரீசைலம்- மல்லிகார்ஜூன சிவாலயம்.
சேஷனையும் பெருமாளையும் பிரிக்கவே முடியாது. அப்படி ஒரு பந்தம்!
நின்றால் குடையாம், இருந்தால் சிங்காதனமாம், நடந்தால் மரவடியாம் என்பார்கள். தாயாரையும் பெருமாளையும் அப்படி ஒரு தாங்கு தாங்குபவன்.
அவனுக்குத் தெரியாமல், பெருமாளும் தாயாரும் தனித்துப் பேசக்கூட முடியுமோ என்னவோ? :-)

குன்றின் மேல் கல்லாக நிற்கின்றாய் கண்ணா என்று பாடலில் வருமே! அது போல், கல்லாய் மாறிக், கலியுக வரதனாய் வேங்கடத்தில் நிற்க திருவுள்ளம் கொண்டான் இறைவன். அவன் குறிப்பறிந்து ஆதிசேடனும் உடனே கல்லாய், மலையாய் மாறிவிட்டான்.
எள் என்று நினைத்தான் பரமன். ஆனால் எண்ணெயாய் வந்து நின்றான் தொண்டன். இது தான் கைங்கர்ய லட்சணம் என்பார்கள் ஆசாரியர்கள்!

கைங்கர்யம் (தொண்டு) எப்படி செய்ய வேண்டும் என்றால் ஆதிசேடனைத் தான் கேட்க வேண்டும். அவன் தானே இளைய ஆழ்வாராய் (இலக்குவனாய்) வந்தது! அது போதாதென்று, கைங்கர்ய லட்சுமி முகத்தில் தவழ, இராமானுசராகவும், மணவாள மாமுனிகளாகவும் வந்தது!
திருமலையைப் பொறுத்தவரை பெருமாளுக்கும், ஏன் வராக சுவாமிக்கும் கூட சீனியர் நம்ம ஆதிசேடன்!

அதனால் தான் எல்லா வாகனங்களுக்கும் முதல் வாகனம் சேஷ வாகனம்! (பெத்த சேஷ வாகனம்). ஆழ்வார்கள் தங்கள் பாதம் சேஷன் மேல் பட்டு, மலை ஏறவும் அஞ்சினார்கள். "வெறும்" மலையைத் தொழுதாலே "பெரும்" பாவங்களும் தீரும் என்றார்கள்!
சேஷாசலம், சேஷமலை, சேஷாத்ரி, சேஷகிரி எல்லாமே நம்ம சேஷன் தான்!

2. கருடாசலம் = பெரிய திருவடி கருடன்! இப்ப தான் கருட பஞ்சமி பதிவில் பார்த்தோமே கருடனைப் பற்றி! அவன் பெயரில் உள்ள மலை தான் கருடாசலம், கருடாத்ரி, கருடமலை!
கருடன் தான் இந்த சேஷாசலத்தை, வைகுண்டத்தில் இருந்து திருமலையில் இறக்கியதாகத் தலபுராணம் பேசும்.

மேலும் கோவிலின் அருகில் உள்ள கோனேரியை (திருக்குளத்தை), கருடன் தான் வைகுண்டத்து விரஜா நதியில் இருந்து உருவாக்கினான்! பிரம்மோற்சவத்திலும் கருடனின் கொடி தான் முதலில் ஏற்றப்படுகிறது! கொடிமரத்தையும் (துவஜ ஸ்தம்பம்), கருட கம்பம் என்றே சொல்கிறார்கள்.


இன்னொரு முக்கியமான விடயம்:


கருடனும், சேஷனும் உலகத்தைப் பொறுத்தவரை எதிரெதிர் நிலைகள் (Pair of Opposites) !
ஆனால் பாருங்கள், இறைவனிடத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து விடுகிறார்கள். இது தான் பெருமாளின் செளந்தர்ய செளபாக்கிய லட்சணம்.

குணங்களை எல்லாம் கடந்தவன், எதிரெதிர் குணங்களையும் எப்படி ஒன்றாக இணைத்துக் கொள்கிறான் பாருங்கள்! இது கண்ணனுக்குக் கை வந்த கலை அல்லவா?
(ஓரே டீமில் ஒரே மேலாளரின் கீழ், Tester-Developer / கணக்காளர்-தணிக்கையாளர், என்று oppositeகள் இருக்கும் சங்கடம், பாவம் அந்தந்த மேலாளர்களுக்குத் தான் தெரியும் :-)
கண்ணன் தான் உலகத்தின் தலை சிறந்த மேலாளன் அல்லவா?



3. வேங்கடாசலம் = வேங்கடம் என்றால் என்னவென்று சென்ற பதிவிலேயே பார்த்து விட்டோம்! பிறவிக் கடன்களைத் தீர்க்கும் மலை வேங்கட மலை! இறைவனுக்கே இந்த மலையின் பெயரைத் தான் வழங்குகிறார்கள்! வேங்கடாசலபதி, வேங்கடமுடையான், வேங்கடேஸ்வரன், வேங்கடத்துறைவார், வேங்கடத்து அண்ணல்!
சென்று சேர் திரு வேங்கட மாமலை,
ஒன்றுமே தொழ நம் வினை ஒயுமே!
இந்த மலையின் மேல் தான், நாம் காணும் ஆலயம் அமைந்துள்ளது! ஆனந்த நிலைய விமானம் அமைந்துள்ள மலை என்பதால் ஆனந்தாத்ரி என்றும் வழங்கப்படும்!

4. நாராயணாத்ரி = அஷ்டாட்சரம் என்னும் திருவெட்டு எழுத்து "ஓம் நமோ நாராயணாய"!
அதன் பொருள் மிகவும் ஆழமானது. குருவின் வார்த்தையை மீறி, இராமானுசர் ஊருக்கே உபதேசம் செய்து வைத்தது! முன்பொரு பதிவில் பார்த்தது போல், பிரணவத்தை இந்த மந்திரத்தில் இருந்து பிரிக்கவே முடியாது! அப்படி ஓங்கார ஸ்வரூபமாக இருப்பது! மந்திரங்களுக்கு எல்லாம் மகா மந்திரம், மந்திர ராஜ பதம் = திருவெட்டெழுத்து!

இதை விளக்கி நிற்கும் கோலம் தான், திருமலை மேல் நாம் எல்லாரும் பார்த்து மனம் பறிகொடுக்கும் கோலம்! அதை இந்தப் பதிவில் சொல்ல முடியாது. நீண்டு விடும். தனியாக இன்னொரு நாள் சொல்கிறேன். இப்போதைக்கு இதை மட்டும் நினைவில் இருத்துங்கள்!
ஓம் நமோ நாராயணாய என்பதற்கு விளக்கமாகத் தான் வேங்கடவன் நிற்கிறான்!
அதனால் மலைக்கு ஒரு பெயர் நாராயணாத்ரி. நாராயண மலை!



5. விருஷபாத்ரி = விருஷபாசுரன் என்னும் அரக்கனுக்கு மாட்டுத் தலை. பாவம், ஆணவக் கொம்பும் முளைத்து விட்டது. அவன் பெருமாள், ஈஸ்வரன் இருவருக்குமே பக்தன் தான்! ஆனால் எல்லாரையும் அடக்கியவனுக்கு, இனி மேல் அடக்க யாரும் இல்லையே என்ற கவலை! நாரதர் தூண்டி விட, பெருமாளையே போருக்கு அழைக்கிறான்.

தான் வணங்கிய தெய்வம் என்பதைக் கூட மறக்கும் அளவுக்கு அதிகாரப் பேராசை, தோள் தினவு எடுக்கிறது! மல்லாண்ட திண் தோள் மணிவண்ணன் என்பதை மறந்து அகலக்கால் வைத்து விட்டான். அடிபட்டு மாண்டான்!
அணைத்துத் திருத்துதல் சரிவராத போது, அடித்துத் திருத்தும் தாய் போல், பழைய பக்தனை அடித்து வீட்டுக்குள் சேர்த்துக் கொண்டார். அவன் வேண்டுகோளுக்கு இணங்க, அவன் பெயரே அமைந்து விட்டது மலைக்கு! இது தான் நாம் தற்காலத்தில் முதலில் ஏறும் மலை!

6. விருஷாத்ரி = விருஷம் என்பதற்கு தர்மம் என்றும் பொருள் உண்டு! விருஷபம் (காளை) என்றும் பொருள் உண்டு. ஏற்கனவே விருஷபாத்ரியைப் பார்த்து விட்டோம்.
அதனால் இது விருஷாத்ரி தான்! மேலும் இதற்கு வேதாத்ரி என்ற இன்னொரு பெயரும் உண்டு! தர்மத்தைப் போதிக்கும் வேதங்கள் ஒலிக்கும் மலை. ஆதலால் இது தர்மாத்ரி, வேதாத்ரி, விருஷாத்ரி!




7. அஞ்சனாத்ரி = இந்த சுலோகத்தில், இம்மலை பற்றி நேரடியாகக் குறிப்பில்லை! ஆனால் "முக்யாம்" என்று வருகிறது! முக்யாம் என்றால் யார்? முக்யப் பிராணன் என்று கன்னடர்கள் ஒரு தெய்வத்துக்கு ஊரெங்கும் கோவில் கட்டுவார்கள்! முக்ய மந்திரியாய் இருப்பவன்!
யார் என்று தெரிகிறதா? - அனுமன்!

அவன் திருமலையில் தான் அஞ்சனைக்கும்-கேசரிவர்மனுக்கும், வாயுவின் அம்சமாகப் பிறந்தான்! அஞ்சனையின் புதல்வன் ஆஞ்சநேயன்! அஞ்சனாத்ரி! அஞ்சனை மலை!
அனுமனின் சொந்த ஊர் திருமலை திருப்பதி!

இப்படிக் கருடாத்ரி-அஞ்சனாத்ரி என்று பெரிய திருவடி-சிறிய திருவடி இருவருமே, திருமலையில் உள்ளார்கள்! பொதுவாக கருடன் சிலை மட்டும் தான் பெருமாளின் முன் கைகூப்பி இருக்கும்! இங்கு இருவருமே கைகூப்பி உள்ளார்கள்!
கோபுரத்துக்கு வெளியே "பெடி ஆஞ்சனேயர்" சன்னிதி உள்ளது. பெத்த ஆஞ்சநேயர் என்றும் அழைக்கிறார்கள். இவரும் கைகள் குவித்து கருடனைப் போலவே நிற்கிறார்.

அவர் கைகளில் பெடி என்னும் சங்கிலிக் கயிறு கட்டப்பட்டுள்ளது! தெய்வத்தை வணங்காமல், விளையாட்டும் துடுக்குமாய் திரிகிறானே என்று நினைத்தாள் அஞ்சனா தேவி; குழந்தையின் கைகளை வணங்குவது போல் குவிக்கச் சொல்லி, கட்டி விடுகிறாள்! அதுவே நாம் காணும் திருக்கோலம்!
நைவேத்தியம் கூட முதலில் வராகருக்கும், பின்னர் பெருமாளுக்கும் நடக்கிறது. அதன் பின், "குழந்தை" அனுமன் என்பதால் இவருக்கு எடுத்துக் கொண்டு ஓடி வருகிறார்கள். அதன் பின்னர் தான் பெருமாளுக்கே சாத்துமுறை, மற்ற பரிவாரத் தெய்வங்களுக்கு எல்லாம் நைவேத்தியம் நடக்கிறது!



ஆக்யாம் த்வதீய = உன்(த்வ) பாடல்களைப் பாடிக்கொண்டும், கதைகளைச் சொல்லிக் கொண்டும்

வசதே ரநிசம் வதந்தி = ஆங்காங்கு தங்கி, இளைப்பாறி, உன்னைப் பற்றியே பேசிக்கொண்டு மலையேறுகிறார்கள்


மலை ஏறும் போது, எப்படி ஏற வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்லுறாங்க இந்தச் சுலோகத்தில்! பெருமாள் சன்னிதானத்தில் சினிமாக் கதைகள் பேசுவோமா? அதே போன்ற உணர்வுடன் தான் மலையும் ஏற வேண்டுமாம்!
வெறும் மலையாய் இருந்தால் வீட்டுக் கதைகள் பேசிக் கொண்டும், வம்பிழுத்துக் கொண்டும் ஏறலாம்! ஆனால் இது சாதாரணக் கல் மலையா? சாளக்கிராம மலை அல்லவா! பல யோகிகளும் சித்தர்களும் காவல் தெய்வங்களும் மலைமேல் யோக நிஷ்டையில் இருப்பதாக ஐதீகம்! அதான் இப்படி!

எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே என்கிறார் ஆழ்வார்!
இந்த மலையில் ஏதாச்சும் ஒன்னாய் நான் ஆக மாட்டேனா? என்று உருகுகிறார் என்றால், அது என்ன சும்மானாங்காட்டியும் மலையா? ஆதிசேஷனே ஆன மலை அல்லவா?
அதான் இத்தனை நியமங்கள்! இத்தனை விதிகள்!
வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து, உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ என்று ஆங்காங்கு தங்கி, இளைப்பாறி மலை ஏற வேண்டும்! அதுவே யாத்திரை!

நம் வீட்டுக்கு ஒரு அன்பானவர் வருகிறார் என்றால் வழக்கத்தை விடக் கொஞ்சம் சீக்கிரம் எழுந்து கொள்ள மாட்டோமா? அது போல் உன் அன்பான பக்தர்கள் எல்லாம் "ஆபத் பாந்தவா, அனாத ரட்சகா, கோவிந்தா கோவிந்தா" என்று பாடிக் கொண்டு வருகிறார்கள்! இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவார்களே தரிசனத்துக்கு! இன்னுமா உறக்கம்? எழுந்திரப்பா ஸ்ரீநிவாசா!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

10 comments:

Chittoor Murugesan said...

திருப்பதி சென்று திரும்பி வந்தால்
திருப்பதி சென்று திரும்பி வந்தால் வாழ்வில் திருப்பம் தோன்றுமடா என்பது கவிஞர் வரி. ஆனால் எனக்குள் மட்டும் ஒரு கேள்வி தான் வந்தது.
ஏழுமலையான் தன் திருமணத்திற்காக குபேரனிடம் கந்து வட்டியில் கடன் வாங்கி விட்டார். அதற்கான வட்டியை செலுத்தத்தான் பக்தர்களின் உதவாக்கரை வேண்டுதல்களையெல்லாம் கேட்டு நிறைவேற்றி வருகிறார் என்பது புராணம்.
கலியுக முடிவில் அசலை தீர்ப்பார் என்றும் புராணம் சொல்கிறது. ஒரு காலத்தில் ச‌ர்ப்லஸ் பட்ஜெட் போட்ட தி.தி.தேவஸ்தானம் பற்றாக்குறை பட்ஜெட் போடும் காலம் தொலைவில் இல்லை.
இது இப்படியே தொடர்ந்தால் பெருமாள் கலியுக முடிவில் குபேரனுக்கு என்னத்தை கொடுப்பாரோ தெரியவில்லை.
திருமலை நிர்வாகத்தின் வீண் விரயங்களை தடுத்து, 50 சதவீதம் வரை குறைத்து, மிச்சத் தொகையை தங்க பிஸ்கட்டுகளாக்கி , மத்திய அரசின் தங்க சேமிப்பு திட்டத்தில் டெப்பாஸிட் செய்ய வேண்டும் என்று 1999 முதல் வற்புறுத்தி வருகிறேன்.
இத‌ற்காக திரும‌லா விஷ‌ன் 1900 என்ற‌ பெய‌ரில் ஒரு திட்ட‌ம் தீட்டி TTD EO விற்கு தொட‌ர்ந்து அனுப்பிவ‌ருகிறேன். திட்ட‌த்தின் ஆங்கில‌ வ‌டிவ‌த்தை http://www.truthteller.sampasite.com/ என்ற‌ வ‌லை த‌ள‌த்தில் பார்க்க‌லாம்

மெளலி (மதுரையம்பதி) said...

சனிக்கிழமை, சாளிக்ராமே மலையான பெருமாள் தரிசனம்....நன்றி கே.ஆர்.எஸ்.

Anonymous said...

Ravi sir, vanakkam.
thanks a lot, while reading, i felt that ,along with my family walking these hills.Very good message. I am requesting you Please add few azhwarpsurams, which is praising these hills.(paru, neereri- thirumangaiazhwar)
ARANGAN ARULVANAGA.
anbudan
k. srinivasan.

வல்லிசிம்ஹன் said...

Thanks Ravi.
Perumaal dharisanam aacchu.
malai dharisanamum aacchu.
Govindha,Govinthaa.

குமரன் (Kumaran) said...

எத்தனையோ முறை திருமலைக்குச் சென்றிருந்தாலும் ஒரு முறையும் எந்த அருவிக்கும் போனதில்லை இரவிசங்கர். தொட்டியில் விழும் அருவியின் படத்தைப் பார்க்க நன்றாக இருக்கிறது. தீர்த்தத் தொட்டி என்றதும் எங்கள் சிலம்பாற்றுத் தீர்த்தம் கிடைக்கும் அழகர்மலை தீர்த்தத் தொட்டியும் நினைவிற்கு வருகிறது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//chittoor.S.Murugeshan said...
திருப்பதி சென்று திரும்பி வந்தால் வாழ்வில் திருப்பம் தோன்றுமடா என்பது கவிஞர் வரி. ஆனால் எனக்குள் மட்டும் ஒரு கேள்வி தான் வந்தது//

வாங்க சித்தூர் முருகேசன்
உங்க கேள்வியும் தளமும் பார்த்தேன். என்ன சொல்வது!

//அதற்கான வட்டியை செலுத்தத்தான் பக்தர்களின் உதவாக்கரை வேண்டுதல்களை எயெல்லாம் கேட்டு நிறைவேற்றி வருகிறார் என்பது புராணம்//

தவறாகப் புரிந்து கொண்டு உள்ளீர்கள்! கடன் வட்டி வேண்டுதல் என்பதெல்லாம் உள்ளுறை உவமம். புராணச் சுவையை அப்படியே தற்காலக் கண் கொண்டு பார்த்தால் அனர்த்தம் தான் தெரியும்.

//இது இப்படியே தொடர்ந்தால் பெருமாள் கலியுக முடிவில் குபேரனுக்கு என்னத்தை கொடுப்பாரோ தெரியவில்லை.//

பெருமாளைப் பற்றிய உங்கள் கவலையை நினைத்தேன். ரசித்தேன்.

//திருமலை நிர்வாகத்தின் வீண் விரயங்களை தடுத்து, 50 சதவீதம் வரை குறைத்து, மிச்சத் தொகையை தங்க பிஸ்கட்டுகளாக்கி , மத்திய அரசின் தங்க சேமிப்பு திட்டத்தில் டெப்பாஸிட் செய்ய வேண்டும் என்று 1999 முதல் வற்புறுத்தி வருகிறேன்.
இத‌ற்காக திரும‌லா விஷ‌ன் 1900 என்ற‌ பெய‌ரில் ஒரு திட்ட‌ம் தீட்டி TTD EO விற்கு தொட‌ர்ந்து அனுப்பிவ‌ருகிறேன்//

நிர்வாக மேலாண்மை அவர்கட்கு இருக்கும் நிறுவனப் பிரச்னைகளில் உங்கள் திட்டத்தை கண்ணில் பட்டாலும் கடைப்பிடிப்பார்களா என்றெல்லாம் யாரால் சொல்ல முடியும்? மக்கள் பிரதிநிதிகள், அரசு மூலமாகச் சிலவற்றைச் செய்யலாம்.

TTD பல சமுதாயப் பணிகளையும் செய்து கொண்டு தான் வருகிறது. கோவில் நிர்வாகம் என்பது போய், அதையும் தாண்டி சிற்றூர் நிர்வாகம் ஆகி விட்ட படியால் இதற்கு அரசும், மேலாண்மை நிறுவனங்களும் ஒன்று சேர்ந்தால் தான் மேலும் பல நல்ல திட்டங்கள் உருவாக்க முடியும்.

சுதர்சன் பட்டை கூட IIM திட்டம் தான்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையம்பதி said...
சனிக்கிழமை, சாளிக்ராமே மலையான பெருமாள் தரிசனம்....நன்றி கே.ஆர்.எஸ்.//

வாங்க மெளலி.
சாளக்கிரம ரூபம் தான் திருமலை. அன்னமய்யா படத்தில் கூட அவர் காலணி அணிந்து ஏறும் போது, ஒரு மூதாட்டி திருத்தி, புத்தி சொல்வார்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Anonymous said...
Ravi sir, vanakkam.
thanks a lot, while reading, i felt that ,along with my family walking these hills.//

நன்றி ஸ்ரீநிவாசன் சார். படிக்கும் போதே நடக்கத் துவங்கி விட்டீர்களா என்ன! :-)

//I am requesting you Please add few azhwarpsurams, which is praising these hills//

Sure will do. சுப்ரபாதம் தொடர்பான ஆழ்வார் பாசுரங்களை, இயற்றியவரே ஆங்காங்கு கையாண்டுள்ளார். அதை எல்லாம் தவறாது கொடுக்கிறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
Thanks Ravi.
Perumaal dharisanam aacchu.
malai dharisanamum aacchu.//

மலை தரிசனம் இன்னும் விசேடம் வல்லியம்மா!
கோவிந்த கோஷமா? நானும் சேர்ந்து கொள்கிறேன்.
கோவிந்தா,கோவிந்தா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
எத்தனையோ முறை திருமலைக்குச் சென்றிருந்தாலும் ஒரு முறையும் எந்த அருவிக்கும் போனதில்லை இரவிசங்கர்//

அடுத்த முறை பாபவிநாசமோ இல்லை ஆழ்வார் தீர்த்தமோ சென்று வாருங்கள், குமரன்! உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!

//தீர்த்தத் தொட்டி என்றதும் எங்கள் சிலம்பாற்றுத் தீர்த்தம் கிடைக்கும் அழகர்மலை தீர்த்தத் தொட்டியும் நினைவிற்கு வருகிறது//

இது அருவி போல் தீர்த்தத் தொட்டியில் கொட்டாவிட்டாலும், குபு குபு என்று பொங்கி வரும் அல்லவா குமரன்? ஒரு முறை தான் சென்றுள்ளேன்! ராக்காயி அம்மன் கோவில் அருகில் தானே?

சுப்ரபாதம் (தமிழில்):

ஒலிச் சுட்டிகள்!

முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் - நித்ய ஸ்ரீ பாடுவது (Windows Media Player)

நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com
Pics: tirumala-tirupati.com

சுப்ரபாதம் (மூலம்):

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP